Tuesday 19 February 2013

Valentine - Aasai vedkam ariyaatho? ஆசை வெட்கமறியாதோ..?



ஆசை வெட்கமறியாதோ..?   





குரு அரவிந்தன்            




ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை.




ழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்;களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம்; திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள்.


பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது.


அங்கே அந்த சந்தியில் கண்காணிப்புக் கமெரா இணைக்கப்பட்டிருந்ததை அவர்கள் அனுப்பிய படத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. எனது வண்டி கோட்டைத் தாண்டும்போது சிவப்பு விளக்கு எரிவதைத் துல்லியமாகத் தானியங்கிக் கமெரா படம் பிடித்திருந்தது. எனது கவனமெல்லாம் அவளது சிகப்பு நிற வண்டியில் இருந்ததால் நான் பாதையைக் கடக்கும்போது கமெராவைக் கவனிக்காமல் போயிருக்கலாம்.

அவர்கள் ஆதாரத்திற்காக அனுப்பிய புகைப்படத்தில் இன்னுமொரு விடையத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. அதாவது எனக்கருகே வண்டி ஓட்டிக் கொண்டு வந்த அந்தப் பெண்ணின் சிகப்பு நிற வண்டியும் எனது வண்டியைப் போலவே சிகப்பு விளக்கில் அகப்பட்டிருந்தது.
வண்டியின் இலக்கத்தை எடுத்து நண்பன் மூலம் எப்படியோ அவளது தொலைபேசி இலக்கத்தைக் கண்டறிந்து அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். முதலில் ஒன்றுமே தெரியாதது போல நடித்தவள் அந்தப் படத்தில் அருகே இருப்பது தனது வண்டிதான் என்பதை ஏற்றுக் கொண்டாள். தனது பெயர் நிஷா என்றும், தனக்கும் தண்டப்பணம் கட்டும்படி அறிவிப்பு வந்திருப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவளது முகத்தை மட்டும் ஞாபகம் வைத்திருந்த எனக்கு அவளது குரலிலும் ஒருவித கவர்ச்சி இருப்பது, அவளோடு தொலைபேசியில் பேசும்போது புரிந்து கொண்டேன்.


தண்டப்பணம் கட்டினால் புள்ளிகள் பறிபோய்விடும், அதனால் வண்டிக்கான காப்புறுதி அதிகரி;த்து விடும் என்பதை அவளுக்கு விளங்கப்படுத்தினேன். நான் ஒரு சட்டத்தரணி என்பதைச் சொல்லி, எனக்காக நான் வாதாடும்போது அவளுக்கும் சேர்த்து வாதாடப்போவதாகச் சொன்னேன். முதலில் தயங்கியவள் ஒருவிதமாக ஒப்புக் கொண்டாள். அவளை முதன்முதலாகக் கண்ட அன்றே அவள்மீது எனக்கு ஒருவகை ஈர்ப்பு இருந்ததால் அவளது சம்மதம் எனக்குள் ஒருவித கிளுகிளுப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.


நான் தண்டப்பணம் சம்பந்தமாக சில விவரங்களை அவளிடம் கேட்டிருந்தேன். நானே அவளிடம் வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னபோது அவள் அதை மறுத்து தானே நேரில் கொண்டு வந்து தருவதாகச் சொன்னாள். எனவே தொடர்பு கொள்வதற்குச் சாதகமாக எனது செல்பேசி இலக்கத்தைக் கொடுத்திருந்தேன். மறுநாளே அவள் என்னைத் தொடர்பு கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு என்னைத்தேடி வந்திருந்தாள். எங்கேயாவது தனியாக உட்கார்ந்து ஆறுதலாகப் பேசலாம் என்று நினைத்து அவளை அழைத்தேன்.


‘வாங்க, ரிம்ஹோட்டனில காப்பி குடிச்சிட்டே உட்கார்ந்து பேசுவோமா?’ என்றேன்.
தலையசைத்துவிட்டு என்னோடு வந்தாள். ஆளுக்கொரு காப்பி எடுத்துக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்தோம்.
‘அப்புறம் சொல்லுங்க, நீங்க இங்கேதான் பிறந்தீங்களா நிஷா?’
‘ஆமா, நான் இங்கேதான் பிறந்தேன். எங்க அப்பா அம்மாதான் சிலோன்லை இருந்து வந்தவங்க’
‘இலங்கையில் எங்கே..?’ என்றேன்.
‘யாழ்ப்பாணம்’ என்று மொட்டையாய்ச் சொன்னாள்.
உங்க குடும்பத்தில நீங்க எத்தனைபேர், நீங்கதான் மூத்த பெண்ணா?
அவள் நெற்றியைச் சுருக்கி என்னை ஒரு மாதிரிப்பார்த்தாள்.
‘எனக்குத் தெரியுமே, ஏற்கனவே சொன்னாங்க நான்தான் நம்பவில்லை’ என்றாள்.
‘என்ன சொன்னாங்க, யார் சொன்னாங்க?’ என்றேன்.
‘சொன்னாங்க, கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாமே விசாரிப்பாங்க என்று சொன்னாங்கள்.’
‘எல்லாமே என்றால்?’
‘ஊரைச் சொன்னால், ஊரில வடக்கா கிழக்கா தெற்கா மேற்கா என்றெல்லாம் கேட்பாங்க என்று சொன்னாங்கள’ என்றாள்.
‘ஓ அதுவா உங்க பிரச்சனை, நான் அதைக் கேட்கவில்லை. எனக்கு அது தேவையுமில்லை’
‘அப்போ என்னோட பிறந்த தினத்தை வைத்து எண்சோதிடம் பார்க்கப் போறீங்களா?’
‘என்ன நீங்க எல்லாமே தப்புத் தப்பாய் சிந்திக்கிறீங்க’
‘இப்ப எதுக்கு என்னை இங்கே வரச் சொன்னீங்க, இது எங்க முதலாவது டேற்ரிங் தானே?’ என்று அதிரடியாய்க் கேட்டாள்.
‘டேற்ரிங்கா என்ன சொல்லுறீங்க?’ எனக்குக் மெல்ல உதறல் எடுத்தது.
‘அப்போ ஏன் வரச்சொல்லிக் கூப்பிட்டீங்க’ என்றாள்.
‘நானா வரச்சொன்னேன், நீங்க தானே வருவதாகச் சொன்னீங்க, வந்த இடத்தில் ஒரு காப்பி சாப்பிடுவோமா என்று உங்களை உபசரித்தது தப்பா?’ என்றேன்.

‘நானா கேட்டேன், நீங்கதானே காப்பிக்குக் கூப்பிட்டீங்க, அப்புறம் இன்னொருநாள் டினருக்குக் கூப்பிடுவீங்க, அது இரண்டாவது டேற்ரிங்காய் போயிடும், அப்புறம் மூண்டாவது டேற்ரிங்.. தெரியும்தானே மூணாவது தடவை சந்திக்கும்போது என்ன செய்வாங்க என்று’  சொன்னவள் மீதமிருந்த காபியை உறிஞ்சியபடியே என் முகத்தில் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்று விழி உயர்த்திப் பார்த்தாள்.

இவளோடு கவனமாகப் பழகவேண்டும் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். இங்கே பிறந்தவள் என்பதால் டேற்ரிங் என்பதை சாதாரண விடையமாக எடுத்துக் கொள்கிறாளா எனக்கும் அவளுக்கும் இந்த விடையத்தில் என்ன வித்தியாசம். நாங்களும் எமக்குப் பிடித்தவர்களோடு ஆண் பெண் வித்தியாசம் பாராட்டாமல் பழகுகின்றோம். கொஞ்சம் நெருக்கமாகப் பழகும்போது அவர்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் எதிர்ப்பாலாக இருந்தால் சிலசமயம் அவர்கள்மீது எங்களுக்கு ஒரு வகை ஈர்ப்பு எற்படுகின்றது. இருவருக்கும் நல்ல புரிந்துணர்வோடு ஒருவர்மேல் மற்றவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டால் அதைச் சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துகின்றோம். இதுதான் காதலாகிறது. அந்தக் காதல்தான் அடுத்த கட்டத்திற்குச் சென்று காதல் திருமணமாகிறது. ஏதாவது காரணங்களால் இந்தக் காதல் தடைப்பட்டும் போகலாம். எங்களுடைய இந்தக் கலாச்சாரத்தைத்தான் இவள் தவறாகப் புரிந்து கொண்டு எடுத்ததற்கெல்லாம் டேற்ரிங் என்கிறாளோ என நினைக்கத் தோன்றியது.

வழக்குச் சம்பந்தமாக அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். மீண்டும் ஒருதடவை சந்தித்துக் கொண்டோம். நீதிமன்றத்தில் வழக்கு எடுக்கப்பட்ட திகதியைத் தொலைபேசி மூலம் அவளுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். கட்டாயம் வருவதாகச் செல்லியிருந்தாள்.

வாகனப்போக்குவரத்து நீதி மன்றத்தில் இந்த வழக்கு எடுக்கப்பட்டபோது சொன்னபடியே அவளும் அங்கே வந்திருந்தாள். பனிக்காலமாகையால் வீதிப்பாதுகாப்பு காரணமாக மெதுவாகவே வண்டிகள் ஊர்ந்தன என்பதை முக்கிய காரணமாக எடுத்து அதை நீதிபதிக்கு விளங்கப் படுத்தினேன். எனது வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தார். தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகவே அமைந்திருந்ததால் அவள் முகத்தில் புன்னகை பூத்திருந்தது. இருவரும் நீதிமன்ற அறையைவிட்டு வெளியே வந்து வண்டியை நோக்கி நடந்தோம்.
அருகே வந்து கைகொடுத்து நன்றி சொல்லிவிட்டு கைப்பையை எடுத்தபடி ‘உங்க பீஸ்’ என்றாள்.


‘நான் பெரிதா எதுவம் செய்யவில்லை. எனக்காக வாதாடும்போது உங்களுக்கும் சேர்த்து வாதாடினேன். அவ்வளவுதான்’ என்றேன்.
‘இல்லை வேறுயாரிடமாவது சென்றிருந்தால் நான் பணம் கொடுத்துத்தானே வாதாடியிருப்பேன். இது உங்க தொழில், சொல்லுங்க எவ்வளவு?’ என்றாள்.


‘எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்றால் நான் என்ன செய்யிறது. இதை ஒரு கடனாய் நினைச்சால் தாங்க, உங்க மனம் நோகக் கூடாது என்பதற்காக வாங்கிறேன்’ என்றேன்.
‘நானும் உங்க மனசை நோகவைக்கவில்லை. உங்களைப்பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறேன், யூ ஆ ஸோ ஸிமாட் அதனாலே.. நீங்க செய்த இந்த உதவிக்கு ஏதாவது தரணும்..!’


‘விடமாட்டீங்க போல இருக்கே, உங்க இஷ்டம். தருவதை வாங்கிக் கொள்கிறேன்’ என்றேன்.

அவள் அருகே வரவே ஏதாவது பணம் கொடுக்கப்போகிறாள் என நினைத்தேன், ஆனால் அவள் இச் சென்ற ஓசையோடு எட்டி ஒரு முத்தம் கொடுத்தாள். எதிர்பாராத முத்தத்தால் ஒருகணம் நான் உறைந்து போயிருந்தேன். யாராவது பார்த்திருப்பார்களோ என்ற அச்சத்தில் அக்கம் பக்கம் பார்த்தேன். இவ்வளவு விரைவில் அதிகம் பழகாத ஒரு பெண்ணிடம் இருந்து முத்தம் கிடைக்குமா? அவள் இந்த சூழ்நிலையில் வளர்ந்தவள் என்ற துணிச்சலா? எனது சிந்தனையின் இடைவெளியில் அவள் மறைந்து போயிருந்தாள். மூன்றாவது சந்திப்பில் என்ன நடக்குமென்று தெரியும்தானே என்று இதைத்தான் அன்று அவள் சொன்னாளா?


வண்டியில் ஏறி, கண்ணாடியில் கன்னத்தைப் பார்த்தேன். உதட்டுச்சாயம் மெல்லிய கோடாய்ப் பதிந்திருந்தது. இதுவரை இல்லாத, சொன்னால் புரியாத இனிய உணர்வுகள் உடம்பெல்லாம் பரவியது. மறுகன்னத்தையும் காட்டியிருக்கலாமோ என்று ஒருகணம் எண்ணத் தோன்றியது. டேற்ரிங் என்றால் என்னவென்று புரிந்தது போலவும் புரியாதது போலவும் ஒருவித தடுமாற்றமிருந்தது. அடுத்த சந்திப்பு எப்போ கிடைக்கும் என்று மனசு ஏங்கத் தொடங்கியதென்னவோ உண்மைதான். நான் காதல் என்றேன் அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. அந்த நேரம் எல்லாமே ஒன்றுதான் என்பது போல மயக்கமாயுமிருந்தது. அவள் சென்று நெடுநேரமாகியும் அவளது மூச்சுக் காற்று எனது காதுமடலை வருடிக்கொண்டிருந்தது.

No comments:

Post a Comment

THANK YOU