Friday 1 February 2013

சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படுமா?

சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படுமா?

சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் வருமா என யாராவது கேட்டால் என்னத்த கன்னையா பாணியில் "வரும்..ஆனா வராது.." என்று என் நண்பன் சொல்லுவான்.
நீங்கள் கவனித்தது உண்டா? - படிக்கும் போது உங்களுக்கு அந்த நூலில் சொல்லப் பட்ட விஷயங்கள் மிகுந்த உத்வேகத்தை ஏற்படுத்தும்.
" பொறுத்திருந்தது போதும்..இனி தூள் கிளப்பி விட வேண்டியது தான்.." என்று தீர்மானிப்பீர்கள்.
ஆனால் காலம் ஓடும் போது அந்த பழைய வேகம் இருக்காது. மீண்டும் பழைய ஆளாக மாறி விடுவீர்கள்.
ஏனென்றால் நம் மனம் கடந்த காலம் எனும் இருளில் மூழ்கி உள்ளது.
சுய முன்னேற்ற நூல்களில் உள்ள நல்ல கருத்துக்கள் நம் மனதில் ஷண நேர வெளிச்சத்தை ஏற்படுத்துகின்றன.
வெளிச்சத்தின் ஆற்றல் குறைய குறைய மீண்டும் இருள் வந்து சூழ்ந்து விடுகிறது. நமது நம்பிக்கை தளர்கிறது.
இதற்கு காரணம் நமது மூளையின் நியூரல் நெட்வொர்க் தான் என்றால் மிகையாகாது. நமது எண்ணங்கள் எப்போதும் பழகிய பாதையிலே தான் செல்லும்.
மனிதன் பழக்கத்திற்கு அடிமையாவது இதனால் தான்.
வெளி நாட்டு விஞ்ஞானி ஒருவர் ஒரு சோதனையை செய்து பார்த்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.
அவர் தினமும் தனது நாய்க்கு உணவிடுவதற்கு முன்பு மணியை அடித்து ஓசை எழுப்புவார்.
இது தினமும் தொடர்ந்தது.
சில நாட்களுக்கு பிறகு கவனித்தார். சும்மாவேனும் மணி ஓசையை கேட்டதுமே நாயின் நாக்கில் நீர் சுரக்க ஆரம்பித்தது!
ஏனென்றால் நாயின் மூளையின் நியூரல் நெட்வொர்க்கில் மணி ஓசை கேட்டதும் சாப்பாடு கிடைக்கும் என்பது பதிவாகி நாக்கில் நீரை சுரக்க வைத்தது.
நிலத்தில் ஒடும் தண்ணீர் எப்படி ஏற்கனவே உள்ள வழியில் ஓடி ஓடி தனது பாதையை பெரிதாக்குகிறதோ அவ்வாறே மூளையில் எண்ணங்களும் ஏற்கனவே அமைத்த பாதையில் தான் செல்லும்.
எவ்வளவுக்கு எவ்வளவு அதிக காலம் அந்த எண்ணங்களை எண்ணுகிறோமோ அந்த அளவுக்கு மூளையில் அதன் பாதை அழுத்தமாக பதிகிறது.
நீங்கள் சுய முன்னேற்ற நூல்களை படித்து உங்கள் பழைய எண்ண ஓட்டத்திற்கு குறுக்கே கட்டும் அணையினால் சிறிது காலம் வெள்ளம் வேறு திசையில் ஓடும்.
ஆனால் உங்கள் கடந்த கால எண்ணங்கள் மிக பலமானவை. சீக்கிரமே அணைக்கட்டை உடைத்து விடுகிறது.
பழைய பாதையிலே எண்ணங்கள் செல்லத் தொடங்குகின்றன. இது நமது மனதின் 'டகால்டி' வேலை தான்!
சரி இதற்கு வழியே இல்லையா? நாம் புதிய மனிதராக மாற முடியாதா என்று கேட்டால் கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த சுய முன்னேற்ற நூல்களின் கருத்துக்கள் நம் மனதில் ஆழமாக செல்ல வேண்டும்.
தவறு நூல்களில் இல்லை. நம் மனதில் உள்ளது.
நமது அடி ஆழ எண்ண அமைப்பை மாற்ற வேண்டும்.
அதற்கான எளிய வழியை பிறிதொரு சமயம் பார்ப்போம்.
இந்த கட்டுரை உங்களுக்கு உற்சாகத்தை தந்ததோ இல்லையோ நீங்கள் செய்யும் தமிழ்மண பரிந்துரையும் (மேலே), தமிலிஷ் (கீழே) ஓட்டும் மற்றும் உங்கள் மேலான பின்னூட்டமும் மேற்கொண்டு இது போன்ற கட்டுரைகளை தொடர எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

நன்றி : http://mukkonam.blogspot.com/2009/03/blog-post.html

No comments:

Post a Comment

THANK YOU