Saturday 30 March 2013

அறிவினால் வென்ற ஆர்க்கிமிடிஸ்


மந்திரத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். எனவே, மந்திரவாதிகளைக் கண்டு பயந்து அவர்கள் சொல்லும் அனைத்தையும் நம்பி ஏமாறுகின்றனர். மேலும், மந்திரவாதிகளைப் பகைத்துக்கொண்டால் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தி விடுவாரோ என்றும் அஞ்சுகின்றனர். விளைவு, பணத்தையும் பொருளையும் இழப்பதோடு மன நிம்மதியையும் இழந்து புலம்பும் நிலைக்கு ஆளாகின்றனர்.

நமது மன பயமே பல பிரச்சினைகளுக்கு அடிகோலுகிறது. மக்களின் மன பயத்தினைப் புரிந்து கொண்ட மந்திரவாதிகளும் பேய், பிசாசு, ஏவல், பில்லிசூனியம் என்றெல்லாம் சொல்லி மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கின்றனர்.

எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள் - பிரச்சினைகள் வந்தாலும் மதி நுட்பத்தால்- அறிவாற்றலால் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். தமது மதிநுட்பத்தால் சிராக்கஸ் நாட்டினைக் காப்பாற்றிய பெருமைக்குரியவரே ஆர்க்கிமிடிஸ். சிராக்கஸ் நாட்டினை எந்தவித முன்னறிவிப்புமின்றி எதிரிநாட்டுக் கப்பல்கள் முற்றுகையிடுகின்றன. இது, கிறிஸ்து பிறப்பதற்கு முன், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி. அப்போது புழக்கத்தில் இருந்தவை பாய்மரக் கப்பல்கள். எதிரி நாட்டுக் கப்பல்களின் முற்றுகையினால் மக்கள் பட்டினியால் வாடினர்.

மன்னனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மந்திரி, தளபதிகளை அழைத்து ஆலோசனை கேட்டார். அவர்களோ, மன்னா! நம் படைகள் தயாராக இல்லாத நேரத்தில் எதிரி நாட்டுக் கப்பல்கள் நம்மைச் சூழ்ந்துவிட்டன. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையே என்று பதற்றத்தில் இருந்த மன்னனை மேலும் பயப்பட வைத்தனர். இறுதியாக மன்னர், ஆர்க்கிமிடிசை அழைத்து ஆலோசனை கேட்டார். ஆர்க்கிமிடிஸ் மன்னனுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசி, முதலில் மன்னனின் பதற்றத்தைத் தணித்தார்.

பின்பு, ஆழ்ந்து சிந்தித்தார். கடற்கரையில் கட்டப்பட்டிருந்த மதிற்சுவரின்மீது பெரிய லென்சுகளை எடுத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார். காலையில் கிழக்கே தோன்றும் சூரியனின் ஒளிக்கதிர்களை லென்ஸ் வழியாக மேற்குப் பக்கத்திலுள்ள கப்பல்களின் பாய்மரங்களின் மீது குவியச் செய்தார். கப்பலின் பாய்மரங்கள் தீடிரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. (இப்போதுகூட சூரியனின் ஒளிக்கற்றைகளை லென்ஸ் வழியாக ஒரு காகிதத்தின் மீது குவியச் செய்தால் குவிந்த இடம் சற்று நேரத்தில் தீப்பிடிக்கும்). எதிரிப் படைகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தீப்பிடித்து எரிவதற்கான காரணத்தினைப் பகுத்தறிந்து சிந்திக்கக் கூடியவர்கள் யாரும் எதிரிப்படையில் இல்லை. ஏதோ மந்திர சக்தியினால்தான் தீப்பிடித்து எரிவதாக நினைத்து சிறிது பின்வாங்கினர்.

எதிரிகளின் பய உணர்வைப் புரிந்துகொண்ட ஆர்க்கிமிடிஸ், மதில்சுவர்களில் மிகவும் நீளமான நெம்புகோல்களைப் பொருத்தி வெளியே கடற்பக்கம் உள்ள முனையில் சங்கிலியில் கொக்கிகளைப் பொருத்தினார். நெம்புகோல் இயங்கும் புள்ளியிலிருந்து எந்தப் பக்கம் அதிக நீளமாக இருக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கத்தில் குறைவான அழுத்தத்தைக் கொடுத்தாலும் மறுபக்கத்தில் பலமான கனத்தைத் தூக்கிவிட முடியும். இது நெம்புகோலின் தத்துவம்.
இதனைக் கையாண்டு எதிரிகளின் கப்பல்களைக் கொக்கியில் மாட்டித் தூக்க ஆரம்பித்தார். (நிற்பதற்கு ஓர் இடமும், போதிய அளவு நீண்ட ஒரு நெம்புகோலும் கொடுங்கள். இந்தப் பூமியையே அசைத்துக் காட்டுகிறேன் என்று சொன்னவரல்லவா) எதிரிகள் ஏதோ குட்டிச் சாத்தானின் வேலையாக அல்லவா இருக்கிறது. எதிரிகள் எதிர்கொண்டு வந்தால் போரிடலாம். குட்டிச் சாத்தான்களை ஏவிவிடும்போது நம்மால் எதிர்த்து நிற்க முடியுமா என நினைத்து, பயந்து புறமுதுகிட்டு ஓடினர். ஆர்க்கிமிடிஸ் எதிரிகளை ஓடச் செய்தது அறிவாற்றலால்தானே! நாமும் நம் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தால் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு எதிரிகளையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விரட்டியடித்து வெற்றிக் கனிகளைச் சுவைத்து, பாராட்டும் புகழும் பெறலாமே!

ஆப்பிள் தேசம் தொடர்


முதல் பக்கம்...
ஜூன் 18 முதல் ஜூலை 10 வரை அமெரிக்காவின் சில பகுதிகளில் நண்பர்கள் அழைப்பின்பேரில் சுற்றுப்பயணம் செய்தேன். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது தினமணி கதிர் வார இணைப்பில் எழுதி வரும் தொடர் ‘ஆப்பிள் தேசம்’.
ஆப்பிள் தேசம் 24
சுதந்திரதேவி சிலையை புகைப்படங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்க்கும்போது கொஞ்சம் வித்யாசம் தெரிந்தது. நான் நினைத்த அளவுக்கு சுதந்திர தேவி உயரமான ( அமெரிக்க அல்லது ப்ரெஞ்ச்) பெண்ணாக இருக்கவில்லை. கொஞ்சம் சராசரியான இந்தியப் பெண் போல குள்ளமாகவே தோன்றினாள். ஒருவேளை அது காட்சிப் பிழையாகக் கூட இருக்கலாம். பொதுவாக மனிதர்களுக்கு சிலை வைக்கும்போது அசல் அளவில் செய்ய மாட்டார்கள். கூடுதல் உயரம், அகலம் வைத்து செய்தால்தான் தரையிலிருந்து சிலையை அண்ணாந்து பார்க்கும்போது அசல் மனிதரின் அளவிலேயே இருப்பது போலத் தோன்றும். அப்படிப் பார்த்த போது எனக்கு சுதந்திரதேவி சற்று குள்ளமோ என்று தோன்றியது.
ஆனால் சிலையின் அளவு மிக பிரும்மாண்டமானது. சிலையின் முகத்தில் இருக்கும் மூக்கு மட்டுமே நான்கடி நீளம். வாய் மூன்றடி அகலம். ஆள்காட்டி விரல் மட்டும் எட்டடி நீளம். கையின் மொத்த நீளம் 42 அடி ! சிலை மட்டும் 151 அடி உயரம் இருக்கிறது. (சுமார் பத்து மாடிக் கட்டட உயரம்). அதன் பீடம் இன்னொரு பத்து மாடி உயரம். 154 அடிகள். அதற்குள் இரண்டு லிஃப்டுகள் இருக்கின்றன. இந்த சிலையின் உச்சி வரை சிலையின் உட்புறமாகவே செல்ல முடியும். உயர்த்திப் பிடித்திருக்கும் ஜோதியைச் சுற்றிலும் ஆட்கள் நிற்கும் அளவுக்கு ஒரு பால்கனியே இருக்கிறது.ஆனால் அங்கே செல்ல 1916க்குப் பிறகு யாரையும் அனுமதிப்பதில்லை. தலையில் சூட்டியுள்ள கிரீடத்தில் இருக்கும் ஜன்னல்கள் போன்ற அமைப்பு வரை செல்லலாம். எனக்கு உயரங்களில் இருந்து கீழே பார்த்தால் தலை சுற்றும் என்பதால் நான் செல்ல வில்லை. சிலையின் நூற்றாண்டு விழாவின்போது 1986ல் அதிபர் ரீகனின் மனைவி நான்சி அங்கிருந்துதான் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்தச் சிலை உருவான வரலாறு மிகவும் சுவையானது. பிரான்சில் உருவாக்கப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த சிலை எட்வர்ட் லபோலே என்ற ஒரு பிரெஞ்ச் சட்டப் பேராசிரியரின் கனவு. அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து விடுதலையடைய நடத்திய போரில் அதற்குப் பெரும் உதவிகள் செய்த நாடு பிரான்ஸ். அங்கே மூன்றாம் நெப்போலியனின் அரசாட்சி முடிந்து அமெரிக்காவைப் போன்ற ஒரு குடியரசு மலர வேண்டுமென்பது லபோலேவின் விருப்பமாக இருந்தது.
அமெரிக்கா விடுதலையடைந்து நூறாண்டுகள் முடிந்தபோது 1865ல் , பிரான்சின் வெர்செய்ல்ஸ் நகரில் லபோலே நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் பேசும்போது, சுதந்திர உணர்வைக் குறிக்கும் ஒரு பிரும்மாண்டமான சிலையை, அமெரிக்காவுக்கு பிரான்சின் பரிசாக தரவேண்டும் என்றார். விருந்தில் இருந்த அவரது இளம் நண்பரும் சிற்பியுமான பர்த்தோல்டி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பர்த்தோல்டி எகிப்து நாட்டுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த பிரமிடுகள் அவரைக் கவர்ந்தன. அந்த அளவுக்கு பிரும்மாண்டமாக தன் சுதந்திர தேவி சிலை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆறு வருடம் கழித்து, அமெரிக்கா சென்றபோது, பர்த்தோல்டி எந்த இடத்தில் சிலையை வைக்கலாம் என்று (சிலை தயாரிப்பதற்கு முன்பாகவே) சுற்றிப் பார்த்தார். எல்லிஸ் தீவுக்குப் பக்கத்திலிருக்கும் பெட்லோ தீவில் நட்சத்திர வடிவத்தில் ஒரு பழைய கோட்டை இருந்தது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் சிலையை வைக்கலாம் என்று பர்த்தோல்டி முடிவு செய்தார். .
சிலை அவ்வளவு வேகமாகத் தயாராகிவிடவில்லை. நெப்போலியன் ஆட்சி முடிந்து மூன்றாம் குடியரசு பிரான்சில் அமைந்தபின்னர், 1876ல்தான் வேலை ஆரம்பித்தது. சுதந்திர தேவியின் காலடியில், அறுக்கப்பட்ட அடிமைச் சங்கிலி ஒரு குறியீடாக வைக்கப்பட்டது. ஒரு கையில் ஒளி பரப்பும் ஜோதி. இன்னொரு கையில் சட்டத்தைக் குறிக்கும் புத்தகம். தன் பட்டறையில் பர்த்தோல்டி முதலில் நான்கடி சைசில் களிமண்ணில் சிலை செய்தார். அதன் பிறகு ஒன்பதடி உயரத்தில் மரத்தில் ஒரு சிலை செய்தார். அடுத்து 36 அடி உயரத்தில் ஒன்றை உருவாக்கினார். இந்த சிலைகளுக்கு மாடலாக இருந்தது பர்த்தோல்டியின் அம்மாதான். சிலையின் முகம் அவருடையது. உடலமைப்புக்கு மாடல் பர்த்தோல்டியின் சிநேகிதி எமிலியின் உடல்.
சுதந்திரதேவி சிலையை உட்புறம் வலிவான இரும்பு சட்டங்களால் ஆன ஓர் எலும்புக் கூடு போன்ற அமைப்புதான் தாங்கி நிற்கிறது. அதன் மீது சுற்றிலும் பொருத்தப்பட்ட செப்புத்தகடுகளால் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. உட்புற இரும்புக் கூட்டை தயாரித்தவர் பிரான்சின் புகழ் பெற்ற பாலம் கட்டும் நிபுணர் குஸ்தாவே ஈஃபல். இவர் உருவாக்கியதுதான் பாரிசில் இருக்கும் ஈஃபல் டவர்.
சிலை தயாரிப்புச் செலவுக்கு பணம் பிரான்சிலும் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் திரட்டப்பட்டது. சிலையின் முக்கிய பாகங்களை முதலில் தயாரித்து அவற்றை ஊர் ஊராக எடுத்துப் போய் கண்காட்சி நடத்தி அதற்கு டிக்கட் வைத்து மக்களிடம் பணம் திரட்டினார்கள். முதலில் தயாரானது ஜோதியும் அதை ஏந்தி நிற்கும் வலது கையும்தான். இதை 1876ல் அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் நடந்த அமெரிக்க புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காட்சிக்கு வைத்தார்கள். பிரான்சிலிருந்து இதைக் கப்பலில் அமெரிக்காவுக்குக் கொண்டு வருவதற்கே 21 பெட்டிகள் தேவைப்பட்டன.
பின்னர் 1878ல் சிலையின் தலை தயாராயிற்று. இதை பாரிசில் கண்காட்சியாக வைத்து பணம் திரட்டப்பட்டது. ஜோதி பிடித்திருக்கும் கை, தலை, இவற்றுக்குள் ஏறிப் பார்க்க ஆளுக்கு 50 செண்ட் கட்டணம். இப்படியெல்லாம் பணம் திரட்டியும் கிடைத்த பணம் போதவில்லை. சிறப்பு லாட்டரி குலுக்கல் நடத்தினார்கள். சிலையின் களிமண் பொம்மைகளை விற்று பணம் திரட்டினார்கள். 1879ல் ஒருவழியாக ஏழரை லட்சம் டாலர்கள் வரை சேர்க்க முடிந்தது.
சிலை தயாரிப்பு வேலை 1884ல் முடிந்தபோது அதைப் பார்க்க லபோலே உயிரோடு இல்லை, முன் வருடமே அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.
அமெரிக்காவில் சிலைக்கான பீடம் தயாரிப்பு வேலைகள் நடந்தன. பீடத்துக்கு மட்டும் 24 ஆயிரம் டன் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவர் அமெரிக்காவின் பிரபலமான ஆர்க்கிடெக்ட் மாரிஸ் ஹண்ட்.
பீடச் செலவுக்கும் முதலில் பணம் கிடைக்கவில்லை. அமெரிக்க மத்திய அரசும் நியூயார்க் நகர நிர்வாகமும் கொஞ்சம் பணம் கொடுத்தன. ஆனால் போதவில்லை. அப்போது யாரும் இதை அமெரிக்காவுக்கான சிலையாக கருதவில்லை. நியூயார்க்குக்கான சிலை என்றே அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் நினைத்தார்கள். பிரான்சில் ஏழரை லட்சம் டாலர் திரட்டின அதே சமயத்தில் அமெரிக்காவில் வெறும் ஒன்றே முக்கால் லட்சம் டாலர்தான் திரண்டிருந்தது.
ஒரு பத்திரிகையாளர்தான் இந்த நிதி நெருக்கடியைத் தீர்த்து வைத்தார்.
சிறந்த பத்திரிகையாளர்களுக்கான் விருதுகள் இன்றும் வழங்கப்படுவது அவர் பெயரில்தான். அவர்தான் ஜோசப் புலிட்சர். ஹங்கேரியிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவரான புலிட்சர், தி வேர்ல்ட் என்ற இதழை நடத்திக் கொண்டிருந்தார். சிலைக்கு நன்கொடை தருவோர் பெயர்கள் தன் இதழில் தினமும் வெளியிடப்படும் என்று அறிவித்தார். பத்திரிகையின் விற்பனை 50 ஆயிரம் பிரதிகள் கூடியது. ஆளுக்கு ஒரு டாலர், அரை டாலர் என்றெல்லாம் பள்ளிக் குழந்தைகள் முதல் சாதாரண மக்கள் வரை அனுப்பினார்கள். ஆகஸ்ட் 11, 1885 அன்று வெளியான தி வேர்ல்ட் இதழின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் புலிட்சர் அறிவித்தார்: ஒரு லட்சம் டாலர்கள் குவிந்துவிட்டன!
பிரான்சில் தயாராகி இருந்த சிலையில் மொத்தம் முன்னூறு பாகங்கள் இருந்தன. அவற்றை 214 பெட்டிகளில் பிரித்து வைப்பதற்கே நான்கு மாதங்கள் ஆகின. பிரெஞ்ச் கடற்படைக் கப்பலில் அமெரிக்காவுக்கு அனுப்பினார்கள். நான்கு வாரப் பயணத்துக்குப் பின் கப்பல் வந்து சேர்ந்தது. திரும்பவும் முன்னூறு பாகங்களை இணைத்து சிலையை நிறுவ நேரம் பிடித்தது. இதற்கான செலவுக்கும் பணம் திரட்டப்பட்டது. பீடத்தை உருவாக்கிய கிராண்ட் அதற்காக தனக்குக் கிடைத்த சம்பளமான ஆயிரம் டாலரை நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.
கடைசியில் 1886, அக்டோபர் 28ந்தேதி சிலை திறக்கப்பட்ட அன்று நியூயார்க் நகரத்தில் பத்து லட்சம் பேர் கூடினார்கள். சிலை மீது பிரெஞ்ச் கொடி மூடப்பட்டிருந்தது. பீடத்தின் உச்சியில் சிலையின் காலடியில் நின்ற சிற்பி பர்த்தோல்டி, கீழே விழாவில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த செனட்டர் ஈவார்ட்டின் பேச்சு முடிந்ததும் கொடியை இழுத்து சிலையை திறக்க வேண்டுமென்று ஏற்பாடு. அந்த உயரத்தில் பேச்சு கேட்காது என்பதால், கீழிருந்து தனக்கு கைக்குட்டையை ஆட்டி சைகை செய்ய ஒரு பையனை நியமித்திருந்தார்.
மேடைப்பேச்சில் புகழ் பெற்றவரான ஈவார்ட் பேச ஆரம்பித்ததும் ஒரு நொடி இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தை தொடங்கும் முன்னால், அவர் பேசி முடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, பையன் கைக்குட்டையை ஆட்ட, பர்த்தோல்டி சிலையை திறந்துவிட்டார். அதைப் பார்த்த பரவசத்தில் மக்கள் எழுப்பிய ஆரவாரம் ,பீரங்கி முழக்கம், வாண வேடிக்கை சத்தத்தில் ஈவார்ட் பேசவே முடியாமல் போய்விட்டது ! ஆரவாரங்கள் அடங்கியதும் அமெரிக்க அதிபர் கிளீவ்லாண்ட் மட்டும் பேசினார்.
அடுத்த நூறு வருடங்களில் சின்னச் சின்னதாக பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1906ல் எம்மா லாசரஸ் எழுதிய கவிதை சிலையின் பீடத்தில் பொறித்துப் பொருத்தப்பட்டது. 1916ல் தி வேர்ல்ட் பத்திரிகை மறுபடியும் வாசகர்களிடமிருந்து 30 ஆயிரம் டாலர் திரட்டி சிலைக்கு ஒளி விளக்குகள் பொருத்த ஏற்பாடு செய்தது.
1986ல் சிலையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது பெரும் பழுது பார்க்கும் வேலைகள் நடந்தன. சிலையின் கையிலிருக்கும் ஜோதி பழையதைப் போலவே புதியதாக செய்து பொருத்தப்பட்டது. வெளிப்புற செப்புத்தகடுகளில் களிம்பு ஏறாமல் தடுக்க உட்புறம் பர்த்தோல்டி செய்திருந்த ரசாயன பூச்சுகள் புதுப்பிக்கப்பட்டன. ஈஃபல் அமைத்த இரும்பு எலும்புக் கூட்டின் சாரங்கள் பல எஃகினால் மாற்றப்பட்டன.
இரட்டை கோபுர தாக்குதலையடுத்து மூன்றாண்டுகளுக்கு சிலைக்கு பீடமருகே செல்வது தடை செய்யப்பட்டது. இப்போது ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு பயணிகள் மட்டுமே சிலையின் கிரீடம் வரை செல்லலாம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. நான் 2010லேயே போய் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். இந்த வருடம் சிலை பீடத்தில் இன்னொரு படிக்கட்டு அமைப்பதற்கான வேலைக்காக பயணிகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
சிலையை சுற்றியுள்ள பூங்காவில் முக்கியமான ஐந்து சிலைகள் இருக்கின்றன. லபோலே, பர்தோல்டி, ஈஃபல், புலிட்சர், எம்மா ஆகியோருக்கான் இந்தச் சிலைகள் எளிமையான கம்பிச் சிற்பங்கள். ஒவ்வொன்றும் சுமார் மூன்றடி உயரம்தான் !
சுதந்திரதேவி சிலையை நாலா பக்கத்திலிருந்தும் சுற்றிப் பார்த்தபோது, நிச்சயம் பிரமிப்பாகத்தான் இருந்தது. இதற்கு நிகரான சிலையாக குமரி முனையில் திருவள்ளுவர் சிலையை நாம் உருவாக்கத் தவறிவிட்டோமே, வள்ளுவர் தலைக் கொண்டை மீது ஏறிப் பார்க்கிற மாதிரி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எனக்குத் தோன்றுகிறது. சரி. ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டை பிடித்திருக்கிறோம்.
அடுத்து நியூயார்க்கின் பிருமாண்டமான சென்ட்ரல் பூங்கா, நவீன ஓவிய கேலரிகள், பிராட்வே தியேட்டர், அட்லாண்ட்டா நகரின் சூதாட்ட விடுதிகள், பிலடெல்ஃபியாவில் அமீஷ் கிராமம், நியூஜெர்சியின் முதியோருக்கான மையங்கள், அமெரிக்காவில் செனட்டராக துணை சபாநாயகராக இருக்கும் இந்தியரின் அலுவலகம், அடாத மழையிலும் நம்மவர்கள் கிரிக்கெட் ஆடும் பூங்கா, கிராமத்து விவசாயப் பண்ணை என்றெல்லாம் பல இடங்களுக்கும் சென்றேன். அதை பற்றியும், சந்தித்த அமெரிக்கவாழ் தமிழர்களுடன் நடத்திய விவாதங்களைப் பற்றியும் விரிவாக, விரைவில் வெளிவர இருக்கும் ‘ஆப்பிள் தேசம்’ நூலில் சொல்வேன்.
இருபத்து நான்கு வாரங்களாக என் அமெரிக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட தினமணி கதிர் வாசகர்களுக்கும் இதை சாத்தியப்படுத்திய தினமணி ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றிகள். பிரிவோம். சந்திப்போம்.
(தினமணி கதிரில் 32 வாரங்கள் வரை எழுதக் கேட்டிருந்தேன். ஆனால் 24 வாரங்களில் முடிக்கும்படி சொல்லிவிட்டார்கள். மீதி பகுதிகள் இங்கே வாரந்தோறும் வெளியிடப்படும்.)
ஆப்பிள் தேசம் 23
ஐரோப்பாவிலிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கில் அமெரிக்காவுக்கு 1800களில் புறப்பட்டு வந்தவர்கள் யார் ? ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருந்தன. பின்னாளில் அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஜான்.எஃப்.கென்னடி இது பற்றி சொல்லும்போது ‘எத்தனை பேர் வந்தார்களோ அத்தனைக் காரணங்கள் இருந்தன’ என்கிறார்.
தங்கள் மத நம்பிக்கைகளுக்காக ஒடுக்கப்பட்டதிலிருந்து விடுதலை தேடி வந்தவர்கள், அரசியல் கருத்துகளுக்காக கொடுமைக்குள்ளாகித் தப்பித்துத் தஞ்சம் புகுந்தவர்கள், தங்கள் நாட்டில் கடும் வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் நிலையில் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், வாழ்க்கையில் ஏதேனும் சாகசம் செய்யவேண்டும் என்ற துடிப்பில் மட்டுமே வந்தவர்கள் எனப் பல தரப்பட்ட மக்கள் அமெரிக்காவுக்கு வந்தார்கள்.
எல்லிஸ் தீவு அருங்காட்சியகத்தில் இருக்கும் படங்கள், பொருட்கள், ஆவணங்கள், சிறு வெளியீடுகள் ஆகியவற்றிலிருந்து அந்தப் புலம் பெயர்தல் எப்படியிருந்திருக்கும் என்று இப்போதும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
பெரும்பாலானவர்களுக்கு அந்தப் புலம் பெயர்தல் ஒரு குடும்ப நிகழ்ச்சியாக இருந்தது. குடும்பத்திலிருந்து ஒருவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்காக, மற்றவர்கள் உழைத்து சேமித்தார்கள். குடும்பத்திலிருந்து ஒருவர் முதலில் அமெரிக்கா சென்று செட்டில் ஆனதும் மெல்ல மெல்ல இதர உறுப்பினர்களை அமெரிக்காவுக்கு வரவழைக்கும் போக்கு அப்போதே ஆரம்பித்துவிட்டது. 1900 முதல் 1910 வரை எல்லிஸ் தீவில் நுழைந்தவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு ஏற்கனவே அமெரிக்காவில் ஓர் உறவினரோ நண்பரோ இருந்தார்கள்.
அந்த உறவினரோ நண்பரோ முன்கூட்டியே காசு கொடுத்து டிக்கட் வாங்கி அனுப்பி வந்தவர்களாகவே பாதி பேருக்கு மேல் இருந்தார்கள். முக்கிய கப்பல் கம்பெனிகள் அனைத்தும் இதற்காகவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏஜண்ட்டுகளை வைத்திருந்தன. இவர்கள் கிராமம் கிராமமாக சென்று கப்பல் பயண டிக்கட்டுகளை விற்றார்கள்.
இந்த டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டு கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்த பலர் வாரக்கணக்கில் துறைமுகங்களில் கப்பலுக்காகக் காத்திருந்தார்கள். இவர்களுக்காகக் காத்திருப்பு விடுதிகள் இயங்கத் தொடங்கின.
கப்பலில் ஏறுவதற்கு முன்னால், பயணியிடம் 29 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டு ஆவணமாக்கப்பட்டன. பெயர், வயது, பால், மொழி, இனம், மண நிலை, உடல் நலம், அறிவு முதிர்ச்சி, எழுதப் படிக்கத் தெரியுமா,போன்றவை தவிர போகும் ஊரில் தெரிந்தவர் யார், அவர் முகவரி, முதலியனவும் கேட்கப்பட்டன. பல தார மணத்தை ஆதரிப்பவரா, அரசியலில் அராஜகக் கொள்கை உடையவரா என்றெல்லாம் கூட விசாரித்தார்கள். கையில் குறைந்தபட்சம் முப்பது டாலராவது இருக்கிறதா என்று சோதிக்கப்பட்டது. மருத்துவ சோதனைகளும் கப்பலில் ஏறும் முன்பே செய்யப்பட்டன, தடுப்பூசிகள் கட்டாயமாகப் போடப்பட்டன.
இப்படி பல நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற கப்பல்களில் மூன்று வகையான பயணிகள் இருந்தார்கள். முதல், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு கப்பலிலேயே அடுத்த கட்ட விசாரணை முடிக்கப்பட்டது. எல்லிஸ் தீவில் இறங்கியதும் அவர்கள் விரும்பிய பகுதிக்கு நேரே சென்றுவிடலாம். ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் எல்லிஸ் சாவடி விசாரணையில் தேர்வானால்தான் அமெரிக்காவில் நுழைய முடியும்.
இந்தப் பயணிகளின் எண்ணிக்கைதான் மிக அதிகம். ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 2 ஆயிரம் பேர் வரை ஆளுக்கு 30 டாலர் கொடுத்து சென்றார்கள். கப்பல் கம்பெனிகள் பெரும் லாபம் சம்பாதித்தன. தினசரி இந்தப் பயணிகளின் சாப்பாட்டுக்காக கம்பெனிகள் செலவிட்ட தொகை தலைக்கு வெறும் 60 செண்ட்டுதான். (100 செண்ட் = ஒரு டாலர்.) கப்பல் பயணம் இந்தப் பயணிகளுக்கு நரக வேதனையாக இருந்தது. வெளிச்சம் இல்லாத, காற்று வசதி இல்லாத அறைகளில் மந்தை மந்தையாக அடைக்கப்பட்டிருந்தார்கள்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு 1911ல் தரப்பட்ட ஓர் அறிக்கையில் இந்தப் பயணிகளின் நிலை பற்றி உருக்கமாகச் சொல்லப்பட்டது. கப்பலிலேயே மோசமான பகுதிதான் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது சரக்கு மூட்டைகளின் தூசி, கடல் பயணம் தாங்கமுடியாமல் வாயிலெடுத்தவர்களின் வாந்தி ஆகியவற்றுக்கு நடுவே முடை நாற்றமடிக்கும் காற்றை சுவாசித்தபடி, தரப்படும் சொற்ப சாப்பாட்டைக் கூட நின்றபடியே கப்பல் வராந்தாவில் சாப்பிட்டுக் கொண்டு, குடிப்பதற்கு உப்புத் தண்ணீர் தவிர வேறெதுவும் இல்லாமல், பத்துப் பதினைந்து தினங்கள் முதல் ஒரு மாதம் வரை இவர்கள் கடலில் அமெரிக்கக் கனவுகளுடன் பயணம் செய்தார்கள்.
சீட்டு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்ட பயணிகள், பெரும்பாலான நேரம் ஒருவரோடொருவர் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். அமெரிக்கா எப்படி இருக்கும், விசாரணையில் தப்பிப்போமா, என்னவெல்லாம் கேட்பார்கள், எப்படி பதில் சொல்வது என்ற உரையாடல்களிலேயே பொழுதைக் கழித்தார்கள். எல்லிஸ் தீவிற்கு கப்பல் வந்து சேரும்போது சராசரியாக நூற்றுக்கு பத்து பேர் கப்பலிலேயே செத்துப் போயிருந்தார்கள்.
கரைக்கு வந்தாலும் கப்பலிலிருந்து யாரையும் இறங்க விடுவதில்லை. மருத்துவர்கள் கப்பலுக்குள் சென்று பயணிகளை சோதித்தார்கள். தொற்ரு நோய்கள் இருக்கக் கூடியவர்களை அப்புறப்படுத்தி தனிமைப் படுத்தினார்கள். முதல், இரண்டாம் வகுப்புப் பயணிகள் மட்டுமே இந்த மருத்துவ சோதனையில் பெரிதும் தேறினார்கள். எடுத்துக்காட்டாக 1901ல், மொத்தம் ஒரு லட்சம் முதல், இரண்டாம் வகுப்புப் பயணிகளில் வெறும் 3000 பேர் மட்டுமே அடுத்த கட்ட மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால், மூன்றாம் வகுப்பில் பயணித்த எட்டு லட்சம் பேரும் கரையிலும் மறுபடி சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள்.
மேல்தட்டுப் பயணிகளை மன்ஹாட்டன் கரையில் இறக்கிவிட்டு, மற்றவர்களை எல்லிஸ் தீவுக்குக் கொண்டு செல்வது வழக்கம். ஒவ்வொரு பயணியின் உடையிலும் பெரிய அடையாள அட்டை மாட்டப்பட்டது. இதில் அவர்களுடைய ஆவண எண் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். முப்பது முப்பது பேராகப் பிரித்து படகில் எல்லிஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
அவர்களை முதலில் வரவேற்பவர் மொழிபெயர்ப்பாளர்தான். இந்த மொழிபெயர்ப்பாளர்களின் கருணையில்தான் ஒவ்வொரு பயணியும் விசாரணையில் தப்பித்துத் தேறி செல்ல முடியும். ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் குறைந்தபட்சம் ஆறு மொழிகள் தெரிந்திருந்தன. மிக அதிகபட்சமாக ஒருவர் 15 மொழிகள் வரை பேச அறிந்திருந்தார்.
முதல் கட்டத்தில் அத்தனை பயணிகளும் மாடிப்படிகள் ஏறி முதல் மாடியில் இருக்கும் பதிவுக் கூடத்துக்கு செல்ல வேண்டும். படியில் ஏறுவதே ஒரு பரிசோதனைதான். ஏறுபவர்களைக் கண்காணித்தபடி மருத்துவர்கள் நிற்பார்கள். நோயாளியின் நடையா, மூளை வளர்ச்சியில்லாதவரின் நடையா என்றெல்லாம் பார்வையிலேயே எடை போடுவார்கள். மருத்துவர் தேர்ந்தெடுக்கும் பயணியின் உடை மீது சாக் பீசில் ஏதேனும் ஓர் ஆங்கில எழுத்தை எழுதி அனுப்புவார். அது அந்தப் பயணியை எப்படிப்பட்ட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான சங்கேதக் குறிப்பு. பத்து பேரில் இருவரேனும் இதில் சிக்குவார்கள்.
வலது தோளின் மேலே பெரிதாக எக்ஸ் என்று எழுதியிருந்தால், அந்தப் பயணி மூளை வளர்ச்சியற்றவர் என்று சந்தேகிப்பதாக அர்த்தம். சற்று கீழே அதையே எழுதினால், ஏதேனும் உடல் ஊனம் இருக்கலாம் என்பதாகப் பொருள். ஒரு வட்டம் போட்டு அதற்குள் எக்ஸ் என்று எழுதினால், ஏதோ நோய்க்கான ஓர் அறிகுறி உறுதியாகத் தெரிவதாக அர்த்தம். ‘பி’என்று எழுதினால், பின்புற முதுகுப் பிரச்சினை இருப்பதாகப் பொருள். ‘பிஜி’ என்றால் ப்ரெக்னன்சி , கர்ப்பிணி என்ற அடையாளம்.
சில சமயங்களில் முப்பது பேர் உள்ள மொத்தக் குழுவையுமே கிருமி நாசினிகள் கலந்த தண்ணீரில் மொத்தமாகக் குளிப்பாட்டுவார்கள். இதைத் தாண்டியபிறகு கண் மருத்துவர்கள் ஒவ்வொரு பயணியையும் சோதிப்பார்கள். கண் பார்வையை பாதித்து மெல்ல மரணத்துக்கே கொண்டு செல்லக் கூடிய டிரக்கோமா என்ற நோய் கண்ணில் உள்ளதா என்பதை சோதிப்பார்கள். அந்த காலத்தில் எல்லிஸ் சாவடியில் மருத்துவ சோதனைக்காக நிறுத்திவைக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கு மேல் இந்த கண் நோய் இருந்தவர்கள்தான்.
மருத்துவ சோதனையில் நிராகரிக்கப்பட்டவர்கள் பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்டிருந்தால், தனியே கப்பலில், புறப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார். அதற்கு கீழுள்ள குழந்தையானால் உறவினரில் ஒருவரும் சேர்த்து திருப்பி அனுப்பப்படுவார். இந்த நிலை ஏற்பட்டால், அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் மன உளைச்சலும், சிரமமும் கொஞ்சநஞ்சமல்ல.
மருத்துவ சோதனைகள் முடிந்தபின் கடைசியாக இருக்கும் விசாரணை அதிகாரி தன்னிடம் இருக்கும் ஆவணத்தில், பயணி தெரிவித்த 29 தகவல்களும் சரியா என்று விசாரிக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் பயணியை விசாரிக்க அவருக்கு இருக்கக்கூடிய நேரம் வெறும் இரண்டு நிமிடம்தான். ஏனென்றால் அத்தனை பேர் கும்பல் கும்பலாகக் காத்திருப்பார்கள். எனவே பெரும்பாலான பயணிகள் அமெரிக்காவில் நுழையும் அனுமதியை பெற்றுவிடுவார்கள். மொத்தத்தில் நூற்றுக்கு இரண்டு பேர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார்கள்.
அமெரிக்காவில் குடியேற, எல்லிஸ் தீவு விசாரணைச் சாவடியில் அனுமதி பெற்றுவிட்டவரை அடுத்து வரவேற்பது சுதந்திரதேவி சிலைதான். என்னையும் வரவேற்றது. எல்லிஸ் தீவு மியூசியத்தில் மணிக்கணக்கில் அறிந்த சரித்திர உண்மைகளுக்குப் பின்னர் சுதந்திர தேவியின் சிலையைப் பார்க்கும்போது அதற்கு ஒரு புது அர்த்தமே கிடைத்தது.
எப்படி எண்ணற்ற மக்கள் பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து அமெரிக்காவை வளப்படுத்தியிருக்கிறார்களோ அதே போல இந்த பிருமாண்டமான சிலையும் எண்ணற்ற நாட்டு மக்களின் நன்கொடைகளால்தான் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
பிரான்சில் உருவாக்கப்பட்டு அமெரிக்காவில் நிர்மாணிககப்பட்ட சுதந்திர தேவி சிலையின் கதையை பார்க்கும் முன்னால் எல்லிஸ் மியூசியத்தில் இருக்கும் ஒரே ஒரு சிலையைப் பற்றியும் சொல்லியாகவேண்டும்.
எல்லிஸ் தீவில் வந்து இறங்கியதும் விசாரிக்கப்பட்டு முதலில் அனுமதிக்கப்பட்ட நபருக்குத்தான் அந்த சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு 15 வயது சிறுமி. அயர்லாந்திலிருந்து எஸ்.எஸ் நெவாடா கப்பலில் அமெரிக்காவுக்கு 1892 ஜனவரி முதல் நாள் வந்து சேர்ந்த சிறுமி ஆனி மூருக்கு, குடியேற்ற அதிகாரி பத்து டாலர் தங்கக் காசைப் பரிசாக அளித்திருக்கிறார் ! ஆனியுடன் அவள் சகோதரர்களும் வந்தார்கள். பெற்றோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்துவிட்டார்கள்.
ஆனிக்கு எல்லிஸ் மியூசியத்தில் மட்டுமல்ல, அவள் தாய்நாடான அயர்லாந்திலும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது ! அமெரிக்காவில் ஐரிஷ்காரர்கள் பெருகுவதற்கு ஆனியும் தன்னாலியன்றதைச் செய்திருக்கிறாள். 49 வயதில் இறந்த அவளுக்கு மொத்தம் 11 குழந்தைகள் !
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 22
சுதந்திர தேவி சிலைத் தீவுகளுக்கு செல்வதற்கான படகுத் துறையில் பெரும் கூட்டம் இருந்தது. படகில் ஏறக் காத்திருந்த சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றார்கள்.
அப்போது ஒரு சுவையான நிகழ்ச்சியைக் கண்டேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த சீனக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி, மெதுவாக ஒவ்வொரு ஆளாக தாண்டி வரிசையில் முன்னே போய் ஒரு இடத்தைப் பிடிக்க முயன்றுகொண்டிருந்தார். திடீரென்று இதை கவனித்த அந்த மூதாட்டியின் பத்து வயது பேத்தி, விரைந்து போய் அந்த மூதாட்டியைக் கையைப் பிடித்து இழுத்து வந்து பழைய இடத்தில் நிறுத்தினாள். நிறுத்திவிட்டு பாட்டிக்கு அறிவுரையும் சொன்னாள். இங்கே எங்கு சென்றாலும் வரிசையைப் பின்பற்றவேண்டும். மீறக்கூடாது. ஊரில் செய்வது போல இங்கே செய்யக் கூடாது என்று அந்த சிறுமி கறாரான தொனியில் பாட்டிக்கு எடுத்துச் சொன்னாள். அவள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவளாகத் தெரிந்தாள்.
படகு முதலில் எல்லிஸ் தீவுக்கு சென்றது. அங்கே நானும் ராஜேஷும் இறங்கிக் கொண்டோம். வந்தேறிகளைப் பற்றிய அருங்காட்சியகத்துக்குச் சென்றோம். இவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் கதை சொல்லும் ஓர் அருங்காட்சியகத்தை இதற்கு முன்பு நான் கண்டதில்லை. அதன் ஒவ்வொரு அறையிலும் இருக்கும் விஷயங்களைப் பார்த்து, படித்துக் கொண்டே வந்தால், 1892லிருந்து 1954 வரை அதன் வழியே அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து வந்த ஒன்றரை கோடி பேரைப் பற்றியும் புரிந்து கொள்ள முடிகிறது. அன்றைய அமெரிக்கா எப்படி இருந்தது என்று உணர முடிகிறது. வரலாற்றை சாதாரனப் பார்வையாளருக்கு சுவாரஸ்யமாக சொல்வது எப்படி என்பதற்கான ஒரு பாடப் புத்தகம் போல அந்த அருங்காட்சியகம் இருக்கிறது.
எல்லிஸ் தீவின் வரலாற்றை முதலில் பார்ப்போம். மூன்றரை ஏக்கர் பரப்பளவில் வெறும் மண்னாக இருந்த தீவு இது. 1700களில் இது கைதிகளைத் தூக்கில் போடும் இடமாக் இருந்திருக்கிறது. அமெரிக்கப் புரட்சி சமயத்தில் இந்தத் தீவு சாமுவேல் எல்லிஸ் என்பவரின் சொத்தாக இருந்தது. அவருடைய வரிசுகளிடமிருந்து இதை வாங்கிய அமெரிக்க அரசு இதை ராணுவ தளமாக மாற்றியது. பின்னர் இதை புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு குடியேற வருவோருக்கான நுழைவு அனுமதிச் சாவடியாக மாற்றினார்கள். முதலில் அமைக்கப்பட்ட மர அலுவலகங்கள் தீவிபத்தில் நாசமானதும், பிரும்மாண்டமான கட்டடங்கள் கட்டப்பட்டன. விசாரணைக் கூடம், மருத்துவமனை, உணவு விடுதி என்று பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
மூன்றரை ஏக்கராக இருந்த எல்லிஸ் தீவுடன் இன்னும் இரண்டு தீவுகள் இணைக்கப்பட்டு மொத்தம் 27 ஏக்கராகிவிட்டது. தினசரி ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருந்தவர்களை விசாரித்து முடிவெடுக்க சுமார் 850 ஊழியர்கள் இங்கே பணியாற்றியிருக்கிறார்கள்.
புதுப் பொலிவுடன் விசாரணைச் சாவடி இருந்தது. ஆனால் ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பது போல சாவடிக்குள் இருந்த ஊழியர்கள் ஊழல் பேய்களாக இருந்தார்கள். புகலிடம் கோரி வருபவருக்கு அனுமதிச் சீட்டு தர, லஞ்சம் வாங்கினார்கள். அழகிய பெண்களாக இருந்தால், மாலையில் பக்கத்திலிருக்கும் ஓட்டல் அறையில் தன்னை தனியே சந்திக்க வரும்படி வற்புறுத்தினார்கள். மதிய உணவைத் தங்களிடம் வாங்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தி அதிக விலைக்கு விற்றார்கள். விசாரணைச் சாவடியிலிருந்து அமெரிக்காவின் இதர பகுதிகளுக்கு செல்வதற்கான ரயில் டிக்கட்டுகளின் விலையைக் கூட்டி விற்றார்கள்.
இத்தாலியிலிருந்து 25 லட்சம் பேர், ரஷ்யாவிலிருந்து 19 லட்சம் பேர்,ஹங்கேரி, ஜெர்மனி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா இங்கிருந்தெல்லாம் தலா ஆறு லட்சம் பேர், இன்னும் சின்ன நாடுகளிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கானவர்கள் என்று வந்து குவிந்தவர்களிடம் அவரவர் நாட்டு பணமும் நாணயங்களுமே இருந்தன. இவற்றை அமெரிக்க டாலருக்கு மாற்றும்போது தங்கள் இஷ்டப்பட்ட மதிப்புக்குப் பணம் கொடுத்து வந்தவர்களை ஏமாற்றினார்கள் விசாரணைச் சாவடி ஊழியர்கள்.
எல்லிஸ் தீவு ஊழல்கள் 1901ல் அமெரிக்க ஜனாதிபதி தியடோர் ரூஸ்வெல்ட் காதுவரை எட்டியது. அவர் கொதித்துப் போய் கடும் நடவடிக்கைகள் எடுத்தார். எல்லா ஊழியர்களும் கூண்டோடு மாற்றப்பட்டார்கள்.
என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், எல்லிஸ் தீவில் அமெரிக்க அரசு நடத்தும் அருங்காட்சியகத்தில் தங்கள் அரசுத் துறையில் ஒரு காலத்தில் கடும் ஊழல்கள் நடந்தன என்று அரசே அதிகாரப்பூர்வமாக அதை விவரமாகப் பதிவு செய்திருப்பதுதான்.
முதல் உலக யுத்தம் நடந்த போது எல்லிஸ் தீவு விசாரணைக் கூடம் விசித்திரமான ஒரு சிக்கலை சந்திக்க வேண்டி வந்தது. அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. எனவே வெளியிலிருந்து புதியவர்களை அனுமதிக்க விரும்பவில்லை. அதே சமயம் ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளிலும் கடல் போக்குவரத்து யுத்தத்தால் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவுக்குள் நுழையவும் முடியாமல், தங்கள் நாட்டுக்குத் திரும்பவும் முடியாமல் 1500 ஜெர்மன் மாலுமிகள் எல்லீஸ் தீவில் அகதிகளானார்கள்.சந்தேகத்தின் பேரில் இன்னும் 2200 பேர் தடுப்புக் காவலில் அங்கே இருந்தார்கள்.
எல்லிஸ் தீவு விசாரணைக் கூடம் 1916ல் இரண்டாவது விபத்தை சந்தித்தது. அருகில் இருந்த ரயில் நிலைய சரக்குக் கூடத்தில் 14 பெட்டி நிறைய டைனமைட் வெடி மருந்துடன் நின்றுகொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலைக் கிளர்ச்சியாளர்கள் கொளுத்திவிட்டார்கள். ஏற்பட்ட வெடி விபத்தில் விசாரணைக் கூடம் நாசமாகியது. ஆனால் எல்லாரும் தப்பித்தார்கள்.
1917லிருந்து குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டன. மொத்தம் 33 வகையான வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சட்டம் போடப்பட்டது. புலம் பெயர்ந்து குடியேற வருவோர் படிப்பறிவற்றவராக இருக்கக் கூடாது என்ற விதி வந்தது. அமெரிக்காவுக்குக் குடியேற விரும்புபவரை அமெரிக்காவுக்கு வந்தபின் விசாரிப்பதற்கு பதில், அவர் புறப்படும் நாட்டில் இருக்கும் அமெரிக்க தூதர் அலுவலகத்திலேயே விசாரித்து முடிவு செய்யலாம் என்ற நடைமுறை 1925ல் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து எல்லிஸ் தீவில் வேலை மிகவும் குறைந்துவிட்டது. 1954ல் இந்த விசாரணைக் கூடத்தை மூடினார்கள்.
அதன் பிறகு நடந்தவை மேலும் ஆச்சரியமானவை.
ஒன்றரை கோடி பேர் அமெரிக்காவில் நுழையக் காரணமாக இருந்த இடம் கவனிப்பாரில்லாமல்,புறக்கணிக்கப்பட்டது. பிரும்மாண்டமான விசாரணைக் கூடமும் அதன் அறைகளும் பழுதடைந்து நாசமாகி பேய் வீடு மாதிரி ஆகின. இப்படியே பதினோரு வருடங்கள் கழிந்தன. உபயோகிப்பார் இல்லாமல் நாசமாகி சிதிலமடைந்துபோன இடத்தை தேசிய சின்னமாக அறிவிக்க லிண்டன் ஜான்சன் அரசு முடிவு எடுத்தது. அதன்பிறகும் எதுவும் நடக்கவில்லை. ரொனால்ட் ரீகன் ஜனாதிபதியாக இருந்தபோது விளம்பரத்துறை கோடீஸ்வரர் லீ அயகோக்காவை அழைத்து எல்லிஸ் தீவு சாவடியை புனர் நிர்மாணம் செய்யக் கோரினார். கடைசியில் பொது மக்களிடமிருந்து நன்கொடை திரட்டி 17 கோடி டாலர் செலவில் விசாரணைக் கூடம் புதுப்பிக்கப்பட்டு 1990ல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
எல்லிஸ் தீவு விசாரணைக் கூடம் கலகலப்பாக பரபரப்பாக இருந்த படங்கள் முதல், அது சிதிலமடைந்து கவனிப்பாரற்றுக் கிடந்த காட்சிகள், பின்னர் பழைய தோற்றத்துக்கு புதுப்பிக்க எடுத்துக் கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைப் படங்கள் வரை அருங்காட்சியகத்தின் தனிப் பிரிவாகவே வைக்கப்பட்டுள்ளன. இதுதான் அமெரிக்கர்களின் தனித்தன்மை. ஒரு பழுதடைந்த கட்டடத்தைப் புதுப்பித்து வேறொன்றாக்கும்போது அந்த வரலாற்றையும் கூடவே சேர்த்து ஆவணப்படுத்திவிடுகிறார்கள்.
இந்த அருங்காட்சியகத்தில் இருக்குமொரு முக்கியமான பிரிவு வேர்களைத் தேட உதவும் பிரிவாகும். ஒவ்வொரு அமெரிக்கரும் ஆறு தலைமுறை பின்னால் போய் தேடத் தொடங்கினால், அதாவது சுமாராக 180 வருட காலத்தை அலசினால், அவருக்கு குறைந்தது 126 மூதாதையர் இருப்பார்கள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏழு தலைமுறை பின்னே அலசினால் மொத்தம் 252 மூதாதையர். கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி வரை மட்டும் போய் பார்த்தாலே 14 மூதாதையர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
உங்கள் மூதாதையர் யார் என்று தேடுங்கள் என்று சொல்லி, அதற்கென்றே இங்கே ஒரு தனி மையம் வைத்திருக்கிறார்கள். 1924 வரை அமெரிக்காவுக்குள் வந்த மொத்தம் 2 கோடி 40 லட்சம் குடியேறிகளின் விவரங்கள் கணிணிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு பயணிகளை ஏற்றி வந்த 800 கப்பல்களின் முழு விவரங்களில் தொடங்கி, புகலிடம் தேடி வந்தவர் பெயர், குடும்பப் பெயர், இனம், கடைசியாக வசித்த நாடு ஊர், அமெரிக்காவுக்கு வந்த தேதி, அப்போதைய வயது, மண நிலை, பாலினம், எந்தக் கப்பலில் வந்தார், எந்த துறைமுகத்திலிருந்து வந்தார் என்ற விவரங்கள் அனைத்தும் இருக்கின்றன. அருங்காட்சியகத்தில் இதற்கென்றே 41 கணினிகள் இயங்குகின்றன. கூட்டம் கூட்டமாக இன்றைய அமெரிக்கர்கள் இவற்றில் தங்கள் மூதாதையரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு மாடியும் அவற்றில் ஒவ்வொரு அறையும் தகவல் களஞ்சியமாக இருக்கின்றன. வீட்டிலிருந்து கொண்டு வந்த சொத்து என்ற பிரிவில், குடியேறிகள் கொண்டு வந்த பெட்டிகள், துணிகள், பழம் புகைப்படங்கள், சின்னச் சின்ன நினைவுப் பொருட்கள் என்று ஆயிரம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லிஸ் தீவு வரலாறு என்ற பிரிவில் மண்ணும் சேறுமாக இருந்த தீவு எப்படி இப்போதைய நிலை வரை வந்தது என்ற முழு வரலாறும் படங்கள், கட்டட மாதிரிகள், மேப்கள் முதலியவற்றால் விளக்கப்பட்டிருக்கிறது.
மௌனக் குரல்கள் என்ற தலிப்பில் இருக்கும் பிரிவில் கவனிப்பாரற்று பாழடைந்த எல்லிஸ் தீவுக் கட்டடங்களின் நிலையைப் புகைப்படங்களாகப் பார்க்கலாம். வரலாற்றுச் சின்னத்தைப் புதுப்பித்தல் என்ற பிரிவு எப்படி அத்தனையும் புதுப்பிக்கப்ட்டன என்பதைத் துல்லியமாக விவரிக்கிறது.
உச்சமான குடியேற்ற வருடங்கள் என்ற பிரிவில் மட்டும் பத்து அறைகள். இதில் குடியேறியவர்கள் நுழைந்தது முதல் ஒவ்வொரு நடப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யார் யார் எந்தெந்த ஊர்களுக்குச் சென்றார்கள், அங்கே எப்படிப்பட்ட தொழில்களில் ஈடுபட்டார்கள், ஆரம்ப காலங்களில் அவர்கள் நடத்திய பத்திரிகைகள், பழைய தாய்நாட்டுடன் கொண்ட உறவு, பிரிவு, குடும்பங்கள் பிரிந்து கூடிய கதைகள், வந்தேறிகளுக்கும் ஏற்கனவே குடியேறி நிலை பெற்றுவிட்டவர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், கலப்புகள் எனப் பல அம்சங்கள் இவற்றில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதில் பெரிய சோகம் என்னவென்றால் சுதந்திரதேவி சிலையைக் காணச் செல்லும் பெரும்பாலோர் வழியில் இருக்கும் எல்ல்லிஸ் தீவு அருங்காட்சியகத்தைப் பார்க்காமலே போகிறார்கள் என்பதுதான்.
அமெரிக்கா குடியேறிகளின் தேசம் என்கிற நிலையில் இந்த அருங்காட்சியகம் அமெரிக்காவைப் புரிந்துகொள்ள மிக முக்கியமான ஒரு நுழைவாயில். இன்று குடியேறுபவர்களுக்கும் எல்லீஸ் தீவில் அன்று வந்து இறங்கிய குடியேறிகளுக்கும் என்ன வேறுபாடு என்று யோசிப்பது சுவையான ஆராய்ச்சியாக் இருக்கும். அன்று வந்தவர்கள் யார் ?
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 21
ப்ரூக்ளின் பாலத்தில் ராஜேஷும் நானும் நடந்து செல்லச் செல்ல எதிரே வந்தவர்கள், பின்னே வந்தவர்கள் என்று பல வாசகர்கள், அடுத்தடுத்து என்னை அடையாளம் கண்டு கொண்டு, வந்து பேசியது பெரிய ஆச்சரியமாக இருந்தது. இப்படி அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பாலத்தின் மீது சுமார் 25 தமிழர்களை சந்தித்துவிட்டேன். எல்லாரும் அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, விடுதலை தின விடுமுறையை ஒட்டி, சுற்றுலா வந்தவர்கள். சிலர் இந்தியாவிலிருந்து வந்திருந்த பெற்றோருக்கு, ஊர் சுற்றிக் காட்ட அழைத்து வந்தவர்கள். பலரும் தொடர்ந்து என்னை வாசிப்பவர்களாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
எல்லாருடனும் பேசியதில் இரு விஷயங்கள் திரும்பத் திரும்பப் பேசப்பட்டன. இந்தியாவில், தமிழகத்தில் சீரழிந்திருக்கிற அரசியலை எப்படி மாற்றி எப்படி நம் சமூகத்தை முன்னேற்றுவது என்ற கவலை, அமெரிக்காவில் இருந்துகொண்டு இதற்கு தான் என்ன செய்ய முடியும் என்ற குழப்பம் இரண்டும் அவர்கள் உரையாடல்களில் பிரதிபலித்தன.
அன்றிரவு புரூக்ளின் பாலத்திலிருந்து வாண வாடிக்கைகளைப் பார்த்தேன். வழக்கமாக நடக்கும் இரு இடங்களில் ஒன்றில் நிகழ்ச்சி பணப் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பொருளாதார நெருக்கடியினால் புரவலர்கள் முன்போல செலவு செய்ய முன்வரவில்லை. பார்த்த அளவில் வாண வேடிக்கைகள் வண்ணமயமாகவும் பிரும்மாண்டமாகவும் இருந்தன. புரூக்ளின் பாலத்தருகே இருந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறி டைம் ஸ்கொயர் சென்றோம்.
டைம் ஸ்கொயர் நியூயார்க்கின் கவர்ச்சிப் பகுதி. எல்லா கட்டடங்களிலிருந்தும் மின்னும் வண்ண வண்ண நியான் விளம்பரங்கள் இந்தப் பகுதியைக் கவர்ச்சிகரமாக ஆக்கியிருக்கின்றன.நியூயார்க்கின் மன்ஹாட்டன் வட்டாரத்தில் பிராட்வே தியேட்டர்கள் இருக்கும் தெருவுக்கும் ஏழாவது அவென்யூவுக்கும் குறுக்கே இருக்கும் நாற்சந்திதான் டைம் ஸ்கொயர். பல சினிமாக்களில் இந்தப் பகுதியைப் பார்க்கலாம். சுற்றுலா பயணிகளுக்காக இங்கே இன்னும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தன் அலுவலகத்தை இங்கே 1904ல் ஏற்படுத்தியதிலிருந்து இந்தப் பகுதிக்கு டைம் ஸ்கொயர் என்ற பெயர் வந்தது. தினசரி செய்திகளை நியான் போர்டுகளில் ஒளிபரப்புவது இங்கே வழக்கம்.
நியான் விளக்குகள் வருவதற்கு முன்பே இந்தப் பழக்கம் இங்கே இருந்திருக்கிறது. 1921ல் நியூயார்க் டைம்ஸ் அலுவலகம் வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று ஒரு குத்துச்சண்டையின் முடிவுகளைப் பலகையில் பார்க்க ஆவலாக இருந்திருக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் பெர்னாட் ஷா குத்துச்சண்டை வீரர் பிரெஞ்சுக்காரர் கார்ப்பெண்ட்டியர்தான் ஜெயிப்பார் என்று பெட் கட்டினார். நியூ ஜெர்சியில் நடந்த இந்த குத்துச்சண்டையை சுமார் ஒரு லட்சம் பேர் நேரில் பார்த்திருக்கிறார்கள். இன்னும் பல ஆயிரம் பேர் நியூயார்க் டைம்ஸ் அலுவலக வாசலில் கூடியிருக்கிறார்கள். கடைசியில் ஜாக் டெம்ப்சி ஜெயித்தார் கார்ப்பெண்ட்டியரும் ஷாவும் தோற்றார்கள்.
டைம் ஸ்கொயர் நியூயார்க்கின் கலாசாரத் தலைமையகமாக இருக்கிறது. பிராட்வேயில் நிறைய நாடக அரங்குகள், நடன அரங்குகள், உல்லாச சூதாடும் விடுதிகள் இருக்கின்றன. எண்பதுகள் வரையில் இந்தப் பகுதி போக்கிரிகளும் விபசாரிகளும் நிறைந்த ஆபத்தான் பகுதியாகவே கருதப்பட்டது. தொண்ணூறுகளில் இதை மாற்றியமைக்க நகர மேயர்கள் கடும் நடவடிக்கைகள் எடுத்தபின்னர், இந்தப் பகுதி கௌரவமானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்கப்பட்டது. அமெரிக்கப் பொருளாதார சீர்குலைவுக்குக் காரணமாக இருந்த லெஹ்மன் பிரதர்ஸ் கம்பெனியின் தலைமையகம் டைம் ஸ்கொயரில்தான் இருக்கிறது.
புத்தாண்டு பிறக்கும் இரவுக் கொண்டாட்டம் டைம் ஸ்கொயரில் பிரபலமானது. பிரும்மாண்டமான வண்ண பலூன் பந்தை உயர்ந்த கட்டடத்தின் உச்சியில் இறக்குவது கொண்டாட்டத்தின் ஓர் அம்சம். டைம் ஸ்கொயர் பகுதியில் டிசம்பர் 31 இரவுகளில் சுமார் 10 லட்சம் மக்கள் புது வருடத்தைக் கொண்டாட தெருவில் திரள்கிறார்கள்.
அந்த மாதிரியான ஒரு பகுதியில் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும் ? நான் அங்கு செல்வதற்கு ஒரு மாதம் முன்னால் மே 1 2010 அன்று டைம் ஸ்கொயரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரிலிருந்து புகை வந்ததைப் பார்த்த ஒரு நடைபாதை வியாபாரி போலீசை அழைத்தார். சோதனையிட்டபோது அதில் வெடிமருந்துகள் இருப்பது தெரியவந்தது. எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அடுத்த 53 மணி நேரத்துக்குள் காரை அங்கே குண்டுகளுடன் நிறுத்தியவர் என்று பைசல் ஷாசாத் என்ற இளைஞரை நியூயார்க்கிலிருந்து துபாய்க்குப் புறப்பட்ட விமானத்தில் போலீஸ் கைது செய்தது. அவருக்கு உதவியதாக பாகிஸ்தானில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
நான் டைம் ஸ்கொயருக்கு சென்ற சமயம் அங்கே மக்களிடம் எந்த பதற்றமும் இல்லை. வெடிகுண்டு கார் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியில் இப்போது கூடுதலாக ஒரு போலீஸ் வண்டி நிறுத்திவைக்கப்பட்டதைத் தவிர வேறு சலனங்கள் மக்களிடம் இல்லை.உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தார்கள்.
டைம்ஸ்கொயரில் சுற்றிவிட்டு ராஜேஷும் நானும் அவர் வீட்டுக்கு ரயிலில் திரும்பினோம்.
மறு நாள் காலை அமெரிக்காவின் நுழைவாயிலைப் பார்க்க ராஜேஷுடன் புறப்பட்டபோது வழியில் எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. இத்தனை நாட்களும் அமெரிக்காவில் பல பகுதிகளுக்கும் சென்று பல நண்பர்களுடைய வீடுகளில் தங்கியபோதெல்லாம்,அந்த வீடுகள் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தன. எல்லாமே மர வீடுகள்தான். ஆனால் பார்வைக்கு மரமென்றே தெரியாது. இப்படி நம் ஊரிலும் செங்கல், சிமெண்ட், கான்கிரீட், இரும்புக் கம்பிகள் இல்லாமல் வீடு கட்ட முடிந்தால் எவ்வளவு மணற்கொள்ளையை நிறுத்தி ஆறுகளைக் காப்பாற்றலாம் என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.
உண்மையில் மரவீடுகள் நாம் கட்டும் சிமெண்ட் செங்கல் வீடுகளை விட மலிவானவை. இவற்றை விட நீண்ட காலம் நீடிக்கக்கூடியவை. சுற்றுச் சூழலைக் கெடுக்காதவை. வீடுகளுக்கான மரங்களுக்காகப் பிரத்யேகக் காடுகளை வளர்ப்பது உலகெங்கும் நடக்கிறது. அமெரிக்காவில் வீடு கட்டும் மரங்கள் பெரும்பாலும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இது தொடர்பாக கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரிய வர்த்தக சண்டை பல வருடங்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
கனடாவில் மரம் வெட்டுவோருக்கு, அந்த அரசு நிறைய வரிச் சலுகைகள் கொடுப்பதாகவும் அதனால் குறைந்த விலைக்கு அவர்களால் மரம் விற்க முடிவதாகவும் இது தங்கள் உள்நாட்டு மர வர்த்தகர்களைக் கடுமையாக பாதிப்பதாகவும் அமெரிக்கா புகார் செய்து வருகிறது. இது பற்றி லண்டனில் உள்ள சர்வதேச மத்தியஸ்த நீதி மன்றம் விசாரித்து அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது.
ராஜேஜ் குடியிருக்கும் பகுதியிலேயே ஒரு புது வீடு கட்டப்பட்டு வருவதை காரில் செல்லும்போது பார்த்தேன். காரை நிறுத்திவிட்டு அந்த மர வீடு உருவாகும் விதத்தை நேரில் சென்று பார்த்தேன். கட்டட காண்ட்ராக்டர் ஒரு வட இந்தியர் ! குறைந்தது 50 வருடங்கள் அந்த வீடு தாக்குப் பிடிக்கும் என்றார் அவர். சில வீடுகளை இரண்டு நாட்களில் கட்டி விடலாம். பெரும்பாலான வீடுகளுக்கு ஒரு மாதம் தேவைப்படும் என்றார். அநேகமாக எல்லா வீடுகளுக்கும் பேஸ்மெண்ட் எனப்படும் நிலத்தடி அறை இருக்கிறது. அந்தப் பகுதியில் மட்டுமே கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு அடித்தளத்திலிருந்து மாடி வரை எல்லாம் மரம்தான். இணைப்புகளில் அலுமினியம், எஃகு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. சதுர மீட்டருக்கு 660 டாலர் முதல் 2200 டாலர் வரை செலவாகிறது.
செங்கல், சிமெண்ட் வீடுகளை விட, மர வீடுகள் பலவீனமாக இருக்கும். நில நடுக்கம் ஏற்பட்டால் எளிதில் சிதைந்துவிடும் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால் மர வீடுகள்தான் சிமெண்ட் வீடுகளை விட நில அதிர்ச்சியை எளிதில் தாங்கக் கூடியவை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். கான்கிரீட் அஸ்திவாரம் நில நடுக்கத்தில் குலைந்தாலும், மேலுள்ள மர வீடு அப்படியே ஒரு சில அடிகள் இடம் மாறுமே தவிர, உடைந்து நொறுங்காது என்கிறார்கள்.
இப்போதைய மர வீடுகள் மரச் சட்டங்களுக்கிடையில் மரப்பலகைகளைப் பொருத்தி உருவாக்குவதாகும். ஆரம்ப காலங்களில் லாக் கேபின் எனப்படும் மர வீடுகள் முழு மரத் தண்டுகளைக் கொண்டு அவற்றை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி சுவராக்கி உருவாக்கப்பட்ட மரக் குடில்கள். ஏழைகள், வசதியற்றவர்கள் அப்படிப்பட்ட லாக் கேபின்களில்தான் வாழ்ந்தார்கள். அமெரிக்காவில் ஆப்ரகாம் லிங்கன் உட்பட ஏழு ஜனாதிபதிகள் லாக் கேபின் வாழ்க்கையிலிருந்து வெள்ளை மாளிகைக்கு உயர்ந்தவர்கள்.
ராஜேஷுடன் அமெரிக்காவின் நுழைவாயிலுக்குச் சென்றேன். நியூ ஜெர்சி நகரில் ஹட்சன் நதிக்கரையில் ரயிலடி, படகுத் துறையாக இருந்த கம்யூனிபா ஸ்டேஷன்தான் அது. கம்யூனிபா என்றால் அமெரிக்காவின் ஆதிவாசிகளான லெனாப்பி மக்களின் மொழியில் ஆற்றுப் படித் துறை என்று பொருள். ஐரோப்பாவிலிருந்தும் வேறு பகுதிகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு வந்த மக்கள் எல்லீஸ் தீவில் வந்து இறங்கினார்கள். அங்கிருந்து படகுகளில் கம்யூனிபாவுக்கு வரவேண்டும். பிறகு ரயிலில் அமெரிக்காவின் இதர பகுதிகளுக்குச் செல்லலாம். நியூ ஜெர்சியிலிருந்து நியூயார்க் தீவுக்கும் இங்கிருந்துதான் படகுகளில் செல்ல வேண்டும்.
சுமார் ஒரு கோடி எழுபது லட்சம் பேர் 1892லிருந்து 1954க்குள் முதலில் சுதந்திர தேவி சிலை இருக்கும் தீவில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அடுத்து எல்லிஸ் தீவில் அவர்கள் விசாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து இந்த ரயிலடி வழியே வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்தார்கள்.
1967ல் இந்த ரயில் கம்பெனி திவாலாகிவிட்டது. அதன்பிறகு இந்த ஸ்டேஷன், படித்துறை எல்லாம் தேசிய பூங்காக்கள் வசம் வந்துவிட்டன. சிவப்புக்கற்களால் கட்டிய சுவர்களுடன் உயர்ந்த கூரை, அலங்காரமான முகப்பு என்று கட்டப்பட்ட பிரும்மாண்டமான இந்தக் கட்டடம் இப்போது விழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலின்போது, ஏராளமான ஆம்புலன்ஸ் வண்டிகளை தயார் நிலையில் நிறுத்தி வைக்க இது பயன்பட்டது.
இப்போது சுதந்திரதேவி சிலையிருக்கும் தீவுக்குச் செல்ல இங்கேதான் படகேற வேண்டும். வழியில் இருக்கும் எல்லிஸ் தீவில்தான் முதன் முதல் அமெரிக்காவுக்கு வந்தேறிகள் வந்த வரலாற்றை விளக்கும் பிரும்மாண்டமான மியூசியம் இருக்கிறது. அந்த வரலாற்றைப் பார்ப்பது சுதந்திரதேவி சிலையைப் பார்ப்பதை விட எனக்கு சுவையாக இருந்தது.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 20
நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜூன் ஜூலை மாதங்கள் அங்கே கோடைக் காலம். எனினும் அங்கே கோடை என்பதே நம்முடைய வசந்த காலம் போலத்தான் எனக்கு இருந்தது. விதிவிலக்காக நியூயார்க் நகரத்தில் நான் இருந்த இரு தினங்களும் சென்னை வெயிலைப் போல நூறு டிகிரி தாண்டிவிட்டன. நியூயார்க் நகரின் அமைப்பு, ஜன நெரிசல் எல்லாம் எனக்கு மும்பையில் வெயிலில் சுற்றுகிற உணர்வை ஏற்படுத்தின.
வெயிலில் பல தெருக்களை நடந்து கடந்து எனக்கு இந்திய உணவு வாங்கித் தருவதற்காக ராஜேஷ் அலைந்தார். அன்றைய தினம் ஜூலை 4. அமெரிக்காவின் சுதந்திர தினம். எனவே பல கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரே தெருவில் நிறைய இந்திய உணவகங்கள் இருந்தன. ஒன்றிற்கு நல்ல தமிழ்ப்பெயர் – பொங்கல் ! சென்னை கார்டன் என்றொரு ஓட்டல்.புதுச்சேரி ரபீக், சிதம்பரம் முத்து, கொழும்பு ரஹ்மான் என்று மூன்று தமிழர்கள் நடத்தும் சைவ உணவகத்தில் சாப்பிட்டோம். அதன் பிறகு நகரை ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதற்காக அமெரிக்காவின் உயரமான் கட்டடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங்குக்கு சென்றோம்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் உயரமான கட்டடம் என்ற புகழில் இருந்த எம்பயர் இப்போது நியூயார்க்கின் உயரமான கட்டடமாகிவிட்டது. 102 மாடிகள் 1250 அடி உயரம். உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் இதை விட உயரமானவை. அவை தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதும் பழைய பெருமை எம்பயருக்கு வந்துவிட்டது. இது கட்டப்பட்டு 79 ஆண்டுகள் ஆகின்றன. உச்சியில் இருந்து நகரைப் பார்ப்பது என்ற அனுபவத்தைத் தவிர வேறு எதுவும் இங்கு சிறப்பம்சம் இல்லை. பெரும்பாலான டி.வி வானொலி ஒளி(லி) பரப்புக் கருவிகள் இந்த கட்டடத்தில்தான் பொருத்தப்பட்டிருக்கின்றன.
கிங்காங் திரைப்படம் எம்பயர் கட்டடத்தை உலக அளவில் பிரபலப்படுத்தியது. நகரையே நாசம் செய்யும் ராட்சதக் குரங்கான கிங்காங் கையில் கதாநாயகியுடன் இந்த கட்டடத்தின் உச்சியில் ஏறிக் கொள்வதாகப் படத்தில் வரும். எம்பயர் கட்டடத்தின் உச்சி மாடிக்கு செல்லும் நுழைவாயிலருகே கிங்காங் வேடம் போட்ட ஒருவருடன் கை குலுக்கி போட்டோ எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நானும் எடுத்துக் கொண்டேன். பாஸ்டன் ப்ரூடென்ஷியல் கட்டடத்தின் உச்சியில் தகவல்கள் நிரம்பிய காட்சியகம் இருந்ததைப் போலெல்லாம் எதுவும் இங்கே இல்லை. ஆனாலும் உயரமான இடத்திலிருந்து ஊரைப் பார்க்கும் ஆசையில் வருடத்துக்கு 38 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இரட்டை கோபுரத்தின் மீது தீவிரவாதிகள் விமானத்தாக்குதல் நடத்தியதற்கு ஒருவேளை எம்பயர் கட்டட விபத்து உந்துதலாக இருந்திருக்கலாம். 1945 ஜூலையில் ஓர் அமெரிக்க விமானப்படை போர் விமானம் தவறுதலாக எம்பயர் கட்டடத்தின் மீது மோதி நொறுங்கியது.எண்பதாவது மாடியருகே நடந்த இந்த விபத்தில் 14 பேர் இறந்தார்கள்.. லிஃப்ட் அறுந்து விழுந்து 75 மாடிகள் கீழே விழுந்து நொறுங்கியது. லிஃப்ட் ஆபரேட்டர் ஆலிவர் மட்டும் உயிர் தப்பினார் !
முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார்கள். முதல் தற்கொலை கட்டடம் கட்டும்போதே நடந்தது. வேலை நீக்கம் செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளர்களில் ஒருவர் உடனே தற்கொலை செய்துகொண்டார். இந்த உயரமான கட்டடத்திலிருந்து விழுந்து இறப்பது கொஞ்சம் கடினமானதுதான். எல்விதா ஆடம்ஸ் எனபர் 1979ல் 86வது மாடியிலிருந்து குதித்தபோது வெளியே வீசிக் கொண்டிருந்த காற்று அவரைத் திருப்பி 85 வது மாடிக்குள் தள்ளிவிட்டது ! அவர் இடுப்பு எலும்பு முறிவுடன் உயிர் தப்பினார்.
முக்கிய தினங்களில் எம்பயர் கட்ட்டத்தை வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். சுதந்திர தினம் கிறிஸ்துமஸ் மட்டுமல்லாமல், வர்த்தக அடிப்படையிலும் ஒளி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-95 மென்பொருளை அறிமுகப்படுத்தியபோது எம்பயர் கட்ட்டம் பல வண்னங்களால் ஒளிர்விக்கபட்டது. நியூயார்க் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாக்களுக்கும் ஒளி அலங்காரம் உண்டு. இஸ்லாமிய விழாவான ரம்சானன்று 2007 முதல் ஒவ்வொராண்டும் பச்சை விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
நான் பகலில் சென்றிருந்ததால் இந்த ஒளி அலங்காரங்கள் எதையும் காண வாய்ப்பில்லை. சுதந்திர தினத்தன்று அமெரிக்காவின் பல நகரங்களில் பிரும்மாண்டமான வாண வேடிக்கைகள் நடத்தப்படும். அமெரிக்க சுதந்திர தினம் ஒரு சர்ச்சைக்குரிய தினம். விடுதலைப் பிரகடனத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய தினம்தான் சுதந்திர தினமாகக் கருதப்படுகிறது. ஜூலை 4, 1776 அன்று அது நிறைவேறியது. நாங்கள் அன்றைக்குத்தான் அதில் கையெழுத்திட்டோம் என்று பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஜான் ஆடம்ஸ் ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் முழு அவையும் அதில் ஆகஸ்ட் 2 அன்று தான் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ந்தேதியில் பிறந்த ஒரே அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ். இவர் முப்பதாவது ஜனாதிபதி. விடுதலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட பெருமைக்குரியவர்களான ஜெபர்சனும், ஆடம்ஸும் ஜூலை 4, 1826 அன்று ஒரே நாளில் இறந்துபோனார்கள். அது விடுதலைப் பிரகடனத்தின் பொன்விழா நாள் !
அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் முக்கிய தினங்களில் பொது இடங்களில் வாண வேடிக்கைகள் நடப்பது வழக்கம். அங்கே வீட்டுக்கு வீடு பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை எப்போதோ ஒழித்துவிட்டார்கள். ஊர்ப் பொதுவில் நடத்தப்படும் வாண ஜாலங்களை எல்லாரும் திரண்டு வந்து பார்க்கும் வழக்கத்துக்கு மாறிவிட்டார்கள். இந்த பொது நிகழ்ச்சிகளை பெரும் வர்த்தக நிறுவனங்கள் புரவலராக இருந்து நடத்துகின்றன.
நியூயார்க்கில் நான் இருந்தது சுதந்திர தினத்தன்று என்பதால், அங்கே நடக்கும் வாண ஜாலங்களைக் காண புரூக்ளின் பாலத்துக்குச் செல்ல நானும் ராஜேஷும் திட்டமிட்டோம். புரூக்ளின் என்றதும் தமிழகத்தில் என் போன்றோருக்கு நினைவுக்கு வருவது எம்.ஜி.ஆர் அங்கே சிகிச்சைக்காக சென்றிருந்ததுதான். தலையில் குல்லா இல்லாத வழுக்கைத் தலை எம்.ஜி.ஆர் புகைப்படத்தை புரூக்ளின் மருத்துவமனையில் எடுத்து, வெளியிட்டு 1987ல் வீக் ஆங்கில வார இதழ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புரூக்ளின் பாலம் தமிழ் சினிமாவால் அண்மையில் பிரபலமானது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இறுதிக் காட்சியில் நாயகனும் நாயகியும் இந்த பாலத்தில்தான் சந்திப்பார்கள்.
புரூக்ளின் பாலம் மிகப் பழமையானது. இதை 1883ல் கட்டி முடித்தார்கள். சுமார் 1600 அடி நீளமுள்ள இது ஒரு தொங்கு பாலம். பாலத்தின் இரு புறங்களிலும் வாகனப் போக்குவரத்துக்கு இடம். நடுவில் உயரத்தில், நடந்து செல்லுவோருக்கும் சைக்கிளில் செல்லுவோருக்குமான வழி. சைக்கிள் பாதசாரிகளுக்கான வழி என்பது புதுமையானதும் சிறப்பானதும் ஆகும். நியூயார்க்கில் ரயில்வே, டாக்சி வேலை நிறுத்தம் போன்றவை நடக்கும்போது மக்கள் இந்தப் பாலத்தின் வழியே பாதுகாப்பாக நடந்தே செல்வார்கள். நகரத்தின் மேயர்களாக இருந்தவர்களே இதில் நடந்து வந்திருக்கிறார்கள்.
இந்தப் பாலத்தின் கட்டுமானத்துக்குப் பின்னால் ஒரு சோகக் கதை இருக்கிறது. இரும்புக் கம்பிகளால் தொங்கும் பாலமாக இதை வடிவமைத்த ஜான் ரீப்ளிங் ஜெர்மனியிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர். பால வேலை தொடங்கும்போது அவருக்குக் காலில் ஏற்பட்ட காயம் கடுமையாகி, அவர் இறந்தார். சாகும் முன்பு பால வேலையை தன் மகன் வாஷிங்டன் ரீப்ளிங்கிடம் ஒப்படைத்தார். வாஷிங்டனுக்கும் நோய் ஏற்பட்டது.
ஆற்றில் பாலங்கள் , மதகுகள் கட்டும்போது, பாலத் தூண்களுக்கு அஸ்திவாரம் போடுவதற்காக பூமிக்கடியில் சரியான மண்வாகைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போது குழியில் செய்ற்கையான காற்றழுத்தம் தரப்படும். அந்தச் சூழலில் வேலை செய்வோருக்கு இயற்கையான சூழலுக்குத் திரும்பும் போது அழுத்தமாற்ற நோய் ஏற்படும். கை கால்கள் செயலிழக்கும். உயிர் போகும் ஆபத்தும் உண்டு. புரூக்ளின் பாலத்தில் பணியாற்றிய பல தொழிலாளர்களுக்கு இந்த நோய் வந்தது.. வாஷிங்டனுக்கும் வந்தது. நகரமுடியாதவரானார். அவர் மனைவி எமிலி பாலக் கட்டுமானப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அடுத்து 11 வருடங்கள் வீட்டிலிருக்கும் கணவர் ஆலோசனையுடன் பாலத்தைக் கட்டி முடித்தார். திறப்புவிழாவில் முதலில் பாலத்தில் சென்றவர் எமிலிதான்.
உலகத்திலேயே மிக நீளமான தொங்கு பாலம் புரூக்ளின் பாலம்தான். அது கட்டப்பட்ட காலத்திலேயே கட்டிய பல பாலங்கள் பழுதாகி மாற்றப்பட்டுவிட்டன. புரூக்ளின் இன்னமும் உறுதியாக நிற்கிறது. கட்டப்பட்டபோது அதன் உறுதி சந்தேகிக்கப்பட்டது. அதை நிரூபிக்க, சர்க்கஸ் நடத்துபவரான பார்னம் என்பவர் 21 யானைகளை பாலத்தின் மீது ஊர்வலமாக அழைத்துச் சென்றாராம் !
புரூக்ளின் தனி நகராகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. புரூக்ளின் பாலம் கட்டப்பட்டபின்னர் அதை நியூயார்க் நகரின் ஒரு மண்டலமாக இணைக்க முற்பட்டார்கள். இதற்காக மக்களிடம் கருத்துக் கணிப்புத் தேர்தல் 1894ல் நடத்தப்பட்டு அது நியூயார்க்கின் ஒரு மணடலமாகியது. தொடர்ந்து புரூக்ளின் பாலம் அமெரிக்க மக்களால் ஒரு வரலாற்று சின்னமாக கொண்டாடப்படுகிறது. ஒரு சிலை, ஒரு கோயில் போன்றவற்றை மட்டும்தான் வரலாற்று சின்னமாகப் பார்க்கவேண்டும் என்பதில்லை. பாலம், சாலை முதலியவற்றையும் பார்த்து பாதுகாத்து பராமரித்துக் கொண்டாடலாம் என்ற பார்வை அமெரிக்கர்களுக்கு இருக்கிறது. புரூக்ளின் பாலத்தின் நூற்றாண்டு விழாவுக்கு அப்போதைய அமெரிக்க் அதிபர் ரொனால்ட் ரீகன் வந்து பாலத்தின் மீது காரில் ஊர்வலமாக சென்றார்.
”இந்தப் பாலம் என்னுடையது. விற்கிறேன் வாங்கி கொள்கிறீர்களா?” என்று சுற்றுலா பயணிகளிடம் கேட்டு காசு வாங்கி ஏமாற்றிய பேர்வழிகள் இரண்டு பேர் உண்டு. நியூ ஜெர்சியைச் சேர்ந்த வில்லியம் மெக்ளவுண்டி என்பவன் 1901ல் இந்தப் பாலத்தை விற்க முயன்று மாட்டிக் கொண்டு இரண்டரை வருடம் சிறையில் இருந்தான். ஜார்ஜ் பார்க்கர் இன்னும் பெரிய கில்லாடி. வாராவாரம் இரண்டு பேருக்கு பாலத்தை விற்கும் வேலையை வருடக் கணக்கில் மாட்டாமலே செய்துவந்திருக்கிறான். ”நீங்கள் பாலத்தை என்னிடம் வாங்கிவிட்டால், அதில் போய் வரும் கார்கள், மனிதர்களிடம் சுங்கம் வசூலிக்கலாம்” என்று சொல்லி விற்றிருக்கிறான். இதை நம்பி வாங்கிய சிலர், பாலத்தின் மீது சுங்கச்சாவடி அமைக்க வந்திருக்கிறார்கள். போலீஸ் விசாரித்து துரத்திவிட்டது.
ஜார்ஜ் பார்க்கர் புரூக்ளின் பாலத்தை மட்டும் விற்கவில்லை. நியூயார்க் ஓவிய காட்சியகம், சுதந்திரதேவி சிலை எல்லாவற்றையும் ஆவணப்பூர்வமாக விற்றிருக்கிறான். இதற்கென்றே ஒரு ஆபீசும் நடத்தியிருக்கிறான். மாட்டிக் கொண்டு மூன்று முறை தண்டனை அனுபவித்த ஜார்ஜுக்கு கடைசியில் சிக்கியபோது ஆயுள் தண்டனை கொடுத்துவிட்டார்கள். அமெரிக்காவில் ஆயுள் தண்டனை என்றால் ஆயுளுக்கும்தான். கடைசியில் ஜார்ஜ் சிறையிலேயே 1936ல் இறந்தான்.
புரூக்ளின் பாலத்தின் மீது நானும் ராஜேஷும் நடக்க ஆரம்பித்தபோது எங்களைப் போல நிறைய சுற்றுலா பயணிகள் நடந்து கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் அந்தப் பாலத்தில் காத்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 19
அமெரிக்காவில் பூங்கா நாடகங்கள் புகழ் பெற்றவை. பல நகரங்களில் இருக்கும் முக்கியமான பெரிய பூங்காக்களில் நாடக மேடை இருக்கிறது. எதிரே கேலரி போன்ற திறந்தவெளிப் புல்தரை . நாடகத்துக்கு டிக்கட் உண்டு . ஆனால் அவரவருக்கான நாற்காலிகளை அவரவரே கொண்டு வர வேண்டும். நாற்காலி எப்படி இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. காலை நீட்டும் ஈசிசேர் கூடாது. முதுகு உயரம் 40 அங்குலத்துக்கு மேல் இருக்கக்கூடாது. புல்வெளியில் வரிசையாக சுண்ணாம்புக் கோடுகள் போட்டிருக்கிறது. அவற்றின் மீதுதான் நாற்காலிகளை வைக்க வேண்டும். பலரும் மடக்கு நாற்காலிகளையும் முதுகு மெத்தைகளையும் கார் டிக்கியில் போட்டு எடுத்து வந்துவிடுகிறார்கள்.
ரூஸ்வெல்ட் பூங்காவில் நானும் ராஜேஷும் பார்த்த நாடகத்தை மிடில்செக்ஸ் கவுண்ட்டியின் பூங்கா துறை ஏற்பாடு செய்திருந்தது. கோடை காலம் முழுவதும் வாரத்தில் நான்கு நாட்களேனும் பூங்காவில் நாடகங்கள் நடக்கின்றன. மழை வந்து நாடகம் ரத்தானால், அந்த டிகட்டை இன்னொரு நாளைக்கு பயன்படுத்தலாம். நாடகச் செலவை பூங்கா துறை பார்த்துக் கொள்கிறது. நுழைவுக் கட்டணமான ஆறு டாலர் தவிர, நன்கொடைகளும் திரட்டுகிறார்கள்.
பூங்கா நாடகங்களின் நண்பர்கள் என்ற அமைப்பு பணம் திரட்டுகிறது. 500 டாலர் கொடுப்பவர் ஸ்டார். 250 டாலர் தருபவர் தேவதை. என்று நன்கொடை தருபவர்களைக் கூட வகைப்படுத்தியிருக்கிறார்கள். 15 டாலர் முதல் நன்கொடைகள் பெறப்படுகின்றன. நாடகம் பற்றிய கையேட்டில் விளம்பரங்கள் இருக்கின்றன. அதில் ஒரு ஐஸ்கிரீம் கடை விளம்பரத்தில், அந்தக் கையேட்டுடன் சென்று ஐஸ்கிரீம் வாங்கினால், விலையில் பத்து சதவிகிதம் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தள்ளுபடி பணம் ஐஸ்கிரீம் வாங்குபவருக்கு அல்ல. நாடகக் குழுவுக்கு அனுப்பப்படும்.
நான் பார்த்த நாடகம் விதவிதமான செட்டுகள் போட்ட இசை நாடகம். தலைப்பு : 1776. அமெரிக்க விடுதலைப் பிரகடன ஆண்டு நிகழ்ச்சிகள் பற்றிய வரலாற்று நாடகம், பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெஃபர்சன், ஜான் ஆடம்ஸ் போன்ற வரலாற்று நாயகர்கள் எல்லாம் பாத்திரங்களாக சித்திரிக்கப்பட்டனர். மொத்தம் 13 பாடல்களுடன் உள்ள இந்த நாடகம் நியூயார்க் பிராட்வே தியேட்டரில் 1217 முறை நடிக்கப்பட்டிருக்கிறது. இதை 1972ல் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.
பிரதானப் பாத்திரம் ஜான் ஆடம்ஸ். இவர் எல்லா காலனி நாட்டு பிரதிநிதிகளையும் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக விடுதலைப் பிரகடனம் செய்யச் சம்மதிக்க வைப்பதுதான் கதை. இரண்டே இரண்டு பெண் பாத்திரங்கள். நாடகத்தில் பெஞ்சமின் பிராங்க்ளின், ஜெஃபர்சன் ஆடம்ஸ் எல்லாம் சாதாரண மனிதர்களாகவே கோப தாப உணர்வுகளுடன் காட்டப்படிருக்கிறார்கள். யாரையும் மரியாதைக்குரிய புனிதர்களாகக் காட்டவில்லை. இந்த தொனியில் காந்தி, நேரு, பெரியார், அண்ணா மாதிரி பாத்திரங்களை வைத்து நம் நாட்டில் நாடகம் போட்டால், முதல் காட்சியிலேயே கொட்டகையைக் கொளுத்திவிடுவார்கள்.
நாடகத்துக்குப் பெரிய கூட்டம் வந்திருந்தது. அமெரிக்காவில் வழக்கமான அரங்க நாடகமானாலும் சரி, பூங்கா நாடகமானாலும் சரி, பெரும் திரளாக மக்கள் வருகிறார்கள். குடும்பத்துடன் நாடகம் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. பூங்கா நாடகக் கலாசாரம் அமெரிக்காவின் பெரு நக்ரமான நியூயார்க்கிலும் துடிப்போடு இருக்கிறது.
அங்கே பிரும்மாண்டமான செண்ட்ரல் பூங்காவில் டெலகார்ட்டே அரங்கு இருக்கிறது. இதில் 55 வருடங்களாக கோடை காலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை பப்ளிக் தியேட்டர் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. நுழைவுச் சீட்டுகளை இலவசமாகக் கொடுக்கிறார்கள். காலை 6 மணியிலிருந்தே அதற்கு கியூ நிற்கிறதாம். வருடந்தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் நியூயார்க் பூங்காக்களில் நாடகம்
பார்க்கிறார்கள்.
பப்ளிக் தியேட்டர் ஆண்டு தோறும் நாடகப் பயிற்சியும் நடத்துகிறது. நியூயார்க் வட்டாரத்தில் இருக்கும் பொதுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இரு வாரங்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும், நடிப்பு, குரல், அசைவுகள், மேடை உத்திகளிலும் பயிற்சி பெற 2 ஆயிரம் டாலர் கட்டணம். இந்தப் பயிற்சி வகுப்பில் இடம் பெறப் பெரும் போட்டி இருக்கிறது. விண்ணப்பத்துடன் ஏன் பங்கேற்க விரும்புகிறேன் என்று 500 சொற்களில் கட்டுரை எழுதி அனுப்பவேண்டும். நேர்முகத் தேர்வும் உண்டு.
நியூ ஜெர்சியில் ரூஸ்வெல்ட் பூங்காவில் நாடகம் பார்க்க மிகச் சில இந்தியர்களே வந்திருந்தார்கள். ராஜேஷும் நானும் நாடகம் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்குப் போய் தங்கினோம். ராஜேஷ் வீடும் என் வீடு, பாஸ்டன் பாலா வீடு போலவே எதுவும் எங்கும் இருக்கும் என்ற சென்னை பாணியில் இருந்தது. அவர் மனைவி, குழந்தைகள் ஊருக்குச் சென்றிருந்ததால் இருவரும் நிறைய வெளியில் சாப்பிட்டோம். ராஜேஷுக்கு ஒவ்வொரு இந்திய ஓட்டல் சிப்பந்தியையும் தெரிந்திருந்தது.
மறு நாள் நியூயார்க் சென்றோம்.
வாஷிங்டன் அமெரிக்காவின் தலைநகராக இருந்தாலும் நியூயார்க்கிற்கு இருக்கும் கவர்ச்சி அதிகம். பட்டணம்தான் போகலாமடி பணம் காசு பண்ணலாமடி என்று ஒரு பழைய தமிழ்த் திரைப்பாடல் இருக்கிறது. அமெரிக்காவில் அப்படிப்பட்ட பட்டணமாக நீண்ட காலமாகக் கருதப்படுவது நியூயார்க்தான். பிழைத்துக் கொள்ள, முன்னேற வாய்ப்புள்ள நகரம் நியூயார்க் என்ற கருத்தில் அது தி பிக் ஆப்பிள் ( பெரிய ஆப்பிள் பழம்) என்று அழைக்கப்படுகிறது. வளப்பத்தையும் சத்தையும் குறிக்கும் பழம் ஆப்பிள். அமெரிக்காவின் ஆப்பிள் நியூயார்க். உலகத்தின் ஆப்பிள் அமெரிக்கா.
1908லேயே நியூயார்க்கிற்கு தி பிக் ஆப்பிள் என்ற பெயர் வந்துவிட்டது. எழுபதுகளில் நியூயார்க்கில் சுற்றுலாவைப் பெருக்குவதற்காக மேற்கொண்ட பிரும்மாண்டமான பிரசார விளம்பர நடவடிக்கையில் ஐ லவ் நியூயார்க் வாசகமும் ஆப்பிள் படமும் போட்ட டி.ஷர்ட்டுகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டன.
நியூயார்க்தான் அமெரிக்காவின் நுழைவாயிலாக இருந்து வந்திருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் குடியேறிய லட்சக்கணக்கானவர்கள் இங்குதான் நுழைந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் முதல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட வர்த்தக மையமான இரட்டை கோபுரம் வரை பல முக்கியமான இடங்கள் நியூயார்க்கில்தான் இருக்கின்றன. இதன் மக்கள் தொகை இப்போது 85 லட்சத்தை தாண்டிவிட்டது. ஹட்சன் ஆற்றங்கரையில் இருக்கும் நியூயார்க் என்பது மூன்று தீவுகள் இணைந்த நகரம். தீவுகளை விரிவுபடுத்தமுடியாது என்பதால் மக்கள் நெரிசல் நியூயார்க்கில் மிக அதிகம்.
இத்தனை நெரிசல் இருந்தும் நியூயார்க் நகரம் சுற்றுச் சூழல் விஷயத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கை ஆச்சரியமானது. சான் பிரான்சிஸ்கோ, டலாஸ் முதலிய நகரங்களில் இருப்பவர்களை விட நியூயார்க் மக்கள் பயன்படுத்தும் மின்சார சராசரி அளவு குறைவு என்பது ஓர் ஆச்சரியம்.
பெட்ரோல் எரி வாயுவைப் பயன்படுத்தும் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் நியூயார்க் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. நியூயார்க்கின் உள்ளூர் ரயில் போக்குவரத்து மிகச் சிறப்பாக இருப்பதால், நிறைய பேர் காரையே பயன்படுத்துவதில்லை. அமெரிக்காவில் கார் இல்லாமல் ஒரு குடும்பம் இருக்க முடியாது என்ற நிலையில், நியூயார்க்கில் 55 சதவிகிதக் குடும்பங்களில் கார் இல்லை என்பதற்குக் காரணம் ரயில் போக்குவரத்துதான். அமெரிக்கா முழுவதும் ரயில் போக்குவரத்தால் மிச்சமாகும் (கார்) எரிவாயுவில் சரிபாதி நியூயார்க்கில் மட்டுமே மிச்சமாகிறது.
ராஜேஷும் நானும் நியூ ஜெர்சி மிடில்செக்சிலிருந்து கிராண்ட் பார்க் ரயில் நிலையம் சென்று ரயிலைப் பிடித்து நியூயார்க் பென் ரயிலடிக்குச் சென்றோம். நியூயார்க் பென்சில்வேனியா ஸ்டேஷன் என்கிற
இந்த ரயில் நிலையத்துக்கு ஒரு சோகமான வரலாறு இருக்கிறது. 1910ல் இது கட்டி முடிக்கப்பட்டபோது நியூயார்க்கிற்கே அழகு சேர்க்கும் கட்டடமாகக் கருதப்பட்டது. பிரும்மாண்டமான தோற்றத்துடன், பழைய கட்டடக் கலை மரபுகளின்படி அது கட்டப்பட்டிருந்தது. 1950களில் இந்த கட்டடத்தினைப் பராமரிக்கும் செலவு அதிகம் என்று கருதிய ரயில் கம்பெனி அந்த இடத்தின் வான் உரிமைகளை விற்க முடிவு செய்தது.
வான உரிமைகள் என்பது ஒரு கட்டடத்தின் பரப்பளவுக்கு மேலே இருக்கும் திறந்த வெளி வானில் எதுவும் செய்துகொள்வதற்கான உரிமை. இந்த உரிமையின்படிதான் ஒரு 800 சதுர அடி இருக்கும் ஓட்டு வீட்டை வாங்கினால் இடித்துவிட்டு அங்கேயே மூன்று மாடிக் கட்டடம் கட்டுகிறார்கள்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் வான் உரிமையை விற்றால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்ப்போம். அதைப் பயன்படுத்த நினைப்பவர் எழும்பூர் ரயில் நிலையத்தை இடித்துத்தான் பெரிய கட்டடம் கட்ட முடியும். இதே சோகம்தான் எழும்பூரை விட எழிலும் பிரும்மாண்டமும் மிகுந்த நியூ பென் ஸ்டேஷனுக்கு நடந்தது. கட்டடத்தை இடிக்க முடிவானதும் மக்கள் எதிர்த்தார்கள். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம் இப்படி பாரம்பரியப் பெருமையும் அழகும் உள்ள ஸ்டேஷனை இடிக்கக்கூடாது என்று எழுதின.
ஆனால் ஸ்டேஷன் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரிய வர்த்தக மையக் கட்டடம் எழுப்பப்பட்டுவிட்டது. அந்தக் கட்டடத்தில் பாதாளப் பகுதியில்தான் இப்போதைய நியூயார்க் பென் ஸ்டேஷன் இயங்கிக் கொண்டிருக்கிறது. தெருவிலிருந்து ஸ்டேஷன் தெரியாது. வணிகக் கட்டடம்தான் தெரியும். உள்ளே நுழைந்து கீழே போனால் ஸ்டேஷன். நிமிடத்துக்கு ஆயிரம் பயணிகள் வீதம் தினம் ஆறு லட்சம் பேர் போய்வருகிறார்கள். இங்கே உள்ளூர் ரயில் ஓடுகிறது. பிற நகரங்களுக்குச் செல்லும் இண்ட்டர் சிட்டி ரயிலும் உண்டு. சுரங்க ரயிலும் உண்டு.
நியூ பென் பழைய கட்டட இடிப்பு அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பலையைக் கிளப்பியது. இனி பாரம்பரியக் கட்டடங்களைக் காப்பதற்கு தனிச் சட்டங்கள் தேவை என்று பல மாநிலங்களில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட சட்டத்தின் மூலம் நியூயார்க்கிலேயே இருக்கும் இன்னொரு ரயில் நிலையமான கிராண்ட் செண்ட்ரல் ரயில் நிலையக் கட்டடம் காப்பாற்றப்பட்டது. கிராண்ட் செண்ட்ரல்தான் உலகத்திலேயே பெரிய ரயில் நிலையம். அதில் 44 நடைமேடைகள் (பிளாட்ஃபாரம்) உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் எல்லாம் என்னைக் கவர்ந்தது அவற்றின் பிரும்மாண்டம் அல்ல. அவற்றின் தூய்மைதான். எந்தப் பக்கம் பார்த்தாலும் சிறு குப்பை கூட இல்லாமல் ரயில் நிலையத்தின் ஒவ்வொரு பகுதியும் இருக்கிறது. ரயில் நிலையப் புத்தகக் கடைகள் பேருக்குப் புத்தகம் விற்பவையாக இல்லாமல் முழுமையான புத்தக்கக் கடைகளாக இருக்கின்றன. உணவகங்கள், காப்பி ஷாப் எல்லாம் சுத்தமாகவும் வசதியாகவும் ஸ்டார் ஓட்டல் போல இருக்கின்றன.
நியூ பென்னில் இறங்கி ராஜேஷும் நானும் நியூயார்க் தெருக்களில் நடையோ நடையென்று நடந்தோம். தாங்க முடியாத வெயில் !
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 18:
உள்ளூர் சமுதாயத்துடன் எந்த அளவு நம்மை நாம் இணைத்துக் கொள்கிறோம் என்பது வெளியூர், வெளி நாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்கள் அவசியம் கவனிக்கவேண்டிய அம்சமாகும். பத்மா அரவிந்த் போன்ற ஒரு சிலர் மட்டுமே அப்படிப்பட்ட அணுகுமுறையோடு இருப்பதை நான் கவனித்தேன். பெரும்பாலானவர்கள் அமெரிக்காவுக்குள் தங்கள் குட்டி கொல்கத்தாவையோ குட்டி மைலாப்பூரையோ குட்டி யாழ்ப்பாணத்தையோ குட்டி பெய்ஜிங்கையோ சிருஷ்டித்துக் கொண்டு அதற்குள் வாழ்ந்துவிட முயற்சிக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
எடிசன் நகரம் கணிசமான இந்தியர்கள் வாழும் நகரம். நகரத்தின் மக்கள் தொகையான சுமார் ஒரு லட்சம் பேரில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்தியர்கள். இவர்கள் வந்து குடியேறி தங்களுடன் உடுப்பி,பஞ்சாபி சாப்பாட்டு கலாசாரம் முதல் எல்லா இந்தியக் கலாசாரக் கூறுகளையும் பரப்பி எடிசனின் அசல் தன்மையையே கெடுத்துவிட்டதாக, நான் எடிசனில் இருந்தபோது , டைம் பத்திரிகையில் ஜோயல் ஸ்டெய்ன் என்பவர் ஒரு கட்டுரை எழுதினார். இந்தியர்களிடமிருந்தும் அமெரிக்க செனட்டர் பாப் மெனெண்டசிடமிருந்தும் வந்த கண்டனங்களையடுத்து ஸ்டெய்னும் டைம் இதழும் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
அமெரிக்காவிலேயே வாழ்வதற்கு உகந்த வசதியான, பாதுகாப்பான நகரங்களில் எடிசன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புகழ் பெற்ர ரட்கர் பல்கலைக் கழகம் இங்கே உள்ளது. சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுவதற்கான வழிமுறைகள் பற்றி இந்தப் பல்கலைக்கழகம் நடத்தி வரும் ஆய்வில் நண்பர் முகுந்தராஜ் பங்கேற்றுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும்போதும், அது தொடர்பான தகவல்களை அவர் பதிவு செய்து ஆய்வுக்குத் தரவேண்டும். ஆய்வில் பங்கேற்பதன் மூலம் புகைப்பதை விட்டுவிடவேண்டும் என்பது முகுந்தின் (அல்லது ப்ரியாவின்) விருப்பம்.
முகுந்த் வசிக்கும் பிஸ்காட்டவேக்கு பக்கத்து ஊரான எடிசனுக்கு அந்தப் பெயர் வரக் காரணம் தாமஸ் ஆல்வா எடிசனேதான். முதலில் ரேரிட்டன் டவுன்ஷிப்பாக இருந்தது. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும் கண்டுபிடிப்பாளருமான எடிசன் இந்த ஊரில்தான் வாழ்ந்து ஆராய்ந்து கண்டுபிடித்து பணம் சம்பாதித்து குடும்பம் நடத்தியவர்.
அதற்காக அவர் பெயரை ஊருக்கு வைத்துவிட்டார்கள். பெயர் வைப்பது அரசு மட்டுமல்ல.மக்களிடையே கருத்து ஓட்டெடுப்பு நடத்தித்தான் இப்படி பெயரை மாற்ற முடியும். நான் பிறந்த வருடத்தில்தான் அப்படி ஒரு தேர்தல் ரேரிட்டனில் நடந்து எடிசன் பெயர் ஜெயித்திருக்கிறது. நம் ஊரிலும் இதே போல பொது இடங்களுக்குப் பெயர் சூட்டும்போது மக்கள் கருத்தைக் கேட்டாகவேண்டும் என்ற விதி கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே. எத்தனை பெயர்கள் எகிறிப் போகும் !?
எடிசன் 1847ல் பிறந்து 83 வருடங்கள் வாழ்ந்ததில், மொத்தமாக 1093 கண்டுபிடிப்புகளுக்கு சட்டப்படி உரிமை பெற்றிருக்கிறார். எடிசன் முறையாக பள்ளி சென்று படித்தவர் அல்ல. ஆரம்பப் பள்ளியிலேயே அவரை ஆசிரியர்கள் உதவாக்கரை என்று சொல்லிவிட்டதில் எடிசனின் அம்மா நான்சிக்குக் கோபம் வந்து எடிசனை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு தானே பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பின்னர் எடிசன் கற்றதெல்லாம் தாமே நிறைய புத்தகங்களைப் படித்துப் படித்துத்தான்.
சிறு வயதிலேயே எடிசனுக்குக் காது கேட்காமல் போய்விட்டது. ஆனால் அவர்தான் ஒலிப்பதிவு இயந்திரங்களைக் கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் வீடு விடாக பேப்பர் போடும் வேலையைச் செய்த எடிசன், பின்னர் தந்தி அலுவலகத்தில் தந்தி அடிக்கும் ஊழியரானார். அதன் பின்னர் கண்டுபிடிப்பாளரானார். எடிசனுக்கு இரு மனைவிகள். முதல் மனைவி மேரியுடன் 14 வருடம் வாழ்ந்து அவர் மூளைக் கட்டியில் இறந்தபின் இரண்டாவதாக மினாவைத் திருமணம் செய்தார். கடைசி வரை மினா அவருக்குப் பெரும் பலமாக இருந்தார்.
எடிசனின் கண்டுபிடிப்புகளில் நாம் அதிகம் அறிந்திருப்பவை, மின்சார பல்பு, கிராமபோன் இயந்திரம், கேமரா, ஓட்டு போட மெஷின் ஆகியவை. மின்சாரத்தை உற்பத்தி செய்து பல இடங்களுக்கு விநியோகித்து வணிகம் செய்யும் முறையைக் கண்டுபிடித்ததும் அவர்தான். அவருடைய பல கண்டுபிடிப்புகளுக்கு அவர் பெயர் இருந்தாலும் வேறு யாரோதான் கண்டுபிடித்தார்கள் என்ற பழி அவர் மீது சொல்லப்படுவது உண்டு. இன்று எல்லா கண்டுபிடிப்புகளும் பலரும் குழுவாக வேலை செய்வதன் விளைவாக உருவாகிறவைதான். தனியே ஒரே ஒருத்தர் வருடக் கணக்கில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பது என்ற வழக்கம் இப்போது இல்லை. ஒருவரின் ஆய்வு முடிவுகளை இன்னொருவர் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது, குழுவாக வேலை செய்வது என்ற நடைமுறைகள் இன்று சகஜமானவை.
இந்தக் குழு முறையை உருவாக்கியவர் எடிசன்தான். அவருடைய சோதனைக் கூடம் என்பதே வெவ்வேறு துறைகளுக்கான தனித்தனி சோதனைச் சாலைகளுடன், நூலகம், செயல்முறை சோதனை வசதி ஆகியவற்றுடன் ஒரு குட்டிக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் போல இருந்தது. நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் எடிசன் கீழே வேலை பார்த்தார்கள். ஒவ்வொரு ஆய்விலும் அவரும் பங்கேற்றுக் கொண்டு வழி நடத்தினார். இப்படித்தான் அவரது கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.
எடிசன் முயற்சி செய்து தோற்ற விஷயங்களும் உண்டு. சிமெண்ட் உற்பத்தி, தாதுவிலிருந்து எளிதாக இரும்பைப் பிரிப்பதற்கான இயந்திரம், செயற்கை ரப்பர் இவற்றையெல்லாம் செய்ய அவர் கடும் முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை. அவர் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தவற்றை எல்லாம் உடனுக்குடன் நடைமுறைக்கு கொண்டு வந்து வணிக ரீதியில் வருவாய் வருவதற்கு வழி செய்து கொண்டார். அப்போதுதான் நான் தொடர்ந்து இன்னும் ஏதாவது கண்டுபிடிக்க முடியும் என்றார் எடிசன்.
கடும் உழைப்பாளியான எடிசன், 1915ல் அவருடைய ஆலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டபோதும் அயரவில்லை. 13 கட்டிடங்கள் நெருப்பில் நாசமாகின.ஆனால் ஒரே மாதத்தில் எடிசன் மீண்டும் உற்பத்தியை பழையபடி தொடங்கினார்.
எடிசன் இறந்தபோது அவர் இறுதிச்சடங்கு நேரத்தில் அமெரிக்கா முழுவதும் விளக்குகள் ஒரு நிமிடம் மங்கலாக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருடைய சோதனைக் கூட வளாகம் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டு அருமையாகப் பாதுகாக்கப்பட்டு நல்ல அருங்காட்சியகமாக இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தை வளர்த்த முன்னோடிகளில் ஒருவரான எடிசனின் மியூசியத்தைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றவர் மிகவும் பொருத்தமானவர். இலவசக் கொத்தனார் என்ற பெயரில் இணையத்தில் வெண்பா இலக்கணம் பற்றி நமீதா, த்ரிஷா போன்ற உதாரணங்களுடன் விளக்கி எழுதும் ராஜேஷ், நவீன தொழில் நுட்பத்தை கடுமையாக உபயோகிக்கிறவர்.
அவருடன் வெளியே செல்லும்போது ஓட்டலில் நான் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு பியர் அருந்துகிறேன் என்றால், உடனே அதை போட்டோ எடுத்து குறிப்புடன் செல்போன் வழியே டிவிட்டரில் அடுத்த சில நிமிடங்களில் உலகத்துக்குச் சொல்லிவிடுவார். கார் ஓட்டிக் கொண்டு, என்னுடன் பேசிக் கொண்டு, நடந்து சுற்றி வருகையில் எப்போது இவர் செல்போனில் டிவிட் செய்கிறார் என்பதே கண்டுபிடிக்க முடியாமல் அவ்வளவு கமுக்கமாகவும் உடனுக்குடனும் இணையத்தில் உலவிக் கொண்டிருப்பார்.
ராஜேஷுடன் எடிசன் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. எடிசன் காலத்தில் இருந்த கண்ணாடிக் குடுவைகள், பௌதிக தராசுகள், வாயுக் குழாய்கள் மேசைகள் எல்லாம் அப்படியே வைக்கப்பட்டிருக்கின்றன. எடிசன் செய்த 48 ஆயிரம் ஒலிப்பதிவுகள், 60 ஆயிரம் புகைப்படங்கள், 10 ஆயிரம் அபூர்வமான நூல்கள் எல்லாம் அங்கே இருக்கின்றன.
இயற்பியல், வேதியியல், சோதனைச் சாலைகள், ஒலிக்கூடம், பட்டறைகள், நூலகம், எடிசனின் ஓய்வறை ஒவ்வொன்றையும் சுற்றிப் பார்க்கும்போது இங்கேதான் நூற்றுக்கணக்கானவர்கள் ஓயாமல் வேலை செய்து எவ்வளவோ கண்டுபிடித்திருக்கிறார்கள் என்ற உணர்வு எழுந்தது. உலகத்தின் முதல் சினிமா ஸ்டூடியோவான பிளாக் மரியா இங்கேதான் இருக்கிறது. ஸ்டூடியோ என்றால் வெறும் மரக் கொட்டகைதான். முழுக்கக் கறுப்பு பெயிண்ட் அடித்திருக்கிறது. கூரை மட்டும் தேவைப்படும்போது தள்ளிவைத்துக் கொள்ளலாம். அப்போது இயற்கை சூரிய ஒளி கொட்டகைக்குள்ளே விழும். அதில் படம் பிடிக்கலாம் என்ற ஏற்பாட்டை எடிசன் செய்திருக்கிறார்.
பெல் உருவாக்கிய டெலிபோனை அடிப்படையாகக் கொண்டுதான் எடிசன் ஒலிப்பதிவு மெஷின்களை உருவாக்கினார். முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது எடிசன் குரலில் ‘மேரி ஹேட் எ லிட்டில் லேம்ப்’ என்பதாகும். வெவ்வேறு விதமான ஒலிகளைச் சோதித்துப் பார்ப்பதற்காக விதவிதமான இசைக்கருவிகளைத் திரட்டியிருக்கிறார். கொட்டாங்கச்சிகள் (சிரட்டை) கூட தாள இசைக் கருவியாக இடம் பெற்றிருக்கின்றன. வெவ்வேறு வடிவங்களில் உருவான பல்புகள் உள்ளன.
எடிசன் கடவுள் நம்பிக்கையில்லாதவர். இயற்கை என்ற பிரும்மாண்டமான சக்தி இருக்கிறது. அது நம் எல்லார் உள்ளும் இருக்கிறது. தனியே கடவுளாக இல்லை என்று கூறியிருக்கிறார். ஒரு விஞ்ஞானியாகத் தனக்குள்ள பெருமையெல்லாம் தான் ஒரு போதும் எந்த அழிவுக்கான ஆயுதத்தையோ, கருவியையோ கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் என்றும் சொல்லியிருக்கிறார்.
காட்சியகத்திலிருந்து ராஜேஷும் நானும் அடுத்தபடியாக எடிசன் வீட்டுக்குச் சென்றோம். கிளென்மாண்ட் என்ற சோலைப் பகுதியில் பெரும் பணக்காரர்கள் வாழும் இடத்தில் எடிசனின் மாளிகை இருக்கிறது. இதை முதலில் 1880ல் கட்டியவர் ஒரு குமாஸ்தா. அலுவலகத்திலிருந்து கையாடிய பணத்தை வைத்து பிரும்மாண்டமாக இதைக் கட்டியிருக்கிறார். மொத்தம் 29 அறைகள். அரண்மனை பாணியில் கட்டப்பட்ட வீட்டில் ஓவியக் கண்ணாடிகள், கூரையெல்லாம் ஓவியங்கள் என்று இருக்கிறது. எடிசனின் புகழ் பெற்ற பல நண்பர்கள் தொழிலதிபர் ஹென்ரி போர்டு, விமானி ஆர்வெல் ரைட், கல்வியாளர் ஹெலன் கெல்லர் எனப் பலருக்கு இங்கே விருந்துகள் நடந்திருக்கின்றன. வீட்டைச் சுற்றிலும் மாபெரும் புல்வெளி நீச்சல் குளங்கள். ஒரு மூலையில் எடிசன், அவர் மனைவி மினா இருவரின் கல்லறைகள் மிக எளிமையாக இருக்கின்றன.
எடிசனின் காட்சியகம் வீடு ஆகியவற்றைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நம் நாட்டில் விஞ்ஞானிகளை இப்படிப் போற்றத் தவறிவிட்டோமே என்றே வருத்தமாக இருந்தது. சி.வி.ராமன், விஸ்வேஸ்வரய்யா, ஜகதீஷ் சந்திர போஸ், ராமானுஜம், ஜி.டி.நாயுடு போன்றவர்களுக்கெல்லாம் எப்படிப்பட்ட காட்சியகங்களை நாம் அமைத்திருக்கவேண்டும் !
வீடு திரும்பும் வழியில் ராஜேஷ் என்னை ஒரு அமைதியான் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அதுதான் மென்லோ பார்க். அந்த இடத்துக்கு என்ன சிறப்பு என்று கேட்டேன். அங்கேதான் எடிசனின் முதல் சோதனைக் கூடம் இருந்தது. இப்போது உச்சியில் பல்புகளுடன் நினைவுத்தூண் இருக்கிறது. முதன்முதலில் இந்தத் தெருவில்தான் எடிசனின் மின் விளக்குகள் எரியவைத்துக் காட்டப்பட்டன.
அன்று மாலை எடிசன் நகரில் இருக்கும் ரூஸ்வெல்ட் பூங்காவில் ஒரு வரலாற்று நாடகம் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். நாடகம் பார்க்க வேண்டுமானால், வீட்டிலிருந்து நீங்களே நாற்காலி எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் !
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 17
வர்ஜீனியா மாநிலத்தில் நிலவறைக் குகைகள் முக்கியமான சுற்றுலா இடங்கள். பல லட்சம் வருடங்கள் முன்பு இன்றைய நிலப்பகுதி கடலாக இருந்தது. இயற்கை மாற்றங்களாலும் நில அதிர்வுகளாலும் கடல் மாறி நிலமாகியது. அந்த நிலப்பகுதியின் அடிப்பகுதியில் சுண்ணாம்புக் கல், ஜிப்சம் போன்ற பாறைகளும் அவற்றிடையே ஓடும் நிலத்தடி ஓடைகளும் உருவாகின. நீர்க்கசிவுகள் சுண்ணாம்புப் பாறைகளைக் கரைத்தபடி ஓடும்போது ஸ்படிக வடிவங்களும் குகை அமைப்புகளும் உருவாகின.
ரயில் பாதை போடுவதற்காக பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் தற்செயலாக இந்த ஷெனண்டோவா நிலத்தடி குகைகளை 1880களில் கண்டுபிடித்தார்கள். அவர்கள் கண்டுபிடிப்பதற்கும் முன்பே இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களுக்கு இந்த குகைகள் பற்றித் தெரிந்திருந்தது. ஷெனண்டோவா என்பதே ஆதி அமெரிக்க இந்தியர்களின் குழுப்பெயர்தான். 1922ல் இது முறையாக வடிவமைக்கப்பட்டு சுற்றுலா இடமாக்கப்பட்டது.
தரையிலிருந்து லிஃப்ட் வழியே சுமார் 220 அடி கீழே இறங்கியதும் குகைகளுக்குள் சுமார் ஒரு மைல் தூரம் குறுக்கும் நெடுக்குமாக அழைத்துச் சென்றார்கள். குறுகலான வழிகள். ஒவ்வொரு பகுதிக்கும் பெயர்கள் சூட்டி, வண்ண விளக்குகளால் வடிவ மாற்றங்கள் செய்து, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க முயற்சித்திருக்கிறார்கள். ஓரிரு பகுதிகளைப் பார்த்த பிறகு எனக்கு, எல்லாமே ஒரே போல இருப்பதாகவும் விளக்கு ஏற்பாட்டினால் மட்டுமே மாறுபட்டுத் தோன்றுவதாகவும் பட்டது. எதையும் சாமர்த்தியமாக விற்கத் தயார்ப்படுத்தும் அமெரிக்க அணுகுமுறை பூமிக்கடியிலும் தெளிவாகத் தெரிந்தது.
கீழிருந்த ஒரு மணி நேரம் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. உடல்நிலை எதேனும் கோளாறாகிவிட்டால், என் கதி என்னாகும் என்று யோசித்ததால் வந்த பயம். கூட இருந்த சுற்றுலாப் பயணிகளைப் பார்த்ததும் பயம் போய்விட்டது. அமெரிக்காவில் எந்த சுற்றுலா இடத்துக்குச் சென்றாலும், அங்கே நான் நிறைய கிழவர்கள், கிழவிகளைப் பார்த்தேன். ஊர் சுற்றுவதற்கு முதுமை அவர்களுக்கு ஒரு தடையே இல்லை. உடல் நலிவுகள் இருந்தாலும் கூட ஊர் சுற்ற விரும்புகிறார்கள்.
வரிஜினியா குகைகளுக்கு அடுத்து நியூ ஜெர்சி எடிசனுக்கு திரும்பும் வழியில், பால்டிமோர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். துறைமுகம் என்று பெயரே ஒழிய உண்மையில் இங்கு இப்போது கப்பல் போக்குவரத்தை விட அதிகமாக நடைபெறுவது சுற்றுலா தொழில்தான். சுமார் 300 வருட காலமாக இருந்துவரும் பால்டிமோர் துறைமுகத்தில் சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல் போக்குவரத்து 1950களிலேயே நலிந்துபோய்விட்டது. எனவே பழைய கோடவுன்கள், துறைகள் எல்லாவற்றையும் இடித்துத் தள்ளிவிட்டு, சுற்றுலா மையங்களைக் கட்ட ஆரம்பித்தார்கள். மீன் காட்சியகம், கப்பல் காட்சியகம், அறிவியல் மையம், வர்த்தக மையம், உணவு விடுதிகள் என்று இடமே பழைய அடையாளம் தெரியாமல் மாற்றப்பட்டுவிட்டது.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் கப்பலகளைக் கடைசியாக அழித்த அமெரிக்க நீர்முழ்கிக் கப்பல் டோர்ஸ்க் இப்போது காட்சியகத்தில் இருக்கிறது. வருடந்தோறும் உலகத்தின் உயரமான கப்பல்களின் அணிவகுப்பு விழா பால்டிமோர் துறைமுகத்தில் நடக்கிறது.
இந்த வளாகத்தில் கடை கடையாகத் தேடி என் வழக்கமான ஆப்பிள் பை லஞ்சை முடித்துவிட்டு எடிசனுக்குத் திரும்பும் நேரத்தில் எங்கள் சுற்றுலா வழிகாட்டி சூவுடன் கொஞ்சம் பேசினேன். படித்து முடித்துவிட்டு சீனாவுக்குத் திரும்பிச் செல்லும் திட்டம் உண்டா, என்று சூவிடம் கேட்டேன். நிச்சயம் இல்லை என்று தெளிவாகச் சொன்னாள். அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டு, சீனாவில் இருக்கும் தன் குடும்பத்தினரையும் இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடுவதுதான் தன் தொலை நோக்குத் திட்டம் என்றாள். மெக்சிகன் பஸ் டிரைவர் இன்னும் ஒரு சில வருடங்கள் அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு பின்னர் மெக்சிகோ திரும்பித் தன் மனைவிகளுடன் நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கப் போவதாக சொன்னார். அவருக்கு வயது 50. சூவின் வயது 18.
தாய்நாட்டுக்குத் திரும்பிப் போவீர்களா, இங்கேயே இருப்பீர்களா என்ற கேள்விகளை இன்னும் தொடர்ந்து பலரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். அடுத்த நாள் மாலை எடிசனில் இருக்கும் இலவசக் கொத்தனார் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் ராஜேஷ் வீட்டில் சுமார் பத்து இணைய எழுத்தாளர்-தமிழர்களை சந்தித்தபோதும் இந்தக் கேள்விகள் தொடர்ந்தன.
கும்பகோணத்தில் பிறந்து, அகமதாபாத் அரவிந்தைத் திருமணம் செய்துகொண்டு, நியூஜெர்சி மிடில்செக்ஸ் கவுண்ட்டியின் பொது சுகாதார திட்ட அலுவலர் பதவியில் இருக்கும் பத்மாவை அன்று காலைதான் சந்தித்திருந்தேன். அவர் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டவர். அதே சமயம் அங்கே வந்து தங்கும், வசிக்கும், குடியேறும் இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசிய மக்களின் நலன்களுக்காகப் பணி புரிவதுதான் அவரது குறிக்கோளாக இருக்கிறது.
அமெரிக்க அரசு சார்ந்த நிர்வாகத்தில் இருக்கும் ஒரு தமிழரான பத்மா, என்னை மிடில்செக்ஸ் கவுண்ட்டியின் பொது சுகாதார அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கினார். எடிசன் ஓக் அவென்யூவில் இருக்கும் காச நோய் தடுப்பு மையத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். நம் ஊரில் நமக்குப் பரிச்சயமான ஒரு க்ளினிக் சூழலே அங்கு இல்லை. நோயாளியைக் கலவரப்படுத்துவதாகவோ மனச் சோர்வு ஏற்படுத்துவதாகவோ சூழல் இல்லாமலிருப்பது ஒரு கிளினிக்கின் அடிப்படை தேவை.
அதே வளாகத்தில் அமைந்திருக்கும் பாலியல் வன்முறை பாதிப்புக்குள்ளானோருக்கான உதவி மையத்துக்கும் சென்றேன். இருபது வருடங்களாக நடக்கும் அந்த மையத்தின் பொறுப்பாளர் ஜீன் அமெரிக்கர். அவர் கணவர் சீனர். பாலியல் வன்முறை , கட்டாய உடலுறவு பாதிப்புகளுக்கு உள்ளாவோர் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வசதி உள்ளது. மருத்துவ உதவி, சட்ட உதவி, உள நல ஆலோசனை உதவி அனைத்தும் இங்கு வழங்கப்படுகின்றன.
அடுத்து எலிஜாஸ் ப்ராமிஸ் சூப் கிச்சன் என்ற இடத்துக்கு பத்மா என்னை அழைத்துச் சென்றார். சூப் கிச்சன் என்பது அன்னதானக் கூடம். ஒரு வேளை உணவுக்கும் சிரமப்படுபவர்களுக்கு தினசரி இரு வேளை உணவு கொடுப்பதற்கான ஏற்பாடுகள்தான் சூப் கிச்சன்கள்.
அமெரிக்காவில் சாப்பாட்டுக்கே வழியற்ற ஏழைகள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுபவர்களுக்குச் சொல்ல வேண்டும். கணிசமாகவே இருக்கிறார்கள். குறைந்தது 23 சதவீதம் மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள்.
ஏழ்மை என்பது ஆண்டுக்கு 20 ஆயிரம் டாலர் வருமானத்துக்கும் கீழே இருப்பதாகும். நடைமுறையில் ஓரளவு சுமாராக வாழ்வதற்கு நிச்சயம் வருடத்துக்கு 30 ஆயிரம் டாலர் தேவைப்படும். ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் சராசரியாக 16 ஆயிரம் டாலர்தான் சம்பாதிக்கிறார்கள். உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 31 ஆயிரம் டாலர் வரை கிடைக்கிறது. பட்டம் பெற்றவர்கள் 56 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார்கள். மேலும் உயர்படிப்பு தொழில்முறை கல்வி இருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.
ஏழ்மையில் இருப்பதால் குழந்தைகளைப் பராமரிக்க முடியாதவர்களுக்கு நிதி உதவி தரும் திட்டத்தை அமெரிக்க மத்திய அரசு 1935லிருந்து செயல்படுத்தி வருகிறது. 1997ல் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.ஆண்டு தோறும் சுமார் 40 லட்சம் பேர் இந்த உதவியைப் பெறுகிறார்கள். பண உதவி என்பது சும்மா அல்ல. பதிலுக்கு இத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதிகபட்சம் எத்தனை மாதங்கள் வரை உதவி பெறலாம் என்ற உச்சவரம்புகளும் உள்ளன.
உணவைப் பொறுத்த மட்டில் இன்றும் ஏழு அமெரிக்கர்களில் ஒருத்தருக்கு தினசரி உணவு கிடைப்பது சிக்கல்தான் என்ற நிலைமை இருக்கிறது. அமெரிக்காவில் சுமார் ஆறு கோடி பேர் உணவு கிடைக்காத சிக்கலில் வாழ்கிறார்கள். இதில் ஒரு கோடி 67 லட்சம் பேர் குழந்தைகள்.சுமார் 11 மாநிலங்களில் ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 20 சதவிகிதம் குழந்தைகளுக்குப் பட்டினி நிலை உள்ளது. ஏழைகளில் வெள்ளையர்களை விட கறுப்பர்கள் அதிகம். திருமணமானவர்களை விட ஒற்றைப் பெற்றோராக இருப்பவர் அதிகம்.
நியூஜெர்சியில் இயங்கும் எலிஜா சூப் கிச்சனில் சென்ற வருடம் மட்டும் ஒரு லட்சம் சாப்பாடு போட்டார்கள். சூப் கிச்சன் நடவடிக்கைகள் உடனடியாகப் பசியைப் போக்கும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல், ஏழ்மையில் இருப்பவரின் உழைக்கும் திறனை மேம்படுத்தி, இன்னும் நல்ல வேலைக்கு அவரைத் தயாராக்குவது, போதைப் பழக்கம் உள்ளவரானால் அதிலிருந்து மீட்டு உழைப்பவராக மாற்றுவது ஆகிய நோக்கங்களுடனும் நடக்கும் முயற்சியாகும். இவற்றுக்கு பலரிடமிருந்தும் நன்கொடைகள் திரட்டப்படுகின்றன.
ஏராளமானவர்கள் தொண்டர்களாகவும் வேலை செய்கிறார்கள். இலவச உணவு சாப்பிடுகிறவர்களிலும் தொண்டு செய்பவர்கள் உண்டு. தொண்டர்களாக பணிசெய்ய முன்வருபவர்கள் என்ன செய்ய வேண்டும், எந்தெந்த நாளில் என்னென்ன வேலைக்கு உதவி தேவைப்படுகிறது, எத்தனை பேர் தேவை, என்பதையெல்லாம் அடுத்த ஐந்து மாதங்களுக்கும் திட்டமிட்டு தங்கள் இணைய தளத்தில் அறிவிக்கிறார்கள்.
பிரன்ஸ்விக்கில் பத்மா என்னை அழைத்து சென்ற சூப் கிச்சன் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. எந்த வர்த்தக ரீதியான உணவகம் போலவே சூழல் தரமாக இருந்தது.
இந்த மையங்களில் நான் முக்கியமாகக் கவனித்த அம்சம், அவற்றின் பொறுப்பில் இருப்போரின் அணுகுமுறைதான். தங்கள் வேலையை ஒரு சுமையாகக் கருதும் அலுப்பு மனநிலை அவர்களிடம் இல்லை. துயருடன் செல்வோருக்கு உடனடியாக ஆறுதலைத் தரக் கூடிய அணுகுமுறை உள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
என் அமெரிக்கப் பயணத்தின்போது பத்மா அரவிந்த்தான் அமெரிக்காவின் இந்தப் பக்கத்தையும் எனக்குக் காட்டியவர். அதே சமயம் சிக்கலைச் சந்திக்க, அரசும், சமுதாயமும் எப்படி தங்களைத் தயார் செய்துகொண்டிருக்கின்றன என்பதையும் அவர் நேரில் எனக்குக் காட்டினார்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் அதிலும் தமிழர்களில் பலர் உள்ளூர் சமுதாயத்தின் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதுமில்லை. ஈடுபடுவதும் இல்லை. உடல் அமெரிக்காவுக்கு, உயிர் இந்தியாவுக்கு என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு குழுவாக செயல்பட்டு அமெரிக்க வாழ்முறை மீது பெரும் தாக்கத்தை தங்களால் ஏற்படுத்த முடியும் என்ற பார்வையும் இல்லை.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 16
நான் புகைப்படம் எடுத்துக் கொண்டது ரத்தமும் சதையுமான அசல் ஒபாமாவுடன் அல்ல. மெழுகு பொம்மை ஒபாமாவுடன். உலகப் புகழ் பெற்ற மெழுகு பொம்மைக் கலைஞர் மேடம் டசாடின் காட்சிக் கூடம் வாஷிங்டனிலும் இருக்கிறது. அங்கேதான் ஒபாமாவின் ஆளுயுர மெழுகுச் சிலையுடனும், அமெரிக்க குடியரசுத் தலைவரின் அலுவலக மேசை நாற்காலி மாடலுடனும் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
மேடம் டசாட் என்கிற மேரி 18ம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்து 19ம் நூற்றாண்டின் மத்தி வரை பிரான்சில் வாழ்ந்து ஸ்விஸ் குடியுரிமை பெற்ற ப்ரெஞ்ச் பெண்மணி. பிரமிப்பூட்டும் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். பிரபலங்களை அசல் போலவே மெழுகு பொம்மைகளாக வார்ப்பதில் புகழ் பெற்ற மேரி, பிரெஞ்ச் புரட்சியின்போது தானே சாவின் விளிம்பை எட்டிப் பார்த்து திரும்பியவர். மேரியின் அம்மா டாக்டர் கர்ட்டியஸ் என்பவர் வீட்டு வேலைக்காரியாக இருந்தார். டாக்டர் கர்ட்டியஸ் உடற்கூறை விளக்கும் மெழுகு சிற்பங்கள் தயாரிப்பவர். அவர்தான் மெழுகு பொம்மைக் காட்சியகங்களை முதலில் உருவாக்கியவர். அவரிடம் அந்தக் கலையைக் கற்றுக் கொண்ட மேரி, பிரான்சின் அரசன் பதினாறாம் லூயியின் சகோதரிக்கு அதைக் கற்றுக் கொடுக்கும் வேலை பார்த்தார்.
நெப்போலியன், ரோபிஸ்பியர் போன்ற பிரபலங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்த மேரி, பிரெஞ்ச் புரட்சியின்போது கைது செய்யப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டார். கைதியின் தலையை வெட்டுவதற்கு முன்பு மொட்டையடிப்பது வழக்கம். டாக்டர் கர்ட்டியசுக்கு இருந்த செல்வாக்கினால் கடைசி நிமிடத்தில் வெட்டுக் கத்தியிலிருந்து மேரி தப்பினார். புரட்சியில் கொல்லப்பட்ட அரச குடும்பத்தினர் லூயி, மேரி ஆண்டனி, ரோபிஸ்பியர் ஆகியோரின் பிணங்களிலிருந்து அவர்கள் தலையைப் பிரதி எடுத்து மெழுகு முகமூடிகளாகத் தயாரிக்கும் வேலை மேரிக்குத் தரப்பட்டது. அந்த முகமூடிகள் புரட்சியாளர்களால் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
டாக்டர் கர்ட்டியஸ் இறந்தபின் மேரி திருமணம் செய்து கொண்டார். கணவர் பெயர்தான் டசாட். பிரான்சில் வாழமுடியாமல் லண்டனுக்குச் சென்ற மேரி அங்கேதான் தன் முதல் காட்சியகத்தைத் தொடங்கினார். எண்பத்தெட்டு வயது வரை வாழ்ந்த மேரி டசாடின் மெழுகு பொம்மைகள் உலகப் புகழ் பெற்றன. இப்போது தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் டசாட் காட்சியகங்கள் உலகின் எட்டு ந்கரங்களில் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் நான்கு.
வாஷிங்டன் காட்சியகத்தில் நான் பார்த்த மெழுகுச் சிலைகள் ஒவ்வொன்றும் நேரில் அசல் மனிதர்களைப் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்தின. நிறைய பணம் கொடுத்தால் நம் தலையின் மோல்டையே செய்து கொடுக்கவும் அங்கே ஏற்பாடு இருக்கிறது. என் தலைக்கு அவ்வளவு பணம் வேறு யாராவதுதான் கொடுக்க வேண்டும் என்பதால் நான் மோல்ட் எடுக்கவில்லை. காட்சியகத்தில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் தவிர மீடியாவில், பத்திரிகைகளில் புகழ் பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள் சிலைகளையும் வைத்திருக்கிறார்கள்.
காட்சியகத்தில் என்னைக் கவர்ந்த அம்சம், பல்வேறு பிரபலங்களின் கண்களை (மாடல்தான்) மட்டுமாக தனியே காட்சிப்படுத்தியிருந்ததுதான். ஒரு மனிதனின் கண் என்பது எவ்வளவு தனி அடையாளம் உள்ளது என்பதை அங்கே உணர்த்தியிருந்தார்கள். அந்த அடையாளம் தங்கள் மனதை எதிராளிக்குக் காட்டிக் கொடுத்துவிடும் என்ற பயத்தில்தான் பல அரசியல், சினிமா பிரபலங்கள் கறுப்புக் கண்ணாடி அணிந்தே வலம் வருகிறார்கள்.
ஒபாமாவை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் அவர் அலுவலகத்தையோ வீட்டையோ பார்க்கமுடியும் என்று இந்த டூரில் நினைத்திருந்தேன். ஆனால் நான் சென்ற சமயம் அமெரிக்காவின் மிக மூத்த செனட்டர் ராபர்ட் பைர்ட் இறந்துவிட்டார். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் உறுப்பினராகத் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர் ஒருவர்தான். தொடர்ந்து 51 வருடங்களாக செனட்டராக இருந்துவந்திருக்கிறார்.
அவர் உடலை செனட் கட்டடத்தில் வைத்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த சமயத்தில் நான் வாஷிங்டன் சென்றிருந்ததால், ஜனாதிபதி மாளிகை, செனட் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வழக்கமாக மக்களை அனுமதிக்கும் இடங்களில் கூட அனுமதி தரப்படவில்லை. எதிரில் இருந்த பூங்காவில் தொலைவிலிருந்தேதான் வெள்ளை மாளிகையைப் பார்க்க முடிந்தது.
அடுத்து வாஷிங்டனில் நான் சென்றிருந்த இடங்கள் பொட்டோமாக் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆப்ரஹாம் லிங்கன், தாமஸ் ஜெஃபர்சன் நினைவிடங்களாகும். இந்த் இரு நினைவிடங்களும் என்னை மிகவும் பரவசப்படுத்தின. பின்னர் நியூயார்க்கில் நான் கண்ட சுதந்திரதேவி சிலை கூட எனக்குப் பெரிய உணர்வுகளைத் தூண்டவில்லை. ஆனால் ஜெஃபர்சன், லிங்கன் நினைவிடங்களில் நின்ற போது ஆழ்ந்த பெருமித உணர்வும் பிரமிப்பும் தோன்றின. மானுட விடுதலைக்காக குரலெழுப்பிய வரலாற்று முன்னோடிகளின் சொற்கள் நம்முள் புகுந்து நம்மை ஊக்குவிப்பது போன்ற ஓர் உணர்ச்சியை இந்த இரு நினைவிடங்களும் எழுப்பின.
ஜெஃபர்சனை விட லிங்கன் அதிகமாக நமக்கு பள்ளி நாளிலிருந்தே சொல்லப்பட்டிருப்பவர் என்பதால் நெருக்கமான உணர்வு அதிகமிருந்தது. எனக்கு தனிப்பட்ட விதத்திலும் லிங்கன் முக்கியமானவர். நான் வாழ்க்கையில் நடித்த ஒரே ஆங்கில நாடகம் ஆப்ரஹாம் லிங்கன் பற்றியதாகும். பத்தாம் வகுப்பில் பள்ளி ஆண்டு விழாவில் அதில் லிங்கனாக நடித்து சிறந்த நடிகர் பரிசும் பெற்றேன்.
லிங்கன் நலிவுற்ற குடும்பத்தில் பிறந்தவர். ஜெஃபர்ச்ன் பெரும் பணக்காரர். ஆனால் இருவரும் அடிப்படை மனித உரிமை, சமத்துவம், சுதந்த்ரம் ஆகிய கோட்பாடுகளுக்கக அயராமல் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தவர்கள். இருவரும் தம்மிடம் நூற்றுக்கணக்கான் அடிமைகளை வைத்திருந்தவர்கள். ஆனால் அடிமை முறையை ஒழிக்க வேலை செய்தவர்கள். இருவருமே வக்கீல்கள். லிங்கன் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். கெட்டிஸ்பர்க் உரையில்தான் மக்களால் மக்களுக்காக மக்களின் அரசு என்ற லிங்கனின் புகழ் பெற்ற சொற்றொடர் இடம் பெற்றது. ஜெஃபர்சன் பேச்சாளரல்ல. பேசுவதை விட எழுதுவதிலேயே நிறைய ஆர்வம் செலுத்தியவர்.
ஜெஃபர்சன் இரு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். அவர் பதவிக்காலத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய எந்த சட்டத்தையும் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு முறை கூட ரத்து செய்யாத ஒரே அமெரிக்க ஜனாதிபதி அவர்தான். அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை எழுதிய ஜெஃபர்சன், மதத்தை அரசியலில் கலப்பதை கடுமையாக எதிர்த்தவர். தேசத்துக்கென்று அதிகாரப்பூர்வமான ஒரு மதம் இருக்க வேண்டும் என்பதை அவர் நிராகரித்தார். பிரான்சுடன் பெரும் நட்பு வைத்திருந்தார். இன்றைய அமெரிக்காவில் சுமார் 23 சதவிகித நிலப்ப்ரப்பான லூசியானா பகுதியை அவர் பிரான்சிடம் விலைக்கு வாங்கி அமெரிக்காவுடன் இணைத்தார். பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதை ஜெஃபர்சன் ஆதரிக்கவில்லை.
லிங்கன் நேரடியாக மதம், மதச் சடங்குகளை அரசியலில் கலக்காதபோதும், இறை நம்பிக்கையை அரசியலில் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். நமக்கு மேலே ஒரு பிரும்மாண்டமான சக்தி எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற தொனி அவர் பேச்சில் இருந்துகொண்டே இருக்கும். பாசமுள்ள தந்தையாக லிங்கன் இருந்தபோதும் அவரது குழந்தைகள் எல்லாம் டீன் ஏஜிலேயே இறந்தது அவரை சோகப்படுத்தியது. ஒரே ஒரு மகன் லிங்கன் காலத்துக்குப் பிறகும் உயிரோடு இருந்தான். ஆனால் அவனும் தன் 19வது வயதில் இறந்தான்.
கறுப்பின மக்களுக்கும் ஓட்டுரிமை தரவேண்டுமென்று லிங்கன் பேசிய சில நாட்களில் அவர் கொலை செய்யப்பட்டார். கொலையுண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி அவர்தான். லிங்கன் சந்தித்த மிகப் பெரிய அரசியல் சவால், அமெரிக்காவிலிருந்து பல மாநிலங்கள் பிரிந்து செல்ல நடத்திய உள்நாட்டுப் போர்தான். வெற்றிகரமாக அதை முறியடித்து அமெரிக்காவை ஒன்றுபடுத்தியதுதான் லிங்கனின் சாதனை. யுத்த சமயத்தில் விசாரணையில்லாமல் கைது செய்யவும், சோதனையிடவும் ராணுவத்துக்கு அதிகாரம் அளித்தது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்த லிங்கன் இன்னொரு பக்கம் மனித உரிமைகள், அடிமை முறை ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் போற்றப்படுகிறார்.
லிங்கன், ஜெஃபர்சன் நினைவிடங்கள் இரண்டுமே பிரும்மாண்டமானவை, கிரேக்க பாணியில் பெரும் தூண்கள், மண்டபங்களுடன் அமைக்கப்பட்டவை. அவற்றில் இருவரின் அற்புதமான மேற்கோள்கள் நிறைய கல்வெட்டுகளில் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மானுட விடுதலை, சமத்துவம், உரிமை பற்றிய அவற்றையெல்லாம் அந்த பிரும்மாண்டமான சூழலில் படித்தால் ஒரு சிலிர்ப்பு நிச்சயம் ஏற்படுகிறது.
ஜெஃபர்சனின் பிரும்மாண்டமான உலோக சிலை இந்த நினைவகம் திறக்கப்பட்டபோது தயாராகவில்லை என்பதால், கருணாநிதி ஸ்டைலில் திறப்பு விழாவில் தற்காலிக களிமண் வார்ப்பு சிலைக்கு உலோக பெயிண்ட் அடித்து வைத்திருந்தார்களாம்.!
லிங்கன் நினைவிடத்தின் பிரும்மாண்டமான படிக்கட்டுகளில் நின்றபோது ஒரு வரலாறு படைத்த படிக்கட்டுகளில் நிற்கிறேன் என்ற பெருமிதம் ஏற்பட்டது. அதே இடத்தில் நின்றுகொண்டுதான் 1963 ஆகஸ்ட் 28ந்தேதி அன்று, கறுப்பின உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் ’எனக்கொரு கனவு இருக்கிறது’ என்ற புகழ் வாய்ந்த உரையை சுமார் இரண்டரை லட்சம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் நிகழ்த்தியிருக்கிறார். 1939ல் கறுப்பரும் வெள்ளையரும் ஒரே அரங்கில் அமர்ந்து கறுப்பினப் பாடகர் மரியன் ஆண்டர்சனின் இசையைக் கேட்க அனுமதி மறுக்கப்பட்டபோது, அந்த இசை நிகழ்ச்சியை லிங்கன் மெமோரியல் படிக்கட்டில்தான் ரூஸ்வெல்ட்டின் மனைவி இலினார் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த நினைவிடங்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பது இன்னொரு சிறப்பு. ஆண்டுதோறும் சுமார் 36 லட்சம் பேர் இவற்றைக் காண வருகிறார்கள். தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் !
லிங்கன் நினைவிடத்துக்கு அருகிலேயே தான் வாஷிங்டன் தூணும் இருக்கிறது. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் எந்த யுத்தத்திலும் ஈடுபடுத்தாமல் அமெரிக்காவைப் பொருளாதாரத்தில் மேம்படுத்தியவர் என்ற புகழுடையவர். நினைவுத்தூண் பூமிக்குக் கீழ் 111 அடி புதைக்கப்பட்டு தரைக்கு மேல் 555 அடி உயரம் உடையது. பிரான்சில் உள்ள ஈஃபெல் கோபுரம் கட்டும் வரையில் இதுவே உலகின் மிக உயரமான அமைப்பாக இருந்தது. இப்போதும் உலகின் மிக உயரமான கற்தூண் இதுதான். உச்சி வரை படிக்கட்டுகள் இருந்தாலும் மேலே செல்ல அனுமதிப்பதில்லை. லிங்கன், ஜெஃபர்சன் நினைவிடங்களைப் போல இது என்னை சுவாரசியப்படுத்தவில்லை.
ஏரத்தாழ முதல் நாள் டூரிலேயே இத்தனை இடங்களையும் வாஷிங்டனில் காட்டி முடித்ததும் இரவு ஓட்டலில் தங்கவைத்தார்கள். காலையில் ஓட்டலிலேயே சிற்றுண்டியும் இலவசம். பெரிய ஓட்டல்களில் எல்லாம் இந்த வழக்கம் உலகெங்கும் இருக்கிறது. எது சைவம் என்று தேடித் தேடி வழக்கம் போல ஆப்பிள் பை, ஹாஷ் பிரவுன் போல இருந்த ஐட்டங்களையெல்லாம் சாப்பிட்டு ஆரஞ்ச் ஜூஸ் குடித்து நாள் முழுக்க தாக்கு பிடிப்பது போல சாப்பிட்டுவிட்டு இரண்டாம் நாள் டூரில் வர்ஜீனியா நிலவறை குகைகளுக்குச் சென்றேன். பயமாக இருந்தது.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 15
சுற்றுலா பஸ்சில் பெரும்பாலான பயணிகள் சீனர்களாகவே இருந்ததற்குக் காரணம், சுற்றுலா சேவையை நடத்தும் கம்பெனி சீனக் கம்பெனி என்பது மட்டுமல்ல. இந்தியர்களை விட அதிகமாக சீனர்கள்தான் அமெரிக்காவுக்கு சுற்றுலா வருகிறார்கள். நான் இருந்த பஸ்சில் ஒரே ஒரு வட இந்தியக் குடும்பம் இருந்தது. ஹிந்தி தெரியாதவன் என்றதும் அவர்களும் என்னுடன் அதிகம் பேசவில்லை. கொஞ்சம் சிரிப்பு. எங்காவது குடும்பமாக ஒரு போட்டோ எடுக்க வேண்டியிருந்தால் உதவி கேட்பது என்பது தவிர வேறு உறவாடல் இல்லை.
சாப்பாட்டுக்கு நிறுத்தும் இடங்களில் எல்லாம் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று ஏதாவது சைவக் கடையை அவர்கள் அடையாளம் கண்டுபிடித்தால் நானும் செல்லலாமே என்று முயற்சிப்பேன். சாப்பாட்டு நேரங்களில் எங்கேயோ காணாமல் போய்விடுவார்கள். ப்ரியா கட்டிக் கொடுத்திருந்த உணவை வைத்துக் கொண்டு ஒரு முழு நாளை சமாளித்தேன். மற்றபடி கடையில் சாப்பிட்டது ஆப்பிள் பை, ஹேஷ் பிரவுன்தான். அவற்றைக் கண்டுபிடிக்கவே கடை கடையாக அலையவேண்டியிருந்தது.
சுற்றுலா வழிகாட்டியாக வந்திருந்த சீனப்பெண் சூ ஒரு கல்லூரி மாணவி. இது பகுதி நேர வேலை. மிகவும் அன்பாகவும் உதவிகரமாகவும் இருந்தாள். என்னிடம் போன் இல்லை என்பதால், என்னை பஸ் ஏற்றிவிடும்போதே, முன் ஜாக்கிரதையாக முகுந்தராஜ், அவளுடைய போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரு நாட்களும் தினம் மூன்று வேளை அந்த போனில் என்னை அழைத்து பத்திரமாக இருக்கிறேனா என்று விசாரித்துக் கொண்டே இருந்தார்.
பஸ் டிரைவர் மெக்சிகோகாரர். அவருக்கு மூன்று மனைவிகள். எல்லாரும் ஒன்றாக ஒரே வீட்டில் அன்பாக இருக்கிறார்கள் என்று பாலகுமாரன் ஸ்டைலில் எனக்கு பேட்டி கொடுத்தார். பாலகுமாரனிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடமும் கேட்டேன். உங்கள் மனைவி மூன்று கணவர்களோடு இருந்தால் நீங்கள் மூன்று கணவன்களும் அன்பாய் ஒரே வீட்டில் இருப்பீர்களா என்று. மெக்சிகன் டிரைவர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் – அதற்கு வாய்ப்பே இல்லை.எங்கள் ஊரில் ஆண்கள் கடும் பற்றாக்குறை. அதனால்தான் பெண்கள் எங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் !
சுகமான பஸ் பயணத்தில் முதலில் ஃபிலடெல்ஃபியாவுக்கு சென்றேன். அங்கே விடுதலை மணி எனப்படும் இண்டிபெண்டென்ஸ் பெல் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இந்த மணி அமெரிக்காவின் ஒரு வரலாற்றுச் சின்னம். உண்மையில் இதற்கும் அமெரிக்க விடுதலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. வில்லியம் பென் 1701ல் மனிதர்களின் உரிமைகள், கடமைகள் பற்றிய சட்டத்தை வகுத்தவர். அதன் பொன் விழா ஆண்டில் இந்த மணி அமைக்கப்பட்டது. பின்னால் 1776ல் அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை வாஷிங்டனில் வாசிக்கத் தொடங்கும்போது, இந்த மணி பிலடெல்பியாவில் ஒலிக்கப்பட்டதாகவும் அதனால் விடுதலை மணி என்று கொண்டாடப்படுவதாகவும் ஸ்தலபுராணம் சொல்கிறது.
உண்மையில் இந்த மணி எல்லா கிராமத்து தேவலாய மணிகளைப் போல ஒவ்வொரு முறை ஊர்ப் பொது கவனத்துக்குரிய நிகழ்ச்சி எது நடந்தாலும் உடனே ஒலிக்கும் வழக்கப்படி 1701லிருந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. பெஞ்சமின் பிராங்க்ளின் அமெரிக்கக் காலனி நாடுகளின் பிரச்சினைகளை பிரிட்டிஷ் அரசுடன் விவாதிப்பதற்காக இங்கிலாந்து புறப்பட்ட தினத்தன்றும் மணி அடித்திருக்கிறார்கள். இப்படி அடிக்கடி எதற்கெடுத்தாலும் மணி அடிக்கவே, இந்த மணி சத்தம் தொல்லை தாங்கவில்லை என்று 1772ல் அருகில் குடியிருக்கும் மக்கள் ஒரு புகார் மனு கூடத் தந்திருக்கிறார்கள்.
விடுதலைப் பிரகடனத்தைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொராண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தன்று இந்த மணி 13 முறை ஒலிக்கப்படுகிரது. அன்று அமெரிக்கா முழுவதும் 13 முறை மணி ஒலிக்கும் வழக்கம் உண்டு. காரணம் முதன்முதலில் விடுதலைப் பிரகடனம் செய்தபோது இருந்த அடிமைக் காலனி நாடுகளின் எண்ணிக்கை 13. பிலடெல்பியா விடுதலை மணியை முதன்முறை மாடத்தில் மாட்டி அடித்தபோதே அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு பல முறை இந்த விரிசலை சரி செய்ய மணியை உருக்கி வார்த்திருக்கிறார்கள். மணியில் விரிசல் ஏற்பட்டது, உருக்கியது வார்த்தது எல்லாவற்றையும் மிகப்பெரிய சரித்திர நிகழ்வுகளாக, விடுதலை மணி காட்சியகத்தில் விவரமாக விவரித்திருக்கிறார்கள். .
உண்மையில் இந்த மணிக்கு சிறப்பு வந்தது என்பது அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்கான போராட்டம் நடந்தபோதுதான். அடிமைமுறை எதிர்ப்பாளர்கள் இதைத் தங்கள் சின்னமாகக் கொண்டார்கள். வெவ்வேறு விடுதலைப் போராட்ட அமைப்புகள் இந்த மணியை தங்கள் சின்னமாக வைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. இந்த மணியை அமெரிக்கா முழுவதும் ஊர் ஊராக ஊர்வலமாக எடுத்துச் செல்வதும் உண்டு. 1880களில் உளநாட்டு யுத்தத்தின் பின் மக்களிடையே பழையபடி ஒற்றுமையை வலியுறுத்த மணி ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் 1915ல் பெண்களுக்கு வாக்குரிமை கோரும் போராட்டத்தின்போது, இதே போல இன்னொரு மணியைச் செய்து ஊர்வலம் விட்டார்கள்.
விடுதலை மணியை வைத்து ஏப்ரல் முட்டாள் தின கிண்டல்கள் கூட செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 1, 1996 அன்று, இந்த மணியைத் தான் விலைக்கு வாங்கிவிட்டதாக ஒருவர் நியூயார்க் டைம்ஸ் உட்பட எல்லா பெரிய பத்திரிகைகளிலும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறார் !
விடுதலை மணி காட்சியகத்துக்கு வெளியே ஒரு அழகான பிருமாண்டமான புல்வெளி இருக்கிறது. இப்போது புல்வெளி இருக்கும் இடத்தில் ஜார்ஜ் வாஷிங்டனும் ஆடம்சும் ஜனாதிபதிகளாக இருந்தபோது வசித்த அதிபர் மாளிகை இருந்திருக்கிறது. அப்போது பிலடெல்பியாதான் அமெரிக்காவின் தலைநகரம். வாஷிங்டன் ஏழு அடிமைகளை வைத்திருந்த அந்த மாளிகையைத் தரைமட்டமாக்கி புல்வெளி அமைத்துவிட்டார்கள். புல்வெளி நிறைய மக்கள் கூட்டம். ஒவ்வொரு வருடமும் என்னைப் போல 15 லட்சம் பேர் இந்த மணியை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். அதில் சில தமிழர்களையும் சந்தித்தேன். தேன் நிலவுக்கு வந்த ஒரு இளம் தமிழ் ஜோடி என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டது !மணியுடன் எடுத்துக் கொண்டீர்களா என்று கேட்டேன். இன்னும் இல்லை என்றார்கள்.
சுற்றுலா பஸ்கள் எல்லாம் அரை கிலோமீட்டர் தள்ளி நிற்கவைக்கப்பட்டிருக்கின்றன. சில பஸ்களில் தமது பயணிகளுக்கு அடையாளக் கைப்பட்டை அணிவித்துவிடுகிறார்கள். சில பஸ்களின் நம்பர்களை வைத்துக் கொண்டு நாம் தான் தேடிப் பிடிக்க வேண்டும். டூர் கைட் காட்சியகம் உள்ளே பெரும்பாலும் வருவதில்லை வாசல்வரை வந்து அனுப்பி வைக்கிறார்கள். பெரும் புல்வெளியில் டூர் கைடைத் தொடர்ந்து பின்பற்றிச் செல்ல வசதியாக டூர் கைட் அடையாளக் குடை பிடித்துக்கொள்கிறார். சினிமா படப்பிடிப்பில் ஹீரோவுக்குப் பிடிக்கிற கலர் குடை மாதிரியான குடைகள்.
அடுத்து சென்ற இடம் வாஷிங்டனில் ஏர்ஸ்பேஸ் மியூசியம் எனப்படும் விண்வெளிக் காட்சியகம். இங்கே விமானப் போக்குவரத்து மட்டுமல்லாமல், விண்வெளி ஆய்வுத் தொடர்பான முழு வரலாறும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட அசல் விமானங்கள் முதல், விண்வெளியில் ஏவப்பட்ட விண்கலங்கள், அவற்றின் பாகங்கள், அவற்றில் பயன்படுத்திய கேமராக்கள், சந்திரனில் எடுத்த கற்கள் என்று விதவிதமான காட்சிப் பொருட்கள் உள்ளன. இந்த காட்சியகங்களையெல்லாம் ஓரிரு மணி நேரத்தில் நிச்சயம் பார்த்து முடிக்க முடியாது. ஏதாவது ஒரு பிரிவை மட்டும் எடுத்துக் கொண்டு அதை ஆழ்ந்து பார்க்கலாம்.
இந்தியா திரும்பியபின்னர் அண்மையில் தஞ்சாவூர் சென்றிருந்தபோது எனக்கு அமெரிக்கக் காட்சியகங்கள் நினைவுக்கு வந்தன. தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டையொட்டி அரசு ஏற்பாடு செய்திருந்த கண்காட்சிக்கு நண்பர்களுடன் சென்றேன். கண்காட்சியில் அருமையான சோழர் காலச் சிற்பங்கள், சிலைகள், செப்ப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் என்று எல்லாம் இருந்தன. ஆனால் ஒன்றைக்கூட நின்று நிதானமாகப் பார்க்க முடியவில்லை. காட்சிப்பொருளுக்கு முன்னே கட்டிய கயிறை ஒட்டி வரிசையாகப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
நின்றால், போ, போ என்று துரத்துவதற்கென்றே ‘தொண்டர்’படை வைத்திருந்தார்கள். திருப்பதியில் கருவறை அருகே வரும்போது ஜருகண்டி ஜருகண்டி என்று துரத்துவார்களே அதே போல துரத்தினார்கள். ஒரு குழந்தை அம்மாவிடம் செப்பேடு என்றால் என்னம்மா என்று கேட்டது. பக்கத்திலேயே விவரமாக எழுதி வைத்திருக்கிறது. அந்தத் தாய் அதைப் படித்து குழந்தைக்கு எடுத்துச் சொல்ல வழியில்லை. போ நிக்காதே என்று துரத்திக் கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்த தொண்டர்களுடனும் அரசு ஊழியர்களுடனும் நான் சண்டை போட்டதுதான் மிச்சம். எதற்கு கண்காட்சி வைக்கிறோம் என்ற அறிவே இல்லாமல் நடத்தப்பட்டது அந்தக் கண்காட்சி. அதில் இருந்த விஷயங்களில் பத்து சதவிகிதம் தங்களிடம் கிடைத்தால் கூட, அமெரிக்கர்கள் அதை அழகாக பார்ப்பவருக்கு சிநேகமான கண்காட்சியாக வைத்து நிரந்தர வருவாய்க்கு வழி செய்துவிடுவார்கள்.
ஏர்ஸ்பேஸ் மியூசியுஅத்தை நடத்துவது ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடிட்யூஷன். இது அறிவியல், அறிவு பரவலுக்கான ஒரு தொண்டு அமைப்பு. ஜேம்ஸ் ஸ்மித்சன் என்பவர் பெயரில் அவருடைய நன்கொடையைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித்சன் ஒரு விசித்திரமான மனிதர். அவர் தந்தையின் கள்ளக் காதலிக்குப் பிறந்த குழந்தை. பிரிட்டிஷ்காரரான அவர் அமெரிக்காவைப் பார்த்ததே இல்லை. இங்கிலாந்திலேயே வாழ்ந்து மறைந்தவர். விஞ்ஞானி. தாதுப் பொருட்கள் பற்றி ஆய்வுகள் செய்தவர். சாவதற்கு முன்னர் தன் தம்பி மகனுக்கு எல்லா சொத்தையும் எழுதி வைத்துவிட்டு ஒரு நிபந்தனை போட்டார். தம்பி மகனுக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டால், அந்த சொத்து அவருக்குப் பின் அமெரிக்க அரசுக்கு நன்கொடையாகத்தரப்பட்டு அறிவு பரப்பலுக்கான அமைப்பு தொடங்கப்படவேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதன்படியே ஆயிற்று. தம்பி மகனுக்கு வாரிசுகள் இல்லை.
உலகிலேயே மிகப்பெரிய காட்சியகங்கள் வைத்திருப்பது ஸ்மித்சோனியன்தான். மொத்தம் 19 மியூசியங்களும் ஒன்பது ஆய்வுக் கூடங்களும் நடத்துகிறது. இதன் நிர்வாகப் பொறுப்பை அமெரிக்க துனை அதிபரும் தலைமை நீதிபதியும் கொண்ட குழு கவனிக்கிறது. ஸ்மித்சோனியன் சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறது. ஜப்பானில் அணுகுண்டு வீசிய விமானத்தை 1994ல் தன் காட்சியகத்தில் வைத்தபோது குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களின் கொடூரமான காட்சிகளை வைத்தது அமெரிக்க விமானிகளை அவமானப்படுத்துகிறது என்று சிலர் எதிர்த்தனர். இதையடுத்து அவை சுருக்கி அமைக்கப்பட்டன. இந்திய புகைப்படக்காரர் சுபங்கர் பானர்ஜி 2003ல் ஆர்க்டிக் பற்றிய புகைப்படக் காட்சியை வைத்தபோது உலகம் சூடாவது பற்றி அவர் படங்கள் மூலம் தெரிவித்த கருத்துகள் அரசியல்ரீதியில் ஏற்கமுடியாதவை என்று கூறி சில படங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
ஸ்மித்சோனியன் பேட்ஜுகளை நினைவுப்பொருளாக வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நான், அடுத்து செய்தது ஒபாமாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டதுதான். வாஷிங்டன் பயணத்தின்போது என் கேமராவை முகுந்தராஜ் காரிலேயே மறந்து விட்டுவிட்டுவந்துவிட்ட எனக்கு, ஒபாமாவுடன் போட்டோ எடுக்க ஸ்பாட்டிலேயே கேமரா இருந்தது !
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 14
பாஸ்டன் துறைமுகத்தில் 1773ல் தேயிலை சரக்குப் பெட்டிகளைத் தூக்கி கடலில் எறிந்த போராட்டம், அடிப்படையில் ஒரு வரி எதிர்ப்புப் போராட்டம். புஷ் ஆட்சியின் கடைசிப் பகுதியில் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடி, இன்னொரு விதமான வரி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டியது.
புஷ் ஆட்சியின் பொருளாதாரச் சிக்கல்தான் ஒபாமா ஆட்சிக்கு வருவதற்கு உதவியும் செய்தது. ஒபாமா மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று பெரும் எதிர்பார்ப்புடன் அவருக்கு ஆதரவு தரப்பட்டது. ஒபாமா கொண்டு வந்த மாற்றங்களில் முக்கியமானது மக்கள் அனைவருக்குமான ஹெல்த் இன்சூரன்ஸ்.
இந்த மாற்றம் பிடிக்காதவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அரசு செய்யும் செலவு ஏற்கனவே அதிகம். போடும் வரியும் அதிகம். ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற கூடுதல் செலவுகளில் அரசு ஈடுபடாமல், செலவைக் குறைக்கவேண்டும் என்று கருதிய மக்களில் ஒரு பகுதியினர் 2009 ஆண்டு நெடுக, ஆங்காங்கே எதிர்ப்பு ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தினார்கள். இவர்களுக்குத்தான் டீ பார்ட்டி இயக்கம் என்று பெயர்.
இது ஒற்றை கட்சி அல்ல. ஊருக்கு ஊர் தனித்தனியே ஒவ்வொரு குழு, தனக்கென்று ஒரு பெயருக்கு முன்னால் டீ பார்ட்டி என்று சேர்த்துக் கொண்டு இயங்குகின்றன. இவற்றை ஒருங்கிணைப்பது பெரிய வெற்றியைத் தரவில்லை. ஆனால் டீ பார்ட்டி குழுக்களின் போராட்டங்களுக்கு பெரும் மீடியா விளம்பரம், அவற்றின் தகுதிக்கு மேல் கிடைத்தன. பெரும் பணக்காரர்களின் ஆதரவு இந்த இயக்கங்களுக்கு இருக்கிறது. ஒரு சில ஊர்களில் டீ பார்ட்டி அமைப்புகள் வெள்ளை நிறவெறியுடன் கறுப்பினத்தவருக்கு எதிரான மன நிலையுடனும் இருக்கின்றன.
அமெரிக்காவில் நவம்பரில் நடந்த இடைத் தேர்தல்களில் டீ பார்ட்டியின் பாதிப்பு இருந்தது. பல இடங்களில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களாகவே டீ பார்ட்டிக்காரர்கள் போட்டியிட்டார்கள். கடைசி முடிவுகளில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி முன்பிருந்ததை விட ஆறு சீட் குறைவான நிலைக்கு வந்துவிட்டது. பணக்காரர்களின் அதிருப்தியைப் பிரதிபலிக்கும் கட்சியாக டீ பார்ட்டி இயக்கம் இருந்தபோதும் அது மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகும் வாய்ப்பு இல்லை. குடியரசுக் கட்சியிலேயே அதி தீவிர பழமைவாதிகளின் ஒரு பிரிவாக மட்டுமே அது நடைமுறையில் இருக்க முடிகிறது.
ஜூலை 2009ல் தொடங்கிய டீ பார்ட்டி குழுக்கள் இயக்கத்தின் சார்பில் அமெரிக்காவின் பல மாநிலங்களில் பல நகரங்களில் ஏராளமான முறை ஆர்ப்பாட்டங்கள் நடத்திருக்கின்றன. ஆனால் ஒரிஜினல் டீ பார்ட்டி கலகம் நடந்த பாஸ்டனில் ஒரே ஒரு முறைதான், நான் பாஸ்டன் செல்வதற்கு இரு மாதங்கள்முன்பு காமன்ஸ் பூங்காவில் பேரணி நடந்திருக்கிறது.
பாஸ்டன் பயணம் முடித்ததும் ரயிலேறி ஐந்து மணி நேரப் பயணம் செய்து இரவு பத்து மணிக்கு நியூஜெர்சியின் மெட்ரோபார்க் ரயிலடிக்கு வந்து சேர்ந்தேன். முகுந்தராஜ் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ப்ரியா அருமையான சப்பாத்திகள் செய்து கொடுத்தார். அமெரிக்காவில் முதன் முதலில் நியூயார்க் வந்து இறங்கி கொலம்பஸ் போவதற்கான விமானத்தைத் தவறவிட்டு திண்டாடியபோது முன்பின் தெரியாத முகுந்தராஜ் வீட்டில்தான் தங்கினேன். அன்றிரவும் ப்ரியா சுவையான சப்பாத்திகள் கொடுத்தார்.
என் அமெரிக்கப்பயணத்தில் முகுந்த்-ப்ரியா வீடு என் கேம்ப் ஹவுஸ் மாதிரி ஆகிவிட்டது. ஒவ்வொரு ஊருக்கும் அங்கிருந்து போய்விட்டுத் திரும்ப வருவேன்.
முகுந்தராஜ் நிஜமாகவே உயர்ந்த மனிதர். ஆறடிக்கும் மேல்.நானும் ப்ரியாவும் அவரை எப்போதுமே அண்ணாந்துப் பார்த்துத்தான் பேசவேண்டும். அவரை உட்காரவைத்துவிட்டு நாங்கள் நின்றுகொண்டு மரியாதையாகப் பேசினால்தான் முகத்துக்கு நேரே பேச முடியும்.
சுற்றுலா இடங்களுக்குச் செல்வதை விடவும் அன்றாட அமெரிக்க வாழ்க்கையை நான் அதிகம் பார்த்து உணரவேண்டுமென்று முகுந்த் விரும்பினார். அவருடன் பிஸ்காட்டவே பகுதியில் இருந்த ஒரு காவல் நிலையம், ஒரு நீதிமன்றம், ஒரு நகராட்சி அலுவலகம், ஒரு தீயணைப்பு நிலையம், ஒரு நூலகம் ஆகியவற்றுக்குச் சென்றேன்.
பொதுவாக ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒரு காவல் நிலையம், ஒரு கோர்ட், ஒரு மருத்துவமனை இவற்றுக்குள் நுழையவேண்டிய தேவை இல்லாமலே வாழ்க்கையைக் கழித்துவிட்டால், அவன் நிம்மதியாக வாழ்ந்ததாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் இந்தப் பேறு வாய்ப்பதில்லை.
இந்தியாவில் பல காவல் நிலையங்களுக்கு வெவ்வேறு காரணங்களுக்காகச் சென்றிருக்கிறேன். ஒரு முறை என் நண்பரின் சைக்கிள் என் கண் முன்னாலே திருடப்பட்டதைப் பற்றி புகார் தரச் சென்றபோது எழுதுவதற்கு என்னையே ஒரு கொயர் பேப்பர் வாங்கித் தரச் சொன்னார்கள். சைக்கிளின் பாரில் சீட்டடியில் வண்டி எண் பொறித்திருக்கும். புகாரில் அதை மட்டும் நிரப்பாமல் காலியாக விட்டுவிட்டார்கள். ஸ்டேஷனின் பின்புறம் கிடந்த நூற்றுக்கணக்கான சைக்கிள்களில் தன் சைக்கிள் போல இருக்கக்கூடிய ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி நண்பரிடம் சொன்னார்கள். அந்த சைக்கிள் சீட்டுக்குக் கீழிருந்த எண்ணைப் புகாரில் நிரப்பிவிட்டு, சைக்கிளை மீட்டுவிட்டதாக நண்பரிடம் ஒப்படைத்தார்கள்.
மும்பையில் நேர்மாறான அனுபவம். செல்போன் தொலைந்துவிட்டால் காவல் நிலையப் புகார் ரசீதைக் காட்டினால்தான் மகாநகர் டெலிபோன் கம்பெனி புதிய சிம் கார்டு கொடுக்கும். இரு முறை இதே காரணத்துக்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கிறேன். புகார் பதிவு செய்பவர் நாம் சொல்லச் சொல்ல அவரே மராத்தியில் எழுதுவார். எழுதி முடித்ததும் பிரதியைக் கொடுத்து இன்ஸ்பெக்டர் கையெழுத்தும் ரப்பர் முத்திரையும் பெற்றுத்தருவார். ஏதாவது காசு கொடுத்துவிட்டுப் போகும்படி ஒரு முறையும் கேட்டதில்லை. என்னைப் போல அங்கு வந்திருக்கும் பொதுமக்களும் யாரும் காசு கொடுப்பதில்லை. ஏதாவது காசு தரவேண்டுமா என்று பொதுமக்களில் ஒருவரிடம் கேட்டேன். ‘உனக்கென்ன பைத்தியமா?’ என்றார்.
செல்போன் பிரச்சினையை விடப் பெரிய பிரச்சினையாக ஒரு கைது விஷயமாகச் சென்றபோதும் ஸ்டேஷனில் காசு தரவேண்டி வந்ததில்லை. அந்த வழக்கு மூன்று வருடங்கள் மும்பை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்தது. அங்கேதான் குமாஸ்தாக்கள் பணம் வாங்கினார்கள். அதுவும் நேரடியாக இல்லை. வக்கீல் மூலமாக.
பிஸ்காட்டவேயில் காவல் நிலையக் கட்டடம் நம் ஊரைப் போல பார்த்ததும் அச்சுறுத்துவதாக இல்லை. சாதாரண கட்டடமாக இருந்தது. ஒரு அலுவலக சூழல்தான். ஒரே கட்டடத்தில் முன்புறம் மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்திலான கோர்ட் அறையும் பின்பக்கம் காவல் நிலையமும் இருந்தன. காவல் நிலையக் கண்ணாடிக்கதவு உட்புறம் பூட்டியிருந்தது. வராந்தாவில் கேமராவும் ஒலிபெருக்கியும் இருந்தன. உள்ளிருந்து எங்களைப் பார்த்துவிட்டு ஒலிபெருக்கியில் காவல் அதிகாரி யாரென்று கேட்டார். என் நண்பர் ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார், அழைத்து வந்திருக்கிறேன் என்றார் முகுந்த். உடனே காவலர் எழுந்து வெளியே வந்து சந்தித்தார்.
உள்ளே ஒரு கைதியைக் கொண்டு வந்து வைத்திருக்கிறேன். எனவே விதிப்படி உங்களை உள்ளே இப்போது விடமுடியாது, இங்கேயே பேசலாம் என்று வெளி அறையிலேயே பேசினார். என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். வெளியறையில் காத்திருந்த பொது மக்கள் யாரும், அந்த அதிகாரி உள்ளிருந்து வெளியே வந்ததும் நம் ஊரைப் போல பதறியடித்துக் கொண்டு எழுந்து நிற்கவில்லை.
அமெரிக்காவில் போக்குவரத்து போலீசாரிடம் லஞ்சம் கொடுப்பது முடியாத காரியம் என்று பல ஊர்களிலும் சந்தித்த நண்பர்கள் சொன்னார்கள். மேல்மட்டத்தில் எப்படி இருந்தாலும் கீழ்மட்டத்தில் அன்றாட வாழ்க்கையில் சராசரி குடிமகனுக்கு சிக்கல் கொடுக்காத அணுகுமுறையே காணப்படுகிறது.
முனிசிபல் அலுவலகத்தில் நாங்கள் நுழைகிறபோது அலுவல் நேரம் சரியாக முடியும் தருணம். தன் சீட்டை விட்டு எழுந்து வெளியே போகத் தயாராகப் புறப்பட்ட ஓர் அலுவலர், எங்களைப் பார்த்ததும், ‘வரி கட்ட வந்திருக்கிறீர்களா ?’ என்று கேட்டார். இல்லையென்றதும் அப்படியானால் நான் போகலாம் இல்லையா என்று கேட்டுவிட்டுப் புறப்பட்டார்.
தீயணைப்பு நிலையத்துக்குச் செல்லும்போது நானும் ஒரு தீயணைப்புப் படை வீரன்தான் என்றார் முகுந்த். ஐ.டி வேலை தவிர இதுவும் பார்ட் டைம் வேலையா என்று கேட்டேன். இல்லை. இது தொண்டு. பொதுமக்கள் வாலண்ட்டியர்களாகப் பதிவு செய்துகொண்டு இந்த வேலை செய்யலாம். வாரத்தில் எப்போது எந்த நேரம் நம்மால் வர முடியும் என்பதை முன்கூட்டி பேசி முடிவு செய்துவிடுவார்கள். என்றார் முகுந்த்.
பொது மக்கள் தீயணைப்பு போன்ற பொதுப் பணிகளில் தொண்டு செய்யவேண்டும் என்ற பழக்கத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். ஒரு சின்ன ஊரில் இருக்கும் ரொட்டிக் கடைக்காரர், துணிக்கடைக்காரர் போன்றவர்கள் முதல் எல்லாருமே அவரவர் ஓய்வு நேரத்தை அவசர நிவாரணத் தொண்டில் செலவிடுவதற்கான வழிமுறையை அவர் ஏற்படுத்தினார்.
குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தத் தொண்டு மனப்பான்மையை பள்ளியில் புகட்டி வளர்க்கிறார்கள்.
கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளான ஜனவரி 17 தேசிய தொண்டு தின்மாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று அமெரிக்காவில் தீயணைப்பு மட்டுமல்ல, பூங்காக்கள், மியூசியங்கள், மருத்துவமனைகள் என்று எல்லா இடங்களிலும் வாலண்ட்டரி ஒர்க் எனப்படும் தொண்டுப் பணியை செய்வோர் எண்ணிக்கை மிகப் பெரியது. தீயணைப்புத் துறையில் மட்டும் மொத்தம் 11 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். தீயணைப்புத் துறையின் மொத்த வீரர்களில் இது — எண்பது சதவிகிதம் !
தீயணைப்பு நிலையத்தில் இருந்த அதிகாரி எங்களுக்கு அவசர உதவி வண்டியை விளக்கிக் காட்டினார். நாங்கள் சென்றிருந்த அதே சமயம் ஒரு பள்ளி மாணவியும் வந்திருந்தாள். அவளுக்கும் நிலையத்தைப் பற்றிச் சொன்னார். ஏன் இங்க வந்து இதெல்லாம் கேட்டு எங்க உசிரை எடுக்கறீங்க என்ற தொனியே கிடையாது. வந்து கேக்க மாட்டீங்களான்னு காத்துகிட்டு இருந்தோம். வந்தது ரொம்ப சந்தோஷம் என்ற தொனியில்தான் உரையாடுகிறார்கள்.
”அடுத்து நீங்கள் வாஷிங்டன், ஃபிலடெல்ஃபியா இரண்டையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறது” என்றார் முகுந்த். யாரோடு போகிறேன், யாரோடு தங்குகிறேன் என்று கேட்டேன். யாரும் இல்லை. தனியே ஒரு டிராவல் டூரில் போய் வரப் போகிறீர்கள் என்றார் அவர். என் கையில் செல்போன் கிடையாது. தோள்பையில் கால்பகுதி இதய நோய், ரத்த அழுத்த, நீரிழிவு நோய், தலைவலிகளுக்கான மாத்திரைகள்தான். கூட ஒருவருமில்லாமல் சமாளிக்க முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டு முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். உணவு ? பாஸ்டன் பயணம் வரை என் உணவு பிரச்சினைக்குரியதாக இருக்கவில்லை. ஒஹையோவில் அருள் வீடு, பிஸ்காட்டவேயில் முகுந்தராஜ்-பிரியா வீடு, பாஸ்டனில் பாலாவுடனும், எடிசனில் ராஜேஷுடனும் உடுப்பி, சரவண பவன் ஓட்டல்கள் என்று தினமும் ஒரு வேளையேனும் வழக்கமான தமிழக உணவை சாப்பிட்டுவிட முடிந்தது.
வெளியில் செல்லும்போதெல்லாம் சிக்கல்தான். நான் சைவத்திலும் செலக்டிவ் சைவன். முட்டை சாப்பிடுவேன். வெண்டைக்காயும் வெள்ளரியும் சாப்பிடமாட்டேன். பச்சையாக எந்தக் காயையும் சாப்பிடுவதில்லை. அமெரிக்காவில் வெஜிடேரியன் என்று கேட்டாலே இலை தழைகள், துண்டாக வெட்டிய பச்சைக் காய்கள் என்று சேலடைத்தான் நீட்டுகிறார்கள்.
முகுந்த் என்னை வாஷிங்டனுக்கு ஏற்றிவிட்ட டூர் பஸ்சையும் டூரையும் நடத்துபவர்கள் சீனர்கள். கைடாக வந்தது ஒரு சீன யுவதி. பஸ்சில் ஏறி உட்கார்ந்தால் முழுக்க முழுக்க சீனர்கள்! அசைவத்தில் பாம்பு தவளையெல்லாம் சாப்பிடுகிறவர்கள் !!
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 13
நீண்ட தூரம் நடந்து நடந்து களைத்திருந்ததால் பாஸ்டன் காமன்ஸ் பூங்காவின் பரந்த புல்வெளியில் படுத்து ஓய்வு எடுப்பது சுகமான அனுபவமாக இருந்தது. படுத்திருந்த புல்தரை சாதாரணமானதல்ல. சரித்திரப் புகழ் பெற்றது.
கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங் இந்தப் பூங்காவில் உரையாற்றியிருக்கிறார். 1969ல் ஒரு லட்சம் அமெரிக்க மக்கள் இங்கே திரண்டு வியட்நாமில் அமெரிக்கா நடத்தும் யுத்தத்தை கண்டித்திருக்கிறார்கள்.1728ல் தொடங்கிய இந்தப் பூங்காதான், உலகத்திலேயே முதலில் பொது மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட நகரப் பூங்கா.இதன் ஓரத்தில்தான் அமெரிக்காவின் முதல் நிலத்தடி ரயில்வே நிலையம் அமைந்திருக்கிறது.
அமெரிக்காவில் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கூர்மைப்படுத்தி, சமயத்தில் ஊதிப் பெரிதாக்கி, ஆவணப்படுத்தி வரலாற்றுச் சின்னமாக்கிக் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. பாஸ்டன் பாலா, கரூர் செந்தில்,ஆனந்த் ஆகியோருடன் நான் சென்ற ப்ரூடென்ஷியல் டவர் அப்படிப்பட்டதுதான். அமெரிக்காவின் பெரிய நகரங்கள் பலவற்றில் மிக உயரமான கட்டடங்கள் இருக்கின்றன. அதிஉயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து வேடிக்கை பார்க்க விரும்புவது மனித இயல்பு.
அப்படிப்பட்ட இரண்டு கட்டடங்களில் நான் ஏறிப்பார்த்தேன். ஒன்று பாஸ்டனில் இருக்கும் ப்ரூடென்ஷியல் டவர். இது 52 மாடிக்கட்டடம். இன்னொன்று நியூயார்க்கில் இருக்கும் உலகைலெயே உயரமான கட்டடம் என்ற பெயர் எடுத்திருந்த எம்பயர் ஸ்டேட் கட்டடம். இதில் 102 மாடிகள்.
பாஸ்டனில் 1964ல் கட்டப்பட்ட ப்ரூடென்ஷியல் டவரின் உச்சி மாடியில் வேடிக்கை பார்ப்பதற்கென்று கண்னாடி ஜன்னலுடன் வராந்தா இருப்பது தவிர, அந்த பகுதியையே ஒரு தகவல் தரும் கண்காட்சியாகவும் மாற்றியிருந்தார்கள். ஜன்னல்களை ஒட்டி நான்கு திசைகளிலும் நடந்து செல்லும்போது ஒவ்வொரு திசையிலும் என்ன பார்க்கிறோம், என்னென்ன முக்கிய இடங்கள் கண்ணில் தெரியக் கூடும் என்ற விவரங்களை எழுதி வைத்திருப்பது மட்டுமல்ல; ஆடியோவாகவும் ஒலிபரப்புகிறார்கள்.
அமெரிக்காவில் பல மியூசியங்களில் இந்த முறை இருக்கிறது. ஸ்பீக்கர் அல்லது ஹெட் போன் உள்ள செல்போன் சைசிலான ஒரு கருவியை நம்மிடம் கொடுத்துவிடுகிறார்கள். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பகுதிக்கு ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. அந்த எண்னை நம்மிடம் உள்ள கருவியில் அழுத்தினால், அதைப் பற்றிய விவரங்கள் ஒலிபரப்பாகின்றன.ப்ரூடென்ஷியல் டவரில் இந்த செவி வழி ஒலிபரப்பு ஆங்கிலம் தவிர, பிரெஞ்ச், ஜப்பானிய மொழிகளிலும் தரப்படுகிறது.
அங்கே ஒரு மினி தியேட்டரில் பாஸ்டன் நகர் பற்றிய ஒரு குறும்படமும் காட்டுகிறார்கள். இது தவிர நான்கு புற நடைப்பகுதியிலும் சுவர் நெடுக ஒரு கண்காட்சி இருக்கிறது. அமெரிக்கா என்பது முழுக்க முழுக்க வந்தேறிகளின் தேசம். யாரெல்லாம் எங்கிருந்தெல்லாம் வந்து இங்கே குடியேறியிருக்கிறார்கள் என்பதை சுவையாக இந்தக் கண்காட்சி சொல்கிறது. பாஸ்டன் நகரத்தின் வரலாறு, பாஸ்டனில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள், பாஸ்டனின் பிரப்லமான தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் எல்லாரைப் பற்றியும் இந்தக் கண்காட்சியில் விவரங்கள் உள்ளன.
சுற்றுலா என்பதை உணர்ச்சிக்கும் அறிவுக்கும் பயனுள்ளதாக ஆக்குவதுதான் அமெரிக்க சுற்றுலா இடங்களில் பின்பற்றப்படும் அணுகுமுறை. அறிவுக்கான விஷயங்களை சுவையாக தருவதன் மூலம், வெறும் பொழுதுபோக்குக்கு வரக் கூடியவர்களைக் கூட அதில் கவனம் செலுத்தத் தூண்டுகிறார்கள்.
டவர் கண்காட்சியில் டெலிபோனைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல் பாஸ்டன்வாசி என்று பெருமையாக சொல்லியிருக்கிறார்கள். பாஸ்டனில் இருக்கும்போதுதான் அவர் டெலிபோன் கருவிக்கான அடிப்படை சோதனையில் வெற்றி பெற்றார். யூ.கேவில் இருக்கும் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்தவரான பெல், கனடாவிலும் அமெரிக்காவிலும் வெவேறு காலங்களில் வசித்தார். நான்கு நாடுகளுமே அவரைத் தம்மவர் என்று கொண்டாடுகின்றன.
கிரஹாம் பெல்லின் அம்மா, மனைவி இருவருமே காது கேட்காதவர்கள். கிரஹாம் பெல்லின் தாத்தா காலத்திலிருந்தே குடும்பம் செவிப்புலன் இல்லாதவர்கள் தொடர்பான பேச்சு, ஒலி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. கிரஹாமின் அப்பா மெல்வில் இந்தத் துறையில் சாதனைகள் செய்தவர்.செவி கேளாதோர் மற்றவர்கள் பேச்சை உதடு அசைவிலிருதே புரிந்துகொள்ளும் முறையை வடிவமைத்துக் கற்றுத்தந்தார். அவர் செல்லும் நாட்டுக்கெல்லாம் கிரஹாம் பெல்லையும் அழைத்துச் சென்றார். பாஸ்டன் நகரில் செவி கேளாதோர் அமைப்பில் வேலை செய்ய தனக்குக் கிடைத்த வாய்ப்பை மகனுக்குக் கொடுக்கச் சொன்னார். அப்படித்தான் கிரஹாம் பாஸ்டன்வாசியானார். பாஸ்டனில் இருந்த அறிவுச் சூழல் கிரஹாம் பெல்லை தன் சோதனைகளில் தீவிரமாக ஈடுபட தூண்டியது. உலகப் புகழ் பெற்ற செவி கேளா வாய் பேசா அறிஞரான ஹெலன் கெல்லர், கிரஹாம் பெல்லின் மாணவியாக இருந்தவர்.
கம்பி வழியே மின் குறியிடுகள் மூலம் தந்தி அனுப்புவது போல, ஒலியையும் அனுப்ப முடியுமா என்பதே கிரஹாம் பெல் செய்துவந்த சோதனை. இதே சோதனையில் எலிஷா கிரே என்பவரும் ஈடுபட்டிருந்தார். ஏறத்தாழ ஒரே சமயத்தில் இருவரும் வெவ்வேறு வழிகளைக் கண்டுபிடித்துவிட்டனர். எலிஷா கிரேவின் முறை திரவக் கடத்தியைப் பயன்படுத்தி மின் அலைகளை வேறுபடுத்துவதாகும். கிரஹாம் பெல் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தினார்.
உரிமை பதிவு செய்யும் அலுவலகத்தில் பிப்ரவரி 14, 1876 அன்று இருவரும் விண்ணப்பங்களைக் கொடுத்தனர். யார் முதலில் கொடுத்தார் என்பது இன்று வரை சர்ச்சிக்கப்படுகிறது. பேடண்ட் உரிமை கிரஹாம் பெல்லுக்கே கிடைத்தது. பெல் மிகப் பெரிய கண்டுபிடிப்பாளர் என்பதில் சந்தேகமே இல்லை. காந்த அலைகள் மீது ஒலியைப் பதிவு செய்யும் சோதனையில் அவர் ஈடுபட்டார். ஆனால் தொடரவில்லை.அதே கோட்பாட்டில்தான் பின்னாளில் டேப், சி.டி. டி.விடி குறுந்தகடு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. மீதேனை எரிபொருளாகப் பயன்படுத்துவது பெல்லின் அணுகுமுறை. தாவரங்களிலிருந்தும் மனிதக் கழிவிலிருந்தும் மீதேனை எடுத்து எரிபொருளாக்கலாம் என்று பெல் செய்து காட்டினார். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.
பெல்லின் கண்டுபிடிப்புகள் பாஸ்டன் சோதனைக் கூடங்களில் நடந்தன என்பதால் பாஸ்டன் பெருமையடைவது நியாயம்தான். ஆனால் ஒரு பிரபலமோ ஒரு சாதனையோ சின்ன அளவில் தங்களுடன்/தங்கள் ஊருடன் தொடர்புகொண்டிருந்தாலும், அதை பெரிதாக்கிக் காட்டி பெருமைப்படுவது மனித/வணிக இயல்பு. விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் சொந்த ஊர் டெய்ட்டன், ஒஹையோ மாநிலம். ஆனால் விமானத்தை ஓட்டிக் காட்டிய இடம் கிட்டி ஹாக், வடக்குக் கரோலினா மாநிலம், இரு மாநிலங்களும் விமானம் கண்டுபிடித்தவர் எங்க ஆளு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அதே போல பாஸ்டன் டவர் கண்காட்சியில் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்தாக (அனெஸ்தீஷியாவாக) ஈதரை உபயோகப்படுத்தியது முதலில் எங்க ஊரில்தான் என்ற பெருமை சொல்லப்பட்டிருந்தது. இதுவும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். பாஸ்டனை சேர்ந்த வில்லியம் மார்ட்டன் எனபவர் பல் வைத்தியர்களிடம் உதவியாளராக இருந்தார். இவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. திருமணத்துக்குப் பின் மருத்துவம் படித்தாகவேண்டும் என்று பெண் வீட்டார் வற்புறுத்தியதால் ஹார்வர்ட் மெடிகல் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் படிப்பை முடிக்கவில்லை.
ஒரு நோயாளிக்கு பல் பிடுங்கும்போது ஈதர் கொடுத்தர். அது வலி தெரியாமல் இருக்கச் செய்ததைக் கண்டுபிடித்தார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பாஸ்டன் பொது மருத்துவமனை சர்ஜன் ஜான் காலின்ஸ் வாரன் என்பவர் மார்ட்டனை அழைத்து தன் நோயாளிக்கு ஈதர் கொடுக்கச் சொல்லி, நோயாளி எட்வர்ட் கில்பர்ட் அபாட்டின் கழுத்தில் இருந்த கட்டியை அகற்றினார்.இது நடந்தது 1846 அக்டோபர் 16ம் நாள்.
வலி தெரியாமல் இருக்கத் தான் கொடுத்த ஈதருக்கு லெதியான் என்று வேறு பெயர் சூட்டி மார்ட்டன் ஒரு பேட்டண்ட் உரிமை வாங்கினார். ஆனால் இதர மருத்துவர்களுக்கெல்லாம் லெதியான் என்று எதுவும் கிடையாது என்பது தெரியும். அவர்கள் ஈதரைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். மார்ட்டன் தன் பேட்டண்ட் உரிமைக்காகவும் தான்தான் ஈதரை முதலில் மயக்க மருந்தாகப் பயன்படுத்திய பெருமைக்குரியவன் என்று ஸ்தாபிக்கவும் கடைசி வரை போராடிக் கொண்டே இருந்தார். ஆனால் ஜார்ஜியாவைச் சேர்ந்த
மருத்துவர் கிராஃபோர்ட் லாங் 1846க்கு முன்பிலிருந்தே ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் அதை விளம்பரப்படுத்தவில்லை.
மார்ட்டனை கௌரவிக்கவேண்டுமென்று பாஸ்டனில் சிலர் கமிட்டி அமைத்து முயற்சி செய்தார்கள். அதெல்லாம் வெற்றி பெறவில்லை. மார்ட்டன் முழுக்க மோசடி ஆசாமியும் இல்லை. ஒரு யுத்தத்தில் 2000 சிப்பாய்களுக்கு ஈதர் கொடுத்து ஆபரேஷனுக்கு உதவியிருக்கிறார். பாஸ்டன் பூங்காவில் அனெஸ்தீஷியாவைக் கண்டுபிடித்தவர் சிலை என்று ஒரு மருத்துவர் சிலையும் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சிலைக்குப் பெயர் கிடையாது. ஈதர் நினைவுச் சின்னம் என்று அதற்குப் பெயர். நம்ம ஊர் ஆள் என்று ஒருத்தரைக் கொண்டாடியும் கொண்டாட முடியாத நிலைமை இது.
பாஸ்டனில் நான் பார்த்த வேறு ஒரு முக்கியமான நினைவுச் சின்னம் நம்ம ஊர் ஆள் என்று சொல்லமுடியாத யூதர்களுக்கானது. அமெரிக்காவில் வந்தேறியவர்களில் யூதர்கள் முக்கியமானவர்கள். அங்கு யூதர்களின் அரசியல், சமூக செல்வாக்கு மிகப் பெரியது. பல சுற்றுலா இடங்களில் யூதர்கள் ஹிட்லரால் அழிக்கப்பட்டதை நினைவுபடுத்தும் குறிப்புகள் ஏதேனும் ஒரு வடிவத்தில் இடம் பெறுகின்றன.
பாஸ்டனில் இருக்கும் நினைவுச்சின்னம் சதுர வடிவிலான ஆறு கண்ணாடி கோபுரங்கள். ஆறு என்பது அழிக்கப்பட்ட ஆறு மில்லியன் யூதர்களைக் குறிக்கும். ஆறு சித்ரவதை முகாம்கள் ஹிட்லரால் நடத்தப்பட்டன. இந்தக் கொடுமைகள் ஆறு வருடங்கள் நடந்தன. கோபுரங்களில் பல்வேறு எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தரையில் பாதை நெடுக ஹிட்லரின் கொடுமைகள் பற்றிய குறிப்புகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
யூதர்களை,கறுப்பினத்தவரை வெறுக்கும், வெள்ளையர்களே மேன்மையானவர்கள் என்ற நிற/இன வெறி உடைய குழுக்களும் அமெரிக்காவில் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவரான லியோ ஃபெல்ட்டன், தன் சிநேகிதி எரிக்காவுடன் சேர்ந்து பாஸ்டன் யூத நினைவுச் சின்னத்தை 2005ல் குண்டு வைத்துத் தகர்க்க திட்டமிட்டான். ஒரு கடையில் கள்ள டாலர் நோட்டைக் கொடுத்து மாற்ற முயற்சித்தபோது இருவரும் போலீசிடம் மாட்டிக் கொண்டார்கள். லியோவுக்கு 26 வருடம் சிறை தண்டனை தரப்பட்டது. எரிக்காவுக்கு வெறும் 57 மாதங்கள்தான். அவள் மனம் மாறி தன் நிறவெறிக் கருத்துகளுக்கு வருத்தப்படுவதாக அறிவித்துவிட்டாள். கருவுற்றிருந்த அவள் குழந்தை பெறுவதற்காக சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டாள்.
யூத நினைவுச் சின்னத்திலிருந்து நடக்கும் தொலைவில்தான் இருக்கிறது பாஸ்டன் துறைமுகம். பிரபலமான டீ பார்ட்டி கலகம் நடந்த துறைமுகம். நான் துறைமுகத்தை வெளியிலிருந்து பார்த்தேன். டீ பார்ட்டி கலகம் நடந்தது 1773ல்.. ஆனால் அதைக் குறியீடாகக் கொண்டு இப்போது டீ பார்ட்டி இயக்கம் அமெரிக்காவில் நடந்து வருகிறது. ஒபாமாவுக்குத் தலைவலியாக இருக்கும் இந்த இயக்கம் யார்? என்ன சொல்கிறது ?
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 12
கட்டடக் கலைஞர் சார்லஸ் மெக்கிம் கட்டிய பாஸ்டன் நூலகக் கட்டடம் அவர் பெயராலேயே இன்று அழைக்கப்படுகிறது. பழைய ரோமாபுரி, பாரிஸ் நகரங்களின் கட்டடக் கலை பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் பிரும்மாண்டமான கட்டடத்தில் நுழைவாயிலின் படிக்கட்டுகளின் இருபுறமும் கலை, அறிவியல் இரண்டையும் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. எல்லாமே பிரும்மாண்டம்தான்.
முகப்புகளில் சில பொன்மொழிகள் கல்லில் பொறித்திருக்கின்றன. அதில் ஒன்று – ‘ஒழுங்கையும் சுதந்திரத்தையும் காப்பாற்றுவதற்கு மக்களுக்குக் கல்வி தேவை’ என்பதாகும். பாஸ்டன் நூலகத்தில் மொத்தமாக 89 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. டேப், வீடியோ, குறுந்தகடு போன்ற இதர வடிவத்தில் உள்ள கல்விக் கருவிகளை சேர்த்தால் மொத்தம் 2 கோடி பொருட்கள்.ஒரு சமயத்தில் ஒரு கோடி பொருட்கள் வெளியே புழக்கத்தில் வாசகர்களிடம் இருக்கின்றன.
பாஸ்டன் நூலகத்தைப் பயன்படுத்திய படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் கலீல் கிப்ரான்.(1883-1931). லெபனானைச் சேர்ந்த கிப்ரான் கவிஞர் மட்டுமல்ல. ஓவியரும் கூட. பாஸ்டனில்தான் அவர் வளர்ந்தார். படித்தார். வாழ்ந்தார். அவர் அம்மா தையல் வேலை பார்த்து அவரைப் படிக்க வைத்தார். அம்மாவும் குடும்பத்தினரும் நோயில் இறந்தபின், எஞ்சிய ஒரு சகோதரி தையல் வேலை செய்து கிப்ரானைக் காப்பாற்றிவந்தார். பின்னால் பெரும் புகழடைந்த கலீல் கிப்ரான், தான் படித்த பாஸ்டன் நூலகத்துக்குப் பெரும் நன்கொடையை அளித்திருக்கிறார். நூலகத்துக்கு எதிரே அவருக்கு ஒரு நினைவிடம் இருக்கிறது.
பாஸ்டன் நூலகக் கட்டடத்தில் படிப்பறைகள், கம்ப்யூட்டர் அறைகள் ,ஓவிய கேலரிகள், சொற்பொழிவு அறைகள் எல்லாமே விசாலமாகவும் பிரும்மாண்டமாகவும் இருக்கின்றன. தினமும் ஏதாவது நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், சொற்பொழிவுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. பிரதான படிப்பறையின் கூரையை ஏறிட்டுப் பார்த்தால் அதுவே ஒரு கலை பொக்கிஷமாக இருக்கிறது. படிக்க விரும்பும் ஒருவருக்கு அருமையான சூழல்.
பொது மக்கள் யாரும் இங்குள்ள கணினிகளைத் தொடர்ச்சியாகப் 15 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம். இண்ட்டர்நெட் இணைப்பும் உண்டு. நானும் பயன்படுத்தி ஈமெயில்களைப் பார்த்தேன். பாஸ்டன் நூலகத்தைப் பயன்படுத்திய இன்னொரு படைப்பாளி என்ற பெருமையை அடைந்தேன். அமெரிக்க நூலகங்களிலேயே முதல்முறையாக கம்பியில்லா இண்ட்டர்நெட் இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது பாஸ்டன் நூலகம்தான். உள்ளூர் முனிசிபாலிட்டி நிர்வாகத்தில் ஒரு பிரும்மாண்ட நூலகம் தொடங்கப்பட்டதிலும் இதுதான் முதல்.
பாஸ்டன் நூலகத்தின் கீழ் மொத்தம் 26 கிளைகள் உள்ளன. அதாவது மொத்தம் 7 லட்சம் மக்கள் தொகைக்கு இத்தனை நூலகங்கள் ! இதுதான் அமெரிக்காவின் சிறப்பு.
அமெரிக்காவின் இன்னொரு சிறப்பு எந்த இடத்தையும் சுற்றுலாவுக்கு உரிய இடமாக ஆக்கிக் கொள்வது. சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் சட்டமன்றக் கட்டடத்தை சுற்றிப் பார்க்க விரும்புவது அபூர்வம். இத்தனைக்கும் கோட்டையில் ராணுவத்தின் அருமையான மியூசியம் இருக்கிறது. அதைக் கேள்விப்பட்டு அங்கே செல்பவர்கள் கூட நம் சட்டமன்றம் எப்படி நடக்கிறது, அது எப்படி இருக்கும் என்று பார்க்கச் செல்வதும் இல்லை. விரும்பினாலும் லேசில் அனுமதி கிடைக்காது. புதிதாகக் கட்டியிருக்கும் தண்ணீர் தொட்டி வடிவ கட்டடத்தைப் பார்க்கக் கட்சிக்காரர்கள்தான் ஆசைப்படுவார்கள்.
அமெரிக்காவில் மாநில சட்டமன்றங்களை சுற்றுலா பயணிகள் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கென்றே தனி சுற்றுலா டூர்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் நான் எந்த விளம்பரத்திலும் புனிதஸ்தலங்களுக்கு சுற்றுலா என்ற அறிவிப்பைப் பார்க்கவில்லை. பொழுதுபோக்கு இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடங்கள் ஆகியவையே சுற்றுலாவுக்கு விளம்பரப் படுத்தப்படுகின்றன. மக்களாட்சியின் கேந்திரங்களான சட்டமன்றக் கட்டடங்கள் அமெரிக்காவில் வரலாற்றுச் சிறப்புள்ளவையாகக் கருதப்படுகின்றன.
பாஸ்டனில் இருக்கும் மாசசூசெட்ஸ் மாநில சட்டமன்றக் கட்டடத்துக்கு ஆனந்த் என்னை அழைத்துச் சென்றார். திருப்பதி கோவிலிலும் சிதம்பரம் கோவிலிலும் நாம் தங்கக் கலசம், கூரை வேய்ந்திருக்கிறோம். மாசசூசெட்ஸ் ஸ்டேட் ஹவுசுக்கு தங்கக் கும்பம் வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் செம்பில் இருந்ததை மாற்றித் தங்கம் வேய்ந்திருக்கிறார்கள்.
ஸ்டேட் ஹவுஸ் கட்டடம் உள்ள இடம் முதலில் மாடுகள் மேய்ப்பதற்கான புல்வெளியாக இருந்திருக்கிறது. மாட்டுப் பண்ணையின் சொந்தக்காரர் ஜான் ஹேன்காக் அமெரிக்க விடுதலைப் போராட்ட வீரர். அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தில் முதல் கையெழுத்து இவருடையதுதான். தன் நிலத்தை சட்டசபை கட்டுவதற்காக 1798ல் கொடுத்தார்.
அமெரிக்க அரசியல் சட்டம் உருவாவதற்கும் முன்பே மாசசூசெட்ஸ் மாநிலம் தனக்கான சட்டத்தை எழுதி வைத்திருந்தது. உலகிலேயே எழுதி வைக்கப்பட்ட முதல் அரசியல் சட்டம் இதுதான். இப்போதும் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் ஒரு சட்டம் இயற்றவேண்டுமென்று மனு கொடுக்கும் உரிமை எல்லா பிரஜைகளுக்கும் உண்டு. மனுவை ஒரு கமிட்டி பரிசீலித்து ஏற்றுக் கொண்டதும், ஒரு சபை உறுப்பினர் சபையில் அறிமுகப்படுத்துவார். விவாதம், வாக்கெடுப்புக்குப் பின் சட்டம் நிறைவேறலாம். நிராகரிக்கப்படலாம்.
சட்டமன்றக் கட்டடத்தை எங்களுக்கு சுற்றிக் காட்டிய கைடு ஒரு பள்ளி மாணவர். அறிவியலில் மேல் படிப்பு படிப்பதற்கான செலவுக்குச் சம்பாதிப்பதற்காக இந்த பகுதி நேர வேலை செய்கிறார். ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் அவர் விளக்கிச் சொன்னதும், நாம் கேட்கும் குறுக்குக் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லும் திறமையுடன் இருக்கிறார். அதற்கான பயிற்சி முதலிலேயே தரப்படுகிறது. எனக்குத் தெரியாது என்ற பதிலுக்கு பதிலாக, இந்த இடத்தில் தேடினால் உங்களுக்கு இதற்கான பதில் கிடைக்கும் என்பது போன்ற பதில்களே வருகின்றன.
சட்டப் பேரவை மண்டபத்தில் பார்வையாளர் கேலரிக்கு மேலே மாடத்தின் கூரையில் ஒரு பெரிய மீன் சின்னம் வைக்கப்பட்டிருக்கிறது. இதை 1784ல் பரிசளித்தவர் ஜோனாதன் ரோவ் ஒரு மீன் வியாபாரி. மாசசூசெட்ஸ் மாநிலத்தின் பொருளாதாரத்தில் மீன் வர்த்தகம் பெரும் பங்காற்றுவதைக் குறிக்க இந்தப் பரிசு. ஒரு முறை விளையாட்டாக ஹார்வர்ட் மாணவர்கள் இந்த மீன் சின்னத்தைத் திருடிக் கொண்டு போய்விட்டார்களாம். திருப்பிக் கொடுத்துவிட்டால்,வேறு நடவடிக்கை எடுக்கப்படாது என்று அவைத்தலைவர் அறிவித்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டார்களாம். பாஸ்டன்தான் ஜான் எஃப் கென்னடியை அரசியல் தீவிரப்படுத்திய இடம். ஸ்டேட் ஹவுசில் லிங்கன் தவிர கென்னடிக்கும் சிலை இருக்கிறது.
ஸ்டேட் ஹவுஸில் பல பெரிய கூடங்கள் இருக்கின்றன. ஒரு கூடத்தில் சிப்பாய்க்கு சிகிச்சை செய்யும் நர்சின் சிலை பெரிதாக வைக்கப்பட்டிருக்கிறது. சிவில் யுத்தத்தின்போது நர்சுகள் ஆற்றிய பணியைப் போற்ற இந்த சிலை. இந்த கூடத்துக்கே நர்சுகள் கூடம் என்று பெயர்.
இதன் சுவர்களில் பாஸ்டன் டீ பார்ட்டிக் கலகம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் சுவரில் புடைப்போவியங்களாக சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. கடத்தல் பொருட்களைத் தேடுவதற்காக யார் வீட்டிலும் முன் அனுமதி இல்லாமல் பிரிட்டிஷ் சிப்பாய்கள் நுழையலாம் என்ற சட்டத்தை எதிர்த்து 1761ல் ஃபீஸ் வாங்காமல் வாதாடினார் ஜேம்ஸ் ஓட்டிஸ். அவர் கோர்ட்டில் வாதாடும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு கூடத்தில் போருக்கு சென்ற ராணுவக்குழுக்கள் வெற்றிகரமாகத்திரும்பி வந்து தங்கள் கொடிகளை ஆளுநரிடம் ஒப்படைத்ததன் அடையாளமாகக் கொடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மாநிலத்தின் 351 நகர்களின் கொடிகளும் இன்னொரு கூடத்தில் உள்ளன. செனட் ஹவுசில் 1838ல் செனட்டர் ஆஞ்செலினா க்ரிம்கே ஆற்றிய உரையின் நினைவாகக் குறிப்பு இருக்கிறது. அமெரிக்க சட்டமன்றத்தில் முதலில் பேசிய பெண் அவர்தான். அது மட்டுமல்ல முதல் உரையே அடிமை முறையை ஒழிப்பது பற்றியாகும்.
மாசசூசெட்ஸ் சட்டமன்ற வளாகத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறு பெண்களின் படங்களுக்க ஒரு சுவர் ஒதுக்கப்பட்டது. அறுவரும் சமூகப் போராளிகள். டாரதி டிக்ஸ் மன நலம் குன்றிய ஏழை நோயாளிகளுக்கான முதல் அமெரிக்க விடுதிகளை ஏற்படுத்தியவர். லூசி ஸ்டோன் மாநிலத்தின் முதல் பெண் பட்டதாரி. அடிமை முறையை எதிர்த்து பெண்கள் ஓட்டுரிமையை ஆதரித்துப் போராடியவர். பெண்கள் தலைமுடியை வெட்டிக் கொள்வதையும் பேண்ட் அணிவதையும் அறிமுகப்படுத்தியவர்.
திருமணத்துக்குப் பின் கணவர் பெயரால் அறியப்படுவதை மாற்றியவரான சாரா பார்க்கர் கறுப்பினப் போராளி. டாக்டரான சாரா உலகம் முழுவதும் சுற்றி அடிமை முறைக்கெதிராகப் பிரசாரம் செய்தார். ஜோசபின் ரஃபின் கறுப்பினப் பெண்களுக்கான முதல் பத்திரிகையான விமன்ஸ் ஈராவை தொடங்கி நடத்திய பத்திரிகையாளர். மேரி கென்னி புத்தக பைண்டராகத்தொடங்கி பெண் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்தை உருவாக்கி பல சட்ட உரிமைகள் வருவதற்குப் போராடியவர்.
பிளாரன்ஸ் லஸ்கோம்ப் எம்.ஐ.டியில் படித்த முதல் பெண் கட்டடக் கலைஞர். பெண் என்பதால் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ள பதினாறு கம்பெனிகள் மறுத்தன. போராடி படித்த பிளாரன்ஸ், பெண்களின் வாக்குரிமைக்கான இயக்கத்தில் தீவிரமாக இருந்தார்.அங்கே சட்டமன்றங்களில் இப்படிப்பட்ட பெண்களைப் போற்றி சிலை வைக்கிறார்கள். இங்கே உயிரோடு இருக்கும்போதே தன் படத்தை மாட்ட அவசரம் காட்டும் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். ஒரு முத்துலட்சுமி ரெட்டிக்கோ, மூவலூர் ராமாமிர்தத்துக்கோ சட்டப் பேரவையில் சிலைகள் உண்டா? இல்லையே.
கட்டடத்தின் பல பகுதிகளை சுற்றிப் பார்த்தபின், மாநில ஆளுநர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். அங்கே ஆளுநர் என்பவர் நம் முதலமைச்சருக்கு சமம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் சென்றபோது ஆளுநர் அவர் அறையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கதவுக்கு மறுபுறம் உள்ள வராந்தா வரை நாங்கள் சென்றோம்.மிரட்டுகிற செக்யூரிட்டிகள், கெடுபிடி செய்யும் பி.ஏக்கள், கரை வேட்டிபந்தாக்கள் எதுவும் இல்லாமல் இங்கேயும் இப்படி ஒரு முதல்வர் அறை வரை பொதுமக்கள் செல்ல முடிந்தால்தான் இது உண்மையில் ஜனநாயகம். இப்போதைக்கு வாய்ப்பே இல்லை.
பாஸ்டன் ஹவுசிலிருந்து வெளியே வந்தால் எதிரே அழகான பூங்கா. பரப்பளவு 50 ஏக்கர். காமன்ஸ் பார்க் என்ற இந்த இடத்தில்தான் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் முகாமடித்துத் தங்கியிருந்தார்கள். ஒரு காலத்தில் இந்த பூங்காவில்தான் பொது மக்கள் முன்னால் தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்கள். கடவுளுடன் தொடர்பு கொள்ள நேரடியாக பைபிளைப் படித்தால் போதும்; இடைத்தரகர்களாகப் பாதிரிகள் தேவையில்லை என்று கருதிய ஒரு மதக் குழுவைச் சேர்ந்தவர் மேரி டயர். இது அப்போது குற்றமாகக் கருதப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரு முறை மன்னிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டபோதும் மேரி திரும்பித் திரும்பி மாசசூசெட்சுக்கு வந்து தன் கருத்தைப் பிரசாரம் செய்தார். 1660ல் மக்கள் முன்னால் இந்தப் பூங்காவில் தூக்கிலிடப்பட்டார்.
ஆனந்தும் நானும் இந்த சரித்திரப் புகழ் பெற்ற பூங்காவின் புல்வெளியில் சந்தோஷமாக இளைப்பாறினோம்.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 11
சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் குதிரை வண்டிகள் கூடப் பெரு நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓடுகின்றன . பாஸ்டன் குவின்சி மார்க்கெட் சதுக்கத்தருகே நிறைய குதிரை வண்டிகள் நிற்கின்றன. அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர் சரோஜாதேவி பயணித்த பாணியிலான அலங்கார வண்டிகள். நம் ஊரில் குதிரை, குதிரை வண்டியோட்டி இருவருமே வத்தலும் தொத்தலுமாகத்தான் இருக்கிறார்கள். அங்கே இருவருமே பார்க்க வளமாகவே இருக்கிறார்கள்.
பாஸ்டனில் சந்தைப் பகுதியில் நிறைய தெருக் கலைஞர்களைப் பார்த்தேன். சில நகராட்சிகள் ஆண்டுக்கு இத்த்னை டாலர் லைசன்ஸ் கட்டணம் என்று விதித்து அவர்களுக்கு பெர்மிட்டுகள் தருகின்றன. தனி நபராகப் பாடியபடி இசைக்கருவியை வாசிப்பவர்கள் உண்டு. குழுவாக நடனங்கள் செய்வோர் உண்டு. மேஜிக், கரணங்கள் என்று விதவிதமான வித்தைக்காரர்கள் உள்ளனர். அமெரிக்காவின் பல நகரங்களில் இப்படித் தெருக் கூத்தாடிகளைப் பார்க்கலாம். நமக்கும் இப்படிப்பட்ட மரபுகள் இருந்து இப்போது ஏறத்தாழ அழிந்துவிட்டன.
தெருவில் வந்து நின்று தன் கலை வெளிப்பாட்டை மட்டுமல்ல, கருத்தை வெளிப்படுத்தவும் அமெரிக்காவில் உரிமை உண்டு. ஓவியங்கள், அறிவிப்புத் தாட்கள் என்று எதையும் காட்சிப்படுத்தலாம். நடைபாதைகளில், பூங்க்காக்களில், சதுக்கங்களில், அவ்வளவு ஏன் ஓட்டல், ரெஸ்டாரண்ட் போல தனியாருக்குச் சொந்தமான இடமாக இருந்தாலும் கூட, அந்தத் தனியாரின் வேலையை பாதிக்காமல் அந்த இடத்தில் தெருக் கலைஞர் இயங்கலாம் என்று சட்டப்படியான உரிமைகள் இருக்கின்றன. தங்கள் உரிமைகளுக்காக ஒவ்வொரு நகரத்திலும் தெருக் கலைஞர்கள் அவ்வப்போது நீதிமன்றம் சென்று கருத்துச் சுதந்திர உரிமையை நிலைநாட்டியிருக்கிறார்கள்.
மாபெரும் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் நம் நாட்டிலோ, பூங்காக்களில் புல் தரையில் நடக்கக் கூட அனுமதி கிடையாது. மெரினாவில் புல்தரையில் காலை வைப்பவர்களைத்துரத்துவதற்கென்றே ஒரு காவலாளி புல்லிலேயே நிற்கவைக்கப்பட்டிருக்கிறார். புல்வெளியில் நடந்து போய் உட்கார்ந்து அனுபவிக்காமல், எட்டி நின்று பார்த்துவிட்டுச் செல் என்று சொல்லும் பாசிசம் இங்கேதான் இருக்கிறது. காலை 11 மணிக்கு பூங்காவைப் பூட்டி விடுகிறார்கள். மாலை 3 மணிக்க்த்தான் திறப்பார்கள். மறுபடி எட்டு மணிக்குப் பூட்டுவார்கள். அமெரிக்காவில் பூங்காக்கள் காலை 5 முதல் இரவு 11 வரை திறந்தே இருக்கின்றன.
இங்கே எந்த தெருமுனையிலோ, நடைபாதை ஓரத்திலோ ஒருவர் ”நான் பஸ் கட்டண உயர்வை கண்டிக்கிறேன்” என்று ஒரு அட்டையில் எழுதி தன் தோளில் தொங்க விட்டுக் கொண்டு பத்து நிமிடம் கூட நிற்கமுடியாது. உடனே போலீஸ் வந்து அவரைத் துரத்திவிடும். ” செயற்கை குளிர்பானங்களைக் குடிக்காதீர்கள். மோர் குடியுங்கள்” என்று சாதுவான ஒரு வேண்டுகோள் அட்டையைக் கூட அணிந்து நிற்க விடமாட்டார்கள்.
பாஸ்டனில்தான் புகழ் பெற்ற எம்.ஐ.டி எனப்படும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெல்க்னாலஜி என்ற உயர் அறிவியல் கல்வி நிறுவனம் இருக்கிறது. அங்கேதான் சிறப்புப் பேராசிரியராக நோம் சாம்ஸ்கி இருக்கிறார். மொழியியல் துறையில் பேரறிஞராகக் கல்வித் துறையில் கருதப்படும் சாம்ஸ்கி, அமெரிக்க அரசின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் விமர்சகராக உலகம் முழுவதும் அறியப்பட்டிருப்பவர். இது போல ஒருத்தரைக் கூட நம் பலகலைக்கழகங்களில் பார்க்க முடியாது. அரசியல்வாதி உளறினால் அதை இலக்கியம் என்றும் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்பப்போகிறோம் என்றும் சொல்லக் கூடியவர்களையே துணை வேந்தர்களாக சில கோடி ரூபாய் விலையில் நியமிக்கும் அவலத்தில் நம் நாடு இருக்கிறது.
பாஸ்டனின் கல்விச் சூழல் புகழ் பெற்றது. அமெரிக்காவின் கல்லூரி நகரம் என்ற பெயர் எடுத்திருக்கும் பாஸ்டன்தான் அமெரிக்காவிலேயே மிக அதிகமான பட்டதாரிகளை தயார் செய்யும் நகரம். இங்கேதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகம் இருக்கிறது. வயது 364….!
கிறித்துவ இறையியல் படிப்பு படித்த ஜான் ஹார்வர்ட் என்பவர் பெயர் பல்கலைக் கழகத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இவர் முப்பது வயதிலேயே இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்னால் தன் நண்பர் ஈட்டன் பணி புரிந்த நியூகாலேஜுக்கு தன் சொத்தில் சரிபாதியையும் தன்னிடமிருந்த 320 நூல்களையும் நன்கொடையாக எழுதிவைத்தார். அப்போது கட்டிய கட்டடம், நூலகம் எல்லாம் 128 வருடங்கள் கழித்து பெரும் தீ விபத்தில் அழிந்தன. ஹார்வர்ட் கொடுத்த 320 புத்தகங்களில் ஒன்றே ஒன்றுதான் மிஞ்சியதாம். 1920களில் ஒரு சுருட்டு கம்பெனி தன் லேபிளில் ஹார்வர்ட் கல்லூரியின் நிறுவனர் என்று ஈட்டன் படத்தை வெளியிட்டிருக்கிறது.
முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கிறித்துவ இறையியல் சார்ந்ததாக இருந்தது. அதன் பின் மத சார்பற்ற பொதுக் கல்விக்கான இடமாகியது. ப.சிதம்பரமும் சுப்பிரமணியன் சுவாமியும் உயர் படிப்பு படித்தது இங்கேதான். அவர்கள் மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதிகளான ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி,ஜார்ஜ் புஷ், ஒபாமா, அறிஞர்கள் தோரோ, எமர்சன், விஞ்ஞான எழுத்தாளர் கார்ல் சாகன், கவிஞர் டி.எஸ்.எலியட், இப்போதைய ஐ.நா செயலாளர் பான் கி மூன், இந்திய சினிமா இயக்குநர் மீரா நாயர் என்று பலவிதமான பிரபலங்கள் இங்கே படித்திருக்கிறார்கள்.
இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் 75 பேர் இந்தப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடையவர்கள். ஹார்வர்டின் இன்னொரு சிறப்பு இதன் மொத்தம 20 ஆயிரம் மாணவர்களில் சரிபாதி பேர் பெண்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் மேல். அமெரிக்காவிலேயே பணக்காரப் பல்கலைக்கழகம் ஹார்வர்டுதான்.
பாஸ்டன் பாலா அறிமுகப்படுத்திய இளம் நண்பர் ஆனந்த் என்னை ஹார்வர்டுக்கு ரயிலில் அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் பல ஊர்களில் நான் ரயில் பயணம் மேற்கொண்டேன். சென்னை பீச்-செங்கற்பட்டு போல. நகரங்களுக்குள்ளேயும் புற நகரையும் இணைக்கும் ரயில்கள் சில. அவற்றில் பூமிக்கடியில் ஓடும் மெட்ரோ ரயில்களும் உண்டு. பெரு நகரங்களை இணைக்கும் ரயில்கள் சில – சென்னை-மும்பை போல. விதவிதமான் ரயில் நிலையங்களைப் பார்த்தேன். மிகச் சிறியவை முதல் மிக மிகப் பெரியவை வரை. நியூ ஜெர்சியின் எடிசன் ரயிலடியும் மெட்ரோபார்க்கும் சிறியவை. நியூயார்க்கின் நியூபென் பிரும்மாண்டமானது.
எல்லா ரயில் நிலையங்களும் தூய்மையானவை. டிக்கட்டை சோதித்து உள்ளேயோ வெளியேயோ செல்ல அனுமதிக்கும் இடங்களில் எல்லாம் சோதிக்க மனிதர்கள் இல்லை. இயந்திரக் கதவு டிக்கட்டை செருகினால் மூடி திறக்கிறது. பெரிய ரயில் நிலையங்களில் இருக்கும் உணவகங்கள் முதல் பத்திரிகைக் கடைகள் வரை எல்லாவற்றிலும் ஒழுங்கும் வசதியும் நிறைந்திருக்கின்றன.
ரயில்களின் உட்பகுதி, நகர்ப்புற ரயில்களில் நிறைய பேர் நிற்பதற்கான வசதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் இருக்கைகளில் நிம்மதியாக வசதியாக உட்கார்ந்து தூங்கலாம், படிக்கலாம். கணிணியில் வேலை செய்யலாம். கழுத்து, முதுகு வலிகள் வரும் வாய்ப்பு குறைவு.
ஹார்வர்ட் ரயிலடியில் இறங்கி சில நூறடிகள் நடந்தால் ஹார்வர்ட் பல்கலைக்ககழகம் வந்துவிடுகிறது. எனக்கு நான் படித்த சென்னை கிறித்துவக் கல்லூரிதான் நினைவுக்கு வந்தது. தாம்பரம் ரயிலடியில் இறங்கி சில நூறடி தூரத்தில் என் கல்லூரி. மரங்கள் நிறைந்த வளாகம். ஹார்வர்டும் அது போலவே இருந்தது. ஆனால் கட்டடங்கள் எல்லாம் பிரும்மாண்டமான கட்டடங்கள். நூலகத்தின் தோற்றமே அறிவின் கம்பீரத்துக்கு அடையாளம் போல இருந்தது. நம் பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி வளாகங்களுக்குள் நுழைந்ததுமே கண்ணுக்குத் தெரியாமல் அதிகாரத்தின் பார்வை நம்மை நோக்கி நீண்டிருப்பதை உணரமுடியும். காற்றிலேயே அதிகாரத்தின் உஷ்ணம் கலந்து வீசும். அமெரிக்க கல்வி வளாகங்களில் அப்படிப்பட்ட இறுக்கம் என்னால் உணரப்படவில்லை. மாணவர்கள் இயல்பாக எந்த பதற்றமும் இன்றி நடமாடிக் கொண்டிருந்தார்கள். பல்கலைக்கழகத்தை சுற்றிப் பார்க்க குழுக்களாக வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே கைடுகளின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டு நின்றார்கள். முன்கூட்டி ஏற்பாடுகள் செய்யாததால் என்னால் எந்த வகுப்பறைக்கும் சென்று பார்க்க முடியவில்லை. வராந்தாக்களில் மட்டுமே சுற்றினேன்.
பல்கலைக்கழகத்திலிருந்து சற்று நடந்து ஹார்வர்ட் நகர மையத்துக்குச் சென்றோம். அங்கே மூன்று நான்கு பிரும்மாண்டமான புத்தகக்கடைகள் இருந்தன. ஒவ்வொன்றையும் சுற்றிப் பார்க்கவே நிறைய நேரம் தேவைப்பட்டது. இதற்கு முன்பு பாஸ்டன் நகரத்துக்குள் பார்ன் அண்ட் நோபிள்ஸ் புத்தகக்ககடைக்கு பாலாவுடன் சென்றிருந்தேன். நகர்ப் பகுதியிலேயே பழைய புத்தகங்கள் மட்டும் விற்கும் ஒரு கடையையும் பார்த்தேன். நம்மை விடப் பல மடங்கு குறைவான மக்கள் தொகை உடைய அமெரிக்க ஊர்களில் இருக்கும் புத்தகக் கடைகள் நம்முடைய மிகப் பெரிய கடைகளை விடப் பெரிதாக இருக்கின்றன. நம் ஊரில் எந்தப் புத்தகக் கடைக்குச் சென்றாலும் வாஸ்து, ஜோதிடம், சமையல், தன் முன்னேற்ற நூல்கள் என்ற நான்கு தலைப்புகளில் நிறையய நூல்கள் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அமெரிக்கப் புத்தகக்கடைகளில் இப்படிப்பட்ட போக்கு எதுவும் காணப்படவில்லை. இந்தத்துரைகளிலும் நூல்கள் இருக்கின்றன. ஆனால் அவையே நம் கவனத்தை ஈர்க்கும் அளவு ஆக்ரமிப்பது போல் பெரும் சதவிகித இடத்தை எடுப்பதில்லை. எல்லா துறைகள் தொடர்பாகவும் பல அருமையான ஆழமான நூல்களைக் காண முடிகிறது.
குறிப்பாக ஹார்வர்ட் பலகலைக்கழகம் அருகே இருந்த புத்தகக்கடைகள் ஒவ்வொன்றும் ஒரு மாணவருக்கும், வாசகருக்கும் பொக்கிஷம் போன்றவை. சென்னையிலோ, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை என்று பல்கலைக் கழகங்கள் இருக்கும் எந்தத் தமிழக ஊரிலும் பல்கலைக்கழகம் அருகே இப்படி ஒரே ஒரு புத்தகக் கடை கூட நம்மிடம் கிடையாது. டாஸ்மாக் கடைகள் தவறாமல் இருக்கின்றன.
அடுத்து பாஸ்டன் பொது நூலகத்துக்கு ஆனந்த் அழைத்துச் சென்றார்.
சுமார் 160 வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட பாஸ்டன் நூலகத்துக்கான பிரும்மாண்டமான கட்டடத்தை 110 வருடங்கள் முன்னால் கட்டியபோது அதை ”மக்களுக்கான அரண்மனை” என்று வர்ணித்தார்கள்.
சரியான வர்ணனை…. ! எதற்கும் பயன்படாமல் இருக்கிற பிரும்மாண்டங்களின் கலையழகைப் போற்றி ஆயிரமாவது வருட விழா கொண்டாடுகிறோம். என்றைக்கும் பயனபடக்கூடிய இடங்களை தண்னீர் தொட்டி வடிவத்திலும், கான்க்ரீட் தீப்பெட்டி மாதிரியும் துளியும் கலை ரசனையே இல்லாமல் கட்டுகிறோம். பாஸ்டன் நூலககக் கட்டடம் ஓர் உண்மையான அறிவாலயம்….கோவில், அரண்மனைகளின் பிரும்மாண்டத்தோடு என்னை வரவேற்ற அதன் படிக்கட்டுகளில் ஏறுகிறபோதே அறிவைப் போற்றும் இடத்தின் உனர்வை காற்றில் உணர்ந்தேன்.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 10
பாஸ்டன் நகரம் அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்திருக்கும் நகரம். பாஸ்டன் படுகொலைகளும், பாஸ்டன் டீ பார்ட்டி எனப்படும் கலகமும்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தின. பாஸ்டனில் நான் சுற்றிப்பார்த்த ஒவ்வொரு இடமும் வரலாற்றில் ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கிறது.
பாஸ்டன் சுங்க அலுவலகம் வாசலில் காவலில் இருந்த பிரிட்டிஷ் சிப்பாயுடன், ஒரு கடைக்காரரின் வேலையாளுக்கு ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் வாய்த் தகராறு முற்றி, பெரும் மக்கள் கூட்டம் அங்கே திரண்டு, சிப்பாய்களுக்கு எதிரான கல்வீச்சில் ஈடுபட்டது. சிப்பாய்கள் சுட்டதில் ஐந்து பேர் இறந்தார்கள். மார்ச் 5,1770ல் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம், நகரில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் இருப்பது பற்றி, உள்ளூர்வாசிகளுக்குத் தொடர்ந்து இருந்து வந்த வெறுப்புதான். இதையடுத்து பிரிட்டிஷ் சிப்பாய்கள் நகருக்கு வெளியே அனுப்பப்பட்டார்கள். விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த சம்பவத்தில் ஆச்சரியமான விஷயம், விடுதலைப் போராட்ட வீரர் ஜான் ஆடம்ஸ் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சிப்பாய்கள் சார்பாக, வாதாடியதுதான். இவர்தான் அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியாக பின்னாளில் இருந்தவர்.சிப்பாய்கள் துப்பாக்கிச்சூடு செய்வதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் கொலை செய்யும் நோக்கில் சுடவில்லை. தங்கள் தற்காப்புக்காகத்தான் சுட்டார்கள் என்று வாதாடி, அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்காமல் செய்தார் ஆடம்ஸ்.
இப்போதும் ஆண்டுதோறும் மார்ச் 5 அன்று, சுங்க அலுவலகம் வாயிலில் பாஸ்டன் படுகொலை நினைவாக அந்த சம்பவம் நடித்துக் காட்டப்படுகிறது.
அமெரிக்க விடுதலைக்கு உந்துதலாக அமைந்த இன்னொரு நிகழ்ச்சியான, பாஸ்டன் டீ பார்ட்டி என்பது தேநீர் விருந்து அல்ல. இந்தியாவில் உப்பு வரிக்கெதிராக காந்தி மாபெரும் உப்பு சத்யாக்கிரகம் நடத்தியது போல, அமெரிக்காவில் பிரிட்டிஷ் அரசு விதித்த தேயிலை வரிக்கு எதிராகப் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசுக்கு தேயிலை வரி கட்டிவிட்டு எடுத்து வந்த சரக்குப் பெட்டிகளை, அமெரிக்க துறைமுகங்களில் இறக்கக்கூடாது என்று போராடினார்கள். பல மாநிலங்களில் டீ கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆனால் பாஸ்டனில் டீ பெட்டிகளுக்கு பிரிட்டிஷ் வரியை செலுத்தியே ஆகவேண்டும் என்று மாநில ஆட்சி பிடிவாதமாக இருந்தது.
விடுதலைப் போராட்டத்தினர் டிசம்பர் 16,1773 அன்று, இந்த கப்பல்களில் ஏறி தேயிலை சரக்குப் பெட்டிகளை உடைத்து எறிந்தார்கள். இந்த கலகத்தைத்தான் தேநீர் விருந்து கொண்டாட்டம் என்று சொல்கிறார்கள். அடுத்த இரண்டே வருடங்களில், விடுதலை உணர்வு பெரும் கொந்தளிப்பாகி, பாஸ்டன் அருகே பிரிட்டிஷ் அரசுக்கெதிரான யுத்தம் தொடங்கியது.
எனக்குப் பிடித்தமான உலகப் பிரபலங்களில் ஒருவரான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பாஸ்டனின் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்க விடுதலை தொடர்பான மிக முக்கியமான ஆவணங்கள் நான்கு. ஒன்று விடுதலைப் பிரகடனம். இரண்டாவது பிரான்சுடன் ஒப்பந்தம்,. மூன்றாவது பிரிட்டனுடன் சமாதான உடன்படிக்கை. நான்காவது அமெரிக்க அரசியல் சட்டம். இந்த நான்கு ஆவணங்களிலும் கையெழுத்திட்ட ஒரே மனிதர் என்ற பெருமைக்குரியவர் பெஞ்சமின்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெஞ்சமின் பாதிரியாக வேண்டுமென்று விரும்பிய அப்பா அவரை லத்தீன் பள்ளியில் சேர்த்தார். பத்து வயதிலேயே படிப்பை விட்டுவிட்டு வந்த பெஞ்சமின், சகோதரமுறை உறவினரான ஜேம்ஸ் நடத்திய அச்சகத்தில் அச்சு கோர்க்கும் வேலை பார்த்தார். ஜேம்ஸ் தன் பத்திரிகையில் எழுதிய அரசியல் விமர்சனங்களுக்காக சிறை வைக்கப்பட்டபோது, பெஞ்சமின் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 16.
தன் பெயரில் எழுதினால் வெளியிடமாட்டார்கள் என்பதால், மிஸஸ் சைலன்ஸ் டூகுட் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதி, ஜேம்சின் அலுவலகத்தில் இரவில் கதவுக்குக் கீழே ரகசியமாகப் போட்டுவைப்பார். இப்படி 16 கட்டுரைகள் வெளியாகிப் பெரும் வாசகர் வரவேற்பைப் பெற்றன. இதையெல்லாம் எழுதியது பெஞ்சமின்தான் என்று ஜேம்சுக்குத் தெரியவந்ததும் இருவருக்கும் சண்டை யாகிவிட்டது. இனி இந்த ஊரில் இருக்க முடியாது என்று பெஞ்சமின் ஃபிலடெல்பியாவுக்குப் பிழைக்கப் போய்விட்டார்.
பின்னாளில் பெஞ்சமின் எட்டாத சிகரங்களே இல்லை. சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டத் தலைவர், சட்ட மேதை, கண்டுபிடிப்பாளர், விஞ்ஞானி, வணிகர், வெளிநாட்டுத் தூதர், தபால் துறைத் தலைவர், மாநில முதலமைச்சர் என்று பல துறை சாதனையாளராக இருந்தார். படிப்பதற்கான கண்ணாடி, பார்ப்பதற்கான கண்னாடி இரண்டையும் ஒரே லென்சில் மேலும் கீழுமாக அமைப்பதை அவர்தான் கண்டுபிடித்தார். மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டுபிடித்துக் கட்டடங்களைக் காப்பாற்ற இடிதாங்கிகளை உருவாக்கினார். குதிரை வண்டிகள் எவ்வளவு தூரம் ஓடுகின்றன என்பதைக் கண்டறிய ஸ்பீடாமீட்டர்களைக் கண்டுபிடித்தார். தன் அடிமைகளை விடுவித்து, அடிமை முறை ஒழிப்பில் உதவினார்.
பதினாறு வயதில் பெஞ்சமின் காதலித்த டெபோராவுக்குத் திருமணமாகி அவள் கணவன் அவளை விட்டுவிட்டு ஓடி விட்டான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளை பெஞ்சமின் மணம் செய்து கொண்டார். அவர்களுடைய முதல் ஆண் குழந்தை 4 வயதில் இறந்துவிட்டது. அடுத்த குழந்தை பெண்-சாரா. பெஞ்சமினுக்கும் வேறொரு பெண்ணுக்கும் பிறந்த வில்லியத்தை தங்கள் மகனாக சுவீகரித்துக் கொண்டனர். ஆனால் வில்லியம் பிரிட்டிஷ் விஸ்வாசி. அப்பாவோ பிரிட்டிஷ் எதிர்ப்பு விடுதலை வீரர். புரட்சியின்போது வில்லியம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டான். பெஞ்சமின் கடைசி வரை மகனுடன் சமரசம் செய்யவில்லை. அவருக்குக் கடைசி வரை துணையாக இருந்தது மகள் சாராதான். பெஞ்சமின் ஃபிராங்க்ளின் சுயசரிதையையும் வரலாற்றையும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும்.
பாஸ்டன் தெருக்களெங்கும் இப்படி பல வரலாற்று சுவடுகள் பரவிக் கிடக்கின்றன. அவற்றை போய் பார்ப்பதற்கென்றே, விடுதலைத் தடம் (ஃபீரிடம் டிரெய்ல்) என்று சுற்றுலா நடத்துகிறார்கள். நகர் முழுவதும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடங்களுக்குச் செல்லும் பாதையை சிவப்புக் கோட்டில் மார்க் செய்து வைத்திருக்கிறார்கள்.
பாலா முதலில் என்னை ஓர் உடுப்பி ஓட்டலுக்கு அழைத்துப் போய் நம்ம ஊர் உணவை வாங்கிக் கொடுத்து தெம்பூட்டி, அதன் பின் ஒரு நீண்ட நடைப் பயணம் அழைத்துச் சென்றார். நகரின் மையப்பகுதியில் இருக்கும் ஹே மார்க்கெட், குவின்சி மர்க்கெட், ஹார்பர் எல்லாம் சுற்றினோம்.
ஹே மார்க்கெட் எனப்படும் வைக்கோல் சந்தைகள் எல்லா அமெரிக்க நரங்களிலும் இருக்கின்றன. இப்போது அங்கே வைக்கோல் விற்பதில்லை. சில ஹே மார்க்கெட்டுகள் வரலாற்றில் அழியாத இடம் பெற்றிருகின்றன. நான் பார்க்க முடியாமல் போன சிகாகோ ஹே மார்க்கெட் அப்படிப்பட்டது. இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக மே 1 கொண்டாடப்படுவதற்குக் காரணம், சிகாகோவின் ஹே மார்க்கெட் பகுதியில் 1886 மே 4 அன்று நடந்த படுகொலைகள்தான்.
தினசரி வேலை நேரம் பத்து, பனிரெண்டு, பதினாறு என்று இருந்ததை, எட்டு மணி நேரமாக்க வேண்டுமென்பதுதான் அப்போது தொழிலாளர்களின் கோரிக்கை. இதற்காக அமெரிக்கா முழுவதும் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். சிகாகோ ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கடைசி நிமிடம் வரை மிக அமைதியாக நடந்த பேரணி, பொதுக் கூட்டத்தின் முடிவில், யாரோ ஒரு குழாய் குண்டை வீச, கலவரம் ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மொத்தமாக எட்டு போலீசாரும், நான்கு தொழிலாளர்களும் இறந்தார்கள். பெரும்பாலான போலீசார் இறந்தது இதர போலீசார் சுட்டதிலேயேதான்.
இந்த நிகழ்ச்சிக்காக எட்டு தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒருவருக்கு 15 வருட சிறை தண்டனை. மீதி ஏழு பேருக்கு மரண தண்டனை. அப்பீலில் இருவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. மீதி ஐந்து பேரில் நால்வர் தூக்கிலிடப்பட்டார்கள்.ஒருவர் தூக்கு தினத்துக்கு முன்னாள், சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அமெரிக்காவையே உலுக்கிய இந்த நிகழ்ச்சிக்கு, இரு வருடங்களுக்குப் பின்னர் வேலை நேரம் எட்டு மணி நேரமாக்கப்பட்டது. நடந்த கலவரத்துக்கு தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் பொறுப்பல்ல என்றும் போலீஸ் கமாண்டரின் அராஜகம்தான் காரனம் என்றும், ஏழு வருடங்கள் கழித்து மாநில ஆளுநர் அறிவித்தார். கமாண்டர் பின்னர் வேறு லஞ்ச ஊழல் வழக்கில் கைதாகி தண்டிக்கப்பட்டார்.
பாஸ்டனின் ஹே மார்க்கெட்டுக்கு, சிகாகோ ஹே மார்க்கெட் போன்ற அரசியல் வரலாறு இல்லை. ஆனால், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வாழ்ந்த சமயத்தில் மக்கள் தொகை வெறும். 5 ஆயிரம் பேர்தான். அடுத்த 100 வருடங்களில் இது 45 ஆயிரமாக ஆன சமயத்தில்தான், ஹே மார்க்கெட் ஒரு திறந்தவெளி சந்தையாக 1830ல் உருவாயிற்று. ( இப்போது பாஸ்டன் மக்கள் தொகை ஆறு லட்சத்து 45 ஆயிரம் !) மிக மலிவான விலையில் காய்கறிகளும் பழங்களும் விற்கப்படுவதுதான் இதன் சிறப்பு. வெள்ளி, சனிக் கிழமைகளில் மட்டும் கூடும் இந்த சந்தையை சுமார் 200 தள்ளுவண்டிக்காரர்கள்தான் நடத்துகிறார்கள்.
ஹே மார்க்கெட்டை சுற்றியுள்ள புராதன கட்டடங்களில் ஒன்றான குவின்சி மார்க்கெட், ஹே மார்க்கெட்டை விட 4 வயது மூத்தது. இங்கே எல்லா நவீன கடைகளும் உணவகங்களும் இருக்கின்றன. அமெரிக்காவின் சிறப்புகளில் ஒன்று, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழியவிடாமல் தடுத்துப் பாதுகாத்து, கூடவே பயன்படுத்துவதுமாகும்.
எனக்கு சென்னையின் மூர்மார்க்கெட் நினைவுக்கு வருகிறது. சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்த ஜார்ஜ் மூர் பெயரில் அமைந்த மூர் மார்க்கெட், 1900லிருந்து 85 வருடங்கள் இயங்கி வந்தது. பழைய புத்தகப் பிரியர்களுக்கு மூர்மார்க்கெட் ஒரு சொர்க்கம். அங்கே கிடைக்காத பொருளே இல்லை. சென்னை நகரின் அடித்தட்டு மக்களுக்கும் கீழ் நடுத்தர மக்களுக்கும் பெரும் புதையலாக இருந்தது மூர்மார்க்கெட். செண்ட்ரல் ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக அதை இடிக்க அரசு விரும்பியது. வியாபாரிகளும் பொதுமக்களும் எதிர்த்தார்கள். ஒரு மர்மத் தீ மூர்மார்க்கெட்டை அழித்ததும், ரயில் நிலையத்தை அரசு விரிவுபடுத்தியது. மூர்மார்க்கெட் என்ற பெயரில் சின்னதாக இன்னொன்று கட்டப்பட்டாலும் அதை சீந்துவார் இல்லை. அசல் அசல்தான்.
அந்த மூர்மார்க்கெட்டின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களை வைத்து, ‘மூர்மார்க்கெட்’ என்ற தலைப்பிலேயே மறைந்த எழுத்தாளர் அறந்தை நாராயணன் எழுதிய அருமையான நாடகத்தை எங்கள் பரீக்‌ஷா குழு 1979ல் நிகழ்த்தியது. அதில் நான் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் ரங்கனாக மேடையில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி நடித்தேன். இப்போது சென்னையில் அநேகமாக சைக்கிள் ரிக்‌ஷாவும் அழிந்து விட்டது.
ஆனால் நியூயார்க்கில் நகர மையத்தில் டைம் ஸ்கொயரில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றன !
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 9
சிகாகோ சதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு பலூன் நாடகத்தை எழுத என்னைத் தூண்டியவர் எம்.ஜி.ஆர். அவர் ஆட்சிக்காலத்தில் 1981ல் அடுத்தடுத்து பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. பெரிய கட்சிகள் பெரிதாக எதிர்ப்பைக் காட்டவில்லை. நானும் நண்பர்களும் ‘குரல்கள்’ சமூக நல அமைப்பு என்ற பெயரில் ஒரு கன்ஸ்யூமர் இயக்கத்தைத் தொடங்கி பஸ் கட்டண உயர்வை எதிர்த்தோம். எதிர்ப்பு பேட்ஜுகளை அணிந்துகொண்டு பஸ்களில் சுற்றினோம்.
1981 ஜுன் 12ம் நாள் சென்னை மெரீனா கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலையிலிருந்து அண்ணா சாலையில் அமெரிக்கன் செண்ட்ட்டர் எதிரே அண்ணா மேம்பாலப் புல்வெளி வரை ஊர்வலம் செல்வதாக அறிவித்து காவல் துறை அனுமதியும் பெற்றோம். இப்போது இந்தப் பாதையில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கவே மாட்டார்கள்.
எங்கள் ஊர்வலத்தின் பெயர் பலூன் ஊர்வலம். பஸ் கட்டனம் ஏறிக் கொண்டே போனால் ஒவ்வொரு பிரஜையும் ஆளுக்கொரு பலூன் வைத்துக் கொண்டு அதில்தான் பயணம் செய்ய வேண்டிய நிலை வந்துவிடும் என்று நையாண்டியாக இந்த ஊர்வலத்தை நடத்தினோம். நகரின் முக்கிய பகுதிகளில் கையால் எழுதிய 100 சுவரொட்டிகளை ஒட்டினோம்.
உழைப்பாளர் சிலையருகே நாங்கள் பத்துப் பனிரெண்டு பேர் உட்கார்ந்து பலூன்களை ஊதிக் கொண்டிருந்தபோது இரண்டு லாரி நிறைய நூற்றுக் கணக்கான போலீசார் வந்தார்கள். ஓர் இன்ஸ்பெக்டர் என்னிடம் வந்து ஊர்வலத்துக்கு இன்னும் எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டார். வராத நண்பர்கள் பெயர்களை நினைவுபடுத்தி இன்னும் ஆறேழு பேர் வரவேண்டியிருக்கிறது என்று சொன்னேன். நாங்கள் 200 பேர் வந்திருக்கிறோமே என்றார் இன்ஸ்பெக்டர். எல்லாரையும் மஃப்டியில் எங்களுடன் வரச் சொல்லுங்கள் என்றேன். அவர் சிரித்துவிட்டுப் போய் 60 காவலர்களை மட்டும் வைத்துக் கொண்டு மீதி பேரை திருப்பியனுப்பிவிட்டார்.
முன்னால் 30 போலீஸ், பின்னால் 30 போலீசுடன், நாங்கள் 19 பேர் முகமூடிகள் அணிந்து நிறைய பலூன்களுடன் முழக்கங்களைப் பாடலாகப் பாடியபடி ஊர்வலம் சென்றோம். அதில் ஒரே ஒரு பெண்.(பின்னாளில் அவர் தமிழக அரசில் இணைச் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.) அப்போது சென்னையின் மக்கள் தொகை 10 லட்சம்.
சிகாகோவில் யுத்த எதிர்ப்புக்கு 15 ஆயிரம் பேர் ஊர்வலம் வந்தது போல இங்கேயும் பஸ் கட்டன எதிர்ப்புக்கு ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து அரசு பொய் வழக்குகளை எங்கள் மீது போட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அந்த நாடக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு பலூனை எழுதி அரங்கேற்றினோம்.
நாடகத்துக்குப் போலீசிடம் ஸ்கிரிப்டைத் தணிக்கைக்குக் கொடுத்து முன் அனுமதி வாங்கவேண்டுமென்ற கொடூரமான சட்டம் இன்னும் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.எம்.ஆர்.ராதாவின் திராவிட இயக்க பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒடுக்குவதற்காக, நான் பிறந்த ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த அந்த சட்டம் 56 வருடங்களாக திராவிடக் கட்சிகள் ஆட்சியிலும் தொடர்கிறது.
கடைசி நிமிடம் வரை பலூன் நாடகத்துக்கு போலீஸ் அனுமதி வரவில்லை. நாடகம் நடிக்க முடியாவிட்டால், அன்றைய தினம் புத்தகமாவது வெளிவரவேண்டுமென்று முன்கூட்டி திட்டமிட்டு 21 நண்பர்களிடம் பொருளுதவி பெற்று பத்தகத்தை தயார் செய்தோம். கடைசியில் நாடகத்தைப் படிக்காமலே போலீஸ் அனுமதி கொடுத்துவிட்டது. நாடகம் நடிக்கப்பட்டதும் சி.ஐ.டி ரிப்போர்ட்டினால் பதறிப் போய் எங்கள் அடுத்த நாடகம் ’கமலா’வுக்குக் கடும் பிரச்சினைகளை எழுப்பியது தனிக்கதை.
பலூன் நாடகத்தை முற்றிலும் தமிழ்ச் சூழலில் வடித்திருந்தேன். ஆனால் அதற்கு உந்துதலாக இருந்த சிகாகோ சதி வழக்கு நாடகப் பிரதியில் ஏறத்தாழ ஒரு மாத காலம் தோய்ந்திருந்தேன். அபி ஹாஃப்மன், ஜெரி ரூபின், டேவிட் டெலிங்கர், டாம் ஹேய்டன், ரெனி டேவிஸ், ஜான் ஃபிராய்ன்ஸ், லீ வெய்னர், பாபி சீல், ஆகியோரோடு சிகாகோ நகர வீதிகளிலும் கிராண்ட் பூங்காவிலும் லிங்கன் பூங்காவிலும் நானே சுற்றியது போன்ற உணர்வு இருந்தது. தண்டிக்கப்பட்ட வக்கீல்கள் வில்லியம் கன்ஸ்லர்,லியோனார்ட் வெயின்கிளாஸ் பக்கத்தில் நின்றுகொண்டு நீதிபதி ஜூலியஸ் ஹாஃப்மனின் திண்டாட்டத்தை நானே நேரில் பார்த்த உணர்வில் இருந்தேன்.
குற்றம் சாட்டப்பட்ட அபியும் ரூபினும் விசாரணைக்கு ஒரு நாள் நீதிபதி அணியும் கறுப்பு அங்கி அணிந்து வந்தார்கள்.
அதைக் கழற்றும்படி நீதிபதி உத்தரவிட்டார். கழற்றினார்கள். உள்ளே சிகாகோ போலீசின் யூனிஃபார்ம் ! இதையெல்லாம் நானே கோர்ட்டில் இருந்து பார்த்தது போன்ற உணர்வில் திளத்திருந்தேன். என்றாவது சிகாகோவுக்குச் சென்றால் , அந்த வரலாற்று சிறப்பு மிக்க வீதிகளையும் பூங்காக்களையும் சுற்றிப் பார்க்கவேண்டுமென்ற ஆசை இருந்தது.சிகாகோ அதிக ஜனத் தொகை உள்ள அமெரிக்க நகரம். சுமார் 30 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இவர்களுக்காக ஆயிரம்பள்ளிக்கூடங்கள், 83 கல்லூரிகள், 88 நூலகங்கள், மொத்தமாக 7300 ஏக்கரில் 552 பூங்காக்கள் இருக்கின்றன ! தொழிற்சாலைக் கழிவுகளால் சிகாகோ ஆறு கூவமாயிற்று அது நகரத்துக்குக் குடிநீர் தரும் மிச்சிகன் ஏரியில் போய் கலப்பதால் ஏரியும் கெட்டது. இதை சரி செய்ய, ஆற்றின் போக்கை மாற்றி ஏரியிலிருந்து ஆறு ஓடுவது போல் அமைத்து சூழலை சுத்தமாக்கியிருகிறார்கள்.
இதுஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொந்த ஊர். எல்லா அமெரிக்க நகரங்களையும் போல இதுவும் பூர்வகுடிகளான பொட்டாவடோமிகளை அழித்து வெள்ளையர்கள் ஆக்ரமித்த பகுதிதான். சிகாகோ என்பது ப்ரெஞ்ச் உச்சரிப்பு. பூர்வகுடி மொழியில் சிகாக்வா என்றால், வெங்காயம் அல்லது வெள்ளைப் பூண்டு என்று அர்த்தம்.
இப்படிப்பட்ட சிகாகோவை சுற்றிப்பார்க்க முடியாமல், ஒரு மணி நேரம் சிகாகோ விமான நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் வாய்ப்பு மட்டும்தான் எனக்குக் கிடைத்தது என்றால், என் ஏமாற்றம் எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம். சொந்தமான பண வசதியும் இல்லாத , பெரும் புரவலர் உதவிகளையும் நாடவிரும்பாத ஓர் எழுத்தாளனுக்கு சாதாரண நண்பர்கள் , வாசகர்கள் உதவியால் இத்தனை வாய்ப்புகள் கிட்டுவதே பெரிய விஷயம்தான்.
பாஸ்டனுக்கு என்னை அழைத்த பாலா கணினித் துறையில் உயர்பதவியில் இருப்பவர். தீவிரமான வாசகர். சென்னை மந்தவெளிக்காரர். சாந்தோமிலும் பிலானியிலும் படித்தவர். அப்பா சமையற்கலைஞர். அம்மா பக்திக்கட்டுரைகளும் கதைகளும் எழுதுபவர். பாலா தனக்கென்று மூன்று நான்கு வலைப்பூக்கள் வைத்திருப்பது தவிர, அம்மாவின் படைப்புகளை வெளியிடவும் வலைப்பூ வைத்திருக்கிறார்.
பாஸ்டனில் நான் என்ன பார்க்க விரும்புகிறேன் என்று அவர் போனில் கேட்டிருந்தபோது சொன்ன பல விஷயங்களில் ஒன்று நாடகம். எனவே என்னை விமான நிலையத்தில் வரவேற்று அங்கிருந்து நேராக ஒரு நாடக அரங்கிற்கு அழைத்துப் போய்விட்டார்.
அமெரிக்காவில் பள்ளியிலும் கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும் நாடகம், இசை நாடகம் முதலிய நிகழ் கலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பாஸ்டனில் நான் பார்த்த நாடகம், வால்தாம் பப்ளிக் ஸ்கூல்ஸ் எனப்படும் பள்ளிக்கூட அமைப்பும் ரீகிள் மியூசிக் தியேட்டர் எனும் குழுவும் இணைந்து நடத்தியவை. வால்தாம் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 41 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய குழுதான் ரீகிள். இப்போது அதில் முழு நேரத் தொழில்முறை நடிகர்களுடன் பள்ளி மாணவர்களும் இணைந்து நாடகங்களைத் தயாரிக்கிறார்கள்.
நான் பார்த்த, சிண்ட்ரெல்லா கதையை அடிப்படையாகக் கொண்ட இண்ட்டு தி உட்ஸ் (காட்டுக்குள்ளே) ஓர் இசை நாடகம். நடித்தவர்களில் யார் முழு நேர நடிகர், யார் மாணவர் என்று பிரித்துச் சொல்லமுடியாத ஒரே தரத்தில் உயர்ந்த நடிப்பு. அபாரமான இசை. காட்சி மாற்றங்களும் ஒளி, ஒலி அமைப்புகளும், நம்ம ஊர் ஆர்.எஸ்.மனோகரைப் போல அங்கே ஊருக்கு நாலு பேராவது இருக்கிறார்கள் என்று தோன்றவைத்தன.
நாடக டிக்கட்டுகள் 57 டாலர்கள் முதல் மாணவர்களுக்கு 25 டாலர்கள் என்று வெவ்வேறு விகிதங்களில் இருந்தன. நாடகத்தில் பங்கேற்கும் எல்லாருக்கும்சம்பளம் தரப்படுகிறது. இதை புரவலர்களிடமிருந்து நன்கொடையாகக் கேட்கிறார்கள். பின்மேடைக் கலைஞர்களுக்கு 24 டாலர். பிரதான நடிகருக்கு 500 டாலர். பிரபலமான நடிகரென்றால் 1000 டாலர்.இயக்குநருக்கு 5000 டாலர். துணை நடிகர்களுக்கு 100 டாலர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் மாற்று நடிகரை தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஊதியம் 50 டாலர்.
காட்டுக்குள்ளே நாடகம் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. அடுத்த எட்டு நாள் இன்னொரு நாடகம். பிறகு அதே போல இன்னொன்று என்று கோடை காலத்தில் தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. நான் சென்ற அன்று அரங்கு நிறைந்து வழிந்தது. எந்திரனுக்கு வருகிற கூட்டம் மாதிரி அங்கே நாடகம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு சினிமாவுக்குக் கூட வருவதில்லை.
அமெரிக்காவில் என் சுற்றுலாவின்போது வேறு நகரங்களிலும் சில நாடகங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி அந்தந்த நகரங்களுக்குச் செல்லும்போது விரிவாகப் பார்ப்போம்.
நாடகம் பார்த்துவிட்டு பாலா வீட்டுக்கு வெஸ்ட்ஃபோர்டுக்கு சென்று அவருடன் தங்கினேன். இரவு நேரம் பின்பக்கம் தோட்டத்தைப் போய் பார்க்க வேண்டாம். கரடி வந்தாலும் வரும் என்றார். காட்டுக்குள்ளே வீடுகளைக் கட்டியமாதிரி இருந்தது.
பாலா வீடு அருள் வீட்டுக்கு நேர்மாறு. அருள் வீட்டில் பொருட்கள் எல்லாமே கச்சிதமாக ஏறத்தாழ ஒழுங்காக சீராக வைக்கப்பட்ட சூழல் இருந்தது. பாலா வீட்டின் உட்புறம் ஒரு மந்தவெளி ஃபீலிங்கைக் கொடுத்தது. எந்த அறையிலும் எதுவும் இருக்கலாம் என்ற போக்கில் வாழ்வது நமக்கு சகஜமானது. இப்போது கூட என் கட்டில் மீது புத்தகங்கள், நோட்டுகள், சார்ஜர், மருந்துப் பெட்டி, வாட்டர் பாட்டில், டவல், ஜட்டி எல்லாம் இருக்க, அதன்மீது என் லேப்டாப் மினி கணினியை வைத்துக் கொண்டு கட்டிலை மேசையாக்கி நான் தரையில் உட்கார்ந்து எழுதுகிறேன். பாலாவின் வீடு இதே போல இருந்தது.
அவர் மனைவியும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தார்கள். அதனால் இப்படி இல்லை; எப்போதுமே இப்படித்தான் என்றார் பாலா. அவருடைய நூலகம் என்னை பிரமிக்க வைத்தது. தமிழில் கடந்த பல பத்தாண்டுகளில் வந்திருக்கக்கூடிய எந்த முக்கியமான புத்தகமானாலும் அங்கே இருந்தது. எல்லாமே தீவிரமான வாசிப்புக்குரியவை. அதற்கு நிகரான ஓர் ஆங்கில நூலகம்.
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வீட்டுக்குள் நம்ம ஊர் மாதிரியே சூழலை ஏற்படுத்திக் கொண்டு இரு உலகங்களிலும் சஞ்சரிக்கும் கலையை நம்மவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 8
நயாகராவிலிருந்து திரும்பிய மறு நாள் காலை ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் ஓர் அமிஷ் கிராமத்துக்குச் செல்வதென்று நானும் அருளும் முடிவு செய்திருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அருள் வீட்டிலிருந்து சுமார் 9 மணி நேரத் தொலைவில் இருக்கும் நார்த் கரோலினா மாநிலத்திலிருந்து பல வருடங்களாக நான் சந்தித்திராத என் சகோதர முறை உறவினர் சிவா, காரில் புறப்பட்டு என்னைக் காண அருள் வீட்டுக்கு வரப் போவதாகத் தெரிவித்தார். சிவாவை சந்தித்தால் அமிஷ் கிராமத்துக்குச் செல்ல முடியாது.
அடுத்த 15 நாட்களில் வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ஓர் அமிஷ் கிராமத்துக்குப் போய்க் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அருள் வருத்தப்பட்டார். உறவினர்களை சந்திப்பதை விட அமிஷ் கிராமத்துக்குச் செல்லவே நான் முடிவெடுப்பேன் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். பொதுவாக நானும் அப்படி முடிவெடுக்கக்கூடியவன்தான்.
ஆனால் ஓரிரு தினங்கள் முன்னர்தான் சிகாகோவிலிருந்து ஒரு பழைய சிநேகிதி என்னைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். ஆனால் நான் எந்த தினத்தில் சிகாகோ வருவது, எப்படி வருவது என்பதைப் பற்றியெல்லாம் அவரால் தெளிவாகத் தெரிவிக்க முடியவில்லை. ஒவ்வொரு போன் காலிலும் அவர் சொன்ன திட்டம் மாறிக் கொண்டிருந்தது. இது அமெரிக்காவின் பிற இடங்களுக்கு நான் செல்வதையும் முடிவு செய்ய முடியாமல் குழப்பிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அருள் சொன்னார். உங்கள் நண்பர் உங்களைப் பார்க்க விரும்பினால், அவர் புறப்பட்டு இங்கே வந்திருக்கலாம். சில மணி நேரப் பயணம்தான். இப்படிக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றார்.
அதே ரீதியில்தான் நானும் யோசித்தேன். நான் நார்த் கரோலினா செல்லும் வாய்ப்பே இல்லை என்ற சூழலில், 9 மணி நேரப் பயணம் செய்து தான் வருவதாகத் தெரிவித்த சிவாவுக்கு முன்னுரிமை தர முடிவு செய்தேன். ஃபிலடெல்பியாவிலும் அமிஷ் கிராமத்தைப் பார்க்கலாம். அருளின் வருத்தத்தை நான் புரிந்துகொண்ட போதிலும் வேறு வழியில்லை. அவருடன் ஓர் அமிஷ் கிராமத்தைச் சுற்றிப் பார்ப்பதென்பது நிச்சயம் வேறு அனுபவமாகத்தான் இருந்திருக்கும் என்பதைப் பின்னர் உணர்ந்தேன்.
சிவா என்னைவிட சில வருடங்கள் மூத்தவர். சுமார் 30,35 வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா சென்று குடியேறிய பொறியாளர். அவருடன் இப்போது அமெரிக்காவில் தங்கிப் படித்து முடித்திருக்கும் என் சகோதரி மகன் ஸ்ரீராமும் வந்திருந்தான். அமெரிக்காவில் தாக்குப் பிடிக்க கஷ்டப்பட்டு ஹோம் சிக்காகி விடக் கூடிய வாய்ப்புள்ளவன் என்று நான் கருதிய ஸ்ரீராம் நேர்மாறாக இருந்தான்.
உறவினர்களையோ பழைய நண்பர்களையோ நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கும்போது, உண்மையில் உரையாட எதுவும் இருப்பதில்லை. பழைய நினைவுகளின் அடிப்படையில் மட்டுமே உறவாடுகிறோம். கால ஓட்டத்தில் பலரின் வாழ்க்கை முறைகளும், மதிப்பீடுகளும் வெவ்வேறானவையாக ஆகிவிடுகின்றன.
என் பள்ளிக் காலத்தில் கோடை விடுமுறைக்கு வேலூரில் இருக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவேன். கோடையில் ஊட்டிக்குப் போக முடியாவிட்டாலும், வேலூர் செல்வதென்பது எப்படிப்பட்ட கொடுமை என்பது வேலூர்க்காரர்களுக்கு மட்டுமே புரியும். அப்போது செல்லும் வீடுகளில் சிவாவின் வீடும் ஒன்று. அவருடைய அப்பா உலகம் சுற்றும் வாலிபனாக இருந்தவர். மர்ச்சண்ட் நேவியில் பணி புரிந்தபடி எப்போதும் கடல் பயணங்களிலேயே இருந்தவர். சிவா ஐ.ஐ.டி முடித்துவிட்டு அமெரிக்கா போய்விட்டார். அதன் பின் என் தொடர்புகள் மிகக் குறைவு.
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை அமெரிக்கப் பள்ளிக் கல்வி முறை பற்றி அவரிடம் விவரங்கள் கேட்டிருந்தேன். தன் மகளின் ஆரம்பப் பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்தையும் இணைத்து அனுப்பியிருந்தார்.
இப்போது சந்தித்தபோது வழக்கம் போல பழைய நினைவுகள் தவிர புதிதாகப் பகிர, பெரிய விஷயம் எதுவும் இல்லை. ஆனால் அவர் தெரிவித்த ஒரு செய்தி எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
எந்தப் பெண்ணின் பள்ளி நோட்டை எனக்கு அனுப்பியிருந்தாரோ அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. மணமகன் அமெரிக்கக் கிறித்துவர். சாதி,மதம், மொழி, இனம் இவற்றையெல்லாம் கடப்பது அமெரிக்காவுக்குப் போய்விட்ட எல்லா இந்தியர்களுக்கும் சாத்தியமில்லை. சிலருக்கே சாத்தியப்படுகிறது. இது இப்படி ஆகிவிடக் கூடாது என்ற கவலையினாலேயே இந்தியாவுக்குக் குழந்தைகளுடன் திரும்பி விட நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
தொடர்ந்து அமெரிக்காவில் நான் சந்தித்த பல இந்தியர்களிடமும் இந்த விஷயங்களை விவாதிக்க முடிந்தது. அவற்றைக் கடைசியில் அலசுவோம்.
அடுத்த நாள் பாஸ்டனுக்குப் புறப்பட்டேன். இதுவரை அமெரிக்காவில் என்னை கவனித்துக் கொண்ட அருள் எனக்கு ஏற்கனவே நன்கு பழக்கமானவர். ஆனால் அருள் வீட்டிலிருந்து புறப்பட்டபின் இந்தியா திரும்பும்வரை என்னை கவனித்துக் கொண்டவர்கள் பலரும் இப்போதுதான் எனக்கு முதல்முறையாக அறிமுகம் ஆனவர்கள். எனினும் ஒவ்வொருவரும் என்னோடு பல காலமாக உறவாடியவர்கள் போல பழகினார்கள்.
ரயிலில் வெளியூருக்கு நீண்ட பயணம் போகும்போது, கட்டு சாத மூட்டை கட்டிக் கொண்டு போவது போல, பாஸ்டனுக்குப் புறப்பட்ட எனக்கு, வழிச் சாப்பாட்டுக்காக தயிர் சாதம் கட்டிக் கொடுத்து அனுப்பினார் அருளின் மனைவி சுதா.
கொலம்பசிலிருந்து சிகாகோ போய் அங்கிருந்து விமானம் மாறி பாஸ்ட்டன் செல்ல ஏற்பாடு செய்திருந்தார் பாஸ்ட்டன் பாலா. இந்த விமானங்கள் எல்லாம் நிஜமாகவே குட்டி விமானங்கள்.ஒரு பக்கம் ஒற்றை சீட்டு. இன்னொரு பக்கம் இரட்டை சீட்டு என்று பஸ் மாதிரி இருந்தன. ஒரே ஒரு ஏர் ஹோஸ்ட்டஸ் ! எல்லாருக்கும் ஜூசும் வேர்க்கடலையும் கொடுத்தார்.
அமெரிக்காவில் உள்நாட்டு விமானப் பயணங்களில் பெரிய லக்கேஜ்கள் எடுத்துச் செல்லத் தனியே கட்டணம் செலுத்தியாக வேண்டும். என் லக்கேஜ் ஒரே ஒரு மீடியம் பெட்டிதான் என்பதால் எனக்குப் பிரச்சினை இல்லை. திரும்பவும் கொலம்பஸ் வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு செல்வேனா அல்லது நியூயார்க்கிலிருந்தே சென்று விடுவேனா என்பது நிச்சயமாகாத நிலையில் , அந்த ஒற்றைப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அருள் குடும்பத்திடம் விடைபெற்றேன்.
விமானத்தின் வாசற்கதவருகே படிக்கட்டில் நின்றுகொண்டு, கீழே தரையில் விமானத்தின் அடிவயிற்றில் ஏற்றப்படும் அவரவர் பெட்டிகளை அடையாளம் காட்டும்படி பயணிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது வழக்கமாக செய்யப்படுவதில்லை. எப்போதாவது மேற்கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடு.
அன்றைக்கு அந்த ஊருக்கு ஒபாமா வருவதால் இத்தனை கெடுபிடிகள் செய்கிறார்கள் என்றார் ஓர் அமெரிக்கப்பயணி. உண்மையில் அன்றைக்கு அங்கே ஒபாமா வருவது வெளியில் பெரிதாகத் தெரிந்திருக்கவே இல்லை. அவர் பேசச் செல்லும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் அநேகமாகத் தெரிந்திருக்கும்.
காலை செய்தித்தாட்களிலும், இன்று கருணாநிதி திருச்சி வருகை என்கிற மாதிரி எட்டு காலம் தலைப்பு செய்திகள் இல்லை. இன்னும் ஆறு மாதம் கழித்து இயங்கப்போகும், முடிவடையாத கலெக்டர் அலுவலகக் கட்டடத்தை த் ‘திறந்து’ வைப்பதற்காக கருணாநிதி அண்மையில் திருச்சிக்கு வந்தபோது, பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் விடுமுறை விட்டார்கள். அவ்வளவு போக்குவரத்து நெரிசலாம். கொலம்பசுக்கு ஒபாமா வந்தது, எனக்கு திருச்சியில் நினைவுக்கு வந்தது.
கொலம்பசிலிருந்து விமானத்தில் 11.45க்கு ஏறி சிகாகோ விமான நிலையத்துக்கு 11.45க்கு வந்துவிட்டேன். இரண்டு ஊர்களுக்கும் நேர வித்யாசம் ஒரு மணி நேரம் !
சிகாகோ விமான நிலையத்தில் அடுத்த ஒரு மணி நேரம் பாஸ்ட்டன் செல்லும் விமானத்துக்காகக் காத்திருந்ததுதான் அமெரிக்கப் பயணத்திலேயே எனக்கு மிகவும் கொடுமையான அனுபவம்.
துபை விமான நிலையத்தில் ஏழெட்டு மணி நேரமெல்லாம் போகும்போதும் வரும்போதும் காத்திருந்தது பெரும் பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் சிகாகோவில் காத்திருந்த ஒரே ஒரு மணி நேரம் ஒரு யுகமாகத்தோன்றியது.
காரணம், நான் சிகாகோ நகரத்துக்கு செல்ல விரும்பி அங்கே நுழைய முடியாமற் போய்விட்ட நிலைதான். எந்த நகரத்தை 29 வருடங்களாகப் பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேனோ, அதே நகரத்தின் விமான நிலையத்தில் உட்கார்ந்து தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை அங்கே சந்திக்க வேண்டுமென்று விரும்பிய சிநேகிதியும் அதே நேரத்தில் அதே நகரில் ஏதோ ஓர் அலுவலக த்தில் உட்கார்ந்து பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கூடும். தகவல் தொடர்பு, மனிதக் குளறுபடிகளினால் நான் சிகாகோவுக்குள் நுழையாமலே போக வேண்டியதாயிற்று.
சிகாகோவை நான் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் தோன்றிய ஆண்டு 1981. காரணம் வியட்நாம் யுத்தம், ஹிப்பிகள்….
என் முக்கியமான நாடகமான பலூன் உருவாக உந்துதலாக இருந்தது சிகாகோ நகரத்தில் 1968ல் ஹிப்பிகள் நடத்திய யுத்த எதிர்ப்புப் போராட்டம்தான். இப்போது கோபக்காரப் பெரியவனாக இருக்கும் நான் 1981ல் கோபக்கார இளைஞனாக , நானும் ஹிப்பிகள் போல நீண்ட முடி வைத்தவனாகத்தான் இருந்தேன்.
சிகாகோ நகரத்தின் கிராண்ட் பூங்காவில் ஹிப்பிகள் என்று சொல்லப்பட்ட அமைதி விரும்பிகள், வியட்நாம் யுத்தத்தைக் கண்டித்து நடத்திய சந்திப்பு, அமெரிக்க சரித்திரத்தில் மிக முக்கியமான நிகழ்வாயிற்று.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்வதற்கான மாநாட்டை சிகாகோவில் ஜனநாயகக்கட்சி நடத்திய 1968 ஆகஸ்ட்டில், ஹிப்பிகள் வியட்நாம் யுத்தத்துக்கு எதிராக, அமைதிப் பேரணிகள் சந்திப்புகள் நடத்த அனுமதி கேட்டார்கள். போலீஸ் அனுமதி மறுத்தது.
தடையை மீறி சுமார் 15 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்தார்கள். முழுக்க முழுக்க அமைதியான ஊர்வலம். பாடல்கள் பாடிக் கொண்டும் நடனம் ஆடிக் கொண்டும், யுத்தம் இல்லாமல் அமைதியைக் கொண்டாடுவோம் என்ற முழக்கங்களோடும் வந்த ஊர்வலத்தின் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது.
எட்டு பேர் பெரும் வன்முறைகளை செய்ய திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். இதுதான் சிகாகோ சதி வழக்கு. உண்மையில் அவர்கள் செய்த எதிர்ப்பென்பது, அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகன் இருக்கும் திசை நோக்கி மூத்திரம் பெய்வதுதான் !
ஹிப்பிகள் என்றால் நீண்ட முடி வளர்த்துக் கொண்டு, போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என்பதாக ஒரு கருத்து மட்டுமே நம் நாட்டில் நிலவுகிறது. நீண்ட முடி வளர்க்காமலே போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரும் உலகத்தில் உண்டு.
அறுபதுகளில் உலகெங்கும், குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் இளைஞர்கள் யுத்தத்துக்கு எதிரான போராட்டங்களைச் செய்தார்கள். இசை, நடனம், இலக்கியம், கவிதை என்று மகிழ்ச்சியாக இல்லாமல் மனித குலம் யுத்தம் என்று அலைவதை எதிர்த்தார்கள்.
மேலை நாடுகளில் கட்டாய ராணுவ சேவை என்பது இன்றும் இருக்கிறது. இதை எதிர்த்த இளைஞர்கள்தான், ராணுவத்துக்காக முடியை மிலிட்டரி கட் செய்யமாட்டேன் என்று குறியீடாக எதிர்த்து, நீண்ட முடி வளர்க்கத் தொடங்கினார்கள். ஏதாவது சாக்கு சொல்லி, ராணுவ சேவையை டபாய்த்தவர்கள் ஏராளம். (பின்னால் ஜனாதிபதியான, பில் க்ளிண்ட்டனே அப்படிப்பட்ட ஒருவர்தான்.)
இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத யுத்த வெறி அரசுகள் போலீசைக் கொண்டு இப்படிப்பட்ட இளைஞர்களை ஒடுக்கின. சிகாகோவில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் ஒருவர் கறுப்பின உரிமை இயக்கமான கருஞ்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த பாபி சீல். சாட்சி சொன்னவர்களில் கவிஞர் கின்ஸ்பர்க், எழுத்தாளர் நார்மன் மெய்லர் எல்லாம் உண்டு.
அரசின் இந்த பொய் வழக்கைக் கோர்ட்டில் தங்கள் கிண்டலான பதில்களினால், ஒரு நையாண்டி நாடகமாகவே இந்த எட்டு பேரும் மாற்றினார்கள். கோர்ட்டில் நடந்ததை வைத்து பின்னர் பத்து திரைப் படங்கள் வந்திருக்கின்றன. மேடையிலும் டெலிவிஷனிலும் பல நாடகங்கள், ஆவணப் படங்கள் உருவாக்கப்பட்டன.
என்னையும் இந்த சிகாகோ சதி வழக்கு கவர்ந்தது. அதன் உந்துதலில் பலூன் நாடகத்தை எழுதினேன். அது என்ன பலூன் ? அதுவும் இங்கே நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். !
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 7
நயாகரா பற்றி 1986ல் எடுக்கப்பட்ட 45 நிமிட ஐமாக்ஸ் படத்தில், நயாகரா அருவியின் ஒரு பகுதிக்கு ஏன் மெயிட் ஆஃப் தி மிஸ்ட் என்ற பெயர் சூட்டப்பட்டது என்பதற்கான கர்ண பரம்பரைக் கதை காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. இளம் கணவன் இறந்த சோகத்தைத் தாங்க முடியாத ஆதிவாசிப் பெண் தன்னந்தனியே படகில் நயாகரா ஆற்றில் சென்று அருவியில் விழப் போகும் தருணத்தில் அவளை இடி தேவதையான ஹெனோ காப்பாற்றுகிறது. மெல்ல மனதின் சோகம் மறைந்ததும், அவள் ஹெனோவி கடைசி மகனைக் காதலித்து மணக்கிறாள். அவளுக்குப் பிறக்கும் குழந்தை தாத்தாவைப் போல தானும் இடி தேவதையாகிறது. ஆதிவாசிப் பெண்ணின் கிராம மக்களை ஒரு மலைப்பாம்பு கொன்று சாப்பிடப் போகும் தகவலை இடி தேவதை அவளுக்குத் தெரிவிக்கிறது. தான் கொன்றுவிட்டுப் போன கிராம மக்களை சாப்பிட, பாம்பு திரும்பி வரும் முன்பே அவள் சென்று கிராமவாசிகளைக் காப்பாற்றி அழைத்துப் போய்விடுகிறாள். ஏமாந்த பாம்பு சீறும்போது ஹெனோ அதைக் கொல்கிறது. இறந்த பாம்போ நயாகரா ஆற்றை அடைத்துக் கொண்டு குதிரை லாட வடிவில் ஒரு புதிய அருவியை உருவாக்குகிறது. நயாகரா ஆற்றில் ஆபத்தில் சிக்குவோரைக் காக்க எப்போதும் இடி தேவதைகளும் ஆதிவாசிப் பெண்ணும் அங்கே இருந்துகொண்டிருப்பதாக பழைய ஆதிவாசி நம்பிக்கை உள்ளது. பனிச் சாரல் போல் அருவி தெறிப்பதால், ஆதிவாசிப்பெண்ணுக்கு பனிப் பெண் என்று பெயர்.
படத்தில் இந்தக் கதையை காட்சிப்படுத்தியிருந்தார்கள். நயாகரா அருவி மீது பல சாகசங்களைச் செய்ய முயன்று வென்ற, தோற்றவர்களின் சில உண்மைக் கதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுமார் 180 வருடங்களுக்கு முனால் சாம் பிட்ச் என்பவர் அருவியின் உச்சியில் இருந்து கீழே குதித்து உயிரோடு தப்பினார். அதன் பின்னர் சுமார் 15 பேர் குதிப்பதும் அருவியின் குறுக்கே கம்பியில் நடப்பது, பீப்பாய்க்குள் இருந்துகொண்டு அருவியில் உருண்டு வருவது என்று பல விதமாக சாகசங்கள் செய்திருக்கிறார்கள். பள்ளி ஆசிரியையான ஆனி எட்சன் டெய்லர் என்பவர் பீப்பாய்க்குள் தன்னை அடைத்துக் கொண்டு அருவியில் உருண்டார். லேசான காயங்களுடன் தப்பினார். தான் பீப்பாயில் உருள்வதற்கு முன்னால், தன் பூனைக்குட்டியை அதில் வைத்து முதலில் உருட்டிப் பார்த்தார். பூனை பத்திரமாக வந்ததும் ஆனி பீப்பாயில் சென்றார் இப்படி ஏதாவது செய்து புகழடைந்தால், தன் வறுமை போய்விடும் என்று ஆனி நினைத்தார். ஆனால் அவர் கடைசியில் வறுமையில்தான் செத்தார். .
கம்பியில் நடக்கும் சாகசத்தைப் பல பேர் செய்திருக்கிறார்கள். ஸ்டீவ் ட்ராட்டர் என்பவர்தன் அருவியில் பீப்பாயில் உருண்டவர்களிலேயே இளைஞர். வயது 22. இவர் 1985ல் ஒரு முறையும் மறுபடி 1995ல் ஒரு முறையும் இதே சாதனையைச் செய்தவர். இரண்டு பேர் ஒரே பீப்பாய்க்குள் இருந்துகொண்டு உருள்வதை பீட்டர் டிபர்னாடியும் ஜேம்ஸ் பெட்கோவிச்சும் 1989ல் செய்தார்கள். இவர்கள் ஃபைபர்கிளாஸ் பீப்பாய்க்குள் இசை கேட்க ரேடியோவும், படம் பிடிக்க கேமராவும் பொருத்திக் கொண்டு சென்றார்கள். நயாகரா அருவியில் இப்படிப்பட்ட சாகசங்கள் செய்வது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டிருக்க்கிறது. ஆனால் யாரையும் தடுப்பதில்லை. சாகசத்தில் தோற்றால் மரணமே தண்டனை. ஜெயித்து வந்தால், அமெரிக்க, கனடா அரசுகள் தடையை மீறியதற்காக சில ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கின்றன. உயிர் தப்பினாலும் நிறைய காயங்களுடனும் அபராதமும் செலுத்தும் கொடுமை சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
நயாகரா தகவல் மையத்தில் நான் படம் பார்க்கச் சென்றிருந்த சமயம், திடீரென தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. அடுத்த ஐந்தே நிமிடங்களில் நூற்றுக் கணக்கானவர்கள் இருந்த முழு அரங்கையும் மைய வரவேற்புக் கூடத்தையும் காலி செய்துவிட்டார்கள். பதற்றம் இல்லாமல், தள்ளு முள்ளு ஏற்படாமல், அதே சமயம் விரைவாகவும் ஒழுங்காகவும் காலி செய்த் நேர்த்தி அசர வைத்தது. மக்க்ளின் ஒத்துழைப்பு அபாரமாக இருந்தது. அடுத்த அரை மணி நேரத்துக்குள் மின்கசிவால் தீ ஏற்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு மையம் சகஜமாக இயங்க ஆரம்பித்தது.
நயாகராவிலிருந்து புறப்படும்போது, திரும்ப இன்னொரு முறை படகிலும் படிக்கட்டிலும் அருவியிடம் போகவேண்டுமென்று தோன்றியது. நயாகராவுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் படகில் அருவியிடம் சென்றவர்கள் குறைவு. இந்தியாவிலிருந்து ஒரே ஒரு பிரதமர் ஜவஹர்லால் நேரு. அமெரிக்க ஜனாதிபதிகள் ரூஸ்வெல்ட், ஜிம்மி கார்ட்டர், சோவியத் பிரதமர் கோசிஜின், அதிபர் கார்பசேவ், நடிகை மர்லின் மன்றோ, இளவரசி டயானா எனச் சிலர்தான் படகில் போயிருக்கிறார்கள்.
நயாகரா அருவி பார்ப்பதற்கான அருவி மட்டுமல்ல. கேட்பதற்கான அருவியும் கூட. படகிலும் படிக்கட்டிலும் அதன் அருகில் செல்லும்போது நெருக்கமாகக் கேட்கும் பிரும்மாண்டமான ஓசை ஒரு இசை. அங்கிருந்து விலகி விலகி, பார்வை கோபுரத்திலிருந்தும், பூங்காவிலிருந்தும் கேட்கும்போது சற்றே தொலைவில் கேட்கும் ஓசை இன்னொரு இசை. கண்களை மூடிக் கொண்டு அருவியின் ஒலியைக் கேட்கும்போது, சக சுற்றுலா பயணிகள் சள சளவென்று பேசுவது நிச்சயம் எரிச்சலாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு அருவிக்கும் ஓசை உண்டு. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. நயாகராவின் ஓசை ஒரே சமயத்தில் பிரும்மாண்டமானதாகவும் அச்சுறுத்தாமல் அமைதி தருவதாகவும் இருக்கிறது.
நயாகராவிலிருந்து அருளின் லூயி செண்ட்டர் வீட்டுக்குத் திரும்பியதும் மறு நாள் அமிஷ் கிராமத்துக்குச் செல்வதாக திட்டமிட்டிருந்தோம். அமிஷ்கள் யார் என்பதை முதலில் பார்ப்போம். எனக்கு அமிஷ்கள் பற்றி முதலில் தெரியவந்தது நான்காண்டுகள் முன்னர்தான். அருள்தான் அப்போது க்டோபர் 2006ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை எனக்கு சுட்டிக் காட்டியிருந்தார். அதைப் பற்றி அப்போது என் வாராந்தர பத்தியான ஓ பக்கங்களிலும் எழுதியிருந்தேன். இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்ச்சி அது.
பென்சில்வேனியா மாநிலத்தில், நிக்கல்மைன்ஸ் என்ர அமிஷ் கிராமத்துக்குப் பக்கத்து ஊரில் வசிக்கும் பால்வண்டி டிரைவரான சார்லஸ் கார்ல் ராபர்ட்ஸ் என்பவன், கிராமப் பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து துப்பக்கி முனையில் பத்து சிறுமிகளைப் பிணைக்கைதிகளாக்கினான். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். பள்ளிக்கூடம் என்பது ஒரே ஒரு அறிஅதான். அறைக்குல் தாழிட்டுக் கொண்ட ராபர்ட்ஸ், அங்க்ரிந்து தன் மனிவியுடன் போனிலும் பேசினான். சிறுமிகளைப் பாலொயல் வன்முரை செய்யப்போவதாக மிரட்டினான். ( ஆனால் செய்யவில்லை). பள்ளி ஆசிரியை தகவல் சொன்னதும், போலீஸ் வந்தது. ராபர்ட்ஸை வெளியே வரும்படி எச்சரித்தது. அவன் அதைப் பொருட்படுத்தாமல், பத்து சிறுமிகளை ( 6 முதல் 13 வயது வரை) பின்னந்தலையில் சுட்டான். ஐந்து பேர் இறந்தார்கள். ராபர்ட்ஸ் தன்னையும் சுட்டுக் கொண்டு செத்தான்.
கொலை செய்ய வருவதற்கு முன்பு ராபர்ட்ஸ் தன் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போய்விட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறான். வீட்டில் தகொலைக்கடிதங்களும் வைத்துவிட்டு வந்திருக்கிறான். பல வருடங்களுக்கு முன்னர் இரு குழந்தைகளைத் தான் பாலியல் வன்முறை செய்தது தன்னை உறுத்திக் கொண்டிருப்பதாகக் கடித்தத்தில் சொல்லியிருந்தான். ஆனால் ஏன் அமிஷ் சிறுமிகளைக் கொன்றான் என்று புரியவில்லை.
இந்தக் கொடூரமான நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த அமிஷ் சிறுமிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட அந்த கிராமவாசிகள் என்ன செய்தார்கள் என்பதுதான் முக்கியம்.
ராபர்ட்ஸை மன்னிப்பதாகச் சொன்னார்கள்! அவனுடைய இறுதிச்சடங்கில் வந்து கலந்துகொள்லலாமா என்று அவன் மனைவியிடம் கேட்டு அனுப்பினார்கள். நிராதரவாகிவிட்ட அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் உதவுவதற்காக நிதி திரட்டித்தந்தார்கள். ராபர்ட்ஸின் இறுதிச்சடங்கில் 40 அமிஷ்கள் பங்கேற்றார்கள். வன்முறையும் பதிலுக்கு பதிலாக செய்யும் வன்முறையும் எதையும் தீர்க்காது; அன்பு ஒன்றுதான் தீர்வு என்பதே அமிஷ்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஜெர்மனியில் உதயமாகி அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த ஒரு மைனாரிட்டி கிறித்துவப் பிரிவின் பெயர்தான் அமிஷ். 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த இந்த அமிஷ் கிறித்துவர்களின் மதக் கோட்பாடு – எளிமை ! ( ஜெர்மன் மொழியில் hochmut என்ற சொல்லுக்கு கர்வம் பெருமை, படாடோபம் என்றெல்லாம் அர்த்தம். இதற்கு எதிராக demut என்கிற அடக்கத்தைஅயும் gelassenheit என்கிற சரணாகதியையும் பின்பற்றுவதுதான் அமிஷ் கிறித்துவம் . எல்லாமே கடவுள் விருப்பப்படிதான் நடக்க வேண்டும்; அதை நாம் மீறியவர்கள் அல்ல என்பதுதான் இவர்களின் சரணாகதிக் கோட்பாடு.
‘மின்சாரத்தை உபயோகிக்கமாட்டோம். கார், பஸ், டெலிபோன்,டெலிவிஷன் எதுவும் வேண்டாம். பழைய குதிரை வண்டியே போதும். ஆடம்பர உடைகள் கூடாது. அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி உதவியும் பெற மாட்டோம். இயற்கைக்கு எதிராகப் போராடும் இன்ஷ்யூரன்ஸ் கூடத்தேவையில்லை; ராணுவத்திலோ, போலீசிலோ, அரசு வேலைகளிலோ சேரமாட்டோம். விவசாயமும் கைவினைப்பொருட்களும் எங்களுக்குப் போதும்’ என்று பிடிவாதமாக சொல்லிக் கொண்டு இன்றைய அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்கள் அமிஷ்கள். அமெரிக்காவில் 21 மாநிலங்களில் மொத்தமாக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அமிஷ்கள் வாழ்கிறார்கள்.
மனிதர்கள் ஒருவரோடொருவர் போட்டியிடக் கூடாது என்பதால் இவர்கள் குழந்தைகளை ரெகுலர் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. கல்வி என்பதே ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரை சார்ந்தும் ஒத்துழைத்தும் வாழ வேண்டும் என்பதைக் கற்றுத்தருவதுதான். எனவே இவர்கல் தங்களுக்கென்றே நடத்தும் பள்ளிகளில் குழந்தைகளுக்குப் போட்டிகள் கிடையாது. ஒவ்வொரு குழுவும் தன் முந்தைய சாதனையை தானே முறியடிக்கத்தான் பாடுபடும். இன்னொரு குழுவுடன் போட்டியிடாது. ஏட்டுப் படிப்புடன் கைத்தொழிலும் கட்டாயம்.
எல்லாருமே கிராம வாழ்க்கைதான். பின்னல் வேலைப்பாடுகள், மெத்தை நெய்வது, விவசாயம் மட்டுமே தொழில்கள். நவீன தொழில்நுட்பங்கள் கிடையாது. டிராக்டர் இல்லை. ஏர் பூட்டிய குதிரைகள்தான் உழும். திருமணத்திலொ மோதிரம் கூட மாற்றமாட்டார்கள். காரணம் நகை ஆடம்பரமானது. உடைகள் மங்களான வண்ணங்களில்தான் இருக்கும். பட்டன்கள் கூட ஆடம்பரம். எனவே நாடாக்கள்தான். ஆண்கள் மீசை வைப்பது இல்லை. அது ராணுவத்தொழிலின் அடையாளம் என்பதால் ! குடும்பக் கட்டுப்பாடு கடவுளுக்கு விரோதமானது…குழந்தைகளுக்கு மத ஞாஸ்நானம் கூடக் கட்டாயமில்லை. பெரியவர்களானபின்னர் விருப்பப்படி செய்துகொள்லலாம். மதகுரு கிராமவாசிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கிராமத்தில் யாரேனும் தவறு செய்தால் அவரிடம் இரு பெரியவர்கள் முதலில் அறிவுரை சொல்வார்கள். அடுத்த கட்டத்தில், ஊர் முன்னால் குற்றத்தை ஒப்புக் கொள வேண்டும். திருந்தாவிட்டால் ஊரிலிருந்து அவர்களை விலக்கி வைத்துவிடுவதுதான் அதிகபட்ச தண்டனை. ஆஸ்கர் விருது பெற்ற ‘விட்னஸ்’ படம் அமிஷ்களின் வாழ்க்கை பற்றியது.
இப்படிப்பட்ட அமிஷ்களைக் காண மிகுந்த ஆர்வத்தோடு இருந்தேன்.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 6
சில வருடங்களுக்கு முன்னர் திருச்சி லயன்ஸ் மாவட்ட சங்கத்தினர் நடத்திய விஷன் 2020 திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுடன் இந்தியச் சுற்றுப் பயணம் சென்றிருந்தேன். அப்போது பீஹாரில் நளந்தா பல்கலைக் கழக இடிபாடுகளைப் பார்த்துவிட்டு, அருகில் இருந்த ஒரு கிராமத்துக்குச் சென்றோம். அங்கே ஒரு மலை உச்சியில் ஜப்பானியர்கள் புத்தருக்கு சலவைக் கல்லில் கோவில் கட்டியிருந்தார்கள். மலை உச்சிக்குக் கம்பி ரயிலில்தான் செல்ல வேண்டும்.
பெயர்தான் ரோப் கார், விஞ்ச் என்றெல்லாம். அசலாக அது கம்பியில் ஒரு கொக்கியில் தொங்கும் ஒற்றை இரும்பு நாற்காலி. பத்தடி இடைவெளியில் அடுத்த தொங்கும் நாற்காலி. ஒன்றில் ஒருவர்தான் உட்காரலாம். உட்கார்ந்ததும் குதிரை வண்டிகளில் பின்புறம் இருப்பது போன்ற கொக்கியை நாமே எடுத்து செருகிக் கொள்ளவேண்டும். துருப் பிடித்திருந்த அந்தக் கம்பி நாற்காலி மலை உச்சி நோக்கிப் பயணத்தை தொடங்கியதும், அது ஆடிய ஆட்டம் இருக்கிறதே, இத்தனை வருடம் கழித்து நினைத்துப் பார்த்தால் கூட நடுக்கமாக இருக்கிறது. கீழே குனிந்து பார்த்தால் இன்னும் பயம் அதிகரிக்கும். காரணம் கம்பி நாற்காலி செல்லும் பாதை நெடுக நேர்கீழே கரடுமுரடாகப் பாறைகள். விழுந்தால் நிச்சயம் மரணம்தான்.
மேலே போய்ப் பார்த்த புத்தர் கோயிலின் அழகும் அமைதியும் தருகிற மகிழ்ச்சி, திரும்பவும் இதே கம்பி நாற்காலியில் இறங்க வேண்டுமென்று நினைக்கும்போதே காலியாகிவிடும். மரணத்தில் சிக்க/தப்பிக்க இரண்டு வாய்ப்புகளைத் தருவதாக அந்தக் கம்பி நாற்காலி இருந்தது.
நயாகராவின் பிருமாண்டத்துடன் ஒப்பிடும்போது அந்த பீஹார் குன்று ஒரு சுண்டைக்காய். அதைக் கடப்பதையே பெரும் ஆபத்துகள் உடையதாக நாம் ஆக்கி வைத்திருக்கிறோம். நயாகராவிலோ, முதலில் அருளிடம் நான் படகில் போகமாட்டேன் என்று பயந்தது எவ்வளவு அசட்டுத்தனம் என்று வெட்கப்படும் அளவுக்கு, பாதுகாப்பான ஏற்பாடுகள்.
படகுப் பயணத்தில் நயாகரா அருவியில் அமெரிக்கப் பகுதியில் இருக்கும் முதல் அருவியில் தொடங்கி, அடுத்து மணமகள் முகத்திரை ( பிரைடல் வெய்ல்) எனப்படும் மெல்லிய திரை போல சாரல் அடிக்கும் இரண்டாம் அருவி விழும் இடமருகே போய் அடுத்து கனடா பகுதியில் இருக்கும் லாட வடிவ அருவியின் அடிப்பகுதியைக் கடந்து திரும்புகிறோம். இயற்கையின் பிரும்மாண்டமும், அழகும் வசீகரிக்காத மனங்களே, அப்போது அந்தப் படகில் இருக்க முடியாது.
அன்றிரவு அருளுடன் அருவி அருகே ஓர் ஓட்டலில் தங்கினேன். முன்னிரவில் மறுபடியும் நயாகராவைக் காண வந்தபோது வண்ண வண்ண ஒளிவிளக்குகளால் நயாகராவின் முகமே மாறிப் போயிருந்தது. இரவு உணவுக்கு வேறொரு இந்திய உணவகத்தைத் தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து சாப்பிட்டோம். இந்திய உணவு என்பதற்கு பதில் அதற்கு வேறு ஏதாவது பெயர் வைத்து இந்தியாவின் பெயரைக் காப்பாற்றலாம்.
நயாகாரவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் ஏராளமான இந்தியர்கள் இருக்கிறார்கள். கணிசமான அளவு தமிழர்களும் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் இதர பகுதிகளில் இருக்கும் அளவு, தரமான இந்திய உணவகங்கள் ஏனோ நயாகராவில் இல்லை.
மறுநாள் நயாகராவின் இன்னொரு பக்கத்தை தரிசித்தேன். அருவியின் மேல்பகுதியில் பக்கத்தில் இருக்கும் சமவெளியில் இருந்து, நெடுகே ஒரு சுரங்க லிஃப்ட் அமைத்திருக்கிறார்கள். லிஃப்ட்டில் கீழே வந்து இறங்கினதும், மரப்பாலப் படிக்கட்டுகள் ஆரம்பிக்கின்றன. இவை அருவியின் அடிப்பாகத்தில் தொடங்கி, மேல் வரை அருவியின் பக்கத்திலேயே கட்டப்பட்டிருக்கின்றன. இதில் நட(னை)ந்து சென்றால், அருவியைத் தொட்டுப் பார்க்கலாம். சோப்பும் ஷாம்பூவும் இருந்தால் குளிக்கக் கூட குளித்துவிடலாம். (அனுமதி கிடையாது). எந்த அளவுக்குப் பக்கத்தில் செல்கிறோம் என்றால் நீங்கள் விரும்பாவிட்டால் கூட முழுக் குளியல் முடிந்துவிடும்.
இங்கே செல்லும்போது அணிவதற்கு ஒரு மெல்லிய பிளாஸ்டிக் கோட்டையும், காலுக்கு ரப்பர் செருப்பையும் தருகிறார்கள். அவற்றை நினைவுப் பொருட்களாக நாமே வைத்துக் கொள்ளலாம். நான் செருப்பை பத்திரமாகக் காப்பாற்றி இந்தியாவுக்குக் கொண்டு வந்துவிட்டேன். (என் மூக்குக் கண்ணாடியைத்தான் பயணத்தின்போது தொலைத்த இடம் தெரியாமலே தொலைத்துவிட்டேன் !)
மொத்தத்தில் நயாகரா அருவியைப் பல இடங்களில் இருந்து பல கோணங்களில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. லாங் ஷாட், டாப் ஆங்கிள், லோ ஆங்கிள், மிட்ஷாட், க்ளோசப்,வலது பக்கம், இடது பக்கம் என்று பல விதங்களில் பார்க்க முடிகிறது.
நயாகரா அருவியின் மேற்புறத்தில் இருக்கும் தீவுப்பகுதிகள், அற்புதமான புல்வெளிகள் மரங்களுடன், பூங்காக்களாகத் திகழ்கின்றன.
அண்மையில் நம்ம ஊர் குற்றாலத்துக்குப் போயிருந்தேன். குளிப்பதற்கான அருவிகள் நிறைந்த இடம் குற்றாலம். 31 வருடங்கள் கழித்து குற்றாலத்தைப் பார்க்கும்போது தென்பட்ட முக்கியமான வித்யாசம், குளிக்கும் இடங்களில் பிரகாசமான விளக்குகளுடன் பாதுகாப்பான கைப் பிடிக் கம்பிகள் போட்டிருப்பதுதான். மற்றபடி அருவியோரத்தில் இருக்கக் கூடிய கோவில்கள் முதல், கடைகள், நுழைவுப்பாதை எல்லாமே அழுக்காகத்தான் இருக்கின்றன.
ஐந்தருவியில் ஒரு கண்காணிப்பு டவர் கட்டியிருக்கிறார்கள். அதிலும் இன்னார் உபயம் என்று விளம்பரதாரர் பெயர். பெண்கள் இங்கே உடை மாற்றக் கூடாது என்று போர்டு வைத்தால் அதில் மூன்றில் ஒரு பகுதி ஒரு உபயதாரரின் பெயர். நயாகராவிலும் அறிவிப்புப் பலகைகள் இருக்கின்றன. கவனத்தை ஈர்த்து, அதே சமயம் கண்ணை உறுத்தாமல் அமைக்கப் பட்டிருக்கின்றன. கடைகள் உள்ள பகுதிகள் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டைப் பிடித்திருக்கிற ஃபிளெக்ஸ் வியாதியை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மரபான பெயர்ப் பலகை தீட்டும் ஓவியர்களை ஒழித்துக் கட்டிவிட்டோம். அழகிரியும் திருமாவும் பட்டி தொட்டியெங்கும் பரப்பியிருக்கும் இந்த ஃபிளெக்ஸ் கலாசாரம், சீரழிவின் உச்சத்துக்குப் போயிருக்கிறது.
பூப்பெய்திய சிறுமிக்குக் கொண்டாடும் மஞ்சள் நீராட்டு விழா ஃபிளெக்ஸ்களில் அவள் படத்தை சினிமா நடிகைகள் மாதிரி போட ஆரம்பித்துவிட்டார்கள். எதற்குத்தான் ஃபிளெக்ஸ் என்று வரையறையே இல்லை. இன்று மாலை 6.30க்கு தன் வீட்டு டி.வியில் மானாட மயிலாட பார்க்க விருக்கும் சுரேஷை வாழ்த்தி, சொந்தமும் நட்பும் என்று ஃபிளெக்ஸ் போடும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
நயாகராவில் மட்டுமல்ல, அமெரிக்காவில் நான் சென்ற எந்த இடத்திலும் ஃபிளெக்ஸ் போர்டுகள் இந்த அளவுக்கு இல்லை. மொத்தமாக விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுதான் இருக்கும். வினைல் எனப்படும் பிளாஸ்டிக் பூச்சுடைய துணிகளில் அச்சிடுவதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் மேலை நாடுகள்தான். வினைல், ஃபிளெக்ஸ்களை உருவாக்கியதும் அவர்கள்தான். வெளி நாட்டிலிருந்துதான் இதற்கான மெஷின்களை நாம் தருவித்துக் கொண்டிருக்கிறோம். சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி நமக்கு விற்றுவிட்டு அவர்கள் எச்சரிக்கையோடு பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் பயோ டீகிரேடபிள் எனப்படும் இயற்கையாக மக்கி இயற்கையுடன் கலந்துவிடக் கூடிய பொருட்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
சின்னச் சின்ன விஷயங்களில் கூட இந்த கவனம், அவர்களுக்கு இருக்கிறது. உணவகங்கள் ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களில் மரங்கள்,செடிகள் வளர்க்கப்பட்டிருக்கும் பகுதிகளில், மரத்தையும் செடியையும் சுற்றியுள்ள பகுதியில் மண்ணைப் பார்த்தபோது அது வேறு மாதிரியாகத் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தால் மண் மீது, மரச் சக்கைகளை, தச்சுக் கழிவுகளை பரப்பியிருக்கிறார்கள். அவை மண்ணில் இறங்கியது போக எஞ்சிய உபரி நீரை உறிஞ்சிக் கொண்டு விடுகின்றன. தண்ணியில்லாதபோதும் செடிக்கு, இந்த சக்கைகளிலிருந்து நீர் கிடைக்க முடியும். தண்ணீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இப்படிச் சூழல் பராமரிப்பு பற்றிய ஒரு நுட்பமான கவனம் அங்கே செயல்படுகிறது.
நயாகரா மின் திட்டமே சூழல் அக்கறைக்கு ஒரு எடுத்துக் காட்டு. அருவிக்கு மேலே ஆற்றில் இருந்தே நிலத்துக்குள் வெட்டப்பட்ட, பிரும்மாண்டமான நான்கு சுரங்கக் கால்வாய்கள் மூலம் நயாகரா ஆற்று நீர், அருவியின் கீழ்ப் புறம் கொண்டு வரப்பட்டு, அங்கே அதிலிருந்து டர்பைன்கள் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது. மின் உற்பத்தி முடிந்ததும், நீரை அப்படியே ஆற்றில் விட்டு விடுவதில்லை. மறுபடியும் சுரங்கக் கால்வாய்கள் குழாய்கள் வழியே அருவிக்கு மேல் பக்கம் ஆற்றுக்கு அனுப்புகிறார்கள். அது அருவியாகக் கொட்டுகிறது.
சுற்றுலாவா, மின்சாரமா என்ற கேள்வி நயாகரா திட்டத்தில் எழுந்தது உண்டு. 1870களில் பொது மக்கள் நயாகரா அருவியைப் பார்க்கச் செல்லவே அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்கப் பகுதியில் இருக்கும் ஆட்டுத் தீவில், நயாகரா மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உருவாகி வந்தன. தீவே நாசமாகிவிடும் நிலை வந்தது.
அப்போது ஃப்ரீ நயாகரா – நயாகராவை விடுதலை செய் ! என்ற இயக்கம் தொடங்கப் பட்டது. இதை நடத்தியவர்கள் ஓவியர்கள், சிற்பிகள், கட்டடக் கலைஞர்கள், பேராசிரியர்கள். (இங்கே இவர்களெல்லாம் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம் !)
நயாகராவைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் தொழிற்சாலைகளை அகற்றிவிட்டு, பழையபடி இயற்கை எழிலுடன் பூங்காக்கள் அமைக்க வேண்டுமென்று கோரிய மக்கள் இயக்கம் வலுவடைந்தது. 1882ல் நயாகரா அருவி சங்கம் என்ற அமைப்பு மக்களைத் திரட்டி, பெரும் கடித இயக்கம் நடத்தியது.
இதையடுத்து தனியார்வசம் இருந்த பகுதிகளையெல்லாம் நியூயார்க் மாநில அரசு விலைக்கு வாங்கியது. தொடர்ந்து அவ்வபோது அமெரிக்க அரசும் கனடா அரசும் போட்ட பல்வேறு ஒப்பந்தங்களின்படி, நயாகரா ஆற்று நீரில் பாதி அளவை மட்டுமே மின்சாரத்துக்காக எடுப்பதென்று முடிவாயிற்று. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காலங்களில், இந்த நீரின் அளவைக் குறைத்துக் கொண்டு, அருவியில் அதிக நீர் வருவதற்கும் வழி செய்யப்பட்டது. சராசரியாக நிமிடத்துக்கு 20 முதல் 40 லட்சம் கன அடி நீர் அருவியில் விழுகிறது.
நயாகராவைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகள் முதல், அதில் தொடர்ந்து சாகசங்கள் செய்ய முயற்சித்தவர்கள் வரை பல சுவையான நிகழ்ச்சிகள் நயாகராவின் வரலாற்றில் இருக்கின்றன. இவற்றைத் தொகுத்து ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். நயாகராவில் இருக்கும் தகவல் மையத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 5
சுற்றுலாப் பயணிகள் சென்னைக்கு வந்தால் மெரீனா கடற்கரையையும் மதுரைக்குச் சென்றால் மீனாட்சி கோயிலையும், டெல்லிக்குச் சென்றால் தாஜ் மஹாலையும் பார்க்காமல் போவதில்லை என்பது போல, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்க்கும் இடம் நயாகரா அருவி.
அருள் என்னை நயாகராவுக்கு அழைத்துச் சென்றார். காரில் சுமார் ஆறு மணி நேரப் பயணம். அமெரிக்காவில் இருந்த நாட்களில் இது போல நியூயார்க்கிலிருந்து நியூஜெர்சி பிஸ்காட்டவேவுக்கு, ட்ரெண்ட்டனிலிருந்து ஃபிலடெல்பியாவுக்கு, கனெக்டிகட்டிலிருந்து நியூஜெர்சிக்கு என்று பல முறை காரில் இரண்டு மணி நேரப் பயணங்கள் செய்தேன்.
அமெரிக்காவில் நண்பர்களிடம் ஒரு இடத்துக்குச் செல்ல எவ்வளவு தொலைவு என்று கேட்டால், அதற்கு மணிக் கணக்கில்தான் பதில் சொல்கிறார்கள். ஒரு மணி நேர தூரம், மூன்று மணி நேர தூரம் என்று. அதை மைல் கணக்கில் கணக்கிடுவதானால், சராசரியாக நெடுஞ்சாலைகளில் எண்பது மைல் வேகத்துக்குக் குறையாமல் கார்கள் ஓட்டப்படுகின்றன.
நம் ஊரில் கிலோமீட்டர் பழக்கத்துக்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் மைல்கள்தான் கணக்கு முறை. மீட்டர் கிடையாது; அடிதான். கார், பஸ்களில் இடது பக்கத்தில் ஸ்டியரிங். தெருவில் எல்லாம் கீப் ரைட்தான். ஏதாவது ஒரு விதத்தில் தங்களை பிரிட்டிஷ் வேர்களிலிருந்து வேறுபடுத்தி வைத்துக் கொள்ள முயற்சித்ததன் விளைவுகள் இவை.
வித்யாசமாக இருக்க முயற்சிப்பது ஓகேதான். ஆனால் அநியாயத்துக்கு கட்டடங்களில் எல்லா ஸ்விட்ச்களையும் கூட தலை கீழாக வைத்திருக்கிறார்கள். மேலே தள்ளினால் ஆன். கீழே தள்ளினால் ஆஃப். பிளக்குகளைக் கூட ஃ மாதிரி இல்லாமல் தலைகீழாக வைத்திருக்கிறார்கள்.
அருளுடன் நயாகரா சென்ற நீண்ட கார் பயணம் முதல், எல்லா கார் பயணங்களிலும் வழியில் நான் முக்கியமாக கவனித்து மகிழ்ந்த விஷயம், நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓய்விடங்களும் பூங்காக்களும்தான். அடுத்த ஓய்விடம் எத்தனாவது மைலில் என்ற அறிவிப்புகள் தெளிவாக இருக்கின்றன. ஓய்விடங்களில் கழிப்பறைகள் படு சுத்தமாக, அதாவது படுத்துத் தூங்கும் அளவுக்கு சுத்தமாக இருக்கின்றன. உடற்குறையுள்ளவர்களுக்கு வசதியாகவும், கைக் குழந்தைகளை சுத்தப்படுத்தி உடை மாற்ற வசதியான அமைப்புகளுடனும் இல்லாத ஓய்விடமே இல்லை.
நமது நெடுஞ்சாலைப் பயணங்களின்போது எந்த ஓட்டலிலும், எந்தக் கழிப்பிடத்திலும் இன்று வரை சுத்தமான டாய்லெட்டுகளை நான் பார்த்ததே இல்லை. கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு பிரும்மாண்டமான தண்ணீர் தொட்டி மாதிரி தலைமைச் செயலகம் கட்டுகிற நம் அரசால், குடிமக்களுக்கு தூய்மையான கழிப்பறைகளை இன்று வரை அளிக்க முடியவில்லை.
மதுரையில் தமுக்கம் மைதானத்தில் பத்து நாள் புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தேன். பல முறை முறையிட்டும், பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் தலையிட்டும் கூட, பொதுக் கழிப்பறைகளை உள்ளூர் நிர்வாகத்தால் சுத்தமாகப் பராமரிக்க முடியவில்லை. கழிப்பறைக்கு வெளியே அரங்கில், ஒரு (நிஜமான) காது குத்தும் விழாவுக்கு வருகை தந்த அழகிரிக்காக, வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ் போர்டுகளின் பளபளப்புக்குப் பின்னால் இருந்தது வெறும் முடை நாற்றம்தான்.
நயாகரா செல்லும் வழியில் இருந்த ஓய்விடங்களில், அவற்றைப் பராமரிக்கும் உள்ளூர் நிர்வாகம் அஞ்சல் அட்டைகளை பொது மக்கள் பார்வையில் வைத்திருக்கிறது. கழிப்பறை பராமரிப்பு எப்படி உள்ளது என்பது பற்றி அதில் பல கேள்விகள். நிரப்பி எந்த அஞ்சல் பெட்டியிலும் போடலாம். ஸ்டாம்ப் ஒட்டத் தேவையில்லை.
நயாகராவுக்குச் செல்லும் வழியில் நெடுஞ்சாலை உணவகத்தில் சாப்பிட்டேன். அமெரிக்காவில் இருந்த நாட்களில் பெரும்பாலான வேளைகள், தமிழ் நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டதால் தப்பித்தேன். முட்டை தவிர வேறு அசைவ உணவு சாப்பிடாத பழக்கமும், சைவ உணவில் பழங்களைத் தவிர வேறெதையும் சமைக்காமல் சாப்பிடுவதில்லை என்ற பழக்கமும் உடையவன் என்பதால், வெளியே சாப்பிடுவது எனக்கு சிரமமாகவே இருந்தது.
ரொட்டி, பன் போன்ற தோற்றத்தில் இருக்கக் கூடிய பொருட்களைத் தேடித் தேடி சாப்பிட்டேன். வெஜிடேரியன் பர்கர் என்று கேட்டால், அதில் உள்ளே வைப்பது எல்லாம் சமைக்காத சேலட் போன்ற காய்கறித் துண்டுகள், கீரைகள்தான். நிறைய சமயங்களில் ஆப்பிள் பை, டோநட்ஸ், ஹேஷ் பிரவுன் போன்ற தின்பண்டங்களே கை கொடுத்தன. மறைந்த எழுத்தாளர் மணியன் சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்னால், உலகத்தின் பெரும்பாலான நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு பயணக் கட்டுரைகள் எழுதியபோது, ஒவ்வொரு ஊரிலும் எங்கே இட்லி,வடை, தோசை, பொங்கல், சாம்பார், சட்னி கிடைக்கும் என்று, ஏன் எழுதினார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
அப்போது இருந்திருக்கக் கூடிய அளவு சிக்கல் இப்போது இல்லைதான். நயாகராவிலேயே மூன்று இந்திய உணவகங்களைப் பார்த்தேன். எல்லாம் பஞ்சாபிகளால் நடத்தப்படுகின்றன. தென்னிந்திய தட்டுச் சோறு கூடப் போடுகிறார்கள். தரம் சுமார்தான்.
நயாகராவில் அருளும் நானும் அருவிக்குச் சென்றபோது மதிய நேரம். நயாகராவைப் பார்ப்பது நிச்சயம் ஒரு பரவசமான அனுபவம். இயற்கையின் பிரும்மாண்டத்தை, எழிலை, இந்தியாவில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவற்றிலிருந்து வேறுபட்ட அனுபவமாக நயாகரா இருந்தது.
நயாகராவிலிருந்து சுற்றுலா பற்றியும் வளர்ச்சி பற்றியும் நாம் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலக வரலாற்றிலேயே மிக மோசமான, ஆபத்தான, முட்டாள்தனமான ஒரு கருத்தை உதிர்த்த பெருமைக்குரியவராக நம் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார். “சுற்றுச் சூழல் முக்கியம்தான். ஆனால் வளர்ச்சியை பலி கொடுத்து சூழலைக் காப்பாற்ற முடியாது” என்று அவர் அண்மையில் சொல்லியிருக்கிறார்.
நியாயமாக சொல்லப்படவேண்டிய கருத்து – “வளர்ச்சி முக்கியம்தான். ஆனால் சூழலை பலி கொடுத்து வளர்ச்சியை செய்யக் கூடாது” என்பதுதான்.
நயாகராவில் இந்த சூழல்-வளர்ச்சி சமரசத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நயாகரா அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பெரும் சுற்றுலா வருவாயை ஈட்டித்தரும் இடமாகவும் இருக்கிறது. வருடத்துக்கு சுமார் 3 கோடி பேர் நயாகராவைப் பார்க்க வருகிறார்கள். நயாகரா அருவி நீர் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள புனல் மின் நிலையங்கள் மொத்தமாக 4.4. கீகாவாட் மின்சார உற்பத்தித்திறன் உடையவை.
அதே சமயம் இந்த இடத்தின் இயற்கை எழிலும் சூழலும் கெட்டுவிடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரே இடத்தில் சுற்றுலா, மின்சாரம், இயற்கைப் பாதுகாப்பு என்பது இன்றைய உலகில் விளையாட்டான, எளிதான விஷயமே அல்ல.
இது நயாகராவில் சாத்தியமாகியிருக்கிறது என்பது மட்டுமல்ல், இதில் இரண்டு வெவ்வேறு நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தம்மாத்தூண்டு ஒகேனக்கலில் நமக்கும் கர்நாடகத்துக்கும் தேவையற்ற பிரச்சினைகளை சிலர் கிளப்புகிறார்கள். ஒரே நாட்டுக்குள் இருக்கும் இரண்டு மாநிலங்களுக்குள் ! ஆனால் கனடா, அமெரிக்கா என்ற இரண்டு நாடுகள் நயாகராவை இருவர் நலனுக்காகவும் சிறப்பாகப் பயன்படுத்துகின்றன.
நயாகரா ஆறு உருவாகி சுமார் 12 ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அருவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 400 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்திலேயே இரண்டாவது பெரிய அருவி இது. அமெரிக்கப் பகுதியில் இருக்கும் அருவி, ஆயிரம் அடி அகலமும் கனடா பக்கமுள்ள குதிரை லாட வடிவிலான பகுதி 2600 அடி அகலமும் உடையவை.
நயாகரா ஆற்றை , ஆட்டுத் தீவு என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவு தடுத்து இரண்டாகப் பிரிப்பதால் அமெரிக்கப்பக்கம் ஓர் அருவியும் கனடா பக்கம் ஓர் அருவியுமாக விழுகின்றன. ஸ்ரீரங்கம் காவிரியை , காவிரி, கொள்ளிடம் என்று பிரிப்பது போல. இது சமவெளி. அது மலைப்பகுதி.
பிரெஞ்ச், ஐரோப்பிய பாதிரிகள் இங்கிருந்த ஆதிவாசிகளான செவ்விந்தியர்களிடம் சென்று சமயப் பணி செய்யப் போனபோதுதான் 1600களின் ஆரம்பத்தில் அருவிகளைப் பார்த்தார்கள். இப்போது அருவியை சென்று பார்க்க பல நவீன வசதிகள் உள்ள காலத்திலேயே, அருவியை நெருங்கியதும், அதன் பிரும்மாண்டமும், அழகும் பயத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்துகின்றன. 400 ஆண்டுகள் முன்னால் அதனருகில் சென்று பார்த்தவர்களின் மன அனுபவம் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்தால் மலைப்பாக இருக்கிறது.
நயககரேகா என்றழைக்கப்பட்ட அந்தப் பழங்குடி மக்களின் மொழியில் ஓங்குவிஹாரா என்ற சொல்லிலிருந்துதான் நயாகரா என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. வளைகுடா என்று ஒரு பொருளும் இடி முழக்கம் என்று இன்னொரு பொருளும் உள்ளனவாம்.
அமெரிக்கப்பகுதியில் அருவியை சற்று தொலைவிலிருந்து பார்ப்பதற்கு சுமார் 300 அடி உயரத்தில் ஒரு மாடம் இருக்கிறது. அருளுடன் அங்கு சென்று அருவியைப் பார்த்தேன். கீழே போய் படகில் அருவியருகே போய்விட்டு வாருங்கள்,என்றார் அருள். 300 அடி கீழே பார்த்தேன் படகுத் துறையில் பலர் காத்திருந்தார்கள். மோட்டார் படகு தயாராக இருந்தது.
எனக்கு பயமாக இருந்தது. அந்த அருவியின் அருகே போவதா ? அருள் பல முறை போய் வந்திருப்பதால் என்னைத் தனியாக வேறு போக சொல்கிறார். மிகவும் தயங்கினேன். இதயத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி ஆப்பு வைத்து ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. ஏதேனும் பாதிப்பு வருமோ, மருத்துவரிடம் இது பற்றிக் கேட்டுக் கொண்டு வராமல் போய்விட்டே னே என்றெல்லாம் யோசித்தேன். அருள், என்னைக் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறைதான். தைரியமாகப் போங்கள் என்றார்.
போனபிறகுதான் தெரிந்தது, எவ்வளவு பரவசமான அனுபவம், எவ்வளவு பாதுகாப்பான ஏற்பாடு என்பதெல்லாம்…
படகில் போய் அருவியின் அடியில் நனைந்ததுமட்டுமல்ல.. அடுத்த நாள் இன்னொரு பக்கம் அருவியின் அருகில் மரப்பாலத்தில் சென்று அதைத் தொட்டுப் பார்த்தது இன்னும் பரவசமான அனுபவமாக இருந்தது. அதற்கும் தனியாகவே சென்றேன்.
பீஹாரில் சிலவருடங்கள் முன்பு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மலைக்குச் சென்ற அனுபவம் நினைவுக்கு வந்தது.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 4
நம்மைச் சூழ்ந்திருக்கும் அரசியல் அவலங்கள், ஊழல்கள், முறைகேடுகள் பற்றியெல்லாம் நண்பர் அருளுடன் உரையாடும்போது, மூன்று அம்சங்கள் இருந்தாலெல்லாம் சரியாகிவிடும் என்பார். பகிரங்கத் தன்மை எனப்படும் டிரான்ஸ்பேரன்சி, நேர்மை, எளிமை இவைதான் அந்த மூன்று அம்சங்கள். நேர்மையோ எளிமையோ குறைவாக இருந்தால் கூட, பகிரங்கத்தன்மை இருந்தால் எல்லாம் அம்பலத்துக்கு வந்துவிடும்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் பயணம் செய்யும் அதிபாதுகாப்பான விமானப்படை விமானம் ஏர்ஃபோர்ஸ் ஒன் என்று இப்போது அழைக்கப்படுகிறது. ஆர்மப காலங்களில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் அவரவர் விமானத்துக்கு வெவ்வேறு பெயர் வைத்திருந்தார்கள். இந்த விமானங்களை காட்சிக்கு வைத்திருக்கும் அமெரிக்க விமானப்படையின் காட்சியகத்தை நான் பார்க்க வேண்டுமென்று அருள் விரும்பினார்.
அருள் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேரத் தொலைவில் இருக்கும் டெய்ட்டன் என்ற சிற்றூரில் அந்தக் காட்சியகம் இருக்கிறது. டெய்ட்டன்தான் காற்றை விட கனமான விமானம் காற்றில் பறப்பதற்கு வழிமுறைகளைக் கண்டுபிடித்து விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதர்களின் சொந்த ஊர். விமானத்துக்கு முன்னோடியான கிளைடர்களை 110 வருடங்களுக்கு முன்பே உருவாக்கிய வில்பர் ரைட், அவர் தம்பி ஆர்வெல் இருவரும் கூடவே சைக்கிள் தயாரிப்புக் கடை நடத்திவந்தார்கள். அச்சகம் வைத்து பத்திரிகைகளை வெளியிட்டார்கள். தானாக நிற்கமுடியாத சைக்கிளை ஓட்டுபவர் தன் பேலன்சிங் மூலம் நிலையாக்கி ஓட்ட முடியுமென்றால், அதே போல நிலையில்லாத விமானத்தையும் ஓட்டுபவர் பேலன்ஸ் செய்து ஓட்ட முடிந்தாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன்தான் ரைட் சகோதரர்கள் தனக்கள் விமான ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள்.
இருவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை. விமானமே எங்கள் எல்லா நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது; மனைவிக்கு ஒதுக்க நேரமில்லை என்று தமாஷாக சொல்லியிருக்கிறார்கள். இருவரையும் அன்புடன் பராமரித்தவர், ஆதரித்தவர் அவர்களுடைய தங்கையான கேதரின். ஆசிரியையான கேதரினும் நீண்ட காலம் திருமணம் செய்துகொள்ளவில்லை. வில்பர் தன் 45வது வயதில் இறதபின்னர், ஆர்வில் முழுக்க முழுக்க கேதரினை சார்ந்த்தே இருந்துவந்தார். கேதரின் தன் 52வது வயதில் பழைய சிநேகிதர் ஒருத்தரைத் திருமணம் செய்தது ஆர்விலுக்குப் பிடிக்கவில்லை. கேதரினுடன் உறவை முறித்துக் கொண்டார். கேதரின் சாகும்வரை அவரை சந்திக்கவோ பேசவோ இல்லை. மரணப் படுக்கையில் கேதரின் இருந்தபோது ஆர்விலை அவருடைய அண்ணன் லோரின் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். அரை நினைவில் இருந்த கேதரினிடம் லோரின் ,ஆர்விலை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டார். கேதரினால் தலையை மட்டுமே ஆமென்று அசைக்க முடிந்தது.
ரைட் சகோதரர்கள் என்றாலே வில்பர், ஆர்வில் மட்டுமே நினைவில் வருவார்கள். அவர்களுடைய அண்ணன்கள் இரண்டு பேர். ஒருவர் லோரின், மூத்தவர் ரூஷ்லின். இவர்கள் இருவரும் விவசாயிகள். திருமணம் செய்துகொண்டு குடும்பம் குழந்தைகள் என்று வாழ்ந்தவர்கள். ஆர்வில், வில்பர் செய்த விமானக் கண்டுபிடிப்புகளில் இவர்களுக்கு சம்பந்தமில்லை. கேதரின்தான் முழுக்க சம்பந்தப்பட்டிருந்தார். 1905ல் பிரான்சில் விமானத்தில் பறந்த முதல் பெண் என்ற பெயரையும் பெற்றார். ரைட் சகோதரர்களின் அப்பா மில்டன் ரைட் ஒரு மத போதகர். யுனைட்டட் பிரதரன் என்ற கிறித்துவப் பிரிவில் பிஷப்பாக இருந்தவர். இந்தப் பிரிவினர் அப்போதைய அமெரிக்காவில் இருந்த அடிமை முறையை எதிர்த்தவர்கள்.
டெய்ட்டனில் ரைட் சகோதர்களின் தொழிற்சாலை இப்போது அரசாங்கத்தினால் அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நான் அங்கே செல்ல நேரம் இருக்கவில்லை. டெய்ட்டனிலேயே இருக்கும் விமானப்படையின் அருங்காட்சியகத்துக்குச் சென்றேன். அங்கே ரைட் சகோதர்களின் சைக்கிள், பல்வேறு விமான பாகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த காட்சியகத்தில் அமெரிக்க விமானப்படை உருவான காலம் முதல் இப்போது வரை எப்படியெல்லாம் தொழில்நுட்பம் மாறி வந்திருக்கிறது, நவீன ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட வரலாறு எல்லாம் விவரமாகக் காட்சிப் பொருட்கள், வீடியோ, ஐமேக்ஸ் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றன. காட்சியகத்தை நிர்வகிப்பது தொண்டர்கள்தான். கடந்த வருடம் மட்டும் 480 தொண்டர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். மிகவும் இளையவர் வயது 19. மூத்தவர் வயது 93 ! முன்னாள் படை வீரர்கள் முதல் கல்லூரி , பள்ளி மாணவர்கள் வரை தொண்டர்களாக வேலை செய்கிறார்கள்.
அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும்போதே இப்படிப் பொது விஷயங்களில் தொண்டு செய்வது என்பது வலியுறுத்தப்படுகிறது. ஒரு மாணவர் 200 மணி நேரம் தொண்டு செய்திருந்தால், அது உயர் படிப்புக்கான அட்மிஷனில் அவருக்கு கூடுதல் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. நான் சென்ற பல மியூசியங்களில் நிறைய பள்ளி, கல்லூரி மாணவத் தொண்டர்களை சந்தித்தேன். ஒவ்வொருவரும் காட்சியகத்தில் எதை விளக்கும் பொறுப்பில் இருக்கிறார்களோ, அதை விவரமாகப் படித்துத்தெரிந்து வைத்திருக்கிறார்கள். குறுக்குக் கேள்விகள் கேட்டால் ( நாம்தான் நிச்சயம்கேட்போமே!)தயங்காமல் பதில் சொல்கிறார்கள். எதைப் பற்றியாவது தனக்கு சரியாகத் தெரியவில்லை என்றால், தெரியாது என்று சொல்லிவிட்டு, அந்த தகவல் வேறு எங்கே கிடைக்கக் கூடும் என்பதையும் சொல்கிறார்கள்.
இந்தக் காட்சியகத்தில் ஏன் அருள் என்னை ஜனாதிபதிகளின் விமானங்களைப் பார்க்கச் சொன்னார் என்பது அவற்றைப் பார்த்ததுமே புரிந்தது. கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தன்று பயணம் செய்த விமானம் உட்பட, ஜனாதிபதிகள் ட்ரூமன், ரூஸ்வெல்ட், ஐசன்ஹோவர் போன்ர பழைய ஜனாதிபதிகள் பயணித்தவை எல்லாமே அங்கே இருந்தன. அவற்றுக்குள்ளே ஜனாதிபதியின் படுக்கை, நாற்காலி, மேசை எல்லாமே ஆடம்பரங்கள் இல்லாமல் சாதாரண மரப்பலகையில் இருந்தன. அதிகபட்சம் நம் ரயிலின் மூன்றாம் வகுப்பு மெத்தைதான் சிலவற்றில் இருந்தது.
ரூஸ்வெல்ட் போலியோவினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியவர். ஆனால் பொது மக்கள் முன்பு வரும்போதெல்லாம், இரும்புக் கவசங்கள் பொருத்திய கால்களால், இடுப்பை அசைத்து அசைத்து ஒரு மாதிரி நடப்பவர் போலக் காட்டிக் கொள்வார். அவருடைய சக்கர நாற்காலியை அப்படியே தரையிலிருந்து விமானத்தின் இருக்கைக்கு எடுத்துச் செல்ல ஒரு லிஃப்ட் பொருத்தியிருந்தது. அமெரிக்காவில் வருடத்துக்கு வருடம் அதிகரித்து வரும் பகிர்ங்கத் தன்மையினால், ரூஸ்வெல்ட் காலத்தில் லேசாக மறைக்க முற்பட்ட சக்கர நாற்காலி விஷயம் கூட இப்போது எக்சிபிஷனுக்கு வந்துவிட்டது.
உலகின் வெவ்வேறு நாடுகளில் போர் செய்யச் செல்லும் அமெரிக்க சிப்பாய்களை உற்சாகப்படுத்தி, கேளிக்கை வழங்கி ‘தேச சேவை’ செய்த நடிகர்-பாடகர்-காமெடியன் பாப் ஹோப் இந்தக் காட்சியகத்தில் கொண்டாடப்பட்டுள்ளார். நூறாண்டுகள் வாழ்ச்ந்த பாப் ஹோப் இரண்டாம் உலக யுத்தம் முதல், வியட்நாம் யுத்தம், கொரியன் யுத்தம், வளைகுடா யுத்தம் வரை எல்லா யுத்தங்களும் அமெரிக்க சிப்பாய்களை களத்துக்குப் போய் சந்தித்து மகிழ்வித்திருக்கிறார். கிளிண்ட்டன் ஆட்சிக்காலத்தில் பாப் ஹோப்புக்கு மூத்த போர் வீரர் ( வெடரன்) என்ற ஒரு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சிப்பாயல்லாத ஒரு குடிமகனுக்கு இந்த விருது தரப்பட்டது இதுவரை இந்த ஒருமுறைதான்.
இந்தக் காட்சியகத்தில் இருந்த பல பிரிவுகளில் ஒன்று ஹிட்லர் காலக் கொடுமைகள் பற்றியது. ஹிட்லரின் ஒடுக்குமுறைக்கு தப்பி அமெரிக்காவுக்கு வந்து டெய்ட்டன் பகுதியில் குடியேறிய யூதர்களின் அனுபவங்களை இங்கே காட்சிப்படுத்தியிருந்தார்கள். மந்தை மந்தையாக மக்களை ரயிலேற்றி வதை முகாம்களுக்குக் கொண்டு செல்லும்போது விரட்டுவதற்கு அடிப்பதற்கு பயன்படுத்திய ஒருமாட்டுவால் சவுக்கைப் பார்த்தேன்.
இன்னொரு பொருள் ஒரு வயலின். ராபர்ட் காஹ்னென்ர 15 வயது சிறுவனுடைய வயலின் அது. ஹிட்லரின் சிப்பாய்கள் ராபர்ட்டின் அப்பாவை அடித்து உதைத்துக் கொண்டிருந்தபோது ஒரு சிப்பாய் வயலினை ராபர்ட்டிடம் எடுத்துக் கொடுத்து அதில் சந்தோஷமான ஜெர்மன் பாடல்களை இசைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறான். ராபர்ட் வயலின் வாசிக்க வாசிக்க, அவன் அப்பா அவன் கண் முன்னாலேயே அடித்துத் துவைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் ராபர்ட் ஜெர்மனியிலிருந்து தப்பி அமெரிக்காவுக்கு சென்று டெய்ட்டனில் குடியேறினான். யுத்தம் முடிந்ததும், தன் பழைய வீட்டுப் பரணில் ஒளித்து வைந்திருந்த வயலினை அவனால் மீட்க முடிந்தது. அதுதான் இப்போதைய காட்சிப் பொருள்.
இதே போல இன்னொரு காட்சிப் பொருளாக இருந்தது இன்னொரு இசைக்கருவியான அகார்டியன். இது 14 வயதுச் சிறுவன் ஜெர்டூர்ட் உல்ஃபுடையது. ஹிட்லர் ஆட்சி யூதர்களை வதைக்கத் தொடங்கியபோது யுத்தத்துக்கு முன்பாக, 17 வயதுக்குட்பட்ட யூத சிறுவர்களை மட்டும் வெளி நாடுகளுக்கு செல்ல அனுமதித்தது. அவர்களுடன் பெரியவர்கள் யாரும் செல்ல முடியாது. இப்படி சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் பிரிட்டனுக்குச் சென்றனர். அதில் ஒருவன் ஜெர்ட்ரூட். ஒவ்வொரு சிருவனும் சிறுமியும் கையில் இரண்டே இரண்டு சூட்கேஸ்கலைத்தான் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஜெர்ட்ரூட் ஒரு சூட்கேஸ் மட்டும் எடுத்துக் கொண்டு இன்னொரு சூட்கேசுக்கு பதிலாக தனக்கு அம்மா அளித்த பிறந்த நாள் பரிசான அக்கார்டியனை எடுத்துச் சென்றான். அம்மா நினைவாக அவனிடம் எஞ்சியது அது ஒன்றுதான். ஜெர்ட்ரூடும் பின்னர் டெய்ட்டன்வாசியானான். அக்கார்டியன் காட்சியகத்துக்கு வந்துவிட்டது.
யுத்தம், இனவெறி,இதர வெறிகளெல்லாமே மனிதர்களை எவ்வளவு கேவலமானவர்களாக ஆக்குமென்பதைத்தான் இவையெல்லாம் காட்டுகின்றன. ஆனால் விசித்திரம் என்னவென்றால், இந்த விஷயங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும் மியூசியமே அழிவுக்கான ஆயுதங்களைக் கொண்டாடுவதற்குத்தான். அமெரிக்கா எப்படி தன் விமானப்படை பலத்தை ஆயுத பலத்தைப் பெருக்கியிருக்கிறது என்று காட்டுவதற்குத்தான்.
ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளான, ‘குண்டன்’, ‘சின்னப்பையன்’ , அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணையான ‘ராஸ்கல்’ எல்லாவற்றின் மாதிரிகளும் இந்தக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. ஹிட்லரின் ஒடுக்குதலை விவரிக்கும் பிரிவைப் போல, ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்கு பலியாகி தலைமுறை தலைமுறையாக அழிந்துகொண்டிருப்போர் பற்றி விரிவாக எதுவும் கிடையாது. மனித உரிமைகள் என்ற ஒரு பட்டியலில் ஒரு வரி மட்டும் ஜப்பானில் குண்டு வீச்சில் சாதாரண மக்கள் ஏராளமாக இறந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்கர்களைப் பொறுத்தமட்டில் எந்த விஷயத்தைக் காட்சியகத்தில் வைப்பதாக இருந்தாலும், அவர்களுடைய வரலாறே வெறும் 200 250 வருடங்களுடையதாக மட்டுமே இருந்தாலும், சொல்வதை திருத்தமாக, தெளிவாக, பார்வையாளருக்குப் புரியும் விதத்தில், எடுப்பாகவும், ஈர்ப்பாகவும் சொல்வதை நன்றாகப் பழகிவைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் யூசர் ஃபிரெண்ட்லி – அதாவது பயன்படுத்துவோருக்கு வாகாக, என்ற சொற்றொடரே அமெரிக்கர்கள் கண்டுபிடித்ததுதான் ! இந்த அணுகுமுறையை அமெரிக்கப் பயணம் முழுவதிலும் நான் பார்த்தேன்.
டெய்ட்டனில் காட்சியகத்துக்குச் சென்றதோடுஎன் பணி முடியவில்லை. அந்த ஊரில் பணி புரியும் சில தமிழக இளைஞர்களை சந்தித்தேன். தொடர்ந்து அமெரிக்காவில் இருந்த மீதி நாட்களிலும் அங்கிருக்கும் இந்திய இளைஞர்களை சந்திப்பது என் முக்கிய வேலைகளில் ஒன்றாக வைத்துக் கொண்டேன்.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 3
கொலம்பஸ் நகர் அருகில் உள்ள ஒர்த்திங்டன் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களைப் பார்ப்பது என்பது முன்கூட்டியே அருளும் நானும் முடிவு செய்திருந்த திட்டம். அருள் பகுதி நேரத் தொண்டர் ஆசிரியராக ஒர்த்திங்டன் பள்ளியில் பணியாற்றியிருக்கிறார். மூன்றாண்டுகளுக்கு முன்னர் அருளின் நண்பரான ஆரம்பப் பள்ளியின் முதல்வர் டான் கிரார்டுக்குக் கடிதம் எழுதி அந்தப் பள்ளியின் செயல்பாட்டை நேரில் காண அனுமதி பெற்றிருந்தேன். ஆனால் இம்முறை நான் சென்ற சமயம் கிரார்ட் வேறொரு பள்ளியில் உடற்பயிற்சி இயக்குநர் பொறுப்புக்கு மாறியிருந்தார். பள்ளிகளும் விடுமுறையில் இருந்தன. எனினும் பள்ளியைச் சுற்றிப் பார்க்கவும் அங்கிருந்த ஊழியர்களை சந்திக்கவும் முடிந்தது. ஒர்த்திங்டன் பகுதியிலேயே இருந்த இன்னொரு உயர்நிலைப்பள்ளியையும் அருளுடன் சென்று சுற்றிப் பார்த்தேன்.
அமெரிக்காவில் பெரும்பாலான பள்ளிகள் பப்ளிக் ஸ்கூல் எனப்படும் அரசுப் பள்ளிகள்தான். தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. எல்லா பள்ளிகளுக்குமான விதிகள் பொதுவானவை. புரசவாக்கத்தில் குடியிருந்துகொண்டு அண்ணா நகர் பள்ளியில் குழந்தையை சேர்க்கமுடியாது என்பது அடிப்படை விதி. அந்தந்த வட்டார மக்கள் அந்தந்த வட்டாரப் பள்ளிகளில்தான் சேர்க்கவேண்டும். வீடு வாடகைக்கு எடுத்து குடியேறியதும், வாடகை ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றால் குழந்தையை சேர்த்துக் கொண்டாகவேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு ஸ்கூல் பஸ்சில்தான் செல்ல வேண்டும், மிக அருகில் இருந்து சைக்கிளிலோ, நடந்தோ செல்ல முடிவு செய்தால், அந்த மாணவருக்கான் போக்குவரத்து செலவாக அரசு ஒதுக்கிய தொகையை, பெற்றோருக்கு பள்ளி கொடுக்க வேண்டும் என்று கூட ஒரு விதி இருப்பதாக நியூஜெர்சியில் நான் சந்தித்த பத்மா அரவிந்த் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கல்வித் திட்டங்கள் வட்டாரமயமாக்கப்பட்டுவிட்டன. மாநில அளவில் இல்லாமல், மாவட்டம் என்று சொல்லத்தக்க கவுண்ட்டி அளவில் கல்வி மாவட்டங்கள் உள்ளன. அந்தந்த கவுண்ட்டியில் என்ன பாடத்திட்டம் என்பதை அந்த வட்டார நிர்வாகமே தீர்மானிக்கிறது. சில பொதுத் திறன்கள் மட்டும் கற்பிக்கப்பட வேண்டும் என்பது நாடு தழுவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. நாம் இன்னமும் கல்வி மாநில அரசுக்குரியதா, மத்திய அரசுக்குரியதா , பொதுப் பிரிவில் இருப்பது சரியா தவறா, மெட்ரிக்கா, ஸ்டேட்டா, சி.பி.எஸ்.ஈயா என்ற விவாதத்திலேயே இருக்கிறோம். அமெரிக்காவில் அதிகாரப் பரவலாக்கம் என்பது நன்றாகவே செயல்படுத்தப்பட்டிருகிறது.
அதை உள்ளூர் பத்திரிகைகள் பிரதிபலித்தன. நான் சென்றிருந்த சமயம் உள்ளூர் பத்திரிகைகளில் பிரின்சிபல் டான் கிரார்டின் பேட்டி வெளியாகியிருந்தது. பத்தாண்டுகள் ஒரு பள்ளியில் முதல்வராக அவர் பணியாற்றிய அனுபவம், புதிய பொறுப்பில் என்ன செய்யப் போகிறார், அடுத்த முதல்வர் பற்றியெல்லாம் விரிவாக இருந்தது. அங்கே உள்ளூர் கம்யூனிட்டி செய்தித்தாள் என்பது நிஜமாகவே கம்யூனிட்டி செய்தித்தாள்தான். அதில் வட்டாரப் பள்ளிகளின் செய்திகள், பழைய மாணவர் சந்திப்புகள், மூத்த குடிமக்களுக்கான நிகழ்ச்சிகள், உள்ளூர் நூலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், புதிதாக என்னென்ன புத்தகங்கள் நூலகத்துக்கு வந்திருக்கின்றன என்ற தகவ்ல்கள், வட்டாரக் காவல் துறை சம்பந்தப்பட்ட செய்திகள், முனிசிபல் நிர்வாக செய்திகள் விவரமாக வெளியிடப்படுகின்றன. நம் ஊரில் கம்யூனிட்டி செய்தித்தாள் என்ற பெயரில் உள்ளூர் கடைகளின் விளம்பரங்களை 80 சதவிகிதம் அச்சிட்டுவிட்டு இடையிடையே ஒப்புக்கு சில செய்திகளை வெளியிடும் பாணியில் அவை இல்லை.
எந்த அளவுக்குக் கல்வித்திட்டம் வட்டாரமயப்படுத்தப்பட்டிருக்கிறது, பாடத்திட்டத்தில் பள்ளிக்கு தன்னாட்சி இருக்கிறது என்பதன் அடையாளமாக கம்யூனிட்டி செய்தித்தாளில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ஒர்த்திங்டன் எஸ்டேட் எலிமெண்ட்டரிப் பள்ளியில் கல்வியாண்டு முடிந்து குழந்தைகள் கடைசி நாள் பள்ளிக்கு வந்து சென்றபிறகு, ஓர் ஆசிரியைக்கு மட்டும் ஒரு கூடுதல் பொறுப்பு இருந்தது. பள்ளியிலிருந்து 11 வாத்துக்குஞ்சுகளை சில கிலோமீட்டர் தூரம் நடத்திச் சென்று ஆற்றங்கரையில் விடுவதுதான் அந்த வேலை.
ஒவ்வொராண்டும் ஆரம்பத்தில் பள்ளிக்கு ஒரு வாத்தை அழைத்து வருகிறார்கள். அந்த வாத்து பள்ளியிலேயே குஞ்சு பொரிக்கிறது. வாத்துகள் கல்வியாண்டு முழுவதும் பள்ளியில் இருக்கும் குளத்திலும் புல்வெளியிலும் வாழ்கின்றன. ஒரு வாத்தின் வாழ்க்கையை ஆர்மபம் முதல் கடைசி வரை கூடவே இருந்து நேரில் பார்த்து குழந்தைகள் கற்றுக் கொள்வதுதான் இதன் நோக்கம். ஆண்டு இறுதியில் வாத்துக் குஞ்சுகள் ஆற்றோரம் விடப்படுகின்றன. இப்படிப் பாடத் திட்டத்தில் பல புதுமைகளைப் புகுத்திக் கொள்ளும் சுதந்திரம் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் இருக்கிறது.
ஒவ்வொரு வகுப்பறையும், பள்ளி வராந்தாக்களும், தோட்டமும் படிப்பதற்கான சூழலை சிறப்பாக ஏற்படுத்துகின்றன. வகுப்பறையின் சாவி வகுப்பாசிரியர் பொறுப்பில் இருக்கிறது. பள்ளி முடிந்ததும் பூட்டி அவரே சாவியை எடுத்துப் போய்விடுகிறார். ஆண்டு விடுமுறை நாட்கள் உண்மையில் ஆசிரியர்களுக்கு விடுமுறையில்லை. அடுத்த ஆண்டு ஒவ்வொரு வாரமும் என்னென்ன பாடங்களை எப்படி கற்பிக்கப்போகிறார்கள் என்பதை அவர்கள் திட்டம் வகுக்க வேண்டும். அதை பிரின்சிபாலிடம் காட்டி விவாதித்து ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் தந்தபிறகு ஆசிரியர் முழு சுதந்திரத்துடன் தன் கற்பித்தல் பணியை நடத்தலாம்.
நான் சென்று பார்த்த உயர்நிலைப்பள்ளியில் மூன்று நீச்சல் குளங்கள் இருந்தன. இரண்டு உள் விளையாட்டரங்கங்கள். ஒரு பெரிய நாடக அரங்கம். இதில் வருடந்தோறும் பள்ளி மாணவர்கள் நடத்தும் நாடகத்துக்கு பெருமளவில் பொதுமக்கள் டிக்கட் கொடுத்துப் பார்க்க வருகிறார்கள். இந்த உயர்நிலைப்பள்ளியில் இருக்கும் அளவு வசதிகள் நம் ஊரில் கல்லூரிகளில் கூட இல்லை என்று சொல்லலாம். இத்தனைக்கும் ஒர்த்திங்டன் என்பது பெரு நகரம் அல்ல. புற நகர்ப் பகுதி. மொத்த மக்கள் தொகையே 15 ஆயிரம்தான்.
பள்ளிப் படிப்பை முடித்ததும் மேலே என்ன படிப்பது என்பது பற்றி நம் நாட்டில் குடும்பமே கூடி விவாதித்தோ விவாதிக்காமலோ முடிவு செய்து சிறுவர்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கக் கல்வி முறையில் இது சாத்தியம் இல்லை. பள்ளி இறுதிக்கட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர் கவுன்செலராக நியமிக்கப்படுகிறார். அந்த கவுன்செலர், மானவரின் படிப்பைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். மாணவரின் திறமை, விருப்பு வெறுப்புகள், ஆர்வங்கள், உழைக்கும் தன்மை எல்லாவற்ரையும் கவனித்து மேலே எந்தப் படிப்பை மேற்கொள்வது நல்லது என்று அவர் பரிந்துரைக்கிறார். பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்பதை விட, கவுன்செலர் சொல்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அருளுடன் ஒர்த்திங்டனில் இருக்கும் நூலகத்துக்கும் நான் சென்றேன். ஒர்த்திங்டனில் மட்டும் மூன்று நூலகங்கள் இருக்கின்றன. கொலம்பஸ் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 7 லட்சம். மொத்த நூலகங்கள் 26 ! நூலகங்களில் உறுப்பினராவதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. உள்ளூர்வாசி என்பதற்கான ஆவணம் இருந்தால் போதும். ஒரு முறை 50 புத்தகங்கள் எடுக்கலாம். பத்து பட டிவிடிகள் எடுக்கலாம். 30 ஆடியோ கேசட்டுகள் எடுக்கலாம். பத்து சி.டிகள் எடுக்கலாம். ஐந்து ஈ புக் அல்லது ஆடியோபுக் எடுக்கலாம். படங்களை ஐந்து நாட்களில் திருப்பவேண்டும். புத்தகங்களை 28 நாட்கள் வைத்துக் கொள்ளலாம். தாமதமாகத் திருப்பினால் மட்டுமே அபராதம் உண்டு. மற்றபடி சேவை இலவசம்.
ஒஹையோவில் மட்டுமல்ல, அமெரிக்காவில் நான் சென்ற இதர ஊர்களில் கூட பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் முதலியவற்றைப் பார்த்தபோது எனக்கு அமெரிக்காவிலேயே இருந்துவிடவேண்டும் என்றுதான் தோன்றியது. கற்கவும் படிக்கவும் அவ்வளவு அருமையான சூழல், வசதிகள். நாம் இங்கே முட்டாள்தனமாக எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் கொட்டி சென்னை தரமணியில் மட்டும் பிரும்மாண்டமான நூலகத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பணத்தில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள நூலகத்தை அற்புதமானதாக ஆக்கலாம்.
ஒர்த்திங்டன் நூலகங்களில் நான் சென்ற சமயம் கோடை விடுமுறை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. ஐந்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு மட்டுமான நிகழ்ச்சிகள் வாரத்தில் ஐந்து நாட்களும் காலையிலும் மாலையிலும் இருந்தன. பிறந்து சில நாளான குழந்தை முதல் இரண்டு வயதான குழந்தைகள் வரை தனி நிகழ்ச்சி ! அடுத்து 2 முதல் மூன்றரை வயதினருக்கு இன்னொரு நிகழ்ச்சி. மூன்றரை முதல் ஐந்துவயதினருக்கு தனி நிகழ்ச்சி. ஒவ்வொன்றிலும் குழந்தையைப் பராமரிப்பவரும் கூட இருக்கவேண்டும். எல்லாம் கதைப்பாடல் நிகழ்ச்சிகள். இவை தவிர, பொம்மைகள் பற்றி தனி நிகழ்ச்சி. யோகாசனத்தை அடிப்படையாகக் கொண்டு கதை நிகழ்ச்சிகள். நூலகத்தின் டீன் ஏஜ் வாசகர்களைக் கொண்டு குழந்தைகளுக்கான படக்கதைகளை நாடகமாக நடித்துக் காட்டும் நிகழ்ச்சிகளும் இருந்தன.
குழந்தைகளுக்கு புத்தகங்கள் மீது ருசி ஏற்படுவதற்காக பல உத்திகளை இந்த நூலகங்கள் கையாளுகின்றன. ஒரு நாள் சாப்பாடு சம்பந்தப்பட்ட கதை சொல்லும் நேரம். இன்னொரு நாள் குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் கதைகள் சொல்லும் நேரம். வேறொரு நாள், டைம் கேப்ஸ்யூல் தயாரிப்பு. வீட்டிலிருந்து கொண்டு வரும் புகைப்படங்கள், நூலகத்தில் தரும் வெட்டி ஒட்டுவதற்கான பழைய புத்தகங்கள் எல்லாவற்றையும் கொண்டு பத்து வருடம் கழித்துப் பார்த்தால் இன்றைய தினத்தைப் புரிந்துகொள்வதற்கான வடிவில் ஒரு டைம் கேப்ஸ்யூலைக் குழந்தைகள் தயாரிக்க வேண்டும். இப்படி விதவிதமாக சம்மர் நிகழ்ச்சிகளை நூலகங்கள் நடத்துகின்றன.
அமெரிக்காவின் சிற்றூர்களில் இருக்கும் நூலகங்களில் கூட உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களும் படங்களும் கிடைக்கின்றன. இந்தியத் திரைப்படங்களைத் தேடியபோது, சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், பன்சாலி, அமிதாப் பச்சன் முதலியோரின் தரமான பல படங்கள் நூலகங்களில் இருந்தன. நூலகத்தைப் பயன்படுத்துவோர் இன்னின்ன வகை நூல்கள் வேண்டும், ப்டங்கள் வேண்டும் என்று நூலகரிடம் தெரிவித்தால், அடுத்த நூலக நிர்வாகக்குழு கூட்டத்தில் அதை விவாதித்து தேவையானவை வாங்கப்படுகின்றன. நூலக நிர்வாகம் எங்கேயோ உட்கார்ந்திருக்கும் ஏதோ சில அதிகாரிகள், அரசாங்க ஜால்ராக்கள் கையில் இல்லை. உள்ளூரில் நூலகத்தைப் பயன்படுத்தும் வாச்கர்களின் பிரதிநிதிகள், உள்ளூர் முனிசிபல் நிர்வாக பிரதிநிதிகள் வசம்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நூலகமும் பராமரிக்கப்படும் விதம் முக்கியமானது. துளி தூசி கிடையாது. யூசர் ஃபிரெண்ட்லி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல் வாசகருக்கு நெருக்கமாக நூலகம் இயங்கும் விதம் இருக்கிறது. பாஸ்ட்டனிலும், பிஸ்காட்டவேயிலும் நூலகங்களில் நான் இலவசமாக இண்ட்டர்நெட் சேவைகளைப்பயன்படுத்த முடிந்தது. ஒருவர் 15 நிமிடங்கள் வரை கம்ப்யூட்டரில் இண்ட்டர்நெட் சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஒளி நகல் எடுப்பதெல்லாம் மிக எளிது. ஒவ்வொரு முறை கன்னிமாராவுக்கோ நேவநேயருக்கோ சென்னைப்பல்கலைக்கழகத்து நூலகத்துக்கோ சென்று வந்தால் அறிவு வளர்கிறதோ இல்லையோ ஆஸ்த்மா வளரும்.
இன்னமும் தமிழகத்தில் நூலகத்துக்கக மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப் பணத்தை அரசு நூலகத்துக்குத்தராமல் வேறு செலவுகளுக்குத்திருப்பிக் கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் நூலகத்துக்கான அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க அரசு முடிவெடுத்தால், அதை எதிர்த்து நூலக வாசகர்களின் கையெழுத்து இயக்கத்தை நடத்தி மனு கொடுப்பதற்கான ஓர் அறிவிப்பை ஒரு நூலகத்தின் அறிவிப்புப் பலகையில் பார்த்தேன். இப்படிப்பட்ட முயற்சிகளில் நூலகர்களே ஈடுபடுகிறார்கள். அரசு முடிவுக்கு எதிராக அரசு நிதி பெறும் நூலக அறிவிப்புப் பலகையிலேயே இப்படி ஓர் அறிவிப்பைச் செய்வது இங்கே கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அதற்கு ஒத்துழைத்தால் அந்த நூலகர் கதி என்னாகும் ?!
(தொடரும்)
ஆப்பிள் தேசம் – 2
நம் ஒவ்வொருவரின் செயலும் இன்னொருவரை நம்மையறியாமலே கடுமையாக பாதிக்கக் கூடும் என்ற யதார்த்தத்தை, என் அமெரிக்காவுக்கான முதல் விமானப் பயணம் நிரூபித்தது. சென்னையில் கடைசி நிமிடத்தில் இறங்கிச் சென்ற பயணியால் தாமதமான விமானப் பயணத்தினால், துபையில் நான் மட்டும் அடுத்த தொடர்பு விமானத்தை தவறவிடவில்லை. இன்னும் அங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல, அடுத்த விமானத்தைப் பிடிக்க வேண்டிய சென்னைப் பயணிகள் பலர் சிக்கலை சந்தித்தார்கள். நியூயார்க் வந்து சேர்ந்தபோது, அங்கிருந்து கொலம்பஸ் செல்லவேண்டிய விமானத்தையும் தவறவிட்டதோடு என் பிரச்சினைகள் முடியவில்லை.
நியூயார்க் விமான நிலையத்தில், அந்த அமெரிக்க விமான கம்பெனி மறு நாள் காலை அவர்களுடைய விமானத்திலேயே நான் கொலம்பஸ் செல்லத் தவறினால் எனக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருக்கும் ரிட்டர்ன் விமான டிக்கட்டும் ரத்தாகிவிடும் என்று மிரட்டினார்கள். இதிலும் ஒவ்வொரு நேரத்தில் டியூட்டியில் இருந்த வெவ்வேறு அலுவலர்கள் வெவ்வேறு விதமாக பதிலளித்தார்கள். ஒருவர் ரத்தாகும் என்றார். இன்னொருவர் ரத்தாகாது ; ஆனால் கட்டணம் வேறுபடும். வித்யாசத்தைக் கட்டவேண்டும் என்றார். இவர்கள் அலுவல் நேரம் முடிந்து சென்றதும் அடுத்து வந்தவர் இந்த கென்னடி விமான நிலையத்திலிருந்து உங்களுக்கு அடுத்த விமானமே கொலம்பசுக்குக் கிடையாது. நியூயார்க்கிலேயே இன்னொரு முனையில் இருக்கும் லக்வார்டியா நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்றார். அடுத்தவர் உங்கள் பெட்டிகளுக்குத் தனியே கட்டணம் செலுத்தவேண்டும்; அமெரிக்காவில் உள்நாட்டு சர்வீஸ்களில் இலவசமாக லக்கேஜை அனுமதிப்பதில்லை என்றார்.
பத்தாண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் முகுந்தராஜ் உடனிருந்ததால் இதில் பல சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள முடிந்தது. திட்டமிடாமலே நியூயார்க் நகரம் உறங்கும் நேரத்தில் அந்த நகரிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து பிஸ்காட்டவே போய் ஓரிரவைக் கழித்துவிட்டு, மறு நாள் காலை மறுபடியும் நியூயார்க் வந்து லக்வார்டியா விமான நிலையத்திலிருந்து ,கொலம்பசுக்குப் புறப்பட்டேன். விமான கம்பெனி அலுவலரிடம் லக்கேஜுக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா என்று கேட்டேன். எந்த நாட்டுக்காரன் என்று கேட்டார். இந்தியா என்றேன். டெண்டுல்கர் நாட்டிலிருந்தா? எனக்கு ரொம்பப் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரர் டெண்டுல்கர் என்று சொன்ன அந்த கரீபீயர், லக்கேஜுக்குக் கட்டணம் விதிக்கவில்லை. டெண்டுல்கர் தயவா, அல்லது விதியே அப்படித்தானா என்று எனக்குத் தெரியவில்லை. தவிர என் லக்கேஜ் எடை குறைவுதான். இந்தியாவிலிருந்து புறப்படும்போது சுமார் 45 கிலோ வரை எடுத்துச் செல்ல அனுமதியிருந்தபோதும், நான் 30 கிலோவுக்கும் குறைவாகவே எடுத்துப் போயிருந்தேன். அதிலும் அமெரிக்க நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற விஷய கனம் பொருந்திய என் புத்தகங்கள் எடை பத்து கிலோ.
சிறு வயதிலிருந்தே, இந்திய ரயில்களில் நான் கண்ட ‘டிராவல் லைட்’ என்ற வாசகம், என்னைக் கவர்ந்த வாசகம். பள்ளிக் கூடத்துக்குக் கூட பத்து நோட்புக் எடுத்துச் செல்லாமல் ஒற்றை நோட்புக் மட்டுமே எடுத்துச் செல்வேன். சுமை கால் பணம்; சுமைக்கூலி முக்கால்பணம் என்று நம் மரபில், இது பற்றி நமக்கு அறிவுறுத்தியும், பலர் நிறைய சுமைகளுடன்தான் பயணிக்கிறார்கள். மூன்று வாரங்கள் அமெரிக்காவில் சுற்றும் திட்டத்துடன் சென்ற நான் உள்ளாடை, கைக்குட்டை, ஜிப்பா, பைஜாமா எல்லாவற்றிலும் ஏழேழுதான் எடுத்துச் சென்றேன். ஒவ்வொரு வார இறுதியிலும் தங்கியிருக்கும் நண்பர் வீட்டில், சலவை இயந்திரங்களில் துவைத்துவிடலாம் என்பது திட்டம். அப்படியே செய்யவும் முடிந்தது.
லக்வார்டியா விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில், எனக்கு முன்னும் பின்னும் வந்தவர்களை தொட்டுத் தடவி சோதனை செய்யாமல் விட்டுவிட்டு, என்னை மட்டும் தனியே ஒரு கண்ணாடிக் கூண்டில் நிறுத்தினார்கள். ஷாருக் கான், ஜார்ஜ் பெர்ணண்டஸ் ஆகியோருக்கு செய்தது போல, என்னை மேலாடைகளைக் கழற்றச் சொல்லவில்லை. தொட்டுத் தடவிப் பார்த்துவிட்டு என்னை அனுமதித்துவிட்டார்கள். பிறகு கொலம்பஸில் இறங்கி அருள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், என் பெட்டியைத் திறக்க நம்பர் லாக் எண்களை நினைவுபடுத்திக் கொண்டு திறக்க முற்பட்டபோது, பெட்டி திறந்தே இருந்தது. பூட்டு பெரிய சுத்தியலால் அடித்து உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே ஒரு அச்சிட்ட காகிதம். சோதனைக்காக உங்கள் பெட்டியை உடைக்க வேண்டி இருந்தது.;வருந்துகிறோம்; எனினும் பூட்டுக்கு நஷ்ட ஈடு தர இயலாது என்பதை இனிமையாக ஒரு பக்கம் எழுதியிருந்தார்கள். அடுத்த முறை பயணம் செய்யும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ள www.tsa.govக்கு செல்லவும் என்றும் சொல்லியிருந்தார்கள்.
முதல்முறை வெளி நாட்டுப் பயணம் செல்பவர்கள் இப்படிப் பல சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி முன்கூட்டித் தெரிந்துகொள்வது அவசியம். பெட்டியைப் பூட்டி வைத்திருக்கக்கூடாது என்ற விதி நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில இடங்களில் கேட்கும்போது பூட்டைத் திறந்து காட்டினால் போதும். வேறு நாடுகளில் பூட்டவே கூடாது. பெட்டியைப் பூட்டி வைத்திருந்ததால்தான் என்னை மட்டும் சோதனைக்குட்படுத்தியிருப்பார்களோ என்று நண்பர் அருளை சந்தித்தபோது கேட்டேன். அவர் அநேகமாக உங்கள் ஜிப்பாதான் காரணமாக இருக்கும். நீளமாக தொள தொளவென்று நான் போட்டிருக்கும் பூப் போட்ட ஜிப்பா இஸ்லாமியர்கள் உடை போலத் தோன்றியிருக்கக்கூடும் என்றார். ஏதோ ஒரு விதத்தில் ஷாருக் பட்டியலில் நானும் சேர்ந்துவிட்டேன் என்று தோன்றியது. பெயர், அல்லது உடை அல்லது தோற்ற அடிப்படையில் ஒருவருக்கு பயப்படும் சூழலும், ஒருவரை முத்திரை குத்தும் சூழலும் இன்று உலகமயமாகிவருகின்றன.
கொலம்பஸ் விமான நிலையத்திலிருந்து அருளுடன், அவர் வாழும் லூயி செண்ட்டர் புறநகர்ப் பகுதிக்குக் காரில் செல்லும்போதுதான் அமெரிக்காவை பகல் வெளிச்சத்தில் முதலில் பார்த்தேன். முகுந்துடன் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து பிஸ்காட்டவேக்கு சென்றபோது முழுக்க இரவு. அமெரிக்க நெடுஞ்சாலை ஊடே பகல நேரம் பயணித்தபோது, முதலில் என்னை அழுத்தமாக ஈர்த்த அம்சம் சுற்றிலும் தெரிந்த பசுமைதான். இரு புறமும் நெடிதுயர்ந்து அடர்ந்து வளர்ந்திருக்கும் மரச் சோலைகளிடையே சாலைப் பயணம் இருந்தது. அடுத்த இருபது நாட்களும் நான் சென்ற , பெரு நகரத்தின் வர்த்தக அலுவலகப் பகுதிகள் தவிர, எல்லா இடங்களிலெல்லாம் பசுமையை ஆழ்ந்து அனுபவிக்க முடிந்தது.
தமிழகத்தில் பெரும் செலவில் கட்டப்பட்டு வரும் நெடுஞ்சாலைகள், ஏற்கனவே இருந்த சோலைகளை அழித்துவிட்டு, பாலைவனத்தின் ஊடே போக்குவரத்து நடப்பது போன்ற சூழலைத்தான் உண்டாக்கி வருகின்றன. முதலமைச்சரும் கார்ப்பரேட் சாமியாரும் பிரும்மாண்டமான விளம்பரத்துடன் சேர்ந்து ஒரு லட்சம் மரங்கள் நட்டுவித்ததாக அறிவித்தார்கள். அவை எங்கே, என்ன ஆயின என்று தெரியவில்லை. சில சீடர்களைக் கேட்டால், நடத்தான் முடியும், என்ன ஆயிற்று என்று பார்க்க முடியாது என்கிறார்கள். ஒரு செல்போன் கம்பெனி கோடிகணக்கான வாடிக்கையாளர்களின் முகவரிப் பட்டியலுடன் அத்தனை பேருக்கும் பில் அனுப்பி வசூலை கணினி வழியே நிர்வகிக்கும்போது , ஒரு லட்சம் மரங்களை நட்டு தன்ணீர் ஊற்றியவர்/ஊற்றாதவர்களை கண்காணிக்கமுடியாதா என்ன ?
நெடுஞ்சாலைகளில் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரிலும் சின்னச் சின்ன தெருக்களிலும் இருமருங்கிலும் மரங்கள் நிரம்பியிருக்கின்றன. சிறு நகரத்தில் கூட பூங்காக்கள் பெரிதாக இருக்கின்றன. இது ஒரு பார்க் என்று என்னை அழைத்துச் செல்லும் நண்பர் சொல்லும்போது எனக்கு வியப்பாக இருக்கும். நம் ஊர் அர்த்தத்தில் சொல்வதென்றால் அவை காடுகள். .சென்னையில் என் வீட்டுக்குப் பின்னால் ஒரு பார்க் இருக்கிறது. எட்டு வீட்டு மனை சேர்ந்த இடம் அது. அதில் மரங்களே இல்லை. புதர்களும் மண் தரையும் சிறுவருக்கான ஊஞ்சல்களும், பெரியவர்களுக்கான நடைப்பயிற்சி பாதையும் உண்டு. பல சமயம் நடக்கும்போது ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் நடப்பதே ஒரு பயிற்சி. அவ்வளவு சிறிய ‘பார்க்.’ சென்னையில் நான் பார்த்த பிரும்மாண்டமான பார்க் என்று எதுவும் இல்லை. பெங்களூர் லால் பாக், கப்பன் பார்க் அளவை விடப் பெரியதாகத்தான் அமெரிக்காவில் நான் பார்த்த சிரு பூங்காக்கள் கூட இருக்கின்றன.
அருள் வீட்டுக்குச் சென்றதும் என்னை முதலில் கவர்ந்தது அந்த வீடுகளின் வரிசை ஒழுங்கும், கார் பார்க்கிங்கின் நேர்த்தியும், கொல்லைப் புறப் புல்வெளியும்தான். அமெரிக்காவில் ஒவ்வொரு வீடும் அதை சார்ந்த புல்வெளியும் தோட்டமும், மரங்களும் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று எந்த வீட்டுக்காரரும் இருக்க முடியாது. வீட்டுப் புறத்தோற்றம் முதல், வேலி அமைப்பு, புல்வெளி பராமரிப்பு, தண்ணீர் ஊற்றும் நாள், குப்பை அள்ளும் நேரம் வரை எல்லாவற்றையும் துல்லியமாக நிர்ணயித்து நடைமுறைப்படுத்துவதை, உள்ளூர் நிர்வாக அமைப்புகள் கறாராக செய்து வருகின்றன.
அருள் அண்மையில் வாங்கியிருக்கும் வீட்டுக்குப் பின்புறம் இன்னொருவருக்குச் சொந்தமான ஒரு பெரிய புல்வெளி, நடுவில் குளம் குட்டையுடன் இருந்தது. சில மாடுகளும் குதிரையும் காணப்பட்டன. பசு, குதிரை முதலியவற்றை ஒருவர் தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க விரும்பினால், இத்தனை எண்ணிக்கை மாடுகளுக்கு, குதிரைகளுக்கு இத்தனை விஸ்தீரணத்தில் மேய்ச்சல் பரப்பு இருந்தாகவேண்டும் என்று உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாக விதிகள் இருகின்றன. எல்லா வீடுகளும் மரத்தால் கட்டப்படுபவைதான். அடுக்கு மாடி வீட்டுகளும் பெரு நகரங்களின் வணிக வளாகங்களும் மட்டுமே கல், சிமெண்ட், கான்கிரீட் கொண்டு கட்டப்படுகின்றன.
அருள் தன் வீட்டின் தண்ணீர் சம்ப் எங்கே இருக்கிறது என்று என்னைக் கண்டுபிடிக்கச் சொன்னார். நானும் ஆராய்ந்து பார்த்தேன். புல்வெளிக்குக் கீழே ஒளிந்திருக்குமோ என்றெல்லாம் தேடினேன். இல்லை. சம்ப்பே இல்லை. தண்ணீர் 24 மணி நேரமும் ஒழுங்காகக் குழாய் வழியே வந்துகொண்டிருக்கிறது. வாடகை ஒப்பநதங்கள் பதிவு செய்யாமல் வாடகைக்கு வீடு எடுக்கவே முடியாது. பத்திரப் பதிவுகள் எல்லாம் கணினி வழியே முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வேலையை தனியார் அமைப்புகள் செய்கின்றன. வாடகை அட்வான்ஸ் முறை பெரும்பாலும் இல்லை. மாதாமாதம் வாடகை செலுத்துவதெல்லாம் வங்கி வழியேதான்.
அருளின் மகன் மாணவர். மனைவி சுதா ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் உயர் நிலை அலுவலர். வீட்டு சமையலறையை அருள் தம்பதியர் இருவருமாக நிர்வகிப்பதும் அவர்களின் லகுவான பணிப் பகிர்வும் என் கவனத்துக்குரியவையாக இருந்தன. அமெரிக்காவில் வாழும் பல இந்தியர்களின் குடும்பங்களுடன் நான் நடத்திய தற்காலிக உறவாடலில் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு எந்த அளவுக்கு இந்தியர்கள்/தமிழர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
குடும்ப ஜனநாயகம் என்றொரு சொற்றொடரை ஆண்-பெண் சமத்துவம் வேண்டுவோர் அண்மைக் காலங்களில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியச் சூழலில் குடும்ப ஜனநாயகம் என்பது ஏறத்தாழ இல்லை. ஆனால் அமெரிக்கா போன்ற சமூகங்களில் அது கணிசமாக இல்லாமல், குடும்பம் இயங்கவே முடியாது. முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலிலிருந்து முளைத்த நம்மவர்கள், இன்னொரு பாத்தியில் நாற்று நடப்படும்போது எப்படி வாழ்கிறார்கள்/வளர்கிறார்கள் என்பது நம் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியதாக இருக்கிறது.
அமெரிக்காவில் நான் சந்தித்த அத்தனை இந்தியர்கள்/தமிழர்கள் எல்லாரிடமும் நான் வெவ்வேறு வடிவங்களில் கேட்ட கேள்விகள் இவைதான். இங்கேயே இருந்துவிட விரும்புகிறீர்களா? ஏன் ? திரும்பி வர விரும்புகிறீர்களா? ஏன் ? இங்கிருந்து இந்தியாவுக்கு நீங்கள் திரும்பினாலும் திரும்பாவிட்டாலும், அங்கே எடுத்துச் சென்று பின்பற்றப்படவேண்டிய விஷயங்களாக எதைக் கருதுகிறீர்கள் ? இந்தக் கேள்விகளுக்கு பல விதமான பதில்கள் எனக்குக் கிடைத்தன. வெவ்வேறு வயதினர் வெவ்வேறு பதில்களைச் சொன்னார்கள். ஆண்களின் பதில்கள் ஒருவிதமாகவும் பெண்களின் பதில்கள் இன்னொரு விதமாகவும் கூட இருந்தன. குடியுரிமை பெற்றவர்கள், பெறாதவர்கள், பெற விரும்பாதவர்கள் என்று பல பிரிவினர் விதவிதமாக பதிலளித்தார்கள். எல்லாருக்குமே இந்தியாவுக்கு இங்கிருந்து என்ன தேவை என்று சொல்ல நிச்சயம் விஷயம் இருந்தது. இவை எல்லாவற்றையும் பின்னால் பார்ப்போம்.
(தொடரும்)
ஆப்பிள் தேசம் 1
ஒரு தேசத்தைப் பற்றி எழுதவேண்டுமானால், குறைந்தது அங்கே இரண்டாண்டுகள் வாழ்ந்து அதன் மக்களுடன் கலந்துறவாடிப் புரிந்துகொண்டு அதன் பிறகுதான் எழுதவேண்டும். ஆனாலும் நான் பார்த்தவற்றை உடனே என் மக்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்ற ஆசையினால் இதை எழுதத் துணிந்தேன் என்று உலகம் சுற்றிய தமிழரான ஏ.கே.செட்டியார் தான் எழுதிய ‘ஜப்பான்’ பயண நூலில் குறிப்பிட்டிருப்பதாக வாசிப்பு ஆர்வலர் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, செட்டியார் பற்றிய ஓர் அருமையான சொற்பொழிவில் தெரிவித்தார்.
இரண்டாண்டுகள் அல்ல, இருபதே நாட்கள் அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு அமெரிக்கா பற்றி நான் எழுதத் துணிந்ததற்கும் அதே காரணம்தான். வேண்டுமானால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று வைத்துக் கொள்ளலாம்.
அமெரிக்காவுக்குச் செல்லவேண்டும் என்ற ஆர்வம் எதுவும் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அதைப் பார்க்க விரும்பினேன். தன் சமூகத்தின் எல்லா மனிதர்களுக்கும் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்த நாடு என்கிறார்களே, அது எப்படி இருக்கும் என்று பார்க்கிற ஆவல் இருந்தது. அதை ஜனநாயகம் இல்லாமல்தான் செய்ய முடியுமா என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் போகவில்லை. சோவியத் யூனியனே போய்விட்டது. சீனத்தையும் கியூபாவையும் பார்க்க விரும்புகிறேன். இன்னமும் வாய்ப்பு கிட்டவில்லை.
ஐரோப்பா எப்போதுமே என் பிரியத்துக்குரிய கண்டமாக இருக்கிறது. என்னைப் போல் அவர்களும் உருளைக்கிழங்கு பிரியர்களாக இருப்பது மட்டும் காரணமில்லை. நீண்ட நெடிய வரலாறு, இரு மகா யுத்தங்களில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னரும் திரும்பவும் உயிர்த்திருக்கும் தேசங்கள், கலை, இசை, நாடகம், இலக்கியம் என்று பல துறைகளிலும் காலம் காலமக இருந்து வரும் செழுமை எல்லாம் ஐரோப்பாவைப் பார்க்கும் ஆவலை வளர்த்துக் கொண்டே இருக்கின்றன. இன்னமும் வாய்க்கவில்லை.
நேபாளம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியாநாடுகளுக்குப் போகவேண்டுமென்று நினைத்ததே இல்லை. போய் வந்துவிட்டேன்.
அமெரிக்காவும் அப்படித்தான். நான் போகவேண்டுமென்று நினைத்திராத நாடு.செல்ல நேர்ந்ததற்குக் காரணம் நண்பர் அருளாளன். அமெரிக்காவில் வாழும் அருளாளன் தமிழ்ச் சமூகத்தில் அக்கறை உள்ள ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். கல்வி, அரசியல் இரண்டிலும் ஈடுபட்ட தந்தையை அருகிலிருந்து பார்த்துவந்ததில் இன்று தமிழகத்தில் இவை இரண்டும் இருக்கும் நிலையைப் பற்றிய தன் ஆதங்கங்களைத் தொடர்ந்து என்னுடன் பகிர்ந்துவருபவர்.
அமெரிக்காவிலிருந்து சென்னை வந்ததும் என்னை சந்திக்கும்போது இன்று முழுவதும் இந்தக் காரை ஹார்ன் அடிக்காமல் ஓட்டப் போகிறேன் என்று என்னிடம் சொல்லுவார். அமெரிக்கப் பழக்கம். பிரேக்கை நம்பாமல் ஹார்னை மட்டுமே நம்பி வண்டி ஓட்டும் பலர் இருக்கும் சென்னையில் இது சாத்தியமா என்று நான் யோசிப்பேன். அருளுடன் காரில் சென்று திரும்பும்போது சாத்தியம்தான் என்று காட்டியிருப்பார்.
இப்படியாக அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் பல ஆரோக்கியமான் விஷ்யங்கள் இங்கேயும் சாத்தியமானவைதான் என்பது அருளின் ஆழ்ந்த நம்பிக்கை. அங்கே எப்படி இதெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது என்பதை நான் நேரில் வந்து பார்த்து இங்கே வாசகர்களுடன் பகிரவேண்டும் என்று விரும்பிய அருள் மூன்றாண்டுகளாகவே என்னை அழைத்துக் கொண்டிருந்தார்.
இந்த வருடத் தொடக்கத்தில் ஏற்பட்ட இதய அதிர்ச்சிக்குப் பின்னர் இனி செய்ய விரும்பும் எதையும் தள்ளிப் போடக் கூடாது என்ற மன நிலைக்கு வந்துவிட்டேன். எனவே ஜூன் மத்தியில் அமெரிக்கா செல்வதென்று அருளுடன் பேசியதும் ஏற்பாடுகள் செய்தார்.
சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் வெளியே தெருவில் வெயிலில் மணிக்கணக்கில் விசாவுக்காக நிற்கும் இந்தியர்களைக் கண்டு பல வருடங்களாக வெறுப்படைந்திருக்கிறேன். அவர்களை அப்படித் தெருவில் நிறுத்தும் அமெரிக்க அரசின் மீதும் எரிச்சல்தான் வந்திருக்கிறது. அந்த கியூவில் நானும் போய் நிற்கவேண்டும் என்று நினைக்கவே எனக்கும் எரிச்சலாகத்தான் இருந்தது. அப்படியாவது அமெரிக்கா போகாவிட்டால்தான் என்ன என்று கூட சில சமயம் தோன்றியது.
விசாவுக்காக இணைய தளம் வழியே விண்ணப்பித்தபோது நேர்காணலுக்கான நேரத்தை குறித்து ஒதுக்கி அதற்கு 15 நிமிடம் முன்னால் வந்தால் போதும் என்று அமெரிக்கத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே நான் சென்றேன். ஆனால் மிக நீண்ட கியூ. விசாரித்தால் எனக்குப் பிறகு நேரம் ஒதுக்கப்பட்டவர்கள் பலர் முன்னால் நிற்கிறார்கள். எனக்கும் முன்னால் நேரம் ஒதுக்கப்பட்டவர்கள் பின்னால் நிற்கிறார்கள். குறித்த நேரத்துக்குப் பல மணி நேரம் முன்பே வந்து நிற்கும் தவறு நம்மவர்களுடையது என்றால், வந்தவர்களை நேரகிரமப்படி ஒழுங்குபடுத்துவதில் அமெரிக்க தூதரக அலுவலகம் அக்கறை காட்டவில்லை. நான் கவுண்ட்டரில் சொன்னபிறகு வந்து அறிவித்து மாற்றியமைத்தார்கள்.
உள்ளே உட்காரும் கூடமும் தண்ணீர் வசதியும் இருந்தன. ஆனால் அங்கேயும் நூற்றுக்கணக்கில் கூட்டம். நான் தமிழ் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருந்தேன். எங்களை சிறிது நேரம் அதற்கான கியூவில் நிற்கவைத்தபிறகு, நீங்கள் மறுபடியும் போய் காத்திருங்கள். இப்போது மலையாளிகள் வரட்டும் என்று ஓர் அலுவலர் அறிவித்தார். இது தவறு என்று அவருடன் வாதிட்டேன். என்னருகில் இருந்த ஒருவர், ‘சண்டை போடாதீங்க. அப்பறம் விசா தரமாட்டாங்க’ என்று என்னை ரகசியக் குரலில் எச்சரித்தார்.
அலுவலர் மேலிட உத்தரவுப்படிதான் அனுப்பமுடியும் என்றார். இது டிப்ளமேடிக் மிஷன் ஏரியா. எங்கள் விதிப்படிதான் நடக்கும் என்றார். நான் சர்க்கரை நோயாளி. அளவு கடந்து என்னைக் காக்க வைத்து, நான் லோ ஷுகரில் மயங்கி விழுந்தால், அது டிப்ளமேடிக் மிஷனுக்குத்தான் தொல்லை ஏற்படுத்தும் என்றேன். பின்னர் நாங்கள் கியூவில் நிற்கவைக்கப்பட்டோம்.
எனக்கு முன்னால் இருந்த மூத்த தம்பதியர் தங்கள் மகனின் பட்டமளிப்பு விழாவைக் காண அமெரிக்க செல்ல விரும்புவதாகத் தெரிவித்தனர்.விசா மறுக்கப்பட்டது. என்னிடம் கேள்விகள் கேட்ட அமெரிக்கப் பெண் நல்ல தமிழில் கேட்டார். நான் திரும்பி வந்துவிடுவேனா என்பதை அறியும் நோக்கிலேயே கேள்விகள் அமைந்திருந்தன. நிச்சயம் திரும்பிவிடுவேன் என்று அதற்கான பல ஆதாரங்களைச் சொன்னேன். (நான் திரும்பி வந்து அரசியல் விமர்சனம் எழுதாவிட்டால் தமிழ் சமூகமே நிரந்தர முதல்வர்களின் பிடியில் சிக்கலில் ஆழ்ந்துவிடும் என்பதை மட்டும் சொல்லவில்லை.) எனக்குப் பத்து வருட காலத்துக்கான டூரிஸ்ட் விசாவை அளித்தார்கள்.
சென்னையிலிருந்து துபாய்க்குப் புறப்படவேண்டிய எமிரேட்ஸ் விமானம் ஓடுபாதைக்கு சென்றபோது கடைசி நிமிடத்தில் ஒரு பயணி சிக்கலை ஏற்படுத்தியதால் என் பயணத்தின் தொடக்கமே பிரச்சினைகள் நிரம்பியதாகிவிட்டது. அவர் நெஞ்சு வலிப்பதாகச் சொன்னார். வாயுத்தொல்லை என்றும் சொன்னார். நான் அதற்கான மாத்திரை தருவதாகச் சொல்லியும் மறுத்தார். இரு மருத்துவர்கள் அவரை சோதித்துவிட்டு நன்றாக இருப்பதாகவும் அமில எதிர்ப்பு மாத்திரை சாப்பிட்டால் போதுமென்றும் சொன்னார்கள். பயணியோ இறங்குவேன் என்று பிடிவாதமாக இருந்தார். அவரை மறுபடி ஏறுமுனைக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்டார்கள். ஒரு சமோசாவைக் கடித்தபடியே அவர் இறங்கிப் போனார். புறப்படுகையில் அவர் விட்டுவிட்டுப் போன ஒரு பார்சல் கேபினில் இருப்பதாகத்தெரிந்தது. அதைக் கண்டறிய சோதனை நடந்தது. கடைசியில் அதை கண்டுபிடித்து இறக்க வேண்டியதாயிற்று. அது ஒரு ஸ்வீட் பாக்ஸ்.
இதனால் இரண்டு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. துபையில் இருந்து நியூயார்க் செல்ல நான் ஏறவேண்டிய விமானம் அதற்குள் போய்விட்டது. அடுத்த விமானம் ஏழு மணி நேரம் கழித்துத்தான். சென்னையில் எமிரேட்ஸ் கவுண்ட்டரில் எவ்வளவு அன்பாக இருந்தார்களோ அதற்கு நேர்மாறாக துபையில் இருந்தார்கள். துபை விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன். போரடித்தது. பேச்சுத்துணைக்கு ஓரிரு தமிழர்கள் இருந்தார்கள். தப்பித்தேன்.
அடுத்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறியதும் இன்னொரு கொடுமை. சுமார் 13 மணி நேரம் விமானத்தில் கழிக்க வேண்டும். சிலர் அதில் பெரும்பகுதியை தூங்கியே கழித்துவிடுகிறார்கள். என்னால் தூங்க முடியவில்லை. புத்தகம் படிக்கவும் முடியவில்லை. ஏறத்தாழ என் 56 வருட வாழ்க்கையில் நினைவு தெரிந்த 5 வயது முதல் நடந்த அத்தனையையும் தத்துவப் பார்வையுடன் மனதில் ஓடவிட்டு யோசித்துக் கொண்டே இருந்தேன். முடிந்து என் டைட்டில்ஸ் போட்டபிறகும் விமானம் பறந்துகொண்டேதான் இருந்தது.
ஒரு வழியாக நியூயார்க்கில் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இறங்கினால், இமிக்ரேஷனில் மிக நீண்ட கியூ. டி.வி.திரையில் ஒரு போலீஸ்காரர் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி உதைக்கிற செய்திக் காட்சி. இமிக்ரேஷன் அலுவலரிடம் என் முறை வந்தபோது ஏன் அமெரிக்காவுக்கு வந்தாய் என்று கேட்டார். என் தொழிலைக் கேட்டார். எழுத்தாளன் என்று சொல்லி பையிலிருந்து நான் எழுதிய ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகத்தைக் காட்டினேன். பின் அட்டையில் என் படம் இருக்கும். புத்தகத்தைப் புரட்டினார். அவர் கண்ணில் பட்டது ஆண், பெண் பாலுறுப்புகளின் விளக்ப்படங்கள். இந்த மாதிரி புத்தகம்தான் எழுதுகிறாயா நீ ? என்று ஒரு பார்வை பார்த்தார். வளர் இளம் பருவத்தினருக்கான உடல் மன நலம் பற்றிய புத்தகம் என்று விளக்கினேன். முத்திரை குத்தி அனுப்பினார்.
நியூயார்க்கிலிருந்து அருள் வாழும் கொலம்பஸ் நகரத்துக்குச் செல்ல விமானத்தைப் பிடிக்க உள் வட்ட ரயில் ஏறி இன்னொரு டெர்மினலுக்குப் போனேன். அந்த விமானமும் போய்விட்டிருந்தது. அடுத்த விமானம் மறு நாள் காலைதான்.
அடுத்தபடியாக அருளுக்கும் வேறு அமெரிக்கா வாழ் நண்பர்களுக்கும் போன் செய்ய நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. டெர்மினல்களில் இருந்த பல சக பயணிகளிடம் – அமெரிக்கர்கள் முதல் ஆசியர்கள்- இந்தியர்கள் வரை – போன் செய்ய உதவி கேட்டேன். ஒருவரும் முன்வரவில்லை.
டெர்மினல்களில் இந்தியாவைப் போல இலவச தொலைபேசிகள் கிடையாது. பொதுத் தொலைபேசிகள் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்றன. அவற்றில் கால் டாலர் நாணயம் போட வேண்டும். என்னிடம் நூறு டாலர் நோட்டுகளாகத்தான் இருந்தன. ஒரே ஒரு ஒற்றை டாலர் நோட்டு வைத்திருந்தேன். ஆனால் எல்லா கடைகளிலும் அதற்கு சில்லறை தர மறுத்துவிட்டார்கள். இன்னொரு டெர்மினலுக்கு ரயிலில் போய் பத்து டாலருக்குக் காலிங் கார்ட் வாங்கினேன். இரண்டே போன் காலில் அது தீர்ந்துவிட்டதாக சொல்லிற்று. இப்படி மூன்று காலிங் கார்ட் வாங்கினேன்.
ஒருவழியாக மூன்று நான்கு நண்பர்களுடன் தொலைபேசியதில் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் ஒருவர் வந்து என்னை மீட்டுச் செல்லுவார் என்ற தகவல் கிடைத்தது. நியூ ஜெர்சி பிஸ்காட்டவே பகுதியில் வாழும் முகுந்தராஜ் வந்தார். அன்றிரவு அவர் வீட்டில் தங்கிவிட்டு மறு நாள் காலை மறுபடியும் நியூயார்க் வந்து கொலம்பஸ் செல்லும் விமானத்தில் ஏற திட்டம். முகுந்தராஜின் வீட்டுக்கு நான் சென்று சேரும்போது சென்னையில் என் வீட்டிலிருந்து புறப்பட்டு சுமார் 32 மணி நேரமாகிவிட்டிருந்தது. முகுந்தராஜின் மனைவி பிரியா நள்ளிரவுக்கு மேல் சுடச் சுட இந்திய சாப்பாட்டை வழங்கியபோது கிடைத்த ஆறுதல் கொஞ்சநஞ்சமல்ல.
(தொடரும்)  நன்றிGnani Logo