நீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்று உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது.
சுயசரிதை என்றவுடன் ஏதோ பிரபலங்களுக்கும் சாதித்தவர்களுக்கும் மட்டும் சொந்தமான விஷயம் என்று ஒதுங்கி விட வேண்டும்.சாமான்யர்களும் தங்கள் வாழ்கை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கலாம்.டைரி எழுதுவதன் நோக்கமே அது தான்.
வாழ்க்கையில் நடந்தவற்றையும்,நினைவுகளையும்,செய்ய நினைத்தவற்றையும் டைரியில் குறித்து வைத்தால கால போக்கில் அதுவே வாழ்க்கை பெட்டகமாக மாறிவிடலாம்.
டைரியை புரட்டிப்பார்த்து ஒருவரது வாழ்க்கை திரும்பி பார்க்கும் வாய்ப்பு சினிமா நாயகர்களுக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டுமா என்ன?சாமான்யர்களும் டைரி எழுதி வைத்தால் அதனை பின்னர் புரட்டிப்பார்த்தால் சுவாரஸ்யமாகவே இருக்கும்.
டைரியின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் பலரும் அறிந்திருந்தாலும் எல்லோருமே டைரி எழுதுவதில்லை.சோம்பல் ஒரு காரணம் என்றால் நம்ம வாழ்க்கையில் எல்லாம் என்ன இருக்கு என்ற சுய அலட்சியமும் இன்னொரு காரணம்.
ஆனால் இணைய யுகத்தில் உங்கள் வரலாற்றை எழுத வாருங்கள் என்று ஊக்கமளிக்கும் இணையதளங்கள் இருக்கவே செய்கின்றன.
பதிவும் பகிர்வும் தான் இன்றைய இணைய உலகின் தாரக மந்திரமாக இருப்பதால் சொந்த வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளங்களும் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இதை தான் விஷுவல் வேர்ட்ஸ் தளமும் செய்கிறது.
உங்கள் வாழ்க்கை பற்றிய எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதற்கான இடமாக அமைந்துள்ள இந்த தளம் ஒருவரது கடந்த கால மற்றும் நிகழ்கால நிகழ்வுகளின் அனுபவங்களை பதிவு செய்து கொள்ள உதவுகிறது.
டைரி எழுதும் போது ஏற்படக்கூடிய இயல்பான சோம்பல் மற்றும் இன்னும் பிற தடைகளை எளிதாக கடந்து முன்னேறக்கூடிய வகையில் இந்த தளத்தின் மூலம் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மிகவும் சுலபமானது.
வாழ்கையை பதிவு செய்வது என்றவுடன் எந்த நிகழ்வை எல்லாம் எழுதுவது என்னும் குழ்ப்பம் ஏற்படகூடும் என்றால் அந்த நிகழ்வுகளை எப்படி எழுதுவது என்பது அதைவிட குழப்பமாக இருக்கலாம்.
ஆனால் இந்த தளத்தில் அந்த பிரச்னையே இல்லை.பேஸ்புக் பதிவு எழுதுவது போல என்ன நடந்தது அல்லது என்ன நினைத்தோம் போன்றவற்றை எழுதிவிடலாம்.
தினமும் நடப்பவற்றில் முக்கியமானவற்றை பதிவு செய்து கொண்டே வரலாம்.நாளடைவில் இந்த பதிவுகளே சுய வரலாற்று குறிப்புகள் போல செறிவாக காட்சி அளிக்கத்துவங்கிவிடும்.
இந்த பதிவுகளை அப்படியே அடுக்கு கொண்டு போகாமல் எண்ணங்கள்,நிகழ்வுகள்,இலக்குகள்,கணவுகள்,திட்டங்கள் என தனித்தனியே வகைப்படுத்தி கொள்ளலாம் என்பது தான் மிகவும் விஷேசமானது.
எல்லோருக்கும் சில இலக்குகளும் கணவுகளும் இருக்கும் தானே.அதே போல எண்ணங்களும் திட்டங்களும் இருக்கும் தானே.அவற்றை எல்லாம் தனித்தனியே பதிவு செய்து கொள்ளலாம்.
ஆக இந்த பதிவுகள் அனுபவ பகிர்வுகளாக இருப்பதோடு ஒருவரின் மனதில் உள்ள இலக்குகள் மற்றும் கணவுகளை குறித்து வைக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.திட்டமிடலிலும் இது உதவலாம்.
நாமே பின்னோக்கி பார்க்கும் போது என்ன நினைத்தோம் எதை செய்தோம் என்று அறிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொருவருக்கான பக்கத்தில் அவரைப்பற்றிய சுயவிவர குறிப்புகளின் கீழ் இந்த பதிவுகள் குறிப்பிட்ட வகைகளில் கீழ் அழகாக இடம் பெறுகிறது.ஒவ்வொரு தலைப்பிலும் என்ன இருக்கின்றன் என்பதையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதன் பயனாக யாராவது பார்க்கும் போதே அந்த பக்கத்திற்கு உரியவரின் எண்னங்கள் என்ன,இலக்குகள் எவை,இதுவரை அவர் என்ன செய்துள்ளார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொண்டு விடலாம்.
இந்த பதிவுகளின் நோக்கமே பகிர்வு என்பதால் இந்த தன்மை பலவிதங்களில் கைகொடுக்கும்.
அதாவது சுயசரிதை குறிப்புகளை பதிவு செய்ய துவங்கியதுமே இந்த பதிவுகளை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளத்துவங்கி விடலாம்.அவர்களும் நம்மை பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஊக்கமளிக்கலாம்.அது மட்டும் அல்ல தளத்தின் மற்ற உறுப்பினர்களும் நமது அனுபவங்களையும் இலக்குகளையும் படித்துவிட்டு அது பற்றி கருத்து கூறி ஊக்கப்படுத்தலாம்.நாமும் கூட மற்றவர்களின் பக்கங்களை பார்வையிட்டு கருத்து சொல்லலாம்.
ஒரே மாதிரியான எண்ணங்கள் மற்றும் இலக்கு கொண்டவர்கள் இந்த கருத்து பரிமாற்றத்தின் மூலம் நண்பர்களாகலாம்.இதன் மூலம் புதிய நண்பர்களை பெறலாம்.புதிய நண்பர்கள் மூலம் இலக்குகளை அடையலாம்.
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் பகிர்வுகளை அலசி ஆராய்ந்து அவற்றின் தன்மையின் அடிப்படையில் புள்ளிவிவரங்களையும் இது முன்வைப்பது தான்.உதாரணத்திற்கு ஒருவர் கணவுகளின் கீழும் திட்டங்களின் கீழும் அதிகம் பகிர்ந்து கொண்டுள்ளார் என புள்ளி விவரம் சுட்டிக்காட்டலாம்.அதே போல ஒட்டுமொத்தமாக தளத்தில் எந்த வகையான பகிர்வுகள் அதிகம் உள்ளன என்ற புள்ளிவிவரமும் முகப்பு பகத்தில் தோன்று கொண்டே இருக்கின்றன.
இந்த அம்சம் பகிர்வுகளை மேலும் உயிரோட்டமானதாக மாற்றுகிறது.
இணையதள முகவரி;http://www.usualwords.com/login