Saturday 2 February 2013

முயற்சி


Print E-mail
படிப்பில் படுசுட்டியான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் பிரிட்டனில் 1942ஆம் ஆண்டு பிறந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார்.
21 வயதில் மருத்துவ சோதனைகள் பல செய்தார் தசைகளை வெட்டி எடுத்து பரிசோதனை செய்த போதிலும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகளில் மரணம் உறுதி என்று தீர்மானமாகக் கூறினார்கள்.
மருத்துவமனையில் துயரத்தில் இருந்த ஸ்டீபனுக்கு அருகே சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட ஒரு சிறுவனின் மரணம் பயம் தருவதற் குப் பதிலாக தைரியம் கொடுத்தது. உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார்.
சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து பேராசிரியர் ஆனார். ஏ.எல்.எஸ்.எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால் 1985ஆம் வருடம் அவரது உடல் முழுவதும் செயல் இழந்தது. ஆனாலும் முயற்சி நம்பிக்கையை இழக்காமல் வலது கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். (A Brief History of Time) என்ற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணிப்பொறி மென்பொருள் ஒன்றைக் கண்டுபிடித்து சக்கர நாற்காலியில் பொருத்தித்  தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.
காலம் எப்போது துவங்கியது?  எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா? என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி களுக்கு அறிவியல் ரீதியாகப் பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்வு மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான்.
ஒரே ஒரு கண்ணை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து கண்ணை மீண்டும், மீண்டும் அசைத்து, அறிவியல் ரீதியாக விளக்கங்களைத் தந்து ஒரு மனிதரால் உலகப் புகழ் பெற முடியும் என்றால் முயற்சியின் வலிமை எத்தனை மகத்தானது என்பதை உணரலாம்.
வாழ்வின் எல்லைகளையும் கடந்து நம்மை வாழ்விப்பது முயற்சி ஒன்றே என்பதை உள்வாங்கிக் கொண்டால் நம் வாழ்வும் வரலாறாகும்.

No comments:

Post a Comment

THANK YOU