Tuesday, 19 February 2013

சொல்லடி உன் மனம் கல்லோடி..? - குரு


Solladi un manam Kaloodi..?
சொல்லடி உன் மனம் கல்லோடி..?

(குரு .)

அத்தியாயம் - 1

'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!..'

'குருகுலம்' நாட்டியாலயத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட மகாகவி பாரதியின் அந்தப் பாடல் போய்க் கொண்டிருந்தது. அந்தப் பாடலின் வரிகளுக்கு ஏற்ப மாலதியும், கமலினியும் அபிநயத்துப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். தேவகி டீச்சர் அவ்வப்போது அவர்களின் அசைவுகளைக் கவனித்து திருத்தங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கமலினி மட்டும் எங்கேயோ கவனம் செலுத்திக் கொண்டு தப்புத் தப்பாய் ஆடிக்கொண்டிருந்தாள்.
'எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், ஒவ்வொரு பதமும் ஆடப்படும் பொழுது தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அபிநயக்க வேண்டும், புரியுதா கமலி?"
"ஆமா!" என்று ஆடிக்கொண்டே தலையசைத்தாள் கமலினி.
பாடல் முடிந்ததும் 'போதும்' என்பது போல கமலி பார்த்து முகபாவனை செய்தாள்.
கமலியின் மனசு ஆட்டத்தில் இல்லை என்பது தேவகிக்குப் புரிந்து போயிற்று.
"போதுமா? ஏன் களைச்சுப் போனியா?"
'ஆமா!' என்ற கமலினி மூச்சு வாங்கினாள்.
'என்னம்மா மாலதி நீயும் களைச்சுப் போனியா?"
'இல்லை டீச்சர், நான் ஆடத்தயார்"
"ஏய் போதும் என்று சொல்லேன்டி" கமலினி தோழியை மெல்ல இடித்தாள்.
மாலதி என்ன சொன்னாலும் அம்மா கேட்பாள் என்பது அவளுக்குத் தெரியும். சமீபத்தில்தான் கமலினி குடும்பம், தகப்பனின் உத்தியோக மாற்றம் காரணமாக இந்த ஊருக்கு மாற்றலாகிக் குடிவந்திருந்தனர். வசதியான வீடு என்பதால் தாயார் தேவகி பொழுது போக்காக வீட்டிலே நடனவகுப்புக்களை ஆரம்பித்தாள். மாலதி தாயாரின் முதல் மாணவி மட்டுமல்ல வெகுவிரைவில் அபிமான மாணவியாயும் மாறிவிட்டாள். கமலினியோடு ஒரே வகுப்பில் கூடப்படித்ததால் மாலதி, கமலினியின் நல்ல தோழியும் கூட. தன்னைவிட மாலதி மீது தான் அம்மா அதிகம் பாசம் வைத்திருக்கிறாவோ என்று கூட சில சமயங்களில் கமலினி யோசிப்பது உண்டு. அதே சமயம் இப்படி ஒரு நல்ல பண்பான தோழி தனக்குக் கிடைத்திருப்பதையும் எண்ணித் தனக்குள் பொருமைப் படுவதுமுண்டு.
பயிற்சி முடிந்ததற்கு அடையாளமாய் அவர்கள் குருவின் பாதம் பணிந்து உடைமாற்றப் புறப்பட்டனர்.
"இப்படிக் காளைச்சுப் போனேன் என்றால் எப்படி மேடையில் ஆடப்போறாய்? அரங்கேற்றம் செய்தமாதிரித்தான்!" தாயாரின் கண்டிப்பில் முகம் கறுத்தாள் கமலி.
"என்னம்மா.... பிளீஸ் நாளைக்கு நான் சரியாய் ஆடுறேனே" தாயாரிடம் கெஞ்சினாள்.
'சரி விடுங்கோ ஆன்டி, நாளைக்கு அவள் நல்லாய்ச் செய்வாள்' என்று வக்காலத்து வாங்கினாள் மாலதி;.
"என்னமோ செய்யுங்கோ" சலித்துக் கொண்டே எழுந்தார் தேவகி டீச்சர்.
"ஏய் மாலு, அம்மாவிற்கு நீ நல்லாய் ஐஸ் வைத்திருக்கிறாய்?"
"ஐஸா? ஏன்டி அப்படிச் சொல்கிறாய்?"
"பின்னே பயிற்சி வகுப்பிற்கு வந்தால் டீச்சர், வெளியே சந்தித்தால் ஆன்டி இப்படி இன்னும் எத்தனை வேடம் போடப்போறியோ?'
"அப்படி இல்லை, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்திலே மரியாதை கொடுக்கணும்"
'அப்போ எங்க அம்மாவை பயிற்சி வகுப்பு நடக்கும் போது என்னையும் டீச்சர் என்று கூப்பிடச் சொல்லுறியா?"
"உனக்குக் கஸ்டம் தான், ஆனால் அங்கே நீயும் ஒரு மாணவி என்பதை நினைவிலே வைத்திருக்கணும்"
"உனக்கென்ன, உன்னுடைய அழகான விழிகள் மட்டுமல்ல தாளத்திற்கு ஏற்றமாதிரி உன் அளவான கச்சிதமான உடம்பும் வளைந்து கொடுக்கிறது. எதையுமே இலகுவில் கற்றுக் கொள்ளும் திறமையும், முகபாவமும் உன்னிடம் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு அசைவிலும் நளினமும், அடவு சுத்தமாயும் இருக்கு, முத்திரை அழுத்தம் இருக்கு இதைவிட என்ன வேணும்? உன்னைப் போல என்னால் செய்யமுடியலையே என்ற கவலைதான் எனக்கு. அரங்கேற்றத்திலன்று உன்னோடு எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ என்று நினைச்சாதான் எனக்குப் பயமாயிருக்கு"
"பயப்படாதே கமலி, மகாகவி பாரதி சொன்னதுபோல நெஞ்சில் உறுதி வேண்டும்! நினைத்தது கைப்படவேண்டும்! ஏதாவது ஒன்றைச் சாதித்துக் காட்டவேண்டும் என்பதில் கவனமாகவும், நிதானமாகவும் இருந்தால் அதை நன்றாகச் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அந்த நம்பிக்கை உனக்கும் வரணும். கமலி நானிருக்கிறேன், பயப்படாதே!"
"நான் தயங்கினாலும் நீதான்டீ எனக்கு எப்போதும் உற்சாகம் தருகிறாய். அதுவே எனக்குப் போதும்!'
'பயப்படாதே, நாங்க ஐமாச்சிடலாம்" மாலதி விரல்களை மடித்து கையை உயர்த்திக் காட்டினாள்.
கண்கள் கலங்க கமலி நன்றிப் பெருக்கோடு மாலதியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
'வெளியே இருண்டு போச்சு, அப்பா தேடப்போகிறார், நான் போயிட்டு வர்றேன் கமலி" வாசலில் உள்ள செருப்பை அணிந்து கொண்டு மாலதி கிளம்பினாள்.
'இரு... இரு நீ எப்படி தனியாப் போவாய், நான் வீடு மட்டும் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேனே.'
'வேண்டாம் கமலி உனக்கு ஏன் வீண் சிரமம், நான் தனியே போவேன்."
'அம்மா மாலுவைக் கூட்டிக் கொண்டு போய் வீட்டிலே விட்டிட்டு வரட்டுமா?"
வீட்டு வாசலில் இருந்து குரல் கொடுத்தாள் கமலி.
'நான் சொல்லத்தான் இருந்தேன், அப்புறம் நீ எப்படித் தனிய வருவாய்? கண்ணனையும் கூட்டிக் கொண்டு போயிட்டு வா!"
'சரி அம்மா"
வீட்டிற்கு முன்பாக உள்ள சிறிய விளையாட்டு மைதானத்தில் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்த கண்ணன் அக்காவின் குரல் கேட்டுத் திரும்பிப் பாhத்தான். ஏதோ தேவைக்குத்தான் கூப்பிடுகிறார்கள் என்பது அவர்களைக் கண்டதும் அவனுக்குப் புரிந்து விட்டது.
'என்ன?" என்றான் விளையாட்டு ஆர்வத்தோடு.
'மாலதியை வீடு மட்டும் கொண்டு போய் விட்டிட்டு வரணும் நீயும் வர்றியா?"
எதுக்கு?
அதுதான் சொன்னேனே, வீடுவரை போகணும்..!
நான் எதுக்கு சுமக்கணுமா?"
"இல்லை துணைக்கு!"
"யாருக்கு?"
"எனக்கு!"என்றாள் கமலி.
"நான் வரலை, என்னோட பாட்டிங் சான்ஸ் மிஸ் பண்ணிடுவேன்.'
"நீ இப்போ எங்ககூட வராட்டி அம்மாகிட்ட சொல்லுவேன்."
அவன் அசட்டை செய்துவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்தினான். பொறுமை இழந்தாள் கமலினி.
"அம்மா....!"என்று இங்கிருந்தே கத்திக் குரல் கொடுத்தாள்.
இவ்வளவு நேரமும் வீம்பு பேசிய கண்ணன் தாயாரைக் கூப்பிட்டதும் மகுடி கேட்ட நாகமானான்.
"சரி கத்தாதே, நான் வர்றேன்" என்று பணிந்து போனவன் வேண்டா வெறுப்பாக அவர்களோடு கூடச் சென்றான்.
அக்காவிற்கும் தம்பிக்கும் இடையே நடந்த உரையாடலைக் கேட்ட மாலதிக்குச் 'க்ளுக்' கென்று சிரிப்புத்தான் வந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டு, உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள். கமலியைப் போல தனக்கு இப்படி ஒரு உடன்பிறப்பு இல்லையே என்ற ஏக்கமும், ஆதங்கமும் அவளுக்கு இருந்தது. கமலியைவிட ஐந்து வயது குறைந்த குட்டிக் கண்ணனின் குறும்பும், சுட்டித்தனமும் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
மாலதியை அந்தவீட்டுப் பெண்ணாக நினைத்தே எல்லோரும் பழகினார்கள். மாலதியும் எந்த ஒரு வித்தியாசமும் காட்டாமல் அவர்களோடு அன்பாகப் பழகினாள். ஓவ்வொரு பெருநாளின் போதும் மாலதிக்கும் சேர்த்தே அவர்கள் துண்மணிகள் எடுத்தார்கள். அதற்கு நன்றிக்கடனாக மாலதியும் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, நடனவகுப்பிற்கு வரும் ஏனைய மாணவிகளுக்கு உதவி செய்வது, வீட்டுச் சமையலுக்கு உதவி செய்வது போன்ற சிறுசிறு உதவிகளை அவ்வப்போது செய்து வந்ததால், அவளைப் பார்த்து அந்தக் குடும்பமே பூரித்துப்போய் நின்றது.
இப்படித் தான் ஒருநாள், அவள் இவர்களின் வீட்டிற்கு வந்திருந்த புதிதில் கண்ணன் முற்றத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தான். கமலியும் அவளும் வாசலில் பேசிக்கொண்டு நின்ற போது அவன் அடித்த பந்து அவர்களுக்கருகே உருண்டு வந்தது.
"ஏய் மாலு அந்தப் பந்தைப் பிடித்துக் கொஞ்சம் இங்கே வீசேன்" என்றான் உரத்த குரலில்.
மாலதி திகைத்துப் போய் அங்கே திரும்பிப் பார்த்தாள். கமலியின் தம்பி கண்ணன் தான் அங்கே நின்று கொண்டிருந்தான். அவளைவிட வயதில் குறைந்த யாருமே இதுவரை அவளை இப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. அவளுக்குக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது.
'வயசிலை மூத்தவங்களை இப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிடக்கூடாது என்று உனக்குத் தெரியாதா?" முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு உறுக்கினாள் கமலி.
"ஓ... நீங்க எல்லாம் வயசிலை மூத்தவங்களோ? அக்கா என்றுகூடப் பார்க்காமல் உன்னையே நான் பெயர் சொல்லித்தான் கூப்பிடறேன். இவங்களுக்கு தனியா நான் மரியாதை தரணுமோ?" அவன் குரலில் ஏளனத்தோடு மாலதியைப் பார்த்துக் கேட்டான்.
'ஆமா..!' என்றாள் மாலதி.
'என்ன ஆமா?, அப்போ மடம், நான் உங்களை ஆன்டி என்று கூப்பிடட்டா?'
'ஆன்டியா..?'
மிரண்டுபோன மாலதி ஒன்றும் பேசாமல் அவனிடமிருந்து ஒதுங்கிக் கொண்டாள். இவனிடம் வாய் கொடுத்தால் தப்பமுடியாது, எந்தநேரமும் மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட வேண்டி வரலாம் என்பது அவளுக்குப் புரிந்துபோயிற்று.
தோழியின் சங்கடமான நிலைமையைப் புரிந்து கொண்ட கமலி,
"பெரிய வாய் இவனுக்கு, வாடி நாங்க உள்ளே போவோம்" என்று சொல்லிக் கொண்டே தனது தம்பியை முறைத்துப் பார்த்து விட்டு மாலதியை மெல்ல உள்ளே அழைத்துச் சென்றாள்.
அதன் பின், சின்னப் பையன் என்றாலும், இப்படியான சந்தர்ப்பங்களில் அவனிடம் வாய் கொடுப்பது என்றால் மாலதிக்கு ஒரே பயம்.
எதற்கெடுத்தாலும் முரட்டுப் பையன் போலச், சிறுபிள்ளைத் தனமாய்ப் பேசிக் கொண்டிருந்த கண்ணனைப் பணிந்து வரச் செய்வதற்கு, அந்தக் குடும்பத்தோடு நெருங்கிப் பழகத் தொடங்கிய அவளுக்கு விரைவில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.


அத்தியாயம் - 2

'என்ன இது..?'
'பிரித்துப் பாரேன்!' என்றாள் மாலதி.
அவன் ஆவலோடு பிரித்துப் பார்த்தான். உள்ளே பெட்டிக்குள் சிகப்பு நிறத்தில் அழகான ரேசிங்கார் பொம்மை ஒன்று இருந்தது. ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அவனது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
'எனக்கா..?" நம்பமுடியாமல் ஆவலோடு கேட்டான்.
'ஆமா, உனக்குத்தான். எனது பிறந்தாள் பரிசு!' என்றாள் மாலதி.
அக்காவின் சினேகிதி மாலதியிடம் இருந்து தனக்கு மிகவும் பிடித்தமா விளையாட்டுப் பொம்மை ஒன்று கிடைக்கும் என்று அவன் எதிர்பார்த்ததில்லை. அதுவும் தனக்குப் பிடித்தமான நிறத்தில் ரேஸிங்காரையே வாங்கித் தனது பிறந்தநாளை ஞாபகம் வைத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள் என்றதும் அவனது மனம் நெகிழ்ந்தது.
'பிடிச்சிருக்கா..?"
‘ஓம்’ என்று தலை அசைத்துவிட்டு, தாங்யூ..!' என்றான்.
'அவ்வளவுதானா..?' என்று சிரித்தபடி குனிந்து, ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்போடு கன்னத்தை அவனருகே கொண்டு சென்றாள் மாலதி.
அவன் அவசரமாய் அக்கம் பக்கம் பார்த்து விட்டு, யாரும் தன்னைக் கவனிக்வில்லை என்ற எண்ணத்தில் அவளது கன்னத்தில் உதட்டைப் பதித்து விட்டு ஓட முற்படவே, மாலதி பலவந்தமாக அவனைப்பிடித்து அருகே இழுத்தாள்.
அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட கண்ணன் இரண்டு கைகளாலும் தனது கன்னத்தை இறுகப் பொத்திக் கொண்டு நோ..! என்றான்.
பிளீஸ்.. கண்ணா, ஒரே ஒரு மு....த்தம்..! மாலதி கெஞ்சினாள்.
அவளது அன்பான கெஞ்சுதலில் மனமிளகிப்போன கண்ணன், தனது கைகளை விலக்கி ஒரு கன்னத்தை மட்டும் காட்டினான்.
அவள் அவனை ஆசையோடு அணைத்து, அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். அவன் அவசரமாகக் கன்னத்தைத் துடைத்துக் கொண்டு, அவளது கையில் இருந்த ரேஸிங்காரையும் பறித்துக் கொண்டு, வெட்கத்தில் முகம் சிவக்க அந்த இடத்தை விட்டு விரைவாய் ஓடிப்போனான்.
மாலதியின் கன்னத்தில் கண்ணன் முத்தம் கொடுத்துவிட்டு, வெட்கப்பட்டு ஓடுவதைப் பார்த்ததும் கமலியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. தனக்குக் கிட்டவேவர வெட்கப்படும் தம்பியா தன் தோழி மாலதிக்கு முத்தம் கொடுத்தான்..?
'என்னடி ஒரு பொம்மை ரேசிங்காரை வாங்கிக் கொடுத்து அவனை மயக்கிட்டியா? ஆளைப்பார் அமசடக்காய் இருந்து கொண்டு பெரிய வேலை எல்லாம் செய்கிறாய்..!'
மாலதியின் முகத்திலும் வெட்கம் கலந்த புன்சிரிப்பு பூத்து விரிந்தது. பதிலுக்கு அவனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து விட்டதில் அவளுக்குள் ஓர் மென்மையான இனிய உணர்வு பீறிட்டுக் கொண்டு எழுந்தது. அந்த இனிய நினைவில், இவன்போல எனக்கும் ஒரு தம்பி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் மனதில் எழவே அப்படியே சிறிது நேரம் உறைந்துபோய் நின்றாள்.
'ஆமா உனக்கு கார் வாங்கப் பணம் ஏது? யார் கொடுத்தாங்க?' என்றாள் கமலினி.
'இல்லை, உண்டியலில் சேர்த்து வைத்திருந்தேன். அப்பாவிடம் சொல்லிவிட்டு அதை எடுத்துத்தான் அவனுக்காக இந்தக் காரை வாங்கினேன்'. என்றாள் மாலதி.
'உனக்கு ஏன் வீண் சிரமம், பணத்தை இப்படி வீணாக்கிட்டியே. பாரேன் கொஞ்ச நேரம்தான் விளையாடுவான், அப்புறம் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிடுவான்.'
'அவனுடைய முகத்தில் கள்ளங் கபடமில்லாத அந்தச் சிரிப்பைப் பாரடி, எவ்வளவு மகிழ்சியாய் இருந்து விளையாடுறான். உண்டியலில் இருந்தால் இந்தப் பணம் இப்படிச் சிரிக்குமாடி..? இந்த சந்தோஷம் கிடைக்குமாடி..?'
'என்னமோ, நீயும் அவனும் பட்டபாடு. இவனைப் பற்றி உனக்குத் தெரியாது. இப்படி எடுத்ததற்கெல்லாம் இடம் கொடுத்தாயோ, அப்புறம் அவன் உன்னோட தோள்மேல ஏறி உக்காந்திடுவான்.' தனது தம்பியைப் பற்றி எச்சரித்தாள் கமலி.
'சின்னப் பையன்தானே, பரவாயில்லை' என்பது போல் சிரித்தாள் மாலதி. தனிமை அவளை வாட்டும் போதெல்லாம் கண்ணனைப் போல துடிப்பான ஒரு தம்பி தனக்கும் இருந்திருக்கலாமே என்று அவள் ஏங்குவதுண்டு.
சுந்தரம் மாஸ்டரின் ஒரே பெண் மாலதி, சின்ன வயதிலேயே தாயை இழந்தது மட்டுமல்ல, உடன் பிறப்புக்களும் இல்லாதவள். அதனால் தான் பாசத்திற்காக இப்படி ஏங்குகிறாள் என்பது கமலிக்குத் தெரியும். மாலதி தன்னுடைய தோழியாக இருந்தாலும் நட்பைவிட பாசம்தான் அவளிடம் அதிகம் இருக்கிறது என்பதை அவளுடன் பழகும்போது கமலினி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்ந்திருக்கிறாள். வேறு வீட்டில் படுத்து எழுந்தாலும், தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே மாலதியை அவர்கள் நடத்தினார்கள். சிரித்தமுகத்தோடு, கலகலப்பாக எல்லோரோடும் அணைந்து போகக்கூடிய சுபாவம் உள்ள பெண்ணாகவே எப்பொழுதும் மாலதி இருந்தாள்.
விளையாட்டுப் பொம்மைகளை அப்படியே விட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்ற கண்ணன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் எழுந்து வந்து, மாலதி பரிசாகக் கொடுத்த அந்த ரேஸிங்காரை மட்டும் கவனமாக எடுத்துப் பெட்டியில் வைப்பதை அவதானித்த கமலினி, தம்பியைக் கிண்டல் செய்தாள்.
சொந்தச் சகோதரியான கமலியிடம் கிடைக்காத அன்பையும், பரிவையும் எங்கிருந்தோ வந்த மாலதியிடம் கண்ணன் கண்டான். தினம், தினம் மாலதி அவனிடம் காட்டிய அன்பும், பரிவும் அவனை அறியாமலே அவளின் பக்கம் இழுக்கத் தொடங்கியது.
சைக்கிள் பழகவேண்டும் என்று ஆசைப்பட்டதால், தனக்குச் சைக்கிள் பழக்கி விடும்படி ஒருநாள் கமலியைக் கேட்கவே, ஏதோ கோபத்தில் இருந்த கமலி முடியாது என்று மறுத்துவிட்டாள். மீண்டும் பக்குவமாய்க் கேட்டுப் பார்த்தான், கெஞ்சிக்கூடப் பார்த்தான். கமலினியோ எதற்கும் மசியவில்லை..
'எனக்கு வேறு வேலையே இல்லையா? எனக்கேலாது போ..!" என்று கமலினி அடித்தமாதிரி அவனுக்குப் பதில் சொன்னாள்.
சற்று முன் அவளைப்பற்றி தேவகியிடம் கோள்மூட்டிவிட்டதில் இருந்த கோபம் அவளுக்கு இன்னமும் தணியாமலே இருந்தது.
'ஏன்டி அவன் உன்னோட தம்பிதானே கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் என்னவாம்..?" இதைக் கவனித்;த, மாலதி அவனுக்காகப் பரிந்து வந்தாள்.
'ஆகா, அவனுக்காக ரொம்ப பரிதாபப்படுறா, அப்போ நீயே அவனுக்குக் கற்றுக் கொடேன்' என்றாள் கமலி வீம்பாக.
ஏன், முடியாது என்று நினைச்சியா? வா கண்ணா, நான் உனக்கு சைக்கிள் பழக்கி விடுகிறேன் என்று சொன்னவள், எழுந்து வந்து சயிக்கிளை நிறுத்திப் பிடித்துக் கொண்டு கண்ணனை அதிலே ஏறி உட்காரச் சொன்னாள்.
'நான் பின்னாலே பிடித்துக் கொள்கிறேன். நீ கான்டிலை நேரே கவனமாகப் பிடித்துக் கொண்டு பெடலை மெல்ல, மெல்ல மிதிக்கனும், சரியா..?" என்றாள்.
கண்ணனும் 'சரி' என்று தலையசைத்து விட்டு ஆர்வத்தோடு சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான்.
அவ்வப்போது சயிக்கிள் ஒரு பக்கம் சாயும் போதெல்லாம் அவனும் சாயவே, அவனையும், சயிக்கிளையும் தாங்கி நிமிர்த்தி விட்டாள் மாலதி.
'ஓகே, இப்போ கொஞ்சம் பாஸ்டா மிதிக்கனும்.. அப்படித்தான்.. இன்னும் கொஞ்சம் பாஸ்டா.. வெரிக்குட்..." என்று கண்ணனை உற்சாகப் படுத்திக் கொண்டே அவனோடு ஓட்டமும் நடையுமாய்ச் சென்றாள் மாலதி.
சிறிது நேரத்தால் கான்டிலில் இருந்த கையை எடுத்துவிட்டு, சைக்கிளைப் பின்னால் மட்டும் பிடித்துக் கொண்டு அவனோடு சேர்ந்து அவளும் வேகமாக ஓடிவந்தாள்.
'பயப்படாமல் நேரே பார்த்துக்கொண்டு மிதிக்கணும்.. அப்படித்தான்.. நேரே போகணும்.." அவளின் உட்சாக வார்த்தைகள் மனதில் நம்பிக்கை ஊட்ட கண்ணனும் சயிக்கிளை ஆர்வமாய் மிதித்தான்.
திடீரென அவளது குரல் தன்னைத் தொடர்ந்தும் வரவில்லை என்பதை உணர்ந்தவன், மௌனத்தின் காரணம் என்ன என்று அறிவதற்காகத் திரும்பிப் பார்த்தான். அவதிப்பட்டுத் திரும்பியவனுக்கு, தூரத்தில் நின்று கொண்டு மாலதி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததும், அவனை அறியாமலே பதட்டப்பட்டான்.
'திரும்பிப் பார்க்காமல் கவனமாய் மி... தீ...!' மாலதி இங்கிருந்தே குரல் கொடுத்தாள்.
'அப்போ, இவ்வளவு தூரமும் நான் தனியே மிதித்திருக்கிறேனா..?' தனியே எதையோ சாதித்து விட்டதில் அவனுக்குப் பெருமை கலந்த சந்தோசமாயிருந்தாலும், ஒருவரும் சைக்கிளைப் பின்னால் பிடிக்கவில்லையே என்ற பதட்டத்தில் அப்படியே வீதியோரம் சரியவே அருகே இருந்த வேலியில் போய் மோதி விழுந்தான்.
கண்ணன் சைக்கிளோடு வேலியில் மோதி விழுவதைக் கண்டதும் மாலதி பதறிப் போனாள். வேகமாக ஒடிவந்து சயிக்கிளைத் தூக்கி நிமிர்த்தி அவனையும் தூக்கி விடத் தனது கையை நீட்டினாள்.
கண்ணனோ எழுந்திருக்கக் கஸ்டப்பட்டான். அவனது முகத்தில் அடிபட்ட வேதனையின் வலி தெரியவே, அவனுக்கருகே முழந்தாளிட்டு உட்கார்ந்து பக்குவமாய்க் கேட்டாள்.
'ஆ யூ ஓகே..?'
அவன் எதுவும் பேசாமல் குனிந்து முழங்காலைப் பார்த்தான்.
'அடி பட்டிச்சா..?' என்று மீண்டும் கேட்டவள்,
முழங்கால் சிராய்த்து இரத்தம் பூத்து, வியர்வையோடு கலந்து நின்றதைக் கண்டதும் பதறிப்போய் தனது கைக்குட்டையை எடுத்து முழங்காலிலே கட்டுப் போட்டுக் கொண்டே,
'வலிக்குதா..?' என்று இதமாய்க் கேட்டாள்.
வலித்தாலும், அவன் 'இல்லை' என்று வேகமாகத் தலை அசைத்தான். சிறுவன் என்றாலும் ஆண் பிள்ளை என்பதால் ஒரு இளம் பெண்னுக்கு முன்னால் தன்னுடைய வேதனையைக் காட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.
'ஐயாம் சொறிடா..' சொல்லி அவனது தலையைப் பாசத்தோடு தடவிவிட்டாள். அவன் எழுந்திருக்க முயற்சி செய்யவே, கைகொடுத்து அவனைத் தூக்கி நிறுத்தி விட்டாள்.
அவள் சைக்கிளை உருட்டிக் கொண்டு வர, அவன் சைக்கிளில் பிடித்தபடி மெல்ல மெல்ல நொண்டி கொண்டு வந்தான்.
முழங்காலில் கட்டோடு நொண்டிக் கொண்டு வரும் தம்பியைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்று வீட்டு வாசலில் காத்திருந்த கமலிக்குப் புரிந்துபோயிற்று. அவன் வேதனையில் துடிப்பதைக்கூடக் கவனத்தில் கொள்ளாமல், அவர்களைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தாலும் அவன், அவளை அசட்டை செய்துவிட்டு நொண்டிக் கொண்டு உள்ளே சென்றான்.
வாழ்க்கையில் அவன் முதன் முதலாய் ஒரு பெரிய சாதனை செய்து விட்டது போலவும், அந்த சாதனையை நிறைவேற்ற சொந்தச் சகோதரியே உதவி செய்யாதபோது, அக்காவின் சினேகிதி மாலதி துணையாக இருந்திருக்கிறாள் என்ற நன்றி உணர்வு அந்தச் சின்னவயதில் அவன் மனதில் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.
கமலியும், மாலதியும் கல்லூரித் தோழிகளாகையால் கல்லூரி முடிந்ததும் மாலதியும் கமலியின் வீட்டிற்கே நேரடியாகச் செல்வாள். நடனப் பயிற்சியை முடித்துவிட்டு ஒன்றாக இருந்து பாடம் படிப்பபார்கள். மாலதி கணிதத் துறையில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். கமலியும் கணிதத்தில் உள்ள சந்தேகங்களை அவளிடம் அடிக்கடி கேட்டுத் நிவர்த்தி செய்வாள். அதைவிட கண்ணனுக்கும் மாலதி பாடங்கள் சொல்லிக் கொடுப்பாள். எதையுமே இலகுவாகக் கற்றுக் கொள்வது மட்டுமல்ல, புத்திகூர்மையான கண்ணனுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் அவளும் ஆர்வமாக இருந்தாள். வேடிக்கையாக கண்ணன் ஒருநாள் மாலதியை டீச்சர் என்று அழைக்கவே மாலதி கோபத்தோடு அவனை முறைத்துப் பார்த்தாள். கண்ணன் உன்மையிலே பயந்து போனான். அவள் சிரித்துக் கொண்டே அவன் முதுகிலே செல்லமாய் தட்டி,
கண்ணா, இந்த மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம். என்னை நீ எப்போதும் போல மாலதி என்று அழைத்தாலே போதும் என்றாள்.
காலம் வேகமாக ஓடிக்கொண்டிருப்பது, ஒவ்வொருவரினதும் வளர்ச்சியில் தினமும் பிரதிபலித்தது.
கண்ணன் டீன் ஏச்சில் காலடி எடுத்து வைத்தபோது அவனது கற்பனையில் ஒரு இளம் பெண் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று எதிர் பார்த்தானோ, அவனுக்குப் பிடித்த அத்தனை எல்லா அம்சங்களும் கொண்ட ஒரு பெண்ணாக, அவனுக்கு வழிகாட்டும் முன்னோடியாக, அழகில் மட்டுமல்ல, அறிவிலும் குணத்திலும் அவனுடைய முன்னோடியாக மாலதியே இருந்தாள்.

No comments:

Post a Comment

THANK YOU