Friday, 4 January 2013

சுதந்திரமான அடிமைகள்! Vs ஜெயகாந்தன்மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் திருமதி சீதாலட்சுமி அமெரிக்காவில் இருந்து கொண்டு  ஜெயகாந்தனைப் பற்றிய தனது நினைவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறார். 

 திருமதி சீதாலட்சுமி  மின் தமிழில் தன்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகமாக, தான் இந்த நினைவுகளை எழுதிக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் முகமாக எழுதியதைப் படிக்க!

நேற்றைய தினம் சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் - 11 என்ற தலைப்பில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஒன்றும் புதிதில்லை. ஜெயகாந்தன் சமீபத்தில் இன்னொரு சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார், அல்லது சர்ச்சைக்குள் அவரைச் சிக்க வைத்து விட்டதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஜெயகாந்தனை வைத்து சர்ச்சைகள் கிளம்புவதில் பெரிய ஆச்சரியமில்லை. அவரும் இதற்கெல்லாம் அசருகிற மாதிரியும் தெரியவில்லை!

ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர்!


சமீபத்தில் சங்கர நேத்ராலயா ஆய்வு  நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவு ஒன்றை ஜெயகாந்தன் நிகழ்த்தியிருக்கிறார். அங்கே அவர் பேசியதில், “பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “என்ற பகுதி மாதர் சங்கங்கள், பெண் உரிமை இயக்கங்களின் கோபத்தைக் கிளறியிருப்பதாக இந்த இழையைப் படித்த பிறகுதான், தமிழ்நாட்டிலேயே இருக்கும் எனக்குத் தெரிய வந்தது.

ஜெயகாந்தன் பேசியது ஒன்றும் புதியதுமில்லை! அவருடைய கங்கை எங்கே போகிறாள், கோகிலா என்ன செய்து விட்டாள் கதைகளைப் படித்தவர்களுக்கு,  அவருடைய இந்த கருத்து புதிதாகவோ, அல்லது சர்ச்சைக்குரியதாகவோ தெரிவதில்லை என்பது தான் ஒரு வாசகனாக எனக்குப் படுகிறது.

” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “ என்ற ஜெயகாந்தனின் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. மனம்விட்டுப் பேசுவோம்" என்று திருமதி சீதாலட்சுமி அந்த விவாத இழையை முடித்திருக்கிறார்.

எனக்குள்  சில பழைய நினைவுகள் நிழலாடின! சுதந்திரம், சுதந்திரமான அடிமை என்ற வார்த்தைகள் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை  நினைவு படுத்தின. 

பொதுவுடைமை அரசியலில் கைகோர்த்த தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தது அந்தப் பெண் செய்த முதல் பாவம். அம்மா ராஜ்ஜியம் தான்! பெண்ணை, தங்களுடைய இயக்கத்தில் இருந்த ஒரு இளைஞனுடன் பழக அனுமதித்துக் காதல், திருமணத்தில் முடிந்தது. ஒரு பெண் குழந்தை கூட இருந்தது. கணவன் மனைவி இருவருமே மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அரசியலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

திடீரென்று, மாப்பிள்ளைப் பையனின் நடத்தையில் புகார்கள்! தினமும் குடிக்கிறானாம்! பெண்ணிடம் விசாரித்தால், பெண் கணவனுடைய சார்பாகத் தான் பேசினாள். அழுத்தி அழுத்திக் கேட்டதற்கு, எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தாள். உச்சத்தில் இருந்த அப்பனையே ஆட்டிப் படைத்தவள் அம்மாக்காரி!

விவாகரத்து ஒன்று தான் வழி! அம்மாக்காரி முடிவு செய்தாகிவிட்டது. அப்பாவும் தலையாட்டியாகிவிட்டது. பெண்ணோ வேறு வழியில்லாமல், விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர, விவாகரத்தும் கிடைத்தாயிற்று! அம்மாவின் அடியை ஒற்றி மகளும் அரசியலில்! இப்போது. இன்னொரு திருமணமும் ஆகிவிட்டது.

என்னதான் முற்போக்கு, பெண் விடுதலை, சம உரிமை என்று மேடைகளில் பேசினாலும், அந்தப் பெண்ணின் அடிமனதில் இருந்த சோகத்தைப் பார்த்த
போது  புரிந்து கொள்ள முடிந்தது. 

இப்போதோ காலம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது! முழுநேரமும், ஏதோ ஒரு சங்கம், எங்கேயோ ஒரு கூட்டம், வழக்கம் போலவே பெண்ணுரிமை குறித்துப் புள்ளிவிவரங்களுடன் உரை நிகழ்த்துவது என்பதே அன்றாடம்நடக்கிறநிகழ்வுகளாகிவிட்டது. ஒரு இயந்திரத்தைப் போல!

அந்தப் பெண்ணைக் கேட்டால், நான் சுதந்திரமானவள் என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளக் கூடும்! ஏராளமான புள்ளிவிவரங்களோடு கூட பேசக் கூடும்! புள்ளிவிவரங்கள் எல்லாம் ஒரு அளவுக்குத் தான், வாழ்க்கையை வழிநடத்துகிற அளவுக்கு வலிமையானதும், அவசியமானதும் அல்ல!


ஜெயகாந்தன் சொன்ன மாதிரி 'சுதந்திரமான அடிமை' என்ற வார்த்தை தான் அந்தப் பெண்ணுக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது!

ஏதோ பழக்கங்களுக்கு அடிமையாகவே இருந்து விடுகிற சுதந்திரம்!

No comments:

Post a Comment

THANK YOU