Friday 4 January 2013

விட்டில் பூச்சிகள் - சிறுகதை



சரியாக ஒரு வருடத்திற்கு முன்..அன்பன்..ரிஷ்வன். னால் எழுதப்பட்ட முதல் சிறுகதை... மீண்டும் உங்கள் பார்வைக்கு.

ன்று அலுவலகத்தில் அதிசயமாய் எதிர்பார்த்த  வேலை, எதிர்பாராமல்  சீக்கிரமாய் முடிந்ததில் கார்த்திக் மிகவும் சந்தோஷத்தின் உச்சத்துக்குச்  சென்றான். தினமும் காலை வந்து, இரவு பத்து மணிக்கு மேல் ஹோட்டல்  சென்று வருவதில் இருந்து இன்று விடுதலை. வெளியில் வேறு வானம் மப்பும் மந்தாராமாய் இருந்தது, லேசான தூறலும் அதனுடன் இணைந்த ஒரு வித மண் வாசனையும் மனதுக்கு இனிமையைத் தந்தது.  

கார்த்திக், நல்ல சிவந்த தேகம், ஆறு அடி வாட்டசாட்டமான உருவம். ஒரு தனியார் கம்பனியின் விற்பனை பிரிவு மேலதிகாரியாக இருக்கிறான், வசிப்பிடமோ சென்னை.  மாதத்திற்கு பத்து தினங்கள் வெளியூர் பயணம்.  தற்சமயம், பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக ஒரு ஹோட்டலில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறான். எதிர்பார்த்ததுக்கு மேலாக முடிக்க வேண்டிய வேலை இன்றே முடிந்து விட்டதால், என்ன  செய்யலாம் என்ற  யோசனையில் இருக்க, சட்டேன்று அவனுடைய  நண்பன் குமார் கவனத்தில் வந்தான். உடனே கைபேசியை தட்டி வலைவீசி பிடித்து நலம் விசாரித்தான். 

குமார், அவனுடைய கல்லுரி நண்பன், அவனும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதுடன் தன் குடும்பத்தாருடன் பெங்களுரிலே நிரந்தரமாக தங்கி விட்டான். எப்பொழுதாவது  ஒரு  நாள் கைபேசியிலும் வலைபேசியிலும் பேசிக்கொள்வதோடு சரி. இப்பொழுது நேரம்  கிடைத்ததால் அவனுக்கு போன் செய்து சந்திக்க வருமாறு அழைத்தான்.

'ஹாய் கார்த்தி எப்டிடா இருக்கே, பெங்களுரு வந்திருக்கிறேன்னு வந்த  உடனே  போன்  செய்திருக்க கூடாதா எங்க வீட்ல  தங்கி  இருக்கலாமே. எதுக்கு ஹோட்டல தங்கி சாப்பிட்டு, உடம்ப வேற கெடுத்துக்கரே' அக்கறையோடு பேசினான்.

'அதுக்கில்ல குமார்,  உனக்கு  எதுக்கு சிரமம், அதும் இல்லாம எனக்கு இப்படி இருந்தே பழகிப்போச்சு" என்றான்.

'இதுல என்ன சிரமம்,  சரி  இப்பவே  பெர்மிஷன் போட்டுட்டு வரேன். கரெக்டா  நான்கு மணிக்கு லால்பாக் கார்டன்ல மீட் பண்றோம், எவ்வளவு நாள் ஆச்சி சந்திச்சி" பேசிவிட்டு வைத்துவிட்டான்.

குமார், சொன்னமாதியே  வரக்கூடியவன் என்பதால்.  கார்த்திக்கும் அவசர அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளை அசுரகதியில் முடித்துவிட்டு, தன்னுடன் பணி செய்யும் அனைவரிடமும் கிளம்புவதாக கூறிவிட்டு  புறப்பட்டான். 

லால்பாக்,  வண்ண  வண்ண பூகளையெல்லாம் தன்னகத்தே கொண்டு, வருவோர் போவொருக்கெல்லாம்  வாசனையுடன்   நல்ல  ஆக்ஜிசன்    காற்றையும் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

காதலர்கள் ஜோடி ஜோடியாக உலா வருவதும், ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டும், ரகசியாமாய் உரையாடிக்கொன்றும் இருந்தனர்.

புது மண ஜோடிகளோ ஒரு பக்கம் தங்கள் வீட்டின் தொந்தரவில் இருந்து  விடுபட்டு அங்கு முடியாத சல்லாபங்களையும் காதல் மொழிகளையும்   நிறைவேற்றிக்கொண்டு உலா வந்த மாயமாய் இருந்தனர்.

வீட்டில் பேசமுடியாத குடும்ப பிரச்சினைகளை மனைவிமார்கள் தன்  கணவனுடன் புலம்பிக்கொண்டும் கண்ணீர் சிந்திக்கொண்டும் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர். கணவன்மார்களோ, எப்பொழுதும் போல் ஒரு காதில் வாங்கிக்கொண்டு இன்னொரு காதில் வெளிய அனுப்பிய வண்ணம் அமைதியாகவே இருந்தனர். 

சுற்றுலா பயணிகளும் தங்கள் பங்கிற்கு அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டும் இரைச்சல் போட்டுக்கொண்டு பூங்காவின் அமைதியை கெடுத்துக்கொண்டிருந் தனர். பெரியவர்கள் சிறிய குழந்தைகளை தலையில் தூக்கிக்கொண்டும் தோளில் சாய்த்துக்கொண்டும் நடக்க முடியாமல் நடந்த வண்ணம் சுற்றி வந்தனர். 

சற்று வளரந்த குழந்தைகள் புல் தரையில் மற்ற குழந்தைகளுடன் ஓடி ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டு சந்தோசமாக பொழுதை போக்கிக்கொண்டு இருந்தனர். தானும் குழந்தையாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்த படி, அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து சிறிது நேரம் பூக்களையும் வருபவர்களையும்  ரசித்தபடியே அமர்ந்திருந்தான்.  அப்பொழுது எப்போதோ படித்த கவிதை ஞாபகத்துக்கு வந்தது.

அதிகாலை மலர்ந்து
அனைவருக்கும் மணம் பரப்பி 
அணிந்துகொள்ள மலராய் 
அணிவிக்க மாலையாய்
அதேநாளிலே மடியும் 
அழகான மலரே...
இறந்து இறந்து தினம்
பிறந்து வாழும்
மனித வாழ்வை
துறந்து....மலராய்
பிறக்க ஆசைப்படுகிறேன்...

உண்மைதான், வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது அனைவருக்கும். தன்னை மறந்து இருக்கும் வேளையில், 

சரியாக  நான்கு மணிக்கு ஆட்டோவில் வந்திறங்கினான் குமார்.

"என்னடா எப்படி இருக்க, ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி போய்ட்டிருக்கு"

'கொஞ்சம் தொப்பை போட்டுட்டே போலிருக்கு' என்ற வழக்கமான  விசாரிப்புக்கு பிறகு. இரண்டு குடும்பகளைப் பற்றி பேசிக்கொண்டார்கள். 

கார்த்திக், சென்னையிலே செட்டில் ஆகிவிட்டான், அவனுடைய மனைவி ஒரு பாங்கில் கிளார்க்காக  வேலை  செய்கிறாள். ஒரே பையன், பார்த்துக்கொள்ள தன்னுடைய அம்மாவை கூடவே வைத்துள்ளான், அப்பா இறந்து இரண்டு வருடம் ஆகிறது. இரண்டு பேர் சம்பாதிப்பதால் வருமானத்திற்கு பஞ்சமில்லை.

இப்படியாக கல்லுரி நாள்களிலிருந்து, தற்சமயம் வரை அனைத்தும் அசைபோட்டதில் நேரம் போனதே தெரியவில்லை. மணி இப்பவே ஆறு  ஆகிவிட்டது.

"ரொம்ப நாள் கழிச்சி பார்க்கறோம், நாம ரெண்டு பேர் சேர்ந்தாப்போல குடிச்சி ரொம்ப நாளாச்சி, வாயேன் அப்பிடியே பார் போய்ட்டு போகலாம்" என்றான் குமார் விடாப்பிடியாக.

கார்த்திக்கும்  சரி  என்று  மனதில்  பட்டது.  அவனும் அடிக்கடி  குடிப்பவன்  இல்லை. எப்போதாவது நண்பர்கள் இருந்தால் செல்பவன். மேலும், இப்பொழுது  நேரம் இருப்பதால், சம்மதித்தான்.

நண்பன் பிரியத்துக்க, ஒரு ஒரு பீர் குடிக்க ஆர்டர் செய்தான், பார்க்கில் விட்ட கதை  தொட்ட கதை தொடர்கதையாக மீண்டும் தொடர்ந்தது, பேச்சு சுவாரஸ்யத்தில் கொஞ்சம் அதிமாகவே குடித்து விட்டனர். 

"குமார்,  போதும்,  இதுவே உனக்கு அதிகம்,  நான் ஹோட்டல் போய்ட்டு நாளைக்கு சென்னை கெளம்பனும்"

"அதுக்கென்ன, இப்பவே முடிச்சிட்டறேன்" இருப்பதை  ஒரு  மடக்கில் குடித்துவிட்டு, பேரரிடம்  பில்லுக்கான பணத்தையும் டிப்சையும் கொடுத்து வெளிய வந்தனர்.

குமார், நிறைய குடித்து இருந்ததால், ஒரு ஆட்டோவை கூப்பிட்டு, அவனை பத்திரமாக  வீட்டுக்கு அனுப்பி வைத்த பின்னர் தனக்கும், ஒரு ஆட்டோவை பிடித்து ஹோட்டல் போகச் சொன்னான். 

அப்பொழுது தன் கல்லூரி தினங்களையும் அதன் அதன்வுகளையும் மனது எண்ணிபடியே சென்றது. அந்த சமயத்தில் திடீர் என்று அவன் மனதில் அந்த எண்ணம் தோன்றியது, ஒரு பக்கம் இனம் புரியாத மகிழ்ச்சி அவன் உள்ளத்தில் குடிகொண்டது பொழுது ஆட்டோ ஹோட்டலை நெருங்கிக்கொண்டிருந்தது.

திகாலை ஐந்து மணிக்கு ட்ரெயின் பெங்களூரு வந்தடைந்தது. சென்னை வாசிகளுக்கு பெங்களூரு எப்பொழுதுமே குளிர் பிரதேசமாகவே தோன்றும்.  வழக்கம் போல்
அன்றும் குளிர் வாட்டியது. 

பெட்டியை கொடுங்க சார், ஐம்பது ரூபா போதும்"

'சார்..வாங்க சார் ஆட்டோவில் போய்டலாம்" 

விடாப்பிடியாக ஆட்டோ காரர்களும் போர்ட்டர்களும் அவனை மோதிய வண்ணம் இருந்தனர். அவர்களிடம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ரயில்வே ஸ்டேஷன் வாசல் வந்தடைந்தான்.வாடகை கார் ஒன்றைப் பிடித்து ஹோட்டல் சென்றான். 

அது ஒரு மத்திய தர ஹோட்டல், அலுவலகம் முன்னரே பதிவு செய்து விட்டது. ஒரு இருபது நிமிட நேர பயணத்திற்குப்  பிறகு கார் ஹோட்டலின் போர்டிகோவை சென்றடைந்தது. 

காரில் இருந்து இறங்கி ரெசெப்ஷன் சென்று, தன் வருகையை  உறுதிப் படுத்திவிட்டு, தனக்கான அறை எண்ணையும் அதற்கான சாவியையும் பெற்றான். அதற்குள் அவனுடைய பெட்டிகளை ஒரு ரூம் பாய் சுமந்து செல்ல வந்தான். 

ரூம் பாய் முன்னே செல்ல, பின்னே கார்த்திக் நடந்து சென்றான். அறை ஆறாவது மாடியில் இருந்ததது. அறையின் கதவைத் திறந்து உள்ளே பெட்டியை வைத்துவிட்டு,

'சார்.. காபி டீ ஏதாவது வேண்டுமா, கொண்டுவர்றேன்" என்றான். 

அவனுக்கும் வந்த களைப்பில் காபி குடித்தால் கொஞ்சம் இதமாக இருக்கும் என்று தோன்றியது. சரி என்று தலையாட்டி, அவனுக்கு டிப்ஸ் கொடுத்து அனுப்பி வைத்தான்.

'சார், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் இண்டர்காம் மூலமா சொல்லுங்க, நானே கொண்டு வரேன். என்னோட பேரு வேலு' என்றான். 

அவன் சென்ற பிறகு, அறையை ஒரு நோட்டம் விட்டன. பளிங்கு போல் அழகாக எல்லாமே வைத்த இடத்தில வைத்தது போல் இருக்கிறது. குழந்தைகள் இல்லாத வீடு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. 

கட்டில் மீது விரிப்புகள் அழகாக விரித்து, அதன் மேல் தலையணையும், போர்வையும் மிகவும் நேர்த்தியாக விரித்து வைக்கபட்டிருந்தது, பார்ப்பதற்கு ஒரு தொலைக்காட்சி பெட்டியும், ஒரு மேஜை, வருபவர்கள் பேசிக்கொள்ள இரண்டு நாற்காலிகளும், ஒரு டீ டேபிள் மற்றும் சாப்பிட  டைனிங் டேபிள், ஏசி மற்றும் போன் வசதியும் செய்யப்பட்டிருந்தது. 

குளியறை படு சுத்தமாகவும், பளிச் என்றும், நல்ல நறுமணம் வருமாறும் வைக்கபட்டிருந்தது.

அப்படியே நடந்து வந்தவன், அங்குள்ள திரைச் சீலையை விலக்கி  கண்ணாடி வழியாக வெளியே பார்த்தான். அந்த காலை வேளையிலும் தெருவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. சிலர் வெளியே  நடைப்யிற்சியும் ஓட்டப் பயிற்சியும்  செய்து கொண்டிருந்தார்கள், ஒரு பழ வண்டிக்காரன் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். பேப்பர் பையன் ஒவ்வொரு வீட்டுக்கும் மிதிவண்டியில் பேப்பரை வீடு வீடாக போட்டுக் கொண்டிருந்தான். மாநகராட்சி ஊழியர்கள் தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். 

காபி வந்தது, குடித்து பின்னர் படுத்துக்கொண்டே தொலைக்காட்சியில் செய்தியை கொஞ்சம் நோட்டம் விட்டான். சிறிது நேரம் களைப்பாறி விட்டு, ஆபீஸ் கிளம்ப ஆயத்தமாக, குளியல் அறைக்குச் சென்றான்.

குளித்து முடித்து விட்டு, ஆடை அணிந்து கொண்டிருக்கும் பொழுது, கதவே தட்டப்படும் சத்தம் கேட்டது. அதே ரூம் பாய் தான்,

 'சார், டிபன் என வேனுமென்னு சொன்ன, எடுத்திட்டு வந்திடுவேன்'

'சொல்றேன் நோட் பண்ணிக்கோ' சொன்னதை குறித்துக்கொண்டான். 

'ஆமா, வேலு எவ்வளலு நாளா இங்க இருக்க'

'அது வந்து சார், என்னோட சொந்த ஊரு வேலூர், இங்க வந்து ஒரு பத்து வருஷம்மாச்சி, இங்கேயே செட்டில் ஆயிட்டேன்'

'சரி..சரி... டிபன் எடுத்திட்டு வந்திடு...சீக்கிரம் ஆபீஸ் போகனும் '

'இப்பவே.. எடுத்திட்டு வரேன் சார்'

சாப்பிட்டு முடித்துவிட்டு, ஆபீஸ் கிளம்பினான். வேலுவிடம், செல்ல வேண்டிய ஆபீஸ் முகவரியைக் காட்டி, ஒரு ஆட்டோவை பிடித்து வரச் சொன்னான்.

இப்படியாக... கடந்த இரண்டு நாள்காளாக ஆபீஸ் செல்வதும், இரவு தாமதமாக வருவதுமாய் இருந்தான். தாமதமாக வரும் சமயத்தில் வெளியிலே டின்னரை முடித்து விட்டு வந்துவிடுவான். 

பெங்களூரு வந்து மூன்று நாள்கள் ஆகிவிட்டது, இன்றுதான் வேலை முடித்து கொஞ்சம் சீக்கிரமாகவே அதாவது ஆறு மணிக்கு ஹோட்டல் வந்துவிட்டன.

ஹோட்டல் அறையிலிருந்து இண்டர்காம் மூலம், இரவு வேண்டிய உணவை எடுத்து வருமாறு கூறிவிட்டு, தன பாட்டுக்கு குளியறைக்குச் சென்றான். 

வேலு தான் இரவு உணவை எடுத்து வந்து கொடுத்தான். 

'சார், வேற ஏதாவது வேணுமா'

'போதும் வேலு, எதுனா வேணுமினா சொல்றேன்'

'அது இல்லங்க சார், நைட் சீக்கிரமா வேற வந்திருக்கிங்க, வேற ஏதாவது வேணுமினா ஏற்பாடு பண்றேன்' என்றான்.

' எனக்கு புரியல'

'அது வந்து,,,,,, தனியா இருக்கீங்க, உங்களுக்கு தேவை எதாவது சொன்ன, ஏற்பாடு பண்றேன். ரொம்ப அழகான பொண்ணுங்க எல்லாம் கிடைக்கும் சார்'

இப்பொழுதுதான் அவன் கேட்டதின் அர்த்தம் விளங்கியது. 

'அதெல்லாம் வேண்டாம்...அதும் இல்லாம எனக்கு விருப்பம் இல்ல' 

'சரி சார், தேவைப்பட்டா என்கிட்ட சொல்லுங்க சார்'  பதில் எதிர்பார்க்காமல் சென்று விட்டன.

ஆட்டோவில் வரும் சமயம் அவனுக்கு இந்த நினைவுகள் வந்து போயிற்று, மேலும் குடித்து வேறு இருந்ததால் தற்சமயம் அது அவனுக்கு தேவைப்பட்டது. 

ஆடோவிற்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு நேராக தன் அறைக்குச் சென்று, இண்டர்காம் மூலம் வேலுவை வரச் செய்தான்.

'வேலு, அன்னிக்கு கேட்ட இல்லையா, இப்ப எனக்கு தேவைப்படுது, கொஞ்சம் ஏற்பாடு செய்ய முடியுமா'

'அதுகென்ன சார், இன்னும் அரை மணிநேரத்தில் இங்க கொண்டு வரேன்'  என்று தலையை சொரிந்து நின்றான்.

கார்த்திக் அதை புரிந்து கொண்டு அவனிடம் ஐநூறு ரூபாய் தாளை நீட்டி,

 'சீக்கிரம், அழைச்சிட்டு வந்திடு'

வேலு மகிழிச்சியுடன் அங்கிருந்து வெளியேறினான்.

பின்னர், அவள் வருவதற்குள்  தன்னை பிரெஷ் செய்து கொள்ளலாம் என்று, குளிக்க செல்வதற்காக தன ஆடைகளைக் களைந்தான்.

அப்பொழுதான் கவனித்தான், அது காணாததை, எங்கே விட்டேன், அரக்க பறக்க தன் கைப்பை, சூட்கேஸ், சட்டை பாக்கெட்,  பான்ட் பக்கெட் அனைத்திலும் தேடினான், கிடைக்கவில்லை.

அது இல்லை என்றால், நினைக்கவே அவன் தலை சுற்றியது. உடனே, களைந்த ஆடையை போட்டுக்கொண்டு, அறையை பூட்டிவிட்டு வெளியே கிளம்பினான்.

'ன்னங்க... எழுந்திருங்க...' என்று அவசரப்படுத்தினாள் பிருந்தா, கார்த்திக்கின்  மனைவி.

இரவு நீண்ட நேரம் ஆபீசிலில் வேலை செய்து, இரவு 11 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான், அதனால் ஏற்பட்ட உடல் வலி ஒருபுறமும் தூக்க மயக்கம் மறுபுறமும் அவனை எழுந்து திரும்பவும் ஒருகளித்து படுக்க வைத்தது. 

'எத்தன  தடவ எழுப்புறது... எழுந்திருங்க'

இதற்கு மேல் தூங்கினால், பேசியே கொன்று விடுவாள் என்பதால் எழுந்து கட்டிலின்  மேல் அமர்ந்தான். 

அவன் அருகின் வந்தவள் "கண்ண கொஞ்சம் மூடுங்க" 

'என்ன இது.. எழுந்திருக்க சொல்ற, மறுபடியும் கண்ண மூட சொல்ற..என்ன விளையாடுறியா'

'மூடுங்கன்னு சொன்னா, மூடுங்க'

"எதுக்குன்னு சொல்லேன்"

"அதெல்லாம் முடியாது.... மூடுங்கன.. மூடுங்க...."

"சரி.. மூடிட்டேன்" 

"இப்ப... கண்ண திறங்க"  என்றாள்

அவன் கண்ணே நம்ப முடியவில்லை, அவன் நீண்ட நாள்களாக ஆசைப்பட்ட
லேட்டஸ்ட் செல் போன் பிரிக்க படாத புத்தம் புது அட்டைபெட்டியில். 

'ஹாபி பர்த்டே டு  யு...'  என்றாள்.   

அவனுக்கே அப்பொழுதான் நினைவிற்கு வந்தது, இன்று தனக்கு பிறந்தநாள் என்று...

இது உங்களுக்காக என்னோட பிறந்த நாள் பரிசு என்று அவனிடம் கொடுத்து, அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, வேகமாக கிச்சன் வேலை இருப்பதாக கூறிச்  சென்று விட்டாள். 

ஏற்கனவே ஒரு செல் போன் வைத்திருந்ததால், இதை தனிப்பட்ட உபயோகத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வைத்திருந்தான். 

தன்  நண்பனுடம் பேசும் பொது, அந்த போனில் இருந்து தான் பேசினான். அவனை பார்க்கும் அவசரத்தில், அப்படியே செல்பேசியை ஆபீசில் வைத்து விட்டு கிளம்பிவிட்டான்.  அவன் மனைவி அவனுக்கு ஆசையாய் வாங்கி கொடுத்ததால், அவன் ஏகத்துக்கும் அதிர்ச்சி ஆகிவிட்டான். 


அதனால் தான் உடனே ஒரு ஆட்டோவை பிடித்து, தன்னுடைய ஆபீஸ் சென்றான்.

அங்கிருந்த வாட்ச்மேன்  "என்ன, சார், இந்த நேரத்தில" என்றான். ஆபீஸ் கதவ கொஞ்சம் திற, வீட்டுக்கு போற அவசரத்தில செல்போனை வச்சிட்டு போய்ட்டேன். எடுத்திட்டு போகத் தான் வந்தேன்' என்றான்.


வாட்ச்மேன் கதவை திறக்க, அவன் தன்னுடைய அறைக்குச் சென்றான், தான் டேபிளில் வைத்திருந்த இடத்திலேயே அது இருந்தது. அதை எடுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு மறுபடியும் ஹோட்டல் நோக்கிச் சென்றான்.



மனதில் செல் போன் கிடைத்த சந்தோஷம், வரக்கூடிய இரவை நினைத்து கண்ணை மூடியவாறு கற்பனையில் சிறகடித்தவாறு  ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான்.


ஹோட்டல் நெருங்க நெருங்க, அவன் மனம் வானத்தில் துள்ளிக்  குதித்துக் கொண்டிருந்ததால், ஆட்டோ ஹோட்டலை நெருங்குவதை கூட அறியாமல் தன்னிலை மறந்தான். 

'சார், இது தானே..  நீங்க தங்கி இருக்கிற ஹோட்டல்' ஆட்டோக்காரன் அவனை எழுப்பினான். 

'ஆங்...  ஆமாம்...'

அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியைத்  தந்தது. அங்கு ஒரே போலீஸ் மயமாக இருந்தது. ஒரு போலீஸ் ஜீப்பில் சில ஆண்களும், சில பெண்களும் ஏறிச் செல்வதைக் கண்டான்.  


அங்குள்ள வரவேற்பு பெண்ணிடம் சென்று என்ன நடந்தது என வினவினான். 

'சார் திடீர்னு போலீஸ் ரைடு' 


'இந்தாங்க சார் உங்களோட ரூம் சாவி'  அவனிடம் அறை சாவியைக் கொடுத்தாள்.

இப்பொழுதான் அவனுக்கு மெல்ல மெல்ல அனைத்தும் புரிந்தது. ஒரு கணம் நான் தவறு செய்ய துணிந்தேனே, ஒரு வேலை நான் மாட்டிருந்தால்,  நினைக்கவே அவமானமாக இருந்தது. நானும் அல்லவா அவமானப் பட்டு இருக்க வேண்டும். ஒரு விட்டில் பூச்சியாய் மாட்டிக் கொள்ள ஆசைப்பட்டோமே, எவ்வளவு பெரிய தவறில் இருந்து தன் மனைவி தன்னைக் காப்பாற்றி இருக்கிறாள், அவள் அறியாமலே, போதை தெளிந்து பாதை மாறியவனாய்த்  தன அறையை நோக்கிச்  சென்றான். 

மனதில் மானசீகமாக தன் மனைவிக்கு ஒரு நன்றியைத் தெரிவித்து. அன்று இரவு நிம்மதியாக உறங்கினான்.   

   விட்டில் தேடிய பூச்சியாய்
கட்டிலை  நாடிய காமன்
           ஞானம் இழந்தான் கணநேரம்
                     நல்லவனானான் மனையாள் மூலம்

(முற்றும்)

No comments:

Post a Comment

THANK YOU