Tuesday, 29 January 2013

பொன்மொழிகள்-

வாழ்வில் திட்டமிடத் தவறுகிறபோது
தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்று பொருள்.
********
தவறுகள் வருந்துவதற்காக அல்ல,திருந்துவதற்காக.
********
உழுகிற மாடு பரதேசம் போனாலும் அங்கும் ஒருவன் கட்டி உழுவான்.
.********
உங்கள் காலணிகள் சரியாகப் பொருந்தும்போது நீங்கள்  அதை மறந்து விடுகிறீர்கள்.
********
அடுத்தவர்கள் சொல்லித் தெரிவது அறிவு.
தானே அனுபவித்து அறிவது ஞானம்.
********
அடிக்கிற ஆளுக்கு சிறிதளவு பலம் போதும்.அடி வாங்குகிறவனுக்குத்தான் பெரும்பலம் வேண்டும்.அடிக்கிற சிற்றுளி பலமானதா,அடி வாங்குகிற பாறை பலமானதா?
********
உன் எண்ணங்கள் குறித்து எச்சரிக்கையாய் இரு.
அவை எந்த வினாடியும் வார்த்தைகளாக வெளி வரக் கூடும்.
********
இளமை தவறான பலவற்றை நம்புகிறது.
முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.
********
பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்துப் பின் பரீட்சை  வைக்கிறார்கள்.
ஆனால் வாழ்வில்   பல பரீட்சைகளில்  இருந்துதான் பாடம் கற்கிறோம்.
********
புத்திமதி,
அறிவாளிக்குத் தேவையற்றது:
முட்டாளுக்குப் பயனற்றது.
********
இப்படிச் சொல்வதா,அப்படிச் சொல்வதா எனச் சந்தேகம் வந்தால்
உண்மையைச் சொல்லி விடுவதே மேல்.
********செல்வம் பல நண்பர்களைக் கொண்டு வருகிறது.
துன்பம் அவர்கள் எத்தகையவர்கள் என்று காட்டுகிறது.
******
குற்றத்தை சாமர்த்தியத்தால் அழிக்க முடியாது.
அனுதாபத்தால் அழித்து விடலாம்.
******
பந்தயம் கட்டும் பழக்கம்,
பேராசையின் குழந்தை;பெரிய இடரின் தந்தை.
******
அதிக ஊக்கமும் குறைந்த வேலையும் உடையவர்களே,
சண்டைக்காரர்களாக இருக்கிறார்கள்.
******
உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்.
தன்னை அறிந்தவன் ஆணவம்  கொள்ள மாட்டான்.
******
'அதிர்ஷ்டம்'தராததை 'திருப்தி'யால் பெறலாம்.
******
நீதியைவிட நியாயமாக நடந்து கொள்வதற்குப் பெயர் அன்பு.
******
மனிதர்கள் சில சமயம் உண்மை மீது இடறி விழுவதுண்டு.
ஆனால் பெரும்பாலானோர் எழுந்து நின்று ஏதும்
நடவாதது போல அவசரமாகப் போய்விடுகிறார்கள்.
******
உங்களது கௌரவம் உங்கள் நாக்கு நுனியில் உள்ளது.
******
விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி.
******
மன நிறைவு என்பது இயற்கையான செல்வம்;
ஆடம்பரம் என்பது வலிந்து தேடும் வறுமை.
******
ஒரு தீமையை ஊட்டி வளர்ப்பது
இரண்டு குற்றக் குழந்தைகளை உற்பத்தி செய்யும்.
******
அலங்காரம் செய்வதனால் அகங்காரம் வளரும்;
ஆடம்பரம் செய்வதனால் ஆணவம் ஓங்கும்.
எளிமையின் மூலமே எதையும் வெல்லும் மனத்திண்மை வளரும்.
******
எச்சரிக்கை உணர்வு ஒருபோதும் தவறுக்கு துணை நிற்பதில்லை.
******


எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
**********
நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
**********
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
**********
வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதை
வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.
**********
நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.ஆனால் நம் வாழ்விற்கு முடிவே இல்லாததுபோலக் காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
**********
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
**********
மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
**********
நீ தொலைத்தது நாட்களைத்தான்.
நம்பிக்கையை அல்ல.
**********
தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.
**********
நம்முடைய சந்தேகங்கள் நமக்கு துரோகிகள்.
நாம் வெற்றி பெற முடியாதபடி நம்மை பயமுறுத்தி தடுத்து விடுகின்றன.
**********
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை
ஒரு பொறுமைசாலி சாதித்து விடுவான்.
**********
புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.
**********
கருமியின் நெஞ்சம்  சாத்தானின்  இருப்பிடம் .
**********
நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.
**********
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
**********
நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும்.
**********
முட்டாள் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான்.
**********
நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும்.முடிவில் வெறுப்பை வளர்க்கும்.
**********
நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்.
நம்மைத்தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.
**********
முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன்
இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்.
**********
அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்;பேச்சுக்கள் வெறும் கிண்கிணி ஓசைகள்.
**********
முட்டையைக் கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி.
காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
**********
எப்படியும் செய்ய வேண்டிய ஒரு செயலை புன்முறுவலுடன் செய்வதற்குப் பெயர்தான் ஒத்துழைப்பு.
**********ஒரு பழக்கத்தை சும்மா ஜன்னல் வழியே தூக்கி எறிந்து விட முடியாது.தாஜா செய்து ஒவ்வொரு படியாகக் கீழே இறக்கிக் கொண்டு வர வேண்டும்.
**********
பணம்  பேசக்  கூடியது  மட்டுமல்ல பேசுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதும் ஆகும்.
**********
ஒவ்வொரு திறமை வாய்ந்த மனிதனின் மூளையிலும் முட்டாள் தனமான பக்கம் ஒன்று கட்டாயம் உண்டு.
**********
சிறு கேள்விகளுக்கு நீண்ட விடை அளிப்பவனிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவன் எதையோ மறைக்கிறான்.
**********
முகஸ்துதி உப்பைப் போன்றது.கொஞ்சம் உபயோகித்தால் தான் ருசியாய் இருக்கும்.அதிகமானால் கரிப்பாக இருக்கும்.  
**********
இரண்டு நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்யாதீர்கள்.செய்தால் ஒரு நண்பனை இழப்பீர்கள்.
இரண்டு அன்னியர்களிடையே மத்தியஸ்தம் செய்யுங்கள்.செய்தால் ஒரு நண்பன் கிடைப்பான்.
**********
அதிகப் பேச்சு,பொய் இரண்டுமே நெருங்கிய நண்பர்கள்.
**********
நாம் அனைவரும் மரண தண்டனைக்குள்ளானவர்கள் தான்.தூக்கிடும் நாள் தான் வித்தியாசம்.
**********
செய்து காட்டுபவர்கள்தான் குழந்தைக்குத் தேவை.குறை காண்பவர்கள் அல்ல.
**********
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் மூடன்.
ஒரு தவறும் செய்யாதவன் மரக்கட்டை.
தன்னை அறியாமல் தவறு செய்து பின் திருத்திக் கொள்பவன் மனிதன்.
**********

No comments:

Post a Comment

THANK YOU