Wednesday 23 January 2013

தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்

, | 4 மறுமொழிகள் »


எங்கும் ஒரே பேச்சு
இல்லையில்லை,
எங்கெங்கும் ஒரே ஏச்சு.


கடந்த ஆட்சி துண்டாய் போனது
மின்வெட்டினால் தான்
எச்சரிக்கிறார்களாம் சிலர்.
நடக்கும் ஆட்சி துண்டாய் போனாலும்
மின்வெட்டு எஞ்சியிருக்கும்
அறியாதவர்களா இவர்கள்.


காற்றாலை சுற்றவில்லை
அணைகளில் நீரில்லை
அனல் நிலக்கரி தரமில்லை
அண்டை மாநிலங்கள்
ஒத்துழைப்பதும் இல்லை
ஒன்றா இரண்டா காரணங்கள் ஏராளம்.
ஆனாலும்,
மின்சாரம் இல்லை.


பேசுவது எதிர்க்கட்சியா
ஆளும் கட்சி செயல்படவில்லை.
பேசுவது ஆளும் கட்சியா
ஆண்ட கட்சி செயல்படுத்தவில்லை.
காட்சியும், கட்சிகளும் மாறினாலும்
காரணங்கள் மாறாது.
எந்தக் கட்சி ஆண்டாலும்
எந்திரம் ஓடாது.
மின்வெட்டுக்கு மட்டும்
வெட்டே இருக்காது.


வியர்வையில் மின்சாரம் தயாரிக்கலாமா
மைக்கேல் ஃபாரடே வோ
தாமஸ் எடிசனோ
புதிதாய் வரவேண்டும்.


சாலைகளில், சந்திகளில்
கண்கள் கொள்ளக் கூசும்
வெளிச்சத்தில் குளித்த
விளம்பரங்கள், விளம்பரங்கள்.
குடிசை வீடுகளில்
கண்களை இடுக்கி திரிவிளக்கில்
பாடங்களை மேயும்
தேர்வுநேர மாணவர்கள்.


ஓலை விசிரி கைவலிக்கும்
விசிராவிட்டால் தூக்கம் சிரிக்கும்
உறக்கமாவது வந்துவிடக் கூடாதா?
படுக்கையிலும் போராட்டம்
விசிரிகள் கைதட்டும்
பறந்துவிட்டதா பந்து
போதை எழும்பிப்பார்த்து கொண்டாடும்
மின்னொளியிலும் கிரிக்கெட்.


மின்சாரம் பற்றாக்குறை
தினமும் வெட்டு 3 மணி நேரம்
திட்டம் போடும் அரசு
மின்சாரம் பற்றாக்குறை
விளம்பர ஆடம்பரங்களுக்கு இனி வெட்டு
சட்டம் போடுமா அரசு.


சொந்த விவசாயிகள்
விதைத்ததை எடுக்க
நீரிறைக்க மின்சாரமில்லை
அன்னிய கோலாக்கள்
புட்டிகளை நிறைக்க
எப்போதும் தடையில்லை
நீண்ட கடற்கரை நாடு
அலைகளிலிருந்து மின்சாரம்
யோசிக்கவே கூடாது.
எப்போதும் வெயில்காயும் நாடு
பரிதிஒளியில் மின்சாரம்
ஆராயவே கூடாது
வல்லரசு காணும் நாடல்லவா
அணுவை திருத்தி
அடிமையாவதை மட்டுமே
யோசித்து ஆராய்வோம்.


எதையும் விற்றே பழக்கப்பட்டு
மின்வெட்டிலும் லாபம் ருசிக்க
வருகிறார்கள்
மின்கல முதலாளிகள்.
இனி உபரியாய் மின்சாரம் இருந்தாலும்
லாபத்திற்கு உத்திரவாத ஒப்பமிட்டு
மின்வெட்டை
நம்மிடம் சாட்டும் அரசு.


என்ன செய்யப் போகிறோம் நாம்?


நினைத்தாலே ‘ஷாக்’ அடிக்கும்
புரட்சிகர மின்சாரம் என்னவென்று
காட்டவேண்டாமா?

No comments:

Post a Comment

THANK YOU