Tuesday 29 January 2013

பொன்மொழிகள்

பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட
உண்மையால் அறைவதே மேலானது.
**********
பிறருக்குப் பயன்படுங்கள்.
பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள்.
**********
முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது.
**********
முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.
**********
உங்களுக்கு  மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.
**********
நான்மறையைக் கற்றவனல்ல ஞானி.
'நான்'மறையக் கற்றவன் தான் ஞானி.
**********
உறவால் வரும் அன்பைவிட
அன்பால் வரும் உறவே புனிதமானது.
**********
விழுவதெல்லாம்
எழுவதற்குத்தானே தவிர
அழுவதற்காக அல்ல.
**********
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும்,
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.
**********
பலமான மழை பெய்யும்போது
லேசான மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டாதே.
உறுதியான குடை வேண்டும் என்று வேண்டு.
**********


மக்கள் ஒரு அற்பனைச் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம்.
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதற்குப் பெயர் ஜனநாயகம்.
**********
கெட்ட பழக்கம் முதலில் யாத்ரிகனைப்போல வரும்.
பிறகு விருந்தாளியாகி,இறுதியில் அதுவே முதலாளி ஆகிவிடும்.
**********
முள்,கரண்டி,கத்தி ஆகியவற்றின் துணை கொண்டு உண்பது,மொழி பெயர்ப்பாளரை துணைக்கு வைத்துக் கொண்டு காதலிப்பதற்கு  ஒப்பாகும்.
**********
எந்தப் பொருளையும் மலிவாக வாங்கக் கூடிய நேரம் போன வருடம்.
**********
இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தி அடைவது சரிதான்.
ஆனால் இருக்கிற திறமை போதுமென்று நினைப்பது சரியல்ல.
**********
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.
**********
இன்றைய என் பசிக்கு உணவு அளிக்காது பிறகு சொர்க்கத்தைக் கொடுக்கும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
**********
மிதவாதி என்பவன் யார்?உட்கார்ந்து யோசிப்பவன்.என்ன,உட்காருவது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
**********
உடனடியாகச் சீர்திருத்த வேண்டியது எது?அடுத்த வீட்டுக்காரனின் குணம்.
**********
சீட்டுக்கட்டை சரியாகக் கலைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்,நம் கைக்கு நல்ல சீட்டு கிடைக்கும் வரை.
**********
நீ சொல்வது சரிதான் என்று ஒருவர் என்னிடம் சொன்னால் உடனே அது சரியில்லையோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.
**********
ஒரு ஆளையோ,ஒரு தேசத்தையோ,ஒரு கொள்கையையோ வெறுக்க வேண்டும்.அதில்தான் ரொம்பப்பெருக்கு சந்தோசம்.
**********
காமம் என்பது எப்போது ஆரம்பமானது?நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஆடை கட்டத் துவங்கியபோது.
***********
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தி ஆகி விடுகிறது.
**********
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறுகின்றன.
**********
வெற்றியில் நிதானம் போகிறது.
அதைத் தொடர்ந்து வெற்றியும் போகிறது.
**********
எப்போதும் ஒரே நிலையில் இருப்பதற்குப் பெயர்தான்  நிம்மதி.
**********
கேட்டால் சிரிப்பு வர வேண்டும்.
சிரித்தால் அழுகை வர வேண்டும்.
அதுதான் நல்ல நகைச்சுவை.
**********
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு
எந்த விமரிசனத்தையும்
தூக்கி எறியும்  தைரியம் வர வேண்டும்.
**********
எந்த வேலை உனக்குப் பழக்கமானதோ,
அந்த வேளையில் புதுமைகள் செய்யத் தவறாதே.
**********
,                                                  --கண்ணதாசன்
11.11.11.இது எனது ஆயிரமாவது இடுகை.இதுவரை எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
*********************************************************************
கடைசி  வார்த்தை  தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
**********
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
**********
மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*வளர்த்த நன்றியுள்ள நாய்
*தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
**********
இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
**********
என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!
**********
வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
**********
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
**********
வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
**********
விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
**********
வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
**********
அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.
**********
'எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
***********
இளமை ஒரு தவறு.
வாலிபம்  ஒரு போராட்டம்.
முதுமை ஒரு வருத்தம்.
**********
மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.
**********
உழைத்துப் பார் ,அதிர்ஷ்டம் வரும்.
உறங்கிப்பார்,கஷ்டம் வரும்.
**********
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
**********
நோயாளிக்கு எப்போதாவது நித்திரை உண்டு.
கடன்காரனுக்கு ஒருபோதும் இல்லை.
**********
அறிவு இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு வருவது இயற்கை .
அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கு அதுவே அர்த்தம்.
**********
சொர்க்கம் போவதற்கு நல்லவர்கள் உழைப்பதை விட
நரகம் போக கெட்டவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.
**********
ஒருவரை கீழே தள்ளுவதற்காகக் குனியாதே.
கீழே விழுந்தவரை மேலே தூக்கிவிடக்குனி.
**********
இனிமையாக வாழ முடியாதவர்கள்,இனிமையாக வாழ்பவரை வெறுக்கிறார்கள்.அல்லது அவர்களை விட்டு விலகுகிறார்கள்.
**********
வறுமை என்பது பயந்தவரை அடிக்க வரும் போக்கிரி.
ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது பயந்த சாது.
**********
தூங்குபவனை எழுப்புவதற்காக பொழுது இருமுறை விடிவதில்லை.
**********
விருதுகளும் பட்டங்களும் சராசரி மனிதனுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.
உயர்ந்த மனிதனுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகின்றன.
தாழ்ந்த மனிதரால் அவை களங்கப் படுத்தப்படுகின்றன.
**********
வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்.
பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்துவிடும்.
**********
எந்தப் பிரச்சினையையும் கடக்கும்போதுதான் வலிக்கும்.பின்னர் நினைக்கும்போது அது ஒரு சுகமான தழும்பு.
**********
வெற்றி,தோல்வி இரண்டுமே விளையாட்டின் முடிவுகள்தான்.நமக்குத் தேவை விளையாட்டின் முடிவுகள் அல்ல.விளையாடும்போது கிடைக்கும் அகமகிழ்வும் பரபரப்பும்தான்.வெற்றி தரும் கரவொலி மைதானத்தில் தங்கி விடுவதில்லை.அது ஒரு நிமிட நேர மகிழ்ச்சி.
**********
தொட்டால் சிணுங்கி இலை கூட நாம் விரலால் தொட்டால்தான் சுருங்கிக் கொள்கிறது.ஆனால் ஒன்றைப் பற்றி மோசமாக நினைத்தாலே போதும்.உடனே மனம் சுருங்கி விடுகிறது.மனிதன் தான் இன்னும் புரிந்து கொள்ள முடியாத தாவரம்.
**********
பயம் என்பது என்ன?  தைரியக் குறைவுதான்.
பயத்திலிருந்து வெளியேறுவது எப்படி?பயத்தை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள்.
எது புகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.
எது இகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.
யார் வாலிபர்? மாறாத குதூகலத்தோடு இருப்பவர் வயதில் கிழவர் கூட வாலிபர்தான்.
யார் கிழவர்? குதூகலமில்லாதவர் வாலிபராயிருந்தாலும் கிழவர்தான்.
**********
ஒரு ஆப்பிளுக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கலாம்.ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள்கள் இருக்கின்றன என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
**********
உலகம் முழுவதும் மனிதர்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
**********
பலர் வெற்றியைக் கனவு காண்கிறார்கள்.ஆனால்
சிலர் அதற்காக உழைக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
**********
எல்லோரிடமும் அழகு இருக்கிறது.ஆனால்
எல்லோராலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
**********
உங்கள் மனமே நீங்கள் விரும்பியபடி இயங்காதபோது மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப இயங்கவில்லை என்று கோபம் கொள்வது என்ன நியாயம்?
**********
எப்போதும் நம் எதிர்பார்ப்புக்கு ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள்.உங்களையும் இதே காரணத்துக்காக முட்டாளாகப் பார்க்க நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
**********
ஒவ்வொரு பாலைவனத்திலும் ஒரு சிறிய பசுமையான  சோலையாவது இருக்கிறது.ஆனால் எல்லா ஒட்டகத்தாலும் அதைக் கண்டு பிடிக்க முடிவதில்லை.
**********

No comments:

Post a Comment

THANK YOU