Wednesday 23 January 2013

6543210 - இது எல்லோருக்கும் பிடித்த நம்பர் ..!


நம்பர்களில் நமக்கு 8 பிடிக்காது. 7 1/2 பிடிக்கவே கூடாது. 13, 666 கொஞ்சம் பயம். ஆனா 6543210 என்ற இந்த நம்பர் நம்ம எல்லோருக்கும் பிடிக்கும்.
பிடிச்ச நம்பர் என்கிறீங்க .... ஆனா இது இறங்கு முகமா இருக்கே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனா இதுதான் ஏற்றமான வாழ்க்கைக்கு உதாரணமான நம்பர். அப்படி என்ன சார் இதுலே விசேசம் என்று கேட்கிறீர்களா? ஒவ்வொன்னா சொல்றேன் கேளுங்க..!
சார்.. நாம எப்படியோ ஒரு வழியா நல்ல படிச்சு ஒரு வேலையிலே செட்டில் ஆகி விடுகிறோம். அது மாதச் சம்பளம் வாங்குகின்ற வேலையா இருந்தாலும் சரி, இல்லே சொந்தத் தொழில், வியாபாரமாக  இருந்தாலும் சரி... மாசமான ஒரு கணிசமான தொகை கையில் வந்தால் மனசு ரொம்ப சந்தோசப்படும்... நிம்மதியாக இருக்கும். அதுக்கு வேண்டிய நம்பர் 6. இது கொஞ்சம் பெரிய நம்பர் என்றாலும், பெருசா விரும்பறதிலே என்ன தப்பு  இருக்கு..? அதாவது மாசத்துக்கு 6 டிஜிட்லே சம்பளம். இப்போ குளுகுளுன்னு இருக்குதா...?
சரி... அடுத்து இவ்வளவு சம்பாத்தியம் பண்ண வேண்டுமென்றால், அதுக்கு எப்பவும் வேலை.. வேலை.. என்று இருக்க வேண்டும். ஓய்வெல்லாம் கிடையாது. கடுமையாக உழைத்தால்தான், நிறைய சம்பாதிக்க முடியும். இவ்வளவு சம்பாத்தியம் எதிர்பார்க்கின்றோம் என்றால், அதை சம்பாதிக்கும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். டிபார்ட்மெண்டல் டெஸ்ட் எழுதணும். புரோமோசனுக்கு முயற்சி செய்யணும். இண்டர்வியு அட்டெண்ட் பண்ணனும். பெரிய அதிகாரிகளை இம்ப்ரெஸ் செய்யனும். இதெல்லாம்  சம்பளம் வாங்கறவாளுக்கு. அவாளே ஒரு வியாபாரியாக இருந்தால், நிறைய முதலீடு செய்து சரக்கு வாங்கிப் போடணும். விளம்பரம் செய்யனும். தரம் இருக்கணும். தொழில்காரனா இருந்தால் சர்வீஸ் சூப்பரா இருக்கணும். இப்படி நிறைய இருக்கு. இந்த நிலையிலேதான் 5 என்ற நம்பர் முக்கியத்துவம் பெறுது. அதாவது மாஞ்சு..மாஞ்சு.. என்னதான் வேலை செய்தாலும், அது ஒரு வாரத்துக்கு 5 நாள் மட்டுமே.  மீதம் 2 நாள் விடுமுறை. எந்த  வேலையும் கிடையாது. ஜாலியா ஊர் சுற்றுவது, விரும்பியவாறு இருப்பதுதான் வேலை. இப்போ இன்னும் குளுகுளுன்னு இருக்குதா...?
இப்படி வாரத்திலே கிடைக்கின்ற ரெண்டு நாள்லே ஊர் சுற்ற, உறம்பரை வீடுகளுக்கு போக, நண்பர், நண்பியோட டூரடிக்க போக நம்பர் 4 வேண்டும். நம்ம தினசரி 5 நாள் வேலைக்கும் இந்த நம்பர் 4 இருந்தா கொஞ்சம் கவுரவம். அதென்ன ஒரு 4 சக்கர வாகனம்தான். சிறுசு, பெருசு என்று எதுவாக இருந்தாலும், நல்ல நிலையில் உள்ள ஒரு ஏசி கார் இருந்தா எவ்வளவு நல்ல இருக்கும்? இப்போ கொஞ்சம் ஜில்லுன்னு இருக்கா?
இப்போ கை நிறைய காசு [சாரி... பை நிறைய (6 டிஜிட்லே) பணம்], வாரத்துக்கு 5 நாள் வேலை, எந்த நேரத்திலே சாவியை போட்டாலும், "ம்ம்.. என்ன இந்த நேரத்திலே...?" என்று சிணுங்காமல், "தோ .... வந்துட்டேங்க.. நான் ரெடி" என்று  கிளம்பும் 4 சக்கர வாகனம் என இப்படி எல்லாம் இருக்கு. இந்த நேரத்திலேதான்  நமக்கு நம்பர் 3 வேணும். அதென்ன..? வேற ஒண்ணுமில்லேங்க... 3 பெட்ரூம் மட்டும் கொண்ட ஒரு குட்டி ஃபிளாட். அதாவது ரியல் எஸ்டேட்காரவா  சொல்லுவாளே 3BHK அபார்ட்மெண்ட்ன்னு ... அதுதான். எத்தனை நாள்தான் வாடகை வீட்டில் வாழ்றது? ஊரே விட்டு தள்ளி இருந்தாலும் பரவாயில்லே. காத்து, வெளிச்சம், தண்ணி வசதி கச்சிதமா இருக்கணும். இன்ஸ்டால்மென்ட் கடன் வசதி மூலம் வாங்குவதாக இருந்தால், இன்னும் பெஸ்ட். இப்போ பால் அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கா?
என்ன இருந்தாலும், நம்பர் 2 இல்லைன்னா நமது வாழ்வு நிறையவே மீனிங்லெஸ் ஆகி விடும்; ரொம்ப போரடிக்கும். ஆணோ, பெண்ணோ ரெண்டு குழந்தைகள் நமக்கு இருக்க வேண்டும். கியூட்டா ஆணொன்னு, பெண்னொன்னு இருந்தா நல்லா இருக்கும். இப்போ சந்தோசமா இருக்கா..?
எல்லாத்துக்கும் மேல நம்பர் 1 இருந்தாதாதான் எதுவும்  சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் சாதரணமா இருக்கக் கூடாது. கண்ணுக்கு லட்சணமா, தித்திப்பா இருக்கணும். பார்த்தாலே பரவசம் வரணும். அதான் சார் ... நெஞ்சத்திலே இனிப்பு தடவிய sweet heart மனைவி இருக்கோணும். "அன்பான மனைவி ... அழகான துணைவி.... அமைந்தாலே பேரின்பமே "-ன்னு சும்மாவா சார் பாடி வச்சான். அதுக்கென்னு அன்புக்கு ஒரு மனைவி, அழகுக்கு ஒரு துணைவி என்று ரெண்டு பேருக்கு வாழ்க்கைபட்டுற கூடாது. அப்புறம் பார்முலா பூராவும் தாப்பாய்டும். அது மாதிரி நெஞ்சத்திலே இனிப்பு தடவி, செயல்லே வஞ்சகம் செஞ்சா ரொம்ப கஷ்டம். எனவே தேர்ந்தெடுப்பு சரியா இருக்கணும். ஃபிரண்ட்லியா, ஜாலியா ஜோடி இருக்கணும். இப்போ ஹில் ஸ்டேசன்லே லைட்டா தூற்ற மழையிலே, கையிலே மசாலா தடவின சூடான சோளக்கருது சாப்பிட்டுக்கொண்டே நடந்து போற மாதிரி இருக்கா..?
அது சரி சார் ... கடைசியிலே நம்பர் 0 எதுக்கு வருது என்று நீங்க கன்பியூஸ் ஆவுரது எனக்கு புரியுது. 0-வுக்கு வேல்யூ உண்டா சார்? கிடையாது. நம்ம வாழ்க்கையிலே நம்மளை எந்த டென்சனும் கொஞ்சம் கூட தாக்கக் கூடாது. அமைதியா, சந்தோசமா, நிம்மதியா, ஜாலியா போய்க் கொண்டே இருக்க வேண்டும் (என்று ஆண்டவனிடம் தினமும் வேண்ட வேண்டும்). இப்போ ஓக்கேவா சார்...!
0 % டென்சன், 1 இனிப்பு நெஞ்சக்கார மனைவி, 2 அருமையான குழந்தைகள், 3 பெட்ரூம் கொண்ட குட்டி  ஃபிளாட், நாலு இடங்களுக்கு போகவர 4 சக்கர வாகனம், 5 நாள் உத்தியோகம், 6 டிஜிட் சம்பாத்தியம்.. பாத்தீங்களா  நம்பர் ஏறுமுகமாக வந்திடிச்சு! அப்போ வாழ்க்கை ஏத்தம்தானே சார்..?
இப்போ இந்த 6543210 நம்பர் உங்களுக்கு ரொம்பவே பிடிக்குதில்லே...?!

No comments:

Post a Comment

THANK YOU