இன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் அறிந்துவைத்திருப்பது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.
இந்த வரலாற்று தகவல்களை நோக்கும் போது தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருப்பதற்கு தகுதியானதா..? என எம் உள்ளத்தினில் வினா எழுப்பத் தோன்றுகிறது.
ஆகவே தான் தாஜ்மாஹால் தொடர்பாக நான் ரசித்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஆகவே தான் தாஜ்மாஹால் தொடர்பாக நான் ரசித்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
முதலில் இந்த தகவலை எனக்கு தந்துதவிய நண்பன் K R VIJAYAN அவர்களுக்கும் . அதே போன்று இந்த தகவலுக்கு சொந்தக்காரராக விளங்கும் RAMAKIRISHNAN (TAFAREG) அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மொகலாய வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட பெண் மும்தாஜ். உலகெங்கும் தாஜ்மகாலின் வழியாக நினைவுகொள்ளப்படுகிறார். ஆனால், பேசப்படப்படாமல் போன முக்கியமான இரண்டு பெண்கள் இருக்கின்றனர். ஒருவர்... ஷாஜகானின் மூத்த மகளும், திருமணம் செய்துகொள்ளாமல் அரசாட்சியில் மன்னருக்குத் துணை நின்றவளும், மிகச் சிறந்த படிப்பாளியும், சூபி ஞான நெறியைப் பின்பற்றியவளுமான ஜஹானாரா பேகம்.இன்னொருவர்... ஒளரங்கசீப்பின் மகளும் மெய்யியல் கவிஞருமான ஜெப்உன்நிசா. இந்த இரண்டு பெண்களும் சரித்திர வானில் தனித்து ஒளிரும் இரட்டை நட்சத்திரங்கள்.
இன்று, தாஜ்மகாலைப் பார்க்கப் போகிறவர்களில் அதிகமானவர்களுக்கு மும்தாஜின் இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், அவள் 13 குழந்தைகளின் தாய், தனது 14-வது பிரசவத்தில் இறந்து போனாள் என்பது தெரியும்? 14 பிள்ளைகளைப் பெற்ற மும்தாஜின் நினைவாக, தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதைத் தாய்மையின் சின்னம் என்றோ, சிறந்த மனைவியின் நினைவுச் சின்னம் என்றுதானே நியாயமாக அழைக்க வேண்டும்?
ஜஹானாரா பேகம், குரால்னிசா, தாரா ஷகோ, முகமது சுல்தான்ஷா, ரோஷனாரா, ஒளரங்கசீப், உமித்பக்ஷி, சுரையா பானு, சுல்தான் முராத், கௌஹரா எனும் மும்தாஜின் பிள்ளைகள் பெயர்கள்கூட தாஜ்மகாலுக்குள் போகிறவர்களுக்குத் தெரியாது என்பதுதானே நிஜம்.
காதலின் சின்னமாக திகலும் தாஜ்மஹாலை ஷாஜகான் தன் மூன்றாவது மனைவியான மும்தாஜுக்கே கட்டினார் என்பது எம்மில் பலருக்குத் தெரியாது. 1612-ம் ஆண்டு மே 10-ம் தேதி இவர்களது திருமணம் நடந்தது. அப்போது, மும்தாஜுக்கு வயது 19. மும்தாஜ் இறந்துபோனது 1631 ஜுன் 17-ம் தேதி. அப்போது அவளுக்கு வயது 38. அதாவது, 19 வருஷ இல்லறத்தில் 14 குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். தொடர் பிரசவங்களால் உடல்நலிவுற்றுத்தான் இறந்துபோனாள்.
பிரசவ வலியில் அவள் விட்ட கண்ணீரும் வேதனைக் குரலும் தாஜ்மகாலுக்குள் கேட்கக்கூடுமா என்ன? தனி மனிதர்களின் துயரமும் வலியும் காலத்தின் முன்பு பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. காலம் எல்லாவற்றையும் உருமாற்றிவிடுகிறது. அவளது மரணத்தின்போது ஜஹானாராவுக்கு வயது 17. மனைவியை இழந்து துக்கத்தில் வாடிய தந்தைக்கு உறுதுணையாக இருந்தாள் ஜஹானாரா. தனிமையிலும் வேதனையிலும் ஷாஜகான் வாடிய காரணத்தால், அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருந்தது. அதைச் சரிசெய்யத் தானே அரசு ஆணைகளை பிறப்பிக்கவும், அரசரின் ஆலோசனையின் பெயரில்முக்கிய முடிவுகளை எடுக்கவும் துரிதமாகச் செயல்பட்டாள் ஜஹானாரா.
நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை ஜஹானாராவுக்கு வழங்கினார் ஷாஜஹான். அது அவரது மற்ற இரண்டு மனைவிகளுக்கும், ஜஹானாராவின் சொந்த சகோதரிகளுக்கும்கூடப் பொறாமையை ஏற்படுத்தியது.
தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுவும், ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தந்தைக்குத் தன்னைத் தவிர வேறு துணை இல்லை என்பதால், தன் வாழ்நாளை அப்பாவின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறாள்.
மும்தாஜ் இறந்த பிறகு ஜஹானாராவுக்கு ஒரு முக்கியக் கடமை இருந்தது. தனது சகோதரன் தாரா ஷகோவுக்கு நதிரா பானுவோடு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நடத்தியாக வேண்டும். அது, அம்மாவின் இறுதி ஆசை. எனவே, அதைச் செயல்படுத்த தீவிரமாக முயன்றாள்.
தாராவுக்கும் அவளுக்குமான சகோதர பாசம் அளப்பறியது. அவள், தாரா ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினாள். அது, ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை, தனது நாட்குறிப்பில் 'வெள்ளைப் பாம்பு’ என்று குறிப்பிடுகிறார் ஒளரங்கசீப். அந்தக் கோபம் ஜஹானாராவைவிட மூன்று வயது இளைய அவளது தங்கை ரோஷனாவுக்கும் இருந்தது. அவள் நேரடியாக ஜஹானாராவிடமே தனது வெறுப்பைக் காட்டினாள். ஒளரங்கசீப்போடு சேர்ந்துகொண்டு ஜஹானாராவின் பதவியைப் பறிக்கச் சதி வலைகளைப் பின்னினாள்.
ஆனால் மன்னரின் விருப்பத்துக்குரிய மகள் என்பதால், ஜஹானாராவின் அதிகாரத்தை எவராலும் பறிக்க முடியவில்லை. ஷாஜஹான் காலகட்டத்தில் அரசின் ஆண்டு வருவாய் 60 லட்ச ரூபாய். ஆனால், செலவோ ஒரு கோடிக்கும் மேல்! ஆகவே, அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக ஷாஜஹான் நிறையத் திட்டங்களைத் தீட்டி நாட்டின் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்திக் காட்டினார். செலவினத்தை மிகவும் குறைத்தார். இந்தச் செயல்பாடு காரணமாக அரண்மனையிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருந்தது. அதைச் சமாளிப்பதுதான் ஜஹானாராவின் முக்கியப் பணியாக இருந்தது.
இன்னொரு பக்கம், ஷாஜகானுக்குப் பிறகு அரியணைக்கு யார் வருவது என்பதில் தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் கடுமையான பகை வளர்ந்திருந்தது. தாரா பலவீனமானவன். அவனால் ஆட்சி செய்ய முடியாது என்று ஒளரங்கசீப் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தனக்கான ஆட்களைத் திரட்டி ஆட்சியைப் பிடிக்கும் ஏற்பாட்டில் இருந்தான். ஆனால், தாராவுக்கே பதவி கிடைக்க வேண்டும் என்று ஜஹானாரா உறுதியாக இருந்தாள். பதவிச் சண்டை குடும்பத்தில் கடும் பூசல்களை உருவாக்கியது.
தாரா, லாகூரின் புகழ்பெற்ற சூபி ஞானியான மையன்மிரின் சீடன். இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்காக உபநிஷத்துகளை, பாரசீக மொழியில் தாரா மொழி பெயர்த்து இருக்கிறார். அவரது சிறந்த நூலான மஜ்மஉல்பஹ்ரெயின் எனும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம், சூஃபியிசத்துக்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்குமான பொதுத் தன்மையைப் பேசுகிறது.
ஸர்மத் என்ற ஞானியையும் பின்பற்றினார் தாரா. ஸர்மத் பிறப்பால் ஒரு யூதர். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். அத்துடன் ராம லட்சுமணர்களின் பக்தர். அவரது சீடனாகத் தாரா இருப்பதை ஒளரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மத விரோதச் செயல் என்று கண்டித்தார். இந்தச் சகோதரச் சண்டைக்கு நடுவில் ஜஹானாரா மாட்டிக்கொண்டு தவித்தாள்.
இப்போது உள்ள 'பழைய தில்லி’ அன்று ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. அந்த நகரை வடிவமைக்கும்போது ஜஹானாரா ஐந்து முக்கிய இடங்களை தானே முன்னின்று வடிவமைத்துத் தந்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சாந்தினி சௌக்.
1644 மார்ச் 29-ம் தேதி தாராவின் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டு இருந்தபோது ஜஹானாராவின் மெல்லிய பட்டு மேலாடையில் தீப்பற்றி அவளது தாடையிலும் பின் கழுத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவளது அழகான முகம் சிதைந்துபோனதை ஷாஜகானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை செய்யப் பல நாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனாலும், இளவரசியின் சிதைந்த முகத்தை முன்பு போல பொலிவுறச் செய்ய முடியவில்லை.
நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சை நடந்தது. இந்த நாட்களில், தனது மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தினமும் 1,000 வெள்ளி நாணயங்களை ஏழைகளுக்கு தானம் அளித்ததோடு, துறவிகளையும் ஞானிகளையும் வரவழைத்து பிரார்த்தனையும் செய்துவந்தார் ஷாஜகான். பல நாட்கள், மகளின் அருகில் அமர்ந்து வேதனையோடு கண்ணீர்விட்டார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
எட்டு மாதத் தொடர் சிகிச்சை நடந்தது. ஈரானிய மருத்துவரின் முயற்சியால் அவள் குணம் அடைந்தாள் என்றும், ஆங்கில மருத்துவர் ஒருவரின் உதவியால் ஜஹானாரா நலமடைந்தாள் என்றும் இரண்டு விதத் தகவல்கள் கூறப்படுகின்றன. இரண்டையுமே உறுதி செய்யும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவள் நலமடைந்த சந்தோஷத்தில், 80,000 ரூபாய் தானத்துக்காகச் செலவிடப்பட்டது என்றும், மாமன்னர் தன் மகளுக்கு 139 அரிய வகை முத்துக்களையும் அரிய வைரம் ஒன்றையும் பரிசளித்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களோடு சூரத் துறைமுகத்தின் வரி வசூல் முழுவதும் அவளது வருவாயின் கீழ் கொண்டு வரப்பட்டது என்றொரு துணைத் தகவலும் காணப் படுகிறது.
ஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் வாழ்க்கை!
இதைத்தான் பெர்னர் போன்ற ஆய்வாளர்கள் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தன் மகளைக் குணப்படுத்திய ஆங்கிலேய மருத்துவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக, சூரத் துறைமுகத்தில் வரி இல்லாமல் பொருட்களை வணிகம் செய்துகொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார் மன்னர் ஷாஜஹான். அப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது வணிகத்தை ஸ்தாபிக்கத் தொடங்கியது என்கிறார்கள்.
ஜஹானாரா, தனது தாய் இறந்த பிறகு, அவளது சொத்தில் பாதியை உரிமையாகப் பெற்றிருந்தாள். அந்தப் பணத்தை, டச்சு வணிகர்களுடன் சேர்ந்து கப்பல் வணிகம் செய்தாள் என்றும் மகாஜன் வித்யாதரின் குறிப்பு கூறுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலேயருக்கு அவள் வணிகம் செய்ய உதவி இருக்கக்கூடும். மன்னரோடு மாளிகையில் வாழாமல் தனியே தனக்கென ஓர் அரண்மனை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜஹானாரா. தனிமையில் வாழ்ந்த அழகியான ஜஹானாராவை, யூசுப் என்ற கவிஞன் காதலித்தான். அவளும் அவன் மீது மிகுந்த காதலுடன் இருந்தாள். தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், அந்தக் காதல் முறிந்துபோனது என்றொரு கதையும் வரலாற்றில் உலவுகிறது.
1658-ம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமற்றுப்போனார். பதவியைக் கைப்பற்ற நான்கு புதல்வர்கள் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. 1659-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளரங்கசீப்பின் ஆட்கள், தலை வேறு உடல் வேறாக தாராவை வெட்டிக் கொன்றார்கள். வயோதிகத்தைக் காரணம் காட்டி ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் ஒளரங்கசீப்.
தனிமையும் நோயுமாக தனது வயோதிகக் காலத்தைக் கழித்த ஷாஜகானுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் மட்டுமே. அவள், ஷாஜகானின் இறுதி நாள் வரை உடனிருந்து பராமரித்து வந்தாள். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவள் தனித்துவிடப்பட்டாள். ஒளரங்கசீப்பால் துரத்தப்பட்ட அப்பாவின் மற்ற மனைவிகளையும் அரண்மனைப் பெண்களையும் தனது பொறுப்பில் கவனித்தாள். ஒளரங்கசீப் அவள் மீது இரக்கம்கொண்டு மீண்டும் அவளுக்கு அரண் மனையின் உயரிய பதவியான முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்தார். அதைப் பெரிதாகக் கருதாமல் 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த ஜஹானாரா, 1681-ம் ஆண்டு இறந்துபோனார்.
அவளுக்கு, நிஜாமுதீன் தர்காவில் கல்லறை அமைக்கப் பட்டது. 'என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த் தைகள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.
ஜஹானாரா எழுதிய பெர்ஷியக் கவிதை களின் தொகுப்பு ஒன்று ஆன்ட்ரியா புடென்ஷோன் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டு, 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
THANK YOU