Wednesday 25 July 2012

டாக்டர் அம்பேத்கர்: வரலாற்றுப் படிப்பினைகள்


Ungal Noolagam Logo

கட்டுரை

டாக்டர் அம்பேத்கர்: வரலாற்றுப் படிப்பினைகள்

இப்படிக்கு ;குரு 

சாதி ஒழிப்புப் போராளியும் சட்ட மேதையுமான டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் 14.4.1891. 116வது பிறந்தநாள் நாடெங்கும் கொண்டாடப்படவிருக்கிறது. 65 ஆண்டுகளே வாழ்ந்த அம்பேத்கர், நாட்டின் சாபக்கேடாக இருக்கும் “பிறப்பால் வேற்றுமை” எனும் தீண்டாமையை ஒழிப்பதிலும், சாதிகளற்ற சமுதாயம் அமைவதற்காகவும், பல்வேறு இயக்கங்களை நடத்தினார்; தலித் மக்களைத் திரட்டினார்; களத்தில் இறக்கி உரிமைக்காகப் போராடச் செய்தார். பத்தாம் பசலித்தனமான சாதிப்பாகுபாடு, இந்திய நாட்டைப் பின்னுக்குத் தள்ளுவதோடல்லாமல், மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது என்பதை வரலாற்று ரீதியான ஆய்வுகளைச் செய்து விளக்கியிருக்கிறார். இதன் மூலம் சமூக அறிவுத் துறையில் புதிய தடம் பதித்துச் சென்றிருக்கிறார்.

Ambedkarஇந்திய நாடு விடுதலை பெற்றதும், நம் நாட்டை நாமே ஆளும் சட்டவிதிகளை உருவாக்கும் குழுவுக்கு டாக்டர் அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார்; பல மாறுபட்ட கருத்துள்ளவர்களும் இருந்ததால், இவருடைய தனிக் கருத்து முழுமையாக இடம் பெறவில்லை. அரசியல் நிர்ணய சபையில் குடியரசு சாசனத்தின் முன் வடிவை அறிமுகப்படுத்தி வைத்தார். முழுமையான விவாதத்துக்குப் பின்னர், டாக்டர் அம்பேத்கர் தொகுப்புரை வழங்கினார்; அத்தொகுப்புரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் இன்றைய அரசியல் சமூக சூழலுக்கும் பொறுத்தமாகவுள்ளன. அத்தோடு, நாட்டுப் பற்றும், சமூக மாற்றத்துக்காகப் பணியாற்றும் அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகக் குரலாக டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களும், அரசியல் நிர்ணய சபையில் அவர் ஆற்றிய உரைகளும் நூல் வடிவில் வந்துள்ளன.

அனைத்தும் சமூக வரலாற்றுச் சுரங்கங்களாகும். ஆங்கிலத் தொகுப்புகளை மத்திய அரசின் பதிப்புத்துறையின் அனுமதி பெற்று, என்.சி.பி.எச். புத்தக நிறுவனம் மொழியாக்கக் குழு மூலம் சிறப்பாக மொழி பெயர்த்து வருகிறது. இது வரை 36 தொகுப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன.

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளில் இக்காலச் சமூக அரசியல் நிகழ்வுகளில் தெளிந்த நோக்கோடு அணுகுவதற்கு அவசியமான சில கருத்துக்களை மட்டும் குறிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இந்தியச் சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாக அமைந்துள்ள உழைக்கும் மக்கள் இழிந்த சாதியினராக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அம்பேத்கர் இவர்களை ஒன்று திரட்டிப் போராடினார். தலைமை தாங்கினார். வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார்; தலித் மக்களுக்குத் தனித் தொகுதி ஒதுக்கீடு கேட்டு வாதிட்டார்; காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் “எங்களுக்கு நாடு ஏது? என்று கேட்டு வேதனைப்பட்டார்; இன்னும் பிற காரணங்களால், அம்பேத்கரின் நாட்டுப் பற்று சம்பந்தமான ஐயப்பாடுகள் காணப்பட்டன.

ஆனால், இந்திய சமூக இயக்கங்களை உன்னிப்பாக ஆய்ந்து அறிந்தவராக இருந்ததால், பிரிட்டிஷ் ஆட்சியும், இந்தியாவின் பிற்போக்கு ஆதிக்க சக்திகளோடு சமரசம் செய்து கொண்டதை அம்பலப்படுத்தினார். டாக்டர் அம்பேத்கர் 1930ல் அனைத்திந்திய அடித்தட்டு மக்கள் மாநாட்டில் ஆற்றிய தலையாய பேருரை:

“பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு நீங்கள் போலீஸ் படையில் சேர முடியாது. பிரிட்டிஷ் அரசு உங்களை இப்படையில் சேர்த்துக் கொள்கிறது. பிரிட்டிஷாருக்கு முன்பு நீங்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை; இப்போது நீங்கள் இராணுவ வீரர்கள் ஆக முடியுமா? இந்தக் கேள்விக்கு நீங்கள் ஆம் என்று விடை தர முடியாது. இவ்வளவு நீண்ட காலமாய் நாட்டில் இவ்வளவு அதிகாரம் செலுத்தியவர்கள் சிறிது நன்மையாவது செய்திருக்க வேண்டும். ஆனால் உங்களுடைய நிலையில் அடிப்படையான மாறுதல் ஏற்படவில்லை என்பது மெய்”.

“ஒரு சீனத் தையற்காரனிடம் மாதிரிக்காக ஒரு பழைய கோட் கொடுத்து அதே மாதிரி தைத்துத் தரச் சொன்னார்கள். அவன் அதே மாதிரி கிழிசல் ஒட்டுகளுடன் ஒரு புதிய கோட் தைத்துக் கர்வத்தோடு கொடுத்தான். உங்களைப் பொறுத்த மட்டில் பிரிட்டிஷ் அரசு, சீனத் தையற்காரன் போலவே நடந்து கொண்டுள்ளது. அவர்கள் வரும்போது இந்த நிலைமையை அப்படியே ஏற்று, மிக்க கவனத்துடன் அதைப் பாதுகாத்து வருகிறது. உங்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகள் ஆறாப் புண்களாக அப்படியே உள்ளன. அவை இன்னும் திருத்தப்பட வில்லை. உங்களையன்றி வேறு யாராலும் உங்கள் குறைகளை நீக்க முடியாது. இந்த அதிகாரத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் கிடைக்காது. அரசியல் அதிகாரமின்றி உங்களுக்கு உய்வு இல்லை; ஒரு சுயராஜ்ய அரசியலமைப்பின் கீழ்தான் அரசியல் அதிகாரம் உங்கள் கைவசம் ஆகக் கூடிய ஏதாவது வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்”. (ரஜினி பாமிதத் - இன்றைய இந்தியா பக்கம் 36).

அம்பேத்கர் ஆற்றிய தொகுப்புரை :

அரசியல் நிர்ணய சபையில் சட்ட நகல் பற்றிய மூன்றாவது சுற்று விவாதத்துக்கு 1949 நவம்பர் 25 அன்று டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய தொகுப்புரை இன்றைய இந்திய சூழ்நிலைக்கும் பொறுத்தமாகவுள்ளது. இந்தியச் சமுதாய அரசியல் பிரச்சினைகளில் நிறைந்து கிடக்கும் சிக்கல்களையும், தீர்வுகளையும் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். எதிர்காலச் சந்ததிகளுக்கும் எச்சரிக்கையாக அத்தொகுப்புரை அமைந்துள்ளது.

1. “இந்தியா 1950 ஜனவரி 26ம் நாள் முதல் குடியரசு நாடாகிறது. நாட்டின் சுதந்திரத்துக்கு எதாவது நேர்ந்து விடுமோ? நாடு தனது சுதந்திரத்தைப் பேணிக் காத்துக் கொள்ளுமா? அல்லது மீண்டும் இழந்து விடுமா? இதுவே என் மனதில் குடி கொண்டிருக்கும் முதல் சிந்தனையாகும்.”

2. “என் மனதில் தோன்றும் இரண்டாவது சிந்தனை - ஜனவரி 26லிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்காக ஆட்சி நடத்தும் மக்கள் ஆட்சி ஒரு ஜனநாயகக் குடியரசாகத் திகழும். ஜனநாயகக் குடியரசுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.”

“இந்திய அரசியலில் பக்தி அல்லது வீரவணக்கம் Heroworship ஈடு இணையற்ற முறையில் பெருமளவு அரசியலில் பங்கு வகிக்கிறது. அரசியலில் தனி நபர் வழிபாடு இந்தியாவைப் போன்று உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை.”

“மதத்தில் பக்தி வழிபாடு தனி நபரின் ஆன்ம விடுதலைக்கு வழிகோலலாம்; ஆனால் அரசியலில் பக்தி அல்லது தனி நபர் வீர வழிபாடு நிச்சயம் அழிவுக்கு வழி வகுக்கும்; அல்லது சர்வாதிகாரத்தில் கொண்டு விடும்”.

3. “மூன்றாவதாக - வெறும் அரசியல் ஜனநாயகத்தோடு திருப்தி அடைந்துவிடக் கூடாது.”

“அரசியல் ஜனநாயகம், சமுதாய ஜனநாயக அடித்தளத்தின் மீது அமையாவிட்டால், நீடித்து நிலைத்திருக்க முடியாது.”

4. “நான்காவதாக - நாம் அனைவரும் ஒரு தேசம் என்ற நம்பிக்கையெனும் மாயையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.”

“பல்லாயிரம் சாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் வாழும் இடம் எப்படி ஒரே தேசமாக இருக்க முடியும்?”

“சமுதாய ரீதியாகவும், மனோ நிலையிலும் ஒரே தேசம் என்ற சொல்லுக்குரியவர்களாக ஆகவில்லை என்பதை எவ்வளவு சீக்கிரத்தில் நாம் உணர்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. ஒரு தேசமாக வளர்வதற்கான அவசியத்தை உணர வேண்டும்; அந்த லட்சியத்தை நனவாக்குவதற்கான வழி வகைகளைச் சிரத்தையோடு சிந்திக்க வேண்டும்.”

டாக்டர் அம்பேத்கரின் மனதை உறுத்திக் கொண்டிருந்த கருத்துக்களை ஒளிவு மறைவின்றி அரசியல் நிர்ணய சபையில் தெரிவித்திருக்கிறார். தேசிய இனப் பிரச்சினையை விட, சாதிப் பிளவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் அவரைப் பெரிதும் பாதித்தவை. இன்றும் மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து, புழுதி கிளப்பி விடப்படுவதைப் பார்க்கிறோம். இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிற்கும் சோதனையான காலத்தில் அம்பேத்கர் வெளிப்படுத்தியிருக்கும் ஐயப்பாடுகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

பெண்கள் விடுதலை
இந்திய நாட்டில் வேளாண்மை துவங்கிய காலத்திலேயே ஆணாதிக்க சமுதாயம் உருவாகத் துவங்கி விட்டது; தனிச் சொத்துரிமை ஆண் வாரிசுக்கே என்பது படிப்படியாக அமுலாக்கப்பட்டது; மனுதர்ம சாஸ்திரத்தில் ‘பெண்’ மனித குலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, வெறும் உடல் இச்சைக்கான மனித உருவமாகவே கருதப்பட வழிவகுத்தது. “எல்லா மதங்களுமே பெண்களை மனித குலத்திலிருந்து ஒதுக்கி விட்டது” ஒரு பெண் கவிஞர் எழுதியிருப்பது மிகவும் பொறுத்தமாகவுள்ளது.

இந்தியாவில் மூடப்பழக்க வழக்கங்களாலும், சம்பிரதாயச் சடங்குகளாலும் பெண்ணடிமைத் தனம் அமுலாக்கப்பட்டு வருகிறது; குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல், வரதட்சணைக் கொடுமை, பெண் சிசுக்கொலை, பாலியல் வன்முறை இன்னும் பிற கொடுமைகள் தொடர் சம்பவங்களாக நீடித்து வருகின்றன.
பல நூற்றாண்டுகளாக எத்தனையோ சீர்திருத்தவாதிகள் போராடி வந்திருக்கிறார்கள். 1941 பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போதே இந்து சட்டத்திருத்தங்கள் கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வந்துள்ளன. குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் சாரதாச்சட்டம் நிறைவேற்றப்பட்டன.

1947 ஆகஸ்டு 15ல் நாடு சுதந்திரம் பெற்றது. நம்மை நாமே ஆளும் குடியரசு சட்ட சாசனம் அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டது. 1950 ஜனவரி 26 இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. திருமணச் சட்ட முறைகளிலும், வாரிசு உரிமைகளிலும் சில திருத்தங்களை உள்ளிட்ட இந்து சட்ட முன் வடிவை டாக்டர் அம்பேத்கர் 1949 பிப்ரவரி 24ல் முன்மொழிந்து பேசினார். இந்து மகாசபைத் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி பல நூற்றாண்டுகளாக எவ்வித மாற்றமுல்லாமல் பின்பற்றப்பட்டு வரும் இந்து கலாச்சாரம், நாகரீகம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இந்தச் சட்டமுன் வடிவு அடியோடு தகர்த்துவிடும் என்று எதிர்த்தார். ராஜேந்திர பிரசாத், வல்லபாய் படேல், மதன்மோகன் மாளவியா போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் எதிர்த்தார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளிடமும், ஒப்புதல் பெறவேண்டுமென்று முட்டுக்கட்டைப் போட்டார்கள்; பெண் உறுப்பினர்கள் சட்ட முன் வடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அம்பேத்கரை ஆதரித்த பிரதமர் நேருவும் எதிர்ப்புக்குப் பணிந்து சமரசம் செய்ய முற்பட்டார். டாக்டர் அம்பேத்கர் தலையிட்டுக் கூறிய விளக்கங்கள் பழைமைவாதிகளுக்குப் பதில் கூறும் அறிவுரையாக இருந்தது.

“இந்தச் சட்டமுன் வடிவமைப்பைப் புரட்சிகரமான நடவடிக்கை எனக் கூற முடியாது; மேலும் இது அடிப்படையில் மாற்றியமைக்கிற கோட்பாடு என்றும் சொல்ல முடியாது; திருமண உரிமைகள் நீதிமன்ற திருமண ரத்து, தத்து எடுத்தல், வாரிசு நிலை போன்றவற்றில் தலை கீழ் மாற்றங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை.

மாபெரும் அரசியல் அறிஞரான எட்மண்ட் பர்க் தனது நூலில் “பழமையைப் பாதுகாக்க விரும்புபவர்கள் பழுது பார்க்கவும் தயாராக இருக்கவேண்டும்” என்று எழுதியிருக்கிறார். நான் இந்த அவையில் கூற விரும்புவது என்னவென்றால், “இந்து அமைப்பு, இந்து கலாசாரம், இந்து சமுதாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்புவீர்களானால், பழுது பார்க்க வேண்டிய அவசியமிருந்தால், ஒரு போதும் தயங்காதீர்கள்; இந்த சட்டமுன் வடிவு சீர்குலைந்து போயிருக்கும். இந்து அமைப்பை பழுதுபார்க்கவே கொண்டு வரப்பட்டுள்ளது” என்று கூறினார்.

டாக்டர் அம்பேத்கரின் வேண்டுகோளைப் பிற்போக்காளர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்; மசோதாவை நிறைவேற்றாமல் தடுத்து வந்ததைக் கண்டு அம்பேத்கர் வேதனைப்பட்டார். 1951 அக்டோபர் மாதம் 11ம் நாள் டாக்டர் அம்பேத்கர் மிகவும் வேதனையுடன் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

படிப்பினைகள்:

1947ல் நாடு விடுதலை அடைந்தது. 1950 ஜனவரி 26ல் குடியரசானது. குடியரசுச்சட்டம் தான் 106 கோடி மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாகவுள்ளது. இச்சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விதிகள் கூட நடைமுறைப்படுத்த முடியாத சமூகக் கட்டுக் கோப்பு உள்ளது. மனித உரிமையைச் சமூகச் சூழ்நிலைதான் நிர்ணயிக்கிற தென்றால் அந்தச் சூழ்நிலையை மனிதத் தன்மையுள்ளதாக மாற்ற வேண்டியது மக்களின் கடமையாகும் என்று கார்ல் மார்க்ஸ் தெளிவுபடக் குறிப்பிட்டிருக்கிறார்.

டாக்டர் அம்பேத்கர் - தந்தை பெரியாரைப் போல் பகுத்தறிவுவாதியுமல்ல; நாத்திகருமல்ல. டாக்டர் அம்பேத்கர் சுயமரியாதைக்காகப் போராடியவர்; கடவுள் நம்பிக்கையுள்ளவர்; அதனால்தான் - புத்தமதத்தில் இணைந்தார்.
கார்ல் மார்க்ஸைப் போல் சோஷலிசத்துக்காகப் போராடும் வர்க்கப் போராளியல்ல; ஆனால் இந்திய சமூகத்தில் வர்ணாச்சிரமத்தை எதிர்த்தும், மனுதர்ம சனாதன விதிகளை எதிர்த்தும் சாதி இழிவுகளை ஒழிக்கவும் உறுதியாகப் பாடுபட்ட போராளியாவார்.

குடியரசு சட்டத்தில் இந்தியச் சமூகத்தில் சில நல்ல சட்டப் பிரிவுகளை இணைத்தார். 21 வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை சாதி, மத, பாலியல், மதத்துவம் அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டுள்ளன.
“அரசு எந்திரம் என்பது ஆளும் வர்க்கத்தின் கருவியே” என்று புத்துலகம் படைத்த மாமேதை லெனின் தெளிவு படுத்தியிருக்கிறார்.

இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான குடியரசு சட்டம் ஆட்சியின் சாசனமாக இருந்தாலும், இந்தியச் சமூக அமைப்பில் இன்னும் நடைமுறையிலுள்ளது மனுதர்ம சாஸ்திரமே என்று உள்துறை அமைச்சராக இருந்த தோழர் இந்திரஜித்குப்தா தெரிவித்தார். குடியரசுச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்றும் எந்த முறையிலும் தீண்டாமை நடைமுறைப்படுத்துவது தடை செய்யப்படுகிறது என்று பிரிவு 17ல் கூறப்பட்டுள்ளது. 1982ல் தீண்டாமை தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. வன்முறைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தலித், பழங்குடி மக்கள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனைச் சட்டங்கள் இருந்தாலும், சாதிக் கொடுமைகள் நீடிக்கின்றன. வடமாநிலங்களில் ஆடு மாடுகளைப் போல், தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்னும் இரட்டை குவளைகள் தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் (நாட்டார் மங்கலம், கீரிப்பட்டி, பாப்பாபட்டி) தலைவராகத் தேர்ந்தெடுத்து பணியாற்ற முடிவதில்லை. விவசாய, தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948ல் நிறைவேற்றப்பட்டாலும், இன்று வரை பெரும்பான்மை இடங்களில் அமுலாக்கப் படவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இடது சாரிக் கட்சிகள், விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

தமிழ் நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் குறிப்பாக தலித் மக்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் சவுக்கடி - சாணிப்பால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருந்தார்கள்; 1943ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் விளைவாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. விவசாயத் தொழில் செய்யும் பெண்களுக்கும், இதர தொழில்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் சம வேலைக்கு சமக் கூலி என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்; தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண் பெண் அனைவருக்கும் சமமான கூலி மணிக்கு இவ்வளவு என்று 2000ம் ஆண்டில் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அமலாக்கப்பட எந்த வித அரசு உத்திரவாதமும் செய்யப்படுவதில்லை.

1951ல் இந்து மதச்சட்டம் முன் வடிவை டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்தபோது எதிர்ப்பு வலுவாக இருந்தது; அவரே தன் பதவியைத் துறந்தார். வரதட்சணைத் தடைச் சட்டம் இருந்தாலும் வரதட்சணைக் கொடுமைகள் தொடர்கின்றன. உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பதவி ஒதுக்கீடு செய்யும் சட்டம் நாடெங்கும் அமலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்படுத்துவதில் பல தடைகள் உள்ளன.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டுமென்ற மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்படாமலேயே கடந்த பத்தாண்டுகளாகத் தட்டிக்கழிக்கப்படுகிறது. அதற்காகப் போடப்பட்ட ஆய்வுக் கமிஷன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் கீதாமுகர்ஜி - பெண்களிடம் ரத்தக் கையெழுத்துக்களைப் பெற்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வரை அமைச்சர் பதவியை பெறமாட்டேன் என்று மறுத்து விட்டார்.

1951ல் டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த இந்து சட்டமுன் வடிவு சில திருத்தங்களே ஒத்துக் கொள்ளப்பட்டன; அடிப்படையாக முக்கிய சரத்துகள் புறக்கணிக்கப்பட்டன. 55 ஆண்டுகள் கழிந்து விட்டன; 2006 ஜனவரியில் தான் பெண் வாரிசுகளுக்கும் சொத்துரிமை உண்டு என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது; சட்டமாகியுள்ளது.

உழைக்கும் மக்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான உரிமை வழங்கும் சட்டங்கள் மசோதாவாகக் கூட சட்டமன்றங்கள் - நாடாளுமன்றங்களில் கொண்டுவர அனுமதிக்கப்படுவதில்லை.
சட்டமானாலும், அமலாக்கப்படுவதில்லை. ஆனால், ஆதிக்கமுள்ள பெருமுதலாளிகள் வசதியடைந்தோர் நலன் காக்கும் சட்டங்கள் உடனே நிறைவேற்றப்படும்; தங்கு தடையில்லாமல் அமலாக்கப்படும். இதுவே சுதந்திர இந்தியாவின் படிப்பினையாகும். இந்நிலை பற்றியும் பல்வேறு ஆணையங்கள் போடப்பட்டன. அறிக்கைகளும் வெளிவந்துள்ளன.

1. சட்டங்கள் அமலாக்குவதில், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அரசியல் உறுதிப்பாடு இல்லை
2. சட்டத்தை அமலாக்குவதில் மக்களை ஈடுபடுத்துவதில் அரசு அதிகாரிகளும் தயக்கம் காட்டுகிறார்கள்.
3. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் குறைபாடுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் சட்டத்துறை அமைச்சராக இருந்தார். பலருடைய கருத்துக்களையும் உள்ளடங்கிய குடியரசுச் சட்டத்தை நாடாளுமன்றமும், அரசியல் கட்சிகளும் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளன.
தொகுப்புரையில் டாக்டர் அம்பேத்கர் கிளப்பிய ஐயங்களையும் கவலையையும் ஒவ்வொரு நாளும் நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும். குறைவான ஜனநாயக உரிமைகள் வழங்கிய குடியரசுச் சட்டமாவது உரிய மரியாதையுடன் அமலாக்கப்படவேண்டும்.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை அடிமைப்படுத்தியது. பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டது. விடுதலை இந்தியாவிலும், பிற்போக்காளர்களின் சூழ்ச்சியாலும் உலகப் பன்னாட்டு மூலதன முதலாளிகள் “உருமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு” என்பதை நினைத்து சதி செய்து வருகிறார்கள்.

போராடிப் பெற்ற இறையாண்மைக்கும், நாடாளுமன்ற ஜனநாயக உரிமைக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும்; விழிப்புணர்வும் எச்சரிக்கையும் அவசியமாகும். இதுவே சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் தொகுப்புரையின் உயிர் மூச்சாகும்.

பயன்பட்ட நூல்கள்:

1. டாக்டர் அம்பேத்கரின் தொகுப்புகள்
2. உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் - பழ. நெடுமாறன்
3. “டாக்டர் அம்பேத்கர் ஒளி வீசும் சுடர்” - ஆர். நல்லகண்ணு.

No comments:

Post a Comment

THANK YOU