Thursday 26 July 2012

ஆன்மிக கதை-குருபக்தி


ஆன்மிக கதை-குருபக்தி

வைஷ்ணவ ஆச்சார்யார் எம்பாரிடம் ஒரு வழக்கம் உண்டு. தனது குருநாதரான திருமலை நம்பிகளுக்கு அவர் தான் தினமும் படுக்கை விரித்துக் கொடுப்பார். அவ்வாறு விரித்ததும், அதில் தானே படுத்து ஒன்றிரண்டு முறை உருளுவார். இதை ராமானுஜர் பார்த்துவிட்டார்.
""ஒரு சீடன் குருநாதரின் படுக்கையில் படுத்து உருளலாமா? இது நல்ல பழக்கம் இல்லையே!'' என கலங்கினார். இதுபற்றி திருமலை நம்பிகளிடமே சொல்லிவிட்டார்.
நம்பிக்கும் அந்த விஷயம் அப்போது தான் தெரிய வந்தது.
""எம்பார்! நீ என் படுக்கையில் தினமும் புரண்டு எழுகிறாயாமே! இது அபச்சாரம் என்று உனக்கு தெரியாதா! இதற்கு என்ன தண்டனை கிடைக்குமென தெரியுமா?'' என்று கடிந்து கொண்டார்.
எம்பார் மிகப்பணிவுடன், ""ஐயனே! இந்த அபச்சார செயலுக்கு எனக்கு நரகம் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியும். ஆனாலும், தாங்கள் படுக்கையில் படுக்கும் போது, ஏதாவது குத்தி, தங்கள் திருமேனிக்கு நோவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், படுக்கையை சோதிக்கவே அவ்வாறு செய்தேன்,'' என்றார்.
எம்பாரின் குருபக்தி ராமானுஜரை மட்டுமல்ல! திருமலைநம்பியையும் நெகிழ வைத்தது. அவரை அவர்கள் வானளாவ புகழ்ந்தார்கள். தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, பிறர் சுகமே தன் சுகம் என வாழ்ந்தார்களே! அந்தப் பெரியவர்களின் வாழ்க்கையை நமதுவாழ்விலும் முன்னுதாரணமாகக் கொள்வோம்

No comments:

Post a Comment

THANK YOU