Monday, 24 December 2012

மொஸாட் by என்.சொக்கன்

மொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை
என்.சொக்கன்
மதி நிலையம்
பக்கங்கள்: 187
விலை: ரூ.100
எங்கள் ப்ராஜெக்டில் வாராந்திரக் கூட்டம். அப்போதே வாடிக்கையாளரிடமிருந்து வந்திருந்த ஒரு மின்னஞ்சல். இங்கே சொல்ல முடியாத அளவிற்கு திட்டி எழுதியிருந்தார்கள். (சரி சரி. இதெல்லாம் சகஜம்தானே!! விடுங்க!!). அதைப் பற்றி ஒரு அரை மணி நேரம் விவாதித்துவிட்டு வெளியே வந்தோம். ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு பழைய நண்பரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு. அவரும் முன்னர் இதே குழுவில் இருந்தவர்தான். ‘என்னப்பா, க்ளையண்ட் பிடிச்சி விளாசிட்டானாமே? என்ன பிரச்னை?’. நாங்க வாங்கிய திட்டு எல்லாமே அவருக்குத் தெரிந்திருந்தது. எங்க குழுவில் இருக்கிற யாரோ ஒருவர் அனைத்து விவரங்களையும் உடனடியாக இவரை அழைத்துச் சொல்லியிருக்கிறார்னு தெரிஞ்சுது. அந்த ’உளவாளி’ யார்னு பின்னர் ‘பொறி’ வைத்து பிடித்ததெல்லாம் தனிக்கதை
ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தில் திரு.ரகோத்தமன் இந்திய உளவுத்துறை பற்றி எழுதியிருப்பார். அந்தக் கொலையை அவர்கள் முன்கூட்டியே அறிந்து, தடுத்திருக்க வேண்டும். எதிரியின் தரப்பில் ஒருவர் (உளவாளி) கொடுத்த தப்பான தகவல்களை வாங்கி, அதை சரிபார்க்கவும் செய்யாமல் அப்படியே நம் நாட்டிற்கு கூறுபவர்கள் என்று அப்போதைய நம் நாட்டு உளவுத்துறையைப் பற்றி பல இடங்களில் கருத்து தெரிவித்திருப்பார். 

உளவுத்துறை / உளவாளி என்றால் என்ன? 
அக்கம்பக்கத்து (அல்லது எதிரி) நாட்டில், அவர்கள் அமைப்பில், மக்களோடு மக்களாகக் கலந்து, தங்கள் நாட்டிற்குத் தேவையான விஷயங்களை கவர்ந்து, அவற்றை ரகசியமாக தங்கள் துறைக்கு அனுப்பி வைப்பவர்கள். உடனடியாக நமக்குத் தோன்றும் உதாரணம் - ஜேம்ஸ் பாண்ட். தன் பெயரைக் கூடச் சொல்லாமல் 007 என்று குறியீட்டு எண் மூலம் அறியப்படுபவர். பல நாடுகளுக்குச் சென்று, தன் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை முறியடிப்பவர். இவர் மாதிரியான உளவாளிகள் கடைசிவரை திரைமறைவிலேயே செயல்படுகிறவர்கள். தகவல்கள் கிடைக்கிறவரை ‘த்ரில்’லாக இருக்கும் வேலை, அப்படி சேகரிக்கும்போது மாட்டிக்கொண்டால் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம். அந்த உளவுத்துறை அவர்களை காப்பாற்றாதா என்று கேட்கலாம். எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்கப்போவது நீங்கள்தான், எங்கே போனாலும் உங்க சாமர்த்தியம் மட்டும்தான் உங்களுக்குத் துணை என்று சொல்லும் உளவுத்துறைகளுக்கு மத்தியில் மொஸாட்டில் மட்டும்தான் இஸ்ரேல் பிரதமர், ஜனாதிபதியில் ஆரம்பித்து ராணுவத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள்வரை அனைவரும் சேர்ந்து அந்த உளவாளியை காப்பாற்ற முயற்சிப்பார்களாம். 
மொஸாட் எப்படி/எதற்காக துவங்கப்பட்டது? 
1972 ஜெர்மனியில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே நுழைந்த தீவிரவாதிகள், ஒன்பது இஸ்ரேல் வீரர்களை கடத்தி, கொன்றுவிடுகின்றனர். உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த சம்பவத்தில், இஸ்ரேல் கண்ணீர்க் கடலில் மிதந்தது. இதைவிட கொடுமை, இந்தப் படுகொலைகளால் பாதிக்கப்படாமல், ஒலிம்பிக்ஸ் தொடர்ந்து நடைபெற்றதுதான். தன் மக்களுக்கு நேர்ந்த துயரத்திற்குக் காரணமானவர்களை, அவர்கள் உலகத்தில் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து தீர்த்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் உருவாக்கிய உளவுத்துறைக்குப் பெயரே - மொஸாட்.
மொஸாட் செய்த ஆபரேஷன்கள் என்னென்ன?
மொஸாட் உளவுத்துறை ஆபரேஷன்கள், அவர்களின் வீரசாகசங்கள் எல்லாம் ரகசியமானவைதானே? பிறகு அவை எப்படி இந்த புத்தகத்தில் வந்தன? இதற்கான பதிலும் இதிலேயே உள்ளது. மொஸாட் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய பழைய ப்ராஜெக்ட்கள், அதில் பங்கேற்ற உளவாளிகள் பற்றியெல்லாம் வெளியே சொல்ல ஆரம்பித்திருக்கிறது. எந்தெந்த ஆபரேஷன்களை வெளியில் சொன்னால் பிரச்னை இருக்காதோ, அவற்றை மட்டும் சொல்லத் துவங்கியிருக்கிறார்களாம். மற்றவை எல்லாம் இன்னும் பரம ரகசியம். இவர்கள் செய்துள்ள ஆபரேஷன்களை இந்தப் புத்தகத்தில் படிக்கலாம். 
மேலே ஒலிம்பிக்ஸில் நுழைந்த தீவிரவாதிகளைப் பற்றி பார்த்தோமில்லையா? அவர்கள் ஒவ்வொருவரையும் தேடி, அழிக்கும் சம்பவங்கள் படு த்ரில்லிங். அதை படிக்கும்போதே நமக்கும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பாரீஸ், சைப்ரஸ் ஆகிய இடங்களில் இருந்த நபர்களை - அந்தந்த நாட்டின் அரசாங்கம் / காவல்துறை யாருக்கும் தெரியாமல் - எந்தவொரு தடயமும் இல்லாமல் அழித்தனர். 
இவர்களைத் தவிர இஸ்ரேலின் எதிரிகள் என அறியப்படும் இன்னும் சிலரை போட்டுத் தள்ளும் சம்பவங்களும் சுவாரசியம். இந்த ஒவ்வொன்றிற்குப் பிறகும் ஏகப்பட்ட திட்டங்கள், திட்டமிடும்போதே அந்தத் திட்டத்திற்கு ஒரு backup, பல குறிப்புகள் என அவர்களின் ஆராய்ச்சி மிகத் துல்லியம். அபுஹாசன், அடால்ப் ஐக்மென் ஆகியவர்களை கொலை செய்ய அவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் அனைத்தும் பரபரப்பானவை. அதுவும் ஐக்மென்னை, அர்ஜெண்டினா நாட்டிற்குச் சென்று, அந்த நாட்டின் அரசாங்கத்திற்குத் தெரியாமல், கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்து மரண தண்டனை வாங்கிக் கொடுத்த பின்னர், மொஸாட்டின் புகழ் எட்டுத்திக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
ரஷ்யா தயாரித்த மிக்-21 விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரிக்காவே அறிய முடியாமல் இருந்தபோது, மொஸாட்டின் உதவியுடன் இஸ்ரேல் ஒரு மிக்-21ஐ கடத்தி வந்து, அதை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப் பார்த்து அறிந்தனர். இந்தக் கடத்தலும் அதன் சக்திவாய்ந்த உளவுத்திறமைக்கு ஒரு சான்று. பின்னர் அமெரிக்காவுக்கே அந்த விமானத்தை விற்று இன்னும் பெரிய லாபமடைந்தனர் என்பது வரலாறு.
இஸ்ரேலுக்கு எதிரிகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அதற்குத் தேவையான மூலப்பொருள் யுரேனியாவை இஸ்ரேல் வாங்குகிறதென்று தெரிந்தால், உலக நாடுகளின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டும். ஆகவே யாருக்கும் தெரியாமல் (200 டன்) யுரேனியம் வாங்க வேண்டும். எப்படி சாத்தியம்? மொஸாட் இருக்கையில் பயமென்ன? யாரோ, யாரிடமிருந்தோ, எதற்கோ வாங்கியதைப் போல் ‘செட்’ செய்து, அதை அப்படியே இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து சேர்த்த மொஸாட்டின் செயல்பாடுகள், ஒரு வெற்றிகரமான உளவுத்துறைக்கு சான்று. அணு ஆயுதம் தயாரிப்பதற்காக இவர்கள் செய்த வேலையுடன், சதாம் உசைனின் ஈராக் தயாரிக்க இருந்த அணுக்கூடத்தை தகர்த்தது இன்னொரு வியப்பூட்டும் சம்பவம்.
இஸ்ரேல் டெல்அவிவ் நகரத்தின் அருகில் இருக்கும் மொஸாட்டிற்காக வேலை செய்த உளவாளிகளுக்கான ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. உளவாளிக்கு முக்கிய ஆயுதமே, மூளைதான் என்று குறிக்கும்வகையில் மனித மூளை வடிவத்தில் அக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். 
இப்படியாக மொஸாட்டின் அருமை, பெருமை மற்றும் அவர்களின் திறமைகளை பல்வேறு சம்பவங்களின் மூலம் தெரிந்து கொள்கிறோம். 
பல்வேறு ஆபத்துகள் நிறைந்த உளவு வேலையை திறம்பட செய்து, தொடர்ந்து இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் மொஸாட்டைப் பற்றி அறிய மிக அருமையான புத்தகம் இது. இதை படித்தபிறகு உளவாளி ஆகிறேன்; ‘துடிக்குது புஜம்’ என்று நீங்களும் கிளம்பக்கூடும். முன்கூட்டிய வாழ்த்துகள்.
***

No comments:

Post a Comment

THANK YOU