Saturday, 8 December 2012

தொழில்நுட்ப உலகின் சரித்திர நாயகன் ஸ்டீவ் ஜொப்ஸ் வாழும் போதே இறப்பவர் பலர் இறந்த பின்னர் பெயரை நிலைநாட்ட உழைப்பவர் சிலர் இறந்த பின்னும் வாழ்பவர்கள் மிகச் சிலர் அவ்வாறு இறந்தும் இறவாமல் வாழ்பவர்களில் தொழில்நுட்ப உலகில்மறக்க முடியாத மறக்கப்படக்கூடாத நாமமாய் என்றும் ஜொலிப்பவர் அப்பிளின் தந்தை 'ஸ்டீவ் ஜொப்ஸ்'.

வித்தியாசமான சிந்தனையாளன் எப்போதும் வித்தியாசமாகவே உலகை தன்வசப்படுத்துவான் என்பதற்கு ஸ்டீவ் ஜொப்ஸ் சிறந்த உதாரணமாக வாழ்ந்தார். இதனாலேயே இறந்த பின்னும் வாழ்வோர் வரிசையில் இடம் பிடித்ததார் என்றால் அது அவருக்கு மட்டுமல்ல அந்த வரிசைக்கும் பெருமைதான்.

தொழில் நுட்ப உலகில் தனக்கென தனி முத்திரை படைத்த அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான ஸ்டீவ் ஜொப்ஸ் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு கடந்த வருடம் 2011இல் ஒக்டோபர் 5ஆம் திகதி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். அன்னாரின் மறைவு தொழில்நுட்ப உலகிற்கு என்றும் மீள் நிரப்ப முடியாத இழப்பு என்பதனை அவரது படைப்புக்கள் இன்றுவரை பறைசாற்றி நிற்கின்றது.
ஸ்டீவ் ஜொப்ஸ் உடலளவில் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரின் தொழில் நுட்பங்களினூடாக எம்முடன் வாழ ஆரம்பித்து இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது என்பதே நிஜம். 
மறைந்த பின்னும் மறக்காமல் இன்றும் நினைக்கத் தோன்றும் அப்பிளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஜொப்ஸ் கடந்து வந்த பாதை மலர்கள் நிறைந்தவை அல்ல மாறாக முட்கள் நிறைந்த பாதைதான். முட்களை மலர்களாக மாற்றும் மந்திரம் ஸ்டீவ் ஜொப்ஸிடம் கொட்டிக் கிடந்ததாலே இன்று அவர் இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.

இத்தனை உயரிய இடத்தை தக்க வைக்க அவர் கடந்து வந்த 'Be Crazy Be Hungry' என்ற வெற்றிப் பாதையை நாமும் அறிந்துகொள்வோம். திருமணமாகாத சோ ஆன் சீப்லே மற்றும் அப்துல் வட்டா சண்டாலி என்ற இரண்டு பல்கலைக்கழக மாணவர்களால் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி 1955ஆம் இம்மண்ணில் சாதனைகளை நிகழ்த்த சென் பிரான்ஸிஸ்கோவில் பிறந்திருந்தாலும் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளக் குடும்ப இணையர் போல் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் என்பவர்களே தத்து எடுத்து ஸ்டீவ் ஜொப்ஸினை ஆளாக்கினர்.

பள்ளிப்படிப்பை நிறைவு செய்துவிட்டு பட்டப்படிப்பினை மேற்கொள்ளவென கல்லூரியில் இணைந்தார் வறுமையினால் அவருக்கு அப்பட்டப்படிப்பினை ஒரு தவணைக்கு (Semester) மேல் கல்வி கற்கமுடியாமல் போய்விட்டது. பாடசாலையை பூர்த்தி செய்யாத தோமஸ் அல்வா சாதிக்கையில் நான் சாதிக்க என்ன என்ற எண்ணமோ தெரியவில்லை. ஸ்டீவ் ஜொப்ஸ் வறுமையிலும் எதற்கும் கதிகலங்கவில்லை.

உணவுக்காக அவரது நண்பர்களின் அறைகளில் கிடைக்கும் போத்தல்களை சேகரித்து விற்று காசாக்கினார். மேலும் வாராந்தம் கோயில்களில் கிடைக்கும் இலவச உணவின் மூலம் பசியாறினார்.
இவ்வாறு வாழ்க்கையில் பயணித்துக்கொண்டிருக்கையில் அற்றரிக் எனும் நிறுவனத்தில் ஒரு டெக்னீசியனாக இணைந்தார். இந்த சந்தர்ப்பத்திலேயே கல்லூரி நண்பருடன் இந்தியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பயணத்தின் போதே ஜொப்ஸ் நீம் கரோலி பாபவின் போதனைகளினால் புத்த மதத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.

இப்பயணித்தின் பின்னர் தாயகம் திரும்பிய ஸ்டீவ் ஜொப்ஸ், தற்போதைய தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான அப்பிள் நிறுவனத்தினை இசுட்டீவ் வோசினியாக் மார்க் மார்குலா ஆகியோருடன் இணைந்து சாதாரண கராஜ் ஒன்றினுள் ஆரம்பித்தார். இதன் பின்னரே ஸ்டீவ் ஜொப்ஸின் வெற்றிப் பயணம் ஆரம்பமானது. 1976ஆம் ஆண்டில் தனது முதலாவது கண்டுபிடிப்பான த அப்பிள் 1 கணனியினை 666.66 அமெரிக்க டொலருக்கு சந்தைக்கு அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து வெற்றிமுகத்தில் இருந்த அப்பிள் நிறுவனத்தினை 1977ஆம் ஆண்டு கூட்டு நிறுவனமாக மாற்றி அப்பிள் 2 கணனியினையும் சந்தைக்குக் கொண்டுவந்தார். தொடர்ந்து அப்பிள் நிறுவனம் வணிக ரீதியாக சந்தையில் தனக்ககென ஒரு இடத்தினை தக்கவைத்துக்கொண்டது. இதனால் 1980ஆம் முதல் முறையாக தனது பங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்தது. இந்த அறிமுக விற்பனையின் போதே 110 மில்லியன் அமெரிக்க டொலிரினை திரட்டி அனைவரினது கவனத்தினை தன் பக்கம் ஈர்க்கச் செய்தது. இதற்கெல்லாம் முதுகெலும்பாக ஸ்டீவ் ஜொப்ஸின் கண்டுபிடிப்புக்களே காரணமாக இருந்தது.

இல்லாததை உருவாக்குபவனே சிறந்த சாதனையாளன் அவ்வாறான சாதனையாளனான ஸ்டீவ் ஜொப்ஸின் அயராத உழைப்பினால் அப்பிள் நிறுவனத்தின் வருமானத்தினை பலமடங்காக அதிகரித்து அப்பிளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். 1983ஆம் ஆண்டு தனது அடுத்த படைப்பான லிசா கணனியினையும் சந்தையில் தவழவிட்டார்.
தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு அச்சுக்கலையினை (Typography) பயன்படுத்தி உருவாக்கிய அவரது வெற்றிகரமான படைப்புக்களில் ஒன்றான அப்பிள் மெக்கின்டோஸ் கணனியினை உலகிற்கு அறிமுகம் செய்து தொழில்நுட்ப உலகில் ஆச்சரிக்குறியாக மாறினார். இந்த படைப்பு வெளியாகி அடுத்த வருடம் அப்போதைய நிறைவேற்று அதிகாரி ஸ்கூலியுடனான கருத்து வெறுபாட்டினால் ஜொப்ஸுடன் அவரது நண்பரான வோசினியாக்கும் அப்பிள் நிறுவனத்திலிருந்து தமது பதவிகளை துறந்தனர்.

சொந்த நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்படும் போது ஏற்படும் வலியானது சொல்லிடங்காத் துயரினை தரும். அவ்வாறானதொரு நிலையிலும் சற்றும் மனம் தளாராது மீண்டும் தனது வாழ்கையில் புது அத்தியாயத்தினை ஆரம்பித்தார். 1986ஆம் ஆண்டு தற்போதைய பிக்ஸர் கிராபிக்ஸ் நிறுவனத்தினை கொள்வனவு செய்தார். இக்காலப்பகுதியிலேயே ஜொப்ஸ் நெக்ஸ்ட் நிறுவனத்தினை தோற்றுவித்து உயர்ரக கணனிகளை பல்கலைக்கழகங்களுக்காக கண்டுபிடித்து தனது சேவையினை விரிவுபடுத்த ஆரம்பித்தார். 1989ஆம் ஆண்டில் தனது முதலாவது நெக்ஸ்ட் கணனியினை 6500 அமெரிக்க டொலருக்கு சந்தைக்கு அறிமுகம் செய்தார்.
இவ்வாறு பீனிக்ஸ் பறவை போல பிரம்மாண்டமாக மீண்டெழுந்தார் ஜொப்ஸ். அதே ஆண்டு இறைவன் அவருக்கு கொடுத்த வரம் தனது காதலியான லொரன் பவலை அவரது சட்டப்படி மனைவியாக்கினார். திருமணத்திற்கு முன்னரே இவர்கள் இருவருக்கும் குழந்தை இருந்தது. 4 குழந்தைகள் மனைவி என மண வாழ்க்கையும் அவருக்கு சிறப்பாகவே இருந்தது.

இது இவ்வாறிருக்க 1995ஆம் ஆண்டு ஜொப்ஸ் கொள்வனவு செய்த கிராபிக்ஸ் நிறுவனத்தினை டிஸ்னி நிறுவனத்துடன் இணைத்து முப்பரிமாண கார்ட்டுன்களை தாயாரிக்க ஆரம்பித்தார். இதில் வெளியிடப்பட்ட கார்ட்டுன்கள் வசூலில் பெரிய சாதனைகள் படைத்தது. இதனால் ஜொப்ஸ் பெரிய வருமானம் ஈட்டினார். பின்னாளில் டிஸ்னி நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு பிக்ஸர் நிறுவனத்தினை டிஸ்னியே மொத்தமாக வாங்கிக்கொண்டது. அப்போது டிஸ்னியின் அதிகூடிய தனிநபர் பங்குதாரராக ஜொப்ஸ் விளங்கினார்.

1996ஆம் அப்பிள் நிறுவனம் நெக்ஸ் கணனியின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யும் தனது திட்டத்தினை அறிவித்தது ஏனெனில் ஜொப்ஸின் நெக்ஸ்ட் கணனிகள் சந்தையில் நிலையான ஒரு இடத்தினை உருவாக்கி வருவதனை உணர்ந்திருந்தது காரணம் இதுவும் ஜொப்ஸின் படைப்பாயிற்றே.

பின்னர் மீண்டும் தனது தாய் வீடான அப்பிளிடமிருந்து வந்த அழைப்பினை ஏற்று இடைக்கால நிறைவேற்று அதிகாரியாக 1997ஆம் ஆண்டு முதல் மறுபடியும் தனது பணிகளை ஆரம்பித்தார் ஜொப்ஸ். இவரது அசாத்திய வெற்றிக் கண்டுபிடிப்புக்களால் 2000ஆம் ஆண்டு பிரதம நிறைவேற்று அதிகாரியாக உத்தியோகபூர்வமாக பதவி உயர்வு பெற்றார்.

2001ஆம் ஜொப்ஸ் தான் ஒரு தனி ரகமான சிந்தனையாளன் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐ பொட் மற்றும் அதற்கான மென்பொருளான ஐ டியூன்சையும் வெளியிட்டு மீண்டும் தன் பக்கம் உலகத்தை ஈர்த்துக்கொண்டார். இதன் பின்னரும் இவரின் தேடல் ஓய்ந்தபாடில்லை. இதனால் இவரது அடுத்த வெளியீட்டுக்கு உலகம் காத்திருந்தது, இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில இவருக்கு கணையப்புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்பட்டது.

சத்திரசிகிச்சையின் பின்னர் 2007இல் அப்பிள் நிறுவனத்தினை கையடக்கத் தொலைபேசி உலகத்திற்குள் ஐ போனுடன் கொண்டு சென்றார். இது கையடக்கடத் தொலைபேசி வரலாற்றில் கவனிக்கத்தக்க படைப்பாக உருவானது. இதற்கான மோகம் இன்றைய நாட்களில் மிக அதிகம் இதற்கு முக்கிய காரணம் ஜொப்ஸ் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

பின்னர் ஐ போன் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதில் தற்போது அப்பிள் 4எஸ் எனும் வடிவமே இவரின் இறுதி படைப்பாக இருந்தது. இந்த ஐ போன் விவகாரத்தில் பெரிதும் புதுமைகளை புகுத்தி சாதனை பல படைக்கவென அவர் எடுத்த முயற்சிகளுக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.

இதனால் 2011ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் வைத்திய விடுமுறை எடுக்கப்போவதாக அறிவித்துவிட்டு சென்று ஓய்வெடுக்கும் வேளைகளில் கூட அவர் அவரது முயற்சிகளை கைவிட்டபாடில்லை. அப்பிளிற்காக ஏராளமான குறிப்புக்களை எழுதியதாக கூறப்படுகிறது. இருந்தும் அவரது உடல் நிலை புற்றுநோயால் மேலும் மோசமடைந்ததனால் தான் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இவ்வறிவித்தலின் பின்னர் சுமார் ஒரு மாத இடைவெளியில் ஜொப்ஸ் என்ற சரித்திரத்தின் இறுதிக் கட்டம் நெருங்கியது. 2011 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 05ஆம் திகதி தொழில் நுட்ப உலகை ஆட்டிவைத்தாலும் கணையப்புற்றுநோயின் ஆளுகையினால் தொழில்நுட்ப உலகினை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு சரித்திரமாக மாறினார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

இவ்வாறு அப்பிள் நிறுவனத்திற்காகவே வாழ்ந்து, பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் தானே ஒரு பல்கலைக்கழகம் என நிரூபித்துக்காட்டிய அந்த மாமனிதருக்கு கிராபி சொப்ட் நிறுவனம் அவரை கௌரவிக்கும் வகையில் ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டிலுள்ள கிராபி சொப்ட் சயன்ஸ் பார்க்கில் வெண்கலத்தினாலான 6.5 அடி உயரமான சிலை ஒன்று முதன் முதலாக 2011ஆம் டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது.

வாழ்கையில் வெற்றிபெற்றவர்களுக்கே சிலைகள் வைக்கையில் வாழ்கையையே வென்றவருக்கு சிலை வைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றாலும் அப்பிளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு அப்பிள் நிறுவனம் செய்ய வேண்டிய மரியாதையினை கிராபி சொப்ட் முந்திங்கொண்டதில்தான் ஆச்சரியம்.

மேலும் மெடமே டுசாட்ஸ் (Madame Tussauds) என்ற நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து ஓராண்டு முடிவறும் இத்தருணத்தில் அவருடைய உருவத்தை 15 லட்சம் ஹொங்கோங் டொலர் செலவில் மெழுகில் வடித்திருக்கிறது.
ஆனாலும் ஜொப்ஸ் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை யாருக்காக ஒதுக்கினரோ அந்த அப்பிள் நிறுவனம் அவரை கௌரவப்படுத்த நினைக் மறந்தாலும் அவரை கொண்டு தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த மறக்கவில்லை எனப்பதாக அமைந்துள்ளது அண்மைய செயற்பாடுகள்.
காரணம் அப்பிள் 4எஸ் அல்ல 5எஸ் தான் ஜொப்ஸின் இறுதி படைப்பு என அப்பிள் 5எஸ் அமைப்பிற்கு ஜொப்ஸின் பெயரில் அப்பிள் நிறுவனம் விளம்பரம் தேடியதாகவும் குற்றச்சாட்டுட்டுகள் எழுந்தது. எனவே தொழில்நுட்பத்துடன் சஞ்சரித்து ஒரு வருடத்தினை முன்னிட்டாவது  ஜொப்ஸினை கௌரவிக்கும் வகையில் நடந்து, அப்பிள் தன் களங்கத்தினை துடைக்குமா என்பதே தற்போது அனைவரினதும் கேள்வியாக உள்ளது. எந்தவொரு மனிதனின் மகிமையும் அவனின் மறைவிற்கு பின்னரே தெரியும் என்பார்கள் ஆனால் ஜொப்ஸின் விடயத்தில் இது பொய்யாகிவிடும் போலிருக்கிறது. எனவே இனியாவது ஸ்டீவ் ஜொப்ஸ் என்ற சரித்திரத்தை மறக்காமல் கௌரவிக்குமா அப்பிள்!

No comments:

Post a Comment

THANK YOU