Tuesday 25 December 2012

காலம் அறிந்து செயல்படுங்கள்!




காலம் அறிந்து செயல்படுங்கள்!
வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.
வெற்றிக்கான இந்த முக்கிய காரணிக்கு காலம் அறிதல் என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் ஒதுக்கி உள்ளார்.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483)
(தக்க கருவிகளுடன் காலமும் அறிந்து செயலை ஆற்றுபவருக்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.)
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். (484)
(காலத்தை அறிந்து தகுந்த இடத்தில் செயலைச் செய்பவர் இந்த உலகையே பெற நினைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.)
காலம் அறிந்து செயல்புரியக் கூடியவனுக்கு முடியாத காரியம் இல்லை, உலகையே பெற நினைத்தாலும் அது கைகூடும் என்கிற அளவுக்கு திருவள்ளுவர் உயர்த்திச் சொன்னது பொருளில்லாமல் அல்ல. வெற்றியாளர்களின் சரித்திரங்களை ஆராய்ந்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.
காலம் மிக முக்கியமானது. விதைக்க ஒரு காலம், விளைய ஒரு காலம், அறுக்க ஒரு காலம் என்று விவசாயத்தில் காலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. காசிருக்கும் போது விதைகள் வாங்கி, மனம் தோன்றுகிற போது விதைத்து, பொழுது கிடைக்கிற போது அறுக்க நினைத்தால் அது எப்படி மற்றவர்களின் நகைப்பிற்கிடமாகுமோ அப்படித்தான் காலம் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும்.
சின்னப் பிள்ளைகளுக்குக் கூட இது போன்ற விஷயங்களில் அதிக விவரமுண்டு. எந்த நேரத்தில் அப்பாவிடம் காசு கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் வேண்டிய பொருள்கள் கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் குறும்பு செய்வது அபாயம் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துபடி. அவர்கள் எல்லா நேரத்திலும் எல்லாமே செய்து விட மாட்டார்கள். பெற்றோரின் மனநிலையும், வீட்டின் சூழ்நிலையும் அறிந்து செயல்படுவார்கள். தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். அந்த அளவு சூட்சுமமான புத்திசாலித்தனம் அவர்களுக்கு பெரும்பாலும் உண்டு.
அதே சூட்சும அறிவு ஒரு வெற்றியாளனுக்கு மிக முக்கியத் தேவை. ஒரு காலத்தில் வெற்றி தருவது இன்னொரு காலத்தில் வெற்றி தராது. ஒரு காலத்தின் தேவை இன்னொரு காலத்தில் அனாவசியமாகி விடலாம். ஒரு காலத்தில் பேசுவது உத்தமமாக இருக்கும் என்றால் இன்னொரு காலத்தில் பேசுவது வம்பை விலைக்கு வாங்குவது போலத் தான். இப்படி வாழ்க்கையில் பெரும்பாலானவை காலத்திற்கேற்ப மாறுபவையே. எனவே எந்த நேரத்தில் எது பயன் தரும் என்பதை உணர்ந்து அதை செய்தால் ஒழிய ஒருவன் வெற்றி பெற முடியாது.
ஒரு பணக்கார மனிதரை காலம் அறிதல் உலகப்பெரும் பணக்காரராக்கிய ஒரு உதாரணம் பார்க்கலாம். இரும்புத் தொழிலில் நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஆண்ட்ரூ கார்னிஜி என்ற அமெரிக்க செல்வந்தர். அந்த நேரத்தில் தான் இரும்பிலிருந்து எஃகு கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு உடையும் தன்மை உடையது. ஆனால் எஃகோ நன்றாக வளையக்கூடியதாகவும், அதிக உறுதியானதாகவும் இருந்தது. அதனால் இனி எஃகிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று உணர்ந்த ஆண்ட்ரூ கார்னிஜி தன்னுடைய மூலதனத்தை எஃகிற்கு மாற்ற எண்ணினார். அவருடன் சேர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த அவருடைய வியாபாரக் கூட்டாளிகள் அது மிகவும் அபாயகரமானது என்று எண்ணி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இப்போதே நல்ல இலாபம் ஈட்டும் தொழில் இருக்கையில் இந்த புதிய மாற்றம் தேவை இல்லாதது என்று எண்ணினார்கள்.
ஆண்ட்ரூ கார்னிஜி புதிய கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு எஃகுத் தொழிலில் முழு மூச்சோடு இறங்கினார். அவருடைய பழைய கூட்டாளிகள் வெறும் பணக்காரர்களாக இருந்து விட்ட போது அவர் உலகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தது அவர் அப்படி காலம் அறிந்து செயல்பட்டதால் தான்.
எனவே காலம் அறிந்து செயல்படுவது மிக முக்கியமானது. காலம் வருவதற்கு முன்போ, காலம் கடந்த பின்போ கடும் முயற்சிகள் எடுப்பதும், காலம் கனியும் போது ஒடுங்கிக் கிடப்பதும் தோல்விக்கான தொடர் வழிகள். கடும் உழைப்பாளிகளில் பலர் கீழ்மட்டத்திலேயே தங்கி இருப்பதைப் பார்க்கிறோம். நல்ல திறமைசாலிகளில் பலரும் வாழ்க்கையில் சோபிக்காததையும் பார்க்கிறோம். ஆனால் காலம் அறிந்து அதற்கேற்ற மாதிரி செயல்படுபவர்களுக்கு ஓரளவு திறமையும், ஓரளவு உழைப்பும் இருந்தால் கூட போதும் நல்ல நிலைக்கு விரைவிலேயே உயர்ந்து விடுகிறார்கள். இதுவே யதார்த்தம்.
எனவே காலத்தின் ஓட்டத்தை கவனமாகக் கவனியுங்கள். எல்லாவற்றையும் விட அதிகமான முக்கியத்துவத்தை அதற்குக் கொடுங்கள். காலம் கனியும் போது விரைவாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள். காலம் அறிதல் அதிகாரத்தை மிக அழகாக இப்படிச் சொல்லி திருவள்ளுவர் முடிக்கிறார்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. (490)
(பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும். தக்க காலம் வரும் போது கொக்கு மீனைக் குத்துவது போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்)
எனவே திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறப்பாக உழைக்கவும் தயாராக இருங்கள். ஆனால் காலம் அறிந்து செயல்படுங்கள். அப்படி செயல்படும் போது சந்தேகங்களோ, தயக்கமோ வைத்துக் கொள்ளாதீர்கள். (உண்மையாக நீங்கள் காலம் அறிந்தவராக இருந்தால் சந்தேகமோ, தயக்கமோ வரும் வாய்ப்பும் இல்லை.) அப்படி செய்யும் போது காலத்தை உங்கள் துணையாகக் கொள்கிறீர்கள். காலத்தைத் துணையாகக் கொண்டு செயல்படுபவனுக்கு திருவள்ளுவர் கூறியது போல முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.

No comments:

Post a Comment

THANK YOU