Monday, 31 December 2012

2013 வாழ்வதற்கே வாழ்க்கை அதனால் வாழ்க்கையை வாழகற்றுக் கொள்ளுங்கள்

நாம் வாழ்நாளில் தெரிந்து கொள்ள

வேண்டிய முக்கிய குரிப்புகள்

எல்லாம் புத்தகங்களில் மட்டுமே

உள்ளன எனவே அனைவரும்

புத்தகம் படிக்கும் பழக்கத்தை இந்த

வருடம் முதல் நாளில் இருந்தே தொடங்குவோம்


முக்கியமாக சாதனை செய்து சாதிச்ச அனைத்து பெரியவர்கள் எல்லாரும்

ஒன்று பேனா முனையிலோ அல்லது கத்தி முனையிலோ தான் நாம் மாவீரன்

என்னும் அலெக்சான்டர் புத்தகங்களை மட்டுமெ படித்து கத்தி முனையில்

சிரந்து விளங்கினார் அது போல் புரட்ச்சி போராளி சேகுவேரா போரிடும் போது

கூட நேரம் இருந்த போதெல்லாம் புத்தகம் படிப்பதையெ அவரது பொழுது

போக்காக கொண்டவர் நாமும் புத்தகத்தை படித்து வாழ்வின் வெற்றிபடியை

உன் பாதங்களின் கீழ் கொண்டு வர அனைவரையும் வாழ்த்தும் அன்பு இதயம்

உங்கள் குரு இது 2013ல் நான் இட்ட முதல் பதிவாகும்



இதன் மூலம் நான் சொல்ல வருவது அனைவரும் புத்தகம் படிக்கும்

பழக்கத்தை நடை முறைக்கு கொண்டுவருவோம் இப்படிக்கு குரு குரு

Friday, 28 December 2012

பதிவுகள் மொத்தமும் இங்கே!...




ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


வணக்கம் நண்பர்களே, இன்று நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என நம்பிய அவர்தான் 20 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்ததில் பிறந்தார் ஐன்ஸ்டீன் அவர் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4 ஒருமுறை அவருக்கு காம்பஸ் எனப்படும் திசைகாட்டி கருவியை பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்றுகொண்டார் ஐன்ஸ்டீன். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது. சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பலதுறை தொழிற்கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சிபெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார்.

1905 ஆம் ஆண்டு ஸூரிக் பல்கலைகழகத்தில் ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான்:
விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.

1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.

அதன்விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒருகனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்த தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிலில் பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்ற பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும்படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதிவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இரு குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் மணமுறிவு ஏற்படவே எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட சுமார் 20 ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டீன்.  

அணுகுண்டு தயாரிப்பதற்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுதான் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டீன். உலக அமைதிக்காக குரல் கொடுத்த அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். நவீன அறிவியல் ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாக சிந்திக்ககூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன்.  
ஐன்ஸ்டீனுக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம்.  அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.

Thursday, 27 December 2012

ஆபிரகாம் லிங்கன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)


வணக்கம் நண்பர்களே, இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகர் ஆபிரகாம் லிங்கன்.

கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிகம் பலம் வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பாலோனோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களை குறிப்பிடுவர். ராணுவ பலமும் பொருளியல் வளமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படி ஒரு தகுதியை தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 43 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்கள் முத்திரையை பதித்திருந்தாலும் அவர்களுள் ஒரு சிலர்தான் உலகுக்கு தேவைப்பட்ட முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தனர். மனுகுலத்துக்கு மகிமையைத் தேடிதந்தனர்.  அவர்களுள் தலையாயவர் ஆபிரகாம் லிங்கன்.
1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ந்தேதி கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். தாயார் நேன்ஸி ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது காலமானார், குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. அவர் நீல் ஆல்ன்ஸில் வசித்தபோது அடிமைகள் என்ற பெயரில் கருப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புகம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாக கொடுமை படுத்தப்படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான்.

அந்தக்கனமே அடிமைத்தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து தபால்காரார் ஆனார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்கறிஞர் ஆனார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் இலினோய் மாநில சட்டமன்ற பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 1833 ல் ஆண்ட் ரூட்லெஸ் என்ற பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்பட்டு இறந்தார்.

7 ஆண்டுகள் கழித்து லிங்கன் மறுமணம் செய்துகொண்டார். 1834 ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் இலினோய் சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார் லிங்கன். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் அவர் தனியார் துறையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1854 ல் லிங்கனை அரசியல் மீண்டும் அழைத்தது. குடிப்பழக்கம் புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார்.

1859 ஆம் ஆண்டு நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடாது? என நண்பர் ஒருவரு கேட்டபோது அந்த தகுதி எனக்கு கிடையாது என்று பணிவாக பதில் கூறினாராம் லிங்கன். ஆனால் அப்படி கூறியவர் அதற்கு அடுத்த ஆண்டே அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டதாக அப்போது அவர் எண்ணியிருக்ககூடும். ஏனெனில் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார்.

அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம்பிடித்தன. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தலையை அறுத்தெரியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.

4ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. ஜனவரி 1865 ல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் 3 ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன். இரண்டாவது முறையும் முழுமையாக லிங்கன் அதிபராக இருந்திருந்தால் அமெரிக்கா மேலும் அமைதிபெற்றிருக்கும். உலகம் மேலும் உய்வு கண்டிருக்கும்.

ஆனால் வரலாற்றின் நோக்கம் வேறாக இருந்தது. இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு அதாவது 1865 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ந்தேதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் அவர் அமெரிக்கன் கஸன் என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான் மறுநாள் காலை லிங்கனின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 56 தான்.
மனுகுல நாகரிகத்திற்கு முரன்பாடான அடிமைத்தலையை அகற்றுவதில் ஆபிரகாம் லிங்கன் என்ற தனி ஒரு மனிதனின் பங்கு அளவிட முடியாதது. எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்துவிட்டு போவோம் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்போம் என்று லிங்கன் நினைத்திருந்தால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க முடியாது. கருப்பினத்தவருக்கு சுதந்திரத்தையும் சுய மரியாதையும் பெற்று தந்திருக்க முடியாது. இன்று அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் ஆபிரகாம் லிங்கன்.


நாம் வாழும் உலகில் நம்மாளும் மாற்றங்களை கொண்டு வர முடியும் அதற்கு தேவைப்படுவதெல்லாம் சிந்தனையில் தெளிவும் செயலில் துணிவும்தான். இவை இரண்டும் இருந்தால் ஆபிரகாம் லிங்கனைப்போலவே நமக்கும் அந்த வானம் வசப்படும்.


(நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)


"ஆபிரகாம் லிங்கனின்" ஒரு வாரம்

ஆபிரகாம் லிங்கன் பிறந்ததது - ஞாயிறு

முதல் முறையாக அமெரிக்க ஜெனாதிபதி ஆனது - திங்கள்

இரண்டாவது முறையாக ஜெனாதிபதி ஆனது - செவ்வாய்

வழக்கறிஞராக தம்மை பதிவு செய்து கொண்டது - புதன்

பிரசித்தி பெற்ற கெட்டிஸ்பர்க்கில் உரையாற்றியது - வியாழன்

லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி

லிங்கன் உயிர் நீத்தது - சனி

(ஆபிரகாம் லிங்கன் - ஒரு வாரம் தகவல் உதவி நன்றி - அண்ணன் ஜெயந்த் (வெறும்பய)

பீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்!



டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

சந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது! புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

கனவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாதபடிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

கனவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

அனேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

இப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

எவராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தனிவிக்கிரார்களா என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

என்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனைஎல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

இந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும்போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம்போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

அரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது! இப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

மற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா, யோசித்து மாற்றுவதா என்று பாதுஷாவுக்கு அடுத்த சந்தேகம்  வழக்கம் போல தயாராகி விட்டது!

oooOooo

வால் பையன்கள் காட்டும் பரிணாமம்!


எழுத வேறெதுவும் செமை மொக்கையாகக் கிடைக்காத தருணங்களில் எல்லாம், பரிணாமத்தைப் பிராண்டுவது என்ற நல்ல வழக்கத்தை நம்ம வால்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்! சேக்காளி ராஜன் வந்து அடக்கினால் தான் உண்டு போல!

பரிணாமத்துக்கு முதலில் கொஞ்சம் முன்னுரை, அப்புறம் அந்த
முன்னுரைக்கே விளக்கவுரை, அப்புறம் கொஞ்சம் படங்களோடு என்று பரிணாமப் பிராண்டல்கள் ஆரம்பித்துவிட்ட பிறகு நான் மட்டும் சும்மா இருந்துவிட முடியுமா என்ன?


அதனால் ஒரே ஒரு படம் மட்டும்! இந்தப் படத்துக்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டும் என்று கேட்காமல் இருக்கும் வரை சந்தோஷம்!

oooOooo


வங்கிகள், நிதித்துறை,பொருளாதாரம் பற்றிப் பதிவில் எழுதி நாட்களாகி விட்டதே என்று செய்திகளைக் கொஞ்சம் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். 

அப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது சென்ற வருடம், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, 'உலகப் பொருளாதார நெருக்கடியை நாம் நிறுத்த முடியும்-அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால்!"  என்ற வாசகத்தைப் பார்த்தேன்!  சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான பக்கம் இது! இந்த விவகாரமான படத்தை ஒரு டி ஷர்ட்டில் போட்டு இந்த வலைத் தளத்தில் சொல்லப்பட்ட காரணம்  இது!

"GFCSUCKS.COM aims to stop incessant talking about the Global Financial Crisis and believes it is only making matters worse."

சரிதானா என்று கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்!


அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........


பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் !
அது பொம்பளைக்கும் தெரியும்!
அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் !
அது யாருக்குத்தான் தெரியும்....!



சமீபத்தில் நண்பர்கள் தளங்களுக்கு எங்கு சென்றாலும் ”பெண்மனசு” பெண்மை பெண் பாடகர்களின் பாடல்கள், இப்படி எல்லாம் ஒரே பெண்களின் புகழாகவும் தாய்க்குலங்களின் அன்பாகவும், சகோதரிகளின் பாசமாகவும், தொடர் பதிவாக  பெண்களுக்கு சிறப்பு சேர்த்துகொண்டிருக்கிறார்கள், நல்ல விசயம் இதில் நாமும் பங்கெடுத்துகொள்ளலாம் என்று ஒரு சிறு முயற்சி இந்த பதிவு, 

இந்த பாடல் ஒரு ஏழைக்குடும்பத்தின் நிலையையும் அவர்களின் வாழ்க்கை கஷ்டங்களையும், பள்ளிக்கூட விடுதியில் தங்கி படிக்கும் ஒரு ஏழை மகள் தன் அம்மாவுக்கு கடிதம் எழுதி தன் கஷ்டங்களை உணர்வுகள் மூலம் பதிவு செய்கின்ற பாடல், இந்த பாடல் நாட்டுப்புறப் பாடலைச் சேர்ந்தது, உணர்வுகளுடன் பாடியவர் நாட்டுப்புறப் பாடகி  மதுரை சின்னப்பொன்னு குமார் இவர்தான் பின்னாளில் திரையுலக்கு வந்து நாக்கமுக்க என்ற பக்திப் பாடலைப் பாடி இந்த ஒரே பாடலின் மூலம் உலகப் புகழ்பெற்றவர். திரையுலக்கு இவரின் அறிமுகம் சந்திரமுகியில் வரும் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் என்ற பாடல்தான் முதல் பாடல்.

ஏழை மகளின் கண்ணீர் கடித வடிவில் பாடலாக:
  ANBULLAM - OK!!s by rrsimbu
(இந்த பாடலை ஒருமுறையாவது கேளுங்கள் ஒரு ஏழைப் பெண்ணின் உணர்வுகள் வலிகளுடன் வேதனையும் சேர்ந்து நம் மனதை கரைய வைத்துவிடும்)

பாடலை தறவிரக்கம் செய்ய
இங்கு செல்லவும்

கடிதம் வடிவில் பாடல் வரிகள் :

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன்  உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!

பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்த வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
அம்மா எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா....
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா...

புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
கிழிஞ்ச சட்டைக்காரியின்னு கிண்டலாத்தான் பேசுறாங்க
ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்

தோட்டக்காரய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
நீங்க வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
மேலாண்ட கூரைமேல சாக்கு கிழிச்சுப் போடுங்கம்மா
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா இருக்கும் இடம் நனைஞ்சுடும்

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம் காயமுன்னு சொன்னாங்க!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்துவும் போட்டுக்கம்மா!
இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்
கோடீஸ்வரி

(எழுத்துப் பிழைகள் இருந்தால் மாணவனை மன்னித்து உரிமையோடு சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்)

டிஸ்கி: இதை யார் வேண்டுமென்றாலும் தொடர் பதிவா எழுதலாம், காசா பணமா நீங்க பாட்டுக்கு எழுதுங்க நாங்க வந்து படிக்கிறோம்!

தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் -

' வரலாற்று நாயகர்!

அன்பின் நண்பர்களுக்கு இனிய வணக்கம், 
தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 158-ஆவது பிறந்தநாளான இன்று (19/02/2012) தமிழ்த்தாத்தாவை வணங்கி அவரது வாழ்க்கை வரலாற்றுப் பதிவை சமர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!
நம்மில் பலர் இருமொழி ஆற்றலைப் பெற்றிருந்தாலும் நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசிக்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படுவதில்லை. தாய்மொழியில் பேசிக்கொள்ளும் சுகமே அலாதியான ஒன்று. அது எந்த மொழிப் பிரிவினருக்கும் பொருந்தும். நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதை நினைத்து நாம் நியாயமாக மகிழலாம். ஆனால் மகிழ்வதோடு நின்றுவிட்டால் நாம் நன்றி மறந்தவர்களாவோம். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்ற ஒரு உண்மையே நமது மொழி 'செம்மொழி' தகுதி பெறுவதற்கு போதும் என்றாலும், அதனை அதிகாரப் பூர்வமாக பெற அது பல்வேறு இன்னல்களை கடக்க வேண்டியிருந்தது.

பல மேடு பள்ளங்களை கடந்து இன்று நமது மொழி இளமைக் குன்றாமல் இருப்பதற்கான பல காரணங்களுள் ஒன்று நமது மொழியைக் காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள். பலரை நாம் நினைவுகூற வேண்டுமென்றாலும் ஒருவர் தனிப்பட்டு நிற்கிறார். அவர்தான் தமிழ் முனிவர் என்றும், தமிழ்த்தாத்தா என்றும் தமிழுலகம் பெருமையுடன் நினைவில் வைத்திருக்கும் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். உ.வே.சா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார் உ.வே.சா. தந்தை பெயர் வேங்கட சுப்பையர், தாயார் சரஸ்வதி அம்மாள். சிறுவயதில் அவர் திண்ணைப் பள்ளியில் ஏடு எழுத்தாணியும் கொண்டு பயின்றார். தமிழில் புலமைப் பெற்றிருந்த தந்தையிடமிருந்தே ஆரம்பத்தில் தமிழ் கற்றார் உ.வெ.சா. நிகண்டு, சதகம் போன்ற பழமையான நூல்களை உ.வே.சா அவர்களுக்கு கற்பித்தார் தந்தை.

பள்ளிப்படிப்பை முடித்ததும் தமிழின் மீதிருந்த ஆழமான காதலால் தமிழில் புலமை பெற விரும்பிட உ.வெ.சா பல்வேறு தமிழறிஞர்களிடம் தமிழ் கற்றார். தமது 17-ஆவது வயதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராக சேர்ந்தார். அவரிடம் ஆறு ஆண்டுகள் இருந்து ஆழமான தமிழ் அறிவைப் பெற்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு சுப்ரமணிய தேசிகர் என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். இப்படி பல அறிஞர்களிடம் பாடம் கற்றறிந்ததால் உ.வே.சா ஒரு தலைசிறந்த தமிழறிஞர் ஆனார். அப்போதெல்லாம் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லை. பழமையான ஓலைச் சுவடிகள்தான் இருந்தன. அவை அச்சடிக்கப்படாமல் கைகளால் எழுதப்பட்டவை என்பதால் அவற்றை படித்து உணர்வதற்கே தனித் திறமை தேவைப்பட்டது. அதை படிப்பதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களை பிழையில்லாமல் எழுத்தாணி கொண்டு ஓலைகளில் எழுதுவார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

25-ஆவது வயதில் உ.வே.சா அவர்களுக்கு கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அவர் கற்பித்த முறை மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் பல மாணவர்கள் தமிழை நேசிக்கத் தொடங்கினர். 1903-ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இணைந்தார். அவர் சேர்வதற்கு முன் மாணவர்களால் மதிக்கப்படாத இருந்த தமிழ்த் துறைக்கு உ.வே.சா சேர்ந்த பிறகு புது மரியாதை கிடைத்தது. பற்றோடும், பாசத்தோடும் பாடம் கற்பித்த அவரது அணுகுமுறையால் மாணவர்கள் தமிழை மருந்தாக பார்க்காமல் விருந்தாக பார்க்கத் தொடங்கினர். 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் கற்பித்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார் உ.வே.சா.

அக்காலத்தில் பல தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடி வடிவில்தான் இருந்தன. அவற்றை படியெடுப்பது சிரமம் என்பதால் ஒவ்வொரு இலக்கியத்திலும் ஒரு படிதான் இருக்கும். பல ஓலைச் சுவடிகள் செல்லரித்துப் போயிருந்தன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அச்சாக வெளியிட்டாலொழிய அவற்றை தமிழுலகம் இழந்து விடும் என்று கலங்கினார் உ.வே.சா. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை முறைப்படுத்தி பதிப்பிக்கும் அரிய பணியை தம் தலையாய பணியாக அவர் மேற்கொண்டார். அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து அதை பெறுவதற்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார்.

கிடைத்தற்கரிய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை "என் சரித்திரம்" என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர்.  என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுலதான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.

மற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்... "ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என்ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில...சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்"... என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்.

அதன் பிறகு பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை என பல அரிய நூல்களையும், ஓலைச்சுவடியிலிருந்து மீட்டு புத்தகங்களாக பதிப்பித்தார். அவரின் தமிழ்த்தொண்டை பாராட்டி 1906-ஆம் ஆண்டு  'மஹாமஹோபாத்யாய' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. தம் வாழ்நாள் முழுவதும் தமிழையே சுவாசித்த தமிழ்த்தாத்தாவின் உயிர் மூச்சு 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவரது 87-ஆவது அகவையில் நின்றது. அந்தக்கணம் இனிமேல் தம்மை யார் காப்பாற்றப்போகிறார் என்று எண்ணி தமிழன்னையும் கலங்கியிருக்க வேண்டும்.

தமிழன்னைக்கு அணி சேர்த்தவர்கள் அணியில் உ.வே.சா என்ற தமிழ்த்தாத்தாவுக்கு நிலையான இடம் உண்டு. அவரது அரும் முயற்சி இல்லாதிருந்தால் பல தமிழ்க் கருவூலங்களை காலம் கரைத்திருக்கும். அந்த தனி மனிதனின் முயற்சியால் தமிழன்னை மெருகேறியிருப்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் செம்மொழியானதற்கு அவரைப் போன்றவர்களுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். நமது மொழியின் முக்கிய கூறுகள் சிதைந்து போவதை தடுத்து நிறுத்த அவருக்கு உறுதுணையாய் இருந்தவை சிந்தனைத் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், விடாமுயற்சியுடன் எத்தனை இன்னல்கள் வந்தாலும் எண்ணியதை முடிக்கும் துணிவும்தான். அதே பண்புகள் நமக்கும் இருந்தால் உ.வே.சா ஐயாவுக்கு தமிழ் என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கு நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727)

- வரலாற்று நாயகர்!
வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!

இன்று (25/12/2011) டிசம்பர்-25 பிறந்தநாள் காணும் அறிவியல் மேதையும், சிறந்த கணிதவியலாருமான விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன் அவர்களை வணங்குகிறேன்!

ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.

சிறுவயதிலேருந்து நியூட்டனுக்கு அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்கு பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் சிறுது காலத்தில் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி (Trinity College) கல்லூரியில் சேர்த்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்ததுதான்.

வளைந்தப் பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள் அளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்து தந்தவைதான். ஒருமுறை அவர் தனது (Wools Thorpe) தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தார். நியூட்டனுக்கு முன் தோன்றி மறைந்த மானிடர் அனைவரும் தங்கள் காலகட்டத்தில் பார்த்திருக்கக்கூடிய காட்சிதான் அது. ஆனால் அதனை இயற்கை என்று நினைத்து அப்படியே விட்டு விடாமல் அதைப்பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழச்செய்கிறது என்று ஊகித்தார் நியூட்டன். அவர் நினைத்தது சரிதான். உலகில் புவி ஈர்ப்பு விசை என்ற சக்தி இருப்பதால்தான் எல்லாப் பொருள்களும் கீழே விழுகின்றன. நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்பது இப்போது நாம் அறிந்த உண்மை. அதனை கண்டுபிடித்து சொன்னதுதான் நியூட்டனின் மகத்தான சாதனை.

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன பலம் பொருந்திய தொலைநோக்கிகள்கூட நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.

* எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

* ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

* ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

'சர்' ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் நியூட்டனின் பங்களிப்பு மகத்தானது. அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன.

நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு  "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே ஆகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார்.
1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார். இங்கிலாந்தின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனு குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.

நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது...

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது"

இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! நியூட்டன் பிறவிலேயே ஒரு மேதை அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டறிந்து சொல்ல முடிந்தது. இறவாப்புகழும் பெற்று வானத்தை வசப்படுத்த முடிந்தது என்று நீங்கள் நினைக்கலாம். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அந்த பிறவி மேதைக்குகூட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். உங்களுக்கும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை தூண்களாக இருந்தால் நிச்சயம் நீங்கள் விரும்பும் வானம் வசப்படும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)


கல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்!


நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில்  பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து  அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.

'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.

இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், ஏழ்மையான குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.

12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில்  நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு

அப்படி அவர் என்ன செய்தார்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்” என்பதுதான்.


அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்.

ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவ்ர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம்  செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.

காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை  அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.

இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.

இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.


இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.

அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!


தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?


முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!


“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”


(தகவலில் உதவி - நன்றி திரு. அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்)


வணக்கம் நண்பர்களே,
இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகும்  வரலாற்று மாந்தர் தாம் வாழ்ந்தவரை அன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர். இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.

இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.


1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.

அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.

நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் 'Missionaries of Charity' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.

1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது 'Missionaries of Charity' அமைப்பு  தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.

1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி  அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அன்னையை....
"சாக்கடையோரச் சந்ததிக்கும்
சாமரம் வீசிய பூமரம்"

என்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும்.

நாம் அன்னை தெரசா போல் சக மனிதரை நேசிக்கும் மனிதநேயத்தை உடல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை, நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.

 (தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.