Sunday, 30 September 2012

நம் வாழ்க்கை! நம் கையில்!! our our life is our our handவாழ்வில் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் தடைகள் என்பது நிச்சயம் உண்டு. அதனை தவிர்க்கவும் முடியாது விட்டு விலகவும் முடியாது. வாழ்க்கையில்தான் என்பதில்லை அது ஆன்மீகமாக இருக்கலாம் அல்லது அரசியலாகவும் இருக்கலாம். எந்த ஒரு செயலுக்கும் இது பொருந்தும்.
ஆனால்  தவறான கோட்பாடுகள், கருத்துக்கள் கடும் விஷத்தை விட மிகவும் மோசமானவை என்பதை  பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்வதில்லை.இதனை நாம்  ஏற்றுக்கொள்ளவும்  தயங்குகிறோம் .

ஒருசின்ன நீதிக்கதை  
ஒருமுறை  சாத்தான் தான்  செய்து வந்த வியாபாரத்தை விட்டுவிட நினைத்தது. தமது வியாபார பொருட்களை எல்லாம் விற்றுவிட எண்ணி 'இவை விற்பனைக்கு'   என்று எழுதிவைத்தது. இதில் கோபம்,பொறாமை , வெறுப்பு, சுயநலம்,பேராசை மற்றும் ஆணவம்  போன்றவைகள் அடங்கும்.இப்படி பல பொருள்கள் விற்பனைக்கு வந்ததில் மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கி சென்றனர்.

ஆனால் தம்மிடமே இரண்டு பொருட்களை விற்காமல் வைத்து கொண்டது. இதனை பார்த்த மக்கள் "இதனை ஏன் விற்பனைக்கு வைக்கவில்லை ? என கேட்டனர். அவை "விற்பனைக்கு அல்ல" என சாத்தான் கூறியது. அவ்விரண்டு மன அழுத்தமும் , உற்சாகம் இழப்பதுதான் அது.சாத்தானும் அதனை மக்களிடம் கொடுக்க விரும்பவில்லை. சாத்தான் விற்பனைக்கு வைக்காத அவ்விரு பொருட்களையும் கூட நம்மில்  பலரும் பெற்றுள்ளோம் . அதனை நாம் நம் மீதும், மற்றவர்கள் மீதும் அதனை தொடர்ந்து பிரயோகம் செய்கின்றோம்.துரதிர்ஷ்டமாக தன்னை அறிவு ஜீவிகளாக நினைப்பவர்களும் கூட உற்சாகம் இழந்து, மிகுந்த மன அழுத்தத்துடன் வேதனைபடுகின்றனர்.

நம்மால் எதனையும் ஏற்கும் பக்குவம் இன்னும் வளராத காரணமே இந்த அழுத்தத்திற்கு முக்கியகாரணம்.வாழ்க்கையானது தற்போது எப்படி உள்ளதோ,  அதை அப்படியே உணர பழகிக்கொள்ளவேண்டும்.இப்போதைய கணம் எப்படி உள்ளதோ அப்படியே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது அமைச்சர்களுடன் நாட்டை வளம் வந்தான். அப்பொழுது அந்த நாட்டின் சிறிய கிராமத்திற்கு செல்ல முடிவெடுத்து அங்கு வந்தான்.அரசன் வருவதை அறிந்த கிராம மக்கள் சிறிது மகிழ்ச்சியும்,பெரும் பயமும் கொண்டனர் ஏனெனில் மன்னனிடம் முட்டாள்தனமாக பேசி அவரின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என அஞ்சி பக்கத்துக்கு கிராமத்திலிருந்து ஒரு வயதான பெரியவரை  அழைத்து வந்தனர். அவரையே தங்களின் பிரதிநிதியாக நியமித்தனர்.

அப்போது அங்கு வந்த அரண்மனை ஆட்கள் அந்த பிரதிநிதியிடம் "மன்னர் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்பார் அதற்கு மட்டும் பதில் கூறினால் 
போதுமானது என   கூறினார்.முதல் கேள்வி உங்களின் வயது என்ன? அதற்க்கு 70 என கூறவேண்டும் எனவும், இரண்டாவது கேள்வி உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்பார், அதற்கு 5 என கூறவேண்டும் எனவும். மூன்றாவதாக இங்கு மழை எப்படி இருக்கிறது? என்பார், அதற்கு நன்றாக இருக்கிறது என கூறுவேண்டும் " என்றனர் அதற்கு அவரும் சம்மதித்தார்.

இதனை தெரிவிக்கும் விதமாக  அமைச்சர் மன்னரிடம் "மன்னா கிராமமக்கள்  உங்களை காண ஆவலாக உள்ளனர்.அவர்கள் அறியாமையினால் தவறாக பேசினாலும் நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். கிராம பிரதிநிதியிடம் மட்டும் நீங்கள் மூன்று கேள்விகளை கேட்டால் போதுமானது என அந்த கேள்விகளை மன்னரிடம் கூறினார்.மன்னரும் அதற்கு  சம்மதம் தெரிவித்தார்.

கிராமமக்களை சந்தித்த மன்னன் "உங்களின் பிரதிநிதி யார் ? "என கேட்டார். அவரும் எழுந்து சென்றார் .அவரிடம் மன்னன் " உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? "என்றார்.அதற்கு பிரதிநிதி " எழுபது " என்றார். 

பின்பு மன்னன் " உங்களின் வயது என்ன? " என்றார்.அதற்கு பிரதிநிதி "ஆறு" என்று ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டார். கோபம் கொண்ட மன்னர் " உங்களுக்கென்ன பைத்தியமா? " என்றார். அதற்கு பிரதிநிதி " நன்றாக இருக்கிறது " என பதில் அளித்தார். மிகுந்த கோபம் கொண்ட மன்னன் " இவன் சரியான முட்டாள், இவன் எப்படி இக்கிராமத்தின் பிரதிநிதியாக உள்ளான்? " என்றார். அதற்கு அந்த பிரதிநிதி பொறுமையாக " மன்னா பைத்தியம் நான் இல்லை, நீங்கள்தான் நான் சரியாகத்தான் பதில் கூறினேன் நீங்கள்தான் தவறாக கேள்வியினை கேட்டீர்கள்" என்றான்.

இதிலிருந்து தெரிவது என்ன?,நம் மனம் கடந்த காலத்திலே  நின்று கொண்டு செயல்படுகிறது.மனதின் போக்கில் போனால் நாம் குழப்பமாகிவிடுவோம். இது தர்க்க மனதினை பற்றியது.

நாம் எதிர்வாதமாக யோசிப்பது என்றால் , ஒவ்வொரு நாள் காலை  கண் விழித்து   எழுந்தவுடன்  பல் துலக்குகிறீர்கள், காலை கடனை செய்கின்றீர்கள் பின்பு உணவு ,வேலை ,உணவு தூக்கம் என நாம்  ஆண்டுக் கணக்கில்  செய்துகொடுத்தான் இருக்கின்றோம்.

இதனை செய்வதில் என்ன மதிப்பிருகின்றது .இதனையும் மீறி பல அற்புதமான கணநேர  விஷயங்கலும் உள்ளன . சூரியோதயம், வானில் வட்டமிட்டு ரீங்காரம் செய்யும் அழகிய பறவைகள்,தோட்டத்தில் பூத்த புதுமலர், பனியில் நனைந்த பசுமையான புற்கள் மற்றும் மழலை பேசும் குழந்தையின்   முகம் என பல உள்ளது. இவையும் கணநேர விஷயங்கள்தான் இதுபோன்ற கணநேர விஷயங்களால்  இந்த வாழ்க்கை மதிப்புடையதாகவும் எண்ணத் தோன்றலாம். இவை அனைத்தும் அவ்வப்போது ஏற்படும் சாதாரண நிகழ்வுகள்.

தர்க்கரீதியில் என்னும்போதெல்லாம் மனஅழுத்தம் அதிகமாகி நம்மை நாமே காயப்படுதிக்கொல்கிறோம். யாரொருவர் தன்னையும், தனக்கு சாத்தியமான சூழ்நிலையையும் மதித்து நடக்கிறாரோ அவரே அனைத்திற்கும்  மதிப்பளிக்கும் இயல்புடையவராக இருப்பார். 

 எப்படியோ வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டோம். வாழ்வை புரிந்துகொள்வது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கும். அதில் சிக்கலஎன்பது நாமே உருவாக்கிக்கொண்டது. பின்பு நாமே அதற்கான தீர்வை தேடி அலைகின்றோம்.நாமே திருடனாகவும்,காவல்காரனாகவும் செயல்படுகிறோம்.அப்படியிருக்க திருடன் பிடிபடுவானா?. ஒருபோதும் மாட்டான். நம்முடைய தர்க்க மனமும் அப்படிதான்.

எனவே தர்க்க மனதை சீர்செய்து செயல்பட்டால்தான் நமது வாழ்க்கை சிறப்புறும்.நமது வாழ்க்கை வெற்றிபெறுவது நமது கையில் தான் உள்ளது.

இது ஒரு மகான் அருளிய உபதேசமாகும், இதனை நாமும் வாழ்க்கையில் ஏற்று கடைபிடிப்போம்.

நன்றியுடன்

No comments:

Post a Comment

THANK YOU