Friday 21 September 2012

நூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்!

வ்வொரு வருடமும்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனைக்கட்ட முடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். மைக்ரோஃபினான்ஸ் என்ற கந்துவட்டியின் தொல்லையால் சென்ற வருடம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆந்திராவில் தங்களை மாய்த்துக்கொண்டனர். மிச்சமிருக்கும் விவசாயிகளும், கிராமப்புறத்தினரும் இந்தியாவின்  வடக்கும் தெற்குமாக விசிறியடிக்கபடுகின்றனர். ”இந்தியாவின்  முன்னேற்றத்துக்கு” சாட்சியாக முளைக்கும் வானுயர் கட்டிடங்களிலும், பிரமாண்டமான பாலங்களிலும் தங்கள் வாழ்வை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகர்ப்புற ஏழைகளும், தொழிலாளர்களும் அரைவயிற்றுக்கே அடிமைகளாக உழைக்க வேண்டியிருக்கிறது.
மக்களின் உரிமைகளை, சொத்துகளை  ஏகபோகமாக சுருட்டிக்கொண்டுக் கொண்டு கொழுக்கிறது  முதலாளி வர்க்கம். உரிமைகளை இழந்த மக்களோ ஓட்டாண்டிகளாக மாறியதோடு இந்த முதலாளிகளிடமே வேலைக்காக பிச்சையெடுக்கின்றனர். முதலாளிகளின் செல்வத்துக்காக உழைக்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். மும்பையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்றமும் இறக்கமுமே நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றன.
இந்த நிலையில், அரசும், அதிகார வர்க்கமும் முதலாளிகளின் கைப்பாவையாக, பன்னாட்டு கம்பெனிகளின்  அடியாளாக வேலை செய்துவருகிறது.  பொதுத்துறைகளை தனியாருக்கு திறந்துவிட அரசு முழுமூச்சுடன் இயங்கிவருகிறது. தண்ணீர்,மருத்துவம்,கல்வி, இயற்கை வளங்களை அடுத்து மின்சாரத்துறையை கொள்ளையடிக்க தனியாருக்கு ரத்தின கம்பளம் விரித்திருக்கிறார், தமிழகத்தின் அமைச்சர் ஒருவர்.
எந்த சுதந்திரத்துக்காக நமது மூதாதையர் போராடினார்களோ அந்த பெயரளவிலான சுதந்திரத்தையும் அடகு வைத்துக்கொண்டிருக்கிறது  தரகு முதலாளி கும்பலும், அரசும். ஒபாமாவையும், ஹிலாரியையும் வரவேற்று அடிமைசாசனம் எழுதித்தருகிறது
இந்தியா. அந்நிய முதலீட்டாளர்களை வரவேற்று  அவர்களுக்கு நாட்டை தாரை வார்த்துக்கொடுப்பதே ‘நாட்டுப்பற்றா’க மாறிப்போயிருக்கும்போது அதற்கு உதவும் படியாகவே அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்திப் போராட்டங்கள்  பயன்படுகின்றன. உண்மையில் போராட்டம் என்பது எதற்கெதிரானதாக இருக்க வேண்டும்? யாருக்கெதிராக இருக்க வேண்டும்?
சமீபத்தில் வாசித்த ”உன் அடிச்சுவட்டில் நானும்” எனும் நாவல்  போராட்டம் என்பதையும், போராளிகளுக்கான அர்த்தத்தையும் சொல்லுவது போலிருந்தது.
இந்த நாவல் வியட்நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் போரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்த வீரதீரமான கம்யூனிஸ்ட் போராளிகளைப் பற்றியது.
அமெரிக்கப்படைகள்  பயந்து பின்வாங்கி ஓடிப்போனது என்றால் அது வியட்நாமில்தான். முதலில் அந்த  பின்னணியை பார்த்துவிடலாம்.   பண்டைய வியட்நாமை அரசர் குல சீனாவும், அதன்பிறகு  1800- களில் பிரான்சும் ஆட்சி செய்து வந்தன.  1900-களில் வியட்நாம் சுதந்திரத்துக்காக எழுச்சி கொள்ள துவங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது, நாஜிக்களிடம்  பிரான்ஸ் வசமிழந்த நேரத்தில் வியட்நாமை ஜப்பான் ஆக்கிரமித்தது.  இந்த ஆக்கிரமிப்புகளால் கொதிப்புடன் இருந்த மக்கள் ஹோ சி மின் கீழ் திரண்டிருந்தனர்.
1945-ல் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் கலகலத்துப் போயிருந்தது. தகுந்த சமயம் பார்த்திருந்த ஹோ சி மின், ஹனாய் பிரதேசத்தை தலைமையாகக்கொண்டு  வியட்நாமை சுதந்திர நாடாக அறிவித்தார். தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஹோ சி மின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வியட்நாமின் சுதந்திர பிரகடனத்தை மறுத்த  பிரான்ஸ் வியட்நாமுக்கு படைகளை அனுப்பியது.  நவீன ஆயுதங்களுடன் வந்திறங்கிய பிரெஞ்சு படையுடன் பார்க்கும்போது  ஹொ சி மின் படைகள் மரபான கெரில்லா படைகள்தான். ஆனாலும் உறுதியுடன் போரிட்டு பிரெஞ்சு ராணுவதளத்தை தகர்த்தனர், ஹோ சி மின் படையினர்.  இதில் வடக்கு  வியட்நாம் பகுதி  கம்யூனிஸ்ட் கட்சி வசமிருந்தது. தென் வியட்நாம் பகுதி பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது.  கம்யூனிஸ்ட் கட்சி, வடக்கு தெற்கு என வியட்நாம் பிரிந்திருப்பதை வெறுத்தது. எல்லைக்கோடுகளை அழித்து மக்களை ஒன்று சேர்த்து ஒருமித்த வியட்நாமை உருவாக்க விரும்பியது. இதற்காக ஹோ சி மின் உலகநாடுகளிடம் உதவி கேட்கிறார்.
ஏற்கெனவே கம்யூனிச நாடுகளான சோவியத்  ரஷ்யா மற்றும் சீனாவின் மீதான கடுகடுப்பில் இருந்தது அமெரிக்கா. இதில் ஹோ சி மினுக்கு உதவினால் கம்யூனிசம் வளர ஏதுவாகிவிடுமென்று தனது படைகளை பிரான்சுக்கு அளித்து உதவுகிறது.  ஆமை புகுந்த வீடு உதவாது என்று சொல்வது போல அமெரிக்கா புகுந்த நாடு விளங்குமா?
மெதுவாக தெற்கு வியட்நாம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. தனது சார்பாக ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவுகிறது, அமெரிக்கா. ராணுவம் மற்றும் , போலீசின் அடக்குமுறைக்கும் எண்ணற்ற இன்னல்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  குண்டு மழை பொழிய ஆரம்பிக்கிறது. உயிர்கொல்லும் ரசாயனங்கள் வயல்கள் மீது தூவப்படுகிறது.
அரிசி விளையும் நிலங்களும் காடுகளும் அழிக்கப்படுகின்றன. நாபாம் என்று மிகக்கொடிய குண்டுகள் வீசப்பட்டன.  கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்காக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அரசு பொதுமக்கள் மீதும் தன் கைவரிசையைக் காட்டியது, அமெரிக்கா. கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரெஞ்சு படைகளை சமாளிப்பதோடு அமெரிக்க படைகளையும் சமாளித்தாக வேண்டியிருந்தது. பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அமெரிக்காவுக்கு அப்படியென்ன வியட்நாம் மீது அக்கறை? வியட்நாமில் கம்யூனிச சமுதாயம் மலர்ந்துவிட கூடாதென்பதே அதன் குறிக்கோள்.
இதற்காக அமெரிக்கா பலியிட்ட படைவீர்களின் எண்ணிக்கையும் கொஞ்சநஞ்சமல்ல. சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் விசாரணையே இல்லாமல் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புத்தபிட்சுகள் தங்களை தாங்களே நெருப்பு இரையாக்கிக்கொண்டனர்.  1965-ல் போர் மிகவும் உக்கிரமடைந்தது. அமெரிக்க அதிபர்  ஜான்சனுக்குத் துணையாக  போரை முன்னின்று நடத்தியவர் ராணுவத்தளபதி மக்நமாரா.  வியட்நாம் போரின் முக்கியமான ஆலோசகராகவும்,  மூளையாகவும் செயல்பட்ட மக்நமாரா வியட்நாமுக்கு பலமுறைகள் சென்று வந்திருக்கிறான்.
மக்நமாராவை கொலை செய்ய திட்டமிட்டிந்தனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.  முதல்முறை தப்பிவிட்டான். இரண்டாம் முறை  “காங்லி” எனும் பாலத்தை கடக்கும் போது மயிரிழையில்  தப்பிவிட்டாலும் காயங்களடைந்தான்.  மக்நமாராவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ”நகூயென் வான் டிராயை” கைது செய்கிறது போலீஸ்.
கைது செய்யப்படும்போது ட்ராயுக்கும் அவர் காதலித்த குயெனுக்கும் திருமணம் முடிந்து 19 நாட்களே ஆகியிருந்தன. இருவரையும்  கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம், “வெடிகுண்டுகள் எங்கிருக்கின்றன, மற்ற தோழர்கள் எங்கிருக்கின்றனர்” என்ற  செய்திதான்.  ”அமெரிக்க வெறியர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் வெடிகுண்டுகள்இருக்கின்றன” என்கிறார் ட்ராய்.   குயெனும் பலவித சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார். அதில், ட்ராயை குறித்து பயமுறுத்தி, பலவித சோதனைகள் கொடுத்து உண்மையை வாங்கிவிட முயற்சி செய்கிறது.
தோழர்கள், மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு இந்த சிறைகளில் சொல்லவொண்ணா துயர்களைஉபாதைகளை அனுபவித்துள்ளனர்.  அவர்கள் மன உறுதி எந்நாளும் சிதைக்கப்படுவதில்லை.  இந்த உண்மையை  கைதிகளை சித்ரவதை செய்ய தண்ணீர் நிரப்பிய வாளிகளும், நகக்கண்களில் ஏற்ற விதவிதமான ஊசிகளும், நூதன முறையிலான ஆயுதங்களையும் சிறையில் பார்த்து அறிந்துக்கொள்கிறார், குயென்.
குயெனுக்கு ட்ராயின் கட்சி வேலைகளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால்,ட்ராய்  மாலை வேளைகளில்,இரவுகளில் தாமதமாக வருவதும், ஏதோ யோசனையில் மிகவும் தீவிரமாக  இருப்பது மட்டும் புரிகிறது. திருமணமான சில தினங்களில் உறவினர்கள் வீட்டுக்கு செல்வது வியட்நாமிலும் சம்பிரதாயமாக இருக்கிறது. ஆனால், ட்ராயுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று அவர் மீது வருத்தம் கொள்கிறார் குயென். பொது மக்களின் மனநிலையில் இருக்கும் குயென்  சிறைவாசத்தின் போதும்,, அதற்கு பிறகு  ட்ராயின் மரணதண்டனையினாலும் புடம் போடபட்டு  ட்ராயின் அடிச்சுவட்டில் ஒரு தோழராக  தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த நாவல்.
சிறையில், சகத்தோழர்களின் போராட்ட வாழ்க்கையையும், அர்ப்பணிப்பையும் கண்டும் கேட்டும் குயென் சாதாரன பெண்ணிலிருந்து போராளியாக மாறுகிறார்.  இந்த நாவல் குயென் சொல்லச் சொல்ல ட்ரான் வான் தின்  எழுதியது. இதில், குயென் சிறையில் சந்தித்த நபர்களின் பெயரை  வெளியிடாமல்”எக்ஸ்”, “எம்” என்றே குறிக்கிறார். இன்று அந்த மனிதர்கள் இல்லை. ஆனால், கட்சியின்  ரகசியத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து அறிந்துக்கொள்ள இது உதவுகிறது.
இன்றும் இணையத்தில், மொக்கைகள் பலர், தோழர்களுடன் விவாதம் செய்யும்போது ”உன் உண்மையான பேர், ஊரோட வா” என்று  கேட்பதை காண்கிறோம்.  இதைக்கேட்டுவிட்டு பதில்சொல்ல இயலாத கேள்வியை கேட்டுவிட்டது போல இறுமாந்து விடுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி என்பது  பெரும்பாலான நேரங்களில் தலைமறைவாகவே   இயங்க வேண்டியிருக்கிறது. அதோடு, அது கட்சிக் கட்டுப்பாடு.   சுரண்டுபவர்களும், ஒடுக்குபவர்களும், போரை ஏவுபவர்களும் தைரியமாக  உலா வருகையில் மக்கள் மீது அக்கறையும், தேசத்தின் பால் பற்றும் கொண்ட மக்கள் தலைமறைவாக இயங்கவேண்டியிருப்பது  மிகப்பெரிய முரண்தான் இல்லையா?!
குயென் சிறையில், தோழர்களுடன் இணைந்து பாடல்களையும், அவர்களது வாழ்க்கையை கேட்டறிகிறார்.  ட்ராயுடன் தான் வீம்பு பிடித்ததும், சாதாரண காரியங்களுக்காக கோபித்துக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது, ட்ராய் தன்னை புதிய உலகுக்காக தயார் செய்ய முனைந்திருக்கிறார், பக்குவப்பட்ட பெண்ணாக மாற்ற முனைந்திருக்கிறார்  என்று அறிந்துக்கொள்ளும்போது  குயெனுக்கு தெளிவு பிறக்கிறது. கட்சி வேலைகளில்  தன்னையும் ஈடுபடுத்திக்கொள்ள மனதளவில் தயாராகிவிடுகிறார், குயென். சிலநாட்களில் விடுதலை அடைகிறார்.
ஆனால், அவர் இப்போது பழைய குயென் அல்ல. தன் நாட்டுமக்களை நேசிக்கும் ஒரு போராளி.  போலீசின் நைச்சியமான ஆசைகாட்டுதல்களுக்கும் அடிமைத்தனத்துக்கும் மயங்காத ஒரு போராளி.  தன் கணவர் மரண தண்டனை அடைந்தாலும் அவரது அடிச்சுவட்டில் பயணம் செய்ய தயங்காத ஒரு போராளி.
இதை நாவல் என்று சொல்வதைவிட வாழ்க்கைக்கதை என்றே சொல்லலாம். குயென் சொல்லச் சொல்ல ட்ரான் தின் வான் எழுதியிருக்கிறார்.  நாவலில், ட்ராய்  அனுபவிக்கும் போலீசின் அடக்குமுறைகளும் சித்திரவதைகளும் வலியும் வேதனையும் மிக்கவை.  பொதுமன நோக்கில் பார்த்தால்,  இதனால் அவர் தனிப்பட்ட அளவில் எதனையும் பெறவில்லை என்று கொண்டாலும் அவர் இழந்ததுதான் அதிகம். எனினும், எதற்காக ட்ராய் அவற்றை அனுபவிக்க வேண்டும்? காதலித்து மணம் புரிந்த தன் மனைவியுடன் இனிமையாக காலத்தை கழித்திருக்கலாமே!
ட்ராயும், குயெனும், வானும், சிறையிலிருந்த தோழர் ”எம்”மும் “எக்ஸும்” இன்னும் எண்ணற்ற தோழர்களும் எளிமையான குடிமக்கள். தங்கள் நாட்டுக்காக, தாங்கள் விரும்பிய புதிய சமூகத்தை அமைத்திட தம்மை அர்ப்பணித்தவர்கள்.  ஆனால்,  இவர்கள்தான் அமெரிக்கப்படைகளை ஓட ஓட விரட்டியவர்கள். இது வரலாறு.  இந்த சாதாரண மக்களின் வீரம்தான் அமெரிக்காவை தன் படைகளை மீளப்பெற வைத்தது. எத்தனை உபாதைகளை, உடலளவிலும், மனதளவிலும் அனுபவித்தாலும் கொண்ட கொள்கை மாறாதவர்கள். வெகு சாதாரண மக்கள். இவர்களின் பெயர்கள்அதிகமாக வெளியில் அறியப்படுவதில்லை.
ஆனால், கம்யூனிசப்பாதையை விட்டு விலகிய  ஒன்றிரண்டு விதிவிலக்கின்  வார்த்தைகளை கொண்டு கம்யூனிசத்தின் லட்சியத்தை அவதூறு செய்யப்படுவது போல இவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தீரமும் பேசப்படுவதில்லை.  கம்யூனிஸ்டுகள் என்றால் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை கானல் நீருக்காக இழந்துவிட்டு பிற்காலத்தில் வாடுபவர்கள் என்பது போலவும்  இரக்கத்திற்குரிவர்கள் போலவும் பார்க்கப்படுகிறார்கள்.  கிண்டல் செய்யப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடப்படுகிறார்கள்.
உன்னத லட்சியத்தைக் கைக்கொண்ட குயெனையோ அல்லது  தாய்நாட்டுக்காக வீரத்துடன் சாவை எதிர்க்கொண்ட ட்ராயின் தைரியமோ பேசப்படுவதில்லை. போற்றப்படுவதில்லை. ஆனால், தோழர்கள் என்றும் அதற்காக கவலைப்படுவதில்லை. நாம் உயர்வாக எண்ணுபவற்றை துச்சமாக மதிப்பவர்களைப் பார்த்து இவ்வாறு எண்ணிக்கொள்வது நகைமுரணல்லாமல் வேறென்ன?
இன்று இந்தியாவும் அன்றைய வியட்நாம் போல அமெரிக்காவின் பிடியில்தான் இருக்கிறது. அதன் பொம்மை அரசாங்கம்தான் இங்கு ஆட்சி செய்கிறது. விவசாயிகளும், பழங்குடியினரும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  தொழிலாளர்களும், நகர்ப்புற ஏழைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகபோகத்துக்காக நாடு  முழுவீச்சில் மறுகாலனியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.  நாட்டின் மீது உண்மையான பற்றும்,பக்தியும் இருந்தால் புரட்சிக்காக நம் கையில் இருக்கவேண்டியது மெழுகுவர்த்திகளோ  வெற்றுக்கோஷங்களோ அல்ல என்று நாம் உணர்வது எப்போது?

நகூயென் வான் ட்ராய் சுடப்படும் வீடியோ

நூல் விவரங்கள் :
வரலாற்று நாவல்:  உன் அடிச்சுவட்டில் நானும்
பக்கங்கள் : 112
எழுதியவர் : ட்ரான் வான் தின்
தமிழாக்கம் : தா. பொன்னிவளவன்
வெளியீடு : அலைகள்

No comments:

Post a Comment

THANK YOU