Friday, 21 September 2012

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?


கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 3

அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?

அம்பேத்கர் மஹர்எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். மஹர்பிரிவு மக்களுக்குச் சிறந்த போர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவே அவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.

ஒரு தனிமனிதனின் குணங்கள் அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையிலும், அவனது உணவையும் பொறுத்தே இருக்கிறது என்பதையும் அம்பேத்கர் அறிவார். புலால் உணவை மறுப்பது ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் ஆராய்ந்தார். பஞ்சமா பாதகங்களைச் செய்யாதேஎன்று உபதேசித்தால், மக்கள் கேட்டுவிடப் போகிறார்களா என்ன? மாறாக அதைச் சொல்லாமல் அந்த நிலைக்கு அவர்களை இயற்கையாகவே இட்டுச் செல்ல வேண்டும். பஞ்சமா பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாதவை கிறிஸ்தவம், இசுலாம். அப்படியானால் அவர்களை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல புத்தமதத்தால்தான் இயலும்.

புத்த மதத்தில் சேர்ந்த பின்பு அதன் கொள்கைகளை நெறிப்படிக் கடைப்பிடிக்க வைப்பதன் மூம் அவர்களை நல்ல நிலைக்கு முன்னேற்றி, சிந்தித்துச் செயல்படும் திறன் உள்ளவர்களாக மாற்றி, சமுதாயத்தில் சம அந்தஸ்து உடையவர்களாக அவர்களை ஆக்கிவிட முடியும் என்று அவர் நம்பியதாலே இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் அவர் புத்த மதத்திற்கு மாறினார். அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கருக்கு சட்ட அமைப்பு 25-ன் விதிப்படி புத்தமதம் ஹிந்து மதத்துடனே ஒன்றாகவே கருதப்படுகிறது என்பது எப்படி நினைவற்றுப் போகும்? சட்டத்தைத் தொகுத்தது அவரல்லவா? எனவே அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியதற்கு அதுவே காரணம்.

- ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்
இந்து முன்னணி வெளியீடு, பக்கம் 32.
”தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவற்ற மூடர்களாக, அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தனர்; இறைச்சி உண்ணும் பழக்கங்கொண்ட அவர்கள் பொய், திருட்டு, பெண்டாளுதல் போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்யும் போக்கிரிகளாகவும் இருந்தனர்; இவற்றிலிருந்து அவர்களைத் திருத்த நினைத்த அம்பேத்கர் இசுலாம், கிறித்தவம் போன்ற அநாகரீக மதங்களைத் தவிர்த்துவிட்டு இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு மதம் மாறினார்” என்பதே இதன் பொருள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் என்பது பார்ப்பன ‘மேல்’ சாதியினர் இன்று வரையிலும் கொண்டுள்ள வெறுப்புக் கலந்த திமிரான கருத்தாகும். இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறும் பொய்யல்ல; பார்ப்பனக் கொழுப்பும் நரித்தனமும் கலந்த பொய். காரணம், அவர்கள் பார்ப்பன இந்து மதத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று அடிமைகள். அவர்கள் அடிமைகள் என்று உணர்வதைக் கூட அனுமதிக்காத பார்ப்பன இந்துமதம்தான் அநாகரீகமானது என்றார் அம்பேத்கர்.
ஒரு மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறவியல், மகிழ்ச்சி, விடுதலையைப் பேசுகின்ற கொள்கைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இந்து மதம் என்பது கொள்கைகளின் தொகுப்பா அல்லது தண்டனைகளைப் பட்டியலிடும் குற்றவியல் சட்ட விதிகளின் தொகுப்பா? சாதிப்படி நிலையில் சூத்திர – பஞ்சம மக்கள் எப்படி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதையே விதிகளாய் வைத்திருக்கும் பார்ப்பனியத்தை ஒரு மதம் என்று அழைக்கமாட்டேன் என்றார் அம்பேத்கர். சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையைக் கிழித்துக் காட்டினார்.
‘இந்து’ என்ற பெயரே முகமதியர்கள் இட்ட பெயர்தான். அவர்கள் அப்படிப் பெயரிடவில்லை என்றாலும் பிரச்சினை ஏதும் வரப்போவதில்லை. காரணம் நாமெல்லாம் ஒரு நாட்டு மக்கள் என்ற சகோதர சமூக சிந்தனை பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தில் இல்லாதபோது ஒரு பொதுவான பெயர் பற்றிய கேள்வியே எழுவதில்லை. இந்து – முசுலீம் சண்டையை தவிர்த்துப் பார்த்தால் இங்கே தனித்தனிச் சாதியாக வாழ்வதே முதலும் முடிவுமான குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் தங்களுக்குள் கலந்து உறவாடுவதாலேயே சமூகமாக வாழ்கின்றனர். ஆனால், இங்கே பிரிந்து வாழ்வதையே சட்டமாக வைத்திருக்கும் ஒரு நாட்டில் சமூகம் எங்கே இருக்கிறது என்று சீறியவர் அம்பேத்கர்.
சாதிய அமைப்பு என்பது தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் ஏற்றத்தாழ்வாக செயற்கையான தனித்தனித் தீவுகளாய்ப் பிரித்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாய் குலத்தொழில் செய்து வரும் ஒருவன் தன் தொழிலின் நலிவால் வாழ இயலாத போதும் பட்டினி கிடந்து சாவானே ஒழிய வேறு தொழில் செய்ய மாட்டான். அப்படிச் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத வாழ்வைத்தான் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கிறது என்று வழக்காடினார் அம்பேத்கர்.
இப்படி வாழ்வையும் சிந்தனையையும் மட்டுமல்ல உடற்கூற்றையும் பார்ப்பன இந்துமதத்தின் சாதியம் தனது மீற முடியாத அகமண முறையால் எப்படி நலிவடைய வைத்திருக்கிறது என்றால், இந்திய மக்களில் 100-க்கு 90 பேர் ராணுவத்துக்கு (உடல், எடை, உயரம்) இலாயக்கில்லாதவர்களாக உருவாக்கியிருக்கிறது என்று கேலி செய்தார் அம்பேத்கர். அது மட்டுமா, ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட தனித்தனி உடை, உணவுப் பழக்கங்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வேடிக்கைப் பொருளாக, அருங்காட்சியகமாக இந்தியா இருப்பதை சினத்துடன் எடுத்துக் காட்டினர் அம்பேத்கர்.
கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும 130 லட்சம பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில்) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று காறி உமிழ்ந்தார் அம்பேத்கர். இம்மக்களுக்கு கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருக்காலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே பார்ப்பனியத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.
ஆரிய சமாஜத்தின் ‘தாய் மதம்’ திருப்பும் மதமாற்றச் சடங்கை ஒரு மோசடி என நிரூபித்தவர் அம்பேத்கர். ஏனைய மக்கள் ‘தம் கொள்கையால் மட்டுமே விடுதலை பெற முடியும்’ என்று தம் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்து மதமோ அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாததோடு, அப்படி ஒரு முயற்சியையும் செய்ய முடியாது. காரணம் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்தச் சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளது. சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.
”நாங்கள் சாதியை ஏற்கவில்லை, அவை இந்து மதத்தில் நுழைந்த இடைச் செருகல்கள், தொழில்முறை வேலைப் பிரிவினைக்காக ஏற்பட்ட வருண அமைப்பே இந்து மதத்தில் ஏற்படுத்தப்பட்டது” என வருண அமைப்புக்கு ஆதரவாக ஆரிய சமாஜத்தினர் வழக்காடினார்கள். அப்படி என்றால் ஒவ்வொரு தொழிலுக்கும் பிராமணன், சத்ரியன், வைசியன் என்று முத்திரை குத்துவது ஏன், பிறப்பின் அடிப்படையில் மட்டும் தொழில் தீர்மானிக்கப்படுவது ஏன், தொழில் மாறும் உரிமை கொடுக்க மறுப்பது ஏன், அப்படி மாறினால் கடும் தண்டனை வழங்கும் காப்பாளராக இந்து மதம் இருப்பது ஏன் என்று கேட்ட அம்பேத்கர், நான்கு வருணங்கள் -  நான்காயிரம் சாதிகள் எனப் பிரிந்திக்கிறதே ஒழிய தன்மையில் ஒன்றுதான் என்று அம்பலப்படுத்தினார்.
மேலை நாடுகளைப் போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது பௌதீக ஆயுதத்தையும், போராடும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும் கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருந்தான். அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன. இங்கே பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமை கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடு போல உழைத்துச் சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர – பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒருவாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது என்றார் அம்பேத்கர்.
இத்தகைய சாதிய அமைப்பை ஒழிக்காமல் ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது, வெள்ளையர்களை விரட்டினாலும் தமது அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுதலை அடைய முடியாது என்றார் அம்பேத்கர். ”தீண்டாமைப் பிரச்சினையையும் – மத மாற்றத்தையும் – இந்து மதத்திற்குள்ளேயே பேசித் தீர்த்து விடலாம் – அதை அரசியல் அரங்கிற்குக் கொண்டு வராதீர்கள்” என காந்தி ஒவ்வொரு முறையும் நயவஞ்சமாக நாடகமாடினார். பேசுவதற்கு முன்னால் உங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெள்ளைக் குல்லாய் போட வேண்டும், கதராடை உடுத்த வேண்டும், என்று வைத்திருப்பதுபோல சாதி, தீண்டாமை பாராட்டுபவன் உறுப்பினராக முடியாது என்று விதி கொண்டு வர முடியுமா என காந்தியின் கழுத்தைப் பிடித்துக் கேட்டார் அம்பேத்கர்.
ஆங்கிலேயரின் கைக்கூலி, தேசத் துரோகி என்று காங்கிரசு கும்பலும், பத்திரிகைகளும் வசை பாடிய போதும் தனது போராட்டத்தை விட மறுத்தார் அம்பேத்கர்.
1927-ஆம் ஆண்டு மராட்டியத்தில் சவுதாகர் களப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைக்கெதிரான நீரெடுக்கும் போராட்டத்தினைத் துவக்கினார் அம்பேத்கர். அடுத்த நாளே ‘இந்துக்கள்’ 108 பானைகளில் சாணம், பசு மூத்திரம், பால், தயிர் கொட்டி பார்ப்பனர்களின் யாகத்தோடு குளத்திற்குத் தீட்டு கழித்தார்கள். 1930-ஆம் ஆண்டு அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் துவக்கிய நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் 1935-ஆம் ஆண்டில்தான் வெற்றியடைந்தது.
அம்பேத்கரின் இத்தகைய போராட்டங்கள் வன்முறையற்ற அமைதியான போராட்டங்கள்தான் என்றாலும் இந்துக்கள் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தார்கள், தாக்கவும் செய்தார்கள். இதனால் இந்த நாட்டில் சாதி – தீண்டாமையை ஒழித்து ஒரு சமூக எழுச்சியைக் கொண்டு வரும் தனது முயற்சியில் இந்துக்களைத் திருத்த முடியவில்லையே என்று வேதனைப்பட்ட அம்பேத்கர் 1935 யேவா மாநாட்டில் ”நான் பிறப்பால் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால், நிச்சயம் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்” என்று முடிவெடுத்தார்.
இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 1956-ஆம் ஆண்டு 2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு புத்த மதம் மாறினார்.
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு பௌத்தத்திற்கு மதம் மாறிய அம்பேத்கர்
அத்பேத்கர் புத்த மதம் மாறியதன் காரணம் என்ன?
பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், விகாரமான சடங்குகளுக்கு எதிராகவும், 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது புத்த மதம். இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல பௌத்தம்  இந்து மதத்தின் உட்பிரிவு அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரே, புத்த மதம் செல்வாக்குடன் இருந்த வடமேற்கு – வடகிழக்குப் பகுதிகளில் வருண – சாதிய அமைப்பு சீர் குலைந்ததாகவும், அதனாலேயே முசுலீம், கிறித்தவ மதமாற்றமும் படையெடுப்பும் நடந்ததாகக் கூறி பௌத்தத்தை அருவெறுப்புடன் பார்க்கிறார். கணிசமான காலம் பார்ப்பனியத்திற்கு மாற்றாக விளங்கிய புத்தமதம் செல்வாக்குடன் திகழ்ந்ததற்கு அசோகர் உள்ளிட்ட மௌரிய மன்னர்கள் அளித்த ஆதரவும் முக்கியக் காரணமாகும்.
கடவுள், சடங்கு, நிரந்தர உலகக் கொள்கையை நிராகரித்த புத்தர், அனுபவ ஆய்வையும்  – அறிவையும் மட்டுமே நம்ப வேண்டுமென்றார். மேலும் அகத்தூய்மை, போதுமென்ற மனம், ஆசையை விட்டொழித்தல், பற்றுக்களை உதறுதல் ஆகியவற்றின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார். அவர் அமைத்த பிக்குகள், பிக்குணிகள் அடங்கிய சங்கம் எளிமைக்கும், சகோதரத்துவத்திற்கும், சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்கியது. இப்படி பார்ப்பனியத்திற்கு எதிராகக் கிளம்பிய பௌத்தம் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோல்வியைத் தழுவி, இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது.
புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூக நோக்கமும் அம்பேத்கருக்கு மிகவும் பிடித்திருந்தன. மேலும் மனிதனின் அறவியல் விழுமியங்கள் தோன்றி நீடிப்பதற்கு மதம் அவசியம்  என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை ஒரு நல்ல சமூகம் நிலவ வேண்டுமானால் சமூக நீதிகளைக் கொண்ட சட்டத்தை வைத்து மக்களை ஆளும் ஒரு நல்ல அரசு புறநிலையாகவும், மனிதனின் ஆன்மீக மேன்மையை வளர்க்கும் ஒரு மதம் அகநிலையாகவும் தேவை எனக் கருதினார்.
அதேசமயம் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்த மதம் அந்தக் காலத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற ஒரு மதமே தவிர இன்றைய பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. அதாவது புத்தரின் ‘நிர்வாணநிலை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போராடும் தேவையை மறுத்து, போதுமென்ற மனநிலையை அளிக்கிறது. இவையெல்லாம் அம்பேத்கருக்குத் தெரியாதா, என்ற கேள்விக்கு அவரது கடைசிக் காலத் தோல்விகளும், மதம் பற்றிய அவரது கருத்தும், சாதி ஒழிப்பிற்கான வழி முறை பற்றிய அவரது சித்தாந்தமும் பதிலாகின்றன.
அடுத்து முசுலீம் – கிறித்தவ மதங்களுக்க அவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மதவெறியர் கூறுவது போல அவை ‘அநாகரீகமான மதங்கள்’ என்பதால் அல்ல. முதலில் அவை பார்ப்பனியத்தை எதிர்த்துப் பிறந்த மதங்கள் அல்ல; இரண்டாவது, இந்த மதங்களும் பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன.
மேலும் இசுலாமும், கிறித்தவமும் தமது மதக் கொள்கைகளைவிட வலுவான நிறுவன ரீதியான வலைப்பின்னலாலும், அரசு போன்ற கண்காணிப்பு செய்யும் சமூக நெறிப்படுத்தலாலும்தான் நீடிக்கிறது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பௌத்தம் மட்டுமே தனிமனிதனிடம் அறவியல் நல்லொழுக்கங்களை சுதந்திரமான முறையில் வளர்த்தெடுக்கின்றது என்பது அவர் கருத்து. ஆனால், இன்றும் புத்த சமயம் செல்வாக்குடன் வாழும் நாடுகளில் கூட அது நிறுவன ரீதியான மதமாகத்தான் இருக்கின்றது. மேலும் அம்பேத்கரின் புத்தமத மாற்றம் என்பது பார்ப்பன இந்து மதத்தை அசைத்துப் பார்க்கும் அளவு வெற்றியடையவில்லை.
இன்றைய தேவை கருதி அம்பேத்கரைத் திரித்துப் புரட்டும் இந்து மதவெறியர்கள் இன்று வரையிலும் அவரை வன்மத்துடன்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரும் அவரது மசோதாவை ஆத்திரம கொண்டு எதிர்த்தனர், கலவரம் செய்தனர். சில வருடங்களுக்கு முன் ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ என்ற அவரது நூலைத் தடை செய்யக் கோரியும், மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தியது; பல தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாகின; அம்பேத்கர் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன்பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கியைக் கவரவும், தனது ‘மேல்சாதி’த் தன்மையை மறைக்கவம் அம்பேத்கரைப் புகழ்பாடும் இந்து மத வெறியர்கள் அப்போதுகூட, ‘ஆம் எங்கள் மதத்தின் அழுக்குகளை அநாகரீகங்களைக் களைய முயன்றார் அம்பேத்கர்’ என்று கூறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாக வாழ்வதற்கு முயன்றார் என்று கூசாமல் கூறுகின்றனர். கன்சிராம், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், திருமாவளவன், கிருஷ்ணசாமி இவர்களையெல்லாம் வென்றெடுத்துவிட்ட நிலையில் இந்து மத வெறியர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் அம்பேத்கர் இந்துமத மகான்களில் ஒருவர் என்று கூடக் கூறமுடியும்.
அரசியல் சட்டத்தின் 25வது பிரிவில் முசுலீம், கிறித்தவர்கள் தவிர்த்த புத்த மதத்தினர், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்துக்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மைதான். தான் எதிர்த்த காங்கிரசின் மந்திரி சபையில், அம்பேத்கர் சட்ட மந்திரியாக இருந்தது, அரசியல் சட்ட முன் வரைவுக் குழுத் தலைவராகப் பணியாற்றியது – இவையெல்லாம் அரசு என்ற நிறுவனத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச உத்திரவாதமும், சலுகைகளும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான். இவை சாதி ஒழிப்பின் சிக்கல்கள் நிறைந்த பாதை அம்பேத்கரிடம் ஏற்படுத்திய சமரசங்கள். அதேசமயம் இத்தகைய முயற்சிகளால் அவர் திருப்தியடையவில்லை; அவை தவறு என உணர்ந்தபோது தூக்கி எறியவும் செய்தார்.
”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்” என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில் ”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்” என்றார். இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். இவை சமரசத்தின் மூலம் அம்பேத்கர் முடங்க மாட்டார் என்பதைக் காட்டுகின்றன.
சமீபத்தில் சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவதான் என்ற கூறிய ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக சீக்கியர்கள் போராடினார்கள். அதனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை சீக்கிய மதம் தனியான மதம்தான் என்று மன்னிப்பு கேட்டு ஒப்புக் கொண்டது. ஆனால், தலித் பிழைப்புவாதிகள் பாரதீய ஜனதா கட்சியில் சங்கமமாயிருக்கும் இக்காலத்தில் பௌத்தத்தையும் அம்பேத்கரையும் இந்துமத வெறியர்கள் மற்றும் தலித் பிழைப்புவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் கடமை சாதிய ஒழிப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
- தொடரும்
பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

No comments:

Post a Comment

THANK YOU