Monday 28 May 2012

யார் வர்மம் பழகலாம்...!

வர்மக் கலையினை குருமுகமாய் பயில்வதே சிறப்பு, நமக்குக் கிடைத்திருக்கும் நூல்கள் எல்லாமே ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கும். அவை ஒருபோதும் முழுமையான கல்வியாகாது. மரபு வழிசார்ந்த இந்த கலையில் அனுபவமும், விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சி மட்டுமே ஒருவனை வித்தகனாக ஆக்கும்.

வர்மக் கலையில் தேர்ந்த வைத்தியர்கள் மிகச் சிலரே நம்மிடையே இருக்கின்றனர். இவர்களும் பெரிதான அளவில் வெளியில் தெரியாமல் தங்களை நாடி வருவோருக்கு மட்டும் வைத்தியம் செய்திடும் இயல்பினர்.குருமுகமாக வித்தையை கைகொண்ட எவரும் விளமப்ர வெளிச்சத்திற்கு ஆசைப் படுவதில்லை. அகத்தியர் கூறியுள்ள தகுதியின் படி வர்மம் பழகிட சில அடிப்படையான குண இயல்புகளும், மனோ ரீதியான கட்டுப் பாடுகளும் தேவை.

எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் நுண்ணறிவும், சேவை மனப்பாங்கும்,ஆகக் கூடிய நிதானமும், பதட்டமோ, கோபப் படும் தன்மை அற்றவனாக இருத்தலே அடிப்படை தகுதியாகும் என்கிறார் அகத்தியர்.மேலும் இத்தகையவர்கள் எதிரிகளை தாக்கும் நோக்குடன் கற்றுக் கொள்ளாமல் மக்களின் நோய் நொடிகளைக் குணப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு பயிலவேண்டும்.

இவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் தருணம் அன்றி வேறு எந்த நேரத்திலும் மற்றவர்கள் மீது இதை பிரயோகிக்காது இருத்தல் வேண்டும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, எதிரியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவண்ணம் எதிரியை தாக்கி வீழ்த்தவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

தேர்ந்த வர்மக் கலை நிபுனன் ஒருவன் எத்தகைய பலசாலியையும் ஒன்றிரண்டு தாக்குதலில் நிலை குலையவைத்து வீழ்த்திட் முடியும். குறிப்பிட்ட சில வர்ம புள்ளிகளை தாக்குவதன் மூலம், எதிரியின் மரண தினத்தைக் கூட நிர்ணயிக்க முடியும். அத்தகைய மரணம் மிகவும் கொடியதும், வலி மிகுந்ததுமாக இருக்குமாம்.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த வர்மக் கலையினை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்திருக்கிறார். அவையாவன...

படு வர்மம்

தொடு வர்மம்

தட்டு வர்மம்

நோக்கு வர்மம்

இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இந்த வகைகளின் விளக்கங்களையும், அதன் பயன்களையும் நாளைய பதிவில் காண்போம்.

No comments:

Post a Comment

THANK YOU