Sunday 27 May 2012

உருத்திராட்சம் - ஓர் அறிமுகம்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!, உருத்திராட்சம் என்றவுடன் நமக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது... சன்னியாசம், சாமியார்கள், ஆன்மீகம், எளிமை, ஜபமாலை, உடல்நலம், மருத்துவம், மந்திரவாதிகள் இத்யாதி இத்யாதி!!.

ருத்திராக்‌ஷம், உருத்திராக்கம் என பல பெயர்களில் அறியப்படும் இந்த உருத்திராட்சம் பற்றி பல்வேறு கருத்தாக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. புராணங்களில் இது பற்றிய மிகைப் படுத்தப் பட்ட பல தகவல்கள் கூறப் பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்த்து உருத்திராட்சம் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பற்றியும், சித்தர் பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள தகவல் பற்றியும் தொகுத்து அளிப்பதே இந்த தொடரின் நோக்கம்.

வடமொழியில் ருத்ராக்‌ஷம் என்பதற்கு “ருத்திரனின் கண்கள்” என்பதாக பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை குறிக்கிறது. “ganitrus” என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த உருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப் படுகிறது. இமயமலையின் அடிவாரங்களில், கங்கைநதியின் சமவெளிப் பகுதிகளில்,ஆஸ்திரேலியா மற்றும் மலேயா நாடுகளில் மட்டுமே காணப் படுகிறது. இந்த தாவரத்தில் 90 வகை இருப்பதாக தாவரவியல் பகுத்தறிந்திருக்கிறது. இவற்றில் 25 வகை மரங்கள் இந்தியா மற்றும் நேப்பாள நாடுகளில் கிடைக்கிறது.

இந்த மரம் அதிகபட்சமாய் 80 அடி உயரம் வளரக் கூடியது. உருத்திராட்ச மரத்தின் சில வகைகள் தமிழகத்தின் பழநி, நீலகிரி போன்ற இடங்களிலும், கேரளத்தில் திருவாங்கூர் பகுதியிலும், கர்நாடகத்தில் மைசூர் பகுதிகளில் காணப் படுகிறது. இதன் பழங்கள் கருமை கலந்த நீலம் அல்லது செம்மையோடிய நீல நிறத்தில் கடினமான மேலோட்டுடன் இருக்கும். இந்த மரத்தின் இலைகள் வாத மரத்தின் இலைகளைப் போல ஆறு அங்குல நீளத்தில் இருக்கும். முதிர்ந்த இலைகள் உதிர்ந்த உடன் அந்த கணுக்களில் பூக்கள் தோன்றும். உருத்திராட்ச மரத்தின் பூக்கள் வெண்மை நிறமுடையாக இருக்கும்.

உருத்திராட்ச மரத்தின் பழங்கள் கடுமையான மேலோட்டுடன் இருந்தாலும் உள்பகுதி புளிப்பு சுவையுள்ள சாறு நிறைந்த சதைப் பகுதியாக இருக்கும். இவற்றின் நடுவில் இருக்கும் கொட்டை பகுதியைத்தான் நாம் உருத்திராட்ச மணி என்கிறோம். நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாக கருதப் படுகிறது. இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி நகரம்தான் உருட்திராட்ச மணிகளுக்கு முக்கியமான சந்தையாக இருக்கிறது.

இயற்கையில் உருத்திராட்ச மணி செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும், சாயமேற்றப் பட்டிருக்கும். இதன் பொருட்டே சிவந்தும், பளபளப்பாகவும் இருக்கிறது. சில இடங்களில் அரக்கு, பிளாஸ்டிக் போன்றைவைகளினால் செய்யப் பட்ட போலி மணிகளும் விற்பனைக்கு வருகின்றன. போலிகளை கண்ட்றியும் முறைகளை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.

நாளைய பதிவில் உருத்திராட்ச மணிகளின் அமைப்பு, வகை, பற்றிய விவரங்களைப் பார்ப்போம்..

குறிப்பு :-

சென்னையை சேர்ந்த திரு.எம்.கே.சுகுமாரன் என்னும் அருளாளர் தனது கடின உழைப்பின் பயனாய் போகர் அருளிய போகர் சப்தகாண்டம்-7000 என்கிற நூலை மின்னூலாக்கி இருக்கிறார்.

இந்த அரிய நூலினை பின் வரும் இணைப்பில் இருந்து தரவிரக்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். எனவே ஆர்வமும், தேவையும் உள்ள நண்பர்கள் தரவிரக்கி பயன் படுத்திக் கொள்ளவும். அவரின் மேலான இந்த முயற்சிக்கு எனது நன்றியையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 comment:

  1. pls send me a web ID, your web ID is not clear thanks.......
    send to :mannan317@hotmail.com

    ReplyDelete

THANK YOU