Monday 28 May 2012

"ரூம் றீம் சிம்ரா" அகத்தியர் அருளிய திருநீற்றுப் பலன்!

சிவனை தங்களின் இறைவனாக கொண்ட சைவ மதத்தினரின் முதன்மையான அடையாளம் திருநீறு. இதனை இரட்சை, சாரம், விபூதி, பசுமம், பசிதம் என்றும் அழைப்பர். அருகம்புல்லை அதிக அளவில் உட்கொள்ளும் பசு மாட்டின் சாணத்தை சிறு உருண்டைகளாக்கி, வெயிலில் காய வைத்து, அதனை உமியினால் மூடி புடமிட்டு எடுத்தால் உருண்டைகளானது வெந்து நீறாகி இருக்கும். இதுவே தூய திருநீறு தயாரிக்கும் முறை என்கிறார் அகத்தியர்.
இதனை இரண்டு வகையாக அணிந்து கொள்ளலாமாம். இடைவெளி இல்லாது பூசிக் கொள்ளும் முறையை "உள்தூளனம்" என்கின்றனர். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் திருநீற்றினை ஓன்றிற்கு ஒன்று இணையாக மூன்று கோடுகளாய் இட்டுக் கொள்ளும் முறைக்கு “திரிபுண்டரிகம்” என்பர். இப்படி அணிந்து கொள்வதன் பின்னனியில் இருக்கும் தத்துவார்த்தமான விளக்கங்கள் மிக விரிவானவை. 
முற்காலத்தில் அவரவர் தேவையைப் பொறுத்து தாங்களே திருநீறீனை தயாரித்துக் கொண்டனர். இப்படி தயாரிப்பதற்கு என சில நியமங்களை நமது முன்னோர் வகுத்திருக்கின்றனர். வெண்மையான நிறமுடைய திருநீறே சிறப்பானதாக கருதப் படுகிறது. தற்காலத்தில் வர்த்கரீதியாக உற்பத்தி செய்வோர் இத்தகைய நியமங்களின் படி தயாரிக்கும் வாய்ப்புகள் குறைவே.
சித்தரியலில் செபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம் என பல்வேறு செயல்களில் திருநீறானது பயன்படுத்தப் பட்டமைக்கான குறிப்புகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. திருநீறினை யாரிடம் இருந்து எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் அருளியிருக்கிறார். 

ஆமப்பா சூட்சம்வெகு சூட்சமான
     அருமையுள்ள மந்திரத்தைத் தியானம்பண்ணி
ஓமப்பா நல்லோர்க ளிடமாய்மைந்தா
     உத்தமனே விபூதியுட நெதுவானாலும்
தாமப்பா தனதாக வாங்கும்போது
     சங்கையுட நவர்கள்செய்யுந் தவமெல்லாந்தான்
வாமப்பால் பூரணத்தின் மகிமையாலே
     வந்துவிடும் மனதறிவால் மனதைப்பாரே.


மனதாக நல்லோர்க ளிடத்திலிந்த 
     மந்திரத்தைத் தானினைத்துப் பூரித்தாக்கால்
மனதாக அவர்கள்செய்யுந் தவப்பலந்தான்
     மந்திரங்கள் தன்னுடனே வந்துசேரும்
மனதாக மூடர்வெகு வஞ்சர்கிட்ட
     மணிமந்திர பூதியுட நெதுவானாலும்
மனதாக அவர்களிடம் வாங்கும்போது
     மக்களே அவர்கள்குணம் வருகும்பாரே.

திருநீறினை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் போது கொடுக்கிறவர் செய்த தவப் பயன் மற்றும் குணநலன்கள் வாங்குவோருக்கு போய்ச் சேர்ந்திடுமாம். எனவே இதை உணர்ந்து தியானத்தில் சிறந்து நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே திருநீற்றினை பெற வேண்டும் என்கிறார்.  மாறாக வஞ்சக எண்ணம் கொண்டோரிடம் இருந்து பெற்றால் அது தீய பலன்களையே கொண்டு தருமாம்.
இப்படி நல்லோரிடம் திருநீறு வாங்கிடும் போது அந்த பலனை முழுவதுமாக நாம் பெற்றிட ஒரு சூட்சும மந்திரம் இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.
அது என்ன சூட்சும மந்திரம்?

சாற்றியதோ ருபதேசம் நன்றாய்கேளு
சங்கையுடன் ரூம்றீம் சிம்ராவென்று 
தேற்றியதோர் சித்தர்சிவ யோகிதானும்
திருநீறு தானெடுத்துக் கொடுக்கும்போது
பார்த்திபனே மந்திரத்தை நினைத்துவாங்க
பதிலாக அவர்பிலமும் வருகும்பாரே.

சித்தர்கள், சிவ யோகிகள், ஞானிகள் போன்றவர்களிடம் திருநீற்றை வாங்கும் போது "ரூம் றீம் சிம்ரா" என்கிற மந்திரத்தை மனதில் நினைத்து செபித்து வாங்கிட, அவர்கள் பெற்றிருக்கும் உயர் தவப் பயனும், குணநலன்களும் நம்மை வந்து சேரும் என்கிறார்.

1 comment:

  1. இதை யாம் அறிந்தோம்

    ReplyDelete

THANK YOU