Monday 28 May 2012

போகர் ஜாலவித்தை!


சித்தர்கள் என்றாலே அரிதான எட்டு விதமான சித்துக்களையும், வாய் பிளக்க வைக்கும் ஜாலங்களையும் நிகழ்த்திக் காட்டுகிறவர்கள் என்பதான பொதுக் கருத்து உண்டு. இந்தக் கருத்தினை முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. ஏனெனில் சித்தர்களின் பாடல்களின் ஊடே இம் மாதிரியான ஜாலங்களைப் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இவை எதற்காக சொல்லப் பட்டது என்பதும், அதன் பின் புலத்தில் மறைந்திருக்கும் உட் கருத்துக்களும் ஆய்வுக்கு உட்பட்டவை.

இந்த வாரத்தின் நெடுகில் அப்படியான சில சித்துக்களை பார்க்க இருக்கிறோம். இன்றைய பதிவில் போகர் தனது “போகர் ஜாலவித்தை” என்னும் நூலில் அருளியிருக்கும் ஒரு ஜால வித்தை பற்றி பார்ப்போம். ஒரு குடத்தில் நீரை அள்ளி அந்தக் குடத்தினை தலைகுப்புற கவிழ்த்தாலும் பானையில் உள்ள நீர் கீழே சிந்தாதிருக்கும் ஜாலத்தை போகர் பின் வருமாறு கூறுகிறார்.

நடந்தபின்பு இன்னமொரு ஜாலங்கேளு
         நல்லமயி ரோசனையும் மத்தக்காசும்
அடர்ந்ததொரு நாற்கரந்தை வயன்றவேரும்
        அரசமர வேருடனே இந்த நான்கும்
குடத்துள்ளே சமனிடையாய் அறைத்துப்பூசி
         குளங்கிணற்றில் ஜலமதனை மொண்டுவந்து
அடைத்திருங்குஞ் சபைதனிலே கவிழ்த்துக்காட்டில்
         அணுவளவு ஜலங்கீழே வீழா தாமே.

கோரோசனை, மத்தக்காசு, கரந்தை வேர், அரசமர வேர் ஆகிய நான்கினையும் சம எடையில் எடுத்து தூய்மை செய்து, அவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டுமாம்.பின்னர் இந்த கலவையை குடத்தின் உட்புறத்தில் நன்றாக பூசி உலர வைக்க வேண்டும் என்கிறார். இந்த கலவை நன்கு காய்ந்த பின்னர் இந்த குடத்தில் நீர் எடுத்து அதனை கவிழ்த்தால் சிறிதளவு நீர் கூட கீழே விழாது என்கிறார் போகர்.

ஆச்சர்யமான தகவல்தானே.....

இன்றைய நவீன நீர்மவியலில் (Hydraulics) இம் மாதிரியான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை பயன்படுத்திட முடியுமானால் மனித குலத்துக்கு நல்லதுதானே...

1 comment:

  1. வலிப்பு, வாதநோய், வாந்தி
    வலிப்பு
    அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.
    வாதநோய்

    http://www.tamilkadal.com/?p=1481

    ReplyDelete

THANK YOU