Friday 26 July 2013

தேசியக் கொடி பிறந்த வரலாறு!

தேசியக் கொடி பிறந்த வரலாறு!
History of Indian National Flag
ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக விளங்குவது அந்த நாட்டின் தேசியக் கொடியாகும். அனேகமாக ஒவ்வொரு நாடுமே, அது பிறப்பதற்கு முன்பே தேசியக் கொடியை உருவாக்கியிருக்கும். அதேபோலத்தான் இந்தியாவும் தனது தேசியக் கொடியை சுதந்திரமடைவதற்கு முன்பே உருவாக்கியது. பல்வேறு உருவங்களில் வலம் வந்த நமது தேசியக் கொடி 1947ம் ஆண்டு ஜூலை மாதம் தற்போதைய வடிவத்தை அடைந்தது. சுதந்திரம் கிடைக்க ஒரு மாதத்திற்கு முன்புதான் நமது தேசியக் கொடி தற்போதைய வடிவத்தை எட்டியது.

தேசியக் கொடிதான் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனுக்கும் உயிர் மூச்சாகும். கொடிக்காக உயிர் துறந்த குமரன்கள் பலரைக் கண்ட நாடு நமது இந்தியா.

தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா:

இந்தியாவின் தேசியக் கொடியை உருவாக்கி வடிவமைத்தவர் பிங்கலி வெங்கய்யா. ஆந்திராவைச் சேர்ந்தவர். தற்போதைய தேசியக் கொடிக்கு 1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி அப்போது உருவாக்கப்பட்டிருந்த நியமனச் சபையில் அங்கீகாரம் தரப்பட்டது. இதுதான் இந்தியாவின் தேசியக் கொடி என்று முடிவெடுக்கப்பட்டது அந்த நாளில்தான்.

மூன்று வண்ணங்களைக் கொண்டதாக கொடி இருந்ததால் இதற்கு மூவர்ணக் கொடி என்றும் பெயர் வந்தது. மேலே காவி நிறமும், நடுவில் வெண்மையும், கீழே பச்சை நிறமும் கொண்டதே இந்தியாவின் தேசியக் கொடி. நடுவில் அசோக சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இந்த அசோக சக்கரம் கடல் நீல நிறத்தில் இருக்கும்.

முதல் கொடி பிறந்தது 1906ல்:

முதல் முதலில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி. கல்கத்தாவின் கிரீன் பார்க்கில் அந்தக் கொடியை ஏற்றினர். அந்தக் கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான படுக்கை வச பட்டைகளுடன் கூடியதாக இருந்தது. இதுதான் முதல் கொடியாகும்.

அடுத்து 1907ம் ஆண்டு பாரீஸில் மேடம் காமா 2வது தேசியக் கொடியை ஏற்றினார். முதல் கொடியைப் போலவே கிட்டத்தட்ட இது இருந்தது. இருப்பினும் தாமரையும், சப்தரிஷிகளைக் குறிக்கும் வகையில் ஏழு நட்சத்திரங்களும் கொடியில் இடம் பெற்றிருந்தன. இந்தக் கொடி பெர்லினில் நடந்த சோசலிச மாநாட்டின்போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

அடுத்து 1917ம் ஆண்டு ஹோம்ரூல் இயக்கம் நடந்தபோது, டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், லோகமான்ய பாலகங்காதர திலகரும் இணைந்து ஒரு கொடியை ஏற்றினர். இதில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிற படுக்கை வச கோடுகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏழு நட்சத்திரங்களும் இடம் பெற்றிருந்தன. கொடியின் இடதுபுற மூலையில் இங்கிலாந்தின் யூனியன் ஜாக்கும், வலது புறம் வெள்ளை நிற பிறையும், நட்சத்திரமும் இடம் பெற்றிருந்தன.

1921ல் இரு வண்ணக் கொடி:

1921ம் ஆண்டு பெஸ்வாடா (இப்போதைய விஜயவாடா) என்ற இடத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின்போது ஆந்திர இளைஞர் ஒருவர் ஒரு கொடியை உருவாக்கி அதை காந்தியிடம் கொடுத்தார். அதில் இந்துக்களையும், முஸ்லீம்களையும் குறிக்கும் வகையில் கொடியில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த காந்தி, கொடியில் வெள்ளை நிறத்தை சேர்க்க ஆலோசனை கூறினார். மேலும், சுழலும் சக்கரத்தை இணைக்குமாறும் அவர் ஆலோசனை கூறினார்.

31ல் பிறந்தது மூவண்ணக் கொடி:

1931ம் ஆண்டு நமது தேசியக் கொடியின் வரலாற்றில் முக்கியமான ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் மூவண்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக ஏற்கலாம் என்ற அங்கீகாரம் கொடுக்கப்பட்ட ஆண்டாகும். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றினர். அந்தக் கொடியே தற்போதைய கொடியின் முன்னோடியாகும். காவி, வெண்மை மற்றும் பச்சை நிறத்துடன் கூடிய அந்தக் கொடியில் காந்தியின் ஆலோசனையை ஏற்று சுழலும் சக்கரமும் இணைக்கப்பட்டிருந்தது (அசோக சக்கரம் இல்லை).

1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நடந்த நியமனச் சபையின் கூட்டத்தில் தற்போதைய சுதந்திரக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. சுழலும் சக்கரத்திற்குப் பதில் அசோக சக்கரம் இணைக்கப்பட்டு கொடி தற்போதைய வடிவத்தை அடைந்தது.

பலம்-அமைதி-வளர்ச்சி:

தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவண்ணத்திற்கும் ஒரு தத்துவம் உண்டு. காவி நிறம் பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது. நடுவில் உள்ள வெண்மை நிறம், உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது. பச்சை நிறம், வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

நடுவில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எங்கும் ஏற்றி மகிழலாம்:

2002ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை தேசியக் கொடியை இஷ்டப்பட்ட இடத்தில் ஏற்ற முடியாது என்று கட்டுப்பாடு தடை இருந்தது. ஆனால் அந்த ஆண்டு குடியரசு தினம் முதல் பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றி மகிழலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த குடியரசு தினத்தன்று மக்கள் தங்களது வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றி மகிழ்ந்தனர்.

தேசியக் கொடியை ஏற்றுவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு, அவமதிப்பு ஏற்படாத வகையில் கையாள வேண்டும், கொடியேற்ற வேண்டும்.

மத நோக்கத்திற்கான காரியங்களில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. சட்டை உள்ளிட்ட துணிகளில் தேசியக் கொடியை அச்சிடக் கூடாது. சூரிய உதயத்தின்போது கொடியை ஏற்றி, சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கி விட வேண்டும்.

கொடி கிழிந்த நிலையிலோ அலலது கசங்கிய நிலையிலோ அல்லது நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றப்படக் கூடாது. தரையைத் தொடும் வகையிலோ அல்லது தண்ணீரில் மிதக்கும் நிலையிலோ கொடியை பறக்க விடக் கூடாது.

தேசியக் கொடி பறக்கும் போது அதற்கு மேல் வேறு எந்தக் கொடி அல்லது துணி பறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடி மீது மாலை உள்ளிட்ட வேறு எந்தப் பொருளும் இடம் பெறக் கூடாது.

இந்திய மக்களின் இறையாண்மை, சுதந்திரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் தேசியச் சின்னமே நமது தேசியக் கொடி. நமது தேசியப் பெருமையின் அடையாளம் தேசியக் கொடி. கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை கெளரவிப்போம்.

1 comment:

  1. இந்திய‌த் தேசிய‌க்கொடியின் வ‌டிவ‌மைப்புக்குக் கார‌ண‌மாக‌ இருந்த‌ த‌மிழ்ப்பெண்‍ தில்லைய‌டி வ‌ள்ளிய‌ம்மை.

    மேலதிக விவரங்களுக்கு:

    http://viyaasan.blogspot.ca/2013/03/blog-post_8.html

    ReplyDelete

THANK YOU