Monday 22 July 2013

எம். எஸ். சுப்புலட்சுமி (1916 - 2004) அஞ்சலி:


அடக்கம் அமரருள் உய்க்கும்
வாஸந்தி
அவர் ஓர் அசாதாரணக் கலைஞர் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. அவரது வாழ்வும் அசாதாரணமானது. “அவரைக் கலைவாணியின் ஸ்வரூபமாகப் பார்க்கிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று நெகிழ்ந்து சொன்னார் மாண்டலின் ஸ்ரீனிவாசன்.
நான் இசைக் கலைஞர் அல்ல. ரசிகை மட்டுமே. அண்மையில் அமரரான எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றின நினைவு வரும்போதெல்லாம் எனக்கும் அப்படித்தான் நெகிழ்ச்சி ஏற்படுகிறது.
கேட்பவரை உருகவைத்து, ஆன்மீக எல்லைக்கு அழைத்துச் சென்ற அவரது இசை தெய்வீகத்தன்மை கொண்டது எனப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவர் பாடும்போதும் அவர் புதிய எல்லைகளைத் தொடுவதுபோலத் தோன்றும். தொலைந்துபோயிருந்த தமது ஆன்மாக்களை மீட்டெடுத்த பரவசம் கேட்பவரை ஆட்கொள்ளும். “அன்பே உருவான பாட்டி மேடையில் அமர்ந்ததும் ஒரு கடவுளாக மாறிப்போவது எனக்குப் பல முறை அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது” என்று அவருடைய பேத்தி கௌரி ராமநாராயணன் சொல்வார். அத்தன்மை சாமான்யர்களுக்கு வரக்கூடியதல்ல. எம்.எஸ்ஸுக்கு சங்கீதம் மட்டுமல்ல, வாழ்வும் ஒரு வேள்வியாகப் போனதாலேயே அந்த அற்புதம் நிகழ்ந்ததாகத் தோன்றுகிறது.
இசைக் கலைஞர்களையும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களையும் ஆகர்ஷித்தது அவரது உன்னத கலைத் திறன் மட்டுமல்ல. திறமைமிக்க கலைஞர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள் நம்மிடையே. ஆனால் எம். எஸ். என்னும் நபர் ஒப்பற்றவராக இருப்பதற்கு அன்பின் அடையாளமாக, பண்பின் இருப்பிடமாக, அடக்கத்தின் உறைவிடமாக வாழ்ந்த அவரது இயல்பே காரணம். அவரைப் பலமுறை நான் சந்தித்திருந்தாலும் பத்திரிகையாளர் என்னும் முறையில் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பிற்காக அவரை இரண்டு மூன்று முறை பேட்டி காணச் சந்தித்து அளவளாவியதில் ஒரு மகா மனுஷியைச் சிறிதளவு அறியும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு சந்திப்பும் ஒரு ஆன்மீக அனுபவம்.
ஒவ்வொரு சந்திப்பின்போதும், பாரத ரத்னா விருது வாங்கிய பிறகும், “நா பாடுவேன்னே நினைக்கல்லே” என்பார் அடக்கமாக, உன்னத சங்கீதத்திற்கு இலக்கணம் எழுதப் பிறந்தவர் அவர் என்கிற பிரக்ஞை அற்றவராய். மதுரை சங்கீத உலகத்தில் பிரபலமான வீணைக் கலைஞர் சண்முக வடிவுக்கு செப். 16, 1916இல் பிறந்தார். சங்கீதம் மட்டுமே ஆஸ்தியாகக் கொண்ட சூழல். வீட்டில் தம்புரா ஒலி ரீங்கரித்துக்கொண்டே இருக்கும். குஞ்சம்மா என்ற சிறுமி சுப்புலட்சுமியின் உள் மனசு, விளையாடும்போதும் வீட்டில் வளையவரும்போதும் உறங்கும்போதும்கூட சதா சர்வ காலமும் இசையை முனகியபடி அந்த சுருதியுடன் லயித்து நிற்கும். கண்விழித்ததுமே இசைப் பயிற்சி. பயிற்சிக்குக் கால வரையறை கிடையாது. ஆறாம் வகுப்பில் பள்ளியில் படிக்கும்போது மூர்க்கமாக வாத்தியார் அடித்ததில் மயக்கம் போட்டு விழுந்த தனது அருமைக் குஞ்சம்மாவின் படிப்பிற்குச் சண்முக வடிவு முற்றுப்புள்ளி வைத்தார்.
குஞ்சம்மாவுக்குத் தான் பாடகியாகப்போவோம் என்கிற நினைப்பும் இல்லை; கனவும் இல்லை. அம்மா வீணை வாசித்தாலும், பெண்கள் “வெளியிலே பாடற துங்கறது எல்லாம் அப்போது கிடையாது.” அப்பா சுப்பிரமணி அய்யர் ஓர் இசைப் பிரியர். ராம நவமி உற்சவங்கள் கொண்டாடுவார். பெரிய வித்வான்கள் வந்து பாடுவதைக் கேட்கும் போது பிரமிப்பாக இருக்கும். அம்மாதான் முதல் குரு. அவருடன் சேர்ந்து 12 வயதில் மேடையேறிப் பாடியதுமே இசை வானில் ஒரு நட்சத்திரம் உதயமானதை இசை உலகம் இனம்கண்டது. பெண் பாடகர்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், 18 வயது சுப்புலட்சுமி சென்னை மியூசிக் அகாதமியில் பாடிச் சரித்திரம் படைத்தார்.
ஆனால் பாடகி ஆக வேண்டும் என்ற ஆர்வமோ ஆசையோ ஏற்படவில்லை. உண்மையில் பீதி ஏற்பட்டது. கலை உலகில் இருந்த ‘புரவலர்களின்’ ஆதிக்கப் பிடியில் நொறுங்கிவிடுவோம் என்று அச்சமேற்பட்டது. “கல்யாணம் பண்ணிண்டு நல்லபடியா இருந்தா போறும்” என்கிற பரிதவிப்பு இருந்தது.
அது ‘மத்திய வகுப்பு மனோபாவம்’ அல்ல. அவர் பிறந்த சமூகத்தில் இருந்த அன்றைய குரூர யதார்த்தத்தின் விளைவு. அவருடைய நல்ல காலம் டி.சதாசிவம் என்னும் காந்தியவாதியை, ரசிகரை, சந்தித்தார். சதாசிவத்தின் இரண்டாம் மனைவியாக, அவரது மகள்கள் ராதாவுக்கும் விஜயாவிற்கும் தாயாக இருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த போது, ஒரு நல்ல குடும்பத் தலைவியாக இருந்தால் போதும் என்னும் எண்ணம் மட்டுமே இருந்தது. கணவர் பாட அனுமதித்திருக்காவிட்டாலும் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். இந்த வாழ்க்கையே போறும்னு நினைச்சிருப்பேன்.
ரசிகர்கள் செய்த அதிருஷ்டம், சதாசிவம் வேறு விதமாக நினைத்தார். குஞ்சம்மா குடத்துக் குத்துவிளக்கில்லை என்று உணர்ந்தார். அவர் சொன்னதாலேயே சுப்புலட்சுமி பாட ஆரம்பித்தார். அவர் சொன்னதாலேயே சாவித்ரி படத்தில் நாரதராக நடித்தார். அதில் சன்மானமாய்க் கிடைத்த ரூபாய் 50,000 கல்கி பத்திரிகை ஆரம்பிக்க உதவியது. கல்கத்தாவில் ஷூட்டிங் நடந்தபோது பிரபல வட இந்தியப் பாடகர்களான ஸய்கல், ஸன்யால், கே. ஸி. டே, இந்து பாலா, கானன் தேவி போன்ற கலைஞர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. பிறகு சதாசிவமே தயாரித்த மீரா படமும் அதன் ஹிந்தி வடிவமும் தேசிய அங்கீகாரம் கொடுத்தன. அதைப் பார்த்த சரோஜினி நாயிடு “மீராவாகவே ஆகிவிட்டார் சுப்பு லட்சுமி” என்றார். படத்தின் கடைசிக் காட்சியில் மீராவின் ஆன்மா கண்ணனின் சன்னிதியில் சங்கமித்தபோது சுப்புலட்சுமி உணர்ச்சிவசப்பட்டு மயங்கி விழுந்தார்.
மீராவுக்குக் கண்ணன் காட்டிய வழி. எம்.கூஎஸ். ஸுக்குக் கணவர் காட்டிய வழி. ராக சஞ்சாரங்களின் நெளிவு சுளிவுகளைவிட, தாளங்களின் காலப் பிரமாணக் கணக்குகளைவிட - இவற்றில் அவருக்கு அபார தேர்ச்சி இருந்தும் - பக்தி வெளிப்பாடுதான் முக்கியம் என்று சொன்னவர் சதாசிவம். இதனாலேயே விமர்சனங்கள் எழுந்தன. சங்கீத விதூஷகி என்று புகழப்படுபவர் கர்நாடக இசை மேடையைப் பஜனை மேடையாக்கிவிடுவது சங்கீதத்தின் துரதிருஷ்டம் என்னும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. ஆனால் குஞ்சம்மாவுக்குக் கணவர் சொல்லே வேத வாக்கு. அதை மீற வேண்டும் என்னும் எண்ணம்கூடத் தோன்றாது. பாடல்களின் மொழி தெரிந்தாலே அதன் பக்தி பாவத்தை வெளிப்படுத்துவது சாத்தியம் என்று மொழிப் பயிற்சி கிடைத்தது. மீரா பஜனையும் தும்ரியையும் பாடுவதற்கு நாராயண்ராவ் வியாசிடமும் சித்தேஷ்வரியிடமும் ஹிந்துஸ்தானி சங்கீதம் பயின்றார். திலிப் குமார் ராயிடம் வங்காளி பஜன்களையும் சாந்தா கோஷிடம் ரவீந்திர சங்கீத்தையும் கற்றார். “நீ அர்த்தம் உணர்ந்து பாடினா ஜனங்க உன் பக்கம் வருவா” என்றார் சதாசிவம். வந்தார்கள். திரள் திரளாக. கன்யாகுமரியிலிருந்து தில்லிவரை. கல்கத்தாவிலிருந்து மும்பைவரை. அவர் ‘சம்போ மஹாதேவா’ என்று பாடியபோது நாஸ்திகர்களும் நெகிழ்ந்தார்கள். ‘குறை ஒன்றுமில்லை’ என்று உருகி உருகிப் பாடுகையில் சாமான்யர்களும் கரைந்தார்கள்.
பாராட்டுகளும் விருதுகளும் அருளாய்ச் சுரந்தன. இந்த அனாயாசத்துக்குப் பின்னால் கடும் உழைப்பு இருந்தது. மகாப் பெரிய தொண்டு இருந்தது. 80 வயதுவரை 3 மணி நேரத்துக்குக் குறையாமல் சாதகம். கச்சேரி என்றால் ஓய்வே இல்லாத பயிற்சி. அப்படியும் ஒவ்வொரு முறை மேடை ஏறும்போதும் பயமேற்படும். “நல்லபடியாப் பாடணுமேன்னு.” தன்னம்பிக்கை இல்லாததால் அல்ல. ஆடியன்ஸை ஏமாற்றிவிடக் கூடாதே என்னும் பொறுப்புணர்ச்சியால். அதனாலேயே அவருக்குக் கிடைத்த கணக்கிலடங்கா விருதுகளும் பட்டங்களும் இறகுகளாய் அவரது தோளில் அமர்ந்தன. 1954 இல் பத்ம பூஷண்; 74இல் மகஸேஸே; 75இல் பத்ம விபூஷண்; 89இல் ஸ்பிரிட் ஆஃப் தி ஃப்ரீடம் விருது; 90இல் இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது. 1988இல் பாரத ரத்னா விருது அவருக்குக் கிடைத்தபோது, ‘இது கர்நாடக இசைக்குக் கிடைத்த கௌரவம்’ என்று மகிழ்ந்தார் வயலின் வித்வான் டி. என். கிருஷ்ணன்.
விருது அறிவிக்கப்பட்ட மறு நாள் காலை வாழ்த்துச் சொல்ல, பத்திரிக்கைக்கு பேட்டி காண நான் அவர் வீட்டிற்கு விரைந்தேன். கோட்டூர்புரத்தின் அந்த எளிய வீட்டின் சிறிய வரவேற்பறையின் சுவர்கள் அருள் பெற்றவை. ஐம்பதாண்டு இந்தியச் சுதந்திரத்தின் உன்னதத் தருணங்களைப் பறைசாற்றுபவை. அப்போது புதிய பெருமை சேர்ந்த அடக்கத்துடன் மௌனம் காத்தன. ஓரமாக சோபாவில் அவர் அமர்ந்திருந்தார். பாரதம் ஈன்ற ரத்தினங்களின் மாணிக்கம் - தபஸ்வியைப்போல - தன் தலையில் வீற்றிருந்த மகுடத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல். வயது ஏற ஏற அவரது முகப் பொலிவு கூடுவது எப்படி, 81 வயதில் நம்ப முடியாத இனிமையும் இளமையும் குரலில் இருப்பது எப்படி என்று நான் திகைக்கையில், தொலைபேசி ஒலித்த வண்ணம் இருந்தது. உறவினர்கள், நண்பர்கள், இசை உலகத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தார்கள். ஒவ்வொரு வாழ்த்துக்கும் நெகிழ்ந்து போனார். ‘பெரிய கௌரவம்தான் இது. ஆனா அவர் இல்லையே என்கிற குறைதான். ‘56 வருஷங்கள் தோழனாக, ஆசானாக, வழிகாட்டியாக, மாணிக்கத்தைக் கட்டிக் காக்கும் ராஜநாகம் போல இருந்த கணவர் சதாசிவம் இறந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. அந்த மகத்தான விருதைத் தனக்குக் கிடைத்த பெருமையாக மட்டும் ஏற்க அவர் மனசு கூச்சப்பட்டது தெரிந்தது.
மகாத்மா காந்தி அவரது ஆத்மார்த்த ரசிகர். 1941இல் சுப்புலட்சுமி கணவருடன் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்ற போது அது ஒரு அந்திப்போது. லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அதன் இறுதியில் இளம் சுப்புலட்சுமியைப் பாடச் சொல்லிக் கேட்ட காந்தி சொக்கிப்போனார். “அவளது குரல் மிக இனிமை. பிரார்த்தனை கீதம் பாடும்போது தன்னை இழந்து பாடுகிறாள்” என்றார். 1947இல் தனது பிறந்த நாளன்று மீராவின் பஜனைப் பாட்டான ஹரி தும ஹரோவை சுப்புலட்சுமி பாடிக் கேட்க வேண்டும் என்னும் ஆசை வந்துவிட்டது அவருக்கு. சுசேதா கிருபளானி மூலம் சேதி அனுப்பினார்.
சுப்புலட்சுமிக்கு அந்தப் பாட்டே வராது. வேறு யாரையாவது பாடச் சொல்லுங்கள் என்று சதாசிவம் பதில் அனுப்பினார். “எனக்கு வேறு யாரும் பாடுவதைவிட சுப்புலட்சுமி பாட்டைப் பேசினால்கூடப் போதும்” என்றார் காந்தி விடாப்பிடியாக. ஓர் இரவுப் போதில் பாட்டைக் கற்று அப்பியாசம் பண்ணிப் பதிவுசெய்து, ஒலி நாடா விமானத்தில் தில்லிக்கு அனுப்பப்பட்டது. “ஹரி, நீதான் மக்களின் துயரத்தைக் களைய வேண்டும்” என்று மனத்தை நெக்குருகச் செய்த அந்த குரலைக் கேட்டு அனுபவித்த அந்த நாள் காந்தி உயிருடன் இருந்த அவரது கடைசிப் பிறந்த நாளாயிற்று.
“உங்களை மிகவும் வேதனைப்படுத்தும் விஷயம் என்ன?” என்று ஒரு முறை எம். எஸ். ஸைக் கேட்டேன். “வெளியில் செல்லும்போது இன்னமும் கண்ணில்படுகிற ஏழ்மை” என்றார் உடனடியாக. “சுதந்திரம் வந்து இத்தனை வருஷமாச்சு. ஏன் இன்னும் நம்மாலெ இந்த ஏழ்மையைக் களைய முடியல்லேன்னு ரொம்ப வேதனையா இருக்கு. என்னாலெ என்ன செய்ய முடியும்? நமக்குக் கீழ வேலை செய்யறவாளுக்கு சாப்பாடு போடலாம்; பெனிபிஃட் கச்சேரி செய்யலாம்.” இந்த வேதனையே, சங்கீதத்தில் கிடைத்த கோடிக்கணக்கான வருமானத்தையெல்லாம் தருமத்துக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் கொள்கைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். கல்கி கார்டன்ஸில் மிக அமோகமாக வாழ்ந்த நாள்கள் உண்டு. பிறகு பணக் கஷ்டம் ஏற்பட்டு வாடகை வீட்டில் இருந்த நாளும் உண்டு. அத்தனை சம்பாதித்தும் தேவையான அளவு போதும் என்னும் நினைப்பால், கடைசியில் அவரிடம் இருந்தது ஒரு சிறிய வீடு மட்டுமே.
ஒரு முறை ‘உங்களது இலக்கு என்ன?’ என்று கேட்டபோது ‘பரிபூரணத்தை எட்டுவது’ என்றார். அவரே அதுவாக ஆன அற்புதம்தான் அவரது சரித்திரம். இருந்தும், 21ஆம் நூற்றாண்டுப் பெண்ணான எனக்கு அவரது பதி விசுவாசமும் கேள்வி எழுப்பாத பணிவும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. சதாசிவத்தைத் திருமணம் செய்து கொண்டபோது இசைவானில் ஒரு பிரகாசமான தாரகையாக அடையாளம் காணப்பட்டிருந்தவர். அப்படியும் கணவர் பாட அனுமதித்த பிறகே பாட முன்வந்ததாகச் சொன்னார். பாடத் தடை விதித்திருந்தாலும் தமக்குக் குறை இருந்திருக்காது என்றார். என்னால் நம்ப முடியவில்லை. ‘குறை ஒன்றுமில்லை’ என்று பாடிக் கண்ணில் நீரை வரவழைத்த அந்தப் பெண்மணிக்கு உண்மையிலேயே குறை ஒன்றும் இருந்திருக்காதா? வருத்தமிருக்கவில்லையா? கோபப்பட்டதில்லையா? இல்லை என்றபோது நம்பத்தான் முடியவில்லை. ஏதுமறியாச் சாதுப் பெண் அல்ல அவர். அவரது பேச்சில் அறிவுச் சுடர் தெறித்தது; உலக விவரம் தெரிந்திருந்தது; நாகரிகத்தின் உருவமாக இருந்தார்.
“பெண்ணியம், பெண்ணுரிமை இவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். “நா படிக்காதவ. என்ன சொல்றதுன்னு தெரியல்லே” என்றார். “பெண் பிரச்னைகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியா இருக்கும். பொதுவான தீர்வு சொல்ல முடியாது. அவரவர்களுடைய பிரச்னை அவரவர்களுக்குத்தான் புரியும். அவர்களேதான் விவேகத்தோடு தீர்த்துக்கணும்.”
அவர் எப்படித் தமதைத் தீர்த்துக்கொண்டார் என்று நான் கேட்கவில்லை. தமக்குள் பேசுபவர்போலச் சொன்னார். “பொறுமை வேணும். கொஞ்சம் விட்டுக் கொடுத்தா புருஷா தன்னாலெ வருவா.”
மெல்லிய வெளிச்சம் கிடைத்தது போலிருந்தது. அது அவருடைய உத்தி. தனது இலக்கை அடைய அந்த உத்தியே சிறந்தது என்று புரிந்துகொண்ட விவேகம். அல்லது ஞானம்.
ஒரு முறை சந்திப்புக்கு பின் வெளியில் அமர்ந்திருந்த சதாசிவத்திடம் கேட்டேன்.
“சுப்புலக்ஷ்மியின் தனிப்பட்ட சிறப்பு என்ன என்னும் நினைக்கிறீர்கள்?”
“அவளுடைய அடக்கம்” என்றார்

No comments:

Post a Comment

THANK YOU