Friday, 15 February 2013

தனித்தன்மை.


முனிவர் ஒருவர் ஒரு பாதையில் நடந்து கொண்டிருக்கையிலேயே திடீரென பாதையில் குப்புறப் படுத்து,அந்த நிலையிலேயே தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.
அப்போது அந்த வழியே ஒரு குடிகாரன் வந்தான்.கீழே கிடந்த முனிவரைப் பார்த்து,''இவனும் நம்மை மாதிரி பெரிய குடிகாரன் போலிருக்கிறது இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான்.அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.
அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான்.அவன் அவரைப் பாரத்தவுடன்,''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது. இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல்  படுத்துக் கிடக்கிறான்,பாவம்,''என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.
பின்னர் முனிவர் ஒருவர் அங்கு வந்தார்.அவர்,''இவரும் நம்மைப் போல ஒரு முனிவராகத்தான் இருக்க வேண்டும்.தியானத்தில் இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,''என்று நினைத்தவாறு தன்  பாதையில் சென்றார்.
ஆக ஒவ்வொரு மனிதரும் அவரவர் தனித்தன்மையில்  இருக்கிறார்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.நாம்தான் நம் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களைப் பற்றி கற்பனைகள் செய்து கொண்டு அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்கிறோம்..உறவுகள் சீர்கெடுவதற்கு  இது ஒரு முக்கிய காரணம்.

No comments:

Post a Comment

THANK YOU