Saturday, 23 February 2013

ஜென் தத்துவ கதைகள்

இந்த புத்தகத்தை என் உறவினர் ஒருவர் எனக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் குருஜி வாசுதேவ். 77 சிறு கதைகளில் ஜென் தத்துவங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். கதைகள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாக சில சமயம் உணர்வு ஏற்பட்டாலும், அங்காங்கே சொல்லப்பட்டு இருக்கும் நல்ல கருத்துகளினால் அந்த உணர்வுகள் மறைந்து விடும்.

ஜென் என்றால் என்ன - ”இயல்பாயிருத்தல்” என்பதே அதன் அர்த்தம். எது நடந்தாலும், அதன் போக்கில் விட்டு விடு. எதையும் விரும்பாதே, எதையும் வெறுக்காதே. ஜென் குருக்கள் இந்த தத்துவங்களைப் பின்பற்றி வாழ்ந்தார்கள். அவர்கள் தங்களின் சீடர்களின் கேள்விகளுக்கு அவர்களுக்கு தானாகவே பதில் தெரியும் வகையில் மிக இயல்பாய் பதில் சொல்வது வழக்கம். மக்கள் ஜென் குருக்களிடம் சென்று , “எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள்” என்று கேட்டு பெறுவது பிரபலமான ஒன்றாக இருக்கிறது.

இந்த புத்தகத்திலிருந்து ஒரு கதை உங்களுக்காக!!

“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம் சொன்னான்.

“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.

“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”

இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.

துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.

“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.

“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”

“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.
_________________________________________________________________________________
வெறுமையை உணரும் முன்பு அதுபற்றி எவரும் கற்பனைகூட செய்ய முடியாது. அதுபற்றி உணர்ந்த பிறகோ அதைப் பற்றிப் பேசவும் முடியாது. அதைப் பற்றிப் பேசுவதற்கு சொற்களும் கிடையாது.
_________________________________________________________________________________

எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறிவிடு. எதையும் தேடித் துரத்தாதே. எப்போதும் இயல்பாயிரு. தன்னைத்தான் அறி.
_________________________________________________________________________________

No comments:

Post a Comment

THANK YOU