இளைஞனே
இல்லத்தின் எதிர்காலமே
நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமே
உனக்கான கடமைகள் ஏராளம்
காத்துக் கிடக்கின்றன பூமியில்
உனக்கான தேவைக்காய்
அடம் பிடித்து
அழுகையால் சாதிப்பது
அன்னை தந்தையிடம் மட்டுமே
கிட்டுகின்ற ஒன்று
வெளி உலகில்
எட்டாத ஒன்று
உனக்குத் தெரியும் ...
பெற்றவரின் வருத்தத்தை
உனக்குள்ளே உறுத்தப் பழகு
உலகின் வருத்தத்தை
அப்போதுதான் நீ உணர முடியும் ..
எளிமையாய் வாழப் பழகு
வலிமை உனக்குள்ளே ஊற்றெடுக்கும்
உனக்கான சாதனை சாத்தியமாகும்...
நட்பு வட்டத்தை பெரிதாக்கு
வீண் அரட்டை தவிர்
லட்சியப் பயணம் தொடர் ...
வேகத்தோடு மோகம் கொண்ட இளைஞனே
வாகனம் என்பது வசதிக்காக
பாதை என்பது பலருக்காக
நினைவிருக்கட்டும் ...
சிக்னலுக்காக காத்திருப்பதை
சிரமமாய் எண்ணாதே
சீர்திருத்தத்தை ஏற்கப் பழகு ...
சில நிமிடங்களை நேசித்து
சீறிப் பாய்ந்தால் ஆபத்து
உணர்ந்து கொள் ...
உன் உயிரையும் உறுப்பையும் மட்டுமல்ல
சகலரையும் காக்கும் பொறுப்பில்
கவனம் கொள் ...
கையால் பிடித்து பேசுகின்ற கைபேசியை
கழுத்தோடு அணைத்து வாகனம் ஓட்டுவது
உனக்கே நியாயமா ?
நின்று பேசாத ஒரு நிமிடத்தில்
இந்தியாவின் தலை எழுத்தையே
மாற்றி விடப் போகிறாயா ?
சிந்தனை சிதறலால்
சில சமயங்களில்
உன் தலைஎழுத்தே மாறி விடலாம் .
நடிகனின் நடிப்பை நேசி
நடிகனை நேசிக்க யோசி
படம் ஓடினால் கொண்டாடுவதற்கும்
ஓடாது போனால்
சோக கீதம் இசைப்பதற்கும்
நீ என்ன முதல் போட்ட பைனான்சியரா ?..
காதல் வலையில் சிக்கி
லட்சியத்தை விட்டு விடாதே
இயற்கையான உணர்வு தான் என்றாலும்
இயன்றவரை தள்ளிப்போடு
உன்னால் முடியும்
முடியும் என்ற நம்பிக்கையை விதை
செடி, மரம் ,பூ,காய்,கனி எல்லாம்
ஒவ்வொன்றாய் உருவாகும்
அது வரை பொறுமை கொள்
தேவையான உரமிடு
நீ இளைஞன் ...
வீட்டின் ,நாட்டின்
நம்பிக்கை நட்சத்திரம்
No comments:
Post a Comment
THANK YOU