Tuesday, 19 February 2013

சொல்லடி உன் மனம் கல்லோடி..? - குரு



அத்தியாயம் - 3

காற்றிலே மிதந்து வந்த வேணுகானம் கமலியோடு ஹாலில் பேசிக் கொண்டிருந்த மாலதியின் செவிகளில் தேனாய்ப் பாய்ந்தது. மறுகணம் கமலி என்ன சொல்கிறாள் என்பதில் உள்ள கவனத்தைவிட்டு, எங்கிருந்தோ வந்த அந்தத் தேனிசையில் அப்படியே மூழ்கினாள். அவளை அறியாமலே கண்மூடி கொண்டு அந்த இசைத்தேனைப் பருகினாள்.
'என்னடி நான் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் நீ கோழித்தூக்கம் போடுறியா?"
கமலி அவள் தோள்களைப் பிடித்து உலுப்பவே மாலதி விழித்துக் கொண்டாள்.
'என்ன சொன்னாய்..?"
'இல்லை, நான் என்பாட்டிற்கு சொல்லிக் கொண்டே போகிறேன், நீ என்ன தூங்கிறியா என்று கேட்டேன்" என்றாள் கமலி.
'தூக்கமில்லை, இந்த புல்லாங்குழல் இசையைக் கேட்டியா..?"
'எந்தப் புல்லாங்குழல் இசை..?"
'இப்போ வானெலியில் போச்சுதே, அந்தப் பாடல்தான். காற்றினிலே வரும் கீதம்... எம். எஸ். சுப்புலட்சுமி எங்களை விட்டு மறைந்தாலும், அவங்க பாடிய அந்தப் பாடலை மறக்க முடியுமா? எவ்வளவோ காலத்திற்குப் பின்பு அந்த அருமையான பாடலை புல்லாங்குழல் இசையில் இப்பதான்டி கேட்கிறேன். உண்மையிலே இதைக் கேட்டதும் என்னை மறந்திட்டேன், அருமையிலும் அருமை!" மாலதி புகழ்ந்தாள்.
'அவனுக்கு வேறு வேலையே கிடையாது. இப்படித்தான் நேரம் கெட்ட வேளையில் எல்லாம் எழுந்திருந்து ஏதாவது வாசிச்சிட்டே இருப்பான். என்று அலுத்துக் கொண்டாள் கமலினி.
என்ன சொல்கிறாய் கமலி, இந்தப் பாடல் வானெலியில் போகலையா..?
வானொலியா..? இது எல்லாம் கண்ணனோட வேலை..! அவன்தான் இப்படிப் பழைய பாட்டெல்லாம் தேடித்தேடிப் படிப்பான் என்றாள் கமலி.
கண்ணனா புல்லாங்குழல் வாசித்தான்..? என்னால் நம்பவே முடியவில்லை..! என்று வியப்படைந்தாள் மாலதி.
உனக்கு அந்தப் பாடல் எம். எஸ்ஸின் குரலில் கேட்டபடியால் ஏற்கனவே பிடிச்சிருந்திருக்கு, அதுதான் இப்படிப் புல்லாங்குழல் இசையைக் கேட்டதும் புகழ்கிறாய்! அவ்வளவுதான்" என்றாள் கமலி எரிச்சலுடன்.
வீட்டிற்கு வீடு நடப்பது போல, யாராவது தம்பி கண்ணனை ஒரேயடியாகப் புகழ்ந்தால் கமலிக்கும் பிடிக்காது.
'இசைத்தாகம் என்றால் அதுதான்டி, அவன் மீது எரிச்சல் பட்டு, அவனை வேண்டும் என்றே திட்டி, அவனுடைய ஆர்வத்தை மழுங்கடிச்சிடாதே! உன்னால் இசையை ரசிக்க முடியாவிட்டாலும் வெறுக்க நினைக்காதே!"
'உண்மையைச் சொன்னால், நான் சங்கீதம் கற்பதோ, நடனம் பழகுவதோ எல்லாம் அம்மாவோட ஆசைக்காகத்தான். எனக்கு இதிலே கொஞ்சம்கூட ஈடுபாடில்லை. எப்படா அரங்கேற்றம் முடியும் என்றிருக்கிறேன், முடிஞ்சா அந்தத் திசைக்கே ஒரு கும்பிடு!" என்று சொல்லிக் மாலதிக்குக் கும்பிட்டுக் காட்டினாள் கமலினி.
'எனக்குத் தெரியும், உனக்கு ஆர்வம் இல்லை என்று மட்டும் சொல்லாதே! மேலை நாட்டு சங்கீதத்தை மட்டும் ரசிக்கிறாயே அது எப்படி, ஆர்வமில்லாமலா?"
'சின்ன வயசில் இருந்தே எனக்கு அதில் ஆர்வம் அதிகம் ஏற்பட்டதும் ஒரு காரணமாய் இருக்கலாம். நேசரிக்குப் போகும்போது அங்கே நேசரிரைம்ஸ் ஆங்கிலத்தில் பாடமாக்கிய அளவு பாடல்கள்கூட நான் தமிழில் பாடமாக்கவில்லை, தெரியுமா?"
'சின்ன வயசில் அப்படி ஒரு உணர்வு உனக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. அதனால்தான் மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் உனக்கு விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். இதனால்தான் யதார்த்தமாய் வாழமுடியாமல் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருப்பவர்கள் இந்த மண்ணிலே தினம் தினம் கூடிக்கொண்டே போகிறார்கள்.
அப்படி ஆசைப்படுவது தப்பு என்கிறாயா..? கேட்டாள் கமலினி.
தப்பில்லை. உண்மையில் பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளைப் பிள்ளைகள் மேல் திணிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்."
'மாலதி, நீ என்ன சொன்னாலும் அமெரிக்கா அமெரிக்காதான். ஒரு தடவை என்றாலும் அந்த மண்ணில கால் பதிப்பேன்!" கண்களை மூடிக்கொண்டு கமலி சொன்னாள்.
'போதும், போதும் கனவு கண்டது. கால் பதிக்கிறது என்ன, அங்கேயே நிரந்தரமாய் தங்கிடலாம். அதற்கு ஒரு வழியிருக்கு..." மாலதி பாதியில் நிறுத்தினாள்.
'வழியிருக்கா, என்ன..?" என்றாள் கமலி.
'சம்மதம் என்றால் எப்படியாவது ஒரு அமெரிக்க மாப்பிளையைப் பிடிச்சிடு..!" சொல்லிவிட்டு மாலதி கலகலவென்று சிரித்தாள்.
'அப்படி ஒருத்தன் வருவானா?" ஏக்கத்தோடு கேட்டாள் கமலி.
'ஏன் வரமாட்டான்? உனக்கு என்ன குறை? எவ்வளவு அழகாய் இருக்கிறாய்!"
'அப்படி எல்லாம் புகழாதே! உன்னோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் ஒரு தூசு! எனக்கு என்ன ஆசை தெரியமா?
ஆசையோ, கனவோ எதுவாய் இருந்தாலும் சொல்லு..? என்றாள் மாலதி.
ஹவாயில என்னோட கலியாணம் நடக்கணும், லொஸ்ஏஞ்சல்ல பங்களா வாங்கி அங்கே குடித்தனம் போகணும், மியாமியில கொட்டேஜ் வாங்கி அங்கே விடுமுறையைக் கழிக்கணும், இப்படி நிறையக் கனவுகள் இருக்கு! ஏற்கனவே உள்ள அமெரிக்கக் கனவுகளோட இதையும் சேர்த்துக்க வேண்டியதுதான்..!" ஏக்கப் பெருமூச்சு விட்டாள் கமலி.
மாலதி கமலியிடம் விடைபெற்று வெளியே வந்தபோது, கண்ணனும் அதே நேரம் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
'கிளம்பியாச்சா..? சிநேகிதிகள் இரண்டுபேரும் கொசிப்பு எல்லாம் பேசி முடிஞ்சுதா?" என்றான் கண்ணன்.
மாலதி ஆமா என்று ஆமோதிப்பதுபோல ஒரு புன்னகை சிந்தினாள்.
கண்ணன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அருகே நடந்துவர, இருவரும் பேசிக் கொண்டே போனார்கள்.
'நீ புல்லாங்குழலில் வாசித்த அந்தப் பாடல் ரொம்ப அருமையாய் இருந்திச்சு கண்ணா, நான் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படித்தான் தினமும் பயிற்ச்சி எடுத்தால் உன்னுடைய திறமைகளை நீ வெளியே கொண்டுவரலாம்."
எந்தப் பாடலை நீ சொல்கிறாய் மாலதி;;..? வேண்டும் என்றே கண்ணன் கேட்டான்.
அதுதான் அலை பாயுதே கண்ணா..!
அலை பாயுதா..? எங்கே மாலதி..? கண்ணன் மாலதியைத் திரும்பிப் பார்த்துக் கேட்க, அவன் வேண்டுமென்றே தன்னைச் சீண்டுகிறான் என்பது அவளுக்குப் புரிந்ததும், வெட்கத்தோடு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு அவள் மெல்லத் தலை குனிந்தாள்.
'நான் வேடிக்கையாய்ச் சொன்னேன், தாங்யூ பார் யுவர் கொமன்ஸ் மாலதி, உண்மையிலே நான் சோர்ந்து போயிருக்கும் போதெல்லாம் நீ தான் என்னை உற்சாகப் படுத்துகின்றாய். நானும் உன்னைப் பற்றி ஒன்று சொல்லணும்..!" என்றான் கண்ணன்.
'என்னைப் பற்றியா, என்ன சொல்லு..?" மாலதி ஆர்வத்தோடு கேட்டாள்.
'நீ நடனமாடும் போதெல்லாம் நானும் பார்த்திருக்கிறேன். எப்படி உன்னாலே முடியுது மாலதி, எடுத்த எடுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுக்கும் இந்த உடம்பு, அந்த முகபாவம், சுற்றிச் சுழன்று கதைபேசிக் கவர்ந்திழுக்கும் இந்தக் கண்கள்.. பார்த்துக் கொண்டிருப்பவர்களை எல்லாம் கட்டிப்போடும் உன் அழகு, ஆகா.. உனக்குப் புரியாது மாலதி, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் எனக்கல்லவா தெரியும். ஒடிவந்து அப்படியே உன்னைக் கட்டிப்..." அவன் தன்னை மறந்து சொல்லி கொண்டுவர, அவன் சொல்வதை மெய்மறந்து கேட்டக் கொண்டு வந்த மாலதி,
'ஏய்.. இதுதானே வேண்டாமென்கிறது, வாட்ச் யுவ வேட்ஸ்" சட்டென்று முறைத்துப் பார்த்து, அவன் சொல்ல வந்ததைச் சொல்லவிடாமல் தடுத்து இடைமறித்தாள்.
ஆனாலும் ஏற்கனவே அவனிடமிருந்து உள்வாங்கிய சொற்களால் அவள் ஏனோ வெட்கப்பட்டு நாணத்தோடு தலைகுனிந்து தனக்குள் புன்னகைத்தாள்.
புகழ்ச்சியை யார்தான் விரும்ப மாட்டார்கள். மாலதியும் சாதாரண ஆசைகள் நிறைந்த ஒரு பெண்தானே! தெருவிலே நின்கிறோம் என்பதைக் கூடக் கவனிக்காமல் கண்ணனும் அவளோடு சேர்ந்து பலமாகச் சிரித்தான்.
'மாலதி, நீ ஏன் இப்போதெல்லாம் வீணை வாசிப்பதில்லை? கமலி சொன்னாள் நீ ரொம்ப அருமையாய் வீணை வாசிப்பாயாமே..?
அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் மாலதி சிரித்து மழுப்பினாள்.
நான் கேட்டதற்குப் பதில் சொல்லலையே மாலதி..! அவன் திரும்பவும் கேட்டான்.
அம்மா இருக்கும்வரை எனக்கு வீணை பழக ஊக்கமும், ஆக்கமும் தந்தாள். நானும் ஆர்வமாய்ப் பழகினேன். அவள் இறந்தபின் நானும் அதில் அதிகம் ஆர்வம் காட்வில்லை. வீணையைத் தொட்டால் அவளின் ஞாபகம்தான் வருகிறது. அதுமட்டுமல்ல நடனத்தில் கவனம் செலுத்துவதால் இப்போதெல்லாம் வீணை வாசிக்க நேரமும் கிடைப்பதில்லை. என்றாள் மாலதி.
அம்மாவின் விருப்பம் அதுவென்றால் அதைக் கைவிட்டு விடாதே மாலதி. அம்மாவிற்காகவாவது நீ தொடரத்தான் வேண்டும். உன்னிடம் திறமை இருக்கிறது. நிச்சயமாக உன்னால் முடியும். நேரம் இருந்தால் ஒரு நாளைக்கு எனக்கு வீணை வாசித்துக் காட்டுவாயா மாலதி..? கண்ணன் ஆர்வத்தோடு அவளிடம் கேட்டான்.
சம்மதம் என்று சிரித்துக் கொண்டே தலையசைத்த மாலதி, காற்றிலே பறந்து கன்னத்தில் வழிந்த கூந்தலை ஒரு விரலால் ஒதுக்கிவிட்டாள்.
அந்த நேரம் ஸ்கூட்டரில் அவர்களைக் கடந்து சென்ற ராஜன், அவர்கள் இருவரும் தங்களை மறந்து சிரித்துக் கொண்டே செல்வதை, ஸ்கூட்டரை மெதுவாக செலுத்தியபடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான்.
'யார் அது? உன்னையே அப்படி முறைச்சுப் பார்த்திட்டுப் போறான்?" என்று கேட்டான் கண்ணன்.
மாலதி பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு நிறுத்திக் கொண்டாள்.
எனக்குத் தெரியும் ஏன் சிரிக்கிறாய் என்று..!
ஏன்..? என்றாள் மாலதி.
கண்ணன் வேண்டுமென்றே மாலதிமேல், மேலும் கீழும் பார்வையை ஓடவிட்டு ஒரு அலட்சியச் சிரிப்போடு,
ஆண்களிடம் இல்லாத ஒன்று உன்னிடம் இருக்கிறது, அதுதான் என்றான்.
மாலதி சட்டென்று குழம்பிப்போனாள். என்ன இது, இவனது பேச்சு எல்லாம் இன்று ஒரு மாதிரியாக இருக்கிறது என்று எண்ணி முகம் சிவந்தாள்.
ஏய்..! ஏன் வெட்கப்படுகிறாய்..? நான் உன்னிடம் உள்ள புன்சிரிப்பைச் சொன்னேன்! என்று சொல்லிச் சமாளித்த கண்ணன், திரும்பவும் அது யார் என்று வினாவினான் .
'அதுவா, ஒரு வகையில எங்களுக்குச் சொந்தக்காரன் என்றாள் மாலதி.
அப்படின்னா..?
என்னோட மச்சான்!" என்றாள் மாலதி.
மச்சானா..? உனக்கு ஒரு மச்சான் இருக்கிறானா?
ஆமா, என்னுடைய அத்தை மகன். பெயர் ராஜன்!
உனக்கு ஒரு அத்தை மகன் இருப்பதாய் நீ சொல்லவே இல்லையே.
இப்ப தெரிஞ்சுக்கோ, என்னுடைய முறை மாப்பிள்ளை..! என்றாள்.
ஏனோ, கண்ணனுக்குக் காரணமில்லாமல் ராஜன்மேல் எரிச்சல் வந்தது.
வீடுவரை கண்ணனோடு பேசிக் கொண்டு வந்த மாலதி தனது வீடு வந்ததும் அவனை உள்ளே வரும்படி அழைத்தாள். ஏன் இந்த விடையத்தைத் தன்னிடம் சொல்லாமல் மறைத்தாள் என்பதில் கண்ணனோ மனம் குழம்பிப் போயிருந்ததான். எனவே அவசர வேலை ஒன்று இருப்பதாகச் சொல்லி அவளது அழைப்பை நிராகரித்துவிட்டு அவசரமாய் சைக்கிளில் ஏறிச் சென்றான். சந்தர்ப்பம் கிடைத்தால் ராஜனைப் பற்றி யாரிடமாவது விசாரித்து அறியவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வாசலில் நின்றபடியே கண்ணன் சைக்கிளில் செல்வதையே வைத்த கண் வாங்காமல் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி.
என்னம்மா மாலதி உள்ளே வராமல் அப்படி அதிசயமாய்ப் பார்த்திட்டு நிற்கிறாய்..? இரும்புக்கேட் திறந்த சத்தத்தைக் கேட்டு, வெளியே எட்டிப் பார்த்த சுந்தரம் கேட்டார்.
ஒன்றுமில்லையப்பா, கண்ணன் சயிக்கிளில் போவதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். நேற்றுத்தான் குட்டிக் கண்ணனுக்கு நான் சயிக்கிள் பழக்கிவிட்து போல இருக்கிறது. அம்மாடி, அதற்கிடையில் என்னமாய் வளர்ந்திட்டான் என்று அதிசயத்தாள் மாலதி.
கண்ணன் மட்டுமல்ல, நீயும்தானம்மா வளர்ந்திட்டாய். அவன் பிக்மேட், நீ ஸ்மோல் மேட் அவவ்வளவுதான்..! என்று சொல்லி அர்த்தத்தோடு சிரித்தார் சுந்தரம்.

அத்தியாயம் - 4


ப்பாவின் வார்த்தைகளால் வெட்கப்பட்ட மாலதி, அவசரமாக ஓடிச்சென்று அறைக் கதவைச் சாத்திவிட்டு ஆடைமாற்றத் தொடங்கினாள். தற்செயலாக அலங்கார மேசைக்கண்ணாடியில் தெரிந்த தனது முழு உருவத்தையும் பார்த்தாள். ஆங்காங்கே ஆடையைமீறி எட்டிப்பார்க்கத் துடிக்கும் இயற்கை தந்த வளர்ச்சியின் அழகை முதன் முதலாய் அதிசயமாய்க் கண்ணாடியில் பார்த்ததும் பிரமித்தாள்.
‘அப்பா சொன்னதுபோல நான் வளர்ந்திட்டேனா?’ உணர்ச்சிகள் பொங்கிப்பீறிட, உட்பக்கமாய் கதவு தாழ்ப்பாள் போட்டிருக்கிறதா என்பதைக்கூடக் கவனிக்காமல், அடக்கமுடியாத ஆவல் காரணமாய் ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைந்தாள்.
‘வாவ்…! இது நானா..?’ மெல்லப் பக்கம் திரும்பிக் கண்ணாடியைப் பார்த்த அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
கொஞ்ச நாட்களாகத் தெருவில் தான் செல்லும்போதெல்லாம் சிலர் ஏன் வைத்தகண் வாங்காமல் தன்னையே உற்றுப்பார்க்கிறார்கள், அப்படி என்னதான் தன்னிடம் இருக்கிறது என்று அவளது மனதில் அடிக்கடி எழுந்தகேள்விக்கு, அவளுக்கு முன்னால் இருந்த மேசைக்கண்ணாடி ஜடமாய் இருந்தாலும், மற்றவர்களைக் கவரக்கூடியாய் உன்னிடம் ஏதோ இருக்கிறது, இப்பொழுதாவது உனக்குப் புரிகிறதா என்று இவளது விடைதெரியாக் கேள்ளவிக்குப் பதிலைச் சொல்லாமல் சொல்லிற்று.
உணர்ச்சிப் பிரவாகத்தில் மாலதி எவ்வளவு நேரம் அப்படி நின்றாளோ தெரியவில்லை. என்றுமில்லாதவாறு, அழகிய தேவதை ஒருத்தி எதிரே நின்று அதிசயமாய்த் தன்னைப் பார்க்கிறாள் என்றதில், அந்த மேசைக் கண்ணாடியும் வெட்கப்பட்டது. யாருக்கும் இதுவரை பார்க்கக் கிடைக்காத பாய்க்கியம் இன்று தனக்குக் கிடைத்து விட்டதில் அந்த மேசைக்கண்ணாடி அப்படியே கிறுங்கிப் போயிருந்தது.

கதவைத் தள்ளிக் கொண்டு ஆவேசமாய் உள்ளே வந்த கண்ணன் எங்கே அவள் என்று தேடிப்பார்த்தான்.
‘ஏய் கதவைத் தட்டிவிட்டு வரத்தெரியாதா உனக்கு?’
‘நீ செய்த வேலைக்கு கதவை வேறு தட்டீட்டு வரணுமா?’
‘இப்ப என்ன வேணும் உனக்கு?’
‘எங்கே புல்லாங்குழலை ஒளிச்சு வைச்சிருக்கிறாய்?’
‘இனிமேல் இரவிரவாய் வாசிச்சு என்னை டிஸ்ற்ரேப் பண்ணினால் தூக்கிக் குப்பையில்தான் போடுவேன், புரியுதா?’ என்று சொல்லி தலையணைக்குக்கீழ் ஒளித்து வைத்திருந்த புல்லாங்குழலை எடுத்துக் கண்ணனிடம் கொடுத்தாள் கமலினி.
நேற்று இரவு அவளைத் தூங்கவிடாமல் புல்லாங்குழல் வாசித்துத் தூக்கத்தைக் குழப்பிக் கொண்டிருந்த கோபத்தில்தான் கமலினி அவனது புல்லாங்குழலை எடுத்து ஒளித்து வைத்திருந்தாள்.
கண்ணன் தினமும் கடுமையான பயிற்சி செய்ததால், வெகுவிரைவில் திறமையாகப் புல்லாங்குழல் வாசிக்கவும், மிருதங்கம் வாசிக்கவும் பழகியிருந்தான். இசை ஞானத்தைவிட கடுமையான பயிற்சிதான் ஒருவருடைய திறமையை வெளிக்கொண்டுவர உதவும் என்பதைக் கண்ணன் அறிந்து வைத்திருந்தான். அவனுக்கு நாதமயமான விரல்கள் என்று அவனது குருவே புகழ்ந்திருந்தார். மீன்குட்டிக்கு நீந்தக் கற்றுத்தரணுமா என்று பெரியவர்கள் சொல்வார்கள். இசை ஞானம் என்பது தானாக வருகிறதா அல்லது பரம்பரை அலகில் இருக்கிறதா என்பது கண்ணனுக்குப் புரியாமலே இருந்தது. ஆனாலும் அவனது கடினமான  உழைப்பும் விடமுயற்சியும் அவனை மேலே கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியும்.
தனது மாணவிகளுக்குப் பயிற்சி கொடுப்பதில் தேவகி ரீச்சர் கடுமையக ஈடுபட்டிருந்தார். நடன அரங்கேற்த்திற்கு நாள் குறித்திருந்ததால் மாலதியும், கமலினியும் தினமும் கடுமையான பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று தேவகி டீச்சர் முடிவெடுத்திருந்தார். அவரது விருப்பமும் அதுவாகவே இருந்தது. எனவே தேவகி டீச்சர் நட்டுவாங்கம் செய்ய, கண்ணன் மிருதங்கம் வாசிக்க, தினமும் இந்த நடனப்பயிற்ச்சி தொடர்ந்தது. அரங்கேற்றத்திலன்று இசை இடைவேளையின்போது கண்ணனுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க நினைத்ததால் புல்லாங்குழல் வாசிக்கவும், மிருதங்கம் வாசிக்கவும் சிறிது நேரம் அவனுக்காக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. மாலதிக்கும் வேண்டிய உடை, அலங்காரம் போன்றவற்றிற்கு உரிய செலவெல்லாம் தேவகி டீச்சர் தானே ஏற்றுக் கொண்டார். மாலதி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், நீயும் எனக்கு ஒரு மகள்தான் என்று சொல்லி, மேற்கொண்டு பேசாமல் அவளது வாயை அடைத்துவிட்டார்.
பரதக்கலையை ஆத்மார்த்தமாக நேசிக்கும் தேவகிக்கு எப்பொழுதும் அமரகவி பாரதின் பாடல்களில் ஒரு மோகம் இருந்தது. அவரது வீரம் நிறைந்த பாடல்களை மேடை ஏற்றவேண்டும் என்ற அவளது நெடுநாள் ஆசையை இந்த அரங்கேற்றத்தில் பயன்படுத்த விரும்பினாள். அதனால் நல்ல சிலபாடல்களைத் தேர்ந்தெடுத்து அரங்கேற்றத்திலன்று ஆடுவதற்குப் பயிற்ச்சி கொடுத்தாள். தனது நெடுநாள் ஆசையை நிறைவேற்ற இந்த அரங்கேற்றத்தை தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டாள் தேவகி டீச்சர்.
சுந்தரம் மாஸ்டரை அழைத்து மாலதியின் அரங்கேற்றத்திற்கு அவர்களின் சார்பில் அழைக்க வேண்டிய உறவினர்கள், நண்பர்களை அழைக்கும்படி கேட்டிருந்தார்கள். அந்த வகையில் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த சுந்தரம் மாஸ்டரும் தனது நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர் என்று சிலருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.
வாசலில் கும்பம்வைத்து குத்துவிளக்கேற்றிக் கலாச்சாரம் பிரதிபலிக்க, இளமை சிரித்தமுகத்தோடு வரவேற்க, பட்டுப்புடவைகளும், வைரத்தோடுகளும் கண்நிறைந்தன. அரங்கேற்றத்திற்கு நடனஆசிரியைகள், மாணவிகள், பிரமுகர்கள் என்று பலதரப் பட்டவர்களும் வந்திருந்ததால், அரங்கம் நிரம்பி வழிந்து கலகலப்பாய் இருந்தது. 
அரங்கத்திரை விலகியதும், பார்வையாளர்களின் ஆரவாரமான கரவோசையோடு கமலினியும் மாலதியும் குருவணக்கம் செய்து, குடும்ப அங்கத்தவர்களின் ஆசீர்வாதம் பெற்று நடனமாடத் தயாரானார்கள். நெற்றிச்சுட்டியும், உதட்டிற்குச் சாயமும், கண்ணுக்கு மையும், கன்னம் சிவக்கப் பவுடரும் போட்டு ஒரே அலங்காரமாய் இருவரும் மேடையில் தயாராக நின்றார்கள்.
முதலில் நாட்டை ராகத்தில், ஆதிதாளத்தில் புஸ்பாஞ்சலி தொடங்கியது. தேவலோகத்துக் கன்னியர், விநாயகர் பாதம் பணிந்து, மேடையில் மலர் தூவி வணங்குவது போன்ற அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை அப்படியே கட்டிப் போட்டது. அதைத் தொடர்ந்து கொளத்துவம், அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம் என்று ஒவ்வொன்றாகத் தொடர்ந்தது. இராகமாலிகையில் சப்தம் ஆரம்பித்த போது மேடையில் தோன்றிய மாலதியின் அசாத்தியமான சுறுசுறுப்பு, சம்பிரதாயம் மீறாத அபிநயம் எல்லாமே எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டன. நேரம் போவதே தெரியாமல் பார்வையாளர்கள் நிகழ்ச்சியோடு ஒன்றிப் போயிருந்தனர்.
சிறிய இடைவேளையின் போதும், அவர்கள் உடை மாற்றியபோதும், கண்ணனுக்கு புல்லாங்குழல் வாசிக்கவும், மிருதங்கம் வாசிக்கவும் சந்தர்பம் கிடைத்தது. பட்டு வேட்டி, குர்த்தாவோடு கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி; அணிந்திருந்த கண்ணன் தனது திறமை முழுவதையும் சபையோருக்கு முன்னால் வெளிக்காட்டினான். சுங்கீதம், பரதநாட்டியம் கற்கும் மாணவ, மாணவிகளில் இளம் பெண்களே அங்கே அதிகம் வந்திருந்ததால், கண்ணனுக்கு அவ்வப்போது ஓ..என்ற கூச்சலோடு, அவை நிறைந்த கரகோசம் கிடைத்தது. சபையில் இருந்து கேட்ட ‘வன்ஸ்மோர் பிளீஸ்..!’ என்ற இனிய குரல்கள் அவனது திறமையான வாசிப்பிற்குக் கட்டியம் கூறி நின்றன. தன்னைப் பாராட்டிய சபையோருக்கு வணக்கம் கூறிவிட்டு நிமிர்ந்த கண்ணனின் கண்களில் முன்வரிசையில் அமர்க்களமாய் அமர்ந்திருந்த அவன்தான் தட்டுப்பட்டான். இவனா? இவன் எப்படி இங்கே வந்தான்? இவனை யார் அழைத்தார்கள்? அதற்கான விடைகாண கண்ணனின் மனசு துடித்தது.



 அத்தியாயம் - 5


கண்ணன் தடுமாறிப் போனதற்குக் காரணமிருந்தது, முன்வரிசையில் வெறித்த பார்வையோடு உட்கார்ந்து இருந்தது வேறுயாருமல்ல, அன்று அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டு சென்ற, தனது முறை மாப்பிள்ளை என்று மாலதி சொன்ன ராஜன்தான்! யாரைப்பற்றிய விபரம் அறிய வேண்டும் என்ற ஆவலோடு கண்ணன் இருந்தானோ அதே ராஜன்தான்!
சிறிய இடைவேளையின்பின் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பார்வையாளர்கள் மீண்டும் வந்தமர்ந்ததும் தன்யாசி ராகத்தில் ஆதி தாளத்தில் வர்ணம் தொடங்கியது. இது நடனமணிகளின் திறமையை எடுத்துக் காட்டும் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது.  கோபியர் கண்ணன் மேல் காதல் கொண்டு தமது தாபத்தினை உணர்த்துவதாக அமைந்துள்ள அந்தப் பாடலுக்கு கமலினியும், மாலதியும் மிகவும் சிறப்பாக அபிநயத்தோடு ஆடிப் பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றனர். மாலதியின் முகபாவமும், விழிகளின் வீச்சும் எல்லோரையும் கிறங்க வைத்தது.
மேடையின் பக்கத்தில் அமர்ந்திருந்த கண்ணனோ மெய்மறந்து உணர்வு பூர்வமாய் ஆட்டத்தை மட்டுமல்ல, மாலதியின் அழகான, எடுப்பான தோற்றத்தையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘இது எங்க மாலதியா’ என்று அவளது ஒவ்வொரு அசைவும் அவனது மனசுக்குள் புகுந்து அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. மாலதிக்கருகே தனது அக்கா கமலினியும் ஆடுகிறாள் என்பதைக்கூட அவன் மறந்தே போனான். வர்ணத்தைத் தொடர்ந்து கீர்த்தனம் இடம் பெற்றபோது, கானடா ராகத்தில் அலைபாயுதே கண்ணா என்றபாடலுக்கு இருவரும் நடனமாடினர். இராகமாலிகையில் அமைந்த நவரசத்தில் கருணையே உருவான இராமபிரானின் நவரசங்களை முகபாவத்தின் மூலம் பார்வையாளருக்கு மிகவும் தெளிவாக இருவரும் விளக்கிக் காட்டினர். அதைத் தொடர்ந்து இராகமாலிகையில் பதம் இடம் பெற்றபோது கமலினி களைத்தே போயிருந்தாள். சின்னஞ்சிறு கிளியே என்ற பாரதியின் பாடலுக்கு இருவரும் நடனமாடினர். பாரதியின் பாடல்கள் எப்பொழுதும் தனித்துவமானவை என்பதாலும், உட்கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டு அபிநயம் செய்ததாலும் பார்வையாளர்களுக்கும் பிடித்துப்போனதால் பாடலோடு அப்படியே ஒன்றிப் போயிருந்தனர். தொடர்ந்து தில்லானாவும், நாகமயில் நர்த்தனமும் மங்களத்தோடு முடிவடைந்தபோது மண்டபம் அமைதியாய்க் கிறங்கிப்போய்க் கிடந்தது.
நிகழ்ச்சி நிறைவில் இறைவனுக்கும், குருவிற்கும், சபையோருக்கும் மங்களம்கூறி ஆசி வேண்டி நின்றபோது கமலினியும், மாலதியும் மூச்சிரைத்து நின்றாலும் எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி அவர்களின் புன்னகையில் தெரிந்தது. தேவகி டீச்சரிடம் ஆசி வேண்டியபோது மாலதியின் கண்கள் கலங்கின. இதற்கெல்லாம் காரணம் தேவகி டீச்சர் தந்த அசையாத, அழுத்தமான அஸ்திவாரம்தான் என்பது அவளுக்குத் தெரியும். ஆசீர்வதித்த தேவகியின் முகம் பெருமையில் பூரித்துப்போயிருக்க, சபையோரும் எழுந்து நின்று கரகோஷம் செய்து அவர்களை ஆசீர்வதித்தனர்.
நிகழ்ச்சி முடிந்து திரை மூடியதும், மாலதி முதல் வேலையாக நேரே கண்ணனிடம் ஓடி வந்தாள்.
'எங்க ஆட்டம் எப்படி இருந்திச்சு கண்ணா?’
"நானே எதிர்பார்க்கவில்லை, எங்க மாலதியா என்று எனக்கே சந்தேகம் வந்திடிச்சு. அசத்திட்டாய் மாலதி! என்றான்.
‘மேடையில் நான் ஏதாவது தப்புப் பண்ணினேனா..?"
‘ரொம்ப நல்லாய் ஆடினது மட்டுமல்ல, இந்த டிரஸ்ஸிலே நீ அற்புதமாய் இருக்கிறாய் மாலதி..!’ என்றான் கண்ணன்.
‘அப்படியா தாங்ஸ் கண்ணா, நீயும்தான் ஸ்மாட்டாய் இருக்கிறாய்! ரொம்ப நல்லாய் வாசித்தாய்!’
‘தாங்ஸ் மாலதி..!’
என்னுடைய எந்த ஆட்டம் நல்லாயிருந்திச்சு..?'
'குறை ஒன்றுமில்லை, எல்லாமே நல்லாயிருந்திச்சு..!"
'அது எனக்குத் தெரியும், ஆனாலும் ஏதாவது உனக்குப் பிடிச்சிருக்குமே..?'
'பிடிச்சிருக்கிறதை எல்லாம் சொல்ல முடியுமா?’
‘பரவாயில்லை, சொல்லு கண்ணா, நான் கேட்கிறேன்.’
‘வேண்டாம், மனதில் உள்ளதை அப்படியே சொன்னால் நீ என்னிடம் கோவிப்பாய்..!'
'இல்லை, நான் கோவிக்கமாட்டேன். பிளீஸ் சொல்லேன்..!"
'சரி சொல்றேன்... எனக்குப் பிடித்தது வர்ணம் தான்!’
‘வர்ணமா? அப்படி என்ன அதிலே புதுமையாய் இருந்திச்சு, ஏன் பிடிச்சது என்று சொல்லமாட்டியா?’
‘நீ ஆடும்போது காட்டிய உன்னுடைய முகபாவம் அப்படியே என் மனதில் பதிந்து போச்சு.." என்றான்.
‘எப்போ?’ என்றாள் மாலதி ஆவலுடன்.
‘கண்ணாண்ணு பாடல் வரிகள் இழுக்கும்போது, அப்படியே ஒரு பாவம் காட்டினாயே, அப்போ..!’
கண்ணன்மேல் தாபம் கொண்டு பாடும் பாடல் என்பதால், மாலதியின் முகம் வெட்கத்தால் பட்டென்று சிவக்க, ‘யூ ஸட் அப்..!’ என்று செல்லமாக அவன் தலையில் தட்டிவிட்டு எழுந்து உடை மாற்றும் அறையை நோக்கி ஓடிச் சென்றாள்.
உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவளை அப்பா சுந்தரம் இடைமறித்தார்.
‘என்னப்பா..?’ என்றாள் மாலதி.
‘என்னோட வாம்மா, உனக்கு ஒருவரை அறிமுகம் செய்யணும்.’ என்று சொல்லி அரங்க வாசலுக்கு அவளை அழைத்துச் சென்றார்.
‘இது யார் என்று தெரியுதாம்மா? இதுதான் உன்னோட அத்தை! என்னுடைய அக்கா! எனக்கொரு அக்கா இருக்கிறா என்று அடிக்கடி சொல்லுவேனே, அவங்கதான்!’  நீண்டகாலமாக அவர்களுடைய குடும்ப உறவு தொடர்பற்றுப் போயிருந்ததால், இதுதான் அத்தை என்று மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
மாலதிக்கு ஏற்கனவே அத்தையைத் தெரிந்திருந்தாலும், நீண்டகாலமாகத் தொடர்பு அற்றுப்போய் இருந்ததால், அப்பா அறிமுகம் செய்தபோது, மனம் கோணாமல் அத்தையைக் கைகூப்பி வணங்கினாள்.
இது யார் தெரியுமா? அத்தைக்கு அருகே நின்ற இளைஞனைக் காட்டிக்கேட்டார்.
மாலதி ஏற்கனவே அவனைப் பலதடவைகள் கண்டிருந்தாலும், அவனைப்பற்றித் தப்பான பல கதைகள் கேள்விப்பட்டிருந்ததால், அவனைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. மாலதி வேண்டும் என்றே தன்னைத் தெரியாதது போல நடிக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
‘இதுதான் என்னோட அக்கா மகன். உன்னோட மச்சான். பெயர் ராஜன்!, இது என்னுடைய ஒரே மகள் மாலதி!’ என்று அறிமுகப் படுத்தினார் சுந்தரம்.
‘உன்னுடைய நடனத்தைப் பார்த்தேன், நடனமாடிய இரண்டு பேரிலும், உன்னுடைய ஆட்டம், சுப்பர்..!’ இரண்டு விரல்களை ஒன்றாய்ச் சேர்த்து உயர்த்திக் காட்டிப் புகழ்ந்து வாழ்த்தி விட்டு, அவளோடு கை குலுக்க வலது கையை நீட்டினான் ராஜன்.
மாலதியோ அதைச் சற்றும் எதிர்பார்க்காததால், அந்த இக்கட்டான நிலையைத் தவிர்த்து, அவனைப் பார்த்து புன்முறுவலோடு நன்றி சொல்லி ஒரு கும்பிடு போட்டாள்.
என்னுடைய கையைத் தொடுவதற்கு உனக்குத் தயக்கமா? என்னை யாரெண்டு நினைச்சுக் கொண்டாய்? மனதுக்குள் குமைந்தான் ராஜன்.
‘அப்பா ரீச்சர் கூப்பிடுறா, நான் அப்புறம் சந்திக்கிறேனே’ என்று அவர்களைப் பார்த்து மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்தாள் மாலதி.
‘நீ என்ன பெரிய பத்தினி வேடமா போடுகிறாய்..? என்னோட பேச உனக்குக் கசக்கிறதா? இருக்கட்டும், சந்தர்ப்பம் வரும்போது உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்.’ ஏமாற்றம் தாங்க முடியாமல் மனதுக்குள் கறுவிக் கொண்டான் ராஜன். மனதுக்குள் கறுவிக் கொண்டது மட்டுமல்ல, சந்தர்ப்பத்திற்காகவும் காத்திருந்தான்.
அன்று கண்ணன் நல்ல சந்தோசமாய் இருந்தான். அரங்கேற்றம் நன்றாக முடிந்ததால் சில நாட்களுக்குப் பயிற்ச்சி எடுப்பதை கமலினி நிறுத்தியிருந்தாள். அரங்கேற்றம் என்பது நடனப் பயிற்சியின் தொடக்கமே அல்லாமல் முடிவு அல்ல என்று தேவகி, கமலினியைக் கண்டித்திருந்தாள். மாலதி கணிதப் பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருந்தபோது, தேவகியும், கணவர் கனகேஸ்வரனும் கமலியை அழைத்துக் கொண்டு அவசர வேலை நிமிர்த்தம் வெளியே போகவேண்டிவந்ததால், கண்ணனுக்கு மட்டுமே தனியாகக் கணிதபாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிவந்தது. ஆரம்பத்தில் மாலதி சொல்லிக் கொடுத்த பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த கண்ணன், சிறிது நேரம் செல்ல மனதை அலைய விட்டுக் கவனக் குறைவாக இருந்தான். கண்ணன் பாடத்தில் கவனம் செலுத்தவில்லை என்பதை மாலதி அவதானித்தாள்.
என்ன கண்ணா, நான் என்பாட்டிற்குச் சொல்லிக் கொண்டே போகிறேன், உன்கவனம் இங்கே இல்லையே..! என்றாள் மாலதி.
கண்ணன் திடுக்கிட்டு விழித்தவனாய, தன்னைச் சமாளித்துக் கொண்டான்.
ஏன்..? என்னாச்சு கண்ணா..? என்றாள் மாலதி.
‘தெரியலை..! மனசு ஒரே நிலையாய் இல்லை, அதனாலே பாடத்தில கவனம் செலுத்த முடியவில்லை’ என்றான் கண்ணன்.
திடீரென பாடத்தில கவனம் செலுத்தமுடியாமல் அப்படி என்ன யோசனை..? ஓரக் கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டே வேடிக்கையாய்க் கேட்டாள் மாலதி.
கண்ணன் ஒன்றுமில்லை என்பதுபோல தலையை மட்டும் அசைத்தான்.
புரியுது! பாடத்தில் கவனம் செலுத்த விடாமல் உன்னை யாரோ டிஸ்ரேப் பண்ணத் தொடங்கி விட்டாங்கபோல இருக்கு, அப்படித்தானே..?
மாலதி அப்படிக் கேட்டதும் கண்ணனின் முகம் குப்பென்று சிவந்தது. அவள் கேட்தற்குப் நேரடியாகப் பதில் சொல்லாமல் அவளையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென்று தலையைக் குனிந்து கொண்டான்.
‘என்ன கண்ணா என்னாச்சு..?’
தலை குனிந்தபடியே ஒன்றுமில்லை என்று கண்ணன் தலை அசைத்தான்.
தன் முகத்தைப் பார்த்துச் சொல்ல அவன் தயங்குகிறான் என்பதில் இருந்து அவனது மனதில் ஏதோ ஒளிந்திருக்கிறது, சில பதுமவயதுப் பையன்கள் இளம் பெண்களைப் பார்த்துப் பேச வெட்கப்படுவார்களே அது போலவே கண்ணன் நடந்து கொண்டதால், ஒருவேளை அவனது வயதுக்கோளாறு இதற்குக் காரணமாக இருக்குமோ என்று மாலதி நினைத்துக் கொண்டாள்.
அரங்கேற்றத்தின்போது அவனது வேணுகான இசையைக் கேட்ட பல இளம் பெண்கள் மகுடி கேட்ட நாகம்போல, அப்படியே மயங்கிப்போய் இருந்தார்கள் என்பதும் அவர்களின் விழிகள் அவனைத் தேடியலைந்தன என்பது அவளுக்குத் தெரியும். ஆரங்கேற்றம் முடிந்தபோது மேடையின் பின் பக்கத்தில் கூட்டமாக அவர்கள் வந்து வெட்கப்பட்டுத் தயங்கிக் கொண்டு நின்றபோதே மாலதி அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டாள். பதுமவயது, எதிர்ப்பாலைத் தேடி அலைவதில் தவறில்லை. அது இயற்கையானதுதான், அந்த வயதில் ஆரோக்கியமான எவரும் அதைத்தான் செய்வார்கள். அது அந்த வயதுக்குரிய தேடல்தான், சிலர் ஒளிவு மறைவு இன்றிப் பகிரங்கமாகவே செய்வார்கள், வேறுசிலர் எதுவுமே தெரியாததுபோல அமசடக்காக இருந்து கொண்டே செய்வார்கள். ஆனால் அந்தப் பொறிக்குள் கண்ணன் மாட்டிவிடுவானோ என்று அப்போதே மாலதி  பயந்தாள். ஏனென்றால் படிக்கிற பருவத்தில், காதல் கீதல் என்று மனசை அலையவிடாமல் படிப்பிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்று அவளது அப்பா அடிக்கடி அவளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார். கண்ணன் மனதில் யார் இருக்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியாததால், இப்பொழுது கண்ணனுக்குத் தான் புத்திமதி சொல்லவேண்டிய கட்டாயம் வருமோ என அவள் நினைத்தாள்.



அத்தியாயம் - 6


தேவகியின் குடும்பத்தின்மேல் மாலதி உண்மையான பாசம் வைத்திருந்ததால், கண்ணனின் படிப்பில், அவனது எதிர்காலத்தில் அதிக அக்கறை செலுத்தினாள். அவனது மனதுக்குள் புகுந்து கொண்டவள் யார் என்பதை அவனிடமிருந்து அறிந்து கொண்டால், அவனுக்கு ஓரளவு அறிவுரை சொல்லலாம் என்று நினைத்தாள். எனவே கண்ணனிடம் இருந்து உண்மையை வரவழைக்க,  அவனது மனது நோகாமல் மெதுவாகக் கதைகொடுத்துப் பார்த்தாள்.
‘என்ன கண்ணா யோசிக்கிறாய்?’
‘ஒன்றுமில்லை, நான் கேட்டால் மறுக்காமல் செய்வியா?’
‘என்ன என்று சொல்லேன், உனக்கில்லாதா கண்ணா?’
ஒரு நாள் நேரம் கிடைக்கும்போது எனக்கு வீணை வாசித்துக் காட்டுவதாகச் சொன்னாயே, ஞாபகம் இருக்கா மாலு?
வீணையா, ஆமா ஞாபகம் இருக்கு, அதுக்கென்ன இப்போ?
வீட்டிலேதான் ஒருவரும் இல்லையே, இப்ப வாசிச்சுக் காட்டேன்!
என்னவோ ஏதோ என்று பயந்து போயிருந்த மாலதி,
அவ்வளவுதானா? வாசிச்சிட்டாப் போச்சு..! என்றாள்.
கண்ணன் உற்சாகமாய் ஓடிச்சென்று கமலியின் அறையில் இருந்த வீணையை எடுத்து, ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருவதுபோல, கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான். இனித் தப்பமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட மாலதி, அவன் விருப்பப்படியே ஹாலில் உள்ள கம்பளத்தில் அமர்ந்து கண்ணனுக்கு விருப்பமாக பாடல்களை வீணையில் மீட்டினாள்.
அலை பாயுதே கண்ணா..! புல்லாங்குழலில் அன்று கண்ணன் எந்தப் பாட்டைப் வாசித்தானோ, எந்தப் பாடலை அவள் மெய்மறந்து கேட்டுவிட்டு, அற்புதம் என்று அவனைப் புகழ்ந்தாளோ அதே அலை பாயுதே கண்ணா..! இன்று வீணை இசையில் இவள் வாசித்துக் காட்டினாள்.
அவள் பாரதியின் கண்ணம்மாவாக இருக்கவேண்டும், அல்லது இவனுக்குப் பாரதி பாடல்களில் அதிக மோகம் உண்டு என்பதை அவள் தெரிந்து வைத்திருந்திருக்கவேண்டும், அந்தப் பாடலைத் தொடர்ந்து பாரதி பாடல்களை வீணையில் வாசித்தாள்.
கண்ணன் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். குளுமையாய், இனிமையாய் அவனுக்குப் பிடித்தமான பாடல்களைத் தெரிந்தெடுத்துப் பாலோடு தேன் கலந்து கொடுத்தது போல..! கலைமகளை வண்ணவண்ண உருவங்களில் பார்த்திருக்கிறான், ஆனால் இன்று இங்கே அவளையே நேரே பார்ப்பதுபோல.. இல்லை இவள் மாலதி, எப்படி இவளால் இப்படி ஒரு அதிசயத்தை வீணையில் சாதிக்க முடிகிறது? ஒரு வீணையே வீணை மீட்பது போல.. அவள் மெய்மறந்து மீட்டிக் கொண்டிருந்தாள்.
மந்திரக்கோலால் தொட்டதுபோல, ஒரு மீட்டில் மூன்றாவது ஸ்தாயியிக்கு அவள் தாவியபோது கண்ணன் தன்னைமறந்து பரவசமடைந்தான். தாளக்கம்பியை அவள் விரல்களால் தொடுகின்றாளா, இல்லை மயிலிறகால் தொடுகிறாளா என்பதில்கூட அப்போது அவனுக்குச் சந்தேகமிருந்தது. ஒரு தடவை மீட்டிவிட்டு, அந்த ஒலி அலைகளின் மீதியில் இருந்தே சங்கதிகளை அவள் எடுத்தபோது கண்ணனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்து, அப்படியே உறைந்தன.
இத்தனை திறமைகளையும் தனக்குள் வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் ஒரு மெல்லிய புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு, எப்படி ஒரு சாதாரண பெண்ணாய் இவளால் இருக்க முடிகிறது என்று வியப்படைந்த கண்ணனின் மனதுக்குள் பரவசம் ஊற்றெடுக்க, அந்த நினைவில் தன்னையே மறந்தான்.
மாலதியும் கமலினியும் நல்ல சினேகிதிகளாக இருந்தாலும், பல விடயங்களில் அவர்களுக்குள் முரன்பாடுகளும் இருந்தன. கமலினிக்கு ஆங்கில மோகம் அதிகம், மாலதியோ தமிழை நேசித்தாள். உடை அலங்காரத்தில் மேலைநாட்டு உடைகளையே கமலினி அதிகம் விரும்பினாள், மாலதியோ தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை பேணிக் காப்பதில் கவனம் செலுத்தினாள். வாழ்ந்தால் அமெரிக்காவில்தான் வாழவேண்டும் என்ற கனவோடு கமலினி இருந்தாள், ஓலைக் குடிசை என்றாலும் குடும்பத்தோடு மனம் நிறைந்த வாழ்வு வாழ்ந்தால் போதும் என்ற திருப்தியோடு இருந்தாள் மாலதி. சிறு வயதில் இருந்தே இப்படியான கொள்கைப் பிடிப்புக்களால் தானோ என்னவோ கமலினிக்கும், கண்ணனுக்கும் ஒத்துப் போகவில்லை. ஆனால் மாலதியின் வாழ்க்கை முறையும், கண்ணனின் கொள்கைகளும் அனேகமாக ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகக்கூடியதாக இருந்தன. கமலினி மூத்தமகள் என்பதாலும், செல்லமாக வளர்ந்தாலும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அவளிடம் குறைவாகவே இருந்தது. ஆனால் மாலதி எதையுமே விட்டுக் கொடுத்துச் சமாளிக்கக் கூடியவளாக இருந்ததால், கமலினிக்கும், அவளுக்கும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைச் சுமூகமாக அவளால் தீர்க்கமுடிந்தது. அதே சமயம் அனேகமாக கண்ணனின் கருத்துக்கள் மாலதியுடன் கருத்துக்களுடன் ஒத்துப் போனதால் அவளுக்கு, தனக்குச் சார்பாகப்பேச அந்தவீட்டில் ஒருத்தன் இருக்கிறான் என்ற ஒருவித ஆறுதலும் கிடைத்தது.
மாலதிக்கும், கண்ணனுக்கும் கர்நாடக இசையில் மோகம் இருந்ததால் இருவரும் அதைப்பற்றி தேவகியுடன் அதிக நேரம் விவாதிப்பார்கள். கமலினி அங்கே இருந்தாலும் அவளுடைய ஆர்வம் எல்லாம் மேலைநாட்டு இசையில் இருந்ததால் அவர்களது கலந்துரையாடலில் அதிகம் ஈடுபாடு காட்டாமலே இருந்தாள். மகாகவி பாரதியின் பாடல்களில் தேவகி கொண்டிருந்த மோகம், படிப்படியாக மாலதியையும், கண்ணனையும் தொற்றிக் கொண்டது. கூடியவரை அவருடைய பாடல்களை மேடைகளில் அறிமுகம் செய்வேண்டும் என்பதில் அவர்கள் அதிக கவனம் செலுத்தினர். எனவே நிகழ்ச்சிகளின்போது புல்லாங்குழல் இசையில், வீணை இசையில், நடனத்தில் பாரதிபாடல்களையும் கூடியவரை சேர்த்துக் கொண்டனர். அனேகமாக நிகழ்ச்சிகளில் கூடியவரை தமிழ் பாடல்களே இடம் பெற்றதால் பார்வையாளர்களும் அந்தப் பாடல்களோடு ஒன்றிப் போயிருந்தது மட்டுமல்ல அப்படியான நிகழ்ச்சிகளை அடிக்கடி வரவேற்றனர்.
மாலதியும், கமலினியும் பட்டப்படிப்பு முடித்திருந்தனர். அடுத்து என்ன செய்வது, மேலே படிப்பைத் தொடர்வதா இல்லையா என்று அவர்கள் முடிவு எடுக்குமுன்பே கமலிக்குப் பல இடங்களில் இருந்தும் வரன்கள் வரத்தொடங்கின. வரன்கள் வந்தாலும் கமலி ஏதாவது காரணம் சொல்லி அவற்றை மறுத்துக் கொண்டிருந்தாள். வெளிநாட்டு வரன்களும் சில வந்தன. ஒன்று லண்டன் மாப்பிள்ளை. சாதகம் பொருந்தவில்லை என்று சொல்லி, அமெரிக்கக் கனவோடு இருந்ததால் கமலினி அதையும் தட்டிக் கழித்து விட்டாள். வேறு ஒரு வரன் சின்சினாட்டியில் இருந்து வந்தது. அமெரிக்க வரன்கள் பொதுவாக கம்பியூட்டர் இஞ்சின்யர்களாகத்தான் இருப்பார்கள். இங்கே மாப்பிள்ளை வித்தியாசமாய் ஒரு கெமிக்கல் இஞ்சினியராக இருந்தார். இரசாயன உற்பத்தி நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்தார். ஒருவரின் வருமானமே குடும்பம் நடத்தப் போதுமானதாக இருந்தது. இன்னும் அமெரிக்கப் பிரஜை ஆகவவில்லை, ஆனால் கிறீன் கார்ட் வைத்திருந்தார். மாப்பிளைக்கு ஒரு சகோதரி. அவரும் கனடாவில் திருமணமாகி கனடியப் பிரஜையாகிவிட்டார். ஆகவே திருமணம் செய்து கொண்டு, மணப்பெண்ணான கமலியை அமெரிக்கா அழைப்பதில் அவர்களுக்கு எந்தத் தடங்கலும் இருக்கவில்லை.
மாப்பிள்ளை பார்க்க விரும்புவதாச் சொல்லி தரகர் பெண்ணின் புகைப்படத்தைக் கேட்டபோது கமலியின் படம் ஒன்றைக் கொடுத்திருந்தார்கள். ஓரளவு எல்லாம் சரிவந்தபின் மாப்பிள்ளை இணையத் தளத்திற்குள்ளால் பேஸ்புக் மூலம் தனது குடும்பப்படத்தையும், கறுப்புநிற ஜகுவார் காருக்கு முன்னால் நின்று நண்பர்களோடு சேர்ந்து எடுத்த படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தார். அதற்குப் பதிலாக கமலியும் தனது குடும்பப்படத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தாள். கணனி யுகமாகையால் எல்லாமே விரைவாக நடந்தன. அந்தப் படத்திலே மாலதியும் அவர்களோடு சேர்ந்து அவர்களது குடும்பப்படத்தில் நின்றிருந்தாள். மாப்பிளையின் நண்பர்கள் கவனமெல்லாம் யார் அந்த அழகான பெண் என்று அறிவதில் இருந்தது. மாப்பிள்ளையும் அதை வேடிக்கையாகக் கமலினிக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கவே, கமலியும் அதை மாலதியிடம் குறிப்பிட்டாள்.
'ஏன் அந்தப் படத்தை அனுப்பினாய்?" என்று மாலதி, கமலினியிடம் கோபித்துக் கொண்டாள்.  
'நீயும் அமெரிக்கா வந்தால் எனக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்கும் தெரியுமா?"என்று கமலினி சமாதானம் சொன்னாள்.
'அப்பாவை இப்படி அம்பேல் என்று தனியே விட்டுவிட்டுப் போகமுடியுமா? எனக்கெல்லாம் அமெரிக்கக் கனவு இல்லை" என்று மறுத்தாள் மாலதி.
'எல்லாம் சொல்லிக் கொண்டா..? அவரவர் தலை எழுத்து, முயற்ச்சி செய்துதான் பார்ப்போமே! நான் அமெரிக்கா போனதும் உனக்கு அங்கே பொருத்தமான ஒரு வரன் பார்ப்பதுதான் எனது முதல் வேலை" என்று விட்டுக் கொடாமல் பதில் சொன்னாள் கமலி.
மாப்பிளைக்கு விடுமுறை கிடைத்தபோது பெண்பார்க்க வந்தார்கள். கமலினி தன்னை அலங்கரிப்பதில் மிகவும் கவனமாக இருந்தாள். தேவகியோடு சேர்ந்து மாலதிதான் எல்லா வேலைகளையும் தானே முன்நின்று செய்தாள். சம்பிரதாயப்படி தாம்பூலத்தட்டுடன் மாப்பிளை வீட்டார் வந்திருந்தனர். தேவகி பெண்ணை அழைத்து வந்தபோது மாலதி ஏதோ சாட்டுச் சொல்லிவிட்டு, வெளியே வராமல் சமையல் அறையிலேயே தங்கிவிட்டாள். கமலினி அமைதியாக நடந்து வந்து எல்லோரையும் வணங்கிவிட்டு உள்ளே சென்றாள். அப்பா காபி கொண்டு வரும்படி அழைக்கவே, காபி பலகாரத் தட்டுடன் திரும்பவந்து எல்லோருக்கும் கொடுத்தவிட்டு, மாப்பிளையை ஓரக்கண்ணால் பார்த்து ஒரு திருப்திப் புன்சிரிப்போடு மீண்டும் உள்ளே சென்றாள். பெண்ணுக்கும், மாப்பிளைக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டதனால் பெண்பார்க்கும் படலமெல்லாம் சுமுகமாக முடிவடைந்தது. கலியாணத் தேதி குறிப்பதற்கு மாப்பிளை வீட்டார் சில நாட்கள் அவகாசம் கேட்டிருந்தனர். மாப்பிளைக்கு விடுமுறை எடுக்கக் கூடிய நாள் பார்த்து மூன்று மாதங்களின் பின் கமலினியின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு கமலினியின் கணவர் மட்டும் அமெரிக்கா சென்றிருந்தார். இரண்டு மாதங்கள் கழித்தே கமலியியால் செல்லமுடிந்தது. பிரிவு வரப்போகிறது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, இந்த இரண்டு மாதங்களிலும் கண்ணனும், கமலினியும் மிகவும் பாசத்தோடு விட்டுக்கொடுத்துப் பழகினார்கள். இதுவரை இல்லாத பாசத்தோடு சகோதரங்கள் பழகியதைப் பார்த்ததும் தேவகி ஆச்சரியப்பட்டாள். விமான நிலையத்தில் கமலினி விடைபெற்றபோது, கமலினியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு கண்ணன் விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டான். இதைச் சற்றுமே எதிர்பாராத கமலினியும் உடைந்து போய்விட்டாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவகியும், கண் கலங்கி அவர்களைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிடவே, தாயும் பிள்ளைகளும் கட்டிப்பிடித்து அழுவதைப் பார்த்த கனகேஸ்வரன்தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, கமலினியை உள்ளே வரும்படி அழைக்கிறார்கள் என்று அனுப்பி வைத்தார். இதை எல்லாம் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த மாலதியும் கண்கலங்கினாள்.
பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது இதுநாள்வரை கல்லுப்போல இறுகிப் போயிருந்த இருவரது மனமும், பிரிவு என்று வந்தும் எப்படி இளகிவிட்டது என்று நினைத்தாள். பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த மாலதி, 'இதுதான் பாசம் என்பதா..!' என்று எண்ணித் தனக்குள் வியந்தாள். 

No comments:

Post a Comment

THANK YOU