தமிழ்நாட்டில் தி.மு.கழகத்தின் அசுர வளர்ச்சி காமராஜருக்கு கவலை அளித்தது. 1957 சட்டசபைத் தேர்தலில் 15 இடங்களில் வென்ற தி.மு.கழகம், 1962 தேர்தலில் 50 இடங்களில் வெற்றி பெற்றது. வடநாட்டில் நடந்த சில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. அகில இந்திய ரீதியில் காங்கிரசின் செல்வாக்கு குறைந்தது.
மூத்த தலைவர்கள் மந்திரி பதவியை விட்டு விலகி, கட்சிப் பணியில் ஈடுபட்டால்தான் காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். தனது கருத்தைப் பிரதமர் நேருவிடம் தெரிவித்தார். பல முறை அவர்கள் இதுபற்றி ஆலோசனை நடத்தினர். முடிவில், காமராஜரின் திட்டத்தை நேரு ஏற்றார்.
இத்திட்டம், 1963 ஆகஸ்டு 9 ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முன் வைக்கப்பட்டது. அப்போது நேருவும் ராஜினாமா செய்ய முன்வந்தார். காமராஜர் உள்பட அனைவரும் அதை எதிர்த்தனர். "நேரு விலகினால் இந்திய அரசே ஆட்டம் கண்டுவிடும். நேரு விலகுவதாக இருந்தால், என் திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்" என்றார், காமராஜர்.
எனவே ராஜினாமா செய்யும் எண்ணத்தை நேரு கைவிட்டார். எல்லா மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் முதல் மந்திரிகளும், தங்கள் ராஜினாமாக் கடிதங்களை நேருவிடம் அளித்தனர். யார் யார் கட்சிப்பணிக்கு போகவேண்டும் என்று முடிவு செய்யும் பொறுப்பு நேருவிடமே விடப்பட்டது.
காமராஜர் (தமிழ்நாடு), பிஜீ பட்நாயக் (ஒரிசா), பக்ஷிகுலாம் முகமது (காஷ்மீர்), சி.பி.குப்தா (உத்தரபிரதேசம்), பினோதானந்தா (பீகார்), பி.ஏ.மண்டலாய் (மத்தியப் பிரதேசம்) ஆகிய 6 முதல் மந்திரிகளும், மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி, எஸ்.கே.பட்டீல், ஜெகஜீவன்ராம், பி.கோபால் ரெட்டி, கே.எல்.ஸ்ரீமாலி ஆகிய 6 மத்திய மந்திரிகளும் மந்திரி பதவியை துறந்து, கட்சிப்பணிக்கு செல்வார்கள் என்று நேரு அறிவித்தார்.
(மொரார்ஜி தேசாயையும், மற்றும் சிலரையும் பதவியில் இருந்து விலக்கவே காமராஜர் திட்டம் வகுக்கப்பட்டது என்று சிலர் அப்போது கூறினார்கள்) 1963 அக்டோபர் 2 ந்தேதி (காந்தி பிறந்த நாள்) தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்து காமராஜர் விலகினார். புதிய முதல் அமைச்சராக பக்த வச்சலம் பதவி ஏற்றார்.
(முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகிய காமராஜர், பிரதமர் நேருவின் விருப்பப்படி 1964 ஜனவரியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்றார். 1964 மே 25 ந்தேதி நேரு மறைந்ததைத் தொடர்ந்து, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார்.
சாஸ்திரி திடீர் என்று காலமானதால், இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்கு வியூகம் அமைத்து வெற்றி பெற்றார். இதன் மூலம் "கிங் மேக்கர்" என்று புகழ் பெற்றார். இதுபற்றிய விவரங்கள், ஏற்கனவே இந்திய அரசியல் பற்றிய பகுதியில் பிரசுரமாகியுள்ளன.)
No comments:
Post a Comment
THANK YOU