ஒரு மரணத்தின் சாதனை..!
ஒரு மரணத்தின் சாதனை..!
அன்று ஏப்பிரல், 4ம் திகதி, 1968ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெனஸி மாகாணத்தின் மெம்பஸிலிருந்த மொட்டல் லொறினின் இரண்டாம் மாடியின் வெளிப்புறா உப்பரிகையில் நின்று கொணிருந்த அமெரிக்காவின் மகாத்மா மார்ட்டின் லூதர் கிங் துப்பாக்கியால் சுடப்பட்ட போது மாலை ஆறு மணியாகி சில நிமிடத்துளிகளே கழிந்திருந்தது . அன்று அங்கு கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய அந்த அஹிம்சவாதி அன்று மெம்பஸின் துப்புரவுத் தொழிலாளாரின் வேலை நிறுத்தத்திற்கான தனது ஆதரவைத் தெரிவிக்க வந்திருந்தார். இராப்போசனத்துக்காக ஆயத்தமாகிய போது தான் அவர் சுடப்பட்டார். துப்பாக்கி ரவைகள் அவரது தாடை வழியாக ஊடுருவி முதுகெலும்புக்குள் போயிருந்தது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கிங் மறைந்த போது அவரது வயது வெறும் 39 தான்.
மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் கொலைக்கு ஒரு மாதத்திற்கு முன் தான் அமெரிக்கா எங்கும் பொருளாதார சமநிலையில் மிகவும் பாரதூரமான முரண்பாட்டுப் பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன. இந்த பிரச்சினையில் மார்ட்டின் லூதர் கிங் மிகவும் முனைப்பாக ஈடுபட்டிருந்தார். அமெரிக்காவின் பிற்படுத்தப்பட்ட இனமக்கள் உட்பட்ட ஏழை மக்களை இப்பிரச்சினையில் கவனம் செலுத்துவிக்கும் முகமாக அவர் அமெரிக்காவெங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரம் அது. இதில் முக்கியத்துவமான மார்ச் ஆன் வாஷிங்டன் பிரச்சாராமும், அந்த ஆன்டின் மார்ச் மாதத்தில் ஆபிரிக்க அமெரிக்க கறுப்பின துப்புரவுத் தொழிலாளிகளுக்கான ஆதரவுப் போராடம் போன்றவை குறிப்பிடத் தக்கவை. அவ்வாண்டு மார்ச் மாதம் 28ம் திகதி துப்புரவுத் தொழிலாளிகளின் போராட்டத்தில் ஆபிரிக்க அமெரிக்க இளம் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட வன்முறைச் சம்பவம் கிங் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. அப்போராட்டத்தில் கலந்து கொன்டு அவர் அந்த நகரை விட்டுப் போன பின் திரும்பவும் ஏப்பிரல் மாதம் அங்கே இன்னொரு பிரச்சாரத்திற்காக வர வேன்டியிருந்தது.
கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் 3ம் திகதி மாலை மெம்பிஸின் மலையுச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கிங் தனது கடைசி உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகளின் கனத்தைப் பாருங்கள்..
"We've got some difficult days ahead. But it really doesn't matter with me now, because I've been to the mountaintop...And He's allowed me to go up to the mountain. And I've looked over, and I've seen the Promised Land. I may not get there with you. But I want you to know tonight that we, as a people, will get to the promised land."
அந்த வார்த்தைகளை உதிர்த்த மறுநாளே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணச் செய்தி வெளியிடப்பட்ட கணத்தில் அமெரிக்கா முழுவதும் வன்முறை வெடிக்கத் தொடங்கியது. தேசிய பாதுகாப்புப் படை மெம்பிஸிலும், வாஷிங்டனிலும் குவிக்கப்பட்டது.
ஏப்பிரல் மாதம் 9ம் திகதி பல்லயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் வெள்ளத்துக்கிடையில் கிங் அவர்களின் பூத உடல் வைக்கப்பட்ட பேழை இரண்டு கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தோட்டத்து வண்டிலில் வைக்கப்பட்டு தனது இறுதி யாத்திரையைத் தொடக்கி ஈற்றில் அவரது பிறந்த நகரமான ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லான்டாவில் அடக்கம் செய்யப்பட்டது .
மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட அன்று இரவே அவர் தங்கியிருந்த விடுதியின் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதியின் நடைபாதையொன்றினருகில் .30 06 வேட்டைத் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்வந்த நாட்களில் கண்டெடுக்கப்பட்ட இந்தத் துப்பாக்கியுடன், துப்பாக்கியில் இருந்த கைரேகைகள், கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் ஆய்வின் முடிவில் மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையாளியாக 1967 ஏப்பிரல் மாதம் மிசௌரி சிறையிலிருந்து தப்பிய சிறைக்கைதி ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவர் கருதப்பட்டார். மே மாதம் 1968ல் குற்றவாளிக்கான தேடுதல் வேட்டை பரந்தளவில் முடுக்கிவிடப்படது. அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ கொலையாளி கனடா நாட்டின் கடவுச் சீட்டு மூலம் பொய்யான பெயரில் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்று கருதியது. அந்த நாட்களில் அது மிகவும் இலகுவான விசயமென்பதும் மறுப்பதற்கில்லை.
அதே ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி ஸ்கொர்ட்லாண்ட் யார்ட் புலனாய்வுத் துறையினரால் மார்ட்டின் லூதர் கிங்கைக் கொலை செய்த்ததாக தேடப்பட்ட "ரே" இலண்டன் விமான நிலையத்தில் பெல்ஜியம் போகும் விமானத்திற்காக காத்திருந்த போது கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது "ரே" இப்போது ஸிம்பாவே என்று அழைக்கப்படும் அன்றைய நாட்களின் ரொடீஷியாவுக்கு தப்பியோடும் இலக்குடன் பயணப்பட இருந்ததாகத் தெரிவித்தார். ரொடீஷியா அப்போது வெள்ளையரின் ஆதிக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலண்டணிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட "ரே" 1969ம் ஆண்டு மார்ச் மாதம் கறுப்பினத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் அவர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றாவாளியாக முடிவு செய்யப் பட்டு 99 வருட கடுங்காவல் சிறைத் தண்டணை அவருக்குவழங்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்ட 3 நாட்களின் பின் "ரே" தன்னை குற்றமற்றவர் என்றும் மேலிடத்தின் நாசகாரச் செயலின் சதியும் , சூழ்ச்சியும் குற்றம் ஏதும் செய்யாமலே தன்னை பலிகடாவாக்கியிருப்பதாக பகிரங்கமாக சொன்னார். 1967ம் ஆண்டு "ராவுல்" என்றா மர்ம மனிதர் தன்னை துப்பாக்கி சம்மந்தப்பட்ட விதயங்களுக்காக அணுகியதாகவும், அவரது நடவடிக்கை மூலம் 1968ம் ஆண்டு ஏப்பிரல் 4ம் திகதி தன்னை இந்த விடயத்தில் சந்தேகப் பேர்வழியாக இவர்கள் சித்தரிக்கப் போகிறார்கள் என்று உணர்ந்தே முன்னெச்சரிக்கையாக கனடாவுக்கு தான் தப்பியோடியதாக "ரே" கூறினார். ஆனால் "ரே" யின் மேன்முறையீட்டை நீதி்மன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவரது மற்றைய வேன்டுகோள்களும் திரும்பவும் விசாரணைக்கு வர 29 வருடங்களாகின.
1990களில் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் மனைவியும், பிள்ளைகளும் "ரே" க்கு ஆதரவாக பகிரங்கமாக க் குரல் கொடுத்தார்கள். கிங் அவர்களின் குடும்பத்தினர் "ரே"யை தமது தலைவரைக் கொன்ற கொலையாளியாகக் கருதவில்லை. "ரே" குற்றமற்றவர் என்றும் ஏதோ சதியின் பின்னணியில் இருப்பவர்களால் ரே குற்றவாளியாக உலகத்தின் கண்களுக்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்றே இன்றுவரை நம்புகின்றனர்.
மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் கொலையில் அமெரிக்க அரசாங்கமும் இராணுவமும் மறைமுகமாக சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் சதியை ஒரு அப்பாவியின் மீது சுமத்தி கறுப்பின மக்களையும் , உலகத்தையும் அமெரிக்காவின் அரசு ஏமாற்ற முனைவதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.
கிங் உயிரோடிருந்த நாட்களில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அமெரிக்க அரசும், புலனாய்வுத் துறையும் பல்வேறு வகையில் இன்னல்படுத்தி யதாக கிங் அவர்களின் துணைவியார் நினைவுகூருகிறார். எஃப்.பி.ஐ உயர் அதிகாரியான திரு . எதர் கூவர் என்பவர் மார்ட்டின் லூதர் கிங் மேல் தனிப்பட்ட காழ்ப்புணாற்ச்சியும், வெறுப்பும் கொன்டவராயிருந்தார் எனவும் , அதன் காரணமாக கிங் அவர்கள் தனது கடைசி 6 வருடங்களில் பெரும்பாலன நாட்கள் எஃப்.பி.ஐ இன் ஒட்டுக்கேட்டல் போன்ற அந்தரங்க சுதந்திர அத்துமீறால்களுக்குள்ளாகின்யிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார். 1967ம் ஆண்டு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்ட பின் டாக்டர் .மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் அமெரிக்க இராணுவத்தின் தொல்லைகளுக்கும் உள்ளாகினார். எல்லாவற்றுக்கும் மேலாக இனவேற்றுமைக்கு எதிராகவும், இனரீதியிலான பொருளாதாரக் கொள்கைக்க் எதிராகவும் போராட்டம் தொடங்கியதில் மேலிடங்களின் வெறுப்புக்கும் , காழ்ப்புணர்ச்சிக்கும் ஆளாகினார் என்பதால் கிங் குடும்பம் தமது தலைவரின் கொலை அமெரிக்காவின் அரசும், அதன் புல்னாய்வுத் துறையும், இராணுவமும் சேர்ந்து நடத்திய திட்டமிட்ட படுகொலை என்றே நம்புகின்றனர்.
இதுவரை டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் படுகொலை பற்றிய வழக்கு பல தடவை பல தரப்பட்ட நீதித்துறைக் குழுக்களால் விசாரிக்கப்பட்டுவிட்டது. அத்தனை தடவையும் புலனாய்வு விசாரணைகள் "ஜேம்ஸ் ஏர்ள் ரே" என்ற அந்தக் குறிப்பிட்ட மனிதரையே குற்றாவாளியாக தீர்ப்புக் கூறியது. கொலை செய்ய உபயோகிக்கப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கியில் இருந்த ரே யின் கைரேகையும், சம்பவம் நடந்த அன்று அவர் அங்கே தங்கியிருந்தற்காக சொல்லப்பட்ட விளக்கம் முன்னுக்குப் பின் முரணானதாகவும் இருந்ததால் மாத்திரமல்ல "இயல்பிலேயே "ரே" இனவெறி பிடித்தவர் என்றும், கறுப்பினத்தவருக்கான சம உரிமைக்காகா டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் போராடி வருவதை பகிரங்கமாகவே விமர்சனம் செய்துதனது வெறுப்பை பல தடவை வெளிப்படித்தியவர் என்றும் அவரது உறவினரும், நண்பர்களும் கூறிய வாக்கு மூலமும் அவருக்கு எதிராகா இருந்ததால் தீர்ப்பும் "ரே"க்கு பாதகமாகவே இருந்தது. "ரே" 1998ம் ஆண்டு மரணமடைந்தார்.
இதுவரை அமெரிக்காவின் மகாத்மா என்று போற்றப்படும் அந்த மாமனிதரைக் கொலை வழக்கில் உன்மையான கொலையாளிக்கு சரியான தீர்ப்பு தான் அந் நாட்டின் நீதித்துறையால் வழங்கப்பட்டதா அல்லது அமரர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் குடும்பத்தினர் நம்புவது போல் கிங் அவர்களின் கொலை அமெரிக்கா திரைமறைவில் நடத்திய நாசகார சதியில் அநியாயமாக ஒரு புனிதாத்துமாவும் , இனவெறியனாயிருப்பினும் கொலை செய்யாமலேயே ஒரு மனிதனும் பலியாகியிருக்கிறார்களா என்பது அமெரிக்காவின் மக்களுக்கு மட்டுமல்ல எஞ்சியிருக்கும் உலகத்துக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் நிற வெறி என்பது காட்டுமிராண்டித்தனமாக தலைவிரித்தாடியது. கறுப்பின மக்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். பெரும்பான்மையான வெள்ளை மாணவர்கள் கல்வி கற்ற கல்லூரியில் முதன் முதலாக கறுப்பின மாணவி படிக்க போன போது மிகக் கேவலமாகவும் மட்டமாகவும் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று நிற வேற்றுமை என்பது அமெரிக்காவின் இளைய சமுதாயத்தின் டேட்டிங், காதல், புணர்தல் போன்றவற்றில் அடிபட்டுப் போய் கலப்பின சமுதாயமாக மாறி அன்று மெம்பிஸின் மலைச்சிகரங்களின் மீது நின்று தனது மனதின் கனவுகளை வெளியிட்ட மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளை நனவாக்கி அமெரிக்காவின் முதற் குடிமகனாக வெள்ளையரல்லாத ஒரு மனிதரை கௌரவித்துள்ளது அமெரிக்காவின் இன்றைய சமூகம். ஒருவகையில் மார்ட்டின் லூதர் கிங் அவர்களுக்கு இது அமெரிக்க மக்களின் சமர்ப்பணமாக எடுத்துக் கொள்லலாம். அல்லது அதிகார , நிற வெறி பிடித்த தமது மூதாதையர் செய்த கொடுமைகளுக்கான பிரதியுபகாரமாக இந்தக் காலத்து சமுதாயம் ஆற்றிய கடமையாக கொள்ளலாம். எதுவாயினும் அமெரிக்காவில் சாதிக்க முடிந்த இந்த சமத்துவத்தை நம் நாடுகளில் எப்போது எமது சமுதாயங்கள் சாதித்துக் காட்டப் போகின்றன???
No comments:
Post a Comment
THANK YOU