Friday 1 March 2013

சேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்

இழப்புகளும்
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம்
10
சூச்சிகாமாட்டா சுரங்கத்தை நெருங்க
நெருங்க மூச்சு முட்டுவது போல்
இருந்தது. மாபெரும் தாமிர வளம்
நிறைந்த பகுதி அது. இருபது மீட்டர்
உயரமுள்ள அடுக்குத் தளங்கள்
சுரங்கத்தில் அமைந்திருந்தன.
தாதுவை எளிதாகக்
கொண்டு செல்வதற்கான இருப்புப்
பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனாலும்,
‘கவர்ச்சியோ உணர்ச்சியோ அற்றதாக,
ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக’ அந்தச்
சுரங்கம் அமைந்திருந்தது போல்
இருந்தது எர்னஸ்டோவுக்கு.
செல்வத்தை அள்ளித்தரும் இடமாக
சுரங்கம் அவருக்குக்
காட்சியளிக்கவில்லை.
‘திறந்தவெளியில்தான்
தாது எடுக்கப்படுகிறது என்பதையும்,
டன் ஒன்றுக்கு ஒரு சதவீதம் தாமிரத்தைக்
கொண்டு கனிமவளம் பெருமளவில்
சுரண்டப்படுகிறது என்பதையும்
போக்குவரத்தின் தனிச்சிறப்பான
அமைப்பே புலப்படுத்துகிறது.’
எந்த இயற்கையைத்
தேடி அலைந்து வந்தாரோ அந்த
இயற்கை இங்கே வெடிவைத்து சிதறடிக்கப்படுவதை அவர்
கண்கொண்டு பார்த்தார். ‘ஒவ்வொரு நாள்
காலையிலும் மலையில்
வெடிவைக்கப்படுகிறது.’ தொழில்நுட்ப
விவரங்கள் உள்பட அனைத்தையும் கேட்டுத்
தெரிந்துகொண்டு விரிவாக தன் நோட்
புத்தகத்தில் குறித்துக்கொண்டார்
எர்னஸ்டோ. தகர்க்கப்பட்ட கனிமக் கற்கள்
ராட்சத இயந்திர வாகனப் பெட்டிகளில்
ஏற்றப்படுகின்றன. கற்கள்
இயந்திரத்தை அடைகின்றன. அங்கே கற்கள்
நொறுக்கப்படுகின்றன. நடுத்தர
அளவுள்ள சரளைக் கற்கள்
உடைக்கப்படுகின்றன. பிறகு கந்தக
அமிலக் கரைசலில் போடப்படுகின்றன.
வேதியியல் மாற்றங்கள்
நடைபெறுகின்றன. திரவத்தில்
மின்சாரம் தொடர்ச்சியாக
செலுத்தப்படுகிறது. தாமிரம்
மெல்லிய தாமிரத் தகடுகளில்
ஒட்டிக்கொள்கிறது.
ஐந்து அல்லது ஆறு நாள்களுக்குப்
பிறகு இந்தத் தகடுகள் உருக்கும்
உலைக்கு அனுப்பப்பட ஏற்ற நிலையைப்
பெற்றுவிடும். தக்க முறையில் 12
மணி நேரம் உருக்கப்பட்ட பிறகு இந்தத்
தகடுகளில் இருந்து ‘350 பவுண்ட்
எடையுள்ள தாமிர வார்ப்புப்
பாளங்களைப் பெறமுடியும்.
ஒவ்வொரு நாள் இரவும்
நாற்பத்தைந்து லாரிகளில்
ஒவ்வொன்றிலும் இருபது டன் தாமிரம்
வீதம் வரிசையில் எடுத்துச்
செல்லப்படும். ஒருநாள் உழைப்பின் பலன்
இது.’
எறத்தாழ மூவாயிரம் பேர் ஈடுபடும்
உற்பத்தி நடவடிக்கை பற்றிய
சுருக்கமான எளிய
விவரணை இது என்று குறிப்பிடுகிறார்
எர்னஸ்டோ. இந்த உற்பத்தி நடவடிக்கையால்
யாருக்குப் பலன்? அந்தப் பலனை யார்
அனுபவிக்கிறார்கள்? சுரங்கத்தில்
பணியாற்றும் மூவாயிரம் சொச்சம் பேர்
எப்படிப்பட்ட நிலையில்
இருக்கிறார்கள்? சுரங்கத்தின்
கதி என்ன?
‘நைட்ரேட் தாது நிறைந்த, புல்
பூண்டுகூட முளைக்காத இந்த மலைகள்
காற்று, மழை ஆகியவற்றின்
தாக்குதலுக்கு எதிராக எந்தப்
பாதுகாப்பும் அற்றவையாக
இருக்கின்றன. இயற்கைக்கு எதிரான
போராட்டத்தில் உரிய
காலத்துக்கு முன்பே மூப்படைந்து தங்களது சாம்பல்
நிற
முதுகெலும்போடு காட்சியளிக்கின்றன.
அவற்றின் சுருக்கங்கள் அவற்றின்
உண்மையான புவியியல் ரீதியான வயதைப்
பற்றிய தவறான
கருத்தை உருவாக்குகின்றன. இந்த
இடத்தைச் சூழ்ந்துள்ள எத்தனை மலைகள்
இதேபோன்று மிகப் பெரும் வளங்களைத்
தங்கள் மடிகளில்
மறைத்து வைத்துள்ளனவோ… தங்கள்
வயிற்றுக்குள் மண்வாரி இயந்திரங்களின்
வெற்றுக் கைகளை அனுமதிக்கக்
காத்திருக்கின்றனவோ…’
சுரங்கத் தொழிலாளர்களின்
பரிதாபகரமான
நிலைமை எர்னஸ்டோவுக்கு பெரும்
வருத்தத்தை ஏற்படுத்தியது.
அரை மணி நேரம்
சுற்றி வருவதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
‘இது சுற்றுலாத் தலமல்ல, சுற்றிப்
பார்த்தவுடன் நீங்கள்
வெளியே போய்விடுவது நல்லது.
எங்களுக்கு நிறைய வேலைகள்
இருக்கின்றன!’ என்று சுரங்கத்தின்
கங்காணிகள் கண்டிப்பான குரலில்
எர்னஸ்டோவுக்கு அறிவுறுத்தியிருந்தார்கள்.
அவர்கள் திறன்மிக்கவர்களாகத்
தோற்றமளித்த அதே நேரம்,
திமிரானவர்களாகவும் இருந்தார்கள்.
இவர்களிடம் வேலை செய்யும்
பணியாளர்களின்
நிலைமை எப்படி இருக்குமோ?
விரைவில் சுரங்கத்தில்
ஒரு வேலை நிறுத்தம் நடைபெறுவதாக
இருந்ததை எர்னஸ்டோ அறிந்துகொண்டார்.
தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக
இருந்த ஒருவரிடம் (அவர்
ஒரு கவிஞரும்கூட)
உரையாடும்போது மேலதிக விவரங்கள்
கிடைத்தன. சுரங்கத்தின் செயல்பாடுகள்,
பணியாளர்களின் நிலைமை,
வேலை நிறுத்தத்துக்கான காரணங்கள்,
பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்
என்று பலவற்றையும்
கேட்டறிந்துகொண்டார் எர்னஸ்டோ.
இறுதியாக அவர் கேட்ட கேள்வி இது.
‘இந்தச் சுரங்கம்
எத்தனை பேரை பலி வாங்கியிருக்கிறது?’
அவர் ஆச்சரியமடைந்தார்.‘இந்தப்
புகழ்பெற்ற சுரங்கங்கள்
இங்கே இருக்கிற தாமிரம்
முழுவதையும் சுத்தமாகச்
சுரண்டியெடுத்துவிடும். உங்களைப்
போன்றவர்கள் என்னிடம் ஏராளமான
கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால்
இதற்காக எத்தனை உயிர்கள்
பலியாக்கப்பட்டன
என்று யாருமே இதுவரை கேட்டதில்லை.
இந்தக்
கேள்விக்கு எனக்கு விடை தெரியாது,
மருத்துவர்களே. ஆனால் இந்தக்
கேள்வியைக் கேட்டதற்கு நன்றி.’
எர்னஸ்டோவுக்கு ஏமாற்றமாக இருந்தது.
‘உணர்ச்சியற்ற ஆற்றலும் கையாலாகாத
கசப்புணர்வும் இந்த மாபெரும்
சுரங்கத்தில் கைகோர்த்துச் செல்கின்றன.
உயிர் வாழவேண்டும் என்ற
நெருக்கடியால் ஏற்பட்ட வெறுப்பும்
கொள்ளை லாபம் சம்பாதிக்கும்
முனைப்பும் எதிரெதிராக
இருந்தபோதிலும், அதையும்
மீறி இவ்விரு பண்புகளும்
இணைந்திருக்கின்றன.’
மிக முக்கியமான ஒரு பார்வை இது.
கொள்ளை லாபம் அடிக்கத்
துடிப்பவர்களும்
ஒருவேளை உணவுக்கு உடலையும்
உள்ளத்தையும் உயிரையும் பணயம் வைக்கத்
துடிப்பவர்களும் கைகோர்க்கும்
அதிசயத்தையும் அவலத்தையும்
எர்னஸ்டோ இந்தச் சுரங்கத்தில்
தரிசித்தார். லாபம், மேலும் லாபம்
என்னும்
துடிப்பு இயற்கையை மட்டுமின்றி மனிதர்களையும்
சேர்த்தே அழிக்கிறது என்பதை எர்னஸ்டோ உணர்ந்துகொண்ட
தருணம் இது.
‘வெறும் உணவைப்
பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட
எத்தனை மனித
உயிர்களை இவை (சுரங்கங்கள்)
குடித்தனவோ… இந்த யுத்தத்தில்
தனது புதையல்களைப் பாதுகாப்பதற்காக
இயற்கைஏற்படுத்தியுள்ள ஆயிரக்கணக்கான
மரணக்குழிகளில் துயரமான மரணத்தைச்
சந்தித்தவர்கள் எத்தனை பேரோ…
காவியங்களில் இடம் பெறாத இத்தகைய
ஏழை வீரர்களின்
எத்தனை உயிர்களை (தவிர்க்க இயலாமல்)
இவை குடித்தனவோ…’
சிலி நில ஆய்வு நிறுவனம் சல்ஃபேட்
தாதுவைச்
சுரண்டுவதற்கு இன்னொரு ஆலையை அமைத்து வருவதை எர்னஸ்டோ அறிந்துகொண்டார்.
‘உலகத்திலேயே மிகப் பெரியதாக
விளங்கப் போகின்ற இந்த ஆலையின் 96
மீட்டர் உயரப் புகைப்போக்கிகள்
இரண்டு அமைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் முழு உற்பத்தியும்
இந்த ஆலையிலேயே நடைபெறப் போகிறது.
அதே சமயத்தில், ஆக்ஸைடு தாதுவளம்
தீர்ந்து வருவதால் பழைய ஆலையின்
உற்பத்தி சிறிது சிறிதாகக்
குறைந்து முற்றிலுமாக
நின்றுவிடும். புதிய
உருக்காலைக்குத் தேவையான கச்சாப்
பொருள்கள் ஏற்கெனவே பிரம்மாண்டமான
அளவுக்குத் தயாராக உள்ளன. 1954ம்
ஆண்டு ஆலை திறக்கப்பட்டவுடன்
உடனடியாக உற்பத்தியும்
தொடங்கிவிடும்.’
ஆனால் இதை எப்படி வரையறுப்பது?
வளர்ச்சி என்றா? பழைய ஆலையா, புதிய
ஆலையா என்பதா இங்கு முக்கியம்?
எவ்வளவு நவீனமாக ஓர்
ஆலை இயங்குகிறது என்பதா அதை மதிப்பிடுவதற்கான
அளவுகோல்? ஓர் ஆலையின்
கட்டுமானத்தைவிட, உற்பத்தித்
திறனைவிட, இயந்திரங்களைவிட,
லாபத்தைவிட பணியாளர்கள் முக்கியம்
அல்லவா? அவர்களுடைய
வாழ்நிலை முக்கியமல்லவா?
மிக அடிப்படையான ஒரு கேள்வியும்
எர்னஸ்டோவுக்கு எழுந்தது.
ஆலைகளை யார் நிர்வகிக்கவேண்டும்?
தனியார்
நிறுவனங்களா அல்லது அரசாங்கமா?
0
Share/Bookmark
மருதன் 18 September 2012 தொடர், மோட்டார் சைக்கிள் டைரி
எர்னஸ்டோ, கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட்
தம்பதி, சிலி, சே குவேரா, மோட்டார்
சைக்கிள் டைரி
1 Comment
ஒரு கம்யூனிஸ்ட் தம்பதி
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம்
9
ஈஸ்டர்
தீவு இன்னமும்
கனவாகவே நீடித்துக்கொண்டிருந்தது.
அங்கே செல்வதற்கான
அத்தனை சாத்தியங்களும்
மறுக்கப்பட்ட
நிலையில்
அனைவரும்
அந்த
இடத்தைப்
பற்றியே சிலாகித்துப்
பேசிக்கொண்டிருந்தது எர்னஸ்டோவையும்
ஆல்பர்ட்டோவையும்
தவிக்க
வைத்தது.
திடீரென்று ஆல்பர்ட்டோ கேட்டார்.
‘கப்பல்
அதிகாரியின்
அனுமதி கிடைக்காவிட்டால் என்ன?
யாருக்கும் தெரியாமல் கப்பலுக்குள்
சென்று ஒளிந்துகொண்டால் என்ன?’
மாலுமியிடம் மட்டும்
சொல்லிவிட்டு கப்பலுக்குள்
ஒளிந்துகொண்டுவிடலாம் என்னும்
ஆல்பர்ட்டோவின் திட்டம் எர்னஸ்டோவுக்கும்
பிடித்துப்போனது.
துறைமுகம் நோக்கி இருவரும்
நடந்தார்கள். முதலில்
சுங்கவரி அலுவலகம்தான்
அவர்களை வரவேற்றது. சிரமம்
எதுவுமின்றி கடந்து சென்றார்கள். ஸான்
அன்டோனியோ கப்பல் தயாராக இருந்தது.
இவர்களும் தயாராகவே இருந்தனர். கப்பல்
கரையோரம் ஒதுங்கியது. ஷிப்ட்
முடிந்து மேற்பார்வையாளர்
உள்ளே நுழைந்தார். ஒவ்வொருவரையும்
கவனமாகப்
பரிசோதித்து உள்ளே அனுமதிக்கும்
அந்த நபரைப்
பார்க்கும்போதே தெரிந்தது.
கடுமையானவர், உதவக்கூடியவர் அல்லர்.
உடனடியாக
ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கிரேன் ஓட்டுநரிடம்
உரையாடி அவரை நண்பராக்கிக்கொண்டார்கள்.
அவர் இவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டார்.
அன்றைய இரவு முழுவதும் இருவரும்
கிரேனுக்குள் காத்திருந்தார்கள். அவர்
சைகை கொடுத்ததும்
சட்டென்று கப்பலுக்குள்
நுழைந்து அதிகாரிகளுக்கான
கழிப்பறையில் பதுங்கிக்கொண்டார்கள்.
வாகான நேரம் அமையும்போது அவர்கள்
வெளியில் வரவேண்டும் என்பது திட்டம்.
ஆனால் அப்படியானவொரு சமயம்
வருவதாகவே இல்லை. எவ்வளவு நேரம்தான்
கழிப்பறைக்குள் அடங்கியிருப்பது?
நாற்றமும் குமட்டலும் அலைகழிக்க,
இதற்கு மேலும்
பொறுக்கமுடியாது என்று கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்கள்.
கேப்டன் முன்னால் சென்று நின்றார்கள்.
‘கப்பலில் ஏறி குதித்துவிட்டால்
போதும், எங்கு வேண்டுமானாலும்
சென்றுவிடலாம்
என்று நினைத்துக்கொண்டாயா?’
இருவருக்கும்
உணவு கொண்டு வரச்சொன்னார் கேப்டன்.
சாப்பிட்டு முடித்ததும் வேலையும்
கொடுக்கப்பட்டது. ஆல்பர்ட்டோ உருளைக்
கிழங்கு உரிக்கவேண்டும். எர்னஸ்டோ,
கழிப்பறையைச் சுத்தம் செய்யவேண்டும்.
ஆல்பர்ட்டோ புன்சிரிப்புடன்
நகர்ந்து செல்ல,
எர்னஸ்டோ தலைமீது கை வைத்து உட்கார்ந்துகொண்டார்.
இதற்கு கழிப்பறையிலேயே அடைந்து கிடந்திருக்கலாமோ!
கோபத்தையும் சலிப்பையும்
ஒழித்துக்கட்டிவிட்டு வேலையை செய்துமுடித்தார்
எர்னஸ்டோ. அடுத்தடுத்து பல
காரியங்களை அவர்
செய்யவேண்டியிருந்தது. மண்ணெண்ணெய்
விட்டு கப்பலைத் துடைக்கவேண்டும்.
கூட்டிப் பெருக்கவேண்டும்.
இடையிடையே உறக்கம், உணவு, ஓய்வு.
முடிந்ததும் மீண்டும் வேலை. கப்பல்
கட்டணத்துக்கு இணையாக வேலைகள்
செய்துகொடுத்துவிடவேண்டும் என்றுதான்
எர்னஸ்டோவும் நினைத்தார் என்றாலும்,
அதற்கும் அதிகமாக
வேலை வாங்கிக்கொள்கிறார்களோ என்னும்
எண்ணமும் எழுந்துகொண்டே இருந்தது.
அவ்வப்போது எர்னஸ்டோவு யோசனையில்
ஆழ்ந்துவிடுவதுண்டு. எதற்காக இந்தப்
பயணம்? எதற்காக இந்தக் கழிவறையைச்
சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்?
இதிலிருந்து எனக்குக்
கிடைக்கப்போவது என்ன? என்ன
தெரிந்துகொள்ளபோகிறேன்? இந்த
அனுபவங்கள் எப்படி எனக்குப்
பயனளிக்கப்போகிறது? ‘எப்போதும் ஆர்வம்
மிக்கவர்களாகவும் காணும்
எல்லாவற்றையும்
நுணுகி ஆராய்பவர்களாகவும் இருந்த
நாங்கள் மூலை முடுக்குகளிலெல்லாம்
நுழைந்தோம். ஆனால் எதிலும்
ஒட்டாதவர்களாக, எங்கும் நிலையாகத்
தங்காதவர்களாக, விஷயங்களின் ஆழத்தில்
இருப்பது என்ன என்று அறியும்
முயற்சியில்
நாட்களை வீணாக்காதவர்களாக இருந்தோம்.
எதையும் மேலோட்டமாக
அறிந்துகொள்வதே போதுமானதாக
இருந்தது.’
கப்பல் பயணம் முடிவுக்கு வந்தது.
மாலுமிகளிடம்
இருந்து விடைபெற்றுக்கொண்டார்கள்.
இப்போது தாமிரச் சுரங்கமான
சூக்கிகாமாட்டாவை (Chuquicamata)
நோக்கி அவர்கள்
இப்போது நடந்துகொண்டிருந்தனர்.
சுரங்கத்துக்குச் செல்வதானால்
அதிகாரிகளின் அனுமதியைப்
பெறவேண்டும். அதற்காக ஒரு நாள்
காத்திருக்கவேண்டியிருந்தது.
பிறகு ஒரு வேன்
பிடித்து பாக்தானோ என்னும் ஊருக்குச்
சென்றார்கள். வழியில் அந்தத் தம்பதியைச்
சந்தித்தார் எர்னஸ்டோ. சிலியத்
தொழிலாளர்களாக இருந்த அவர்கள்
கம்யூனிஸ்டுகளாகவும் இருந்தார்கள்.
‘மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்,
மேட் பானத்தைக் குடித்தவாறும்,
ரொட்டித் துண்டையும்
பாலாடைக்கட்டியையும்
சாப்பிட்டவாறும் காட்சியளித்த அந்த
மனிதனின் சுருக்கங்கள் நிறைந்த முகம்
ஒரு புதிரான, துயரமான
உணர்வை ஏற்படுத்தியது. தான் சிறையில்
கழித்த மூன்று மாதங்களைப் பற்றியும்,
பட்டினியால் வாடியபோதிலும்
அசாதாரணமான விசுவாசத்துடன் தன்னைப்
பின்தொடர்ந்த தனது மனைவியைப்
பற்றியும், கனிவான
அண்டை வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில்
இருக்கும் தனது குழந்தைகளைப்
பற்றியும், வேலைதேடி தான் மேற்கொண்ட
பயனற்ற பயணங்கள் பற்றியும், புதிரான
விதத்தில் காணாமல் போனவர்களும்
கடலில் மூழ்கி விட்டதாகக்
கருதப்பட்டவர்களுமான
தனது தோழர்களைப் பற்றியும் தெளிவாக,
சாதாரண மொழியில் அவர் எங்களிடம்
விவரித்தார்.’
எர்னஸ்டோ அந்தக் கம்யூனிஸ்ட்
தம்பதியை ஆச்சரியத்துடன் கவனித்தார்.
‘பாலைவன இரவில், குளிரில்
ஒருவரோடொருவர்
நெருங்கி அமர்ந்திருந்த அந்த
ஜோடி உலகத் தொழிலாளி வர்க்கத்தின்
வாழும் பிரதிநிதிகள். அவர்களிடம்
போர்த்திக்கொள்வதற்கு ஒரு போர்வைகூட
இல்லை. அவர்களுக்கு எங்களுடைய
போர்வை ஒன்றைக் கொடுத்துவிட்டு,
மற்றொரு போர்வையை ஆல்பர்ட்டோவும்
நானும் போர்த்திக்கொண்டோம். என்
வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த
மிகக் குளிரான நாள் அது.
அதுமட்டுமல்ல, (எனக்கு) வினோதமாகத்
தோன்றிய இந்த மனிதர்களுடன் மிக
நெருக்கமாக இருந்து நான் கழித்த ஓர்
இரவும் அதுதான்.’
அவர்களிடம்
இருந்து விடைபெற்றுக்கொண்டு மலைகளில்
இருந்த கந்தகச்
சுரங்கங்களை நோக்கி புறப்பட்டனர்.
அசாதாரணமானதாக இருந்தது அந்தப்
பகுதி. ‘அந்த மலைகளின் தட்பபெப்ப
நிலை மிகவும் மோசமானது.
அங்கே ஒருவருடைய அரசியல்
ஈடுபாடு எப்படிப்பட்டது என்று யாரும்
கேட்பதில்லை. வேலை செய்வதற்கான
அனுமதிச் சீட்டு உங்களிடம்
இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
அங்கே வாழ்வது அந்த
அளவுக்கு மோசமானது. சில ரொட்டித்
துண்டுகளுக்காக
தொழிலாளி தனது உடல்நலத்தைப்
பொருட்படுத்தாமல் வேலை செய்யத்
தயாராக இருக்கவேண்டும்.
அவ்வளவுதான்.’
பல மைல்கள் கடந்து வந்த பிறகும்
எர்னஸ்டோவால் அந்தக் கம்யூனிஸ்ட்
தம்பதியை மறக்கமுடியவில்லை.
அவர்களும் என்னைப்போலத்தான் சுற்றித்
திரிந்துகொண்டிருக்கிறார்கள். என்னைப்
போலத்தான் உலகைத் தெரிந்துகொள்ளும்
ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
என்னைவிடவும் குறைவான உடைமைகள்
அவர்களிடம். இருந்தும் ஏதோவொரு அம்சம்
அவர்களை என்னிடம்
இருந்து பிரித்து காட்டுகிறது. அந்த
அம்சம் எது?
‘வாருங்கள் தோழர்களே,
வந்து எங்களோடு சாப்பிடுங்கள். நானும்
ஒரு நாடோடிதான்’ என்று அந்தக்
கம்யூனிஸ்ட்
அழைத்தது நினைவுக்கு வந்தது.
அவரோடு ஒப்பிடும்போது தன் பயணம்
மிகவும்
சாதாரணமானது என்று எர்னஸ்டோவுக்குத்
தோன்றியது. தனது வீரதீர சாகசங்கள்
ஒன்றுமேயில்லை என்பதும் புரிந்தது.
‘அவருடைய வார்த்தைகள் எங்கள் இலக்கற்ற
பயணத்தை ஒட்டுண்ணித்தனமானது என்று அவர்
ஏளனம் செய்கிறார்
என்பதை உணர்த்தியது.’
தனது வாசிப்பையும் இதுவரையில்
தனக்குக் கிடைத்த பயண
அனுபவங்களையும் ஒன்றுதிரட்டி,
ஒன்றின்மீது ஒன்றைப்
பொருத்தி ஆராய்ந்து பார்த்தார். தான்
சந்தித்த அந்தக் கம்யூனிஸ்ட் தம்பதி ஏன்
சமூகத்தால் எதிர்க்கப்படுகிறார்கள்
என்பதை அலசினார். ‘இப்படிப்பட்ட
மனிதர்களின்மீதுதான்
அடக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது என்பதை நினைத்தாலே உள்ளம்
பதறுகிறது.’ ஆனால்,
எதிர்ப்பையும்மீறி அவர்கள் எதற்காக
கம்யூனிச
தத்துவத்தின்மீது இவ்வளவு பிடிப்புடன்
இருக்கிறார்கள் என்பதையும்
யோசித்தார். எந்தவொரு தத்துவமும்
ஒரு சாராருக்குப்
பிடித்தனமானதாகவும்
இன்னொரு சாராருக்கு விருப்பமற்றதாகவும்
திகழ்கிறது.
யாருக்கு எது பிடித்திருக்கிறது,
ஏன் என்பதைக் கண்டறிந்தால்தான் அந்தத்
தத்துவத்தின்
உண்மைத்தன்மையை எடைபோடமுடியும்.
கம்யூனிசம் இங்கு யாரால் அபாயமாகப்
பார்க்கப்படுகிறது? யாரால்
உயிருக்கு உயிரானதாகத்
தழுவப்படுகிறது? ‘ஒரு சமூகத்தின்
‘ஆரோக்கியமான’ வாழ்வுக்கு ‘கம்யூனிசப்
புழு’
அபாயத்தை ஏற்படுத்துகிறதா அல்லது ஏற்படுத்துவதில்லையா என்ற
கேள்வியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்,
தொடரும் பட்டினிக்கு எதிரான
ஒரு விருப்பமாக கம்யூனிசம்
இங்கு இயல்பாக எழுகிறது.’
கற்பதற்குக் கடினமாக இருக்கும்
ஒரு தத்துவம் ஒரு சாராரால் மிக
எளிமையாகவும்
அர்த்தப்படுத்திக்கொள்ளப்படுகிறது.
புரிந்துகொள்ளவேண்டிய அவசியம்கூட
இல்லாமல் அந்தத் தத்துவம் அவர்களால்
நேசிக்கப்படுகிறது. விநோதமான,
வெகுளித்தனமான முறையில் அந்தத்
தத்துவம் அவர்களுக்கு நம்பிக்கையும்
ஊட்டுகிறது. ‘தங்களால்
புரிந்துகொள்ளமுடியாத அந்தக்
கோட்பாட்டை இந்த மனிதர்கள்
நேசிக்கிறார்கள். அவர்களைப்
பொருத்தவரை அதன் அர்த்தம்
‘ஏழைகளுக்கு உணவு’ என்பதுதான். இந்த
அர்த்தம் அவர்களால்
புரிந்துகொள்ளப்படக்கூடியது.
அவர்களின் வாழ்வை நிரப்பக்கூடியது.’
Share/Bookmark
மருதன் 11 September 2012 தொடர், மோட்டார் சைக்கிள் டைரி
எர்னஸ்டா, சிலி, சே, சே குவேரா,
பயணம், மருத்துவர், மோட்டார் சைக்கிள்
பயணம்
2 Comments
நம்பிக்கையற்ற தருணம்
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம்
8
‘லாஸ் ஏஞ்சல்ஸ்
எங்களிடமிருந்து விடைபெற்றது.
சிறிய ‘சே’வும் பெரிய ‘சே’வும்
(அதாவது ஆல்பர்ட்டோவும் நானும்)
வருத்தத்துடன் நண்பர்களின் கைகளைக்
கடைசி முறையாகக்
குலுக்கி விடைபெற்றோம்.
லாரி சாண்டியாகோவுக்குக்
கிளம்பியது. அதன் பின்பகுதியில்
லா பாடெரோஸாவின் பிணம்.’
அர்ஜென்டினாவில் சே என்பதன் பொருள்
நண்பர், தோழர் என்பதாகும். ஸ்பானிய
மொழி பேசுபவர்கள் பிற
நாட்டினரை சே என்று அழைக்கும் வழக்கம்
இருந்தது.
எர்னஸ்டோ குவரோவுக்கு சே என்னும்
பெயர் இப்படித்தான்
ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும்.
இருவரும் சாண்டியாகோவை அடைந்தனர்.
அங்கு தூதரக அதிகாரி ஒருவரின்
அலுவலகத்தில் ஒதுங்கிக்கொள்ள இடம்
கிடைத்தது. கோர்டோபாவைப் போல்
காட்சியளித்தது சாண்டியாகோ.
‘பரபரப்பான வாழ்க்கை.
போக்குவரத்து அதிகம். ஆனால் நிலத்தால்
சூழப்பட்ட எங்களுடைய சொந்த
நகரத்தையே நினைவுபடுத்தக்கூடிய
கட்டிடங்கள், தெருக்கள்,
தட்பவெப்பநிலை, மக்கள்.’
எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும்
இப்போது பெருவுக்குச்
சென்றாகவேண்டும். பெரு செல்ல
அர்ஜென்டைன அயலுறவு அதிகாரியின்
கடிதம் தேவை. அந்தக் கடிதத்தைக்
கொண்டுதான் விசா வாங்கவேண்டும்.
ஆனால், அந்த அதிகாரி கடிதம் எழுதித்
தர மறுத்துவிட்டார். மோட்டார்
சைக்கிளில் பெருவுக்குச் செல்லும்
திட்டம் அவரைக் கவரவில்லை போலும்.
இறுதியில் 400 சிலிய பெஸோக்கள்
செலுத்தி கடிதத்தைப்
பெற்றுக்கொண்டார்கள்.
‘கடைசியாக, அந்த முக்கியமான நாளும்
வந்தது. அன்று ஆல்பர்ட்டோவின் கண்களில்
கண்ணீர் பெருக,
லா பாடெரோஸாவிடமிருந்து விடைபெற்றோம்.’
உணர்ச்சிபூர்வமான உறவுமுறை என்பதைத்
தாண்டி அந்த மோட்டார் சைக்கிள் பல
வழிகளில் அவர்களுக்கு உபயோகமாக
இருந்தது. பஞ்சர் ஆன
டயரை உருட்டியபடி, ஐயா எங்களுக்குத்
தங்க இடம் கிடைக்குமா,
சிறிது உணவு கிடைக்குமா என்று கேட்டால்
யார்தான் மறுப்பார்கள்?
வண்டி இல்லை என்றானபிறகு எப்படி பிறருடைய
அனுதாபத்தைச் சம்பாதிப்பது?
சாகசப் பயணத்தில் அது ஒரு புதிய
கட்டம் என்று குறிப்பிடுகிறார்
எர்னஸ்டோ. ‘காலங்காலமாகத்
தொடர்ந்து வரும் பயணிகள் என்ற மரபில்
வந்தவர்கள் நாங்கள். நாங்கள்
வாங்கியிருந்த பட்டங்கள்
மக்களிடமிருந்து எங்களுக்கு மதிப்பைப்
பெற்றுத் தந்தன. இப்போது நாங்கள் அந்த
மரபைச் சேர்ந்தவர்கள் இல்லை.
மேட்டுக்குடித் தோற்றம்
எங்களிடமிருந்து மறைந்துவிட்டது.’
முதுகில் பையோடு தெருக்களில்
சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
சோர்வு அதிகரித்துக்கொண்டே சென்றது.
லா ஜியோகோண்டா (La Gioconda)
என்னும் நகரத்தில் உள்ள சந்து,பொந்துகள்
எதையும் விட்டுவைக்கவில்லை எர்னஸ்டோ.
அதிகாலையே சுற்றியலையத்
தொடங்கிவிட்டார்.
கடலை நோக்கி இறங்கும் மலைச்சரிவில்
வளைகுடாவை நோக்கி அந்நகரம்
அமைந்திருந்தது. தகரக் கட்டடங்கள்
அடுக்கடுக்காக அமைந்திருந்தன.
இருண்ட தெருக்களில் காணப்பட்ட
பிச்சைக்காரர்களுடன்
அமர்ந்து பேசினார். ‘துர்நாற்றமும்
புகையும் மண்டியிருந்த தெருக்களில்
நடந்தோம். ஒரு குரூரமான
தீவிரத்தோடு வறுமையை உணர முயன்றோம்.
நகரத்தின் ஆழத்தை அறிய
முயற்சித்தோம்.’
ஒரு வயதான ஆஸ்துமா நோயாளியை அவள்
இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்
எர்னஸ்டோ. ‘பரிதாபத்துக்குரிய அந்தப்
பெண் மிகவும் மோசமான நிலையில்
இருந்தாள். வியர்வை நாற்றமும்
சேறுபடிந்த கால்களுமாக அவள்
காட்சியளித்தாள். துர்நாற்றம் நிறைந்த
அறையில் அடைந்து கிடந்தாள். அவளுடைய
அறையிலிருந்த ஆடம்பரப் பொருட்கள்
இரண்டு நாற்காலிகள்தாம்.’
சற்றுமுன்னால்தான் ஈஸ்டர் தீவுகள்
குறித்த கற்பனையில்
ஆழ்ந்துபோயிருந்தார் எர்னஸ்டோ. அழகான
நகரம், அழகான பெண்கள்,
வேலையே செய்யவேண்டியதில்லை,
முழுமுற்றான உல்லாசம் என்றெல்லாம்
வர்ணிக்கப்பட்ட அந்தச் சொர்க்கத்தைக்
கண்டுவிட துடித்துக்கொண்டிருந்தார்
எர்னஸ்டோ. கப்பல்கள் ஏதேனும்
செல்கின்றனவா என்று விசாரித்தபோது,
அடுத்த ஆறு மாதங்களுக்குச்
சாத்தியமில்லை என்று பதில் வந்தது.
சொர்க்கத்தைத்தான் அரும்பாடுபட்டு தேட
வேண்டியிருக்கிறது. நரகம் எங்கும்
வியாபித்திருக்கிறது. அந்தப்
பெண்மணியைக் கண்டபோது,
எர்னஸ்டோ சொர்க்கத்தை மறந்துபோனார்.
‘அவளுக்கு ஆஸ்துமா மட்டுமின்றி இதய
நோயும் இருந்தது. ஒரு மருத்துவர்
தன்னால் எதுவும்
செய்யமுடியாது என்று உணரும்
இத்தகைய தருணங்களில்தான் மாற்றம்
நிகழவேண்டும்
என்று விரும்புகிறார்…
ஒரு பணிப்பெண்ணாக
வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தாள்
அந்தப் பெண். அவள் வாழ்ந்து வந்த அந்த
சமூக அமைப்பின்
அநீதியை ஒழித்துக்கட்டக்கூடிய
ஒரு மாற்றம் வரவேண்டுமென்று அந்த
மருத்துவர் விரும்புகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான்,
அடிப்படைச் செலவுகளைக்கூடச்
சமாளிக்க முடியாத ஏழைக்
குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மறைக்க
முடியாத மனக் கசப்புக்கு நடுவில்
மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் அதன்
பிறகு தந்தையாகவோ, தாயாகவோ,
சகோதரியாகவோ இருப்பதில்லை.
வாழ்க்கைப் போராட்டத்தில் முழுமையான
எதிர்மறை சக்திகளாக
மாறிவிடுகிறார்கள்.’
வருத்தும் நோய், ஏழைமை,
கையாலாகாத்தனம் ஆகியவற்றுடன்
சேர்த்து புறக்கணிப்பும்
நிகழ்ந்துவிடுவதைக் கண்டு துடித்துப்
போனார் எர்னஸ்டோ. ‘இவர்களை ஆதரிக்க
வேண்டியிருப்பவர்கள் இவர்களின் நோய்கள்
தனிப்பட்ட அவமானங்கள்தான்
என்று கருதுகிறார்கள். இத்தகைய
ஆரோக்கியமான மனிதர்களால்
வெறுத்து ஒதுக்கப்படக்கூடியவர்களாகவும்
இவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
கண்ணுக்குத் தென்படும் அடிவானமாக
மறுநாளை மட்டுமே கொண்டுள்ள இந்த
மக்களது வாழ்வில்தான் உலகத்
தொழிலாளி வர்க்க வாழ்வின் ஆழமான
அவலத்தை நம்மால் காணமுடியும்.’
அந்தப் பெண்மணிக்கு எப்படி உதவுவது?
எப்படிப்பட்ட ஆறுதலை அளிப்பது?
எர்னஸ்டோ திகைத்து நின்றார். ‘அந்தக்
கண்களில் மன்னிப்பை இறைஞ்சும்
தாழ்மையான வேண்டுகோள் தெரிகிறது…
இன்னும் சிறிது நேரத்தில்
கரைந்துவிடப்போகின்ற அவர்களின்
உடல்களைப் போலவே, ஆறுதலைக்
கேட்டு அடிக்கடி மன்றாடும் பயனற்ற
வேண்டுதல்களும் வெற்றிடத்தில்
கரைந்துபோய்விடுகின்றன.’
எனில், மாற்றம் என்பது சாத்தியமற்றதா?
இந்நிலையை யார் மாற்றுவது?
யாருக்கு அந்தப்
பொறுப்பு இருக்கிறது? அவர்கள் என்ன
செய்கிறார்கள்? இப்படிப்பட்டவர்கள்
தவிர்க்கவியலாதவர்கள் என்று அவர்கள்
சொல்லப்போகிறார்களா?
பிச்சைக்காரர்களும் நோயாளிகளும்
இல்லாத
இடமே இல்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்ளப்
போகிறார்களா? ‘அபத்தனமான
ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் அமைந்த
இந்த
நியதி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்
என்ற கேள்விக்கு என்னால் பதில்
சொல்லமுடியாது. ஆனால் அரசாங்கம்
தனது படைகளைப் பெருக்குவதில்
செலவிடுகின்ற நேரத்தைக்
குறைத்துக்கொண்டு, சமூகரீதியாகப்
பயன் தருகின்ற பணிகளில் அதிகப்
பணத்தை, மிக மிக அதிகமான பணத்தைச்
செலவிழக்க வேண்டிய நேரம் இது.’
வாடிக் கிடந்த அந்தப்
பெண்ணுக்கு நம்பிக்கையளிக்கும்
வகையில் அளிக்க எர்னஸ்டோவிடம்
எதுவுமில்லை. எப்படிப்பட்ட
உணவை உட்கொள்ளவேண்டும்
என்பது குறித்து சில ஆலோசனைகள்
கூறினார். சில மாத்திரைகள் எழுதிக்
கொடுத்தார். தன்னிடம் இருந்த சில
மாத்திரைகளை அளித்தார். பணிவான
குரலில் அவள் நன்றி தெரிவித்தாள்.
குடும்பத்தினர்
எர்னஸ்டோவுக்கு விடைகொடுத்தனர்.
அவர்களது பார்வையை எர்னஸ்டோவால்
மறக்கமுடியவில்லை.
ஒரு சொட்டு நம்பிக்கையும் இல்லாமல்
வெறித்துப் போயிருந்தது அவர்கள்
முகம்.
(தொடரும்)
இதுவரை
Share/Bookmark
மருதன் 4 September 2012 தொடர், மோட்டார் சைக்கிள் டைரி
அர்ஜென்டினா, எர்னஸ்டோ, சே,
சே குவேரா, பயணம், மோட்டார் சைக்கிள்
டைரி
No Comments
மதுவும் மயக்கமும்
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம்
7
சிலி நாட்டு கிராமப்புறங்கள்
வழியாகப் பயணம் தொடர்ந்தது.
‘தரிசாகக் கிடந்த எங்கள் நாட்டின்
தென்பகுதியைப் போலன்றி, நிலங்கள்
பிரிக்கப்பட்டு,
ஒவ்வொரு துண்டு நிலத்திலும்
விவசாயம் செய்யப்பட்டிருந்தது.
நட்புணர்வு மிகுந்த சிலி மக்கள்
நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம்
எங்களை வரவேற்றார்கள்.’ சிலியின்
விருந்தோம்பல்
பண்பு எர்னஸ்டோவை வெகுவாகக்
கவர்ந்தது.
கெண்டைக்கால் வரை நீளும்
கால்சட்டை ஒன்றை ஒருவர்
எர்னஸ்டோவுக்கு அளித்தார்.
இன்னொரு வீட்டில் நல்ல இருப்பிடம்
கிடைத்தது. உறங்குவதற்கு நல்ல
போர்வையும் உண்பதற்கு நல்ல உணவும்
கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக
அது பாப்லோ நெரூதாவின் நாடு. எல்
ஆஸ்ட்ரால் என்னும்
பத்திரிகைக்கு எர்னஸ்டோவும்
ஆல்பர்ட்டோவும் பேட்டியளித்தனர்.
அர்ஜென்டினா செய்தித்தாள்கள்
போலில்லாமல் சிலியின் தாள்கள்
ஏராளமான பக்கங்களைக் கொண்டிருந்தன.
இரண்டாவது பக்கத்தில்
இப்படியொரு குறிப்பு இடம்பெற்றிருந்தது.
‘இரண்டு அர்ஜென்டைன தொழுநோய்
மருத்துவ வல்லுநர்கள் மோட்டார்
சைக்கிளில் தென் அமெரிக்கக் கண்டம்
முழுவதும் பயணம். அவர்கள்
இப்பொழுது டெமுகோவில்
இருக்கிறார்கள். ராபா நூயிக்குப் போக
விரும்புகிறார்கள்.’ எர்னஸ்டோ எந்த
அளவுக்குத் தன்னைப் பற்றி சவடால்
அடித்துக்கொண்டிருந்தால்
இப்படியொரு செய்தியும் ‘வல்லுநர்’
என்னும் பட்டமும் கிடைத்திருக்கும்
என்பதை எண்ணிப் பார்க்கலாம்!
அவர்களுடைய மோட்டார்
சைக்கிளுக்கும்கூட சிலியில் நல்ல
மரியாதை கிடைத்தது. வழக்கம் போல்
டயர் பஞ்சர் ஆனபோது,
அறிமுகமற்றவர்கள்கூட சிரித்த
முகத்துடன் உதவிக்கு வந்தனர். எல்லாம்
செய்தித்தாள் செய்த மாயம்!
ஒரு மருத்துவ
வல்லுநருக்கு உதவி செய்யும் பொன்னான
வாய்ப்பு அனைவருக்கும்
கிடைத்துவிடுமா என்ன?
தயவு செய்து எங்கள்
வீட்டுக்கு வாருங்கள்
என்று வருந்தி அழைத்து இறைச்சியும்
ஒயினும் அளித்து மகிழ்ந்தார்கள்.
இப்படித்தான்
ஒருமுறை பிரச்னையாகிவிட்டது.
மது அருந்துவதற்காகச் சில நண்பர்கள்
எர்னஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும்
வரவேற்றபோது இருவரும்
மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.
சிலி நாட்டு ஒயின்
எர்னஸ்டோவை மிகவும் கவர்ந்திருந்தது.
கணக்கு வழக்கில்லாமல் ஒட்டகம் போல்
நிறைய புட்டிகளை அவர்
காலி செய்தார். முடித்த
கையோடு ஒரு கிராம நடன
நிகழ்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பும்
கிடைத்தது.
அதற்குப்
பிறகு நடந்ததை எர்னஸ்டோவே பதிவு செய்கிறார்.
‘அது ஒரு இனிமையான மாலைப்பொழுது.
எங்கள் வயிற்றிலும் மனதிலும்
ஒயினே நிறைந்திருந்தது.
பணிமனையில் இருந்த, நன்றாகப் பழகிய
மெக்கானிக் மிகுந்த குடிபோதையில்
இருந்ததால் தன்னுடைய மனைவியுடன்
நடனமாடும்படி என்னைக்
கேட்டுக்கொண்டான். அவனுடைய
மனைவி உற்சாகமான மனநிலையிலும்
எதற்கும் தயாராகவும் இருந்தாள்.’
மது சாமானியர்களை மட்டுமல்ல
வல்லுநர்களையும்கூட
மாற்றிவிடுகிறது, தன்னிலை மறக்கச்
செய்துவிடுகிறது. ‘மதுவை நிறைய
குடித்திருந்த நான் அவள் கையைப்
பற்றி வெளியே இழுத்துச் சென்றேன்.
எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவள் என்
பின்னால் வந்தாள். ஆனால் தன் கணவன்
தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து தன்
மனதை மாற்றிக்கொண்டாள்.’
எர்னஸ்டோவால் தன்
நிலையை மாற்றிக்கொள்ளமுடியவில்லை.
‘எதையும் புரிந்துகொள்ளும்
மனநிலையில் நான் இல்லை. நடன
நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த
இடத்தில் சிறு சச்சரவு ஏற்பட்டது.
எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்க, நான்
அவளை ஒரு கதவை நோக்கி இழுத்தேன்.
அவள் என்னை உதைக்க முயன்றாள். நான்
அவளை இழுக்கவே, அவள்
நிலை குலைந்து கீழே விழுந்தாள்.’
அதற்குப் பிறகு நடன அரங்கில்
இருந்தவர்கள் மருத்துவர்களைத் துரத்தத்
தொடங்கினார்கள். தப்பினால் போதும்
என்று எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும்
கிராமத்தை நோக்கி ஓடினார்கள்.
அதிகாலையில்
நினைவு திரும்பியபோது எர்னஸ்டோ தனது முந்தைய
இரவு சம்பவத்தைப் பற்றி என்ன
நினைத்திருப்பார்?
ஆனால் அந்தப்
பத்திரிகை செய்திக்கு இன்னமும் பலன்
இருந்தது என்பதை எர்னஸ்டோ மறுநாள்
தெரிந்துகொண்டார். ஒரு புதிய
விபத்துக்குப் பிறகு (இந்த
முறை ஒரு பசுமாட்டின் கால்
மீது வண்டியை சறுக்கி விழுந்தது)
சில ஜெர்மானியர்களின்
வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது.
வண்டி இன்னமும் சரியாகவில்லை.
மேட்டின்மீது ஏறும் ஒவ்வொரு முறையும்
ஏதாவதொரு பாகம் விலகி விழுந்தது.
அல்லது வெறுமனே மூச்சு வாங்கியபடி நின்றது.
அல்லது உருண்டு விழுந்தது.
அமெரிக்கக்
கண்டங்களிலேயே உயரமானது என்று சிலியர்களால்
அழைக்கப்படும் மாலேகோ என்னும்
இடத்தை நோக்கி ஏறத் தொடங்கியபோது,
வண்டி மீண்டும் செயலிழந்தது.
ஏதாவதொரு வண்டியில் மோட்டார்
சைக்கிளையும் ஏற்றிச் செல்லவேண்டும்
என்பதால் ஒரு நாள் முழுவதும்
சாலையிலேயே காத்துக்கிடந்தார்கள்.
பிறகே வண்டி கிடைத்தது.
குல்லிபுல்லி என்ற ஊரில் தங்கினார்கள்.
‘அந்தச் சாலையில் பல செங்குத்தான
மேடுகள் இருந்தன. முதலாவது மேட்டில்
ஏறத்தொடங்கியதும்,
லா பாடெரோஸோ உயிரை விட்டுவிட்டது.
ஒரு லாரியில் ஏறி லாஸ் ஏஞ்சலஸ்
என்னும் நகரை அடைந்தோம்.
அங்கே மோட்டார்
சைக்கிளை ஒரு தீயணைப்புப்
படை நிலையத்தில் விட்டுவிட்டு,
சிலி ராணுவ லெஃப்டினென்ட் ஒருவரின்
வீட்டில் தங்கினோம்… மோட்டார்
சைக்கிளில் நாங்கள் சவாரி செய்த
கடைசி நாள் அதுதான். மோட்டார்
சைக்கிள் இல்லாமல் பயணம் செய்யும்
அடுத்த கட்டம் இதைவிடக் கடினமாக
இருக்கும் என்று தோன்றியது.’
அந்த
அதிகாரி ஒருமுறை அர்ஜென்டினா வந்திருந்தபோது,
அவருக்கு அங்கு சிறப்பான
வரவற்பு கிடைத்தால், தன்னை உபசரித்த
நாட்டில் இருந்து வந்திருந்த
இரு மருத்துவர்களைத் தக்கமுறையில்
பதில் உபசாரம் செய்யவேண்டும்
என்று விரும்பினார். எர்னஸ்டோ அவரிடம்
விரிவாக உரையாடினார். தீயணைப்புத்
தொழில் குறித்து சில
அடிப்படைகளையும் தெரிந்துகொண்டார்.
தனது குறிப்பேட்டில் பதிவும்
செய்துவைத்தார்.
‘எனக்குத் தெரிந்த வரையில், சிலியில்
தீயணைப்புப் பணியை பொதுச்
சேவையாகத்தான் செய்து வந்தார்கள்.
இது சிறந்த சேவையாகும். இப்படிப்பட்ட
தீயணைப்புப் படைகள் செயல்படும்
ஊர்களிலோ அல்லது வட்டாரங்களிலோ,
மிகவும் திறமை வாய்ந்த
மனிதர்களும்கூட அப்படைக்குத்
தலைமை தாங்குவதைப் பெருமைக்குரிய
விஷயமாகக் கருதுகிறார்கள்.
தீயணைப்புப்
படைகளுக்கு வேலையே இருக்காது என்று நினைத்து விடாதீர்கள்.
தெற்கில் தீ விபத்துகள் ஏராளமாக
ஏற்படுவதுண்டு. பெரும்பாலான
கட்டடங்கள் மரத்தால்
கட்டப்பட்டவை என்பதாலோ, மக்கள் மிகவும்
ஏழைகளாகவும் சிறந்த கல்வியறிவைப்
பெறாதவர்களாகவும் இருப்பதாலோ,
வேறு காரணங்களாலோ,
அல்லது இவை அனைத்தும்
ஒன்று சேர்ந்ததாலோ, தீ விபத்துகள்
தொடர்ந்து நடைபெற்ற வண்ணமாக இருந்தன.
தீயணைப்புப் படை நிலையத்தில் நாங்கள்
தங்கியிருந்த மூன்று நாட்களில்
இரண்டு பெரிய தீவிபத்துகளும்,
ஒரு சிறிய விபத்தும் ஏற்பட்டன.’
அதிகாரியின் வீட்டில் இரவைக்
கழித்துவிட்டு மறுநாள் தீயணைப்புப்
படை நிலையத்துக்குச்
சென்று பார்வையிடவேண்டும்
என்று எர்னஸ்டோ விரும்பினார்.
எப்படி தீயணைப்பு வீரர்கள்
செயல்படுகிறார்கள், தீயைக்
கட்டுப்படுத்துகிறார்கள்
என்பதை நேரில் காண அவர்
விரும்பினார். ஆனால் வழக்கம் போல்,
பிணங்களைப் போல் அன்றிரவைத்
தூங்கி கழித்ததால், அபாயச்
சங்கு ஒலிப்பதை அவரால்
கேட்கமுடியவில்லை. பணியில் இருந்த
ஊழியர்களும் இவர்கள்
உறங்குவதை மறந்துவிட்டு, வண்டியுடன்
விரைந்துவிட்டனர்.
‘நாங்களோ காலையில் நீண்டநேரம் வரையில்
தூங்கிக்கொண்டிருந்தோம். அதற்குப்
பிறகுதான்,
நடந்தது என்னவென்றே எங்களுக்குத்
தெரிந்தது. அடுத்த தீ
விபத்தின்போது கண்டிப்பாக
எங்களை அழைத்துச் செல்வதாகக்
கூறினார்கள்.’
(தொடரும்)
இதுவரை
Share/Bookmark
மருதன் 28 August 2012 தொடர், மோட்டார் சைக்கிள் டைரி
அர்ஜென்டினா, எர்னஸ்டோ, சிறுத்தை,
சே குவேரா, மோட்டார் சைக்கிள் பயணம்,
யூனின் டி லாஸ் ஆண்டிஸ்
1 Comment
துப்பாக்கி வெடித்தது
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம்
6
ஏரிக்கரைகளைக்
கடந்து அவர்கள்
யூனின்
டி லாஸ்
ஆண்டிஸ்
(Junin
de
los
Andes)
என்னும்
கிராமத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.
காருவே (Curruhué) கிராண்ட் ஏரியைச்
சுற்றிப் பார்க்கவேண்டும்
என்று எர்னஸ்டோ விரும்பினார்.
பச்சை நிறத்தில் படர்ந்திருந்த அந்த
ஏரியை மோட்டார் சைக்கிளில்
கடக்கமுடியாது என்பதால் அருகிலுள்ள
ஒரு வனக் காப்பாளரின் அறையில்
வண்டியைப் போட்டுவிட்டு கரடுமுரடான
பாதையில் இருவரும் நடக்கத்
தொடங்கினர்.
ஏரிக்கு மேலே ஒரு வாத்து பறந்துசென்றது.
ஆல்பர்ட்டோ சுற்றிலும்
ஒருமுறை பார்த்தார். யாருமில்லை.
பசிக்கு இதைவிட நல்ல
விருந்து கிடைத்துவிடுமா என்ன?
குறி பார்த்துச் சுட்டார்.
வாத்து ஏரியில் விழுந்தது. ஏரியில்
இறங்கி வாத்தைக் கொண்டு வரும்
வேலை எர்னஸ்டோவிடம் வந்து சேர்ந்தது.
குளிர்ந்த நீர் அலைகளில் 20 மீட்டர்
நீந்தி திணறியபடியே வாத்துடன்
கரை ஒதுங்கினார் எர்னஸ்டோ. ‘எனினும்
வாத்து வறுவல் சுவையாக இருந்தது.’
உணவு ஆனதும், மலையேறத்
தொடங்கிவிட்டனர். பூச்சிகள்
வட்டமிட்டபடி கடித்து விளையாடிக்கொண்டிருந்தன.
மலையேறுவதற்குத் தேவையான
உபகரணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
இருந்தும் பின்வாங்காமல் தொடர்ந்து பல
மணிநேரம் ஏறி, உச்சியை அடைந்தனர்.
சிறிது நேரம் பனியில்
விளையாடிவிட்டு, இருட்டுவதற்குள்
இறங்க ஆரம்பித்தனர்.
‘இறங்கி வருவது தொடக்கத்தில் எளிதாக
இருந்தது. ஆனால் பின்னர், நாங்கள்
பின்தொடர்ந்து வந்த
ஓடை ஒரு காட்டாறாக மாறியது.
இருபுறங்களிலும் வழுக்குப் பாறைகள்.
நடப்பது சிரமமாக இருந்தது.
ஓரத்திலிருந்து மூங்கில்காட்டின்
ஊடாகத்தான் நாங்கள்
இறங்கிவரவேண்டியிருந்தது.’ அதற்குள்
இருட்டத் தொடங்கிவிட்டது.
ஆல்பர்ட்டோவின் இரவு நேரக்
கண்ணாடி தொலைந்துவிட்டது.
எர்னஸ்டோவின் காற்சட்டையின் கால்கள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன.
பாதாளத்தில் இறங்குவது போல்
இருந்தது எர்னஸ்டோவுக்கு.
அடர்த்தியான குளிரில் ஓடையைக்
கடந்து வனக் காப்பாளரின் அறைக்குச்
சென்றார்கள். அவர் இருவரையும்
வரவேற்று மேட் பானம் கொடுத்து,
கிழே விரித்துப் படுக்க ஆட்டுத்
தோலும் கொடுத்தார்.
ஜனவரி 1952. எர்னஸ்டோ தன்
தாயாருக்கு கடிதம் எழுதினார்.
‘அன்புள்ள அம்மாவுக்கு, நாங்கள்
சந்தித்த அனுபவங்களையெல்லாம்
அப்படியே உனக்குச் சொன்னால், இந்த சில
வரிகளின்
நோக்கத்துக்கே அது எதிராகப்
போய்விடும்… வழியில் எனக்குக் கடும்
காய்ச்சல். ஒரு நாள் படுக்கையில்
கிடந்தேன்… அதற்குப் பிறகு, பல
பிரச்னைகளைச் சந்தித்த நாங்கள்
திறமையாக அவற்றையெல்லாம்
சமாளித்துவிட்டு, அடர்த்தியான
காடுகளுக்கு மத்தியில், ஒரு அழகான
ஏரிக்கருகில் இருக்கும் சான்
மார்ட்டின் டி லாஸ் ஆண்டிஸை அடைந்தோம்.
நீங்களும் பார்க்கவேண்டிய இடம் அது.
எங்கள் முகம் கறுத்துப் போய்விட்டன.
சாலையோரத்தில் தோட்டத்துடன்
வீடு தென்பட்டால், அந்த வீடுகளுக்குச்
சென்று உணவு கேட்பதும்,
அங்கேயே தங்கிவிடுவதும்
எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது…
உன்னை மிகவும் நேசிக்கும் மகன்
அன்போடு உன்னை அணைத்துக்கொள்கிறான்.’
ஏழு ஏரிகள் வழியாக,
பாரிலோஷே (Bariloche) என்னும்
பகுதியை இருவரும் வந்தடைந்தனர்.
ஒரு ஆஸ்திரியர் காலிக்
கொட்டகை ஒன்றில் அவர்களைத்
தங்கவைத்தார். எங்கு சென்றாலும்,
‘வண்டி பழுதாகிவிட்டது,
இன்றிரவு இங்கே தங்கிக்கொள்ள இடம்
கிடைக்குமா?’ என்பதுதான் இந்த
இருவரின் வாடிக்கையான விண்ணப்பமாக
இருக்கும். பெரும்பாலும் அனைவரும்
பாவப்பட்டு ஏதாவதொரு மூலையைச்
சுட்டிக் காட்டுவார்கள். இந்த
முறை கிடைத்தது கொட்டகை. கூடவே,
ஓர் எச்சரிக்கையும் கிடைத்தது.
‘கவனமாகக் கதவைத்
தாழிட்டுக்கொள்ளுங்கள்.
இங்கே ஒரு அபாயகரமான
சிறுத்தை சுற்றிக்கொண்டிருக்கிறது.’
பிரச்னை என்னவென்றால், அந்தக்
கொட்டகை குதிரை லாயம் போல்
இருந்ததால் கதவின் கீழ்
பகுதியை மட்டுமே சாத்திக்கொள்ள
முடிந்தது. மிகச் சரியாக
ஒரு சிறுத்தையால்
தாண்டி வந்துவிடக்கூடிய
அளவுக்கே அந்தக் கதவு இருந்தது.
பிறகு எங்கிருந்து நிம்மதியாகத்
தூங்குவது?
‘விடிந்துகொண்டிருந்தபோது கதவை ஏதோ பிறாண்டும்
சப்தம் கேட்டது. பயத்தால்
பேச்சிழந்தவனாக என்னருகில்
ஆல்பர்ட்டோ. என் கையில்
துப்பாக்கி தயாராக இருந்தது.
மரங்களிடையே இருந்து ஒளிரும்
இரண்டு கண்கள் எங்களை வெறுத்துப்
பார்த்துக்கொண்டிருந்தன.’
சிறிது நேரத்தில், ‘கருப்பு உடல்
ஒன்று கதவைத் தாண்டி வந்தது.
அப்போது உள்ளுணர்வுதான் செயல்பட்டது.
அறிவு பொய்த்துவிட்டது.
எனது தற்காப்புணர்வு ரிவால்வரின்
விசையை அழுத்தியது.
வெடியோசை ஒரு கணம்
அதிர்ந்து ஒலித்தது.’
கதவருகே கையில்
விளக்கோடு யாரோ நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
அச்சுறுத்லாக இருந்த
சிறுத்தை செத்தொழிந்துவிட்டதா?
எனில் இது மெய்யாகவே ஒரு பெரிய
உபகாரம் அல்லவா? ஆனால்,
நடந்தது வேறு. ‘ஆஸ்திரியரின் கனத்த
குரலிலிருந்தும், அவர் மனைவியின்
அழுகையிலிருந்தும் நாங்கள் என்ன
செய்துவிட்டோம் என்பதைத்
தெரிந்துகொண்டோம். அவர்களுடைய
அழுக்குச் செல்லநாய் பாபியை நாங்கள்
கொன்றுவிட்டோம்.’ கொலைகாரர்களாக
அங்கே படுத்து உறங்கமுடியாது என்பதால்
மிச்ச பொழுதை வெட்டவெளியில்
கழிக்கவேண்டியிருந்தது.
பிறகு, கால்வாய் வெட்டும்
வேலை செய்துவந்த ஒருவரின் வீட்டில்
இடம் கிடைத்தது. தனது வீட்டின்
சமையலறையில் மற்றொரு நண்பருடன்
இரவைக் கழிக்க அவர்
அனுமதி அளித்தார். அங்கும்
ஒரு பிரச்னை. ‘தலையணையாக நாங்கள்
பயன்படுத்திய ஆட்டுத்தோலின்
நெடி எரிச்சலைத் தந்ததால், இன்ஹேலரைப்
பயன்படுத்தலாம் என்றிருந்தேன்.
குழலிலிருந்து மூச்சிழுக்கும்போது,
எனக்கு அருகில்
தூங்கிக்கொண்டிருந்தவர்
விழித்துக்கொண்டார். மூச்சிழுக்கும்
சத்தம் கேட்டதுமே சட்டென அசைந்த அவர்
பிறகு அசையாமல் படுத்துக்கொண்டார்.
போர்வைக்கடியில் ஒரு கத்தியைப்
பிடித்தவாறு விறைப்பாக,
மூச்சை அடக்கிக்கொண்டு அவர்
படுத்திருந்ததை நான் உணர்ந்தேன்.
முந்தைய இரவின் அனுபவத்தின்
காரணமாக, கத்தியால்
குத்தப்பட்டுவிடுவேனோ என்று பயத்தில்
அப்படியே அசையாமல் இருந்தேன்.’
எர்னஸ்டோவைப் போலவே அந்த நபரும்
சிறுத்தை பயத்தில்
இருந்திருக்கிறார். அவர் இன்ஹேலர்
இழுக்கும் ஓசை அவருக்குச்
சிறுத்தையின் உறுமலாகத்
தெரிந்திருக்கிறது.
இன்னொருமுறை எர்னஸ்டோ இன்ஹேலரை இழுத்திருந்தால்,
அந்த நபர் நிச்சயம் தனது கத்தியைப்
பிரயோகித்திருப்பார்.
அர்ஜென்டினா மண்ணில் அது கடைசி நாள்.
அவர்கள் சிலியின்
எல்லையை நோக்கி இப்போது புறப்பட்டிருந்தார்கள்.
மோட்டார் சைக்கிள் படகில் ஏற்றப்பட்டது.
ஏரிகளையும்,
சுங்கவரி அலுவலகத்தையும்,
மலைத்தொடரையும்
கடந்து முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.
படகில் கட்டணம் செலுத்துவதற்குப்
பதிலாக வியர்வை பொங்க அவர்கள்
உழைத்தார்கள். அங்கிருந்த பல
மருத்துவர்கள் எர்னஸ்டோ சந்தித்தார்.
சிலியில் தொழுநோய் இல்லை என்பதால்
தொழுநோய்
மருத்துவமனை குறித்து எர்னஸ்டோ பகிர்ந்துகொண்ட
அனுபவங்களை (‘அவ்வப்போது அது பற்றி மிகைப்படுத்தியும்
பேசினோம்!’) அவர்கள் ஆச்சரியத்துடன்
கேட்டுக்கொண்டார்கள். ஈஸ்டர் தீவில்
ஒரு தொழுநோய்
மருத்துவமனை இருப்பதையும், அந்தத்
தீவு மிகவும் அழகானது என்றும் அவர்கள்
சொன்னதால் அங்கும்
சென்று பார்த்துவிடுவது என்று முடிவுசெய்துகொண்டார்கள்.
பெட்ரோஹுவே என்னும் நகரில்
இருந்து ஓஸோர்னோ என்னும்
பகுதிக்கு ஒரு வேன் செல்வதாக
இருந்தது. அதில் இடம்
கிடைக்குமா என்று விசாரித்தபோது அங்கிருந்தவர்
ஒரு யோசனை கூறினார்.
எங்களுக்கு ஒரு டிரைவர்
தேவைப்படுகிறார், உங்களால்
ஓட்டமுடிந்தால் நீங்களும் வரலாம்.
ஆல்பர்ட்டோ அவசர அவசரமாக
எர்னஸ்டோவுக்கு வகுப்பெடுத்தார்.
பிரேக், க்ளட்ச், கியர், முதல் கியர்,
இரண்டாவது கியர் என்று தனக்குத்
தெரிந்ததை எல்லாம் அவர் சொல்ல
ஆரம்பித்தார். முன்னால் மோட்டார்
சைக்கிளில் அவர் செல்வார்.
எர்னஸ்டோ பின்தொடரவேண்டும்.
‘நான் வேனைத் தாறுமாறாக ஓட்டினேன்.
ஒவ்வொரு வளைவையும் சமாளிப்பதற்குள்
போதுமென்றாகிவிட்டது… கம்பீரமாக
நின்றுகொண்டிருநத
ஓஸோர்னோ எரிமலைக்குக் கீழே,
ஓஸோர்னோ ஏரியையொட்டி அழகான
நாட்டுப்புறப் பகுதியில்
வளைந்து வளைந்து சென்றது சாலை.
ஆனால் விபத்துகள்
நிகழ்வதற்கு அதிகமான வாய்ப்புகள்
நிறைந்த இந்தச் சாலையில் இயற்கைக்
காட்சியைக் கண்டு ரசிக்கக்கூடிய
மனநிலையில் நான் இருக்கவில்லை.’
எந்தவித சம்பவமும் நிகழாமல் அந்தப்
பயணம் முடிவடைந்தது. குறுக்கே ஓடிய
ஒரே ஒரு பன்றிக்குட்டிக்கு மட்டும்
அடிபட்டுவிட்டது.
(தொடரும்)
இதுவரை
Share/Bookmark
மருதன் 21 August 2012 தொடர், மோட்டார் சைக்கிள் டைரி
எர்னஸ்டோ, சே, சே குவேரா, மோட்டார்
சைக்கிள் பயணம்
5 Comments
கொஞ்சம் உணவு, நிறைய கனவு
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம்
5
ஆல்பர்ட்டோவின் பல்கலைக்கழக நண்பர்
ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது அவர்
மனைவி குழுப்பத்துடன் அவர்களைப்
பார்த்தார். புழுதி படிந்த ஆடைகளுடன்
இரு ஜிப்ஸிகள் போல் அவர்கள்
தோற்றமளித்தார்கள்.
‘இன்னும் ஒரு வருடத்தில் டாக்டர் பட்டம்
கிடைத்துவிடும். எதற்கு இந்தத்
தேவையற்ற பயணம்? எப்போது திரும்பப்
போகிறீர்கள் என்பதே தெரியாமல்
எதற்கு அநாவசியமாக
உடலை இப்படி வருத்திக்கொள்கிறீர்கள்?’
மூன்று தினங்கள் அவர்களுடன்
தங்கியிருந்துவிட்டு இருவரும்
புறப்பட்டார்கள். தெற்கில் உள்ள
பாஹியா ப்ளாங்கா என்னும் துறைமுக
நகரில் எர்னஸ்டோவின் நண்பர்கள்
இருந்தனர். அவர்களுடன்
இணைந்து நகரத்தைச் சுற்றி வந்தார்கள்.
வண்டியைப் பழுது பார்த்தார்கள்.
கையிருப்பில் இருந்த ரொட்டியும்
இறைச்சியும்
காலியாகிக்கொண்டிருந்தது. பணமும்
கூடத்தான். கடைசியாக அவர்கள் நன்றாகச்
செலவிட்டது இங்குதான்.
உணவு கிடைக்கும்போதெல்லாம் ஒட்டகம்
போல்
வயிறு முழுக்கச் சாப்பிட்டுவிட்டு பிறகு பட்டினி கிடக்கமுடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
என்று நினைத்துக்கொண்டார் எர்னஸ்டோ.
வண்டியின் பாரம் தொடக்கத்தில்
இருந்தே தாறுமாறாக இருந்ததால்
அவ்வப்போது வண்டி சாய்ந்தும் சரிந்தும்
சென்றுகொண்டிருந்தது. போதும்,
இனி நான் ஓட்டுகிறேன்
என்று சொல்லி எர்னஸ்டோ பொறுப்பேற்றுக்கொண்டார்.
‘நேரம் வீணாகிப் போனதைச்
சரிக்கட்டுவதற்காக வேகமாக
ஓட்டினேன். ஒரு வளைவில் மணல். மோட்டார்
சைக்கிள் சறுக்கி விழுந்தது. இந்தப்
பயணத்திலேயே இதுதான் மோசமான
விபத்து. ஆல்பர்ட்டோவுக்குக்
காயமெதுவும் ஏற்படவில்லை. ஆனால்
சிலிண்டரின் கீழ் என் கால்
சிக்கி சூடுபட்டுப் புண்ணானது.’
மழை குறுக்கிடும்போது எஸ்டான்ஷியா என்று அழைக்கப்படும்
பண்ணை நிலம் அல்லது கால்நடைப்
பண்ணையில் ஒதுங்கிக்கொண்டார்கள்.
அல்லது ரயில் நிலையம் கண்ணில் பட்டால்
மரக்கட்டை போல் படுத்து உறங்கினார்கள்.
ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருந்த
வண்டி, சகதியில் சிக்கும்போதெல்லாம்
விழுந்தது. சரளைக் கற்கள் நிரைந்த
சாலையில் விழுந்து எழுவதும்
வாடிக்கையாகிப் போனது.
அதிகாலை வேளை, உறக்கம்
கலைந்து எழுந்ததும் எர்னஸ்டோ மேட்
பானம் தயாரிப்பதற்காக நீர் கொண்டுவர
சென்றார். திடீரென்று உடல் நடுங்கத்
தொடங்கியது. ‘ஒரு வித்தியாசமான
உணர்வு ஏற்பட்டது.
பத்து நிமிடங்களில், நான் பேய்
பிடித்தவனைப் போல்
கட்டுப்படுத்தமுடியாத
அளவுக்கு பயங்கரமாக நடுங்கத்
தொடங்கினேன். குவினைன்
மாத்திரைகளால் எந்தப் பலனுமில்லை.
வினோதமான தாளங்கள் ஒலிக்கின்ற
பறையைப் போல்
எனது தலை விண்விண்னென்று தெறித்தது.
வடிவமற்ற வண்ணங்கள் கண்முன் சுழன்றன.
குமட்டல் ஏற்பட்டது.
சிரமப்பட்டு பச்சை நிறத்தில்
வாந்தியெடுத்தேன்… எதுவும்
சாப்பிடமுடியவில்லை.’
மீண்டு எழுந்து, ஆல்பர்ட்டோவுக்குப்
பின்னால் அமர்ந்து அவர்மீது தலையைச்
சாய்த்து உறங்கியபடியே பயணத்தைத்
தொடர்ந்தார் எர்னஸ்டோ. சோயலே சோயல்
என்னும் இடத்தை அடைந்து அங்குள்ள
மருத்துவமனைக்குச் சென்றார்.
பென்சிலின் ஊசி போடப்பட்டது. அடுத்த
நான்கு மணி நேரத்தில் காய்ச்சல்
மறைந்தது. ஆனாலும் மருத்தவர்
அவரை வெளியேற அனுமதிக்கவில்லை.
அடுத்த சில
தினங்களுக்கு நோயாளி உடையில்
மெலிந்த தேகத்துடன்
அசட்டு தாடியுடன் படுத்து கிடந்தார்
எர்னஸ்டோ.
போகலாம் என்று மருத்துவர் இறுதியாக
அனுமதி அளித்தபோது சிறைச்சாலையில்
இருந்து விடுவிக்கப்பட்ட உணர்வுடன்
வெளியில் பறந்து வந்தார் எர்னஸ்டோ.
ஏரிகளை நோக்கி வண்டி புறப்பட்டது.
மேடுகளிலும் பள்ளங்களிலும்
ஏறி இறங்கும்போதெல்லாம் வண்டியின்
பாகங்கள் சத்தம்
எழுப்பியபடி குலுங்கி ஆடின.
ஆல்பர்ட்டோ ஒயர் கொண்டு சிலவற்றை இறுக
கட்டியிருந்தார்.
இறைச்சி இப்போது முழுக்கவும்
காலியாகியிருந்தது.
இரவு நேரங்களில் வெட்டவெளியில்தான்
தங்கியாகவேண்டும். கூடாரம் அமைத்து,
தரையில்
படுத்து தவழ்ந்தபடி உள்ளே நுழைந்துகொண்டார்கள்.
சிறு சத்தம் கேட்டாலும் வெளியில்
வந்து ஒரு சுற்று சுற்றி வந்து ஆபத்து எதுவுமில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு,
விட்ட இடத்திலிருந்து உறக்கத்தைத்
தொடரவேண்டும்.
வருடிக்கொடுக்கும் தென்றல்
காற்று எப்போது உலுக்கியெடுக்கும்
சூறாவளியாக மாறும்
என்று சொல்லமுடியாது. அடக்கமாக
இருக்கும் கூடாரம்
எப்போது பிய்த்துக்கொண்டு பறக்கும்
என்று தெரியாது குளிரும் மழையும்
வெய்யிலும் மாறிமாறித் தாக்கின.
San Martin de los Andes
நோக்கி அவர்கள் முன்னேறிக்
கொண்டிருந்தார்கள். மீண்டும் இந்த
முறை எர்னஸ்டோவே வண்டியை ஓட்டினார்.
மீண்டும் ஒரு திருப்பம் வந்தது. மீண்டும்
ஒருமுறை வண்டி கீழே விழுந்தது.
சலசலத்துச் செல்லும் நீரோடையில்
விழுந்தார்கள். இந்த
முறை வண்டி மிகுந்த சேதமடைந்தது.
கூடுதலாகப் பின்பக்க டயர் பஞ்சர்
ஆகிவிட்டது. அடுத்த
இரண்டு மணி நேரத்துக்கு பழுது பார்க்கும்
வேலைதான். பின்பக்கத்தில் உள்ள
அத்தனை பாரத்தையும்
அகற்றி கீழே வைத்துவிட்டு நெம்புகோலால்
டயரை விடுவித்து, ஒட்டி,
மாட்டி முடிப்பதற்குள் அலுப்பும்
சலிப்பும் ஆக்கிரமித்துக்கொண்டன.
அன்றைய இரவை பண்ணைத் தொழிலாளர்களின்
சமையலறையில் கழித்தார்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கே பரவிய
சமையல்
புகை எர்னஸ்டோவை எழுப்பிவிட்டது.
தொழிலாளர்களுடன் இணைந்து மேட் பானம்
அருந்தினார். கசப்பான மேட் பருகிய
தொழிலாளர்கள், எர்னஸ்டோவின்
இனிப்பு மேட் பானத்தைக்
கிண்டலடித்தார்கள். பெண்கள்
மட்டுமே இனிப்பு சேர்த்து அருந்துவார்களாம்.
எர்னஸ்டோ அவர்களுடைய வாழ்நிலையைத்
தெரிந்துகொள்ள விரும்பினார். ஆனால்
அவர்கள் அவ்வளவு இலகுவாகப்
பேசுபவர்களாக இல்லை. ‘அவர்கள் அதிகம்
பேசவில்லை. ஆராகானிய (Aragon)
இனத்தைச் சேர்ந்தவர்களின் பொதுவான
பண்பு அது. கடந்த காலத்தில் அவர்களைக்
கொடுமைப்படுத்தியவர்களும்,
இன்னும்கூட அவர்களைச்
சுரண்டி வருபவர்களுமான
வெள்ளையர்களைக் கண்டு அவர்கள்
இப்போதும் அஞ்சினார்கள். நிலத்தைப்
பற்றியும் அவர்களுடைய வேலைகளைப்
பற்றியும் நாங்கள் கேட்டபோது, அவர்கள்
தங்கள் தோள்களைக் குலுக்கிக்கொண்டு,
தெரியாது என்றோ இருக்கலாம்
என்றோ பதிலளித்தார்கள்.’
அருவருப்பான ஆடைகள் அணிந்து,
கிடைத்ததை வாய் நிறைய அள்ளிப்
போட்டுக்கொண்டு (எர்னஸ்டோவோடு ஒப்பிட்டால்
ஆல்பர்ட்டோ கொஞ்சம் நாகரிகமாக உண்டார்
என்று சொல்லலாம்)
ஆங்காங்கு ‘பன்றிகளைப் போல்’
திரிந்ததாக நினைவுகூர்கிறார்
எர்னஸ்டோ. அவர்களை மருத்துவர்கள்
என்று அழைக்க யாரும் இல்லை அங்கே.
அவர்கள் சத்தியம் செய்திருந்தாலும்
யாரும் நம்பத் தயாரில்லை.
ஆந்திய மலைத்தொடரின் அடுக்கடுக்கான
குன்றுகளுக்கு இடையில்
வளைந்து வளைந்து சென்ற சாலையில்
அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். San
Martin de los Andes  மரங்கள் அடர்ந்த
மாபெரும் மலைகளால்
சூழப்பட்டிருந்தது. ‘சுற்றுலாத்
தலமாக மாறிய பிறகே இந்நகரத்தின்
தட்பவெப்பநிலை மற்றும்
போக்குவரத்து தொடர்பான பிரச்னைகள்
தீர்க்கப்பட்டன. அந்நகர மக்களின்
பிழைப்புக்கும் வழி கிடைத்தது.’
உள்ளூர் மருத்துவமனையில்
தங்களை அறிமுகம்
செய்துகொண்டு தங்குமிடம்
வேண்டினார்கள். அருகில் தேசியப்
பூங்கா அலுவலகம் இருக்கிறது,
அங்கே உங்கள் தந்திரம்
வேலை செய்கிறதா பாருங்கள்
என்று சொல்லி திருப்பியனுப்பி விட்டார்கள்.
இங்கு அவர்களுக்கு இடம் கிடைத்தது.
சமைத்துக்கொள்ள அனுமதியும்
வழங்கப்பட்டது. வைக்கோலின் கதகதப்பில்
நன்கு உறங்கினார்கள்.
நாகரிகத்தின் நிழல் படியாத அந்த
நகரத்தைக் கண்டதும்
எர்னஸ்டோ மயங்கினார். கனவு காணவும்
ஆரம்பித்துவிட்டார்.
‘ஒரு ஆய்வுக்கூடத்தை அமைக்கவேண்டும்
என்று நாங்கள் திட்டமிட்டோம். அந்த
ஆய்வுக்கூடத்தில் ஏரியை நோக்கிய
பெரிய ஜன்னல் இருக்கும்.
குளிர்காலத்தில் அனைத்தும் பனியால்
மூடப்பட்டிருக்கும்போது,
ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச்
செல்வதற்கு ஒரு ஹெலிகாப்டர்
இருக்கும். அங்கே நாங்கள் படகில்
சென்று மீன் பிடிப்போம். காட்டுக்குள்
எண்ணற்ற முறை பயணம் செய்வோம்.’
ஒரு ஓட்டை வண்டியும் அன்றைய தினம்
வாங்கிய சிறிதளவு மாட்டிறைச்சியும்
உடன் ஒரு நண்பனும்
மட்டுமே இருந்தபோதிலும் கனவுகளில்
ஹெலிகாப்டர்கள் சத்தமிட்டபடி வளைய
வந்தன. ஆந்திய மலைத்தொடர்
எர்னஸ்டோவை வசீகரித்திருந்தது.
இப்படியொரு அழகு பிரதேசம்
இருக்கும்போது யார்
வீடு திரும்புவார்கள்? பேசாமல்
இங்குள்ள ஏரிக்கரையில் நிரந்தரமாகக்
குடியேறிவிட்டால் என்ன?
(தொடரும்)
இதுவரை
Share/Bookmark
மருதன் 14 August 2012 தொடர், மோட்டார் சைக்கிள் டைரி
எர்னஸ்டோ, கிரானோடோ, சிச்சினா,
பயணம், மோட்டார் சைக்கிள் டைரி
3 Comments
பயணம் ஆரம்பம்
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம்
4
அடுத்த பயணம்
குறித்து யோசிப்பதற்கு முன்பு காதல்
குறுக்கிட்டுவிட்டது.
சிச்சினா (முழுப்பெயர், Maria del
Carmen ‘Chichina’ Ferreyra)
எர்னஸ்டோவுக்கு முன்னரே அறிமுகமானவர்
என்றாலும் நீண்ட இடைவெளிக்குப்
பிறகு ஒரு திருமண விழாவில்
பதினாறு வயது சிச்சினாவைக்
கண்டபோது,
எர்னஸ்டோவுக்கு விவரிக்கமுடியாத
பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
உண்மையில்
அது இரு தரப்பு ஈர்ப்பாகவே இருந்தது.
சிச்சினாவின் வளமான செல்வப் பின்னணி,
சமூக மதிப்பு, எட்டமுடியாத
உயரத்தில் இருக்கும் அவளுடைய
குடும்ப நிலை அனைத்தையும்
மீறி இருவருக்கும் இடையில் காதல்
துளிர்த்தது.
பிப்ரவரி 9, 1951
அன்று இரண்டாவது பயண
வாய்ப்பு எர்னஸ்டோவைத் தேடிவந்தது.
கப்பலில் செவிலியராகப்
பணியாற்றுவதற்காக அரசுப்
பொது சுகாதார நிலையம் அவரைத்
தேர்ந்தெடுத்திருந்தது.
பிரேசிலை நோக்கிச் செல்லும் Anna
G என்னும் டாங்கர் கப்பலில்
எர்னஸ்டோ இணைந்துகொண்டார்.
பேடகோனியா, டிரினிடாட் அன்ட்
டொபாக்கோ, பிரிட்டிஷ் கினியா,
வெனிசுலா மற்றும் பிரேசிலிய
துறைமுகங்களுக்கு இந்தக் கப்பல்
அவரை இட்டுச் சென்றது.
எதிர்பார்த்ததைவிடவும் விரிவான,
நீண்ட பயணம்தான். ஆனாலும்
எர்னஸ்டோவுக்கு முழுத்
திருப்தியில்லை. பல புதிய
பகுதிகளில் கால் பதிக்க
முடிந்தது மறக்கமுடியாத அனுபவம்
என்றாலும் கால் பதிப்பதைத்
தாண்டி வேறு எதுவும்
செய்யமுடியவில்லை.
துறைமுகங்களில் கப்பல்
ஒதுங்கும்போது,
இறங்கிவந்து ஒரு சுற்று சுற்றி வருவதற்குள்
அழைப்பு வந்துவிடும்.
மொத்தத்தில் நிலப்பரப்புகளில்
சிறிதளவு நேரத்தையே செலவிடமுடிந்தது.
ஜூன் மத்தியில் பியூனஸ் ஏர்ஸ்
திரும்பிய எர்னஸ்டோ தனது கப்பல்
கனவை அத்தோடு துறந்தார்.
திரும்பும்போது தன்
தந்தைக்கு ஒரு வித்தியாசமான
பரிசையும் கொண்டு வந்திருந்தார்.
ஒரு குறிப்பேடு. பயண அனுபவங்கள்,
பொன்மொழிகள், சிந்தனைகள் ஆகியவற்றால்
அது நிரம்பியிருந்தது.
சிறுகதை எழுதுவதற்கும்கூட
முயற்சி செய்திருந்தார்.
ஜூன் இறுதியில் மீண்டும் மருத்துவப்
பள்ளியில் இணைந்துகொண்டுவிட்டார்.
இப்போது எர்னஸ்டோவுக்கு 23
வயது நடந்துகொண்டிருந்தது.
கல்லூரி போரடிக்க
ஆரம்பித்துவிட்டது. முந்தைய சைக்கிள்
பயணமும், அதிகம் காணமுடியாத கப்பல்
பயணங்களும்
அவரை இம்சித்துக்கொண்டிருந்தன.
சிச்சினாவுடன்
இணையமுடியுமா என்னும் கேள்விக்கும்
விடை கிடைக்கவில்லை. சிச்சினாவின்
வீட்டில் இருந்து சம்மதம்
பெறுவது சாத்தியமில்லை என்பது இருவருக்கும்
தெரிந்திருந்தது.
அக்டோபர் 17ம் தேதி கோர்டோபாவுக்குச்
சென்று கிரானோடோவைச் சந்தித்தார்
எர்னஸ்டோ. திராட்சைக் கொடிகளுக்குக்
கீழே, இனிப்பான மேட் பானத்தை (ஒருவித
தேயிலையில் இருந்து தயாரிக்கப்படும்
அர்ஜென்டினாவின் தேசிய பானம்)
பருகியபடி, ‘ துயரமான வாழ்வின்
சமீபகால நிகழ்வுகளைப் பற்றி அவர்கள்
உரையாடிக்கொண்டிருந்தனர்.’ நார்ட்டன்
500 ரக மோட்டார் சைக்கிள்,
லா பாடெரோஸாவை (La Poderosa II,
சக்திவாய்ந்தது என்று பொருள்)
பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.
சென்ற முறை சந்தித்ததைவிடவும் அதிக
சலிப்பு கொண்டவராக
கிரானாடோ காட்சியளித்தார்.
தொழுநோய் மருத்துவமனையில்
அவருக்குத் தரப்படும் ஊதியம்
குறைவாக இருந்ததைச்
சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார்.
எர்னஸ்டோவும் தன் உள்ளத்தில்
சுமந்துகொண்டிருந்த
ஏக்கங்களை வெளிப்படுத்தினார்.
மருத்துவக் கல்லூரியும் பாடங்களும்
அவரைச் சோர்வடைய வைத்திருந்தன.
இவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றால்
செய்யவேண்டியது ஒன்றுதான்.
வெளியேறவேண்டும். ‘வெப்ப மண்டலக்
கடல்களில் பயணம் செய்வது,
ஆசியா முழுவதும் சுற்றித் திரிவது.
தொலைதூரப் பிரதேசங்களுக்கு எங்களைக்
கொண்டு சென்றன கனவுகள்.’
திடீரென்று அந்தக் கேள்வி எழுந்தது.
‘வட அமெரிக்காவுக்கு நாம் ஏன்
போகக்கூடாது?’
‘எப்படி?’
‘லா பாடெரோஸாவில்தான்.’
தொடங்கி வைத்தவர் கிரானோடோ.
எர்னஸ்டோவைக் காட்டிலும்
அவருக்கே இந்தப் பயணம் அதிகம்
தேவைப்பட்டது. முப்பதுகளின்
தொடக்கத்தில் இருந்த கிரானாடோ, இந்த
வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை.
எர்னஸ்டோ போன்ற ஒரு பயணத் தோழன்
கிடைத்துவிட்டபிறகு யோசிப்பதற்கு என்ன
இருக்கிறது? இந்த
வாய்ப்பை நழுவவிட்டால்
இன்னொன்று கிடைக்காமலேகூட
போய்விடலாம்.
எர்னஸ்டோ உடனே ஒப்புக்கொண்டார். என்ன
பிரச்னை வந்தாலும்
அதை எதிர்கொண்டு வென்றுவிடுவது என்று பேசிக்கொண்டார்கள்.
உடனடியாக கனவு செயல்வடிவம் பெறத்
தொடங்கியது. கடவுச் சீட்டுகள்,
சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றைப்
பெறும் முயற்சிகளை இருவரும்
தொடங்கினார்கள்.
எர்னஸ்டோ தன் விருப்பத்தைத் தந்தையிடம்
தெரிவித்தார்.
பிறகு நடந்ததை எர்னஸ்டோ சீனியர்
நினைவுகூர்ந்தார்.
‘1951ல் நடந்தது அது.
அப்போது கோர்டோபாவைச் சேர்ந்த
ஒரு அழகான இளம் பெண்ணிடம்
எர்னஸ்டோ நட்புகொண்டிருந்தான். அவன்
அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வான்
என்றுதான் நானும்
எனது குடும்பத்தினரும்
நினைத்திருந்தோம்.
’நான் வெனிசூலாவுக்குச்
செல்லப்போகிறேன் அப்பா!’
என்று எர்னஸ்டோ ஒருநாள் என்னிடம்
கூறினான்.
‘எவ்வளவு நாள்களுக்கு நீ
அங்கே இருக்கப் போகிறாய்?’ என்று நான்
கேட்டேன்.
ஒரு வருடத்துக்கு என்று அவன்
பதிலளித்தான். நான் அடைந்த
வியப்புக்கு அளவே இல்லை.
‘அப்படியானால் சிச்சினா?’ என்று நான்
கேட்டேன்.
‘அவள் என்னைக் காதலிக்கிறாள் என்றால்
காத்திருப்பாள்’ என்று பதில் வந்தது.
அவன் அப்பெண்ணை மிகவும்
நேசித்ததை நான் அறிந்திருத்தால்,
புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற
அவனது வேட்கைக்கு அது தடையாக
இருக்கும் என்று நினைத்தேன்.
எர்னஸ்டோவை என்னால்
புரிந்துகொள்ளமுடியவில்லை.’
முடிந்தவரை அனைத்துப் பாடங்களிலும்
தேர்வுகளை எடுத்து முடிக்கவேண்டும்.
இது எர்னஸ்டோவின் பணி. ஆல்பர்டோவின்
வேலை, மோட்டார் சைக்கிளைத் தயார்
செய்து வைப்பது. பிறகு,
வழித்தடத்தைத் தெரிந்துகொள்வது.
வீட்டில் அனுமதி வாங்கியாகிவிட்டது.
பயண ஏற்பாடுகள் முடிந்துவிட்டன.
புறப்படவேண்டியதுதான் பாக்கி.
எர்னஸ்டோ கனவு காண
ஆரம்பித்துவிட்டார். ‘நாங்கள் மேற்கொள்ள
இருந்த பயணத்தின் முழுப் பரிமாணமும்
எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
கண்களுக்குத் தெரிந்ததெல்லாம்
விரிந்து கிடக்கும் புழுதி நிறைந்த
சாலையும், வடக்கு நோக்கிய பயணத்தில்
விரைந்து கொண்டிருந்த எங்களுடைய
மோட்டார் சைக்கிளும்தான்.’
ஜனவரி 4, 1952 அன்று அட்லாண்டிக்
கரையையொட்டி அவர்கள் பயணம்
ஆரம்பமானது. போகும் வழியில்
ஒரே ஒரு வேலை பாக்கியிருக்கிறது.
சிச்சினாவிடம்
இருந்து விடைபெறவேண்டும்.
மிராமரில் உள்ள ஒரு உல்லாச வீட்டில்
சிச்சினா தன் அத்தையுடன்
தங்கியிருந்தார் என்று தகவல் வந்ததும்,
அங்கு அவரைச் சந்திக்க
முடிவு செய்தார் எர்னஸ்டோ.
கிரானோடாவும் ஒப்புக்கொண்டார்.
எர்னஸ்டோவின் மாமா, காய்கறிகளும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும்
கொடுத்தனுப்பியிருந்தார். வண்டியின்
பின்பக்கத்தில் பாரம் அதிகமிருந்தது.
சிறிது கவனம் குறைந்தாலும்
சமநிலை குலைந்துவிடும் அபாயம்
இருந்தது. என்றாலும் அவர்கள் எதையும்
பொருட்படுத்தாமல்
பறந்துகொண்டிருந்தனர்.
எர்னஸ்டோ சிச்சினாவுக்காக
ஒரு பரிசுப் பொருளைக்
கையோடு எடுத்து வந்திருந்தார்.
அது ஒரு நாய்க்குட்டி.
அதற்கு ஆங்கிலத்தில் ‘கம் பேக்’
என்று பெயரிட்டிருந்தார் எர்னஸ்டோ.
பயணம் முடிந்ததும் மீண்டும்
சிச்சினாவின் கரங்களுக்குத்
திரும்பிவிடவேண்டும் என்பதால் அந்தப்
பெயர். வழியில்
இரண்டு முறை ‘திரும்புதல்’
கீழே விழுந்தது. ஒரு குதிரையின்
காலில் சிக்கி மிதிப்பட்டது.
தொடர்ச்சியாக வயிற்றுப் போக்கும்
ஏற்பட்டது.
எர்னஸ்டோவின் மனம் முழுக்க சிச்சினா.
பயணம்
முடியும்வரை சிச்சினா காத்திருப்பாளா?
அவளுடன் ஒன்றிணைவது சாத்தியமா?
ஆல்பர்டோவின் கவலையோ தன் பயண
நண்பனின்மீதே இருந்தது.
காதல்வசப்பட்டிருக்கும்
இப்படியொரு இளைஞனை அழைத்துக்கொண்டு நீண்டதொரு பயணத்தை மேற்கொள்வது சாத்தியமா?
தொடங்குவதற்குள் இந்தப் பயணம்
முடிந்துவிடுமா? நான் சரியான
முடிவைத்தான் எடுத்திருக்கிறேனா?
ஒருவேளை தனியாகக்
கிளம்பியிருக்கவேண்டுமோ? சிச்சினா,
காதல், நாய்க்குட்டி போன்ற விவகாரங்கள்
சிக்கீரம் முடிந்துவிடவேண்டும்
என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார்
கிரானோடோ.
சிச்சினா தங்கியிருந்த இடத்தில்
இரு தினங்கள்
தங்கியிருந்து அவளது உறுதிமொழியையும்
அன்பையும் பெற்றுக்கொண்டு கிளம்பலாம்
என்று எர்னஸ்டோ சொல்லியிருந்தார்.
ஆனால், இரு தினங்கள் எட்டு தினங்களாக
வளர்ந்த நின்றது.
கிரானோடா அமைதியாகக்
காத்திருந்தார்.
அவ்வப்போது சீண்டிவிட்டுக்கொண்டும்
இருந்தார். என்ன,
பெருங்கவிஞரே உமது காதலியிடம்
இருந்து விடைபெற்றுக்கொண்டாகிவிட்டதா?
எர்னஸ்டோ சிச்சினாவின் விரல்களில்
விரல்கள் சேர்த்து, கடல் அலைகளைப்
பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
‘பிரிவின் கசப்பு என்
மூச்சோடு கலந்துவிட்டது. இறுதியாக,
சாகசங்களை நோக்கி வீசும் காற்றால்
வேறு உலகங்களை நோக்கி நான் தூக்கிச்
செல்லப்பட்டேன்.’ விடைபெறும் தருணம்
வந்துவிட்டது. சிச்சினா நான்
திரும்பும்வரை காத்திருப்பாயா?
சிச்சினா தலையசைத்தாள்.
எர்னஸ்டோ அளித்த ஜெர்மன்
ஷெப்பர்டை சிச்சினா பெற்றுக்கொண்டார்.
பதினைந்து அமெரிக்க
டாலரை எர்னஸ்டோவுக்கு அளித்தார்.
அமெரிக்காவில்
இருந்து தலைக்கு ஸ்கார்ஃப்
வாங்கி வருவதற்காக.
‘கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது.
குளிர்காற்று நிலத்தை நோக்கி வீசியது.
இந்தக் கரையோடு என்னைப் பிணைத்ததோர்
மடியில் என் தலை சாய்ந்திருந்தது.
சூழலின் அமைதியில் என்னுள்ளே ஒலித்த
குரலின் அதிர்வுகளின் லயத்தில்,
முழுப் பிரபஞ்சமும்
மிதந்துகொண்டிருந்தது.’
எர்னஸ்டோ விடைபெற்றுக்கொண்டார்.
(தொடரும்)

No comments:

Post a Comment

THANK YOU