Thursday 7 March 2013

புத்திசாலிகளாக நினைத்த யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

மூளைக்கு வேலை (மனக்கணக்கு)

எனக்குத் தெரிந்த மிக அன்புள்ள தாத்தா ஒருவர் எப்போது பார்த்தாலும் 'சீயக்காய்குச்சி' என்று எழுதி அதை படிக்கச்சொல்வார். படித்தால் மகிழ்வார். அவர் மளிகைக்கடை வைத்திருந்த போது இவ்வாறுதான் எழுதி வைப்போம் என்று என்னென்னவோ கதை சொல்வார். கடைசி வரை அது என்ன பொருள் என்று மட்டும் எனக்கு விளக்காமலேயே இறந்தும் விட்டார். அவரது அன்புக்காக இறைவன் அவருக்கு நற்பதவி தரட்டும்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எங்கேயாவது நம் தாத்தா வயதுள்ளவர்களோடு பேச நேர்ந்தால் நம்முடைய புத்திசாலித்தனத்தை எடைபோட அல்லது அவர்கள் திறமையைக் காட்ட மனக்கணக்கு சொல்லி பதில் சொல்லச் சொல்வார்கள். பல நேரங்களில் அது அறுவைக் கணக்காகவும் சில நேரங்களில் உண்மையிலேயே புத்திசாலித்தனமாகவும் இருக்கும். பல நேரங்களில் நான் சொல்லி விடுவதுண்டு.

அது போன்ற சில உண்மையான நேரான கேள்விகள். இங்கே இரண்டு கணக்குகளும் ஒரு சமயோசித புத்தி பற்றியதும் உள்ளது. முன்பொரு காலத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்தது.

இந்தக் கேள்விகளை என் உறவினர்கள் நண்பர்களிடம் கேட்டபோது பொதுவாக நான் புத்திசாலிகளாக நினைத்த யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

எல்வோரும் முயற்சி செய்து பின்னூட்டமிடலாமே. சரியான பதில்கள் வராவிட்டால் கடைசியில் நான் பதில் தருகிறேன்.

1. இதை நிறைய முறை படித்திருப்பீர்கள்.
ஒரு குளத்தில் ஒரு வகைப்பூவை இட்டால் அது அடுத்த நாளில் இரட்டித்து விடும். அந்தக் குளத்தில் முதல் தேதியன்று அந்தப்பூவில் ஒன்று போடப்பட்டது. இரண்டாம் தேதி அந்தப்பூ இரண்டானது. மூன்றாம் தேதி நான்கானது. நான்காம் தேதி எட்டானது. இவ்வாறு இரட்டித்து இரட்டித்து முப்பத்தோறாம் தேதி பூக்களால் குளமே நிரம்பி விட்டது.
என்றால் பாதி குளம் நிரம்ப எத்தனை நாள் பிடித்திருக்கும்?

2. மூன்று நண்பர்கள் நடை பயணமாக வெகுதூரம் பயணித்தனர். அதில் முதலாமவர் தன்னுடன் ஐந்து அப்பங்களை கொண்டு வந்தார். இரண்டாமவர் மூன்று அப்பங்களை கொண்டு வந்தார். முன்றாமவர் உணவு ஏதும் கொண்டு வரவில்லை.
அவர்கள் நீண்ட தூரம் பயணித்த பின் பசியெடுக்கவே இருந்த எட்டு அப்பங்களையும் மூவரும் சரியாகப் பகிர்ந்து உண்டனர். மூன்றாமவர் உணவுக்காக எட்டு ரூபாய்களைக் கொடுத்து இருவரையும் பகிர்ந்து எடுத்துக் கொள்ள சொல்லி விட்டார்.
இருவரும் எவ்வாறு பகிர்ந்து கொண்டால் சரியானது?.

3. ஒருவருக்கு மன்னரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவர் அத்தண்டனையிலிருந்நத தப்ப மன்னராலேயே ஒரு வழியும் பரிந்துரைக்கப்பட்டது.
சிறையின் அறையிலிருந்து வெளியேற இரு பக்கம் பாதைகள் உண்டு. ஒரு பாதையில் சென்றால் பசியுடன் பல சிங்கங்கள் உலாவும் அறைக்கு சென்று அவற்றுக்கு இரையாகலாம். மற்றொரு வழி சென்றால் தப்பித்து விடலாம். ஒவ்வொரு பாதைக்கும் ஒரு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவலாளிகளில் ஒருவர் எப்போதும் பொய்யே சொல்வார். மற்றவர் எப்போதும் உண்மையே பேசுவார். இருவரில் பொய்யர் யார் மெய்யர் யார் என்று காவலாளிகளுக்குத்தான் தெரியும். சிறைப்பட்டவருக்கு அறிவிக்கப்படவில்லை. ஏதாவது ஒரு காவலாளிடம் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு பாதையறிந்து தப்பித்துக்கொள்ளலாம்.
சிறைப்பட்டவர் என்ன கேள்வி கேட்டு தப்பித்திருப்பார்?.

நீங்களும் விடை சொல்ல முயற்சி செய்து பாருங்களேன்

No comments:

Post a Comment

THANK YOU