Saturday, 6 April 2013

ஆயிரத்தோரு அராபிய இரவுகள்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்களுக்கும் மேலாகிறது. இன்றைக்கும் அந்த திரைப்படத்தின் சுவாரஸ்யம் குறையவேயில்லை. கோடை விடுமுறையின் போது சிறார்களுடன்  மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.

ஆரவாரத்துடன் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தார்கள். படம் முடிந்த போது அலிபாபாவின் சாசகங்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்து போயிருந்தன. 


அன்று மாலையில் சிறுவர்கள் விளையாடும் போது ஒரு கதவை பிடித்து கொண்டு அண்டா ஹா ஹசம். அபு ஹா குகூம் திறந்திடு சீசேம் என்று அலிபாபாவில் திருடர்கள் குகையை திறக்கும் மந்திரச்சொல்லை சொல்லி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 நானும் இந்த படம் பார்த்த வயதில் இப்படி தான் விளையாடிக் கொண்டிருந்தேன். இன்றைக்கும் அந்த சொற்கள் மந்திர குகையின் வாசலை திறந்துவிடும் என்ற நம்பிக்கை அப்படியே மனதில் பதிந்து போயிருக்கிறது.

உலகின் மிகப்பழமையான கதைத்தொகுதி ஆயிரத்தோரு அராபிய இரவுகள். சாவின் முன்னால் அமர்ந்தபடியே ஷரசாத் ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்வாள். ஆயிரத்தோரு இரவுகள் அவள் சொன்ன கதைகள் கேட்டு அவளை உயிருடன் விட்டுவிடுவான் அவளது கணவன்.

இந்த கதைகளின் வழியே அரபு தேசத்தின் பழமையும் தொன்மையும் மிகை கற்பனையும் பாக்தாத் நகரின் மீதான புனைவுகளும் ஒன்று சேர்ந்து வெளிப்படுகின்றன.

ஆயிரத்தோரு இரவுக்கதைகளை வாசிக்கையில் இந்திய கதை மரபின் தொடர்ச்சியை காண முடிகிறது. குறிப்பாக திருடர்களை பற்றிய கதைகள் இந்தியாவில் அதிகம். நாட்டார் கதை மரபில் திருடர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. திருடர்கள் வெறும் சாகசகாரர்கள் மட்டுமில்லை. அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள். அதிகாரத்திற்கு எதிரானவர்கள்.

தமிழ் கதைகளில் வரும் திருடர்கள் மன்னர் காவலை மீறி அரண்மனையில் திருடுவதை தான் பெரிதாக நினைக்கிறார்கள். சில நேரங்களில் அரசனையே மயக்கி கட்டி திருடி வந்துவிடுகிறார்கள். திருடனை அரசன் பிடிக்க முடிவதேயில்லை. பலநேரம் திருடன் திருடப்போன இடத்தில் விதவிதமான சாப்பிடுகிறான். தூங்குகிறான். காதலிக்கிறான். என்றால் திருடன் நம் எல்லோருக்குள்ளும் உள்ள ஒரு அம்சமே.

அராபிய இரவுக்கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் தான் சிந்துபாத். பலமுறை சிந்துபாத்தின் கடற்பயண சாகசங்கள் படமாக்கபட்டிருக்கின்றன. தமிழில் இது தனித்து படமாக்கபடவில்லை.

அலிபாபா கதை பாக்தாத் நகரில் நடக்கிறது. அராபிய கதைமரபில் இது ஒரு இடைசெருகல் கதை என்றும் அறியப்படுகிறது. 

அராபிய கதையில் வரும் அலிபாபா ஒரு நாள் திருடர்கள்  தாங்கள் திருடிய பொருட்களை புதைத்து வைத்துள்ள குகையை காண்கிறான். அங்கே திறந்திடு சீசேம். என்றால் கதவு திறக்கும். மூடிடு சீசேம் என்றால் கதவு மூடிவிடும் என்பதை அறிந்து கொள்கிறான்.

திருடர்களுக்கு தெரியாமல் பொருட்களை திருடி வந்துவிடுகிறான்

அலிபாபா திருடிய தங்கத்தை நிறுத்து பார்க்க தனது அண்ணியிடம் இருந்து ஒரு தராசை வாங்கி வருகிறான். அவளோ அந்த தராசில் கொஞ்சம் அரக்கை ஒட்டி வைத்து அலிபாபா எதை நிறுத்தான் என்று கண்டுபிடிக்கிறாள். இதை அறிந்த அலிபாபாவின் அண்ணன் காசிம் தானும் திருடர் குகைக்கு போய் புதையல் எடுக்க விரும்பி மாட்டிக் கொள்கிறான்.

அவனை திருடர்கள் கொன்றுவிடுகிறார்கள். கொன்ற உடலை யாரும் அறியாமல் எடுத்து வந்து தைத்து உடலை மறைத்துவிடுகிறான் அலிபாபா. செத்துபோன உடல் காணாமல் போகவே இந்த திருட்டில் இன்னொருவனுக்கும் பங்கிருக்கிறது என்று நம்பிய திருடர்கள்  அலிபாபாவை தேட துவங்குகிறார்கள்.

இதிலிருந்து தந்திரமாக தப்பிக்கிறான் அலிபாபா. முடிவில் எண்ணை வணிகர் போல வந்த திருடர் தலைவன் அலிபாபா  அடிமை காதலியை கண்டுபிடிக்கிறான். அவளை பிடித்து வைக்கவே  அவளை மீட்க சென்ற அலிபாபா திருடனோடு சண்டையிட்டு தனது அடிமை காதலியை மீட்டு அவள் மூலம் திருடர்களை ஏமாற்றி மலையில் இருந்து தள்ளிவிடுகிறான் . 

இந்த கதை சற்று உருமாற்றங்களுடன் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. எம்.ஜி.ஆர் தமிழிலும் என்டி ஆர் தெலுங்கிலும் ஹிந்தியில் தர்மேந்திராவும் அலிபாபாவாக நடித்திருக்கிறார்கள்

அது தவிர வீடியோ விளையாட்டாகவும் காமிக்ஸ் புத்தகமாகவும், குழந்தைகள் சினிமாவாகவும் ஹாலிவுட்டிலும் ஜப்பானிலும் வெளியாகி உள்ளது.

 சுஜாதா வசனத்தில் ஆங்கில அனிமேஷேன் படமாக மீடியா ட்ரீம்ஸ் உருவாக்கியுள்ளது

எம்.ஜி. ஆர் நடித்த அலிபாபா 1956ல் வெளியானது.  மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. டி. ஆர் சுந்தரம் இயக்கம். தமிழின் முதல் கலர்படம் இதுவே. திருச்செங்கோடு ராமலிங்க சுந்தரம் என்பது தான் டி. ஆர் சுந்தரத்தின் பெயர்.

வசதியான நூற்பாலைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்திற்கு சென்று டெக்ஸ்டைல் தொழிற்நுட்பம் படித்து வந்தவர். எஸ்எஸ் வேலாயுதம் பிள்ளையுடன் இணைந்து இவர் சேலத்தில்  ஏஞ்சல் பிக்சர்ஸ் என்ற விநியோக நிறுவனத்தை துவக்கினார்.

அதில் கிடைத்த பணத்தில் கல்கத்தா சென்று இரண்டு படங்களை தயாரித்தார்கள். அந்த லாபத்தில் சேலத்தில் மார்டன் தியேட்டர்ஸ் உருவாக்கபட்டது. சதி அகல்யா இவர்களது முதல்படம் இவரது படப்பிடிப்பு அரங்கில் 250 பேர் முழுநேர ஊழியர்களாக வேலைபார்த்தனர்.

அலிபாபா அவரது பிரம்மாண்டமான தயாரிப்பு . இந்த படத்தில் நடனமாடுகின்ற பெண்களில் ஒருத்தியாக ஹிந்தி சினிமாவின் தாரகை வஹிதா ரஹ்மான் ஆடியிருக்கிறார். வஹிதா ஹிந்தி சினிமாவில் அங்கீகாரம் பெறாத காலமது.

எம்.ஜி. ஆருக்காக அராபியக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்ப்பட்டன. முதல் மாற்றம் அராபிய கதையில் வரும் அலிபாபா இளைஞன் இல்லை. அவனுக்கு திருமணமாகி  மகன் இருக்கிறான். அவனது அடிமை தான் மர்ஜீயனா. இப்படி தமிழுக்கு ஏற்ப மாற்றம் செய்திருக்கிறார்கள்

எது அலிபாபா படத்தை இன்றும் சுவாரஸ்யமானதாக்குகிறது. முதலில் திருடர்கள் உலகம். அவர்கள் ஒரு குகையில் வசிப்பது. நாற்பது பேர் ஒன்று சேர்ந்து திருட செல்வது. அந்த குகையின் உள்ளே கையால் சுற்றும் இயந்திரம். அதை இயக்கும் மனிதர்கள். திருடர் தலைவனின் அண்டாஹாஹசம் என்ற அடிதொண்டை குரல்.

அடுத்தது வறுமையில் உள்ள ஒருவனுக்கு புதையல் கிடைப்பது போன்று எதிர்பாராமல் பணம் கிடைப்பது. அல்லது திருடர்களிடம் திருடுவது. அதை கண்டு பொறமை படுகின்றவன். அதில் மாட்டிக் கொண்டு உயிர்விடுவது.

இந்த படத்தில் தங்கவேலு செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அவர் தன் கையில் பச்சை குத்திக் கொண்ட பெண் உருவத்துடன் பேசிக் கொண்டேயிருப்பார். ஒரு முறை அவரை இறந்த மனிதன் உடலை பச்சை குத்த அழைத்து போவார்கள். அந்தக் காட்சி இன்றைக்கும் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது

திருடர்கள் அலிபாபாவை கண்டுபிடிக்க அவன் வீட்டின் வெளியே சங்கேத குறியிடுகிறார்கள். அதை அறிந்த அவன் பலவீடுகளிலும் சங்கேத குறியீடுகிறான். அதுபோல மரபீப்பாக்களில் ஒளிந்து கொண்டு திருடர்களை அருவியில் தள்ளிவிடுவது என்று திரைக்கதை அமைப்பில் பல சுவாரஸ்யங்களை இந்த படத்தில் காணமுடிகிறது

உடைகள், ஒப்பனைகள் நகரவீதிகள் யாவும் பாக்தாத்தின் அராபிய கலாச்சாரம் என்ற போதும் அதை தமிழ்மக்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காரணம் கதை செல்லும் வேகம். மற்றும் பாடல்கள் ,

மாசிலா உண்மை காதலே ஏ,எம்,ராஜா. பானுமதியின் பாடல் இன்றைக்கும் மெய்மறக்க செய்கிறது

இந்த படம் இன்றைக்கும் ரசிக்கபடுவதற்குமுக்கிய காரணம் நம் மனதில் இது போன்ற திருடர்களை பற்றிய சாகசக்கதைகள் பால்யத்தில் கேட்டு ஆழமாக புதைந்து போயிருக்கிறது. மற்றது  கதை சொல்லும் முறை. உலகின் எல்லா கலாச்சாரத்திலும் கதை சொல்லல் முக்கிய அறிதல் முறையாகவே உள்ளது .

இப்படி நமக்கு வெளியில் உள்ள ஒரு கலாச்சாரத்தின் கதையை நாம் உருமாற்றி தமிழில் நாவலாகவோ, படமாகவோ செய்வது மிகவும் குறைவு. அதனாலே இன்றைக்கும் அலிபாபா படம் முக்கியமானதாகவே இருக்கிறது

விளையாடி விளையாடி சிறார்கள் தங்களை திருடர்களாக நினைக்கிறார்கள். வீட்டின் கதவுகள் குகையாகின்றன. சிறார்களில் ஒருவன் கூட தன்னை அலிபாபா என்று சொல்லிக்கொள்ளவேயில்லை. அலிபாபாவை விடவும் திருடன் தான் அவர்களை வசீகரம் செய்கிறான்.

அலிபாபா போல நூறு நூறு கதைகள் ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் உள்ளது. கதையில்லை என்று அலுத்துக்  கொள்ளும் வெகுஜன சினிமா இந்த கதைகளஞ்சியங்களை மறந்து பல வருசமாகி விட்டது.

No comments:

Post a Comment

THANK YOU