Saturday, 6 April 2013

கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில


q09
தெரிந்ததைச் சொல்வதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான். முதலாவது இலக்கியம்; இரண்டாவது சாஸ்திரம். முதல் கலை; இரண்டாவது ஸயன்ஸ். முதல் உணர்ச்சி நூல்; இரண்டாவது அறிவு நூல்.
ஒரு ஸி.வி.ராமன், ஜகதீச சந்திரவசு, ஒரு மார்க்கோனி, ஒரு எடிஸன், ஒரு கார்ல் மார்க்ஸ், ஒரு கீத் பிறக்காவிட்டால் நாகரிக வளர்ச்சிக்கு சாதனம் இருக்காது.
ஒரு பாரதி, ஒரு கம்பன், ஒரு தாகூர், ஒரு வால்ட் விட்மன் பிறக்கா விட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படாது; வாழ்க்கை ரஸிக்காது. வெறும் வெட்டவெளியாய், காரண காரியங்களால் பிணைக்கப் பட்ட ஒரு இருதயமற்ற கட்டுக்கோப்பாக இருக்கும்.
தெய்வத்தைப் படைப்பது கவிஞன்; தெய்வத்தை அறிவது ஸயன்டிஸ்ட்.
  *********
“உண்மையே இலக்கியத்தின் ரகசியம்”
  *********
கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு, ஆனால் அவற்றின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.
  *********
நான் எப்பொழுதும் ராமலிங்க சுவாமியைச் சாப்பாட்டு சாமி என்று சொல்லுவது வழக்கம். கடவுள் என்றால் எத்தனை டஜன் மாம்பழங்கள் என்று சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவர் திருவாசகத்தை அனுபவித்த அருமையைப் பாருங்கள்.
“வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!”
  *********
மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள் சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்னத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில் வாழ்க்கை ரகசியங்களில், அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறி விட முடியாது.
  *********
இன்று உள்ள நிலைமையில் தமிழ்ப்பாட்டு சீர் பெற வேண்டுமெனில் அதாவது இன்று பாட்டு எழுத வேண்டுமெனில், பாஷையின் வளத்தை அறிந்து அதை சாகசமாக உதறித் தள்ளவும், ஏற்றுப் பயன்படுத்தவும் தகுதி வாய்ந்த பயிற்சியும், உணர்ச்சியின் வேகத்தை அனுபவித்து அறிய அறிவிக்கக் கூடியவர்களாலேயே முடியும். இன்று அப்படிப் பட்டவர்கள் யாருமே கிடையாது என்பது என் கட்சி. இனி வருங்காலத்தில் வரட்சியா, வளமா என்பது இன்றைய நிலையில் ஊகிக்க முடியாத விஷயம். ஒன்றை, பாரதியை வைத்துக் கொண்டு உடுக்கடித்துக் காலந்தள்ளியது நமக்குப் பெருமை தரும் காரியம் அல்ல. ஆனால் கடையில் ‘பிஸ்கோத்து’ வாங்குவது போலவோ, கவர்மென்ட் அதிகாரம் செய்வது போலவோ, கவிராயருக்கு ‘ஆர்டர்’ கொடுக்க முடியாது. அவன் பிறப்பது பாஷையின் அதிருஷ்டம். அவனுக்கு உபயோகமாகும் பாஷையை மலினப்படுத்தாமலிருப்பது நமது கடமை.
  *********
உண்மைக் கவிதைக்கு உரைகல் செவி. கம்பன் சொல்லுகிறான் “செவி நுகர் கவிகள்” என்று.கவிதையின் உயர்வைக் காதில் போட்டுப் பார்க்க வேண்டும்.கவிஞன் தனது உள்ளத்து எழுந்த ஒரு அனுபவத்தைச் சப்த நயங்களினால்தான் உணர்த்த முடியும்………
கவிதையில், சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.
  *********
கலை ஒரு பொய்; அதிலும் மகத்தான பொய். அதாவது மனிதனின் கனவுகளும் உலகத்தின் தோற்றங்களும் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய். இந்தக் கலை என்ற நடைமுறைப் பொய்தான் சிருஷ்டி ரகசியம் என்ற மகத்தான மெய்யை உணர்த்தக் கூடிய திறன் படைத்தது……
தத்துவ சாஸ்திரிக்கு ஒரு கண்ணீர்த்துளி, ஒரு சொட்டு ஜலமும், சில உப்புகளும் என்றுதான் தெரியும். அந்தக் கண்ணீரின் ரகசியத்தை, அதன் சரித்திரத்தை அவன் அறிவானா? அது கலைஞனுக்குத்தான் முடியும்……கவிஞன் பக்தனாக இருப்பதில் ஆச்சயமில்லை. ஆனால், கவிஞன் பக்தனாக இல்லாமலிருப்பதிலும் அதிசயமில்லை. அவன் சிருஷ்டி அகண்ட சிருஷ்டியுடன் போட்டி போடுகிறது. அதில் பிறக்கும் குதூகலந்தான் கலை இன்பம்.
  *********
கவி என்கிற பகுதியைக் கவனிக்கும் பொழுது சங்கீதத்துடன் இணைந்தது என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கவேண்டும். சங்கீதத்திற்கு ஒரு வடிவத்தை அர்த்தத்தைக் கொடுப்பது பாட்டு. பாட்டும், சுருதியும் கலந்த கூட்டுறவுதான் பண். பாட்டின் ஜீவநாடி, உணர்ச்சி, அழகு, வாய்மை. அதுதான் கவி.
  *********
கவிதை தமிழில் இருக்கலாம். ஆனால் கவிதையைப் பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றி ஆராய்ச்சி இருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தை (Form) பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். கவிதைக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைப் போல் இயற்கையான அமைப்பு வேறு கிடையாதென்றே கூறி விடலாம்.ஆனால் கவிதை என்றால் என்ன என்று தமிழர்கள் ஆராயவே இல்லை.
  *********
கவிதை மனிதனின் அழகுணர்ச்சியையும், உணர்ச்சிப் பான்மையையும் சாந்தி செய்வது.
  *********
கடவுள் கனவு கண்டார், இந்தப் பிரபஞ்சம் பிறந்தது. கவிஞன் கனவு கண்டான்; இலக்கியம் பிறந்தது. இதிலே ‘பத்து தலை ராவணன் உலகில் இல்லையே; கவிஞன் பொய்யன்தானே’ என்று கவிதையிலே சரித்திரத்தையும், பொருளாதாரத்தையும், ஒழுக்கத்தையும் தேடிக் கொண்டிருக்கும் பெரியார்கள் கவிஞனை அறியவில்லை; அறிய முடியாது. சிருஷ்டியின் ரகசியத்தைச் சற்று அறிந்தவர்கள் கவிஞனைத் தராசில் போட்டுப் பார்ப்பவர்கள் அல்ல. கவிஞனது சக்தியை அனுபவிப்பவர்கள்.
சிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன். அவனுடைய ஆனந்தக் கனவுதான் இந்தப் பிரபஞ்சம். அதன் ரகஸியம்,, தத்துவம் வேறு. அது இன்பத்தின் விளைவு. அவனுடைய அம்சத்தின் சிறு துளிதான் கவிஞன். அவன்தான் இரண்டாவது பிரம்மா. கண்கூடாகக் காணக் கூடிய பிரம்மா.
  *********
கவிஞன் சமயத்தை அதன் உயிர் நாடியை வெகு எளிதில் அறிந்துவிடுகிறான்.
  *********
தமிழ் மறு மலர்ச்சியின் (Prometheus) பிரமாத்தியூஸ், நமது அசட்டுக் கலையுணர்ச்சிக்கு பலியான பாரதியார், அவரும் பாவங்களை எழுப்ப முடியவில்லையானால் பழைய நாகரிகச் சின்னங்களையணிந்து கொண்டு உலவி வரும் நமது மடாதிபதிகளைப் போல் தமிழும் ஒரு ‘அனக்ரானிஸமாகவே’ (Anachronism) காலவித்தியாசத்தின் குருபமாகவே இருக்க முடியும்.
  *********
புதுமைப்பித்தன் படைப்புகள் நூலிலிருந்து                       குரு

No comments:

Post a Comment

THANK YOU