Friday, 21 September 2012

டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!

காலம் மாறிவிட்டதாகவும், இது கணிணி யுகமென்றும், நாடு வல்லரசாகப் போகிறதென்றும் திண்ணைக்கு நாலு பேர் இன்னமும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் திணிக்கப்பட்ட மலமும் தினந்தோறும் தாழ்த்தப்பட்டவர்கள் உடலிலும், மனதிலும் பதிந்து நிற்கும் ஆதிக்க சாதி நகக் குறியும் நாம் வாழும் சமூகத்தின் அருவருப்பையும், அயோக்கியத்தனத்தையும் திமிராக அறிவிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.
ஏதோ அம்பேத்கருக்கு அந்தக் காலத்தில் நடந்தது என்று நினைக்க முடியாத அளவுக்கு இந்தக் காலத்தில் தொடரும் தீண்டாமையின் கொடுமைகளுக்குள் இழுத்து விடுகிறது இச் சிறுநூல். அம்பேத்கருக்கு பள்ளிக் கூடத்தில் நடந்தது, இன்று ஐ.ஐ.டி. யில் தலித் மாணவர்களுக்கு நடக்கிறது. வடிவங்கள்தான் வேறுபடுகின்றன. ஆதிக்க சாதி வக்கிரங்கள் தொடர்கின்றன. இதோ, நூலின் அனுபவங்களை நீங்கள் வாழும் சமூக அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்.
இளம் வயது, பள்ளிப் பருவ கோடை விடுமுறையில் தனது தந்தையைப் பார்க்க கோர்கானுக்கு இரயிலில் பயணிக்கிறார்கள் அம்பேத்கரும் அவரது அண்ணன் மற்றும் உறவுக்கார இளைஞர்களும். புதிதாக தனித்து வந்து இரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கியவுடன் சாதி தரை தட்டுகிறது. தண்ணீரையும் உணவையும் கூட அவர்கள் தொட முடியாத அளவுக்கு ஆதிக்க சாதி அசிங்கங்கள் சூழ்ந்து கொள்ளும் அனுபவத்தை நீங்களே பாருங்களேன்.
“… நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக் கொண்ட ஸ்டேஷன் மாஸடர் எங்கள் பரிதாப நிலையைக் கண்டு மிகவும்  வருந்தினார். இந்துக்களின் வழக்கமபோல, நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறி விட்டேன். (பம்பாய் இராஜதானியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமூகத்தினருள் மஹர்களும் ஒன்று). அவர் முகம் திடீரென  மாறி விட்டது. அதிசயக்கத்தக்க வெறுப்புணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது.  எனது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்று விட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்றுகொண்டு இருந்தோம். பதினைந்து, இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை; சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்; பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி  எல்லாம் மறைந்து  எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.
அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எங்களைக் கேட்டார். மாட்டுவண்டி வாடகைக்குக் கிடைத்தால், கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாகக் கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டிக்காரர்களுக்கும் தெரிந்து விட்டபடியால், தீண்டத்தகாதவர்களைத் தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று தங்களை இழிவுபடுத்திக் கொள்ளவோ, தங்களை அசுத்தப் படுத்திக்கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை.” ( நூல். பக். 9, 10)
பலவிதமான சூழ்நிலைகளுக்குப் பிறகு ஒரு வழியாக காசுக்கு ஒத்துக் கொண்டது ஜாதி. சாதிக்கு விடை கொடுத்தது மாடு, “… ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது; எங்களைப் பார்த்து “உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?” என்று கேட்டார். எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண அவர் முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. “எங்களால் வண்டி ஓட்ட முடியும்” என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று “வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்துவிட்டு வண்டியை அவர்களே ஓட்டி வருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்” என்று கூறினார். இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்துக் கொடுப்பதுடன், தன்னைத் தீட்டடையச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான்.” (நூல்)
“…இரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது… எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம்… தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதரக் கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்று நீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்தத் தண்ணீர் இருக்கவில்லை. அந்த நீரின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால், நாங்கள் அதைக் குடிக்கவில்லை. அதனால் வயிறு நிரமபும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று… நான்கு , அய்ந்து மைல் தூரம் நாஙகள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார். பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்து கொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தமாகிவிடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டிவர மறுத்த அந்த மனிதன், தன் மதக் கோட்பாடுகளை எல்லாம் கை விட்டுவிட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம்..” (நூல்)
ஆதிக்க சாதி மனநிலையின் சாதிய, வர்க்க ரசவாதங்களை அம்பேத்கர் விவரிக்கும் இந்த இடத்தில் தெற்கே ‘நான் தேவன்டா’ என்று மீசையை முறுக்கிவிட்டு வடக்கே ‘நான் பாவன்டா’ என்று வடை சட்டியோடு பிழைப்புக்காக ‘அண்ணே’ போட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் சமூக நிலைமைகள் தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறது.
அம்பேத்கரின் நினைவலைகள் பலவிதமான காட்சிகளையும் கருத்துக்களையும் நம் கண்முன் விரிக்கிறது,
“…எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால், நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால் மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஓர் இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது
என்று வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார். எனவே, “நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்” என்று கூறினார். அதன்படி சுங்கம் வசூலிப்பவரிடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பேசினேன். எனவே நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருதுவார் என்று எண்ணினேன். ஆனால் என் தந்திரம் பலிக்கவில்லை. “உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள்? மலைமேல் தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக் கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை” என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்குத் திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டுமே அவர் எங்களிடம் சொன்னார்…. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைப் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்கவேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதன் காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்குக் காரணம்.”(நூல்.)
இப்படிப்பட்ட சமூக அநீதிகளுக்கு தனிப்பட்ட முறையில் நான் காரணமல்ல என்று மட்டும் சமாதானமடைய நியாயம் உள்ளதா? ஒட்டுமொத்த சமூகமும் தாழ்த்தப்பட்ட மக்களின் சேவைகளால் பயன்பெற்றுக் கொண்டு அவர்களுக்கான இயற்கையான உரிமைகளைக் கூட மறுக்கும் இந்த சமூக அமைப்பு, இதை மௌனமாய் அனுமதிக்கும் ஆதிக்க சாதி மனநிலை கேவலத்தின் உச்சம் என்பதை சுருக்கென உணர வைக்கின்றன பல பகுதிகள்.
வாழ்நாள் முழுக்க வருணாசிரம வெறிக்கு எதிராக சிந்தித்தவர் மட்டுமல்ல, அதையே சந்தித்தவர் அம்பேத்கர் என்பதை அவர் பரோடாவில் பட்ட அனுபவங்கள் விவரிக்கின்றன.
“…நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத்தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சினையாகவே இருப்பான் என்பதையும் பற்றிய அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்து விட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது “எங்கு தங்குவது? யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்?” என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். நான் பொய்சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை. அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்துவிட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன்…. தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்று அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராடடுவதில்லை என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்று கருதினேன். …. விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடை களைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார். பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார். பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஓர் இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்,
அந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார். அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்த வித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன். “எவ்வாறு நீ தங்கமுடியும்? இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வர வேண்டும் ” என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பெர்சி பெயரை உபயோகப் படுத்திக் கொள்கிறேன். “எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே” என்று நான் கூறினேன். நான் கூறியதை ஏற்றுக் கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
“… பிரச்சினை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்தோ! இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை……. நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப்பார்வையுடன், உயரமாக தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்து கொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர். என் அறைமுன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். “நீயார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்” என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை…… மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது; உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன்….” (நூல்)
ஒரு இளைஞனாக அம்பேத்கர் அழுத கண்ணீர், காலங்கள் கடந்தும் பல இளைஞர்களின் விழிகள் மாறி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணமான சமூக அமைப்பை நினைத்து வெட்கப்பட்டு குற்ற உணர்ச்சியோடு ஒருவன் தன்னைக் குறுக்கிக்கொள்வது மட்டும் நியாயமாகாது. வெளிப்படையான இந்த சமூக அநீதியை வெளிப்படும் களங்கள், முக்கியமாக ஆதிக்க சாதி உணர்வு நிலைக்கு எதிராக ஒவ்வொருவரும் சுயசாதிக்கு எதிராக கலகம் செய்வதும் ஆதிக்க சாதி அசிங்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதும்தான் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கான முதல் வழி. இந்நூலில் அம்பேத்கரின் நினைவலைகள் அனுபவத்தின் வழி உணர்த்துவதும் இதுதான்.
பார்ப்பன இந்துமதம் தொடங்கி பார்சி, கிறிஸ்தவ, இசுலாமிய மதங்கள் வரை அனைத்துமே தம்மை தீண்டத்தகாதவனாக நடத்திய அனுபவங்களை அம்பேத்கர் பகிர்ந்துள்ளார். ஒரு புரட்சியைத் தீண்டினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கான சுயமரியாதையும் , பொதுவான ஒரு சமூகத்தையும் பெற முடியும் என்று சொல்வதற்கான அனுபவம் அம்பேத்கருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அதை நாம் சொல்வதில் தப்பேதுமில்லை.
உடனே சாதி என்பது இந்தியாவுக்கே உள்ள தனிப்பிரச்சினை, இதை மேலைநாட்டு மார்க்சியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று மேல், கீழ் பார்க்கும் அன்பர்களே! இந்தியாவுக்கே உள்ள இந்த  விசேசப் பிரச்சினையை மேலை ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயக வழியில் என்று முயன்று அம்பேத்கரே தன் இறுதிநாளில் நொந்து கொண்டதுதான் இந்த போலி ஜனநாயகம். எல்லா சமூக அநீதிகளுக்கும் பாதுகாப்பாகவும் அடிப்படையாகவும் விளங்கும் இந்திய ஆளும் வர்க்க, ஆதிக்க சாதி அரசமைப்பை தகர்த்தெறிவதுதான் இந்நூலை படித்து முடித்தவுடன் ஏற்படும் உணர்வு. படித்துப் பாருங்கள், நீங்களும் உணர்வு பெறுங்கள்…
நூல்: விசாவுக்காக காத்திருக்கிறேன். டாக்.பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்.
விலை: ரூ.10.00
வெளியீடு: திராவிடர் கழகம்.
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367
____________________________________________

No comments:

Post a Comment

THANK YOU