
ஆங்கில மாதப் பெயர்களைத் தமிழில் எழுதுவது குறித்து பலர் என்னிடம் வினவி இருக்கின்றனர். அவர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டு பயன்படுத்துபவர் சிலர். கேட்டதோடு சரி என்று விட்டுவிட்டவரும் சிலர். அண்மையில் திருத்தமிழ் மறுமொழி பகுதியில் இதேபோல் ஒரு வினாவை எழுப்பி இருந்தார்? அதை அப்படியே கீழே தருகின்றேன்:-
"தமிழ் வருடங்கள் மாதங்கள் திகதிகள் என வகையுள்ளன. அவ்வகைப்படுத்தியை பலர் ஆசைக்கும் ஆர்வத்திற்கும் தெளிவு படுத்த முடியுமா..?
காரணம், சூன்- என்று உங்கள் பதிவில் உள்ளன. அவை தமிழ்ப்பெயருள்ள மாதமா..?
இப்படி பலர் எழுதுகின்றனர். அதனால் தான் தமிழ் அறிந்த உங்களிடம் வினவுகின்றேன்... தயவுடன் தாருங்கள்" -விழி வானலை.சில காலத்திற்கு முன்பு ஆசிரியைத் தோழி ஒருவரும் இது தொடர்பாகக் கேட்டிருந்தார் இப்படி:-
"வணக்கம் ஐயா.
என் பள்ளியில் தமிழ்மொழி ஆசிரியர்கள் மத்தியில் ஒரு சர்ச்சை. august மாதத்தைத் தமிழில் எப்படி எழுதுவது? ஒரு சாரார் ஆகஸ்ட்டு என்றும் ஒரு சாரார் ஆகஸ்டு என்றும் எஞ்சியவர்கள் ஆகஸ்ட் என்றும் எழுதி மாணவர்களைக் குழப்பிவிட்டனர். தயவுசெய்து ஒரு சிறந்த விளக்கம் அளியுங்கள்." -ஜெயா சுப்ரா
இவர்கள் இருவருக்கும்.. இதேபோன்ற மயக்கம் இருக்கும் அன்பர்களுக்குமாகச் சேர்த்து இந்தப் பதிவை இடுகின்றேன்.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்று பலர் மிக இயல்பாக எழுதிவருகின்றனர்! அச்சு ஊடகங்களும் இப்படியே எழுதுகின்றன! பள்ளிப் பாட நூல்களிலும் அப்படியே! இதுவே சரி எனப் பிடிவாதம் செய்து சாதிப்பவர்களும் இருக்கின்றனர்.
உண்மையில் பார்க்கப்போனால், மேலே உள்ளவையும் அல்லது ஆகஸ்ட்டு, ஆகஸ்டு, ஆகஸ்ட் இவை எதுவுமே தமிழ் வடிவம் அன்று. காரணம், இவற்றில் சமற்கிருத / கிரந்த எழுத்துக் கலப்பு உண்டு. இவை, சிலரால் தமிழில் ஏற்றப்பட்ட - ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம் மட்டுமே.
ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் தனி இயல்பு, தனித்தன்மை உண்டு. ஒரு மொழி போல இன்னொரு மொழியை 100% சரியாக ஒலிக்க முடியாது. அப்படி ஒலிக்க நினைப்பதும் மொழியியல் அடிப்படையில் மிகத் தவறு.
சுபானிசு (Spanish) மொழியில் எப்ப்டி எழுதுகிறார்கள் தெரியுமா?

yanayir, fibrayir, maris, abrīl, mayu, yunyu, yulyu,
aġustus, sibtambir, uktubar, nufambir, disambir
aġustus, sibtambir, uktubar, nufambir, disambir
பிரெஞ்சு மொழியைப் பாருங்கள்:-
Janvier, Février, Mars, Avril, Mai, Juin, Juillet,
Août, Septembre, Octobre, Novembre, Décembre
Août, Septembre, Octobre, Novembre, Décembre
அவ்வளவு ஏன் நமது மலாய் மொழியைப் பாருங்களேன்:-
Januari, Februari, Mac, April, Mei, Jun, Julai,
Ogos, September, Oktober, November, Disember
Ogos, September, Oktober, November, Disember
இவற்றுள் Mac (March), Ogos (August) ஆகிய இரண்டும் முற்றிலும் மாறுபட்டிருப்பதைக் கவனிக்க.
ஆக, அவ்வந்த மொழியின் ஒலியன்களுக்கு ஏற்பவே பிறமொழிச் சொற்கள் ஒலிக்கப்படும். உலக நடைமுறையும் இதுதான்.
ஆங்கிலத்தைச் சிறிதும் பிசகாமல் ஒலிக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறோம். கொஞ்சம் மாற்றி ஒலித்தாலும் கூட மாபெரும் மொழித்தவறு, உச்சரிப்புப் பிழை, மொழிச் சிதைவு செய்துவிட்டது போல குற்ற உணர்ச்சிக்கு நாம் ஆளாகிப் போகிறோம்.
மொழி பயன்பாட்டில் தெளிவு உள்ளவர்கள் இவ்வாறு குழம்புவதே கிடையாது. ஆங்கிலத்தைத் தவறாக உச்சரித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாவதும் கிடையாது.
அந்த அடிப்படையில், தமிழுக்குச் சில தனித்தன்மைகள், இலக்கணம், மரபு என்று உண்டு. இவைகளைப் பின்பற்றித்தான் பிறமொழிச் சொற்களை உச்சரிக்க வேண்டும். மொழியியல் அடிப்படையில் அதுவே சரியானதும் கூட.
ஆகவே, ஆங்கில மாதங்களைத் தமிழ் முறைப்படி, தமிழ் ஒலிப்புபடி, தமிழ் எழுத்துபடி உச்சரிப்பதே சரியானது. அதன்படி, ஆங்கில மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு:-
சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்தெம்பர், அத்தோபர், நவம்பர், திசம்பர்
இப்படி பயன்படுத்துவோர் சிலர் மட்டுமே. ஆனாலும் இதுவே சரியான வடிவம். மிகப்பலர் இந்த வடிவத்தை கிண்டல், கேலி செய்வதைப் பார்த்துள்ளேன். உண்மை விளங்காமல், மொழியியல் அறியாமல் அவர்கள் பேசுவது நகைப்பிற்குரியது.
தமிழ் கற்றவர்களும் தமிழ் ஆசிரியர்களும்தாம் மாற்றங்களைச் செய்ய முடியும், செய்ய வேண்டும். அதற்கு மொழியறிவும் கொஞம் மனத்துணிவும் போதும்.
No comments:
Post a Comment
THANK YOU