இதுவரை 13 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. நீங்களும் மனது வைத்தால் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம் யார் ஜெயிப்பார் என கணிக்கவே முடியாதபடி தினம் தினம் திருப்பங்களோடும், கடுமையான சவால்களோடும் நடந்த இந்த வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று உலக சாம்பியனாக வரலாற்றில் மீண்டும் தன்னைப் பதித்திருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். செய்தி கேட்டு ‘ஆனந்த’க் கூத்தாடும் நண்பர்களே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இதுவரை 13 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. இந்த 13 கிராண்ட் மாஸ்டர்களில் ஆண்கள் 10 பேர். பெண் கிராண்ட் மாஸ்டர்கள் மூவர். அதிலும் இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் விஜயலட்சுமி சென்னையை சேர்ந்தவர். இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டரும் சென்னையைச் சேர்ந்தவர்தான். அவர் சேதுராமன். தற்பொழுது சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு காமர்ஸ் படித்து வருகிறார். கிராண்ட் மாஸ்டருக்கு அடுத்த நிலையிலான உலக செஸ் மாஸ்டர்கள் பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த 29 ஆண்களும், 5 பெண்களும் வென்றிருக்கிறார்கள். செஸ் ஒரு தனித்துவமான கேம். தனியே கிரவுண்ட் தேவையில்லை. இந்த உடைதான் அணிய வேண்டும், ஷூ அணிந்துதான் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. யார் வேண்டுமானாலும் விளையாடலாம். இரண்டு பேர் இருந்தாலே போதும். இன்னும் சொல்லப்போனால் தனியாளாக தன் கையே தனக்குதவி என ஒருவரே கூட விளையாடலாம். கிராண்ட் மாஸ்டர்கள் பலரும் தங்கள் விளையாட்டுத் திறனை சோதிக்கத் தனியாளாக விளையாடிப் பார்ப்பது உலகப் பிரசித்தம். நீங்களும் மனது வைத்தால் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம். பயிற்சியும் இடைவிடாத முயற்சியும்தான் வேண்டும். எங்கே பயிற்சி பெறலாம்? "1960ல் மானுவல் ஆரான் உலக செஸ் மாஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்நாடுதான் செஸ்ல நம்பர் ஒன்" என்கிறார் தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் செயலாளரான மோகன் முரளி. "தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ளே நேரு ஸ்டேடியத்தில் இருக்கிறது. இதன் மாடியில் பயிற்சி அகாதெமி ஒன்று இருக்கிறது. அங்கே தற்பொழுது 30 பேர் தினந்தோறும் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம்" என்கிறார் மோகன். தமிழகம் முழுக்க 150க்கும் மேற்பட்ட பயிற்சி அகாதெமிக்கள் உள்ளன. சென்னையில் மட்டுமே 20 தனியார்பயிற்சி மையங்கள் இருக்கின்றன.5 வயதிலிருந்து பயிற்சியளிக்கப்படுகிறது. தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி பெற மாதத்திற்கு குறைந்த பட்சம் 300லிருந்து 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் மூன்று முதல் 6 நாட்கள் வரை பயிற்சியளிக்கப்படுகிறது. "எங்கள் பயிற்சி மையத்தில் சேருபவர்கள் பெற்றோர்களோடு சேர்ந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறோம். காரணம், பயிற்சி மையத்தில் தினமும் 1 மணி நேரம் விளையாடும்போது பெற்றோர்களும் அதைக் கற்றுக்கொள்வதால் வீட்டில் இருவரும் இணைந்து விளையாடுவார்கள். இதனால் அனுபவம் அதிகமாகிறது. ஏதாவது சந்தேகம் எழும்போது அதை மறு நாள் வந்து இருவரும் கேட்டு விளக்கம் பெறுவார்கள். பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் மீது அதிக நம்பிக்கை வரும். பிள்ளைகள் தொடர்ந்து ஜெயிக்க உறுதுணையாக இருப்பார்கள்" என்கிறார் சென்னை திருவொற்றியூரில் சக்தி பயிற்சி மையம் என்ற செஸ் அகாதெமி வைத்திருக்கும் சக்தி பிரபாகர். ஒவ்வொரு பயிற்சி மையத்தினரும் ஒவ்வொரு விதமாக பயிற்சியளிக்கிறார்கள். முக்கியமாக மூன்று நிலைகளில் பயிற்சியளிக்கிறார்கள். முதலில் தியரி செஸ்ஸில் பிரசித்தமான மூவ்கள் அடங்கிய புத்தகங்கள் புத்தகக் கடைகளில் உள்ளன. ஆரம்ப ஆட்டக்காரர்கள் இதன் மூலம் கற்றுக்கொள்ளவும் செஸ் ஆட்ட விதிகளை முழுமையாக அறிந்துகொள்ளவும் பயிற்றுவிக்கிறார்கள். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி முடிவுற்றதும் கிராண்ட் மாஸ்டர்கள் பயன்படுத்திய பிரசித்தமான மூவ்கள் அடங்கிய புத்தகம் விற்பனை செய்யப்படுகின்றன. அதையும் பயன்படுத்துகிறார்கள். பயிற்சி: இரண்டாவதாக இரண்டு நபர்கள் இணைந்து விளையாடி பயிற்சி பெறுகிறார்கள். பயிற்சியின்போது எழும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார்கள். கணினி வழியே: இணையம், கணினி வழியே பல்வேறு படி நிலைகளில் உள்ளவர்களுக்கான செஸ் விளையாட்டு மென்பொருள்கள் மூலம் பயிற்சி பெறுவது மூன்றாவது நிலை. டிப்ஸ்: செஸ் விளையாட அதிகப் பொறுமை தேவை. எனவே தியானம், யோகா போன்றவை கைகொடுக்கும். போட்டிக் காலங்களில் மாமிச உணவை தவிர்த்தலும் அரை வயிறு சாப்பிடுவதும் நல்லது. அதிகாலை பயிற்சி பெறுவது நல்ல பலனளிக்கும் என்கிறார்கள் பயிற்சியாளர்கள். தமிழகத்தில் சாதித்த கிராண்ட் மாஸ்டர்களின் பின்னணியை அலசினால் ஓர் உண்மை புலப்படும்.அவர்களில் பெரும்பாலோர் சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள். ஏற்கெனவே ஜெயித்த கிராண்ட் மாஸ்டர்கள் கூட சென்னையிலேயே பயிற்சி மையம் துவங்கி செட்டிலாகி விடுகிறார்கள். இதனால் கிராமங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. கிராமங்களிலிருந்து ஜொலித்தவர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்கு மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் காரணம்: கிராமங்களில் பயிற்சி மையங்கள் குறைவு. செஸ் குறித்த விழிப்புணர்வு இல்லை. யாரும் அங்கே பயிற்சி மையங்கள் துவங்காததால் அவர்களுக்கு சொல்லித்தர ஆளில்லை. "கிராமங்களில் அதிக அளவில் போட்டிகள் நடத்துவதன் மூலம் அதிக மாணவர்களை ஈர்க்க முடியும். அதிக மாணவர்கள் ஆர்வமாக முன்வரும்போது பயிற்சி மையங்கள் துவக்க முன்வருவார்கள்" என்கிறார் கிராண்ட் மாஸ்டரான ஆர்.பி.ரமேஷ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக செஸ்குருகுல் என்ற பயிற்சி மையம் நடத்துகிறார். இரண்டாவது காரணம்: செஸ் பணக்காரர்களுக்கான விளையாட்டு. தனியாளாகப் பயிற்சி பெற ஒருவருக்கு 5,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் வரை செலவாகும். மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பதிவுக்கட்டணமாக ஆயிரங்களில் செலவு செய்ய வேண்டி வரும்."சாதாரணமாக ஒரு போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமானால் பதிவுக்கட்டணமாக 100 ரூபாயிலிருந்து வசூலிக்கப்படுகிறது.போட்டி நடத்த இடம், சாப்பாடு என போட்டி அமைப்பாளர்கள் செலவு செய்துவிட்டு திரும்பிப் பார்த்தால் லாபமே மிஞ்சாது. எனவே யாரும் போட்டி நடத்த யோசிக்கிறார்கள்" என்கிறார் சக்தி பிரபாகர். மூன்றாவது காரணம்: "செஸ் விளையாடுபவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது. மாணவர்கள் நாங்க இதை விளையாடினால் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறார்கள்" என்கிறார் ஆர்.பி.ரமேஷ். ஆரம்பகாலங்களில் வங்கிகள், எல்.ஐ.சி., ரெயில்வே, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவில் வேலைக்கு எடுத்தார்கள்.தற்போது அது கணிசமாக குறைந்து விட்டது என்கிறார்கள் பயிற்சியாளர்கள். "செஸ் விளையாடினால் அறிவு கூர்மையாகும். எங்கள் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் எல்லோரும் +2வில் அதிக மதிப்பெண் பெற்று பெரிய கல்லூரிகளில் பொறியியல் சேரப்போகிறார்கள்" என்கிறார் சக்தி பிரபாகர். அரசு ஆணை: கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழக அரசு 7 வயதிலிருந்து 17 வயதுவரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் செஸ் விளையாடப் பயிற்சி தரப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஆணை வெளியிட்டிருந்தார். இந்தக் கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு காஞ்சிபுரம், தர்மபுரி, ஈரோடு, இராமநாதபுரம், திருச்சி ஆகிய இடங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிக்கொரு கிளப்பும் அதைக் கண்காணிக்க ஓர் ஆசிரியரும் இருக்க வேண்டும். அரசின் ஆணை செயல்படுத்தப்படும்போது எல்லா மாணவர்களும் செஸ் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு அதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும்போது தானாகவே பயிற்சி மையங்கள் அதிகரிக்கும். குக்கிராமங்களிலிருந்து கூட கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகலாம். சென்னை மட்டுமே தமிழ்நாடல்ல! கிராண்ட் ‘தமிழர்கள்’: விஜயலட்சுமி இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர். சென்னையைசேர்ந்தவர். தந்தை சுப்பராமன்தான் இவரது பயிற்சியாளர். செஸ் ஒலிம்பியாட்டில் வென்ற முதல் பெண். 2000 மற்றும் 2002ம் ஆண்டுகளில் வென்றவர். இந்திய பெண்கள் சேம்பியனாக ஆறுமுறை ஜெயித்த பெருமைக்குரியவர். 2005ல் கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீயம் ஜாவை மணந்தார்.ஏர் இந்தியாவில் பணிபுரிகிறார். சசி கிரண் தமிழகத்தின் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர்(2000). 32 வயதாகும் இவர் சென்னையை சேர்ந்தவர். ஆசிய அளவில் மூன்றாவது ரேங்கிங்கும் உலக அளவில் 26வது FIDE ரேட்டிங்கும் பெற்றவர். இவரது நகர்த்தல்கள் Internet Chess Clubல் ‘பப்லூ’ என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு 2002ல் அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆர்த்தி ராமசாமி 2003ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்தவர். எட்டு வயதில் ஆழ்வார்பேட்டையிலுள்ள முத்தையா செட்டியார் பள்ளியில் துவங்கியது இவரது செஸ் வாழ்க்கை. 1993ல் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் முதல் பரிசை வென்றது தான் இவரது ஆரம்பம். கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷை திருமணம் செய்தார். ஆர்.பி.ரமேஷ் பன்னிரெண்டு வயதில் பக்கத்து வீட்டுக்காரருடன் துவங்கியது இவரது செஸ் ஆர்வம். 2003ல் கிராண்ட் மாஸ்டரானார். செஸ்ஸில் அடியெடுத்து வைத்தவர் தற்பொழுது சென்னையில் செஸ்குருகுள் என்ற பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.இந்திய செஸ் ஃபெடரேஷன் தேர்வு கமிட்டி உறுப்பினர். உலக அளவிலான போட்டிகளில் பயிற்சியாளராக இருந்தவர். தீபன் சக்கரவர்த்தி 2006ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இவர் இந்தியாவின் 14வது கிராண்ட் மாஸ்டர். மதுரையை சேர்ந்தவர். இவரது அப்பா ஜெயக்குமார் விளையாடியதைப் பார்க்கும்போது ஏற்பட்ட ஆர்வத்தில் இவரும் களத்தில் குதித்தார். எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.ஏ. பயின்றவர். மகேஷ் சந்திரன் இவரது சொந்த ஊர் மதுரை. இந்தியாவின் பன்னிரெண்டாவது கிராண்ட் மாஸ்டர். ஏழு வயதில் அண்ணன் மற்றும் அம்மா, அப்பா செஸ் விளையாடுவதைப் பார்த்தபோது ஆர்வம் தொற்றிக் கொண்டது. இவர் செஸ் பயிற்சியாளரும் கூட. டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை கணிப்பொறி பட்டப்படிப்பு பயின்றவர். அருண் பிரசாத் 2008ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர். சுந்தர்ராஜன் கிடம்பி 2009ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர். ஆர்.ஆர்.லக்ஷ்மன் 2008ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியில் ஜெயித்த இவர் இந்தியாவின் இருபதாவது கிராண்ட் மாஸ்டர். அதிபன் இந்தியாவின் 23வது கிராண்ட் மாஸ்டர். இவரது தந்தை பாஸ்கரன். சென்னையை சேர்ந்த இவர் தற்பொழுது எஸ்.ஆர்.எம்.மில் படித்து வருகிறார். சேதுராமன் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர். சென்னையை சேர்ந்தவர். சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இரண்டாமாண்டு காமர்ஸ் படிக்கிறார். நான்கு வயதில் செஸ்ஸில் அடி எடுத்து வைத்த இவர் தன் அப்பாவிடமிருந்தே பயின்றார். 8 வயதில் சென்னை அளவில் ஜெயித்த இவர், 2009ல் தன் பதினாறு வயதில் உலக சாம்பியனாக தடம் பதித்தார். பயிற்சி மையங்கள் சென்னை 1) 8 பை 8, மேற்கு மாம்பலம், 98407 03544 2) அண்ணாநகர் செஸ் அகாதெமி, 98401 82753 3) செஸ் குருகுள் - தி.நகர், 94444 09043 4) குரோம்பேட்டை செஸ் இன்ஸ்டிட்யூட், 98841 07267 5) கிங் செஸ் ஃபவுண்டேஷன், மாதவரம், 95510 46464 6) புரசை செஸ் அகாதெமி,புரசைவாக்கம், 94440 05250 7) சக்தி செஸ் அகாதெமி, மயிலாப்பூர், 94442 55196 8) தி.நகர் செஸ் அகாதெமி, தி.நகர், 94444 66155 காஞ்சிபுரம் 1) மாஸ்டர் மைண்ட் செஸ் அகாதெமி, பம்மல், 94441 77703 2) மவுண்ட் செஸ் அகாதெமி, உள்ளகரம், 94442 10914 சேலம் 1) நோவா செஸ் அகாதெமி, அலகாபுரம் புதூர் 2) யுடிலிடி ஃபாரம் ஆஃப் செஸ்,மெய்யனூர், 94432 40899 புதுக்கோட்டை மீனாக்ஷி செஸ் அகாதெமி, 98435 84015 சிவகங்கை கேஸ்டில் செஸ் அகாதெமி,காரைக்குடி, 98431 36945 தஞ்சாவூர் தி கிங் பான் செஸ் அகாதெமி, கபிஸ்தலம், 98940 30450 திருவள்ளூர் ப்லூம் செஸ் அகாதெமி, திருவொற்றியூர், 93808 32268 |
Tuesday, 19 June 2012
கிராண்ட் மாஸ்டர் ஆவது எப்படி? ஸ்வரா இதுவரை 13 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. நீங்களும் மனது வைத்தால் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
THANK YOU