Tuesday 19 June 2012

என் வீட்டுத் தோட்டத்தில் நூலெல்லாம் கேட்டுப்பார் அமெரிக்காவில் ஒரு சிறிய தோட்டத்தில் தொடங்கப்பட்ட இலவச நூலகம் இன்று உலகம் முழுக்கப் பெருகி வருகிறது


அச்சிடுக மின்னஞ்சல்
என் வீட்டுத் தோட்டத்தில் நூலெல்லாம் கேட்டுப்பார்
குரு

அமெரிக்காவில் ஒரு சிறிய தோட்டத்தில் தொடங்கப்பட்ட இலவச நூலகம் இன்று உலகம் முழுக்கப் பெருகி வருகிறது

மக்களைப் புத்தகம் படிக்க வைக்க வேண்டும்; அதற்காக அவர்கள் ரொம்பச் சிரமப்படாமல், காசைப் பற்றிக் கவலைப்படாமல் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிடவேண்டும். அதற்கு என்ன வழி? என்று டாட் பால் யோசித்தார்.

தனது நண்பர் ரிக் ப்ரூக்ஸ்ஸிடம் அவர் இதைப் பற்றிப் பேசியபோது, ஒரு நல்ல யோசனை தோன்றியது. நம் வீட்டுத் தோட்டத்தில் சின்னதாக ஒரு நூலகம் ஆரம்பித்தால் என்ன?

அப்படி ஆரம்பமானதுதான் தோட்டத்தின் நூலகம். டாட் பாலுக்குத் தச்சு வேலையில் ஆர்வம் அதிகம். மளமளவென்று கருவிகளைத் தேடி எடுத்தார். வீட்டில் கிடந்த பழைய மரச் சாமான்களையெல்லாம் திரட்டிக் கொட்டி ரிப்பேர் செய்து கச்சிதமான குட்டி நூலகம் ஒன்றைத் தயாரித்துவிட்டார்.

உண்மையில் அது நூலகமே அல்ல. கொஞ்சம் பெரிய சைஸ் மரப் பெட்டி. அதற்குக் கண்ணாடிக் கதவு ஒன்று. இவற்றை நிறுத்தி வைப்பதற்காக மரத்தாலான ஒரு கால். அவ்வளவுதான்.

அந்தப் பெட்டிக்குள் சுமார் இருபது புத்தகங்களை நிரப்பினார் டாட் பால். அதைத் தன்னுடைய தோட்டத்தின் விளிம்பில், வெளியே நடந்து செல்கிறவர்கள் கண்ணில் படும்படியாக வைத்தார். அதன்மேல் இலவச நூலகம் என்று எழுதினார். ‘எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படியுங்கள். பதிலுக்கு உங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை இங்கே கொண்டுவந்து வையுங்கள். அறிவைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்று அறிவித்தார்.

ஆரம்பத்தில் அந்தப் பெட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்புறம் அந்தப் பக்கமாகச் சென்றவர்கள் சிலர் நின்று கவனித்தார்கள். உள்ளே இருந்த புத்தகங்களைப் புரட்டினார்கள். தங்களுக்குப் பிடித்தவற்றை எடுத்துக் கொண்டார்கள். அடுத்தமுறை அந்தப் பக்கமாகத் திரும்பி வரும்போது வேறு சில புத்தகங்களைக் கொண்டுவந்து நிரப்பினார்கள்.

இதனால், டாட் பாலின் நூலகம் எப்போதும் புதுசாகவே இருந்தது. பழைய புத்தகங்களை யாராவது எடுத்துச் செல்வதும் புதிய புத்தகங்கள் வந்து குவிவதும் அந்தப் பகுதி ஜனங்களுக்கு மிகுந்த ஆர்வம் ஊட்டியது. இதற்காகவே அவர் வீட்டைத் தேடி வருகிற ரெகுலர் கஸ்டமர்கள் கூட உண்டு.

முக்கியமான விஷயம், அந்த நூலகத்துக்குப் பொறுப்பாளர் என்று யாருமே கிடையாது. 24 x 7 அது திறந்தே கிடக்கிறது. நடு ராத்திரி பன்னிரெண்டு மணிக்குகூட யாராவது அங்கே வந்து புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். புத்தகத்தைத் தாமதமாகக் கொண்டுவந்து வைத்தால் அபராதம் இல்லை. புதுப் புத்தகங்களை வாங்கும் செலவு இல்லை. ஆனால் ஆண்டு முழுவதும் அங்கே வித்தியாசமான புத்தகங்கள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தன.

இதனால், அந்தப் பகுதி மக்களிடையே, குறிப்பாகக் குழந்தைகள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் பெருகியது. படித்த நல்ல புத்தகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் அதிகரித்தது. இது நம்ம லைப்ரரி என்று அதை மிகவும் அக்கறையாகப் பராமரிக்கத் தொடங்கினார்கள்.

டாட் பால், ரிக் ப்ரூக்ஸ் இருவரும் இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கத் தீர்மானித்தார்கள். தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரிடமும் இதைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்கள். உங்களுக்கு அதிகச் செலவே கிடையாது. கொஞ்சம் இடம், சில புத்தகங்கள், ஒரே ஒரு மரப்பெட்டி போதும். சேவைக்குச் சேவை, அறிவுக்கு அறிவு, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். படிப்படியாக, அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் சிறு நூலகங்கள் திறக்கப்பட்டன.

ஒருவேளை உங்கள் வீட்டில் ஏற்கெனவே ஒரு நூலகம் இருந்தால் கூட, அதில் இருக்கும் புத்தகங்களை நீங்கள் படித்து முடித்தபின் என்ன செய்வீர்கள்? அவற்றைப் புழுதி படியப் போட்டு வைப்பதைவிட, இந்த நூலகத்தில் வைத்துவிட்டு வேறு புதிய புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். இந்தச் சௌகர்யம் வேறு எங்கே கிடைக்கும்?

இப்படிப் பல காரணங்களால், அதுவரை புத்தகங்களைப் புரட்டிப் பார்க்காதவர்கள் கூட, இந்தக் குட்டி லைப்ரரிகளில் ஐந்து நிமிடம் செலவழித்து ஏதேனும் ஒரு வித்தியாசமான புத்தகத்துடன் வீட்டுக்குச் சென்றார்கள். ஆரம்பித்த இரண்டே வருடங்களுக்குள் ஆயிரக்கணக்கான புது வாசகர்களை உருவாக்கி பெருமையைத் தேடிக்கொண்டது இந்த இயக்கம்.

அமெரிக்காவில் உதயமான ‘லிட்டில் ஃப்ரீ லைப்ரரி’கள் இப்போது ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகம் முழுக்கப் பெருகி வருகின்றன. ஆசியாவில்தான் இன்னும் கால் பதிக்கக் காணோம்.

நாம் ஆரம்பித்து வைப்போம்... இதயத்திலும் தோட்டத்திலும் நமக்குத்தான் இடம் தாராளமாக இருக்கிறதே!

வீட்டில் நூலகம் எப்படி அமைப்பது?
வீட்டில் இலவச நூலகம் அமைப்பவர்கள் என்னமாதிரி புத்தகங்களைத் தேர்வு செய்வது என்று பெரிதாகக் குழம்ப வேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் மிஞ்சிப் போனால் அங்கே நான்கைந்து நாட்கள்தான் இருக்கும், அதன்பிறகு மக்கள் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து நிரப்ப ஆரம்பித்து விடுவார்கள். அது தனக்குரிய தனித்துவத்தைப் பெற்றுவிடும். ஆகவே, உங்களிடம் இருக்கும் ஏதாவது சில புத்தகங்களை அடுக்கி, நூலகத்தை உடனே தொடங்குங்கள், தள்ளிப்போடாதீர்கள்.

நீங்கள் உங்கள் வீட்டில் சிறு நூலகம் அமைத்தீர்கள் என்றால், www.littlefreelibrary.org/ என்ற இணையதளத்துக்குச் சென்று அதனைப் பதிவு செய்துகொள்ளுங்கள். இதன்மூலம், அங்கே உள்ள விசேஷ உலக வரைபடத்தில் உங்களுடைய நூலகமும் இடம் பிடிக்கும்.
 

No comments:

Post a Comment

THANK YOU