யதுகிரி அம்மாள் நமக்குக் காட்டும்
பாரதியின் சித்திரத்திற்கும் வ.ரா காட்டும் சித்திரத்திற்கும் பெரிய வித்தியாசங்கள்
இல்லை. ஆனால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புத்தகத் தலைப்புகளிலிருந்தே தெரிந்து
கொள்ள முடியும். ‘பாரதி நினைவுககளில் யதுகிரி அம்மாள் தன்னுடைய நினைவுகளை அப்படியே
பகிர்ந்து கொள்கிறார். ஆனால், வ.ரா-வின் ‘மகாகவி பாரதியார்’ என்ற தலைப்பிலேயே அவர்
பாதி விஷயங்களை விளக்கிவிடுகிறார். யதுகிரி அம்மாள் சுருங்க எழுதியிருக்கிறார்; வ.ரா
எழுத்தாளர் என்பதால் அங்கங்கே வாக்கிய விஸ்தரிப்புகள் உண்டு. இரண்டு புத்தகங்களிலுமே
தகவல் அடர்த்தி அதிகம்.
யதுகிரி பதிவில், காந்தன் ஐயா
அவர்கள் ரிக்ஷாத்தோழனுக்கு பாரதி கோட் கொடுத்த விஷயத்தை பற்றிச் சொல்லியிருந்தார்.
அது ரிக்ஷாக்காரர் இல்லை. புஷ் வண்டிக்காரர்கள். அவர்கள் பாரதியாரை ஏற்றிக் கொண்டு
போவார்களாம். ஆனால் அவரிடம் காசு கேட்கமாட்டார்களாம். அவருடைய அங்கவஸ்திரம் தான் அவர்களுக்கு
கூலி.
வ.ரா பாரதியின் சில குணங்களைச்
சொல்கிறார். அதில் ஒன்று
போய்க்கொண்டிருக்கும்பொழுது, பலர் பயபக்தியுடன் நின்றுகொண்டு பாரதியாரை நமஸ்கரிப்பதைக் கண்டேன். யார் நமஸ்கரித்தாலும் உடனே தமது இரண்டு கைகளையும் நன்றாய்ப் பொருத்தி இசைத்து, முகத்துக்குக் கொண்டுபோய், பாரதியார் கும்பிடுவார். சில சமயங்களில் சிலரிடம், சிறிது பேசவும் செய்வார். நடந்துகொண்டே கும்பிடுவதில்லை; நின்றுவிடுவார்.
புத்தகத்தின் பத்தாவது அத்தியாயத்தில்
வ.ரா பாரதியாரின் உருவத்தை சித்தரிக்கிறார். பாரதியார்
சுந்தர ரூபன் என்று தொடங்கும் விவரிப்பு, அவருடைய கண்கள், மூக்கு, நெற்றி, மீசை,
கேசம் வரை போகிறது. அவருடைய வழுக்கையை மறைப்பதற்காக அரைமணி நேரம் வரை செலவு செய்வார்
என்கிறார் வ.ரா. அடுத்தது உடை,
உடம்பிலே எப்பொழுதும் ஒரு பனியன் சட்டை இருக்கும். வேஷ்டிகளையோ, சட்டைகளையோ, அவர் சலவைக்குப் போட்டு நான் பார்த்ததில்லை. யாராவது ஒரு பக்தனோ, வீட்டு வேலைக்காரியோ துவைத்துக் காய வைத்திருப்பார்கள். பனியனுக்குமேல் ஒரு ஷர்ட்டு. அது கிழிந்திருக்கலாம். அனேகமாய்ப் பித்தான் இருக்காது. இதற்குமேல் ஒரு கோட்டு. அதற்கு மரியாதைக்காக ஒரு பித்தான் போட்டுக் கொள்வார்.
மேலும் சட்டையில் தினமும் ஒரு
பூ வைத்துக் கொள்வது; பென்சிலால் மட்டுமே எழுதுவது; சந்தனப் பொட்டைப் போல ஒற்றெழுத்துக்களுக்குப்
பொட்டு வைப்பது; அவருடைய முண்டாசு, இடக்கால் பாதத்தில் முக்கால் பைசா அளவுக்கு
இருந்த ஆணி வரை அடுக்குகிறார் வ.ரா.
பாரதியாரின் புதுவை வாழ்க்கை குறித்து
நமக்கு மிகுதியான தகவல்கள் கிடைக்கின்றன. யதுகிரி அம்மாள், வ.ரா, பாரதிதாசன், கனகலிங்கம்,
கோதண்டராமன் என்று பலர் பாரதியின் புதுவை வாழ்க்கை குறித்து எழுதியிருக்கிறார்கள்.
புதுவையில் பாரதியார் உட்பட, பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து
வந்தவர்களை சுதேசிகள் என்றே அழைத்திருக்கிறார்கள். ஆனால், புதுவையில் அவர்களுக்கு நிம்மதியான
வாழ்க்கை இருந்தது என்று சொல்லமுடியாது. சுதேசிகளை எப்போதும் பிரிட்டிஷ் இந்தியப் போலீஸ்
கண்காணித்துக் கொண்டே இருந்தது. அவர்களுடைய கடிதங்கள் ஒழுங்காகப் போய்ச் சேராது. மணியார்டர்
வராது. பாரதியாருக்கு வர வேண்டிய பணம் தடைப்பட்டதால், மிகவும் துன்பப்பட்டுப் போயிருக்கிறார்.
சுதேசிகளை புதுவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிரிட்டிஷ் இந்தியா, புதுவை கவர்னருக்கு
பல நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறது. திருநெல்வேலிச் சதி வழக்கிலும் (ஆஷ் துரை கொல்லப்பட்ட வழக்கு) புதுவை சுதேசிகளுக்கு
தொடர்பிருக்கிறது, என்று கூடச் சந்தேகப்பட்டிருக்கிறார்கள். பாரதியாரின் ‘சின்னச் சங்கரன்
கதை’யை பாரதியாரிடம் வேலை பார்த்த பையன் ஒருவர் எடுத்துக் கொண்டுபோய் போலீஸிடம் கொடுத்துவிட்டான்
என்கிறார் வ.ரா. ஆனால், அந்தப் பையன் தான் அதைச் செய்தான் என்பதை பாரதி நம்பவில்லை.
பாரதியார் காந்தியைச் சென்னையில்
சந்தித்த போது, ராஜாஜி, சத்தியமூர்த்தி மற்றும் வ.ரா அவருடன் இருந்திருக்கிறார்கள்.
ஆனால், வ.ரா-வைத் தவிர வேறு யாரும் அதைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.
மகாகவி பாரதியார் | வ.ரா | சந்தியா
பதிப்பகம் | 136 பக்கங்கள் | விலை ரூ.75 | இணையத்தில் வாங்க
No comments:
Post a Comment
THANK YOU