Monday, 24 December 2012

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்




பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும்,தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை
‘தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ‘ என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,
அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, ‘வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ‘ என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.
(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)
In what way Jinnah is not a North Indian ? How is the [i]names Jinnah and Robinson so sweet to you Sir ? How is [/i]
the name of poor Tilak so bitter to you Sir ? I am not [i]able to understand. [/i]
ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா ?
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது ? அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.
டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா ? ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.
அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.
‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று
சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் ‘ரோமாபுரி ராணி ‘ என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?
எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று ‘தங்கையின் காதல் ‘ என்று ஒரு கதை
எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?
இதுவா தமிழ் நாகரீகம் ? சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக
விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ம.வெங்கடேசன்
(இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்)

No comments:

Post a Comment

THANK YOU