Sunday, 27 May 2012

சதுரகிரி மலையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம்!

வாருங்கள்,சதுரகிரியில் மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக கூறப்படும் ஒன்றினைப் பற்றிய சுவாரசியமான ஒரு தகவலைப் ஒன்றினை இன்று பார்ப்போம். அகத்தியர் அருளிய “ஏம தத்துவம்” என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது இந்த தகவல். மிகவும் பழமையான இந்த நூல் தற்போது பதிப்பில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.என்னிடமிருப்பது நூற்றாண்டுகளைத் தாண்டிய பதிப்பு.

அசுவினியார் என்கிற சித்தர் மூலிகைகள் மற்றும் அவற்றின் நுட்பங்கள், கோவில்கள் மற்றும் அதன் சூட்சுமங்கள் போன்ற தனது வாழ்நாள் அனுபவங்கள் முழுவதையும் ஒரு நூலாக எழுதினாராம். அந்த நூலின் பெயர் “கர்ம காண்டம்” என்பதாம். பன்னிரெண்டாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த நூல் அவரது மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டதென்பதை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"நூலான பெருநூலா மின்னூல்போல
நுணுக்கமுடன் கொள்ளவே வேறில்லை
பாலான நூலிது பெருநூலப்பா
பாலகனே அசுவினியார் யெந்தமக்கு
காலான பதிகண்டு தடமுங்கண்டு
மாலான பெருநூலாம் கர்மகாண்டம்
ஆமேதான் பன்னீரா யிரந்தானப்பா
அப்பனே கர்மகாண்டம் தாமுரைத்தார்
போமேதான் சத்த சாகரந்திரிந்து
பொங்கமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
தாமேதான் பாடிவைத்தார் கர்மகாண்டம்"

- அகத்தியர் -

மிகவும் அரிதான சூட்சுமங்களை தன்னகத்தே கொண்ட இந்த நூலானது தனது மாணவர்கள் மட்டுமே பயன்படுத்திட வேண்டி, அதனை சதுரகிரி மலையில் மறைத்து வைத்திருக்கிறாராம் அசுவினியார். அத்தகைய சிறப்பான இந்த நூல் சதுரகிரி மலையில் எங்கே,எவ்வாறு மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்பதனையும் அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"தாரணியில் சதுரகிரி மேற்கேபாலா
நாமேதான் சொன்னபடி சுரங்கமப்பா
நாயகனே பாதாள வரையுண்டாமே
வளம்பெரிய காவணத்தின் சுரங்கமப்பா
திரையான மறைவுடனே திட்டுவாசல்
தீர்க்கமுள்ள வாஞ்சனேயர் காவலப்பா
குறைநீக்கி உட்சென்றால் சித்தர்காவல்
குறிப்புடனே யவர்மாத மஞ்சலித்து"

- அகத்தியர் -

"குறமான கர்மகாண்டம் பெருநூலப்பா
குருபரனே காண்பதர்க்கு வந்தேனென்று
நீடியதோர் நெடுங்கால அருள்காணவேண்டி
நிஷ்களங்க மாகவல்லோ விடையும்காண
தேடியே இவ்விடமும் வந்தேனென்று
சிரமுடனே அவர்பதத்தை தாள்பணிந்து
அறமதுவும் வழுவாமல் புண்ணியவானே
அங்ஙனமே நூல்கண்டு வாங்குவீரே

- அகத்தியர் -

சதிரகிரி மலையின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு திட்டான பகுதியில், மறைவாக ஒரு சுரங்கம் உள்ளதாம். அந்த சுரங்க வாசலில் ஆஞ்சனேயர் காவல் இருக்கிறதாம். அவரைத் தாண்டி உள்ளே செல்ல சித்தர் காவல் இருக்கிறதாம். அவரை வணங்கி.. அருள் கிடைக்கவேண்டியும், என் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டும் சிறப்பான கர்மகாண்டம் என்னும் பெரு நூலைக் காண்பதற்க்காக இங்கு வந்தேன் என்று கூறி, அவர் தாள் பணிந்து வணங்கி நூலை வாங்க வேண்டும் என்று சொல்கிறார்.

"வாங்குவாய் யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
வளமுடைய பஞ்சால்லிய புலத்தியாகேள்
திருவான கோவிந்தா கோபாலாகேள்
தீர்க்கமுடன் உந்தமக்கு யாவுமீர்ந்து
பெருமயுடன் நூல்கொடுத்து வழியுஞ்சொல்லி
பேரான வம்பலத்தை திறந்துகாட்டி
துரயான நூல் கொடுத்து வழியுங்கூறி
நுட்பமுடன் பொதிகைக்கு யேகென்பாரே"

- அகத்தியர் -

அந்த நூலை அங்கேயே தங்கி படிக்க வேண்டுமாம். சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அவற்றை அந்த சித்தர் விளக்கி, அதன் நுட்பங்களை உணர்த்தி, அங்கிருக்கும் அம்பலத்தை திறந்து காட்டி பொதிகை மலைக்கு செல்லும் வழியையும் கூறுவார் என்கிறார் அகத்தியர். ஆச்சர்யமான தகவல்தானே!

இந்த தகவல்களின் சாத்தியங்கள் குறித்தான சந்தேகங்கள் இருந்தாலும், அகத்தியர் கூறிய படி மலையின் மேற்குப் பகுதியில் திட்டும், அதனையொட்டி மறைந்திருக்கும் குகைகள் ஏதுமிருக்கிறதா என்பதை தேடிப் பார்க்கலாம். அநேகமாய் குரங்குகள் நிறைந்து வாழும் குகையாக கூட இருக்கலாம்.அதனையே ஆஞ்சநேயர் காவல் என்றும் அகத்தியர் குறிப்பிட்டிருக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள் குருவருளை வேண்டி முயற்சிக்கலாமே!  SIVA SIVA    GURU....

No comments:

Post a Comment

THANK YOU