இராச்சியம்
செபம் செய்வதன் அர்த்தத்தையும்,
அதன் மகிமையினைப் பற்றி அகத்தியர் அருளிய விவரங்களை நேற்றைய பதிவில்
பார்த்தோம். மேலும் அந்த செபத்தினை உருத்திராட்சம் கொண்டு செய்வதே மிகச்
சிறந்த பலனைத் தரும் என்பதையும் பார்த்தோம். இப்படி செய்யப் படும்
செபத்தினை நாள் தவறாது, கவனக் குவிப்புடன் செய்து வந்தால் இலகுவாக சித்தி
கிடைத்திடும் என்ற விவரத்தையும் பார்த்தோம்.
இப்படியான
செபத்தினை எவ்வாறு செய்திட வேண்டும் எனவும் அகத்தியர் தனது “வாத சௌமியம்”
என்ற நூலில் விவரித்திருக்கிறார். அதன் படி செபம் செய்பவர்கள் தனிமையான்,
சுத்தமான சூழலில் செய்திட வேண்டுமாம். கோவில், மலை உச்சி, குகைகள் போன்ற
ஆளரவம் குறைந்த இடங்கள் உத்தமம் என்கிறார். இடத்தினை தேர்ந்தெடுப்பதைப்
போலவே செபிக்கும் போது அணிய வேண்டிய உடைகளையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை அகத்தியர் “சிவவேடம்” என்கிறார். மேலான சிவனின் வடிவில் அமர்ந்து
செபிப்பதையே இப்படி கூறுகிறார்.
இந்த சிவவேடத்தை எவ்வாறு தரிக்க வேண்டும் என்பதை பின்வருமாறு விளக்குகிறார்.
"ஊணடாசிவவேட மார்க்கந் தன்னை
உறுதியாய் சொல்லுகிறேன் உனக்காய் மைந்தா
காணடா ஜெபமதலை அன்பத்தொன்று
கணக்காக ருத்ராட்சங் கையிலேந்து
தானடா யோகதெண்டு அளவை கேளு
தனதான அணிவிரல் முப்பத்திரண்டு
பேணடா அளவாகச் செய்துகொண்டு
பேணியே கைதனிலே எடுத்துக் கொள்ளே."
- அகத்தியர் -
"கொள்ளடா விபூதி உத்தளமாய்ப்பூசி
கொண்ட பின்பு வேட்டியுட அளவைக் கேளு
நல்லடா அகலமது மூன்று முழமாகும்
நலமான நீளமது ஆறு முழமாகும்
உள்ளடா பீனஞ்சாண் அகலங் கூட்டி
உத்தமனே நீளமது நால் சாணாகும்
அள்ளடா காவியிலே நீர்க்காவியாகும்
அரகரா சிவவேட மகிமைதானே."
- அகத்தியர் -
ஒருவகையான
நீர்க் காவி நிறத்தில் ஆன ஆறு முழ நீளமும் மூன்று முழ அகலமும் கொண்ட
வேட்டியும், அதே நிறத்திலேயே நான்கு சாண் நீளமும் ஒரு சாண் அகலமும் உள்ள
பீனமும் எடுத்து அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார். பின்னர் ஐம்பதியொரு
உருத்திராட்ச மணிகளைக் கொண்ட செபமாலையும், முப்பதியிரண்டு விரல் கடை
நீளமுள்ள யோக தண்டமும் தயாரித்துக் கையில் வைத்துக் கொள்ள வேண்டுமாம்.
உடலெங்கும் வீபூதியையும் நன்கு பூசிக் கொண்டால் இந்த கோலமே “சிவ வேடம்”
என்கிறார் அகத்தியர்.
இந்த
சிவவேடமே அனைத்து வகையான செபங்களுக்கும் சிறப்பானது என்கிறார். இந்த
கோலத்தில் உருத்திராட்ச மணி மாலையைக் கொண்டு செய்யப் படும் எந்த ஒரு
செபமும் சித்திக்கும் என்றும், இத்தகைய செபங்கள் மகிமை வாய்ந்தது என்றும்
கூறுகிறார்.
நாளைய
பதிவில் உருத்திராட்ச மணி மாலையைக் கொண்டு செய்தொழில் வெற்றியடையவும்,
எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றவும் கூடிய வசிய முறை ஒன்றினைப் பற்றி
பார்ப்போம்... SIVA SIVA
No comments:
Post a Comment
THANK YOU