Friday, 25 July 2014

குருகீதை-TIGERGURU

நூல்களைப் பொறுத்தவரை குருவுக்கு முக்கிய இடம் உண்டு. குருகீதை என்றே ஒரு நூல் இருக்கிறது. குருவில்லா வித்தை பாழ் குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்றெல்லாம் தமிழ் வாக்குகள் முழங்குகின்றன. இதோ ஒரு குருவின் கதை! கோதாவரி ஆற்றங்கரையில் வேததர்மா என்ற குரு, ஆஸ்ரமம் அமைத்து, வேதம் கற்பித்து வந்தார். ஒருநாள், அவர் தன் சீடர்களிடம், சீடர்களே! நான் அனுபவிக்க வேண்டிய பாவம், கொஞ்சம் இருக்கிறது. காசிக்குப் போய் அதை தீர்க்கப் போகிறேன். எனக்குப் பணிவிடை செய்ய, யார் வருகிறீர்கள்? எனக் கேட்டார். சாந்தீபகன் எனும் சீடன் எழுந்தான். நான் கண்பார்வையற்ற குஷ்டரோகியாக அங்கிருப்பேன். உன்னால் பணிவிடை செய்ய முடியுமா? எனக் கேட்டார். முடியும் என்று சீடன் உறுதி கூறினான். இருவரும் காசியை அடைந்தனர்.  அங்கு குரு, கண்பார்வையற்ற குஷ்டரோகியாக மாறினார். அவருக்கு உடம்பு துடைத்து விடுவது, வீடுகளில் பிச்சையேற்று உணவளிப்பது போன்ற பணிவிடைகளைச் சீடன் செய்தான். காசியிலேயே இருந்தும், ஒருநாள் கூட அவனால் விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. குருவைக் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. நாளுக்கு நாள், குருவுக்கு வியாதி தீவிரம் அடைந்ததோடு, கோபமும் வந்தது. சீடன் கொடுக்கும் உணவு சரியில்லை என்று துõக்கி எறிவது, கத்துவது, அடிப்பது என அவனைத் துன்புறுத்தி வந்தார்.

ஆனாலும், சீடன் அதைப் பொருட்படுத்தாமல், அவர் திட்டுவதை பொறுமையுடன் ஏற்றான். ஒருநாள், அவன் எதிர்பாராதவிதமாக, அவனது, குருபக்தியை மெச்சி காசி விஸ்வநாதரே தரிசனம் அளித்து விட்டார். விரும்பிய வரம் கேள், என்றார்.  சீடன் குருநாதரிடம் நடந்ததைத் தெரிவித்து, குருவே! உங்கள் உடல் நலம் பெற வரம் கேட்கட்டுமா? என்றான்.  இதைக் கேட்ட குரு, எனக்கு பணிவிடை செய்ய உனக்கு கஷ்டமாக இருக்கிறதா? நான் நலம் பெற்று விட்டால் என் பாவம் தீராது. அடுத்த பிறவியிலும் அதை அனுபவிக்க வேண்டும், என கோபித்தார்.  சீடன் போய், வரம் ஏதும் வேண்டாம் என மறுக்க சிவன் மறைந்தார். இதன்பின் விஷ்ணுவும் தோன்றி,குருசேவை மூலம் எனக்கே தொண்டு செய்து விட்டாய். விரும்பிய வரம் கேள்! என்றார். சீடன்,எனக்கு குரு பக்தி திடமாக இருக்க அருள்புரியுங்கள் என்று கேட்க,அப்படியே ஆகட்டும்! என்று சொல்லி மறைந்தார். இதையறிந்த குருநாதர் மகிழ்ச்சியுடன், சீடனே! உன்னைப் போல் ஒருவனை உலகம் இதுவரை கண்டதில்லை. சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வாய், என வாழ்த்தினார். வியாதி நீங்கி ஆரோக்கிய தேகத்தோடு விளங்கினார்.  ஆன்ம லாபமும், அமைதியும் வேண்டுமென்றால், குரு சேவை செய்து தெய்வ அருளைப் பெறலாம். 


--GURU

No comments:

Post a Comment

THANK YOU