Wednesday 17 October 2012

உலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் 11 ஆண்டு கால வேதனை ~ *********************************************


உலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய “Einstein: His Life and Universe” என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது.

இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம்.

ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்தவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாக, மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம் அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை பட்டியல்.

அதையும் விட தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீனின் குழந்தைகளில் ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார்.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு பல பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ~

No comments:

Post a Comment

THANK YOU