யஜுர் வேதத்தில் இருக்கும் சிவ சங்கல்ப செய்யுள்களில் வேத ரிஷி வெளிப்படுத்தும் அகவெளி கண்டடைதல்கள் வியப்புக்குரியவை. ஏனெனில் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக இவை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இதை எழுதியவர்கள் மனதை குறித்து அதன் இயக்கம் குறித்து சிந்தித்திருக்கிறார்கள். அதனை விளக்க முற்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கும் உளவியல் கேட்கும் சில ஆழமான கேள்விகளைக் அன்றே கேட்டிருக்கிறார்கள். அதற்கான விடைகளைத் தேடியிருக்கிறார்கள். அவர்கள் முன்னகர்வதற்கான வழிகளை நமக்காக காட்டியவர்கள் இந்த வேத பாடலின் அடுத்த பகுதிகள் எந்த நவீன உளவியலாளனையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்வதாக அமைகின்றன:
காலத்துக்கும் மனதிற்குமான தொடர்பு இங்கு பேசப்படுகிறது. காலத்தின் ஓட்டத்தில் நமக்கு ஏற்படும் அனுபவங்களை ஒன்று படுத்தி நமக்கு மனமே அளிக்கிறது. காலம் குறித்த நமது உணர்வினை மனமே கட்டமைக்கிறது. இது நமக்கு அதிசயமாக இருக்கலாம். காலம் என்பது புறவயமாக நிகழ்கிற ஒன்றல்லவா? அப்போது காலத்தை எப்படி மனம் கட்டமைக்க முடியும்?கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகியவற்றை மனதே இணைக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் உள்ளிழுத்தல், வெளிவிடுதல் ஆகிய சுவாசங்கள் என ஏழு வேள்வியாளர்கள் மூலமாக அது இயங்குகிறது. அந்த மனம் மங்களகரமான சங்கல்பத்துடன் இருக்கட்டும்.
பெஞ்சமின் லிபெட் ஒரு நரம்பியல் ஆராய்ச்சியாளர். 1960-களில் தொடங்கி இவர் செய்த பரிசோதனைகள் நரம்பியல் மட்டுமல்லாது பிரக்ஞை குறித்த நமது அறிதல்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. அறுவை சிகிச்சை காரணங்களுக்காக மூளையின் மேல்பகுதி திறக்கப்பட்ட நோயாளிகளிடம் அவர்களின் சம்மதத்துடன் இப்பரிசோதனைகளை லிபெட் மேற்கொண்டார். மூளையின் மேற்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் உடலின் ஒவ்வொரு பகுதியின் புலனுணர்வுடன் தொடர்புடையது என்பது அனைவருக்கும் தெரியும். இப்பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்காந்த தூண்டுதல்களை லிபெட் அளித்தார். இவ்வாறு அளிக்கும் போது நோயாளிகள் தங்கள் உடலில் குறிப்பிட்ட பகுதிகள் தொடப்படுவதை போல உணர்ந்தனர். உதாரணமாக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின்காந்த தூண்டுதல் அளிக்கப்பட்டால் ‘ஆ என் இடது கையில் ஏதோ தொடுற மாதிரியே இருக்குதே’.
இதில் ஒரு முக்கிய விஷயத்தை லிபெட் கண்டுபிடித்தார். இந்த மின்காந்த தூண்டுதல் எவ்வளவு நேரம் அளிக்கப்படுகிறது என்பதுதான் அந்த தூண்டுதலின் விளைவை ஒரு நபர் தன் தண்ணுணர்வில் உணருவதை நிர்ணயிக்கிறது. ஒரு சில மில்லி விநாடிகளில் ஆரம்பித்து ஒரு முழு விநாடி வரையாக பல கால அவகாசங்கள் கொண்டவையாக இந்த மின்காந்த தூண்டுதல்களை அவர் அளித்தார். முழுதாக அரை விநாடி அளிக்கப்படும் தூண்டுதலே ‘எனக்கு தொடுற மாதிரி இருக்கே’ என்பதை ஒருவருக்கு ஏற்படுத்துகிறது என அவர் கண்டுபிடித்தார். எந்த ஒரு புலன் தூண்டுதலும் அரை விநாடிக்காவது உங்கள் நியூரான்களில் தொடர் இயக்கமாக அமைந்து மூளையை அடைந்தால்தான் அது புலனுணர்வாக ‘நான் அனுபவிக்கிறேன்’ ஆக மாறுகிறது. அரை விநாடி என்பது 500 மில்லி விநாடிகள்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், நாம் உடலளவில் எதிர்கொள்ளும் புலன் தூண்டுதல்கள் ‘உடனடியாகவே’ உணரப்படுகின்றன. உடலில் ஒரு தொடுதலோ அல்லது எரிச்சலோ ஏற்படுத்தினால் 30 மில்லி விநாடிகளில் அது புலனுணர்வாக மாறி ‘நான் தொடப்படுகிறேனே’ என்று தன்னுணர்வு சொல்லிவிடுகிறது. ஆக என்ன நடக்கிறது இங்கே?
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை எடுத்துக் கொள்வோம். துப்பாக்கி சுடப்பட்டு பந்தயம் ஆரம்பித்ததும் வீரர்கள் ஓட ஆரம்பிக்கிறார்கள். இது 100 மில்லி விநாடிகளுக்குள் தொடங்கிவிடுகிறது. ஆனால் 500 மில்லி விநாடிகளில்தான் அவர்களின் தன்னுணர்வு துப்பாக்கி சுடப்பட்டதை உணர்கிறது. அதாவது அவர்கள் ஓட்டத்தின் நடுவில் இருக்கும் போதுதான் துப்பாக்கி சுட்டது அவர்களின் பிரக்ஞையில் பதிகிறது. நீங்கள் வாகனத்தில் வரும் போது ஒரு நாய் குறுக்கே பாய்கிறது. நீங்கள் உடனடியாக பிரேக்கை அழுத்துகிறீர்கள் அல்லது பிடிக்கிறீர்கள். நாய் கடந்து சென்றுவிடுகிறது. ஆனால் அப்போதுதான் உண்மையில் உங்கள் தன்னுணர்வில் நடந்தவை எல்லாம் பதிவாகிறது. இதனை லிபெட் இப்படி விளக்குகிறார்: ஆம் நீங்கள் பிரேக்கை பிடித்ததும் சரி, அல்லது பந்தய வீரர்கள் ஓட ஆரம்பித்ததும் சரி, தன்னுணர்வு அற்ற நிலையில்தான். பின்னர் மனம் நீங்கள் உடனடியாக அந்த புலனுணர்வை பெற்றதாக – நடந்து முடிந்த பிறகு- கட்டமைக்கிறது. அதாவது உங்கள் செயல்களை இயக்கும் நியூரானிய இயக்கம் வேறு உங்கள் தன்னுணர்வு வேறு. தன்னுணர்வின் கால அனுபவம் செயல் நடந்த பின்னர் கட்டமைக்கப்படுகிறது. ஆம். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மனதே இணைக்கிறது.
No comments:
Post a Comment
THANK YOU