Saturday, 6 April 2013

கன்பூசியஸ்

சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானியான கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்
ஆழமற்ற, மேலோட்டமான திரைப்படம், கன்பூசியஸின் அரசியல் வாழ்க்கையைப் பிரதானப்படுத்தி அவரது ஞானத்தேடுதலை அதிகம் கண்டுகொள்ளாமல் நகர்ந்து போய்விட்டது திரைப்படம்
சாக்ரடீஸ் போலவே கன்பூசியஸ் இளைஞர்களிடம் போதனை செய்திருக்கிறார், கல்விநிலையத்தை உருவாக்கி அங்கே சமகாலப் பிரச்சனைகள் குறித்த வாதபிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார், அதிகாரத்துடன் மோதி தனது கருத்துகளில் உறுதியாக நின்றிருக்கிறார்.
கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி, போர்வீரன், இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர், சீனமரபினை வளர்த்து எடுத்தவர், அரிய தத்துவ ஞானி, இப்படி அவரது ஆளுமை பன்முகப்பட்டது,  வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உருவான ஞானத்தைக் கொண்டே அவர் தனது அறக்கருத்துகளை உருவாக்கியிருக்கிறார், கன்பூசியஸின் சிந்தனைகளை மாபெரும் கற்றல் என்று கூறுகிறார்கள்,
கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் சாணக்கியரின் வாழ்க்கை மனதில் வந்து போகின்றது, அர்த்தசாஸ்திரத்திற்கும் கன்பூசியஸ் சிந்தனைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்ப்படுகின்றன,
கி.மு. 551. சீனாவில் ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள குபூ நகரில் கன்பூசியஸ் பிறந்தார். அவரது உண்மையான பெயர் கொங் சியூ. கொங் என்பது குடும்பப் பெயர். இவரை மாஸ்டர் கொங் என்றே அழைத்தார்கள்.
கன்பூசியஸின் தந்தை 70வது வயதில் ஒரு நடனக்காரியை மறுமணம் செய்து கொண்டார், அவர்களது மூத்த மகனாகப் பிறந்தவர் தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது, பசியின் கொடுமையை சிறுவயதிலே அனுபவித்த காரணத்தால் தனது அறக்கருத்துகளில் பசியைப் போக்குதலை முக்கியமான அறமாக முன்வைத்தார் கன்பூசியஸ்
கன்பூசியஸ் பிறந்த லூ மாநிலம் பண்பாட்டு சிறப்புமிக்க ஒன்றாகும், ஆனால் அங்கே அதிகார போட்டி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அதற்குக் காரணம் மூன்று செல்வச்செழிப்பு மிக்க குடும்பங்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆட்சியை பிடிப்பதற்காக சண்டையிட்டுக் கொண்டனர், அண்டை மாநிலமான க்யூ இதனை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது
கன்பூசியஸ் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்த உள்நாட்டுப்போர்கள், மற்றும் வறுமை காரணமாக சீன தேசம் சிதறுண்டு கிடந்தது, இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது, வலிமையான ஒற்றை மைய அரசு என்ற கோட்பாடு அப்போது வரை சாத்தியமாகவில்லை,
மிதமிஞ்சிய லஞ்சம், ஊழல், வேசைகளின் களியாட்டம், எதிர்பாராத போர் என்று லூ மாநிலம் தத்தளித்துக கொண்டிருந்த சூழலில் அதிகாரப்போட்டியில் அதிகம் பாதிக்கபட்டது அறிவார்ந்த குடும்பங்களே, இவர்கள் பிறப்பில் உயர்குடியாக இருந்த போதும் போதுமான செல்வம் இல்லாத காரணத்தால் கூலிவிவசாயிகளைப் போலவே நடத்தப்பட்டார்கள், கன்பூசியஸின் குடும்பமும் அத்தகையதே.
சிறுவயதில் இசையிலும் விளையாட்டிலும் கன்பூசியஸ் அதிக ஆர்வம் கொண்டிருந்தார், மீன்பிடித்தல், மற்றும வில்வித்தை இரண்டும் அவரது முக்கிய ஆர்வமாக இருந்தன,
அந்த காலங்களில் புத்தகங்கள் அச்சுவடிவம் பெறவில்லை, ஒலைச்சுவடிகளில் உள்ள கவிதைகளை, நீதிநூல்களைத் தேடித்தேடி படித்திருக்கிறார், கல்வியின் முக்கியத்துவம் குறித்து இவரளவு பேசியவர் எவருமில்லை,  இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் வாழக்கை அதிகமாகக் கிடைத்தால்  மரபுக் கவிதைகள் முழுவதையும் ஆழமாகப் பயின்று கொள்வேன் என்று ஆதங்கப்படுகிறார் கன்பூசியஸ்
ஒரு முறை கன்பூசியஸ் தனது பயணத்தின் போது கிராமப்புற இசை ஒன்றினைக் கேட்டு மயங்கி அந்த கிராமத்திலே மூன்று மாத காலம் தங்கிவிட்டார், கிராமப்புற இசையில் உள்ள துள்ளலான தாளம், இனிமை போல வேறு எதிலும் இசையின் உச்சநிலை வெளிப்படுவதில்லை, அது மனதைக் கொந்தளிக்கச் செய்கிறது எனறு கன்பூசியஸ் குறிப்பிடுகிறார்
முந்தைய காலங்களில் அறிஞர்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள கற்றார்கள், ஆய்வு செய்தார்கள், இந்தக் காலங்களிலோ மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுகின்றன, அடுத்தவரின் பாராட்டிற்காக அறிஞராக இருப்பது அவமானத்திற்குரியது என்று கன்பூசியஸ் குறிப்பிடுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சுட்டிக்காட்டப்பட்ட உண்மை இன்றளவும் மாறிவிடவில்லை
தமது 20-ஆவது வயதில் கன்பூசியஸ் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண வாழ்க்கை இனிமையானதாக அமையவில்லை ஆரம்ப காலங்களில் அரசாங்க உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக பணியாற்றினார், அந்த நாட்களில், உணவைப் பகிர்ந்து அளிப்பது தான் சிறந்த நிர்வாகத்தின் ஆதாரப்புள்ளி என்பதை தனது புதிய நடைமுறைகளின் வழியே சாதித்துக் காட்டினார்
வறுமையைப் போக்கிக் கொள்ள பொய், சூது, களவு இல்லாத ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும், உடனடியாக ஏற்றுக் கொள்வேன் என்று கன்பூசியஸ் தனது வேலையில்லாத நாட்களை பற்றிய குறிப்பு ஒன்றில் கூறுகிறார்,
இப்படி வேலைக்காக அலைந்து திரிந்த அவர் சின்னஞ்சிறு அரசாங்கவேலைகளை செய்து அதில் தனது கடுமையான பணியின் சிறப்பு காரணமாக பதவி உயர்வினை அடையத்துவங்கினார்
எது உங்களின் உயர்விற்கான முக்கிய காரணம் என்ற கேள்விக்கு கன்பூசியஸ் வாழ்வியல் அனுபவங்களே என்னை மேலோங்க செய்தன, ஆனால் அனுபவம் பெற்ற அத்தனை பேரும் வாழ்வில் உயர்ந்துவிடுவதில்லை, வாழ்க்கை அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்பவனே உயர்நிலையை அடைகிறான், அதற்கு அறிவை விருத்தி செய்து கொள்வதும், கடின உழைப்பும், தெளிந்த சிந்தனையும், தூய வாக்கும் அவசியமானது என்கிறார்
ஒரு அரசாங்கம் சிறப்பாக செயல்படத் தேவையான நிர்வாகக் கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார். கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையோடு பெரிய கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
தனது  ஐம்பதாவது  வயதில் நீதிபதியாக பதவி உயர்ந்தார். அதன்பின்பு லூ மாநிலத்தின் முதல்வரானார். அவர் ஆட்சியில் குற்றச் செயல்கள்  ஒடுக்கபட்டன, மக்களுக்கு நலன் பயக்கும் பல்வேறு  சமூக சீர்திருத்தங்களை கன்பூசியஸ் நடைமுறைப்படுத்தினார்
இவரது ஆட்சியின் சிறப்பை கண்டு அண்டை மாநில அரசுகள் அவருக்கு எதிராக சதி செய்தன, அதன் காரணமாக தொடர்ந்த இடையூகளை சந்தித்து வந்த கன்பூசியஸ் முடிவில் அரசியலை விட்டு ஒதுங்கி ஊர் ஊராக சுற்றியலைந்து தனது அறக்கருத்துகளை பரப்பி வந்தார், . தனது 72 வது வயதில் கன்பூசியஸ் மரணம் அடைந்தார். இவரது தத்துவங்களை அரச நியதியாக ஏற்றுக் கொண்ட மாமன்னர் அதன்படியே சீனமக்கள் நடக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்
சீனாவின் முதல் தத்துவப் பேராசான் கன்பூசியஸே, இவரது Analects எனப்படும் அறக்கருத்துகளை வாசிக்கையில் சீன சமூகத்தின் அன்றைய நிலையும் அரசின் தெளிவற்ற செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது
ஒரு மனிதன் எவ்வளவு குதிரைகளை வைத்திருக்கிறான் என்பதை வைத்தே அந்த காலத்தில் அவனது செல்வாக்கு மதிப்பிடப்பட்டிருக்கிறது,  நாற்பது குதிரைகளின் உரிமையாளனே என்று கன்பூசியஸ் ஒருவனை அழைக்கும் போது அவன் எவ்வளவு வசதியானவன் என்பதைப்புரிந்து கொள்ள முடிகிறது
உள்நாட்டு போர் முற்றிய சூழல் என்பதால் கன்பூசியஸ் விசுவாசம் மற்றும் கடமை பற்றி அதிகம் பேசியிருக்கிறார், ஒருவன் தனது எஜமானுக்காக எவ்வளவு விசுவாசமாக இருப்பது என்ற கேள்வி பலமுறை அவர் முன் கேட்டப்பட்டிருக்கிறது, கன்பூசியஸ் மதம் சாராத ஒழுக்கமுறை ஒன்றினை அறிமுகப்படுத்துகிறார், இது எளிய மனிதன் தன் வாழ்வின் தவறுகளைத் தானே திருத்திக் கொள்ள வழிவகை செய்வதாகும்
மனிதன் இயல்பிலே தவறினை நோக்கி வசீகரப்படுகின்றவன், அவனை நல்வழிபடுத்த தொடர்ந்த நடவடிக்கைகள் தேவை, அதில் சிலவற்றை சமூகம் மேற்கோள்ளும், பெரும்பான்மை மாற்றங்களை தனிநபரே மேற்கொள்ள வேண்டும், நன்மையை ஏற்றுக் கொண்டு அதன் நெறிகளுக்கு ஏற்ப வாழ்வது என்பது ஒரு தொடர் போராட்டம் என்பதை கன்பூசியஸ் வலியுறுத்துகிறார்
பஞ்சம் பசி பட்டினி என்று அடித்தட்டு மக்கள் வறுமையில் வாழ்க்கையில் அவர்களை ஆள்பவர்கள் மேலும் மேலும் வரிகளை போட்டு, கடுமையான வேலைகளை செய்ய வைத்து மக்களை வதைக்க கூடாது. சிறந்த நிர்வாகம் என்பது மக்கள் பிரச்சனையை சரியாக கையாண்டு உடனடியாக தீர்த்து வைப்பதில் தானிருக்கிறது, எல்லா அரசியல் பிரச்சனைகளுக்கும் தாய் பசி தான் என்கிறார் கன்பூசியஸ்.
ஒரு வில்லாளி அம்பை எய்கிறான், அது இலக்கைத் தாக்கவில்லை என்றால் அவன் தனது அம்பை குற்றம் சொல்வதில்லை, தவறு தன்னுடையது என்று ஒத்துக் கொள்கிறான், அரசும் அதன் நலத்திட்டங்கள் உரியவருக்குச் சென்று அடையவில்லை என்றால் தனது குற்றத்தைத் தானே ஒத்துக் கொள்ள வேண்டும், மாறாக தவறு மக்களுடையது என்றால் அது மோசமான நிர்வாகம் செய்கிற அரசாங்கமாக கருதப்படும் என்கிறார் கன்பூசியஸ்
நீதிநூல்கள் எதை வாசிக்கையிலும் அது தனிமனிதனை எப்படிக் கருதுகிறது, தனிமனிதனின் இருப்பிற்கான ஆதாரங்களாக எதை முன்வைக்கிறது, தனிமனிதன் மேற்கொள்ள வேண்டிய அறங்கள், கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், பின்பற்றவேண்டிய நெறிகள் எவை என்பதையும், அதே நேரம் அரசின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எந்த அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையே வரையறை செய்கின்றன ,
அந்த வகையில் திருக்குறளும் கன்பூசியஸின் சிந்தனைகளும் மிக நெருக்கமானவை, வள்ளுவர் கூறுகின்ற அதே கருத்துகளை தான் கன்பூசியஸ தானும் எடுத்துக் கூறுகிறார்
Order  எனப்படும் சமூகவகைப்பாடு எப்படி உருவாக்கபடுகிறது, அதன் உள்கட்டுமானம் எந்த அறத்தை முதன்மைப்படுத்துகிறது, சமூகத்தின் உள்வெளி தளங்கள் எவ்வாறு பிளவுபடுகின்றன என்பதை கன்பூசியஸ் தெளிவாக ஆராய்கிறார்,  Polarity  எனப்படும் முரண் இயக்கதை கவனப்படுத்தி புதியதொரு தர்க்கவியலை கன்பூசியஸ் உருவாக்கியிருக்கிறார்.
Knowing  என்ற சொல் தத்துவப் பாடத்தில் மிக முக்கியமான ஒன்று, அதை எளிதாக வரையறுத்துவிட முடியாது, உள்வாங்கும் முறைகளின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்லாம், இந்த அறிதலின் பல்வேறு நிலைகளை, அதன் பின்னுள்ள சமூக்காரணிகளை கன்பூசியஸ் தீர்க்கமாகச் சுட்டிக்காட்டுவதை அவரது நீதிநூல்களை வாசிக்கையில் அறிந்து கொள்ள முடிகிறது
தவறு செய்தவர்களாக ஒதுக்கபட்ட குற்றவாளிகள், வேசைகள், திருடர்களை தேடிச்சென்று சந்தித்து அவர்களுடன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றியிருக்கிறார் கன்பூசியஸ், நான்ஷி என்ற அழகான இளம்பெண்ணை தேடிச்சென்று அவளுடன் தங்கி போதனைகள் செய்திருக்கிறார் கன்பூசியஸ், இதை ஒரு குற்றமாக அவரது சீடர்களில் சிலரே சொல்லிய போது தான் மனிதர்களை அவர்களின் செயல்களைக் கொண்டு பேதம் பார்ப்பதில்லை, மனித இயல்பை அறிவதே எனது வேலை என்கிறார் கன்பூசியஸ்
தொடர்பயணத்தின் போது இவரை கொல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன, ஒரு தாக்குதலில் இவரது சீடர் யென் யூ இறந்து போயிருக்கிறார், கிறுக்குதனம் பிடித்த முட்டாள் என்று இவரை பல மாநிலங்களில் உள்ளே வரவிடாமல் துரத்தியிருக்கிறார்கள், அதே நேரம் உள்நாட்டுக் கலகங்களை கட்டுபடுத்த விரும்பிய ஆட்சியாளர்கள் இவரை அழைத்து உரிய ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள்
தனது மகனின் எதிர்பாரத மரணம், நண்பர்களின் சாவு, தான் நேசித்த ஆட்சியாளர்கள் அதிகாரப்போட்டியில் படுகொலை செய்யப்பட்டது என்று தனது முதிய வயதில் தொடர்ந்த வேதனையில் வீழ்த்த கன்பூசியஸ் சில மாதங்கள் யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாக வாழ்ந்திருக்கிறார், சீனாவில் இன்று கன்பூசியஸ் ஒரு கடவுளை போல வழிபடப்படுகிறார். இவரது நீதிநூல் சீனாவின் தேசிய அடையாளமாக கருதப்படுகிறது
கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்ற படமாக்க போகிறார்கள் என்றதுமே சீனர்களிடம் பெரிய எழுச்சி உருவானது, முன்னதாக கன்பூசியஸ் வாழ்க்கைவரலாறு ஆவணப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும், கறுப்பு வெள்ளை, மற்றும் கலர்படமாகவும் வெளியாகி உள்ள போதும் இன்றுள்ள சினிமா தொழில்நுட்பத்தை கொண்டு மிக சிறப்பான ஒரு படத்தை உருவாக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு சீனமக்களிடம் இருந்தது, ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை,
வெற்றிகரமான குங்பூ படங்களில் நடித்த Chow Yun-fat கன்பூசியஸாக நடித்திருக்கிறார், போர்கலை படங்களில் தொடர்ந்து நடித்தவர் என்பதால் சௌ யுன் பேட்டின் உடல் இறுக்கமானதாகவே இருக்கிறது, அவரிடம் ஞானியின் உடல்மொழியைக் காணமுடியவில்லை,
படத்தின் துவக்கத்தில் வயதான கன்பூசியஸ் தனது கடந்த காலத்தினை நினைவுபடுத்திப் பார்க்கத் துவங்குகிறார், தனது சொந்த மாநிலமான லியூ பகுதியின் மேயர் பதவியில் இருந்து மந்திரி பதவிக்கு உயர்த்தபடுகிறார் கன்பூசியஸ்,
அப்போது ஒரு அடிமைச் சிறுவனை அவனது எஜமானன் இறந்து போன காரணத்தால் உயிருடன் புதைக்க முற்படுகிறார்கள், அது தான் அன்றைய மரபு, இந்தக் கொடூரத்தை கண்ட கன்பூசியஸ் மனம் கொதித்து சிறுவனைக் காப்பாற்றுகிறார், இது ஒரு தவறான செயல் என்று கன்பூசியஸ் குற்றம் சாட்டப்படுகிறார், ஆனால் அவர் தனது மனிதாபிமானம் மிக்க செயலை நியாயம் என்கிறார், இந்த பிரச்சனை புகையத் துவங்குகிறது
கன்பூசியஸ் சீனா முழுவதும் சுற்றியலைகிறார், அவர் தான் கன்பூசியஸ் என்று அறியாதபடி எளிய மனிதனைப்போல மக்களுடன் ஒன்று கலந்து வாழ்கிறார், நீதிக்கருத்துகளை முன்வைத்து உரையாற்றுவதுடன் பழமையான சீனமரபு இலக்கியங்களுக்கு உரை எழுதி அவற்றை பதிப்பிக்க முயற்சிக்கிறார் என்று அவரது முதுமையான நாட்களை படம் விவரிக்கிறது
வணிக நோக்கத்திற்காக படத்தில் நான்ஷியுடன் கன்பூசியஸிற்கு ஏற்படுகின்ற காதலும், ஏக்கமும், தவிப்பும் கவர்ச்சியாக காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன
கன்பூசியஸின் வாழ்க்கை குறித்த பிபிசியின் டாகுமெண்டரிப் படம் இதைவிடவும் சிறப்பானது, அவதார் படத்துடன் போட்டியிடுவதற்காக பெரிய பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் வெறும் அலங்காரத் தோரணமாகவே வெளியாகியுள்ளது
கன்பூசியஸை பற்றி அறிந்து கொள்ள வாசிக்கபட வேண்டிய நூல் The Analects of Confucius, இது அவரது அறக்கருத்துகளின் தொகைநூல், அதில் எனக்கு பிடித்தமானதொரு மேற்கோள் இருக்கிறது
To study and not think is a waste. To think and not study is a danger           குரு
••••

No comments:

Post a Comment

THANK YOU